31 ஜனவரி 2011

மகிந்தவை நோய் தாக்கியுள்ளமை ஊர்ஜிதம்!

மஹிந்த ராஜபக்ஷ கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சையை மஹரகமை புற்றுநோய் மருத்துவமனையின் வைத்தியர் கனிஷ்க என்பவர் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன் காரணமாகவே தனது நோய்க்கு மேலதிக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோக்கிலேயே அவர் அண்மையில் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் உறுதிப்படுத்துகின்றார்.
ஆயினும் அவரது சிகிச்சையின் பின்னும் அடிக்கடி ஜனாதிபதியின் முகத்தில் ஒரு வீக்கம் ஏற்படுவதாகவும், அவ்வாறான நிலையில் அவரைக் காண்பவர்கள் அவர் குடித்துவிட்டிருப்பதாக கருதிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதும் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடிக்கடி விசேட மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் தனது நோய்க்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஊடக அடக்குமுறை மீண்டும் பகிரங்கப்படுத்தபட்டுள்ளது!


லங்காஈநியூஸ் அலுவலகம் இன்று (31) அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது. இந்தத் தீயினால் லங்காஈநியூஸ் அலுவலத்தின் பிரதான பதிவேற்றல் கணனிக் கட்டமைப்பு முற்றாக அழிந்துள்ளது. அத்துடன் பெறுமதிமிக்க நூலகமும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இணையத்தளத்தின் அலுவலகம் இயங்கிவந்த கட்டிடம் பயன்படுத்த முடியாதளவில் தீயினால் அழிந்துள்ளது.
பெற்றோல் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தியே இந்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. தீபிடித்ததை அடுத்து குண்டு வெடிப்பதைப் போன்று சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு பிரதேசவாசிகள் விழித்தெழுந்து தீயை அணைக்க முயற்சித்த போதிலும் அதுவரை தீயினால் ஏற்பட்ட சேதத்தைக் குறைக்க முடியாது போனது.
பிரதேசவாசிகள் காவல்துறையின் அவசர அழைப்புப் பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து லங்காஈநியூஸ் ஆசிரியர், கொஸ்வத்த காவல்துறையின் பொறுப்பதிகாரி உபுல் பெரேராவிடம் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளதுடன் கட்டிடத்தின் உரிமையாளர்களும் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று (30) இனந்தெரியாத இரண்டு நபர்கள் இணையத்தளம் அலுவலகம் அமைந்துள்ள பிரதேசத்தில் நடமாடித்திரிந்துள்ளனர். அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து அலுவலகத்திற்கு எதிரிலுள்ள தேனீர் கடையில் விசாரித்தறிந்துள்ளனர்.
தற்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஊடகங்களுக்கெதிரான அடக்குமுறையினால் சண்டே லீடர் ஆசிரியர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், ஊடக ஊழியர்கள் என 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தவிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதுடன் அவரின் கால் உடைக்கப்பட்டது.
லங்காஈநியூஸ் ஊடகத்தின் அரசியல் பத்தி எழுத்தாளர் காணாமல் போகச் செய்யப்பட்டார். சிரச ஊடக வலையமைப்பு தீவைக்கப்பட்டு, க்ளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
உதயன் பத்திரிகையின் அலுவலகம் தீ வைக்கப்பட்டது, அதில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள், கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் லங்காஈநியூஸ் அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட தீ, ஊடக ஒடுக்குமுறையின் மற்றுமொரு கரும்புள்ளியென ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

30 ஜனவரி 2011

கருணாவுக்கு மரியாதையை செய்ய வைத்திருந்த மாலைகள் மறைந்தன!

ஸ்ரீலங்காவின் மீள்குடியேற்றத்துறை பிரதி அமைச்சர்(கருணா) விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பிகளான பொன்.செல்வராசா, சீனித்தம்பி யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோருக்கு இன்று பொது நிகழ்வு ஒன்றில் அணியப்பட இருந்த மலர் மாலைகள் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளன.
கிரான் குளத்தில் அமைந்திருக்கின்றது கதிரொளி அகரம் என்கிற அரச சார்பற்ற நிறுவனம். இதன் ஆறாவது ஆண்டு நிறைவு விழா காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. ஆனால் இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் (பிள்ளையான்) சிவநேசதுரை சந்திரகாந்தனோ, முதலமைச்சரின் பரிவாரத்தினரோ விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருக்கவில்லை.
இந்நிலையில் விருந்தினர்களுக்கு அணிகின்றமைக்காக ஏற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு மேடையில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்த மலர் மாலைகள் மாயமாக மறைந்து போய் உள்ளன. அத்துடன் அங்கு வைக்கப்பட்டு இருந்த நிறைகுடங்களும் காணாமல் போய் உள்ளன. இருப்பினும் விழா ஏற்பாட்டாளர்கள் மாற்று வழிகளை கையாண்டு நிலைமையை ஒருவாறு சமாளித்தனர்.

போர்க்குற்றத்தை மறைக்க ஸ்ரீலங்கா விளையாடும் விளையாட்டு அனைத்துலக கருத்தரங்கு!

சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கைகளை முறிடியடிக்கும் நோக்கிலேயே அனைத்துலக கருத்தரங்கை சிறிலங்கா இராணுவம் ஒழுங்கு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இறுதிகட்டப் போரில் சிறிலங்கா இராணுவம் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.
இது தொடர்பாக ஐ.நா நிபுணர்குழுவும் விசாரணைகளை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இதுபோன்ற அழுத்தங்களை முறியடிக்கும் நோக்கிலேயே சிறிலங்கா இராணுவம் அனைத்துலக இராணுவக் கருத்தரங்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
ஐ.நா நிபுணர்குழு போர்க்குற்ற விசாரணைகளை நடத்த முனையும் நிலையில் அனைத்துலக இராணுவக் கருத்தரங்கை சிறிலங்காவில் ஒழுங்கு செய்திருப்பது ஏன் என்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய,
“ இந்தக் கருத்தரங்கை நடத்த நாங்கள் மிகவும் தாமதமாகி விட்டது என்பதே எனது தனிபட்ட கருத்து. போர் முடிவடைந்தவுடன் இந்தக் கருத்தரங்கை நடத்தியிருக்க முடியும். அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால், போரில் என்ன நடந்தது என்று உலகத்துக்குத் தெரிந்திருக்கும்.
இந்தக் குற்றசாட்டுகளுக்கு நாம் முகம் கொடுத்திருக்க வேண்டி வந்திருக்காது. உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் விரைவில் தூக்கியெறியப்பட்டு விடும்.
அதற்காகவே அனைத்துலக தீவிரவாத முறியடிப்பு நிபுணர்களையும், களத்தில் செயற்பட்ட ஐ.நா அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இந்தக் கருத்தரங்கில் உண்மை நிலையைக் கூறுவதற்கு அழைத்துள்ளோம்.
இந்தக் கருத்தரங்கிற்கு 54 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்“ என்று அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக போர்க்குற்ற விசாரணை அழைப்புகள் தொடர்ச்சியாக அழுதங்களைக் கொடுத்து வருவதாலேயே புலிகளுக்கு எதிரான போரின் அனுபவங்களைப் பகிர்வதாகக் கூறி தமது பக்க குற்றச்சாட்டுகளை மறைக்கும் வகையிலான கருத்தரங்கிற்கு சிறிலங்கா அரசு ஒழுங்கு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

29 ஜனவரி 2011

ஈ,பி,டி,பி,முக்கியஸ்தர் வடமராட்சியில் சுட்டுக்கொலை!

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர் யாழ். மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்குப் பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் என்பதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பருத்தித்துறை ஆனை விழுந்தான் சந்தியில் அவர்மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அந்த இடத்திலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று நண்பகலை ண்மித்த நேரம் வரை அவரது சடலம் ஸ்தலத்திலிருந்து அகற்றப்படாமல் காணப்பட்டதாக யாழ்.செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபர் நீதிமன்றில் உறங்கியதால் பாதுகாப்பு வாபஸ்.

வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கில் பாதுகாப்புச் செயலாளர் சாட்சியமளிக்கையில் தூங்கிக்கொண்டிருந்த காரணத்தால் பொலிஸ் மா அதிபரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 25ம் திகதி வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கின் போது பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொழும்பு உயர்நீதிமன்றில் சாட்சியமளித்திருந்தார். அதன் போது அவருடன் முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகளும் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.
அவ்வாறு வருகை தந்த பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய பாதுகாப்புச் செயலாளரின் சாட்சியமளிப்பின் போது நீதிமன்றில் தூங்கிக்கொண்டிருந்திருக்கின்றார். அவரை நீதிமன்றப் பதிவாளரே தட்டியெழுப்பியுள்ளார்.
அதனைக் கண்ணுற்றுக் கோபமடைந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உடனடியாக பொலிஸ் மா அதிபரின் பொறுப்பில் இருந்த விசேட அதிரடிப்படையை தன் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்.
அதனையடுத்து இன்று தொடக்கம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொலிசாரே இனி அவரின் பாதுகாப்பைப் பொறுப்பேற்கவுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்குப் பதிலாக பீல்ட் போர்ஸ் பொலிஸ் பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

28 ஜனவரி 2011

பாரிசில் தமிழ் இளைஞர்களின் அடாவடி ஆதாரத்துடன்!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் வாழும் இலங்கைத் தமிழ் இளைஞர்களில் சிலர் எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவு, அடிதடி, வன்முறை எனறு சண்டித்தனத்திலேயே காலத்தைக் கழித்து வருகின்றனர்.
ஒரு சில இளைஞர்களின் இந்நடவடிக்கைகள் ஒட்டொமொத்த தமிழ் இனத்துக்கும் அவமானச் சின்னங்களாக மாறி உள்ளன.
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகள் பெரிதும் மனம் உடைந்து போய் உள்ளார்கள். பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி சேவைகளில் ஒன்று எம் - 06. இத்தொலைக்காட்சி சேவை வாரவாரம் சிறப்புப் புலனாய்வு என்று ஒரு தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது.
கடந்த வாரம் இடம்பெற்ற சிறப்புப் புலனாய்வு நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் இளைஞர்களின் வன்முறை நடவடிக்கைகள் வீடியோ ஆதாரங்களுடன் ஒளிபரப்பப்பட்டன.
பொலிஸாரின் உதவி, ஒத்தாசை ஆகியவற்றுடன் இவ்வீடியோக்கள் பிடிக்கப்பட்டு இருந்தன. தமிழ் வர்த்தக மையங்கள் அமைந்துள்ள இடங்களில்தான் இவ்வாறான வன்முறைகள் பெரும்பாலும் வெடிக்கின்றன என்றும் காட்டப்பட்டது.
இந்நிலைமையில் பிரான்ஸில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் நிலைமையை எப்படி சீர் செய்யலாம்? என்பது குறித்து ஒன்றாகக் கூடி விரைவில் மந்திராலோசனை நடத்த உள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பான் கீ மூன் யாருடன் உரையாடினார்?இன்னர் சிற்றி பிரஷ் கேள்வி.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு பான் கீ மூனின் பேச்சாளர் அலுவலகத்திடம் இன்னர்சிற்றி பிரஸ் மீளவும் மீளவும் வலியுறுத்திக் கேட்டிருந்தது.
குறிப்பாக கடந்த டிசம்பர் 17இல் , எதிர்வரும் ஜனவரி 14 இல் நிபுணர்குழுவானது இலங்கைக்குச் செல்லுமென பான் கீ மூன் அறிவித்திருந்தார். எனவே அது தொடர்பாக அதனைக் கூறுவதற்கு முன்னர் பான் கீ மூன் யாருடன் உரையாடியிருந்தார் அதற்கு என்ன பதில் கூறப்பட்டது என்பது குறித்து தினமும் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டிருந்தது.
இன்னர் சிற்றி பிரஸின் கேள்விகளுக்கு ஜனவரி 25 இல் ஐ.நா.வின் பேச்சாளர் பதிலனுப்பியிருந்தார். அதில் ஆலோசனைக் குழுவின் பயணத்திற்கான சாத்தியப்பாடு குறித்து நீங்கள் கேள்விகளை எழுப்பியிருந்தீர்கள். அது தொடர்பாக கூறுவதற்கு பின்வரும் விடயங்களை நாம் கொண்டிருக்கிறோம்.
கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட இலங்கையருடன் நிபுணர்குழு நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறது. அந்நிலையில், பயணமானது பயன்பெறக்கூடியதாக அமையும். ஆனால், அது அத்தியாவசியமானதல்ல. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை கூறுவதற்கு அந்தப் பயணம் அத்தியாவசியமானதாக இருக்கவில்லை. என அப்பதிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான கேள்வியுடன் சம்பந்தப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தரப்பினர்களுடன் நிபுணர்குழு நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பினால் அவர்கள் ஏன் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை பேட்டி காண்பதற்கு கோரிக்கை கூட விடுத்திருக்கவில்லை? அவர்கள் இருவரும் இந்த வாரம் அமெரிக்காவில் இருந்தார்களே? என்றும் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
முன்னதாக போரின் இறுதிநாட்களில் மோசமான போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்ற போதும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்குச் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருவதைக் கடுமையாகக் கண்டித்து சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
'போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றவை எவையோ அவற்றுக்குப் பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டை முன்னெடுக்க சிறிலங்கா மறுத்து வருவது பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவதாகவே அமைகிறது' என மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதிப் பணிப்பாளர் பியர்சன் குறிப்பிட்டிருந்தார்.
'நாட்டிலுள்ள ஊடகங்கள் மற்றும் மக்கள் அமைப்புக்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அடிப்படையில் நோக்குமிடத்து விடுதலைப் புலிகளுடனான போரில் தாங்கள் போர்க்குற்றங்களிலோ அன்றி மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை' என்று கூறும் சிறிலங்கா அரசாங்கத்தின் வாதம் கேள்விக்குறியாகிறது.
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படையினருக்கும் இடையிலான இறுதிப்போரில் பொதுமக்கள் எவரையும் அரச படையினர் கொல்லவில்லை என அரசாங்கத்தினர் கூறுகிறார்கள்.
இடம்பெற்றதாகக் கூறுப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேசத்;தினது குரல்கள் வலுவடைந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றினை கடந்த மே 2010ல் உருவாக்கியிருந்தார்.
போரின் இறுதி ஆண்டுகளில் இடம்பெற்றது என்ன என்பதை ஆராயும் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் இது வெறும் கண்துடைப்பு முயற்சியே எனக்கூறி மனித உரிமைக் கண்காணிப்பகம் சிறிலங்காவினது முயற்சிகளை நிராகரித்தது.
'எவ்வாறிருப்பினும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆணைக்குழுவில் பல குறைபாடுகள் உள்ளன. ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் பக்கச்சார்பின்றியோ அன்றி சுதந்திரமாகவோ இதுவரை செயற்படவில்லை மற்றும் சாட்சியங்களுக்கான பாதுகாப்பு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அத்துடன் இந்தச் செயற்பாட்டுக்கு மிகவும் அவசியமான அரச அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய இராணுவத் தளபதிகள் வாக்குமூலங்களை மாத்திரம் ஆணைக்குழு அதிகம் நம்பிச் செயலாற்றுகிறது' எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
தமக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் ஊடகங்கள், மக்களமைப்புக்கள் மற்றும் எதிர்த் தரப்பினரை மௌனமடையச் செய்யும் முனைப்புக்களிலும் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது என மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம் சுமத்துகிறது.
இதன் விளைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செற்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிடுவதற்கு ஊடகங்கள் தயங்குகின்றன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டு;கிறது.
'பல்வேறுபட்ட உரிமைகளையும் மதித்துச் செயற்படும் ஒரு கட்டமைப்பாக சிறிலங்கா அரசாங்கம் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எமக்கில்லை' எனவும் பியர்சன் அதில் கூறுகிறார்.
'போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், சிறுபான்மையினரது துன்ப துயரங்கள் சரியாகத் தீர்த்து வைக்கப்படாவிட்டால் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் எதிரான அடக்குமுறை முடிவுக்குக் கொண்டு வரப்படாவிட்டால் சிறிலங்காவின் அரசாட்சி தொடர்பாக மகிந்தவும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் மாத்திரம்தான் மகிழ்வடைவார்கள் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

27 ஜனவரி 2011

மீண்டும் தமிழர்களுக்கு ஆப்பு வைக்க முயல்கிறார் எரிக் சொல்கைம்!

புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ இராச்சிய உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பக்கச்சார்பாக தாம் செயற்பட்டதாக இலங்கையிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதிலும், அதில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களின் மூலம் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனித் தமிழீழ கோரிக்கைக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் ஜனநாயக அடிப்படையில் புலம்பெயர் தமிழர்கள் தமது இலக்குகளை அடைய முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்த இறுதித் திகதிகள் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியதாகவும், இந்த பாதிப்புக்களுக்கு இரு தரப்பினரும் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் வேறும் வழியைத் தெரிவு செய்திருந்தால் பிரச்சினைக்கான தீர்வு முடிவில் மாற்றம் கண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தியில் ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்குவதற்கு நோர்வே விரும்புவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த குறுகிய பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இளம் பெண்ணை காணவில்லையென தகவல்!

கிளிநொச்சியில் நேற்று முதல் இளம்பெண்ணொருவர் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பலராலும் முன் வைக்கப்பட்டுள்ளது.
காணாமற்போயுள்ள பெண் கிளிநொச்சியின் நாச்சிக்குடா பிரதேசத்தைச் சோ்ந்தவர் என்று தெரிய வந்துள்ளதுடன், அவர் ஒரு குழந்தையின் தாய் என்றும் தெரிய வருகின்றது.
தனது உறவினர் ஒருவரின் புதுமனை புகும் விழாவிற்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வேளையிலேயே அவர் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அது பற்றி உறவினர்களால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமற் போயுள்ள பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதுடன், அவர் தன் சகோதரி வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் சிறுவனொருவனைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களின் உதவியால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

26 ஜனவரி 2011

அண்ணனுக்கு அருவருப்பான விடையம்,உங்களுக்கு வியூகமானது எப்படி?

வணக்கம்.
‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.
பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!
திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.
ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி- இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!
என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.
ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட- உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை- இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.
வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.
நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.க வை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?
யார் இந்த ஜெயலலிதா?
‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!
தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?
உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?
உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?
தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா?
கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?
‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?..
கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?
ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?
‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?
ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?
அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!
தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.
விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!
காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ;ளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?
உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.
தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!
சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை- சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.
அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?
நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.
1.ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.
2.இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.
3.மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.
4.இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!
இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.
திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!
என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு

உங்கள்
தாமரை
20.01.2011
சென்னை 24.

நிபுணர் குழு இலங்கை செல்லவேண்டுமென்று அவசியமில்லை!

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
நிபுணர்கள் குழு இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும், விஜயம் செய்தால் அது பயனுள்ளதாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.விசாரணைகளின் போது இலங்கையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்வதன் மூலம் பயனடைய முடியும் என்ற போதிலும், அதனை அத்தியாவசியமானதாக கருத முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

25 ஜனவரி 2011

சிங்களவருக்கு எதிரான போராட்டத்தை இன்றே தொடங்குங்கள்!

கடந்த வாரம் கழுத்து நெரித்து கோரமாக கொல்லப்பட்ட ஜெயக்குமார் என்ற ஊனமுற்ற தமிழக மீனவரின் மரணத்துடன் சிறீலங்கா கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 568 என தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனை தடுப்பதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி 20 கடிதங்களை தபாலில் அனுப்பியுள்ளார். அதற்கு பதில் கொடுக்கும் முகமாக மன்மோகன் ஐந்து கடிதங்களை அனுப்பியுள்ளார்அதனை தவிர இந்திய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களின் உயிரை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தமிழக மக்களை ஈழத்தமிழ் மக்களாகவே சிறீலங்கா அரசு பார்க்கின்றது. அவர்களை படுகொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ சிறீலங்கா அரசு தயங்குவதில்லை.
அதற்கு சிறந்த அண்மைய உதாரணமாக சட்டவாளர் கயல்விழியின் கைது நடவடிக்கையை குறிப்பிடலாம்.இந்தியா வல்லராசாக உயரப்போகின்றதாம், பல இந்திய மக்களின் கனவு அது தான். ஆனால் வல்லரசாக உயரும் ஒரு நாட்டுக்கு தேவையான அடிப்படைக்காரணிகளில் தமது மக்களை பாதுகாப்பதும், நாட்டில் ஜனநாயகத்தை தோற்றுவிப்பதும், பிராந்தியத்தில் ஜனநாயகத்தை தோற்றுவிப்பதும் முக்கியமானவை.
ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் மெல்ல மெல்ல செத்து வருகின்றது. அதனை தான் அண்மையில் எல்லைகள் அற்ற ஊகவியலாளர் அமைப்பும் தெரிவித்திருந்தது.தனது பிராந்தியத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை இந்தியா விரும்புவதில்லை, அதனை தான் பராக் ஒபாமாவும் தனது குற்றச்சாட்டாக முன்வைத்திருந்தார்,மேலும் 568 இந்திய மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் இந்திய மத்திய அரசு சிங்களத்தின் கால்களுக்குள் சுருண்டு கிடக்கின்றது. வல்லரசாகும் நாடு தனது குடிமக்களை பாதுகாப்பதை தான் முதன்மையானதாக கருதவேண்டும்
உதாரணமாக இஸ்ரேலின் எதிரிகளாக பல அரபு நாடுகள் உள்ளபோதும், நண்பர்களாக சில அரசு நாடுகள் உள்ள. அவர்கள் ஒரு இஸ்ரேலிய பொதுமகனை கொல்லட்டும் பார்க்கலாம். செங்கல் குவியல்களுக்குள் அரச அலுவலகங்களை தேட வேண்டிய நிலை தான் மறுகணம் அவர்களுக்கு ஏற்படும்.
ஏனெனில் அவர்களுக்கு தமது நாட்டு மக்களின் ஒரு உயிர் கூட உயர்வானது. இருந்து என்ன பயன் செத்து தொலையட்டும் என அவர்கள் பாரமுகமாக இருப்பதில்லை.ஆனால் இந்தியாவின் நிலை மறுதலையானது, தமிழர்கள் மீது விரோதம் கொண்ட வட இந்தியர்களின் பிடியில்; இருக்கும் மத்திய அரசு, பணத்திற்கும், பதவி சுகத்திற்கும் கும்மாளம் போடும் மாநில அரசின் பலவீனத்தை பயன்படுத்தி சிங்கள கடற்படையை கொண்டு தமிழர்களை படுகொலை செய்து வருகின்றதுஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும், மத்திய அரசு பேசும், சிதம்பரம் பார்ப்பார், கிருஸ்ணா கதைப்பார் என காத்திருந்த தமிழக மக்களுக்கு இந்த வாரம் இடம்பெற்ற படுகொலை பொறுமையை இழக்கவைத்துள்ளது.
ஆனாலும், 568 உயிர்களை இழந்த பின்னர் தான் நாம் மனிதர்களாக மாறவேண்டுமா?
சரி இனி என்ன செய்யப்போகிறோம்?
இரண்டு நாள் ஊர்வலம், மூன்று நாள் கடையடைப்பு என எதிர்ப்பை காண்பித்துவிட்டு மூலையில் முடங்கப்போகிறோமா?
வீரத்தமிழன், செந்தமிழன், மறத்தமிழன் என்ற வார்த்கைளும், திருப்பாச்சி அருவாளும், மதுரை தமிழ் வீரமும் என்ற பஞ் வசனங்களும் வெள்ளித்திரைக்கு மட்டும் தானா?
மாநில அரசோ, மத்திய அரசோ எந்த ஒரு தமிழரையும் பாதுகாக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் தம்மை தமே பாதுகாக்க வேண்டும். அது தான் யதார்த்தமானது. ஏனெனில் படுகொலை செய்த சிங்கள கடற்படையை விட்டுவிட்டு, படுகொலைக்கு எதிராக போராடிய தமிழர்களை அல்லவா கைது செய்து வானில் ஏற்றி கொண்டு செல்கிறது மாநில அரசு.
எனவே நீங்கள் தான் போரடவேண்டும், நீங்கள் உயிருடன் வாழ, உங்களின் இனம் தப்பிப்பிழைக்க, உங்களின் சந்ததி பூமியில் வாழ போராடுங்கள்.
ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள பூமியில் வெறும் 700 பேருக்கு கூட போராடும் சக்தி இல்லையா?
சிங்கள காடையர்களிடம் இருந்து விடுதலைபெற, அவர்களின் வன்முறைகளில் இருந்து தப்பி பிழைக்க நீங்கள் ஒவ்வொருவரும் போராடத்தான் வேண்டும்.
மீனவன் சாகிறான் நமக்கென்ன என்று விவசாயியோ, அல்லது அரச பணியாளரே அலட்சியம் செய்ய முடியாது, சிங்களவனின் இனத்துவேசம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் கருவறுப்பதாகும்இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சம் தேங்காய்களை கூட அவர்கள்; உண்ணவில்லை, கொழுத்தி விட்டார்கள். இந்தியா வடக்காக இருக்குது என்று குறுகிப்படுத்த துட்டகெமுனு பரம்பரையாச்சே அவர்கள். எப்படி இந்திய தேங்காயை தின்பார்கள்?? சிங்கள காடையர்களுக்கு எதிரான போராட்டத்தை கோரமாக படுகொலை செய்யப்பட்ட 568 தமிழக மீனவர்களின் புதைகுழிமேல் கைவைத்து இன்றே தொடங்குங்கள் நாளை என்பது நமக்கில்லை.
நன்றி: ஈழம் ஈ நியூஸ்.

புத்த விகாரை மீது தாக்குதல்,செந்தமிழன் சீமான் அறிக்கை.

நம் மீனவர்கள் ஒவ்வொரு முறை சுடப்படும் பொழுதும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படையினர் அல்ல என்றும் இலங்கை கடற்படை ஒருபோதும் எல்லையைத் தாண்டுவது இல்லை என்றும் சிங்கள அரசு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது.
600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறிப் படையால் கொல்லப்பட்ட நிலையிலும், இந்திய அரசும் தமிழக அரசும் அதற்கெதிரான உறுதியான நடவடிக்கைக்கு தயாரில்லை. அறிக்கை, வேண்டுகோள், கடிதம், தந்தி என்ற ஒன்றுக்கும் உதவாத வழிமுறைகள் மூலம், சிங்கள இனவெறிக்கு மேலும் ஊக்கமளித்துக்கொண்டிருக்கின்றன.
நேற்று முன் தினம், மீனவர் ஜெயக்குமார் சிங்கள ராணுவத்தால் கழுத்தில் சுருக்கிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே ஆளும் அரசுகளுக்கு எதிரான கொதிப்பை உருவாக்கியுள்ளது. இந்த கொதிநிலை, சிங்கள இனவெறிக்கும்,ஆதரவாய் நிற்கும் காங்கிரஸ், திமுக அரசுகளுக்கும் எதிரான நெருப்பாய் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில்தான், சென்னை எழும்பூரிலுள்ள புத்த மடாலயம் தாக்கப்பட்டுள்ளது. இதற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பில்லை. மேலும் புத்த மட தாக்குதல் தொடர்பாக, சென்னை பெரம்பூர் ஜோசப், திலீபன் என்ற நாம் தமிழர் கட்சியினர் 2 பேரை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதி உரிய வழிமுறைகள் பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக சென்னைக் காவல்துறை அழைத்துச் சென்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற எண்ணற்ற குற்றச் செயல்களில் வருடக் கணக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத காவல்துறை,ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தத்தால் கைகட்டி நிற்கும் காவல்துறை நள்ளிரவு நடந்த சம்பவத்தில் அதிகாலைக்குள் துப்புத் துலக்கி எங்கள் கட்சியினரைக் கைது செய்யும் நோக்கில் அழைத்துச் சென்றுள்ளது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கிறது.
ஆட்சியாளர்களின் அடக்குமுறை குறித்து நாங்கள் துளியும் அஞ்சவில்லை. அதே நேரத்தில் எம் தம்பிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து சட்ட்த்தின் படியும்,நியாயத்தின் படியும் தங்கள் தரப்பில் தவறு இல்லை என்று நிருபித்து வெற்றியுடன் வெளி வருவார்கள்.
தமிழர்களின் கோபம், சிங்கள இனவெறிக்கும்,இங்கு அதற்கு துணைநின்றவர்களையும் ஜனநாயக வழியில் தண்டிப்பதற்காக நெறிப்படுத்தப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். எந்த ஆட்சி அதிகாரத்தின் மூலம் இவர்கள் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வில்லையோ அந்த ஆட்சி அதிகாரத்தினை இவர்களிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் நாம் அணி திரள வேண்டும்.

நேற்றைய தாக்குதலில் மூன்று கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் மூன்று கைதிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் 25 பேர் காயமடைந்து, அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார். காயமடைந்த 25 பேரில் 8 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள் கடந்த 23 ஆம் திகதி முதல் சிறைச்சாலை கூரையின் மீது அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தாகவும் இவர்களை கீழே இற்குவதற்கு இராணுவத்தினரையும் காவற்துறையினரையும் வரவழைக்க நேர்ந்ததாகவும் அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் கற்களால் தாக்குதல் நடத்தி, சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி பதற்றமாக நடந்து கொண்டதால், இராணுவத்தினருக்கும் காவற்துறையினருக்கும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனது. காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நேற்று பிற்பகல் 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இந்த பதற்ற நிலை காணப்பட்டதாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவத்தினரும், காவற்துறையினர் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் சிறையில் டயர்களை கொளுத்தி, சிறைச்சாலை சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறையில் உள்ள மருந்தகத்தை உடைத்து அதில் உள்ள மருந்துகளை நசாப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சில இராணுவ அணிகள் வரவழைக்கப்பட்டன. கைதிகள் தப்பி செல்வதை தடுக்க சிறைச்சாலைi சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார். இதேவேளை அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். அத்துடன் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றிரவு சிறைச்சாலைக்கு விஜயம் செய்து சம்பவம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

24 ஜனவரி 2011

புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி வாதாடுகிறார் வைக்கோ!

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ நாளை நேரில் ஆஜராகி வாதாடுகிறார்.
இத்தகவலை மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்ததை தில்லி தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தி்ல வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நாளை நடைபெறுகிறது. இதில், வைகோ நேரில் ஆஜராகி வாதாடுகிறார்.
பின்னர், மாலை 6 மணியளவில் புதுச்சேரி மாநிலத்தில், சிங்காரவேலர் சிலை அருகே நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்றுகிறார் என்றும் அக்கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் மகிந்த!

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டனில் மருத்துவமனையொன்றில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹுஸ்டன் நகரில் எம்.டீ. அண்டர்சன் கென்சர் சென்டர் எனும் மருத்துவமனையிலேயெ அவர் சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக எமது தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் உடம்பின் கீழ்ப்பாகத்திலேயே நோய் தோன்றியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான சிகிச்சையை இலங்கையில் பெற்றுக் கொண்டிருந்த போதிலும் குணமாகாத நிலையிலேயே அவர் தற்போது அமெரிக்காவுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தின் இணைந்த மருத்துவமனையிலேயே அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு குணமடைய வேண்டி ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆயிரம் சுமங்கலிகளுக்கு அன்னதானம் வழங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
ஜனாதிபதியின் சுகவீனம் பாரியளவிலானதாக இல்லாதபோதிலும், எதிர்வரும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அவரால் பங்கெடுக்க முடியுமா என்பது சந்தேகம் என்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.

இலங்கை ஜனாதிபதி ஆபத்தான நோய்காகவே அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் - ஸ்ரீலங்கன் காடியன்

இலங்கை ஜனாதிபதியின் அமெரிக்காவுக்கான தனிப்பட்ட பயணம் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம், ராஜபக்சவின் நோய் தொடர்பில் மௌனத்தை கடைப்பிடித்து வருகிறது இந்தநிலையில் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.
அவசர பயணமாக அமெரிக்கா சென்ற ராஜபக்ச, ஹுஸ்டனில் உள்ள அவரின் சகோதரரான டட்லி ராஜபக்சவுடன் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக ஸ்ரீலங்கன் காடியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, உயிராபத்துள்ள நோய் ஒன்றுக்காகவே ஹுஸ்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இலங்கையின் செய்தி ஊடகம் ஒன்றின் தகவல்படி, மஹிந்த ராஜபக்ச, எம் டி அன்டர்சன் புற்றுநோய் நிலையத்தில் சிகிச்சை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையிலும் அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்தமைக்கு இந்த நோயே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சுகம் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ச, கொழும்பு திரும்பி, இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பார் என்றும் ஸ்ரீலங்கன் காடியன் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பில் ரவிசங்கர் நடத்திய அரசியல் பூஜை!

மகா ருத்ர யாகம், தேவார பாராயணம் செய்வதற்காக நேற்றைய தினம் மட்டக்களப்பிற்கு வருகை தந்த ஸ்ரீ ரவிசங்கர் (குருஜீ) அவர்கள் தான் வருகை தந்த நோக்கத்தை மறந்து அரசியல்வாதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த விடயமானது மட்டு. மாவட்ட மக்களை வேதனைப்படுத்தியுள்ளது.
இந்த ஆத்மீக நிகழ்வுக்கு அரசியல்வாதிகளை அழைத்தது மட்டுமின்றி அவர்களை மேடையில் அமர வைத்து பொன்னாடை போர்த்தி பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதானது குருஜியின் இலங்கை விஜயத்தில் மக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆத்மீக நிகழ்வுக்கு முதலமைச்சர் பிள்ளையான், முரளிதரன், ஹிஸ்புல்லா, பிரசாந்தன் ஆகியோர் அழைக்கப்பட்டு குருஜியால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செவல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் அழைக்கப்பட்டனர் ஆனால் அவர்கள் மக்களுடன் தரையில் அமர்ந்திருந்து நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

23 ஜனவரி 2011

ஈழத்தில் இனக்கொலை,இதயத்தில் இரத்தம்!

மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடக்க காலம் தொட்டே ஈழ விடுதலைக்காகவும் அம்மக்களின் துயரம் குறித்தும் பொதுக்கூட்டங்களிலும்,கட்டுரைகள்,நூல்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து வருகிறார்.தாய்த் தமிழகத்தில் எண்ணற்ற முறையில் எல்லா வழிகளிலும் போராட்டங்கள் நடத்திச் சிறைப்பட்டும் இருக்கிறார்.உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும்,ஐ.நா மன்றம்,மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் வாதிட்டும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார்.
தற்போது 'ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் இரத்தம்' என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் துயரங்களையும் தமிழர்கள் படும் துன்பங்களையும் காணொளி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.ஈழம் என்பது தமிழர்களின் தாயகம் என்பதனையும்,சிங்களவர்களே அம்மண்ணில் வந்தேறிகள் என்பதனையும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.ஒவ்வொரு தமிழரும்,மனிதநேய உணர்வாளரும் காண வேண்டிய ஆவணம்.இதைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பரப்பவேண்டியது கடமையாகும்.
அந்த ஆவணப்படத்தின் காணொளியை காண கீழே அழுத்தவும்.
http://pazhanedumaran.blogspot.com/2011/01/blog-post23html

மகிந்தவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பு!

பிலிப் ஜே கிறவ்ளி
உதவிச் செயலாளர்
வாஷிங்டன் டிசி
ஜனவரி 21,2011
கேள்வி: இலங்கை ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தொடர்பாக நீங்கள் அறிந்துள்ளது என்ன அல்லது நீங்கள் புரிந்துள்ளது என்ன?
கிறவ்ளி: அவர் ஐக்கிய அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் ஒரு தனிப்பட்ட விஜயம்.
கேள்வி: அவர் ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் எவரையும் சந்திக்கப் போவதில்லையா? அதற்கான திட்டம் ஏதும் அவரிடமில்லையா?
கிறவ்ளி: இல்லை
கிறவ்ளி: நான் நினைக்கிறேன் அவர் (ஜனாதிபதி) ரெக்ஸாஸ்இல் இருக்கலாம். உதவிச் செயலாளர் பிளேக்கும் அங்கு தான் சென்றிருக்கிறார். அவர்கள் இருவரும் சந்திக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
கிறவ்ளி: ஜனாதிபதியின் விஜயத்தின் போது அவ்வாறான ஒரு சந்திப்பும் இல்லை என்பதை நான் அறிவேன். மற்றைய நீங்கள் சொன்ன விடயம் சரியானது. நான் நினைக்கிறேன் றைஸ் பல்கலைக்கழகத்தில் உரையொன்றை ஆற்றுவதற்காக உதவிச் செயலாளர் பிளேக் அங்கு சென்றிருந்தார்.
ஆனால் விசேடமாக எங்களைக் கேட்டால் ஐக்கிய அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையே எவ்விதமான பேச்சுக்களும் இல்லை என்று தான் சொல்வேன்.
கேள்வி: இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் உடனிருக்கிறார் அல்லவா? நீங்களோ அல்லது உதவிச் செயலாளர் பிளேக்கோ அவரைச் சந்திக்கலாம் அல்லவா?
கிறவ்ளி: மீளவும் சொல்கிறேன். நான் சொல்வது தவறென்றால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் ஜனாதிபதியின் விஜயத்தோடு தொடர்பான எந்தச் சந்திப்புக்கள் குறித்தும் நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.
கேள்வி: அவர் மீது விசாரணை மேற்கொள்ளும்படி அல்லது அவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி குரல்கள் எழுப்பப்படுகிறதே?
கிறவ்ளி: நல்லது. நாங்கள் மிகத் தெளிவாகவே பகிரங்க அறிக்கை ஒன்றை இது தொடர்பில் வெளியிட்டிருக்கிறோம். இலங்கை செய்து வருபவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம். அது ஒரு தொடர்நடவடிக்கை. அது இப்போதும்நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் தெளிவாகவே நம்புகிறோம் சர்வதேச மனித உரிமை சட்டங்களை யார் மீறினார்களோ அவர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டம் என. அத்தோடு இந்தப் பொறுப்புணர்வு என்பது இலங்கையின்p தேசிய நல்லிணக்கத்தோடு பின்னிப்பிணைந்ததாயிருத்தல் அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம்.
அங்கு கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழு நூற்றுக்கணக்கான மக்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறது. நான் நினைக்கிறேன் அதன் கால எல்லை இவ்வருட ஜுன் வரை நீடிக்கப்படும் என்று. இந்தக் காலகட்டத்தில் அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். நாங்கள் நம்புவோம் இலங்கை இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லம் என்றும் அதன் வழியில் இது தொடர்பில் நிபுணர்களின் உதவியையும் பெறும். உதாரணமாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துக்குள் செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிபணர்குழுவின் உதவி பெறப்படலாம். அந்த நிபுணர் குழு இலங்கை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளுக்கு தானாகவே உதவி புரியும்.
கேள்வி: சரி, ஜனாதிபதி ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் ஐநாவின் எத்தகைய விசாரணைகளுக்கும் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தான் நான் அறிந்தேன். அது சரியா?
கிறவ்ளி: அவ்வாறு தான் நானும் அறிந்தேன்.
கேள்வி: நல்லது அவ்வாறானால் அவர் ஐக்கிய அமெரிக்காவில் இருக்கும் போதே அவரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏன் பயன்படுத்தக் கூடாது.
கிறவ்ளி: நாங்கள் அவ்வாறு செய்யலாம். இது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மோதலின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய முழுமையான கணிப்பீடு ஒன்றை இலங்கை அரசாங்கம் செய்ய நாங்கள் ஊக்குவி;த்துக் கொண்டிருக்கிறோம்.நாங்கள் நினைக்கிறோம் இது இலங்கையின் எதிர்காலத்திற்குமிகவும் அவசியமானது என்று. இது தொடர்ந்து நடைபெறுவதற்காக நாங்கள் பேசுவதற்கு ஒரு போதும் வருத்தப்படப் போவதி;ல்லை.
கேள்வி: நல்லது சரி இது இலங்கையின் எதிர்காலத்திற்கு மிக மிக அவசியமான ஒன்றென்றால் ஐநாவின் பணிக்கு இது உதவும் என்றால் இங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரைச் சந்தித்து உங்களுடைய நிலைப்பாட்டை மீளவலியுறுத்தாலம் தானே? அவருடன் நேருக்கு நேராக இது பற்றிக் கதைக்கலாம் தானே?
கிறவ்ளி:இலங்கை அரசாங்கத்திற்கு எங்களுடைய அபிப்பிராயத்தைச் சொல்வதற்கு எத்தகைய பிரச்சினையும் எங்களுக்கில்லை.
கேள்வி: அப்படியானால் எப்படிச் செய்யப் போகிறீர்கள்?
கிறவ்ளி:: நான்....
கேள்வி: அப்படியானால் அவரைச் சந்திப்பதற்குக் கேட்டீர்களா?
கிறவ்ளி:: இல்லை நாங்கள் செய்யவில்லை. அவர் எங்களைச் சந்திப்பதற்குக் கேட்டாரா?
கேள்வி: நல்லது. அவ்வாறானால் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஐநா நிபுணர் குழுவின் தலையீட்டை அவருடைய அரசாங்கம் எதிர்த்ததன் காரணமாக பலவீனமடைந்துள்ள அவரை ஏன் சந்திக்க ஏன் கேட்கக் கூடாது.
கிறவ்ளி: நல்லது, இந்தப் போக்கு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். அது விரைவிலேயே வீழ்ச்சி காணுமாயின் அவ்வாறு சொல்ல நாங்கள் ஒரு போதும் தயங்கப் போவதில்லை.
தமிழில் : ஜிரிஎன்.

யாழ்,வன்சம்பவங்களுக்கு புலிகளே பொறுப்பு என்கிறது ஈ,பி,டி,பி.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சி அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள் போன்ற சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் தொடர்பில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளே இதனை மேற்கொள்வதாகவும் யாழ்;ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், சில உறுப்பினர்கள் இன்னமும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பேரை ஈ.பி.டி.பி.யினர் படுகொலை செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கும் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் தற்போது எவ்வித தொடர்புகளும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அச்ச சூழ்நிலையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் நெருக்கடி நிலைக்கு தள்ள தமது கட்சி முயற்சிக்கவில்லை என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது.

22 ஜனவரி 2011

சிங்கள அரசின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்குமாம்!

யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்தி வரும் விசாரணைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணைளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் பிலிப் ஜே. க்ரொவ்லி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும், அமெரிக்க அதிகாரிகளை அவர் சந்திக்க மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஒ பிளெக்கை சந்திப்பார் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களுக்கும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு முக்கியத்துவம் அளிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் முக்கிய தளபதிகள் கனடாவிலாம்!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கனடாவுக்குத் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டின் உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அது பற்றிய செய்தியொன்றை இன்றைய திவயின சிங்கள நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதன் பாதுகாப்பு பத்தி எழுத்தாளராலேயே கனடா உளவுத்துறையை மேற்கோள் காட்டி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெரும்பாலான விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் கனடாவுக்குத் தப்பி வந்துள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து கனடாவில் விடுதலைப் புலிகளின் கேந்திர நிலையமொன்றை உருவாக்குவதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளதுடன், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அதற்கு மேலதிகமாக விடுதலைப் புலிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தளபதிகள் மற்றும் உளவுப் பிரிவின் முக்கியஸ்தர்கள் என சுமார் ஐம்பது பேரடங்கிய குழுவொன்றும் கனடாவுக்கு வந்து சோ்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் குறித்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

21 ஜனவரி 2011

மகிந்தவை ஐ,நா.விசாரிக்காதாம்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூ யோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு உறுப்பினர்களையோ அல்லது வேறும் தரப்பினரையோ ஜனாதிபதி சந்திக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப வேண்டுமென சில மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விஜயம் தொடர்பான திகதிகள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

புங்குடுதீவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட உடலம் அடையாளம் காணப்பட்டது!

நல்லூர் ஆனந்தா வித்தியாலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய துரைராஜசிங்கம் உத்தமகுமாரி (வயது 40) என்பவருடைய சடலமே புங்குடுதீவு முனைப்புலவில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் இவர் காணாமல் போயிருந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் மிக மோசமாக அழுகிய நிலையில் காணப்பட்டதால் அதனை அடையாளம் காண முடியவில்லை. எனினும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணின் ஆடைகளைக் கொண்டு உறவினர்கள் சடலம் உத்தமகுமாரியுடையது என அடையாளம் காட்டினர்.உத்தமகுமாரி நல்லூர் ஆனந்தாக் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தார்.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி வழமை போல் பணிக்குச் சென்ற அவர் பின்னர் காணாமல் போயிருந்தார் என்று உறவினர்கள் கூறுகின்றனர். பாடசாலை முடிந்து இரண்டு மணியளவில் அவர் வெளியேறி உள்ளதற்கான பதிவுகள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர். அவர் காணாமல் போனமை தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், புங்குடுதீவு முனைப்புலவில் பாழடைந்தகிணறு ஒன்றினுள் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட பொலிஸார், கல்லில் கட்டி கிணற்றினுள் போடப்பட்டிருந்த அப் பெண்ணின் ஆடைகளையும் மீட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஆடைகளை உறவினர்கள் நேற்று அடையாளம் காட்டினர்.

அமெரிக்காவை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்.

மஹிந்த ராஜபக்ஸவுடன்அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மஹிந்த ராஜபக்ஸ அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒபாமா, மஹிந்த ராஜபக்ஸவோடு எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளக் கூடாது.
போர்க் குற்றவாளியான மஹிந்தரை அமெரிக்கா வரவேற்கக் கூடாது என கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 ஜனவரி 2011

சுவிசில் கைதானவர்களுக்கும் இலங்கைப்படைக்கும் தொடர்பாம்!

சுவிஸர்லாந்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் செயற்பாட்டாளர்களின் கணனிகளில் உள்ள ரகசிய தகவல்களின்படி, அவர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்த இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இராணுவத்தில் பணியாற்றி வரும் இந்த இரண்டு இராணுவ உயர் அதிகாரிகள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளனர். இந்த தகவலை உறுதிப்படுத்திய சுவிஸ் அதிகாரிகள் அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துள்ளனர்.
உத்தியோபூர்வமாக இவர்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்த பின்னர், அவர்கள் யார் என்பது குறித்து ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். புலிகளின் 10 செயற்பாட்டாளர்களை முதலில் கைதுசெய்த சுவிஸ் காவற்துறையினர், பின்னர், அப்துல்லா என அழைக்கப்படும் புலிகளின் தலைவர் ஒருவரையும் கைதுசெய்தனர்.

மகிந்த பற்றி அமெரிக்க பத்திரிக்கை கிண்டல்!

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னைத் தப்புவிக்கும்படி அமெரிக்காவின் காலைப் பிடித்துக் கெஞ்சும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் என்பவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவின் ஆதரவைத் திரட்டும் நோக்கிலேயே அவர் திடுதிப்பென்று அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதாக அப்பத்திரிகையின் பத்தியொன்று குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான செயற்பாடுகளில் ஐ.நா.வும் அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டால் நிலைமை கைமீறிப் போய் விடும் என்பதன் காரணமாக அவர் பெரும் அச்சத்துக்குள்ளாகியிருப்பதாக அப்பத்திரிகை சுட்டிக் காட்டுகின்றது.
அதன் காரணமாக அமெரிக்காவின் காலைப் பிடித்து சமாதானப்படுத்தும் நோக்கிலேயே அவர் அமெரிக்காவிற்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அப்பத்திரிகை கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளது.
ஆயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பனும், சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் ஆபத்பாந்தவனுமான சீன ஜனாதிபதி அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயம் வெளிப்படாத உள்நோக்கங்களைக் கொண்டதாக இருக்கலாம் என்றும் அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவை அமெரிக்காவில் கைது செய்யுமாறு மன்னிப்புச்சபை கோரிக்கை.

மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார்.
இது தொடர்பிலான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருப்பதாக, அதன் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சேம் சரிப் தெரிவித்துள்ளார்.
கடத்தல், துன்புறுத்தல், நீதிக்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே இலங்கையின் பாதுகாப்பு படையின் அதி உத்தம கட்டளைத் தளபதியாக உள்ள நிலையில், அவர் மீது யுத்த குற்றங்கள், கடத்தல், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இடம்பெற்றுள்ளது.
யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் தரப்பிலும், அரசாங்கத்தின் தரப்பிலும் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.
இந்த காலப்பகுதியில் இராணுவத்தினாலும், விடுதலைப்புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான விக்கி லீக்ஸின் தகவல்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், அவரது சகோதர்களுமே இலங்கையின் பல குற்றச் செயல்களுக்கு காரணம் என அமெரிக்க துதுவர்கள் அமெரிக்க திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருப்பதாக மன்னிப்பு சபையின் பிராந்திய இயக்குனர் சாம் செரீப் தெரிவித்துள்ளார்.

19 ஜனவரி 2011

கருணாநிதியை எதிர்ப்பதால் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக கருதவேண்டாம்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், "தமிழ் இனத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நான் சொன்னேன். அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லையே?
கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கருணாநிதி சொல்கிறார். நீங்கள் இரண்டு பேரும் ஊழல் செய்தவர்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.
இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்று நாங்கள் கூறுகிறோம். ஜெயலலிதா, கருணாநிதியை விட்டால் நாட்டைக் காக்க வேறு ஆளே இல்லையா? நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அழிக்க வேண்டும். எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், எவ்வளவு சீட் வாங்கினாலும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணியையும் தோற்கடிப்போம்" என்று பேசினார்.

மகிந்த அமெரிக்கா பயணமாகியுள்ளாராம்!

தனக்கு நெருக்கமான சோதிடர்களின் ஆலோசனைப்படி இன்று அதிகாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடுதிப்பென அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டே அவர் அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளதுடன், லிபியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் அவரது மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவையும் அங்கிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு வரவழைக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
ஜனாதிபதியின் ஜாதகப்படி தற்போதைய கிரக நிலவரம் சரியில்லாத காரணத்தால் அவர் சில நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருப்பது உசிதம் என்று அவருக்கு நெருக்கமான சோதிடர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே ஜனாதிபதியின் அமெரிக்க பயணம் திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்னும் இருபது பேருமாக இன்று அதிகாலை மிகவும் இரகசியமான முறையில் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் எதிர்வரும் பத்து நாட்களுக்கு அமெரிக்காவில் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

18 ஜனவரி 2011

சுவிஸ் வங்கி கணக்குகளை வெளியிட விக்கிலீக்ஸ் தயாராகிறது!

சுவிஸ் வங்கியில் ரகசியமாக முதலீடு செய்திருப்பவர்களின் விவரங்களை விரைவில் வெளியிட விக்கிலீக்ஸ் இணையதளம் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இவ்வங்கியில் முதலீடு செய்பவர்களின் விவரங்களை ரகசியமாக வைப்பது வங்கியின் பாலிஸி என்பதால், உலகநாடுகளின் பெரும்பாலான தலைவர்கள் இவ்வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா உட்பட பல நாடுகளின் ரகசிய விவரங்களை வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளம், தற்போது சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் விவரங்களை விரைவில் வெளியிட உள்ளது. ஜூலியஸ் பேயர் என்னும் பிரபலமான சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரபல நபர்கள் வைத்திருக்கும் ரகசிய முதலீட்டு விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை (சி.டி.) விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜேயிடம் வழங்கியுள்ளார்.
லண்டனில் உள்ள "ஃபிரன்ட்லைன் கிளப்"பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜுலியன் அசான்ஜேயிடம் சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர் அந்தக் குறுந்தகட்டை ஒப்படைத்தார். இதையடுத்து, ருடால்ஃப் எல்மருக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ஜே தனது பாராட்டைத் தெரிவித்தார்.
"இதன் மூலம் நிதி உலகின் நிழல் நடவடிக்கைகளை ஒழித்துக்கட்ட முடியும்" என்று அசான்ஜே குறிப்பிட்டார். "சி.டி.,யில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும்" என்றும் அவர் கூறினார். அமெரிக்கா உட்படபல நாடுகளின் ரகசிய செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு வந்த விக்கிலீக்ஸ் இணையதளம், தற்போது சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு நெதர்லாந்து புகலிடம் வழங்கியுள்ளது!

மரணப் படுக்கையிலிருக்கும் இலங்கைச் சிறுவன் ஒருவனுக்கு நெதர்லாந்து அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது. நாடு கடத்தப்படுவதற்கு எதிராக சிறுவனின் தாயார் செய்த மேன்முறையீட்டை நெதர்லாந்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
குறித்த சிறுவனை பார்வையிடுவதற்கு அவரது பாட்டிக்கு வீசா வழங்குமாறு நெதர்லாந்தின் குடிவரவு குடியகழ்வு அமைச்சர் கெர்ட் லீர்ஸ் தெரிவித்துள்ளார். எட்டு வயதுடைய அபிராம் பரமேஸ்வரன் என்ற சிறுவன் கொடிய நோயினால் மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்.
குறித்த சிறுவன் மரணிக்கும் வரையில் நெதர்லாந்திலேயே வாழ்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் தாயாரும் நெதர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறுவனின் தாயார் சமர்ப்பித்த புகலிடக் கோரிக்கையை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளம் தமிழ் பெண்கள் பலவந்தமாக ஆடைத்தொழிற்சாலைக்கு அனுப்பிவைப்பு!

கொழும்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கென மெனிக்பாம் முகாமிலிருந்து இளம் பெண்களும் சிறுமியர்களும் தமது விருப்பத்திற்கு மாறாக ஏற்றி அனுப்பி வைக்கப்படுவதாக பெற்றோர்கள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஞாயிறன்று 18 பேரும் திங்களன்று 30 பேரும் இவ்வாறு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள்.
ஞாயிறன்று அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 18 பேர் பெண் பிள்ளைகள். இவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்ற சிறுவர்களுக்கான விடுதிகளில் தங்கியிருந்து பாடசாலைகளில் கல்வி கற்று வருகி ன்றார்கள். தைப்பொங்கலுக்காகப் பெற்றோடம் மெனிக்பாமுக்கு வந்திருந்த வேளையிலேயே இவர்கள் முகாம் பொறு ப்பதிகாகளினால் பலவந்தமாக ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதேபோன்று திங்கட்கிழமையும் 30 பேர் இவ்வாறு முகாம் பொறுப்பதிகாரியினால் ஆடைத்தொழிற்சாலைக்கு விருப்பத்திற்கு மாறாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள். இந்த விடயம் குறித்து வவுனியா அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளேன் என என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு கிடைத்துள்ள முதலாவது அங்கீகாரம்!

நாடுகடந்த தமீழீழ அரசாங்கத்துக்கு உலக நாடுகளில் முதலாவது அங்கீகாரமாக புதிதாக அமையவுள்ள தென்சூடானிய அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சூடானுடன் தாம் இணைந்திருக்க விரும்பவில்லை என்பதை புதியதொரு தோ்தலொன்றின் மூலம் வெளிக்காட்டி, தென் சூடானிய மக்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்த சூடானிய மக்கள் கிளர்ச்சி இயக்கத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பலமான தொடர்புகளைப் பேணி வந்திருந்தனர்.
அதன் காரணமாக தெற்கு சூடான் சுதந்திரம் பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ முறையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்தும் வழங்கப்படவுள்ளது.
அதன் காரணமாக உலக நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த முதலாவது நாடு என்ற பெருமையை தெற்கு சூடான் அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ளது. அது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு திருப்பு முனையாகவும், மைல் கல்லாகவும் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

17 ஜனவரி 2011

துரத்திச்செல்லப்பட்ட திருடன் கிணற்றில் வீழ்ந்தான்!

வீடொன்றில் திருடுவதற்காகச் சென்ற கும்பல் ஒன்றினைப் பொதுமக்கள் துரத்திச் சென்ற போது திருடன் ஒருவன் கால் தடுக்கிக் கிணற்றினுள் விழுந்ததனால் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டான். இச் சம்பவம் யாழ். சுண்டுக்குழி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:
வீடொன்றில் திருடுவதற்காகச் சென்ற கும்பலைக் கண்டவுடன் வீட்டு உரிமையாளர் விழிப்படைந்து வீட்டைச் சுற்றி வெளிச்சங்களைப் போட்டதும் திருடர்கள் முன் வீட்டுக்காரர் தான் வந்திருப்பதாகவும், கதவைத் திறவுங்கள் எனவும் கூறியிருக்கின்றனர்.
குரலில் வேறுபாடு இருந்ததனால் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அயலவர்கள் கூடி ஆரவாரத்துடன் வருவதைக் கண்ட திருடர்கள் அயலிலுள்ள காணி ஒன்றினூடாகத் தப்பியோட முயன்ற வேளையிலேயே அவர்களில் ஒருவன் வழி தவறிக் கிணற்றினுள் விழுந்திருக்கின்றான்.
சம்பவம் குறித்து, பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் திருடனைக் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தற்போது பரவாலாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டவருக்குத் தொடர்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறியப்படுகிறது.

இலங்கை தமிழர் பிரச்சனையில் அதிக அக்கறை காட்டியவர் எம்,ஜி,ஆர்.

எங்களை மதித்து அழைக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என, லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
லட்சிய தி.மு.க. தலைவரும், நடிகருமான விஜய டி.ராஜேந்தர் படப்பிடிப்புக்காக மதுரை சென்றுள்ளார். மதுரை வந்த விஜய டி.ராஜேந்தர் கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர் பிரச்சினையிலும், விடுதலைப்புலி விவகாரத்திலும் அதிக அக்கறை காட்டினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு சிறுசேமிப்பு தலைவர் பதவி எனக்கு கிடைத்தது.
ஆனால் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தீர்க்க முடியாததால் அந்த பதவியை நான் ராஜினாமா செய்தேன்.
வருகிற சட்டசபை தேர்தலில் எங்களை மதித்து கூட்டணிக்கு அழைக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம். தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது என்றார்.

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் சொத்து என்கிறார் மகிந்த.

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க ஒரு சொத்து என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சூரியப்பொங்கல் விழாவில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இன்று ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் சூரியப் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் டக்ளஸ் தேவானந்தா, புத்தசாசன பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரி, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சில்வஸ்டர் அலன்ரின், முருகேசு சந்திரகுமார், அப்பாத்துரை விநாயகமூர்த்தி உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி தமிழிலேயே உரையாற்றினார். அதன் போது அவர் ஆற்றிய உரையின் சாரம்சம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.
வடபகுதி மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதி மிக்க ஒரு சொத்து. நாம் எந்தவொரு கட்டத்திலும் எமது மக்களைக் கைவிட மாட்டோம். நாட்டின் ஏனைய பகுதிகள் போன்றே சகல வளங்களும், வசதிகளும் கொண்ட பிரதேசமாக வடமாகாணத்தையும் அபிவிருத்தி செய்வோம். அதற்கான நோக்குடன் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதே வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டமாகும்.
வடக்கில் நாம் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட சிலர் முயற்சிக்கின்றனர். சர்வதேச மட்டத்தில் அது தொடர்பான போலிப் பிரச்சாரங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். அதன் மூலம் எமது பணி முழுமையடையாமல் தடைப்பட்டுள்ளது உண்மைதான்.
ஆயினும் எந்தக் கட்டத்திலும் நாம் எமது அபிவிருத்தித் திட்டங்களை இடை நிறுத்த மாட்டோம். வடக்கின் கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி போன்றவற்றில் புரட்சியை ஏற்படுத்துவோம். உங்களுக்கோர் வளமான வாழ்வை ஏற்படுத்தித் தரவே நான் பாடுபடுகின்றேன். என்னை நம்புங்கள். நான் உங்களை வழிநடத்திச் செல்வேன்.
இனிமேல் இந்நாட்டில் பயங்கரவாதம் உருவாக நான் எந்தக் கட்டத்திலும் இடமளிக்க மாட்டேன். யாழ்ப்பாணத்திலும் தென் பகுதியிலும் உருவாகியிருக்கும் பாதாள உலகக் கும்பல்களையும் விரைவில் இந்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டி விடுவேன்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக நாம் பிரிந்து நிற்காது ஒரு தேசியக் கொடியின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதாகவும் அவர் தனதுரையில் வலியுறுத்தினார்.

16 ஜனவரி 2011

இந்திய விமானப்படை அதிகாரி இலங்கை வந்துள்ளார்!

இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் பிரதீப் வசந்த் நாயக் நான்கு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வந்தடைந்தார்.
இன்று நண்பகல் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவரை சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் றொசான் குணதிலக மற்றும் உயர்நிலை அதிகாரிகள் வரவேற்றனர்.
சிறிலங்காவில் நான்கு நாட்கள் தங்கியிருக்கும் போது இந்திய விமானப்படைத் தளபதி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முப்படைகளின் தளபதிகள், அரசியல் தலைவர்கள் போன்றோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா விமானப்படையின் முக்கிய தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிடவுள்ளார்.
குறிப்பாக இந்தியா வழங்கிய வான் பாதுகாப்பு ரேடர்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களுக்கும் அவர் சென்று பார்வையிடத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களில் இந்திய இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் சிறிலங்கா வந்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே விமானப்படைத் தளபதி தற்போது சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானிய இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஸ் கயானியும் இந்த வாரம் சிறிலங்கா வரவுள்ளார்.
மூன்றுநாள் பயணமாக அவர் எதிர்வரும் புதன்கிழமை கொழுமபை வந்தடைவார்.
இவர் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இருநாடுகளும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக இவர் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஐ.எஸ்.ஐ எனப்படும் பாகிஸ்தானின் உள்ளக புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா உதவி!

இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்துக்காக அமெரிக்கா, 300 ஆயிரம் டொலர்களை வழங்கவுள்ளது. இதற்கான அறிவி;த்தலை இலங்கைக்காக அமெரிக்க தூதர் பெற்றீசியா பியூட்டினியஸ் விடுத்துள்ளார்.
இந்த உதவியின் மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களும் சேவைகளும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கின் மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய இடங்கள் உட்பட நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் வரை உயிரிழந்து, பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

15 ஜனவரி 2011

அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள தயாரென மகிந்த தெரிவித்துள்ளார்!

தமிழ் மக்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளத் தயார் எனவும், சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் கிடையாது என்ற போதிலும், காவல்துறை அதிகாரங்கள் பகிரப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனேடிய குடிவரவு கொள்கை, சுவிட்சர்லாந்தில் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை, ஜெர்மனியில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை போன்றவற்றை உதாரணமாக காட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய பொங்கல் நாளில் இனிப்பு செய்தி சொல்கிறார் ஆனந்தசங்கரி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் என்ற தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய தமிழ் அரசியற் கட்சிகள் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஒரே அணியில் போட்டியிட இணங்கியிருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தைப்பொங்கள் தினத்தன்று தமிழ் மக்களுக்கான ஓர் இனிப்புச் செய்தியாக இது அமையும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏனைய தமிழ் அரசியற் கட்சிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தொடர் பேச்சுக்களின் முக்கிய கட்டப் பெச்சுவார்த்தையாக நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் பேச்சுவாத்தை நடத்தியதாகவும் இதில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் உடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஈ.பீ.டீ.பீ, மற்றும் ரீஎம்வீபீ கட்சிகள் தவிர்ந்த ஏனைய முக்கிய தமிழ் அரசியற் கட்சிகள் ஒரே அணியில் ஒரேசின்னத்தில் போட்டியட தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று இலங்கை நேரம் பிற்பகல் 2 மணிக்கு முன்பாக கூட்டறிக்கை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுத்தம், இயற்கை அழிவு உள்ளிட்ட காரணிகளால் தாங்க முடியாத துயரங்களை எதிர் கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியற் கட்சிகளின் கூட்டிணைவு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என பரவலாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

14 ஜனவரி 2011

சரத்தின் கைதினால்தான் நாட்டில் இயற்கை அழிவுகளாம்!

சரத் பொன்சேகாவை விடுதலை செய்தால் மாத்திரமே வெள்ளம், நோய்கள் மற்றும் வைரஸ் போன்றன நாட்டில் பரவுவது முடிவுக்கு வரும் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள இந்நிலையானது இறைவனின் சாபமாகும். சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் வரை இந்நிலை தொடரும் என இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாளை விடுதலை செய்யப்படுவாரானால் அனைத்து மக்களும் சமாதானமாக வாழ முடியும் என நான் நினைக்கின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பூர் என்ற ஊர் இல்லையென தெரிவிப்பு!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலை பிற்போடவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதன் போது கூட்டமைப்பினரின் விளக்கங்களை கேட்டறிந்த தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்ட சம்பூர் வாக்காளர்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டிய போது சம்பூர் என்ற இடம் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அது உயர்பாதுகாப்பு வலயம் என்ற போதிலும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியுடன் அங்கு வாழ்ந்த மக்கள் அங்கு சென்று வரலாம் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் சுமார் 3 லட்சம் பேர் வரையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இரட்டை பிரஜாவுரிமை இருக்குமானால், அவர்களும் தேர்தல்களில் வாக்களிக்கும் முறையை கொண்டு வரலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.
இதனை ஆலோசிப்பதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், காங்கேசன்துறையில் அதியுயர் பாதுகாப்பு வலயம் இன்னும் அகற்றப்படாமை காரணமாகவே அங்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்காளர் பதிவுகள் திருப்பியனுப்பப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

13 ஜனவரி 2011

தமிழனுக்கு சிங்களவன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி குண்டு!

தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா என்று மீனவர் பாண்டியன் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில் இனி எடுக்கும் தீர்வு, நிரந்தர இறுதித் தீர்வாகத்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை அழித்த சிங்களனின் கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் (வயது 19) என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் வாழ்வின் சுகம் அனுபவியாத தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அந்த உயிர் இன்று நம்மிடம் இல்லை. இதற்கு யார் பொறுப்பு? இதுவரை 540-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இது போன்ற தாக்குதலைக் கண்டிக்கத் துப்பில்லாதவர்கள் தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர். நம் எல்லைக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை இலங்கை கடற்படையினர் முன்னிலும் வேகமாக இப்பொழுது தொடர்கின்றனர். இது யார் கொடுத்த தைரியம்?
இதனைத் தட்டிக்கேட்ட என்னை அடக்குமுறைச் சட்டமான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிச் சிறையில் தள்ளினார் கருணாநிதி. ஆனால் சுடப்படுவதற்குக் காரணமான ராஜபக்‌ஷேவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பினை கருணாநிதியின் மத்திய அரசு அளித்தது.
தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். இப்பொழுது உயிரை இழந்து நிற்கும் பாண்டியன் குடும்பம் எப்படி மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட முடியும்? இதற்கு என்ன பதிலை முதல்வர் வைத்திருக்கிறார்?
ஒட்டு மொத்த இனத்தையும் அழித்தொழித்த சிங்கள ராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு இப்பொழுது கூட்டுப் பயிற்சிக்கும் ஆயத்தமாகி வருகிறது. இது மீதமுள்ள தமிழனையும் அழிக்கவா? சிங்களனால் கொல்லப்பட்ட எம் மீனவன் பாண்டியனின் உடலில் பாய்ந்த குண்டினை பரிசோதித்துப் பார்த்தால் அது இந்திய ராணுவம் கொடுத்த குண்டாகத்தான் இருக்கும்.
தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு இந்த துப்பாக்கி தோட்டா ஆகும். இவ்வாறு நாட்டின் குடிமகன் உயிரைக் காப்பாற்ற வக்கில்லாத கருணாநிதியும் சிதம்பரமும் பதவியில் இருப்பது வெட்கக்கேடு.
இவ்வாறு தொடர்ச்சியாக கொல்லப்படும் மீனவர் பிரச்னையில் இன்றும் கருணாநிதி கடிதம் எழுதி பிரச்னையை ஊத்தி மூடப் போகிறாரா? முதலில் இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு 10 லட்சம் அளிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் இனி எடுக்கும் தீர்வு நிரந்தர இறுதித் தீர்வாகத்தான் இருக்க வேண்டும்," என்று சீமான் கூறியுள்ளார்.