31 ஆகஸ்ட் 2011

செங்கொடியின் புகழுடலுக்கு இன்று இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்காக உயிர் நீத்த இளம் பெண் செங்கொடியின் உடல் தகனம் இன்று அவரது சொந்த கிராமமான மங்கல்பாடியில் நடைபெறுகிறது. அவருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில்வசித்து வந்த இளம் பெண் செங்கொடி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மரணம், அதுவும் தமிழகத்தில் முதல் முறையாக நடந்த ஒரு பெண்ணின் தீக்குளிப்புச் சம்பவம் தமிழக மக்களை உலுக்கி விட்டது. இந்த தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் அசாதாரணமான நிலை ஏற்பட்டது.
உயிர் நீத்த செங்கொடிக்கு ஆயிரக்கணக்கான மக்கள்அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக காஞ்சிபுரம் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்களுக்காக பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வந்த செங்கொடிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் அஞ்சலிக்குப் பின்னர் செங்கொடியின் உடல் அவரது கிராமமான காஞ்சிபுரம் அருகே உள்ள மங்கல்பாடிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெருமளவில் மக்கள் திரண்டு வந்ததால், நேற்று நடப்பதாக இருந்த இறுதிச் சடங்குகள் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
செங்கொடியின் உடலுக்கு இன்று பல முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். இன்று காலை முதலே அங்கு நூற்றுக்கணக்கில் மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும், பல்வேறு தரப்பினரும் குவிந்து வருகின்றனர்.

30 ஆகஸ்ட் 2011

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு வைக்கோ நன்றி!

ராம்ஜெத்மலானி உட்பட பிரபல வழக்கறிஞர்களின் வாதத்தினால் சென்னை உயர்நீதிமன்றம், முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குக்குக் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய ராம் ஜெத்மலானிக்கு வைகோ நன்றி தெரிவித்தார். ராம் ஜெத்மலானி வாதத்தால் தான் இடைக்காலத் தடை பெற முடிந்தது என்றும் வைகோ கூறினார்.

தூக்குத் தண்டனையை குறைக்க தமிழக சட்டமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து ஆற்றிய உரை :
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.
அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.
மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தீர்மானம்:
"தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."
முடிவுரை:
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

தூக்குத் தண்டனையை இடைநிறுத்தியது உயர் நீதிமன்றம்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனு மீதான விவாதத்தில் சென்னை ஐகோர்ட் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, இந்த உத்தரவை வேலூர் சிறை நிர்வாகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி அவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பேரறிவாளன் சார்பில் வக்கீல் தடா சந்திரசேகரன், சாந்தன், முருகன் சார்பில் வக்கீல் வைகை ஆகியோர் நேற்று மனுக்களை தாக்கல் செய்தனர்.
அப்போது நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு வக்கீல் தடா சந்திரசேகரன் ஆஜராகி, ’’தூக்கு தண்டனை பிரச்சினை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் அதன் முக்கியத்துவம் கருதி மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, இந்த மனுக்கள் அவசர வழக்காக ஏற்கப்படுவதாகவும், விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்றும் நீதிபதி பால் வசந்தகுமார் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகிறது.
மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர்.
துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வைகோ, அற்புதம்மாள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் ஐகோர்ட்டில் குழுமினர்.
மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

29 ஆகஸ்ட் 2011

தூக்குத் தண்டனை விவகாரம் நாளை விசாரணைக்கு நீதிமன்றம் ஒப்புதல்.

தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தமூவரின் கருணை மனுவையும் சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இதுதொடர்பான கடிதம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியது. அதில் மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறியிருந்தது.
இதையடுத்து வேலூர் சிறை மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9ம் தேதி நாள் குறித்துள்ளது. மூவரையும் காக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் போராட்ங்கள் வலுத்துள்ளன. இந்த நிலையில், மூன்று பேரும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வக்கீல் சந்திரசேகர் மனுக்களை தாக்கல் செய்தார்.
அதில், எங்களது கருணை மனுக்களைப் பரிசீலித்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை நிராகரித்துள்ளனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் எங்களது கருணை மனுவை நிராகரித்துள்ளார்.
11 ஆண்டுகளுக்குப் பின்னர் எங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்காக மூன்று பேரிடமும் தனித் தனியாக பிரமாணப் பத்திரத்தில் நேற்று சிறைக்குச் சென்று வக்கீல்கள் கையெழுத்து வாங்கினர்.
மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவும், ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி இன்னொரு மனுவும் என இரண்டு மனுக்கள் மூன்று பேரின் சார்பிலும் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருகிற புதன்கிழமை ரம்ஜான் வருகிறது, வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி வருகிறது. எனவே அதற்குள் அதாவது நாளைக்குள் தடை உத்தரவைப் பெற வக்கீல்கள் தீவிரமாக உள்ளனர்.
இதற்காக வக்கீல் சந்திரசேகர் இன்று நீதிபதி பால் வசந்தகுமாரை சந்தித்து அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதாலும், வழக்கின் முக்கியத்துவம், அவசரம் கருதியும், நாளையே மனுக்களை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதை ஏற்ற நீதிபதி பால் வசந்தகுமார், நாளைய மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படும் என்று தெரிவித்தார்.
மூவர் சார்பிலும் பிரபல வக்கீல் ராம்ஜேத்மலானி ஆஜராவார் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது அவருடன் கூடுதலாக ஹரீஷ் சால்வேயும் ஆஜராகவுள்ளார். இதனால் வழக்குக்குப் பலம் சேர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் சில பிரபல வக்கீல்களும் ஆஜராகவுள்ளனர்.

செங்கொடிக்கு எனது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொண்டு தன் இன்னுயிரைத் துறந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடியின் தியாகம் பெரும் மன வேதனையை தருகிறது.
அவருக்கு எமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்தின் மீட்சிக்காக நடந்த பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரான தோழர் செங்கொடியின் உயிர் தியாகம் மூன்று பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம், ஆற்றாமை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
எப்படியாவது மூன்று பேரின் உயிரையும் காப்பாற்றிட வேண்டும் என்ற உறுதியான மனவேகத்தில் தன் உடலைத் தீக்கு இரையாக்கிவிட்டார் தோழி செங்கொடி. அவருடைய இந்தத் தியாகம், மரண தண்டனை நிச்சயப்படுத்தப்பட்டுள்ள மூவரின் உயிரை எப்பாடு பட்டாவது காப்பாற்றிட வேண்டும் என்கிற தமிழினத்தின் வேட்கையை பறை சாற்றுகிறது.
ஆயினும் மூவரின் உயிரைக் காக்க தமிழினம் தீவிரமாகப் போராடி வரும் வேளையில் அதற்கான சட்ட ரீதியான போராட்டத்தை இன்று தொடங்கவுள்ள நிலையில் செங்கொடி உயிர் துறந்திருப்பது வேதனையைத் தருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைப் போரை நிறுத்துமாறு கோரி முத்துக்குமார் தொடங்கி 18 பேர் தீக்குளித்து உயிர் நீத்தனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அவர்களின் உயிரைத் தியாகத்தை கிச்சித்தும் மதிக்கவில்லை.
இதயமற்ற காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் நீடிக்கும் காலம் வரை மனித உயிருக்கு மதிப்பளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது தவறு. மனிதனின் உயிர் விலை மதிப்பற்றது. அதனை தண்டனை என்ற பெயரால் கூட சட்டம் பறித்து விடக்கூடாது என்றுதான் நாம் போராடி வருகிறோம்.
அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்ப்போம். இன்று தொடங்கும் சட்ட ரீதியான நமது போராட்டம் வெற்றி பெறும், அதன் மூலம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை குறைக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதுமட்டுமின்றி, மக்களின் எழுச்சி மரண தண்டனைக்கு எதிராக வலிமை பெற்று வருகிறது.
எனவே, இதற்கு மேலும் எவரொருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

28 ஆகஸ்ட் 2011

எனது மகன் குற்றமற்றவன்"முருகனின் தாயார் வழங்கிய உருக்கமான செவ்வி காணொளி!

நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று நாள் குறிக்கப்பட்ட நிலையில், ஸ்காட்லாண்டில் வசிக்கும் முருகனின் தாயார் சோமணி அம்மையார் மூவரையும் காப்பாற்றக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டுள்ளார். அதன் காணொளி வடிவம்.





நூறு நாள் சாதனையை கொண்டாடும் முதல்வர் மூவர் உயிரை காப்பாற்றினால் வாழ் நாள் சாதனையை பெறுவார்!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும், சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
அவர்களுடன் முத்துக்குமார் ஆவணப்படத்தின் உதவி இயக்குனர் மகேந்திர வர்மா மற்றும் அகிலா, தமிழரசி ஆகியோரும் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினர். பேரறிவாளன், தாயார் அற்புதம் அம்மாளும் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்து இருந்தார். நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் மணிவண்ணன், அமீர் ஆகியோர் இன்று காலையில் உண்ணாவிரதம் இருப்பவர்களை வாழ்த்தினர்.
டைரக்டர் அமீர் பேசியதாவது: 3 உயிர்களை காப்பாற்ற இங்கு 4 உயிர்கள் தங்களை மாய்த்துக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தமிழக மக்கள் மட்டும் இன்னும் விழித்துக்கொள்ளாமலேயே உள்ளனர். 12 நாட்கள் உண்ணாவிரதத்துக்கு பின்னர் இன்று ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரே வெற்றி பெற்று உள்ளார். ஊழலை விட சக்தி வாய்ந்தது உயிர். அதனை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தற்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளது.
அதில் இருந்து மீள்வதற்காக 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து திசை திருப்பி உள்ளனர். கருணையே இல்லாத ஒரு ஜனாதிபதியிடம் கருணை மனு சென்றது வேதனை அளிக்கிறது. தமிழக முதல் அமைச்சரால் மட்டும்தான் 3 பேரின் உயிர்களையும் காப்பாற்ற முடியும் என்று தமிழகம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே அவர் 3 பேர் உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். 100 நாள் சாதனையை இன்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள். 3 பேர் உயிரை காப்பாற்றினால் அது உங்கள் வாழ்நாள் சாதனையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ஆற்றிய சிறப்புரை.

அனைவருக்கும் வணக்கம்! தமிழீழ விடுதலை போராட்டத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் கேட்டு புரிந்து கொள்ள வேண்டிய ஒரு பேச்சு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் அவர்களின் உணர்ச்சி மிகுந்த பேச்சு சகல நெஞ்சங்களையும் பெட்னா அரங்கில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்பியுள்ளது
தமிழீழத்தை நேசிக்கும் எந்த ஒரு தமிழனும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு என்றும் துணை நிற்பான்! பிரதமரின் உரை உங்கள் கண்களை திறக்கட்டும்! நாடு கடந்த அரசு, உலக போராட்டங்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாக, இதுவரை இல்லாத வடிவில், உலக தமிழரை இணைத்து, தமிழீழ விடுதலை புலிகளின் , தமிழீழ தேசியத்தலைவரின் பாதையில் இன்னொரு படி!
இது உலக தமிழருக்கு எல்லாம் குரல் கொடுக்க பிறக்கபோகும் தமிழீழம் எங்கு தமிழனுக்கு அநீதி நிகழ்ந்தாலும் தட்டி கேட்கும் என்பதற்கு சான்றாக நாடு கடந்த தமிழீழ அரசு சிங்கள படைகள் தமிழக மீனவர்களை சுட்ட பொது உலக அரங்கு எங்கும் அதை கொண்டு சென்றது என பிரதமர் கூறியபோது எங்கள் மனங்கள் எவ்வளவு திறக்க வேண்டும் என புரிந்து கொண்டேன்!
தமிழீழம் உலகதமிழர்களின் ஒற்றைக் கனவு!


27 ஆகஸ்ட் 2011

தூக்கை எதிர்த்து முப்பதினாயிரம் வழக்கறிஞர்கள் ஆஜராகிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 29.8.2011 அன்று தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த மனு, விசாரணைக்கு வரும் நாளன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 30 ஆயிரம் வழக்கறிஞர்களை நீதிமன்றத்திற்குள் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று , சாதி ஒழிப்பு விடுதலை அமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறினார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் வேலூர் சிறையில் சந்தித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், இந்த தகவலை நம்மிடையே தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை நீக்கிய ஸ்ரீலங்கா அரசு அதற்கு நிகரான புதிய சட்டத்தை உருவாக்குகிறது!

பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமையும் என குறிப்பிடப்படுகிறது.
அவசரகாலச்சட்ட விளைவு ஒழுங்குகள் என்ற பெயரில் புதிய சட்ட மூலமொன்று விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கும் யோயாசனையை அண்மையில் ஜனாதிபதி பாராளுமன்றில் முன்வைத்தார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மூலமொன்று அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் குறிபிடப்படுகிறது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட காரணத்தினால் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு சலுகை வழங்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்வதற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய உத்தேச சட்ட மூல வரைவுத் திட்டத்தை சட்ட மா அதிபர் திணைக்களம் உருவாக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

தலைவரின் வீட்டை உடைத்தோர் வல்வெட்டித்துறை மண்ணை என்ன செய்ய போகிறார்கள்!?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டை உடைப்பதும் அந்த இடத்தில் ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாது உடைத்தழிப்பதும் இன நல்லிணக்கத்துக்கு ஒரு போதும் உதவாது என்று வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இத்தகைய செயல்கள் தமிழ் மக்கள் மனதில் ஆறாத காயங்களையே ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு படையினரைக்குவித்து பெக்கோ பாரந்தூக்கிகள் மூலம் முற்றாக அகற்றப்பட்டுள்ளது. கட்டடச் சிதைவுகளை டிப்பர் வாகனங்கள் மூலம் அள்ளி சென்றனர். இது எங்கே கொண்டுசெல்லப்பட்டது என்பது தெரியவில்லை. இது தேசிய நல்லினக்கத்துக்கு ஒருபோதும் உதவாது. தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத காயமே இத்த கைய செயல்கள் மூலம் ஏற்படும். மீண்டும் இனங்களும் ஒட்டமுடியாது நிலைமையை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கின்றது” என்றார் சிவாஜிலிங்கம். வீட்டின் சிதைவுகளை எடுத்துச் சென்றவர்கள் அங்கு இருக்கும் எம் வல்வெட்டித்துறை மண்ணை என்ன செய்யப் போகிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

26 ஆகஸ்ட் 2011

அற்புதம்மாள் சாகும்வரை உண்ணாவிரதம்!கிருஷ்ணசாமி அவையிலிருந்து வெளிநடப்பு,தமிழகம் முழுதும் போராட்டம்.

இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் ராஜீவ் கொலை வழக்குக் கைதிகள் முருகன், சாந்தன் , பேரறிவாளன் ஆகியோர் தூக்கிடப்படலாம் என்ற செய்தி பரவியுள்ள நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் இன்றூ புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி - ‘’சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை குறீத்து அவையில் விவாதத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக தனக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் இந்தப் பிரச்சனையை அவையில் எழுப்ப அனுமதியில்லை. வேண்டுமென்றால் என் அறையில் தனிப்பட்ட முறையில் வந்து பேசுங்கள் என்றார். இதனால் டாக்டர் கிருஷ்ணசாமி அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அவைக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வேலூர் சிறைக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே 2 முறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்க வில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுக்க போராட்டம்:
பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் அவரது இல்லத்திலேயே சாகும்வரை உண்ணாவிரத்தை துவங்கியிருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர். பல் வேறு அரசியல் கட்சிகள் மனித் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அங்கு ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தைச் சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரும் கடிதம் வேலூர் சிறைக்கு வந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுக்க பல் பல் வேறு அமைப்புகள் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இன்று நீதிமன்றத்தை நாடி தூக்கை தடுத்து முயர்ச்சியும் அவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதலே தமிழகம் முழுக்க அதிரடி விரைவுப்படையினர் தங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் திவீர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு நிறுவனங்கள் தூதரகம், வங்கி, பௌத்த மடாலயம், உள்ளிட்ட பகுதிகளில் அதிரடிப்படை நிறுத்தப்பட்டுள்ளனர். வேலூர் சிறையைச் சுற்றி அதிரடிப்படை பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் சிறையதிரிகளும் சிறைத்துறை ஐஜி யும் வேலூரில் முகாமிட்டு சிறையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இன்றே முறையீடு செய்தால் மட்டுமே மூவரின் உயிரையும் காப்பாற்றும் சாத்தியங்கள் உள்ள நிலையில், நாளையும், நாளை மறு நாளும் நீதிமன்ற விடுமுறை நாளாகும் இது தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடும் சக்திகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அற்புதம்மாள் சாகும் வரை உண்ணாவிரதம்!
முருகன், சாந்தன். பேரறிவாளன் ஆகியோரின் தூக்கிலிடக் கோரும் உத்தரவு வேலூர் சிறைக்கு வந்து விட்ட நிலையில் பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி நேற்று மாலையிலிருந்து சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கியிருக்கிறார். வீட்டிலிருந்த படியே உண்ணாவிரத்தை துவங்கியிருக்கும் அவரை பல பிரமுகர்கள் சந்தித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலாலிதா மனது வைத்து தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் இந்த தூக்குத் தண்டனையை நிறுத்த முடியும் என்னும் நிலையில் அவர் முதல்வரிடம் வேண்டியும். இந்திய அரசிடம் தூக்கை நிறுத்தக் கோரியும் இந்த போராட்டத்தை துவங்கியுள்ளார்.

சுமந்திரனால் ஏமாற்றபட்டார்களா கஜேந்திரனும் கஜேந்திரகுமாரும்?

இந்தியாவில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டம் தோல்வியில் முடிந்தாலும் அதன் பின்னணியில் சில வெளிவராத சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தேறியிருக்கின்றமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது.
இந்தியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திற்கான ஏற்பாட்டினை இந்தியக் காங்கிரஸ் எம்பியான சுதர்சன நாச்சியப்பன் மேற்கொண்டிருந்தார். இந்த அழைப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பட்ட போது இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த அழைப்பின் அடிப்படையில் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் இந்தியா செல்வதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு அமைய லண்டனில் வாசம் செய்துவருகின்ற கஜேந்திரகுமார் கஜேந்திரனை அழைத்துச் செல்லவேண்டும் என்பதற்காக முதன் நாளே கொழும்பை வந்தடைந்தார்.
கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைவராகச் சொல்லப்படுகின்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட்டவர்களை சில மணிநேரமாகச் சந்தித்து இந்தியாவில் நடைபெறவுள்ள தமிழ்க்கட்சிகளின் கலந்துரையாடல் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றனர்.
சுமந்திரனுடனான சந்திப்பின் போது இந்தியாவில் தமிழ்க்கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படுவது என்றும் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பிலும் கொள்கை அளவில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.
சுமந்திரன் அளந்த கதையினை நம்பி இந்தியா சென்ற கஜேந்திரகுமாருக்கும் கஜேந்திரனுக்கும் இந்தியாவில் வைத்து பாடம் புகட்டியிருக்கின்றார் சுமந்திரன். தமிழர்களுக்கான தீர்வின் போது ‘சுயநிர்ணய உரிமை‘ வழங்கப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் தரப்பு வாதிட்ட போது சுமந்திரன் உட்பட்டவர்கள் அந்த விடயத்தினை நீக்கிவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கஜேந்திரகுமார் தரப்பினை வற்புறுத்தியிருக்கின்றனர்.
சுமந்திரன் தரப்பு திடீர் பல்டி அடிக்கும் என எதிர்பார்த்திராத கஜேந்திரகுமார் தரப்பு சற்றுநேரம் திகைத்துப் போய் இருந்ததாக தெரியவந்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நேரடிப் பிரதிநிதிகளாகத் தம்மைச் சொல்லிக் கொள்கின்ற கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் தமிழ்த் தேசியத் துரோகி ஈஎன்டிஎல்எப் பரந்தன் ராஜன் முன்னின்று நடத்திய கூட்டத்தில் பங்கெடுத்தது மட்டுமல்லாமல் சுமந்திரன் இலங்கையில் தெரிவித்த கருத்தில் இருந்து மாறுப்பட்ட நிலைப்பாடெடுத்ததால் சந்தித்த அவமானம் நாடாளுமன்றத் தேர்தலில் சந்தித்த படுதோல்வியிலும் மோசமானது என்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பொறுப்பில் இருந்து கட்சி தொடர்பிலான அதிர்ப்தி நிலையில் இருக்கும் முக்கியஸ்தர் ஒருவர்.

25 ஆகஸ்ட் 2011

பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூவரையும் தூக்கிலிட உத்தரவு!சீமான் தலைமையில் அவசர கூட்டம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பட்டது.
இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மூவரையும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை அறிந்து தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இன்று இரவு( 25.8.2011) 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் உணர்வாளர்கள் ஒன்று கூடி இதை தடுப்பது எப்படி என்று சீமான் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனையில் நாளை வெள்ளிக்கிழமை 26.8.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இவ்வழகில் ஆஜராக இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியை களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.

இந்திய மக்களவையில் இலங்கை தொடர்பான விவாதம்.

பல் வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இன்று மக்களவையில் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான விவாதம் நடந்தது. இன்றைய விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு. போஸ்னியாவிலும் உகாண்டாவிலும் இனப்படுகொலை குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளும் போது பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த ராஜபக்ஸ சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாதா? 2009 -ல் வன்னி மீதான தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிராயுதபாணிகளான மக்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தாக்கியிருக்கிறார்காள். இறுதிப்போரின் போது சுமார் 40, 000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்காள். ஆனால் இப்படி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத் தளபதியை விசாரிக்கக் கூட இலங்கை அரசு மறுத்து வருகிறது.
இப்போது போர் முடிந்து விட்ட நிலையிலும் அங்கே தமிழுக்கும் தமிழர்களுக்கும் மரியாதையில்லை. அங்குள்ள சிறுபான்மை தமிழ் மக்களுடன் சிங்களர்களும் அரசும் ஒரு கலாசாரப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் பகுதிகள் முழுக்க இராணுவம் ஆக்ரமித்து நிற்கிறது. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இப்போது அந்த மக்கள் நிராதரவான நிலையில் உள்ளனர். இனப்படுகொலை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த இந்தியா நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.'' என்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார்.
ஐஸ்வந்த் சிங்., சித்தன்.
இதைத் தொடர்ந்து பேசிய பிஜேபி உறுப்பினர் ஐஸ்வந்த்சிங் ஃஃஇலங்கையின் இன ரீதியாக முரண்பாடு உள்ளது. தமிழர்கள் சிறுபான்மை மக்கள் என்பதால் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதனுடைய தொடர்ச்சியாக கச்சத்தீவிலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் ஆகவே இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்ஃஃ என்று பேசினார். காங்கிரஸ் உறுப்பினர் சித்தன் பேசும் போது . இந்தியா கொடுத்த உதவிகளை இலங்கை தமிழ் மக்களுக்கு கொடுக்கவில்லை. இந்திய கட்டிக் கொடுப்பதாக சொன்ன வீடு விஷயத்தில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்தியா வழங்கிய டிராக்டர்களை இலங்கை மக்களுக்குக் கொடுக்கவில்லை. இந்தியா வழங்கிய உணவுப்பொருட்களைக் கூட இலங்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவில்லை. என்றூ பேசினார் விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

24 ஆகஸ்ட் 2011

போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் படையினரை வெளியேற்ற முடியாதென்கிறார் ஹத்துருசிங்க.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதன் மூலமோ தாக்குதல் நடத்துவதன் மூலமோ இராணுவத்தை வெளியேற்ற முடியாது. அதை மக்கள் சொல்ல முடியாது. தேசிய பாதுகாப்புச் சபையே அதனை முடிவு செய்யும் என யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நாவாந்துறையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இராணுவம் பொதுமக்கள் மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு யாழ். சிவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, மேஜர் ஜெனரல் வல்கம, வடபிராந்திய பிரதிக் காவற்துறைமா அதிபர் நீல் தளுவத்த, சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் நெவில் பத்மதேவா, யாழ். தலைமை காவற்துறை பரிசோதகர் சமன் சிகேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த இரண்டு வருடங் களாக யாழ்ப்பாணத்தில் சமாதான சூழ்நிலை நிலவி வருகின்றது. பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான உறவு பலமடைந்து வருகின்றது. மக்களுக்கான அனைத்து மனிதாபிமானப் பணிகளையும் படையினர் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.இதனைப்பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் சக்திகளே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளன. இராணுவத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது. இவ்வாறான சம்பவங்களை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நாவாந்துறையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயங்கரவாதிகளே. அதை நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன்.கிறீஸ் மனிதன் யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை. அப்படியான ஒன்றை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இவை எல்லாம் வெறும் வதந்தி. மக்களைக் குழப்புவதற்காக உருவாக்கப்படும் திட்டங்கள்.
மக்களை பாதுகாப்பதிலேயே இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் மக்களுக்காய் பல தியாகங்களைச் செய்கின்றனர். இராணுவத்தினர் இவ்வாறு தேவையற்ற விதத்தில் தாக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.சட்டம் ஒழுங்கைப் பார்த்துக்கொள்வதற்குப் காவற்துறையினர் உள்ளனர்.
நாவாந்துறையில் இராணுவத்தினர் மீது போத்தல்கள், ரியூப் லைட் டுக்கள், கற்கள் என்பவற்றைப் பயன்படுத்திக் தாக்கதல் நடத் தப்பட்டுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இது ஒரு திட்டமிட்டதாக்குதலே. இந்தச் சம்பவத்தின் போது பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அது தவிர்க்க முடியாத ஒன்று. காவற்துறையினரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் தவறு செய்தால் அதற்குத் தண்டனை வழங்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். ஊடகங்களும் அதைச் சுட்டிக்காட்ட முடியும். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவ்வாறான சம்வங்கள் இடம்பெற்றால் அது தொடர்பாக படை அதிகாரிகளுக்குஅல்லது பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துங்கள் அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சம்பவங்கள் நன்கு திட்டமிடப்பட்ட ஓர் அரசியல் திட்டம். இதற்கு மக்கள் ஒரு போதும் துணை போகக் கூடாது என ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் தமது இரவுப்பொழுதை நித்திரையின்றி கழிக்கின்றனர்!

கிறீஸ் மர்ம மனிதனால் ஏற்பட்ட பீதியைத் தொடர்ந்து யாழ். நாவாந்துறையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் வீடுகளுக்குள் இரவிரவாக நுழைந்த இராணுவத்தினர் அம்மக்களை கும்பிடக்கும்பிட பாரபட்சமின்றித் தாக்கினர். அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில் 18பேர் உள் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டனர். ஜனாதிபதி சுதந்திரமாக நடமாடுகிறார். ஆனால் தமிழ் மக்கள் நித்திரையின்றி பயத்தில் அல்லல்படுகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்றுத் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் தங்களது இரவுப் பொழுதை நித்திரையின்றி பயத்தோடு கழித்து வருகின்றனர். நேற்று(நேற்றுமுன்தினம்) யாழ். நாவாந்துறைப் பகுதியில் கிறீஸ் மர்ம மனிதன் பீதி ஏற்பட்டதை அடுத்து 117 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இன்று அவர்களில் பலர் யாழ்.வைத்தியசாலையில் காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் இன்று தங்களது உடைமை, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவாறு பீதியிலும், பயத்திலும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் ஜனாதிபதி சுதந்திரமாக நடமாடுகின்றார். மலையகப் பகுதிகளில் ஆரம்பித்த கிறீஸ் மர்ம மனிதர்களின் அடாவடித்தனங்கள் படிப்படியாக மட்டக்களப்பு பகுதிகளுக்குப் பரவி நேற்று யாழ்.குடாநாடு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
யாழில் நேற்றிரவு (நேற்றுமுன்தினம்) பலரின் வீடுகளுக்குள் கிறீஸ் மர்ம மனிதர்கள் புகுந்து பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மர்ம மனிதர்களைத் துரத்திப் பிடிக்க முயன்ற பொதுமக்களை இராணுவம் கைது செய்துள்ளது. அத்துடன், கிறீஸ் மர்ம மனிதர்களை இராணுவம் காப்பாற்றியது.
இந்தச் சம்பவத்தை அடுத்து பொதுமக்களின் வீடுகளுக்குள் நுழைந்த இராணுவத்தினர் 117 பேரைக் கைதுசெய்துள்ளனர். தங்களைத் தாக்கவேண்டாம் எனப் பொதுமக்கள் கும்பிட்டுக் கேட்டும் இராணுவம் அவர்களைத் தாக்கியது. கணவருக்கு முன்பாக மனைவியை பாரபட்சமின்றித் தாக்கியது. பெண்களுக்கு முன்பாக ஆண்களையும் இராணுவத்தினர் தாக்கினர்.
இதேவேளை, பொலிகண்டி, நாவாந்துறை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் கிறீஸ் மனிதர்கள் மக்களைத் துன்புறுத்தியுள்ளனர். கிளிநொச்சியில் பாரதிபுரத்தில் மர்ம மனிதர்கள் எவ்வித ஆடையுமின்றி மக்களின் வீடுகளுக்குள் புகுந்து பீதியை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோன்றே யாழ்ப்பாணம் நாவாந்துறையிலும் இடம்பெற்றுள்ளது.
இதனை அடுத்து, வீடு வீடாகச் சென்று அங்குள்ள ஆண், பெண் எனப் பலரை இராணுவத்தினர் தாக்கினர். பெண் ஒருவர் உட்பட 18 பேர் உள்காயங்களுடன் இன்று (நேற்று) யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், அந்த மக்களுடன் வாழ்பவன் என்ற வகையிலும் அங்கு அந்த மக்கள் படும் பாடுகள் எனக்கு நன்றாகத் தெரியும். அத்துடன், இந்த கிறீஸ் மனிதர்களின் அடாவடித்தனங்களில் இராணுவத்தினருக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிக்க மக்களிடம் பல ஆதாரங்கள் உள்ளன.
எனினும், உடல் முழுவதும் கிறீஸ் பூசிக்கொண்டு அடையாளம் தெரியாத வகையில் தாக்குதல் நடத்துவதிலும், பீதியை ஏற்படுத்துவதிலும் இந்த மர்ம மனிதர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களை அடையாளம் காண முடியாதுள்ளது. அவர்களின் பெயர், விவரங்களைப் பெறவும் முடியாதிருக்கின்றது.
இதுவரை மட்டக்களப்புப் பகுதிகளில் மர்ம மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக அரசு எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. கிறீஸ் மனிதர்களின் அடாவடி நடவடிக்கைகளுக்குப் பின்னால் இராணுவத்தினர் உள்ளனர் என்பதை மக்கள் நன்கு அறிவர். அதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.
மர்ம மனிதனால் பீதி ஏற்பட்ட பகுதிகளில் மக்களை ஆறுதல்படுத்தி, அந்த மர்ம மனிதர்களைப் பொலிஸார் கைது செய்திருக்கவேண்டும். அதைச் செய்யாமல், மர்ம மனிதர்களைப் பிடிக்கச் சென்றவர்களை இராணுவம் கைது செய்கிறது.
நாம் இனவாதம் பேசுபவர்கள் அல்லர். மக்கள் அனுபவிக்கும், மக்கள் படும் துன்பங்கள், துயரங்களுக்கு நியாயமே கேட்கின்றோம். சிங்களவர்கள் எவ்வாறு உரிமைகளுடன் வாழ்கின்றார்களோ அதே போன்றே தமிழர்களும் அனைத்து உரிமைகளுடனும் வாழவேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளிலேயே இந்த மர்ம மனிதர்களின் அடாவடிகள் இடம்பெறுகின்றன. சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இனப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இனப்பிரச்சினையை விட தற்போது ஏற்பட்டுள்ள இந்த மனிதர்களின் பிரச்சினைகளே அடிப்படைப் பிரச்சினை என்பதை வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, நிலைமைகளைப் புரிந்துகொண்டு அரசு இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன் என்றார்.

பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூவரையும் இந்திய சட்டத்தின்படி தூக்கிலிட முடியாது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் இந்திய சட்டப்படி தூக்கிலிட முடியாது என்று பிரபல வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி தமிழக முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு செய்தியாளர் சங்கம் சார்பில் சென்னையில் 22.08.201 அன்று பொதுக்கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு,
பூந்தமல்லி தடா கோர்ட் இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது, தடா கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தது. 4 பேர் தவிர மற்ற அனைவரின் தண்டனைகளும் குறைக்கப்பட்டன.
நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.டி.தாமஸ் குறைத்தார். அதற்கு அவர் கூறிய காரணம் நளினிக்கு சதி செயலில் நேரடி பங்கு இல்லை என்பதாகும். அந்த காரணம் இந்த 3 பேருக்கும் பொருந்தும்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் ஆகும். இவ்மூவரும் ஏற்கனவே ஒன்றரை மடங்கு ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டனர். இந்திய சட்டப்படி ஒரு குற்ற வழக்கில் 2 தண்டனை விதிக்க முடியாது. அந்த அடிப்படையில் இவர்களை தூக்கிலிடுவது இந்திய சட்டத்திற்கு எதிரானது என்றார்.

22 ஆகஸ்ட் 2011

நாவாந்துறையிலும் மர்ம மனிதன்!மக்களின் தாக்குதலில் பொலிஸ் வாகனம் சேதம்.

நாவாந்துறை மற்றும் வதிரியில் இன்று திங்கட்கிழமை இரவு பெண்கள் தனித்து வசித்து வரும் வீட்டினுள் நுழைய முற்பட்ட இனந்தெரியாத நபர்களால் யாழ்ப்பாணத்தில் யாழ் நாவாந்துறை மற்றும் வதிரியில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வதிரி மற்றும் நாவாந்துறையில் உள்ள பெண்கள் தனித்து வசிக்கும் வீடுகளுக்கு இனந்தெரியாத நபர்கள் உள்நுழைந்திருக்கின்றனர். வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறிச் கூக்குரல் இடவே உசாரடைந்த அயலவர்கள் குறித்த வீட்டை நோக்கிச் சென்ற போது உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு தப்பியோடிச் சென்றுள்ளனர்.
நாவாந்துறையில்
நாவாந்துறை இராணுவ முகாமிற்கு சென்ற பொதுமக்கள் முகாமிற்குள் தப்பியோடிச் சென்ற குறித்த நபரைநபரை தங்களிடன் ஒப்படைக்கும்படி கேட்டிருக்கின்றனர். அதற்கு மறுத்த இராணுவத்துடன் பொதுமக்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொது இராணுவ முகாமை நோக்கி பெருமளவிளான மக்கள் குவிந்துள்ளனர். குறித்த விடயம் பொலிசாருக்கு இராணுவத்தால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த பொலிசாரிடம், பொதுமக்கள் குறிதத் மர்ம நபரை ஓப்படைக்கும்படி கேட்டுள்ளனர். அது பற்றிக் கருத்தில் கொள்ளாத பொலிசார் அவ்விடத்திலிருந்து பொது மக்களை வெளியேறும் படி கேட்டுள்ளனர். அதற்கு மறுத்த பொதுமக்கள் பொலிசாருடன் முரண்பட,இராணுவத்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதில் பொதுமகன் ஒருவர் காயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஒருவர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிசாரின் இரு வாகனங்களை அடித்து நெருக்கினர்.தற்பொழுதும் பெருமளவான மக்கள் அப்பிரதேசத்தில் கூடி நிற்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வதிரியில்
இதேவேளை, வதிரியிலும் பெண்கள் தனித்து வசிக்கும் வீடு ஒன்றினுள் இனந்தெரியாத நபர் நுழைய முற்பட்டபோது, வீட்டில் இருந்தவர்கள் கூச்சல் இட்டுக் கத்தியதால் அங்கிருந்து தப்பியோடிய மர்ம நபர் அருகிலிருந்த இராணுவ முகாமிற்கு சென்றதை மக்கள் அவதானித்துள்ளனர். இதனால் அங்கு கூடிய பொது மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, மக்கள் இராணுவ முகாமிற்கு நுழைய முற்பட்டதையிட்டு இராணும் சுட்டதில் பொது மகன் ஒருவர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்ம மனிதர்களை சுற்றி வளைத்த மக்கள் மீது படைகள் தாக்குதல்!

மன்னார் பேசாலையில் மர்ம மனிதர்களைச் சுற்றிவளைத்ததற்காக அந்தக் கிராம மக்கள் மீது இராணுவத்தினரும் கடற்படையினரும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஒருவரைக் காணவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரவு 8.30மணியளவில் பேசாலையில் உள்ள வீடு ஒன்றினுள் பெண்களை இலக்குவைத்து தாக்கும் நோக்கில் இரண்டு நபர்கள் புகுந்துள்ளனர். அவர்களை அவதானித்த வீட்டில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுக் கத்தியிருக்கின்றனர். சம்பவத்தை அடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டவுடன் மர்ம மனிதர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி இராணுவ காவல் நிலை ஒன்றினுள் புகுந்து அங்கு சீருடை மாற்றியிருக்கின்றனர்.
இதனை அவதானித்த பேசாலைக் கிராம மக்கள் குறித்த காவல் நிலையினைச் சுற்றிவளைத்து கூச்சலிட்டிருக்கின்றனர். இதன் தொடராக அங்கு பெருமளவான கடற்படையினரும், இராணுவத்தினரும் வரவளைக்கப்பட்டடிருக்கின்றனர். அங்கு சென்ற இராணுவத்தினரும், கடற்படையினரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அங்கு திரண்டிருந்த மக்கள் மீது மட்டுமல்லாமல் வீடுகளில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை அடுத்து மக்கள் பேசாலை தேவாலய மணியினை ஒலிக்கச் செய்திருக்கின்றனர்.
சம்பவத்தினைக் கேள்வியுற்ற மன்னார் மறைமாவட்ட ஆயரும் சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கின்றார். இராணுவத்தினரும், கடற்படையினரும் இணைந்து நடத்திய தாக்குதலால் மக்கள் அல்லோல கல்லோப்பட்டு தலை தெறிக்க ஓடியிருக்கின்றனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த மக்களில் இருவர் பேசாலை மருத்துவமனையில் அனுமதிக்பட்டிருந்ததாகவும் பின்னர் அவர்களில் ஒருவரைக் காணவில்லை என்றும் அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை பிந்திய தகவல்களின் படி காணாமல் போனவரை கடற்படையினர் தலைமன்னார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. பேசாலைப்பகுதியில் இன்னமும் இயல்புநிலை திரும்பவில்லை என்று மன்னாரில் இருந்து செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

21 ஆகஸ்ட் 2011

கணவரை தேடிச்சென்ற பெண்ணை உறவுக்கு வற்புறுத்திய படையதிகாரி!

உனது கணவருடன் கதைக்க வேண்டுமென்றால் என்னுடன் ஒரு தடவை உறவு கொள்ளவேண்டும் என இராணுவ அதிகாரிகள் தன்னை கஸ்டப்படுத்தியதாக கிளி நொச்சியில் வாழும் ஒரு பெண் கூறியுள்ளார். அல்ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான். நாம் எமது துணைவர்களைத்தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் செல்கின்றோம். அங்கு படையினர் தம்முடன் உறவு வைத்துக்கொண்டால் எமது கணவன் மாரை பார்க்க முடியும் என வற்புறுத்துவர் என கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடான பண்பாடுகள் பற்றி கூறும் அல்ஜசீரா அங்கு நடக்கும் சீர்கேடுகளுக்கு படையினர் மட்டும் காரணமல்ல என யாழ் மாவட்ட அரச அதிபர் கூறிய கருத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளது.இதில் இமெல்டா படையினர்க்கும் பெண்களின் சீர்கேட்டிற்கும் எதுவித தொடர்பும் இல்லை என கோத்தாவை காப்பாற்றியுள்ளார் இமெல்டா.


மட்டக்களப்பிலும் பாரிய தேடுதல் வேட்டை,குடும்பப்பதிவும் மேற்கொள்ளப்படுகிறது!

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினர் பாரிய தேடுதல் வேட்டையினை நடத்தி வருகின்றனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரிவின் 2ஆம் 3ஆம் பிரிவு, வன்னியர் வீதி, சேர்ச் வீதி ஆகியவற்றிலேயே இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று கடும் சோதனைகளை மேற்கொண்டதுடன் குடும்பப் பதிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் மர்ம மனிதன் என்ற பீதியில் மக்கள் உறைந்துள்ள நிலையில் இத்தேடுதல் நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மட்டக்களப்பில் பதற்ற நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்னிப்பகுதியில் பாரிய சுற்றி வளைப்பு நடவடிக்கையை படையினர் மேற்கொண்டிருக்கின்றனர்!

வன்னியில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டிருப்பதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான், தட்டையர் மலை, வித்தியாபுரம், முத்துஐயன் கட்டு வலது கரை, இடது கரை, சாளம்பன் உட்பட்ட கிராமங்களைச் சுற்றிவளைத்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மக்களின் வீடுகளின் கம்பி வேலிகளை அறுத்துக் கொண்டு வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களின் பெயர் விபரங்கள், ஆள் அடையாள அட்டைகளின் விபரங்களைப் பதிவு செய்திருப்பதுடன் வீடுகளுக்குள்ளும் துருவித் துருவித் தேடுதல் நடத்தி வருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டுசுட்டானில் பொலிஸ் நிலையம் எதுவும் இல்லாத நிலையில் அங்கு பொலிஸார் வரவளைக்கப்பட்டிருக்கின்றமை மக்கள் மத்தியில் சந்தேகம் வலுப்பெற்றிருப்பதாகத் தெரியவருகின்றது. இதேவேளை வன்னியின் பல பாகங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் கடந்த இரவு முதல் இடம்பெற்று வருகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த பகுதிகளில் நின்றிருந்த இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு புதிய இராணுவத்தினர் அந்தப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

20 ஆகஸ்ட் 2011

அண்ணனிடமிருந்து என்னை பிரிக்க முயற்சி செய்கிறார்கள்"கோத்தபாய புலம்பல்.

இந்திய தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் ருடேக்கு அண்மையில் தான் வழங்கிய பேட்டியை அடிப்படையாகக் கொண்டு "இந்து' பத்திரிகையானது தன்னை இலக்கு வைத்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை கவலை தெரிவித்திருக்கிறார்.
தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் சார்பில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜா வணசுந்தரவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வுடன் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் யுத்தத்திற்குப் பின்னரான சவால்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றியபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2011 ஆகஸ்ட் 11 இல் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமானது "அவரின் அலுவல்களைச் சார்ந்திராத உணர்வுபூர்வமான விடயங்கள் தொடர்பாக அவரின் சகோதரரின் பிரக்ஞை பிரவாகத்திலிருந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னைத் தான் தூர விலக்கி வைத்திருக்க வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக' பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் தன்னை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தும் அந்தப் பேட்டி தொடர்பாக தன்னை சாடியிருந்தமை குறித்து தான் ஆச்சரியப்பட்டதாக கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக கொழும்பு ஹில்டனில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கை விபர ஆய்வு மற்றும் ஒளிநாடா அங்குரார்ப்பண நிகழ்வின்போது அந்தப் பேட்டி அளிக்கப்பட்டிருந்தது.
ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியின் நிருபருக்கு பேட்டியளிக்க நான் விரும்பியிருக்கவில்லை. ஆயினும் நான் தயக்கத்துடன் இணங்கியிருந்தேன். அது என்னை எங்கு கொண்டு சென்று விட்டுள்ளது என்பதை பாருங்கள். என்னிடம் இருந்து எனது சகோதரனை தூர விலக்கி வைப்பதற்கு இந்து இப்போது விரும்பியுள்ளது என்று ராஜபக்ஷ கூறியுள்ளார். உண்மையில் இந்திய நிருபர், சிறப்பான செய்தியை வெளியிடுவதாக எனக்கு உறுதியளித்திருந்தார். எனது பிரதிமையைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"கட்டுக்குள் நிற்காத ஒரு சகோதரர்' என்று தலையங்கமிட்டு இந்து ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியிருந்தது. அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் தலையங்கமானது பிரிட்டிஷ் பிரஜையான தமிழர் தொடர்பாக பாலியல் ரீதியான கருத்துகளை தெரிவித்ததாக அவருக்கு எதிராக நோக்கத்துடனான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது. மூன்று விவகாரங்கள் தொடர்பாக பேசியதாக தமக்கு எதிராக இந்திய ஊடகங்கள் சாடியிருப்பதாக அவர் கூறியுள்ளார். யுத்தத்திற்குப் பின்னரான அதிகாரப்பகிர்வு, வட,கிழக்கு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு, தமிழ்பேசும் பெண்கள் மீதான வல்லுறவுக் குற்றச்சாட்டு போன்ற மூன்று விவகாரங்கள் குறித்து இந்திய ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதிகாரப்பகிர்வு விவகாரம் தொடர்பாக குறிப்பாக கருத்துத் தெரிவிக்க தான் விரும்பியிருந்திராத போதிலும் தனது தனிப்பட்ட அபிப்பிராயம் குறித்து அறிந்து கொள்வதில் தான் திருப்தியடைவாரென்று அந்த நிருபர் கூறியதால் தான் இறுதியில் அதனைத் தெரிவித்ததாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் இப்போது அழிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மாற்றமடைந்துள்ளதாக தான் நம்புவதாகக் கூறியதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடபகுதி தமிழர்களுக்கான நிவாரணம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் அடிக்கடி அழைப்பு விடுப்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த பாதுகாப்புச் செயலாளர், அவர் (ஜெயலலிதா) உண்மையில் கரிசனை கொண்டிருந்தால் எமது வட பகுதிக் கடலில் அவரின் (ஜெயலலிதாவின்) நாட்டவர்கள் ஊடுருவுவதை நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க முடியுமென பாதுகாப்புச் செயலாளர் கூறியிருந்தார். அதிகளவில் ஊடுருவி மீன்பிடிப்பதன் மூலம் வடபகுதித் தமிழர்களின் ஜீவாதாரத்தை தமிழ்நாட்டு மீனவ சமூகம் பறித்துக் கொண்டிருக்கின்றது.
அழகான பிரிட்டிஷ் பிரஜை யுத்தத்தின் முடிவில் இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இலங்கைப் படையினரை வல்லுறவுக்காகக் குற்றஞ்சாட்டுவது நகைப்புக்கிடமானதாக அமையும் என்று ராஜபக்ஷ கூறியிருந்தார். நான் முதலில் கூறியிருந்த நிலைப்பாட்டில் உள்ளேன். அங்கு கேள்விக்கு இடமில்லை என அவர் கூறியுள்ளார்.
சனல்4 தொலைக்காட்சியால் பேட்டி காணப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான தமிழ்ப் பெண் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனவும் அவர் கவர்ச்சிகரமானவராக இருந்ததாகவும் ஆனால், இலங்கைப் படையினரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கவில்லை எனவும் படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டானது உண்மையாக இருக்க முடியாதென்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியிருந்ததாக இந்திய தொலைக்காட்சி மேற்கோள்காட்டியிருந்தது.
இந்த அறிக்கை மட்டுமே கோதாபய ராஜபக்ஷவை தவறு கண்டுபிடிப்பதற்கு போதியதாக அமையுமென இந்து குறிப்பிட்டிருந்தது.
சர்வதேச சமூகத்தின் ஒரு பிரிவினரால் ஆட்சி மாற்றத்துக்கு அனுசரணை வழங்குவதற்கான அவர்களின் தந்திரோபாயத்தின் ஓர் அங்கமாக இது இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதிலளித்தால் விரைவில் புதிய குற்றச்சாட்டுகள் தொடுக்கப்படும் என்று தோன்றுகின்றதெனவும் அவர் கூறியதாக "த ஐலண்ட் பத்திரிகை' நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

புலிகளின் வலையமைப்பை இல்லாதொழிக்க இலங்கைக்கு அமெரிக்கா உதவுகிறதாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகிறதென நம்புவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அச்சம் வெளியிட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2010ம் ஆண்டுக்கென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றபோதும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு முற்றாக ஒழிக்கப்படவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் 2010ம் ஆண்டு பாரிய தீவிரவாத செயல்கள் இடம்பெறாவிட்டாலும் தீவிரவாத செயல்களுக்கு பணம் மற்றும் உதவிகள் வழங்கியமை தொடர்பில் அதிக தகவல்கள் வெளியானதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை மீண்டும் தலைதூக்காது செய்ய இலங்கை அரசாங்கம் வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும் அதற்கான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அதன் இராஜாங்க திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு பணம் பெற்றுக்கொடுப்பதை நிறுத்த இலங்கை அரசாங்கம் செயற்படும் ஒவ்வொரு விடயத்திற்கும் அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் என அவ்வறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(உண்மையான பயங்கரவாதிகள் ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும்தான் என்பது நிரூபணமாகி வரும் நிலையில்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இவ்வறிக்கை வியப்பாகவே இருக்கிறது!)

சாதாரணமான என்னையே நூற்றுக்கணக்கான தம்பிகள் பாதுகாப்பாக அழைத்து வருகிறார்கள்"சீமானின் பதிலடி.

பெரியார் திராவிட கழகமும், நாம் தமிழர் இயக்கமும் இணைந்து மரண தண்டனையை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம் என கடந்த 16.08.2011 அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில்,
பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னை (சீமான்) கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியில் இருந்து எங்கள் கட்சிக்கு பாடுபட வேண்டாம். பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள்.
நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.
திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.
பெருமைக்குரிய பெருமகள் இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று. எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் ஒன்றும் இல்லையே. எங்கே போனீங்க நீங்க. எங்கே போனீங்க நீங்க.
யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன் இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா.
என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா.
யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால்நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும். இவ்வாறு சீமான் பேசினார்.

19 ஆகஸ்ட் 2011

பொது மக்களிடம் மாட்டிக்கொண்ட மர்மமனிதன் தான் அரச படையினன் என ஒத்துக்கொண்டான்!

இலங்கை அரசாங்கமே தங்களை இங்கு அனுப்பியதாகவும் தான் இலங்கை அரசாங்க பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவன் என்றும் மட்டக்களப்பு மாவடிவேம்பில் மக்களிடம் பிடிபட்ட மர்ம நபர் ஒருவர் பொது மக்களின் சித்திரவதை தாங்கடியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திவரும் மர்ம மனிதர்கள் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மட்டக்களப்பு மாவடிவேம்பில் பிடிபட்ட மர்ம மனிதன் ஒருவன் பொது மக்களின் சித்திரவதை தாங்கடியாமல் இந்த உண்மையை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை(10.08.2011) காலை மட்டக்களப்பு மாவடிவேம்பு பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட மர்ம நபர் அல்லது கிறீஸ் மனிதன் என்று அழைக்கப்படும் நபரை பொதுமக்கள் கட்டிவைத்து சித்திரவதை செய்தபோது “நான் இலங்கை அரச படைப்பிரிவைச் சேர்ந்தவன் என்னை அடிக்கவேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு ஒரு அடையாள அட்டையொன்றை காட்டியதாக தெரியவந்திருக்கின்றது.
இதன் பின்னர் சற்று நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் குறித்த மர்ம மனிதனை தாங்கள் பொலீசாரிடம் ஒப்படைப்பதாக கூறி கூட்டிச்சென்றதாகவும் ஆனால் இதுவரை அந்த மனிதன் பற்றியோ அந்தச் சம்பவம் பற்றியோ இலங்கை பொலீசார் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் இப்பிரதேச மக்கள்.
எனவே மேற்படி சம்பவத்தின் ஊடாக மர்ம மனிதர்களின் போர்வையில் சிங்கள அரசு ஒரு தழிழின அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பது தெட்டத்தெளிவாக தெரியவந்துள்ளது.

நிரபராதியான என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

தூக்குத் தண்டனையை எந்த நேரத்திலும் எதிர் நோக்கியிருக்கும் பேரறிவாளன், சிறைக் கொட்டடியிலிருந்து குடும்பத்தினருக்கு எழுதியுள்ள கடிதத்தை தமிழினத்தின் முன் வைக்கிறோம்.
பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,
வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப் புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.
தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.
1. திரு. இராசீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின்நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்பு மில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.
2. திரு. இராசீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.
3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.
இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?
4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.
5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவு மில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டு விட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.
6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?
மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தா கின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப் படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.
7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ்வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....
8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.
இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப் பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப் போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ்பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?
9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.
10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.
11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.
12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.
13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.
சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் இராசீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.
அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்... ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?
14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.
15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.
16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.
ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??
தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.
செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?
- முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி.

18 ஆகஸ்ட் 2011

ஈழத்தில் தமிழர்களை கொன்றொழித்த இந்திய அரசின் கொலை வெறி இன்னும் அடங்கவில்லை!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், பேரறிவாளனின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார், தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், தமிழுரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், எழுகதிர் ஆசிரியர் முனைவர் அருகோ, தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார், புலவர் இராமச்சந்திரன் உள்ளிட்டேர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கிப் பேசினார்.
அவர் பேசும் போது, ”தமிழினத்தின் அடையாளமாக சிறையில் உள்ள இம்மூவரும் இன்றுள்ளனர். செய்யாத குற்றத்திற்காக அவர்கள் ஏற்கெனவே 21 ஆண்டுகள் அநியாயமாக சிறை வைக்கப்பட்டு விட்டனர்.
இந்நிலையில், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது அநீதியாகும். செய்யாத குற்றத்திற்காக ஏற்கெனவே ஆயுள் தண்டனை அனுபவித்து விட்ட அவர்களுக்குத் தூக்குத் தண்டனை தருவது எந்த வித்ததிலும் நியாமல்ல.
இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த இந்தியாவின் வெறி இன்னும் அடங்கவில்லை. அதன் தொடர்ச்சியாகத் தான் இம்மூவரையும் காவு கொள்ள இந்தியத் துடிக்கிறது.
உலகெங்கும் போர்க் குற்றவாளி அரசாக நிற்கும் இலங்கையை காப்பாற்றத் துடிக்கும் இந்தியா, அந்நாட்டுக்கு செய்த இராணுவ உதவிகளை மறைக்கவும், திசைத்திருப்பவும் தான் இந்த மூன்று இளைஞர்களை தூக்குக் கொட்டடிக்கு அனுப்பியிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட விதி என் 161ன்படி தமிழக ஆளுநருக்கு மரண தண்டனையை இரத்து செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் பயன்படுத்த, தமிழக அரசு அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை” என்று கூறினார்.

தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு முடிவெடுக்க வேண்டும்.

வேலூர் மத்திய சிறையில் உள்ள தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி, தூக்கு தண்டனையை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.
திமுகவும் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. தூக்கு தண்டனையை எதிர்க்கும் கட்சிகளோடு இணைந்து போராட தயாராக உள்ளோம் என்றார்.

17 ஆகஸ்ட் 2011

முதலில் இந்தியப்படைகளை விசாரிக்கட்டும் என்கிறார் விமல் வீரவன்ச!

இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா வெளியிட்ட கருத்து தொடர்பிலே விமல் வீரவன்ச விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான முன்னெடுப்புக்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அதனை இல்லாமல் செய்வதற்கு புலி ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டும். வேறெப்போதும் இல்லாதவாறு இலங்கை குறித்து இந்தியாவில் பேசப்படுகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக ஒவ்வொரு தீர்மானங்களை கொண்டுவர ஆயத்தமாகிறார். யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது இந்தியாவில் இலங்கை குறித்து விவாதிக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிராக மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனில், 1987 ஆம் ஆண்டில் இந்திய படையினர் இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டபோது நடைபெற்ற சம்பவங்கள் முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் முதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மட்டும் விசாரணை நடத்தப்படக் கூடாது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்கயும் யுத்தம் செய்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மிகவும் சொற்ப அளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்களே இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டமே கிறிஸ் மனிதர்கள்!

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கிறீஸ் மர்ம மனித அச்சுறுத்தல், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கிறீஸ் மனிதன் என்ற மாயை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு தயாராகி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி, அதனூடாக சில அரசியல் கட்சிகளைத் தடை செய்யும் முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு
கடந்த காலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவந்த வெள்ளை வான் அச்சுறுத்தல் நடவடிக்கையை முன்னெடுத்த தரப்பினரே தற்போது இந்த கிறீஸ் மர்ம மனித செயற்றிட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர் என பல தகவல்கள் கிடைத்துள்ளன.
சிக்கியவர்களில் பலர் இராணுவச் சிப்பாய்கள்!
கிறீஸ் மர்ம மனிதர்களாக நடமாடிய நபர்கள், பிரதேச மக்களின் கைகளில் சிக்கிய பின்னர் அவர்களில் ஏராளமானோர் இராணுவச் சிப்பாய்கள் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், இவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் சிலர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி விடுதலையாகியுள்ளனர்.
கிறீஸ் மர்ம மனித பதற்றத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்தில் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்து, இராணுவ நிர்வாகத்திற்குத் தேவையான புறச்சூழலை பாதுகாப்புச் செயலாளர் ஏற்படுத்தி வருகிறார்.கிறீஸ் மர்ம மனிதர்களிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் போர்வையில், கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபித்து சுமார் 5 ஆயிரம் இராணுவத்தினர் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது தலா ஒரு விசேட அதிரடிப்படை முகாமை அமைப்பதற்கும் இந்த கிறீஸ் மர்ம மனித செயற்றிட்டத்தின் ஊடாக பாதுகாப்புச் செயலாளர் திட்டமிட்டுள்ளார் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

16 ஆகஸ்ட் 2011

மரண தண்டனையிலிருந்து நம்மவர் உயிர் மீட்போம்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தம் மீதான மரணதண்டனையினை சிறைத் தண்டனையாக மாற்றுமாறு விடுத்த வேண்டுகோளை இந்தியக் குடியரசுத் தலைவர் வெகுகாலம் தாண்டிய நிலையில் நிராகரித்துள்ளார்......என்ற செய்தி, அதுவும் அவர்கள் சிறையிடப்பட்டு 20 ஆண்டுகள் தாண்டிய பின்னர் கருணை மனு கையளிக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்த பின்னர் இவ்வேண்டுகோளை நிராகரித்துள்ளார் என்ற செய்தி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரணதண்டனை மானிட தர்மத்துக்கு முரணானது. அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகிய வாழ்வுரிமைக்கு (right to live) எதிரானது.
இவ்விடத்தில் மரணதண்டனை அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதென்பதால் மரணதண்டனையானது அரசுகள் மேற்கொள்கின்ற படுகொலை என்றே கருதப்பட வேண்டுமென்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் கூற்று மிகவும் அர்த்தம் பொதிந்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானமொன்று மரணதண்டனையைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியதென அரசுகளைக் கோரியிருந்தமையும் இங்கே கவனத்துக்குரியது.
உலக நாடுகள் 193ல் இன்று மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டோ அல்லது நடைமுறைப்படுத்தப் படாமலோ இருப்பதென்பதும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உலக அரங்கில் நீதி வழங்கப்படும் நடைமுறையிலிருந்து மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென உலகெங்குமிருந்து எழும் குரல்களோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை இணைத்துக் கொள்வதுடன் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இம் மூவரது மரண தண்டனையினை சிறைத் தண்டனையாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மனிதாபிமான, சட்ட அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளும்படி இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் சமூகத்தினையும் மரணதண்டனைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் அனைத்துலக சமூகத்தினையும் கோரி நிற்கிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு மிகவும் அரசியல் மயப்பட்ட நிலையில் நடற்தேறிய ஒரு வழக்கு. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை என்றே முதன் முதலில் தீர்ப்பு வழங்கப்பட்டமை இவ் வழக்கின் அரசியல் தன்மையினை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது.
பின்னர் தமிழ் உணர்வாளர்களது ஆதரவுடன் உச்ச நீதிமன்றில் நடைபெற்ற சட்டப்போரின் விளைவாக இக் குற்றம் தடா சட்டத்துக்குட்பட்ட பயங்கரவாதக் குற்றமல்ல என்பது வெளிப்படுத்துப்பட்டதுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 19 பேருக்கு முழு விடுதலை அளிக்கப்பட்டு எஞ்சிய 7 பேரில் நால்வருக்கு அந்நேரம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவரான நளினியின் மரணதண்டனை மனிதாபிமான அடிப்படையில் ஏற்கெனவே சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டபோது ஏனைய மூவரின் மரணதண்டனையும் அவ்வாறு மாற்றப்படுமெனவே எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் தான் இந்திய உள்துறை அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மரணதண்டனையினை உறுதி செய்திருப்பது எமக்கெல்லாம் மிகவும் கவலையளிக்கிறது.
மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களின் குரலாக பேரறிவாளன் வெளிப்படுத்தியுள்ள கருத்து இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களதும் உலக சமுதாயத்தினதும் மிகுந்த கவனத்துக்குரியது. 'நாம் கோருவதெல்லாம் உயிர்ப்பிச்சையல்ல. மறுக்கப்பட்ட நீதியினையே' என அவர் மிகத் தெளிவாகத் தமது உரிமைக் குரலை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ் விடயத்தில் மூன்று தளங்களில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். வெகுவாக அரசியல் மயப்பட்ட நிலையில் இவ் வழக்கு நடைபெற்றமை இவ் வழக்கில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்தது. இது இவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட முதலாவது தளம் ஆகும்.
தடா சட்டத்தின் கீழ் இவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டமை இரண்டாவது தளமாகும்.
இதேவளை 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு – ஒரு ஆயுட்தண்டனைக் காலத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து விட்ட இவர்களுக்கு - இவ்வளவு காலம் தாழ்த்தி மரணதண்டனையினை உறுதி செய்துள்ளது நீதி மறுக்கப்படும் மூன்றாவது தளம் ஆகும்.
இவ்வாறு மிகவும் காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும் நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரித்தானிய பிரிவி கௌன்ஸில் 1993ல் தீர்ப்பளித்தது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.
இத்தகையதொரு பின்புலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையினை ரத்துச் செய்யும் வகையில் இந்திய உள்துறை அமைச்சகம் தமது பரிந்துரையினை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மீள வழங்க வேண்டும் என நாம் இந்திய அரசைக் கோருகிறோம்.
ஈழத் தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு இந்திய அரசும் துணைநின்றது என்ற ஆழ்ந்ததொரு துயரும் காயமும் தமிழீழம், தமிழ்நாடு முதற்கொண்டு அனைத்து உலகத் தமிழ் மக்கள் மத்தியிலும் உண்டு.
இதனைக் கவனத்திற் கொண்டும் ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மக்களின் மனஉணர்வுகளுக்கு மதிப்பளித்தும் இம் மூவருக்குமான மரணதண்டனையினை ரத்துச் செய்யும் முடிவினை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 ன் கீழ் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தமிழக ஆளுனராலும் மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கான பரிந்துரையினை வழங்க முடியும்.
உலகத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைக்குரலையும் பிரதிபலித்து நிற்கும் தமிழக முதலமைச்சர் இவ் விடயத்தில் தலையிட்டு மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரி நிற்கிறோம்.
இவற்றை விட மரணதண்டனையினை நிறைவேற்றுவதற்கு எதிரான தடை உத்தரவினை நீதிமன்றத்தின் ஊடாக பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினை வழங்கி நிற்கிறது.
மரணதண்டனைக்கெதிராக உலகில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தினை இவ் விடயம் நோக்கித் திருப்பி இம் மரண தண்டனைகளுக்கெதிரான அனைத்துலக உணர்வலைகளைத் தட்டியெழுப்புவதற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களது ஆதரவோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இம் மரணதண்டனைகளுக்கெதிராக இந்திய தமிழ்நாடு அரசுகளுக்கும் மனிதஉரிமை அமைப்புக்களுக்கும் தமது உணர்வுகளை உடனடியாக வெளிப்படுத்துமாறு உலகத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கிறது.
நன்றி
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

மரண தண்டனைக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டம்.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குக் கைதிகளாக வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற செய்தி பரவியுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன. நாம்தமிழர்,
பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் மரணதண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகமெங்கிலும் உள்ள சிறு சிறு தமிழ் அமைப்புகளும் தீவீர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்று சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சீமானும், பெரியார் திராவிடர் கழகத் தலைவர்களும் பேசுகின்ற அதே நேரம் ராதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோரும் மரணதண்டனைக்கு எதிரான பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான அமீர், ஜனநாதன். சேரன் ஆகியோரும் மரணதண்டனைக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இன்னொரு மனித உரிமைக் குழுவினரோ இந்தியா முழுக்க உள்ள மனித ஆர்வலர்களின் கருத்துக்களை இது தொடர்பாக பெறும் முயர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 2009 - மே மாதத்தின் பின்னர் மீண்டும் பெரும் இயக்கம் போல முன்னெடுக்கப்படும் இந்த போராட்டங்களை உளவுப் போலீசார் குறிப்பெடுத்து தவறாமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடிப்படை வசதிகள் நிறுத்தம்!முகாம்களை விட்டு வெளியேறுமாறு அரசு நிர்ப்பந்தம்.

வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறுத்தி, தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த முகாம்களில் பன்னிரண்டு வருடங்களாக வசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குடும்பங்களில் ஒரு பகுதியினர், தொண்ணூறுகளில் இடம்பெயர்ந்து, இ;ந்தியாவில் தஞ்சமடைந்திருந்து பின்னர் நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய குடும்பங்கள், கடந்த 1996 ஆம் ஆண்டு, அப்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வன்னிப்பிரதேசத்தில் அரசாங்கம் நடத்திய இராணுவ தாக்குதல்களில் இருந்து விலகியிருப்பதற்காக வவுனியாவில் அரசாங்கம் அமைத்திருந்த இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால், இங்குள்ளவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆயினும், இ;ந்தக் குடும்பங்களுக்குச் சொந்தமாகக் காணிகள் இல்லாத காரணத்தினால் தம்மை வவுனியா மாவட்டத்தில் வேறிடத்தில் காணிகள் வழங்கி குடியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த முகாம்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், அப்போது வன்னிப்பிரதேசத்தில் யுத்த மோதல்கள் இடம்பெற்றமையினால், அங்கு திரும்பிச் செல்ல முடியாதிருந்த காரணத்தினால், வவனியாவில் பல இடங்களில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். இதேபோன்று தங்களையும் வவுனியாவில் குடியேற்ற வேண்டும் என இந்தக் குடும்பங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஆயினும் யுத்தம் முழுமையாக முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதனால், அந்தந்த மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் எனவும், அவ்வாறு திரும்பிச்செல்வதற்குச் சொந்தக் காணிகள் இல்லாதவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் காணிகள் வழங்கி மீள்குடியேற்றம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
ஆயினும் இந்த நடவடிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், தமக்குரிய அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், கழிப்பறை வசதிகளை அரசாங்கம் நிறுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அத்துடன் தமது மீள்குடியேற்றத்திற்குரிய நடவடிக்கைகளை சீரான முறையில் மேற்கொண்டு தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

15 ஆகஸ்ட் 2011

கடற்படை முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல்!

கிண்ணியா கடற்படை முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை ஜீப் வண்டி ஒன்றை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளதாக திருகோணமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தில் ஒரு காவல்துறை உத்தியோகத்தரும், இரண்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
கிறிஸ் பேய் ஒன்று கடற்படை முகாமிற்குள் சென்றதாகத் தெரிவித்து மக்கள் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகாம் மற்றும் முகாமை அண்டிய பிரதேசம் சேதமடைந்து உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் கூட்டாக இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.