28 பிப்ரவரி 2012

வெளிநாட்டு சக்திகளிடம் மண்டியிடப் போவதில்லை என கோத்தபாய தெரிவிப்பு.

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை கண்டு வெளிநாட்டு சக்திகளின் முன்னிலையில் மண்டியிடப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபாக்ச தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச் சாட்டுக்களை சுமத்தி இலங்கையை பணயமாக வைத்து, வடக்கில் தமிழீழ ராச்சியத்தை உருவாக்க சில வெளிநாட்டு சக்திகளும், தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன.
நாட்டை பிளவு படுத்தி தனி இராச்சியத்தை அமைக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தச் சக்திகள் தொடர்கின்றன.
போர்க் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி வெளிநாட்டு கண்காணிப்பாளர்களைக் கொண்டு விசாரணை நடத்த முயற்சிக்கப்படுகிறது.
நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை பறிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
மீண்டும் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுகின்றது.மேற்குலக நாடுகளின் பிரிவினைவாத கோட்பாடுகளை முறியடிக்க சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜெனீவா செல்லவுள்ள மரியா ஒற்றேரோ.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிவிலியன்கள் பாதுகாப்பு - ஜனநாயகம் - மற்றும் மனிதஉரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒற்றேரோ, நாளை மறுதினம் முதலாம் திகதி ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவார் என இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் கசிந்துள்ளதாக கொழும்பு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்றிருந்து போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவினது தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மரியா ஒற்றேரோவை வெள்ளைமாளிகை அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

26 பிப்ரவரி 2012

நடேசன் புலித்தேவன் இறுதிக்கணங்கள் பீபீசியிடம் தெரிவித்த மேரி கொல்வின்!

இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்ற சந்தர்ப்பத்தில், அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சரணடைவோரின் பாதுகாப்புக்கு இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மேரி கொல்வின், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு நாட்களாக பேச்சு நடந்திருந்ததாகக் கூறினார்.
வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி சரணடையும் நடேசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சட்ட நியமங்களின் படியே நடத்தப்படுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தன் ஊடாக ஜனாதிபதி உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் மாரி கொல்வின் தெரிவித்திருந்தார்.
இறுதித் தருணத்தில் (2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அதிகாலை, 1 மணி 6 நிமிடங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனுடன் தொடர்பு கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ‘நாங்கள் முடிந்தளவுக்கு வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி செல்கிறோம்’ என்று கூறியிருந்ததாக மாரி கொல்வின் பிபிசி செய்தியாளரிடம் கூறியிருந்தார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பிரமுகர்கள் மற்றும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் அறிந்திருந்ததாக மாரி கொல்வின் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
வெள்ளைக் கொடியை பிடித்தபடி சரணடைவோர் தொடர்பில் மூன்றாம் தரப்பு மேற்பார்வை அவசியப்படாது என்று ஜனாதிபதி பாதுகாப்பு உத்தரவாதம் அளித்திருந்ததை ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியாரும் தன்னிடம் கூறியதாக மாரி கொல்வின் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஜெனீவா தொடர்பான சம்பந்தரின் கருத்து கூட்டமைப்பின் கருத்தல்ல"சுரேஷ்.

புலுடா விடுகிறதா கூட்டமைப்பு?

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதாக அறிவித்து பின்னர் பங்கேற்பதில்லை என்று திடீரென்று கூட்டமைப்பு அறிவித்த நிலையில் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் சில ஊடகங்கள் செயற்படத் தலைப்பட்டிருக்கின்றன.
நேற்று நண்பகல் கொழும்பு ஊடகம் ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா மாநாட்டில் பங்கேற்காது என்ற விடயத்தினை வெளிப்படுத்தியிருந்தது. குறித்த தகவல் வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இந்த விடயம் தொடர்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விடயம் தொடர்பில் அறிவித்திருக்கின்றார்.
ஜெனீவா செல்வது தொடர்பில், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றதே, இந்த தீடீர் முடிவினை தற்போது எடுப்பதற்கான காரணம் என்ன? என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
ஜெனீவா கூட்டத் தொடருக்கு கூட்டமைப்பு செல்வதை அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை. அவ்வாறு செல்வதால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்படுவதில் சிக்கல் எழுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கூட்டமைப்பு பயணிக்கின்ற பொழுது சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டினைக் கூட எடுக்கும் நிலை தோன்றலாம் என்று சுமந்திரனால் காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. அவ்வாறு எதிர் நிலை எடுப்பதற்கு என்ன காரணம்? என்று கேட்கப்பட்ட போது சுமந்திரன் அதற்கு சுமந்திரனால் பதில்வழங்கப்பட்டிருக்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.
இதேவேளை கிழக்கில் இருக்கின்ற மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் புலத்தில் இருக்கின்ற இலத்திரனியல் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருக்கின்றது. அதற்கு பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஊடகங்கள் மூலமே இம் முடிவு எட்டப்பட்டிருப்பதை தான் அறிந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது, தெரிவுக்குழு விவகாரத்திற்கு பெயர் வழங்கக்கூடாது, ஜெனீவாவிற்கு செல்லவேண்டும் போன்ற முடிவுகளில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததாக தெரியவந்திருக்கின்றது.
நேற்றைய முடிவு எடுக்கப்பட்ட போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, சுரேஸ்பிறேமச்சந்தின், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தியாவில் இருந்ததாகவும் நாட்டில் இருந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் ஆலோசிக்கப்படாமலேயே முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
ஜெனீவா செல்லாமல் விட்டமைக்கு, கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட மிரட்டலே காரணம் என்று செய்திகளை வெளியிடுமாறு சில ஊடகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இதன் மூலம் தம் மீது ஏற்பட்டிருக்கின்ற அவப்பெயரை நீக்கிக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்தக் கருத்து நகைப்பிற்கு இடமானது என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உலக அரங்கினை எட்டியிருப்பதன் அடிப்படை பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர்க்கொடையே என்பதை கூட்டமைப்பினர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அச்சுறுத்தல்களுக்குப் பயந்து இழந்து போன தமிழ் உயிர்களின் பெறுமதியை மறந்து உயிர்ப்பிச்சை தேடுபவர்கள் எமது இனத்தின் தலைவர்களாக இருப்பார்களா? என்பது சந்தேகமானது என்றார்  கொழும்பில் உள்ள மூத்த அரசறிவியலாளர் ஒருவர்.
குறித்த விடயங்கள் தொடர்பில் மௌனம் சாதிப்பதன் மூலம் சம்பந்தர், சுமந்திரனின் முடிவினை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.(செய்தி:சரிதம்)

பேசப்போய் மூக்குடைபட்ட ஸ்ரீலங்கா தரப்பினர்!

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா   தலைமையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவிடம் தெரிவித்துள்ளார். மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஜெனிவாவில் நேற்றையதினம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்று அமைச்சர் நிமால்சிறிபாலடி சில்வா தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளர்.
சிறிலங்காவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தவே அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக் கூறுதல் தொடர்பான எந்தப் பரிந்துரைகளும் செய்யப்படாதது குறித்து சிறிலங்கா தரப்பிடம் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை ,சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதற்கு நவநீதம்பிள்ளை, இந்த விடயத்தில் தன்னால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும், இதிலிருந்து தான் தொலைவிலேயே இருப்பதாகவும் கூறிவிட்டார்.
அதேவேளை, நவநீதம்பிள்ளையின் இந்தப் பதில் சிறிலங்கா தரப்புக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசுடன் இந்தச் சந்திப்புக்குச் சென்ற சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமெரிக்காவின் இந்த நகர்வு சிறிலங்காவின் நல்லிணக்க நடவடிக்கைகளைத் தடம்புரளச் செய்து விடும் என்று நவநீதம்பிள்ளையைப் பார்த்து சீற்றத்துடன் எச்சரித்துள்ளார்.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது உள்ளிட்ட அமெரிக்காவினால் செய்யப்பட்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு நவநீதம்பிள்ளை, பின்லேடன் கொல்லப்பட்டதையும் தான் கண்டித்ததாக கூறியது, சிறிலங்கா தரப்பை மேலும் எரிச்சலடைய வைத்ததாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 பிப்ரவரி 2012

சவேந்திர சில்வாவை அனுமதிக்கமாட்டேன்"லூயிஸ் அம்மையார் தெரிவிப்பு!

அமைதிக்காக்கும் நடவடிக்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க சிறிலங்காவின் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூர்க்கத்தனமானது என்றும் இதன் பின்னால் உயர்மட்ட தொடர்பு இருப்பதாகவும் சிறிலங்கா கூறியுள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைதிகாக்கும் நடவடிக்கைக்கான ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் சவேந்திர சில்வா பங்கேற்பது பொருத்தமானது அல்ல என்று குழுவின் தலைவரான லூயிஸ் பிரெசெற் அம்மையார் கூறியிருந்தார்.
இதையடுத்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சவேந்திர சில்வா, எதுவும் பேச அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அவருக்கு கூட்டம் தொடர்பான எந்த ஆவணங்களும் வழங்கப்படவில்லை. கூட்டத்தில் பங்கேற்க சவீந்திர சில்வா தடுக்கப்பட்டது சிறிலங்காவை பெரிதும் ஆத்திரமூட்டியுள்ளது.
"கூட்டம் நடைபெறும் அறைக்குள் சவேந்திர சில்வா நுழைய விடமாட்டேன் என்றும், அவ்வாறு உள்ளே நுழைந்தால் அவரைத் தான் வெளியேற்றுவேன்" என்றும் லூயிஸ் பிரெசெற் அம்மையார் கூறியதாக சிறிலங்கா தரப்பு கூறுகின்றது.
"உங்களை ஆசிய நாடுகள் குழு நியமித்திருக்கலாம், ஆனால் நீங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நான் தான்" என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் சிறிலங்கா கூறியுள்ளது. இதுகுறித்து ஐ.நாவுக்கான சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இவ்வாறு நடந்து கொள்வதற்கு பிரெசெற் அம்மையாருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறியுள்ளார். ஐ.நாவின் முன்னாள் உதவிச்செயலரான இவர், மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"ஒட்டுமொத்த அனைத்துலக சமூகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அமைப்பில் சகிப்புத்தன்மையற்றதும், மேலாதிக்க குணம் கொண்டதுமான இந்தக் நடவடிக்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனைய உறுப்பினர்களிடம் பரப்புரை செய்து சவேந்திர சில்வாவை தனிமைப்படுத்தி வெளியேற்றுவதற்கு பிரெசெற் அம்மையார் முயற்சிக்கிறார். இது அவரது தலைமைப் பதவிக்கு ஒவ்வாத செயல்.
ஐ.நாவின் தீர்மானப்படி, அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான கட்டளையின் அடிப்படையில் ஆசிய நாடுகள் குழுவினால் முறைப்படி தெரிவு செய்யப்பட்ட சவேந்திர சில்வாவை, இந்தக் குழுவில் இருந்து வெளியேற்றுவதற்கு அதன் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஐ.நாவின் அமைப்பில் இருந்து வெளியேற்றவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன்னாலும, நம்பகமான அதிகார அமைப்பினால் சவீந்திர சில்வா குற்றம்சாட்டப்படவில்லை.
நீதி விசாரணையின்றி அவரை நீக்க முற்படுவது நீதியற்றது, ஐ.நாவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது. என்றும் சிறிலங்கா கூறியுள்ளது. அதேவேளை, பிரெசெற் அம்மையாரின் இந்த நடவடிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆசிய நாடுகளின் குழுவிடம் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் உருவப்படத்தை எரித்த கொடும்பாவிகள்!

ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்து நேற்று குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய ஜும்மா பள்ளி தொழுகை முடிந்தவுடன்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டம்  குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது. இதில் அமெரிக்க  ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவம் பதிக்கப்பட்ட  பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது.

24 பிப்ரவரி 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வேயும் பிரித்தானியாவும் ஆதரவு.

ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பிரிட்டனும் ஆதரவு வழங்கும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரத்திட்டமிட்டுள்ள தீர்மானத்தை பிரித்தானியாவும் ஆதரிக்கும் நிலை உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 'இலங்கையின் மனிதஉரிமைகள்'என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வருவது குறித்து அனைவருக்கும் தெரியும், அந்த தீர்மானத்திற்கு நாம் ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.' என அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, இலங்கைக்கு எதிராக அமெரிக்க ஆதரவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு நோர்வேயும் ஆதரவை வழங்கும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது காணாமல் போன உறவுகளை இன்னும் மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்று ஆப்டன்பொஸ்டன் நாளிதழுக்கு அவர் கருத்துரைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிப்பெற்றது. ஆனால் இன்னும் சமாதானத்தில் வெற்றிப்பெறவில்லை.இந்த நிலையில் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் சமாதானமாக வாழ்வதற்கான வழிமுறையை ஐக்கிய நாடுகள் சபை தேடியறியவேண்டும் என்று சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசு அஞ்சலி!

இலங்கைத் தீவில் நடைபெற்ற போரின் போது மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை உலகறியச் செய்த ஊடகவியலாளர் மேரி கொல்வின்.இவ்வாறு  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் அவர்களின் உயிரிழப்பையிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்....
ஈழத்தமிழ் மக்களுக்கும் அம்மையார் மேரி அவர்களுக்குமிடையில் நல்ல உறவு இருந்து வந்துள்ளது. பல்வேறு ஆபத்துக்கள் மத்தியிலும் அவர் இலங்கைத் தீவில் நடைபெற்ற போரின் போது மிகவும் துணிச்சலுடன் செயல் பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட கொலைகளை உலகறியச் செய்தவர்.
இவ்வாறு உண்மையை உலகறியச் செய்யும் தனது முயற்சியின் போது, சிறிலங்கா படைகளின் சூட்டுக்கு இலக்காகி அவர் தனது இடது கண்ணின் பார்வையையும் இழந்தவர் என்பதும் இங்கு நினைவு கூறத் தக்கதாகும்.
அது மட்டுமன்றி, மே 2009; உக்கிரயுத்த காலத்தில் தமிழ் மக்களைப் பாதுகாப்பாக போர்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றுவதற்காக ஐநா. அதிகாரிகளுடனும் மற்றவர்களுடனும் தொடர்பு கொண்டு செயல் பட்டவர் என்பதும் இங்கு நினைவுகூரக்தக்கது.
ஆனால், மக்கள் போர்ப் பகுதிகளைக் கடந்து வெளியே வந்த போது சிறிலங்காப் படையினர் அவர்களை சுட்டுக் கொலை செய்ததனால் இவரது முயற்சி வெற்றிபெறவில்லை.
மேரி கொல்வின் அவர்கள் யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும், அங்கு 140,000 மேற்பட்ட மக்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையிலும் நீதியை நிலைநாட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
மக்களின் படுகொலைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்றினை நிறுவுவதற்கான ஆதாரங்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர்.
சிறிலங்கா அரச படைகளினால் குண்டுத் தாக்குதல்களுக்கும் எறிகணைக் தாக்குதல்களுக்கும் உள்ளான அப்பாவி மக்களுக்கு மேரி அம்மையார் போன்ற ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் தான் ஓரளவு நப்பிக்கையை ஏற்படுத்தி வந்துள்ளன.
மேரி கொல்வின் அவர்கள் உண்மையை வெளிக்கொணரும் பணியில் ஆற்றிய அரிய சேவைக்காக என்றும் மக்கள் மனதில் நிறைந்து நிற்பார்.
உன்னத ஊடகவியலாளன் எனும் பெருமை அவருக்கே உரியதாகுகின்றது.
அவர் உண்மையை என்றும் உரத்துக் கூறியவர். அவர் உயிராபத்து உள்ள நிலையிலும் உண்மையை வெளிக் கொணரத் தவறவில்லை.
ஊடகத்துறை அவரால் பெருமை அடைகின்றது. அரச படைகள் நிகழ்த்தும் அநியாயங்களை உலகம் அறியச் செய்ய முயலும் ஊடகவியலாளர்களுக்கு மேரி அவர்கள் சிறந்ததோர் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கனத்த இதயத்தோடு அன்னாருக்கு தனது மரியாதையைச் செலுத்தி நிற்கின்றது.
சிறிலங்காப் படைகளினால் நிகழ்த்தப்பட்ட பாரிய தமிழினப் படுகொலைகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்காகவும், போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு என்பவற்றை புரிந்தவர்களை இனம் கண்டறிவதற்காகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை நாம் பாராட்டி நிற்கின்றோம்.
அநியாயமான முறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர் நெஞ்சங்களில் அவர் என்றும் நிலைத்து நிற்பார்.
நீதியின்பால் அவர் கொண்ட தணியாத தாகத்தினால், தனது உயிரைக் கூடத் துச்சமென கருதி செயற்பட்ட உன்னத பண்பினால் அவர் என்றும் எம்உள்ளங்களில் உயர்ந்து நிற்பார்.
அவரின் இழப்பு எமக்கு, தமிழர்களுக்குப் பேரிழப்பு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 பிப்ரவரி 2012

அமெரிக்கா குறுக்கு வழியில் செயற்படுகிறது என்கிறார் பீரிஸ்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்கா குறுக்குவழியில் – வதந்திகளைப் பரப்பி உறுப்பு நாடுகளின் ஆதரவைப்பெற முனைவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
“சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக தீர்மானம் ஒன்றை வரைவதற்கு தம்முடன் சிறிலங்கா இணங்கிச் செயற்படுவதாக ஜெனிவாவிலுள்ள இராஜந்திர வட்டாரங்களில் அமெரிக்கா வதந்திகளைப் பரப்புகிறது.
மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் சிறிலங்காவுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதைத் தடுக்கவே, அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை இணைந்து வரைவதற்கு நாம் இணங்கியுள்ளதாக வதந்தி பரப்புவதன் மூலம், இந்தத் தீர்மானத்துக்கு சிறிலங்காவும் ஆதரவளிப்பதாக உறுப்பு நாடுகளை நம்பவைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
சிறிலங்காவின் ஒப்புதலுடன் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது என்று உறுப்புநாடுகள் நம்பினால், அவை இதனைப் பாரதூரமானதொன்றாக கருதமாட்டாது.
உறுப்பு நாடுகளை அமெரிக்கா தவறாக வழிநடத்த முனைகிறது. சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் ஒரு சூழ்ச்சி இது. இந்த வதந்திகளை பலப்படுத்த நாம் அனுமதிக்கப் போவதில்லை. இந்தத் தீர்மானம் குறித்து அமெரிக்காவுடன் நாம் ஒருபோதும் இணங்கிச் செயற்படப் போவதில்லை.
 சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இது குறித்து நாம் அறிவிப்போம்.“ என்றும் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவை கணக்கில் எடுக்காத ஆலோசனை கூட்டம்!

சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அமைதிகாக்கும் படை பிரிவின் ஆலோசகர் குழுவில் இருந்து ஐநாவிற்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் நேற்று இடம்பெற்ற ஐ.நா செயலாளர் நாயகத்தின் அமைதிகாக்கும் படைப்பிரிவின் ஆலோசகர் குழு கூட்டத்தில் சவேந்திர சில்வா கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த ஆலோசகர் குழு கூட்ட அறையில் சவேந்திர சில்வா அமர்ந்திருந்த போதும் அவருடன் வேறு ஆலோசகர்கள் எவரும் உரையாடவில்லை என்பதோடு, எவ்வித ஆவணத்தையும் அவரிடம் கையளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய - பசுபிக் வலய நாடுகளால் ஐக்கியநாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் படை பிரிவின் ஆலோசகர்கள் குழுவிற்குத் தெரிவு செய்யப்பட்ட சவேந்திர சில்வா, ஆலோசகர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என அக்குழுவில் உள்ள கனேடிய ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் படை பிரிவில் சவேந்திர சில்வாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகரம் என்பன அவரது நியமனத்தை கேள்விக்குட்படுத்தியிருந்தன. குறிப்பாக இந்த நியமனம் தொடர்பில் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதியிருந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை,போர்குற்றவாளியை எப்படி அமைதி காக்கும் படையின் ஆலோசகர் குழுவில் இணைத்தீர்கள் எனகேள்வி எழுப்பியிருந்தார்.
எனினும் தாம் நியமனத்தை வழங்கவில்லை எனவும் ஆசிய நாட்டு நிறுவனங்களே அவரை நியமித்ததாகவும் அது குறித்து பொறுப்புக் கூற முடியாது எனவும் ஐநா செயலாளர் நாயகம் சார்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் குறித்த ஆலோசனைக் குழுவில் இருந்து சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
ஆலோசகர் குழுவில் சவேந்திர சில்வாவின் பங்களிப்பு பயனுள்ளதாக, உதவியளிக்கக்கூடியதாக இருக்காது என ஐநா முன்னாள் பிரதி செயலாளர் நாயகமும் அமைதி காக்கும்படை ஆலோசகர் குழு தலைவருமான லூயிஸ் பிரச்செட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவேந்திரசில்வா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஐநா மனித உரிமை கண்காணிப்பகம் வரவேற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

22 பிப்ரவரி 2012

இனவாதம் பேசும் பிக்குவிற்கு உயர் பதவி!

குற்றச் செயல்கள் சிலவற்றுடன் தொடர்புடையவரும், சண்டியருமான பிக்கு ஒருவர் சுயாதீன காவல்துறை ஆணைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ல குணவன்ஸ என அழைக்கப்படும் இவருக்கு சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவில் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இவர் அடிப்படையில் ஒரு பேரினவாதி. பேரினவாதம் பேசத் தொடங்கினால் நிறுத்தவே மாட்டார் என சுட்டிக்காட்டப்படுகிறது. இவரைப் போன்ற பிக்குமார் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நின்று சுயநல தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இவருக்கு காலம் சென்ற அமைச்சர் காமினி திஸநாயக்கவுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததுள்ளது.
அப்போதைய காலகட்டத்தில் பிக்குமாருக்கு குணவன்ஸ கராட்டி வகுப்புக்களை ஏற்பாடு செய்து நடத்தி வந்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். தற்போது, இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன், மிக நெருக்கமாக செயற்பட்டு வருகிறார் அரசியலில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் இந்த பிக்கு முக்கிய பங்காற்றியவர் என்று டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சிங்க ரணசிங்க 1988 ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் எழுதி உள்ளார்.
இவரைப் போன்றவர்கள் காவல்துறை ஆணைக்குழுவுக்கு நியமனம் பெற்றுள்ளமை நாட்டில் நிரந்தர சமாதானம், சகவாழ்வு, இன ஐக்கியம் ஏற்படும் என்கின்ற நம்பிக்கையை இல்லாமல் செய்துள்ளதாக சில புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பேச்சுக்களில் தீர்க்கமான முடிவின்றி தெரிவுக்குழுவில் இணையமாட்டோம்"சம்பந்தன் உறுதி.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் நடைபெற்றுவருகின்ற பேச்சுக்களின் தீர்க்கமான கட்டத்தினை அடையாதவிடத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு நாங்கள் பெயர் கொடுக்க மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட அழைப்பின் பேரில் அலரிமாளிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் நேற்று  மாலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ள வேண்டும் என சம்பந்தனிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டபோதே மேற்படி தனது மறுப்பினை சம்பந்தன் எம்பி வெளிப்படுத்தியுள்ளார்.
தீர்க்கமான தீர்வொன்று கிடைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொண்டுள்ள கொள்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பேச்சின் மூலம் கிட்டாத பட்சத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

21 பிப்ரவரி 2012

இலங்கை அரசுக்கு எதிரான புதிய காணொளி ஐ.நா.வில்!

 பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்களை சுமத்தும் புதிய காணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
இலங்கைக்கு எதிரான வகையில் இந்த காணொளி அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணொளியை வெளியிடுவதற்கு முன்னர்  ஊடக நிறுவனத்தின் தயாரிப்பாளர் மெரன் ஸ்வோன் ஜெனீவா சென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்iயை ரகசியமாக சந்தித்துள்ளார். 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை அமர்வுகள் நடைபெறவுள்ள தினத்தில் செனல் 4 ஊடகத்தின் காணொளி வெளியிடுமாறு உலகத் தழிழர் பேரவை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை சபை அமர்வுகள் நடைபெற்ற காலப்பகுதியில் செனல்4 ஊடகத்தின் முதல் காணொளி வெளியிடப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராஜதந்திர வரப்பிரசாதம் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது.

  இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராஜதந்திர வரப்பிரசாதம் தொடர்பில் சவால் விடுக்க முடியாது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை அரசியலமைப்பின் அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றது. 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராஜதந்திர வரப்பிரசாதம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஜனாதிபதி மஹிந்தவிற்கு ராஜதந்திர வரப்பிரசாதங்களை அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்க முடியாது என  முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் ராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. 
அமெரிக்க அரசாங்கத்தின் ராஜதந்திர வரப்பிரசாத கொள்கை தொடர்பில் அந்த நாட்டு காங்கிரஸ் சபை கூட கேள்வி எழுப்பியதில்லை என ராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேன்முறையீடு தொடர்பான உத்தியோகபூர்வ தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 பிப்ரவரி 2012

அனைத்து கசப்பான சம்பவங்களையும் மறந்து விடுவது நல்லதென்கிறார் மகிந்த!

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தம்மால் நேரத்தை ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
24 வது அனைத்துலக இளைஞர் கப்பல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கொழும்பு வந்துள்ள 13 நாடுகளைச் சேர்ந்த 275 இளைஞர்கள் பயணம் செய்யும் 'புஜிமாறு' கப்பலுக்குச் சென்று, அதில் வந்தவர்களிடம் பேசியபோதே சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.
பயங்கரவாதம் உட்பட வரலாற்றில் இடம்பெற்ற அனைத்து கசப்பான சம்பவங்களையும் மறந்து விடுவதே தமது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
அபிவிருத்தி இல்லாத இடத்தில் சமாதானத்தை அடைய முடியாது.
அதேபோல் சமாதானம் இல்லாத இடத்தில் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியாது.
பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட பிரதேசங்களின் பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், வீதிகள் உள்ளிட்ட உட்கட்மைப்பு வசதிகளை மீளக்கட்டியெழுப்புவதை விடுத்து, பயங்கரவாதத்தை ஒழித்தது தொடர்பாக பல்வேறு தரபினரும் கூறுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க காலத்தை ஒதுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் கூற்றுக்கு மனித உரிமை கண்பாணிப்பகம் அதிர்ப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஐந்து நீதவான்கள் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
இந்த இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது. சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த இராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டதாக மனித  உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியிருந்தது.
சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள்வதற்காக காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் இந்த இராணுவ நீதிமன்றத்தை உருவாக்கியுள்ளது என தெரிவித்திருந்தது. எனினும், மனித உரிமை கண்காணிப்பகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமாக செயற்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக புலிகளின் சார்பில் மனித உரிமை கண்காணிப்பகம் இவ்வாறு குற்றம் சுமத்துவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குழுக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் எவ்வித நியாயமும் கிடைக்கப் பெறவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அம்பலப்படுத்திய போது இலங்கை அரசாங்கம் அதனை பாராட்டி வரவேற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கப் படையினரால் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் பாரிய மனித உரிமைமீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை துரதிஸ்டவசமாக அரசாங்கத்தின் சில அதிகாரிகள் புலிப்பிரச்சாரமாக கருதுவதாக பிரட் அடம்ஸ்வருத்தம் வெளியிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது கடமையாற்றிய சக அதிகாரிகளை நீதவான்களாக நியமித்து நடத்தப்படும் விசாரணைகளில் நியாயம் கிட்டுமா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளார்.

19 பிப்ரவரி 2012

சனல்4 மற்றுமோர் இன அழிப்பு காணொளியை வெளியிடவுள்ளது.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.
சனல்-4 வெளியிட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்திவழங்குனரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார்.
ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு நெருடிக்கடியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சனல்-4 தொலைக்காட்சி இந்த ஆண்டுக்கான தமது நிகழ்சித் தயாரிப்பு தொடர்பாக வெளியிட்ட தகவலில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை – புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் வெளியிடப் போவதாக கூறியிருந்தது.

விடுதலைப்புலிகள் மக்களுக்காக போராடிய ஒரு விடுதலை அமைப்பு.


இலங்கையில் நடந்த போரில் பங்கு பற்றிய இரு பகுதியில் ஒன்றான எல்ரிரிஈயை மாத்திரம் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடுவதை அனுமதிக்க முடியாது. என்னுடைய வாதம் (கொப்பே) சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் நியாயப் படுத்தக் கூடிய ஆயுதப் போரை எல்ரிரிஈ நடத்தியதே தவிர அது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்பல்ல நாங்கள் ஜரோப்பிய நீதிமன்றத்தில் எல்.ரி.ரீ.ஈ மீதான தடை நீக்கத்திற்காக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். தடை நீதிக்குப் புறம்பானது என்று நாம் வாதிடுகிறோம்.
முதலாவதாகப் போர் முடிந்து மூன்று வருடங்களாகின்றன தடைக்குத் தேவை இருக்கவில்லை.
இரண்டாவதாக ஏற்கனவே ஹேக் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட தீர்ப்பின்படி எல்ரிரிஈ ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல, அது தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடும் விடுதலை அமைப்பு.
மூன்றாவதாக இலங்கையில் நடந்த போரில் பங்கு பற்றிய இரு பகுதியில் ஒன்றான எல்ரிரிஈயை மாத்திரம் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடுவதை அனுமதிக்க முடியாது.
என்னுடைய வாதம் (கொப்பே) சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் நியாயப் படுத்தக் கூடிய ஆயுதப் போரை எல்ரிரிஈ நடத்தியதே தவிர அது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்பல்ல. மேற்கூறிய போரில் பங்குபற்றிய இரு பகுதியும் சம அளவில் சர்வதேசச் சட்டங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்கள். ஒரு பகுதியைப் பயங்கரவாத அமைப்பாகவும் அடுத்த பகுதியை சட்டத்திற்கு உட்படாத அரசாகவும் மதிப்பிட முடியாது.
என்னுடைய பார்வையில் சர்வதேச சமூகம் படிப்படியாகச் சிறிலங்கா பற்றிய உண்மையை உணரத் தொடங்கியுள்ளது. சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. போர் குற்றங்கள், ஜெனோசைற் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்பதை சர்வதேச சமூகம் ஏற்கும் நிலையில் இருக்கிறது.
சர்வதேச நீதி விசாரணக்கு உட்படும்படியான அழுத்தம் சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கப்படுகிறது.
போரின் இறுதிக் பகுதியில் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மறைக்க இயலாது. சாட்சிகளும் சடுதி மரண அறிக்கைகளும் ஒளிப்பட ஆவணங்களும் நிறைய இருக்கின்றன. ஆதாரங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
தமிழர் தரப்பு சோர்வு அடையாமல் சான்றுகளைத் தேடிப் பெற வேண்டும் எதிர்வரும் வழக்கிலும் அதற்குப் பிந்திய சர்வதேச நிதி விசாரணைகளிலும் அவை முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இது வரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் தரமானவை. அதற்கு பொறுப்பானவர்களைப் பாராட்டுகிறேன்.
எல்ரிரிஈ மீது விதிக்கப்பட்ட தடை சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானது. இது தான் என்னுடைய முக்கியமான வாதம.; தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக எல்ரிரிஈ போரிட்டது. சுய நிர்ணய உரிமைக்காக ஆயுதப் போர் நடத்தும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் அனுமதிக்கின்றது.
ஹேக் நீதி மன்றத் திர்ப்பு மிக முக்கியமான படிக்கல். லுக்செம்போர்க் நீதி மன்ற விசாரணையை இந்த தீர்ப்பு எமக்குச்; சாதகமாக வழிநடத்தும். சிறிலங்காப் போர் இரு பகுதிகளுக் கிடையில் நடந்த உள்நாட்டுப் போர் என்று நான் வாதிடுகிறேன். உண்மையும் அது தான் .
சர்வதேச சட்டத்தின் முன்நிலையில் இரு பகுதியும் சரி சமன் என்ற நிலைப்பாட்டை ஐநா நிபுணர் குழு அறிக்கை மிகச் சரியாக எடுத்துள்ளது.
நீதி வழங்கப்படாமல் இலங்கையில் அமைதி ஏற்படப் போவதில்லை. குற்றங்களுக்கு காலக் கட்டுப்பாடு கிடையாது. காலம் பிந்தினாலும் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது .மூன்று வருடங்கள் பெரிய நீண்டகாலமல்ல. ஐநா ஒரு பொருத்தமான சுயேச்சையான நீதி விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும். சிறி லங்காவும் அதற்கு உதவும் நாடுகளும் நெடுகாலம் இழுத்தடிப்பையும் தடுப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள இயலாது .
ஜெனிவா, நீயு யோர்க், ஹேக், லுக்ஸ்செம்பேர்க் எதுவானாலும் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரே குரலில் சர்வதேச சமுகத்தின் மீது தொடர்ச்சியான அழுத்தம் கொண்டுவர வேண்டும.; ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத் தொடரின் போது தமிழர்கள் கட்டயமாகத் தமது பலத்தைக் காட்ட வேண்டும்.
தடை நீக்க வழக்குக்காக உழைக்கும் முன்று தமிழர்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன். உங்கள் நெடிய பயணம் வெற்றியில் முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

18 பிப்ரவரி 2012

மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என சபதம்!

கொழும்பில் நேற்று (17) ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் கலந்து கொண்டனர். அரசாங்கம் இறங்கி விலகிச் செல்ல வேண்டும். அல்லாவிடின் நாடு முழுவதும் போராட்டத்தை நடாத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பாமல் ஓய மாட்டோம் என அங்கு கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.(அப்ப விஜய் ரீவியில சாஸ்திரிகள் சொன்னதுபோல 2012ல் மகிந்த அரசியலை விட்டு ஓடுவாரோ?)
பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் காணொளித் தொகுப்பு.

சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டியது அவசியம்.

சர்வதேச நன்மதிப்பை வெல்ல இலங்கை மீது சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நெருக்கடிக்குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கை இராணுவம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அதன் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை என சர்வதேச நெருக்கடிக்குழுவின் இலங்கைப் பணிப்பாளர் அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில்  கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாட்டை அவர் வரவேற்றுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று  வருவதாகக் கூறியுள்ள அவர், சிலாபத்தில் மீனவர் படுகொலை, நீதிமன்றவளவில் கைதி கடத்தல் போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானதென வலியுறுத்தியுள்ளார்.

17 பிப்ரவரி 2012

சீமான் பரப்புரை செய்த இடங்களில் காங்கிரஸ் படுதோல்வி!

மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பரப்புரை செய்த அனைத்து இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க கடந்த 13ஆம் தேதி செந்தமிழன் சீமான் பரப்புரை செய்தார். தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியிலும், சயான் கோல்லிவாடாவிலும் சீமான் பேசினார். அப்போது ஈழத்தில் தமிழினத்தை அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசுக்குத் துணைபோன காங்கிரஸ் அரசுக்கு பாடம் புகட்ட தமிழர்கள் அனைவரும் காங்கிரஸை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒரு முறை கூட கண்டிக்காத காங்கிரஸ் கட்சி தமிழனுக்குத் தேவையா என்றும் சீமான் வினா எழுப்பினார். சீமானின் பிரச்சாரம் மும்பை வாழ் தமிழர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது.
 தாராவியில் முஸ்லீம்கள் அதிகம் வாக்காளர்களாக உள்ள ஒரு வார்டைத் தவிர மற்ற 6 வார்டுகளிலும் காங்கிரஸ் தோற்கடிக்கபட்டுவிட்டது. இந்தத் தொகுதிகளில் சிவசேனா கூட்டணி வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், சயான் கோல்லிவாடாவில் சீமான் ஆதரித்துப் பரப்புரை செய்த, 168 வட்டத்தில் போட்டியிட்ட தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இந்த வார்டில் காங்கிரஸ் தோற்பது இதுவே முதல் முறையாகும். சீமானின் பரப்புரை ஏற்படுத்திய எழுச்சி காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை காணா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென அங்குள்ள தமிழர்கள் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளனர்.

தமிழீழ ஆயுதப்போராட்டத்தின் பின்னணி பற்றி தமிழகத்தில் ஆய்வு செய்கிறது அமெரிக்கா!

சிறிலங்காவில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தமிழ்நாட்டில் நடத்தி வரும் ஆய்வு தொடர்பாக சிறிலங்கா அரசு கடும் விசனத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது.
இதற்காக தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள், கட்சிகளின் தலைவர்களிடம் அமெரிக்க தூதரகம் விபரங்களைக் கோரியிருக்கிறது.
ஜெனிவாவில் மனிதஉரிமைகள் தொடர்பான மாநாடு நெருங்கும் நேரத்தில் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்தஆய்வை மேற்கொண்டிருப்பது குறித்து சிறிலங்கா அரசு கடும் அதிர்ச்சிக்கும் விசனத்திற்கும் உள்ளாகியிருப்பதாக சிறிலங்கா அரசதரப்பு தகவல்கள் தெரிவித்தன.
சிறிலங்கா பிரச்சினை தொடர்பான முக்கிய பல தகவல்களை தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள் அங்கிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாக இருந்த இலங்கையை ஒன்றாக்கியது பிரிட்டனே"சிறீதரன் தெரிவிப்பு.

இரு தேசங்களாக இருந்த இலங்கையை ஒன்றாக்கியது பிரிட்டன் தான். எனவே தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு பிரிட்டனுக்கு உண்டு.  இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் கொமன்வெல்த் நாடாளுமன்றத் தலைவருமான சேர்.அலன் ஹார்சல் துறூஸ்ட்டிடம் சுட்டிக்காட்டியது இலங்கை தமிழரசுக்கட்சி.யாழ். வந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழரசுக்கட்சியை நேற்று மாலை 6 மணியளவில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிலேயே தமிழரசுக்கட்சி மேற்கண்டவாறு தெரிவித்தது.
தமிழரசுக்கட்சி சார்பில் முன்னாள் மாநகர ஆணையாளர் சீ.வி.கே சிவஞானம், பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், பொ.கனகசபாபதி ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்புக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தவை வருமாறு
இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைவில் எட்டப்படவேண்டும்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டுவருகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வு எதனையும் அரசு இதுவரையில் முன்வைக்கவில்லை. எமது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் இலங்கை அரசு எப்போதும் தீர்வை முன்வைக்கத் தயாராகவில்லை. காலத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பதற்கே அது விரும்புகின்றது. இன்னும் பல ஆணைக்குழுக்கள் தோற்றம் பெறக் கூடும். ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தர அரசியல் தீர்வும் கிட்டாது.
இவ்வாறு நிலைமை தொடருமாக இருந்தால் தற்போதுள்ள இளைய சமுதாயம் மிக விரைவாக போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பது பற்றியே சிந்திக்கின்றது. வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் அங்கவீனமானவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர்.
வடபகுதியில் நிலைமை இவ்வாறு இருக்கின்றபோது இலங்கை அரசு தென்பகுதியில் இராணுவத்தின் மூன்றாவது குழந்தைக்கு ஒரு இலட்சம் ரூபாவும், ஊனமுற்ற இராணுவத்தினருக்கு உதவிகள் என்றும் வரவு செலவுத் திட்டத்திலேயே வழங்குகின்றது.
அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படும் போராளிகள் கூட வெளியில் வந்த பின்னர் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படவில்லை. இராணுவ முகாம்களில் கையொப்பம் இடச் சொல்வதும் அடிக்கடி அவர்களை விசாரிப்பதும், துன்புறுத்துவதுமாகத் தான் உள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் காணாமல் போதல்கள் இடம்பெறுகின்றன. என்று தெரிவித்ததாகக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசு தீர்வை வழங்குமாறு நிர்ப்பந்திக்க முடியுமே தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய முடியாது. எங்களால் செய்யக் கூடிய வழிமுறைக்குள் இருந்து அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு சீமான் பங்கேற்கிறார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் க.பரந்தாமன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடங்குளத்தில் அணுஉலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் வருகிற 26-ந் தேதி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது.
சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் இம் மாநாடு அணுஉலை எதிர்ப்புக்குழு சார்பில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கு பெரியார் திராவிடர்கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்குகிறார்.

மேலும் மாநாட்டில் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது’’ என்று கூறினார்.மாநாட்டில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கக்குழுத் தலைவர் உதயக்குமார்,
மனித நேய மக்கள்கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் வடிவேல் ராவணன், தியாகி வெங்கட்ராமன்,
கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் பா.ஜெயபிரகாசம் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு கூடங்குளத்தில் அணுஉலை நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் பேசுகின்றனர்.

16 பிப்ரவரி 2012

வேற்றுக்கிரக வாசிகளை சந்தித்த முன்னாள் அமெரிக்க அதிபர்!

வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான்.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட்டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார்.
எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் ராணுவ விமான தளத்தில் மூன்றுமுறை சந்தித்தனர் என கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார். வேற்று கிரக மனிதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்த தகவல் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் குட் இன் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன்மூலம் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணையை திசை திருப்பவே இராணுவ நீதிமன்ற நாடகம்!

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகளை திசை திருப்பவே இராணுவ நீதிமன்றத்தினை இலங்கை நியமித்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக விசாரிக்க இராணுவ நீதிமன்றம் ஒன்றை நியமித்துள்ளதாக இலங்கை இராணுவத் தளபத் ஜெகத் ஜெயசூரிய நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இது குறித்து நியுயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் அனைத்தலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அவ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்குச் சாத்தியமுள்ள சூழலில், மற்றொரு அர்த்தமற்ற நகர்வை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, போரின் இறுதி ஆண்டுகளில் போர் வலயமான வன்னிப் பகுதிக்குப் பெர்றுப்பான தளபதியாக இருந்தவர்.
ஒட்டுமொத்த போரின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளில் அவர் முழுமையாகத் தொடர்புபட்டிருந்தவர். அவ்வாறான ஒருவரால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் இராணுவ அதிகாரிகளால், தமது நண்பர்களான சக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து உண்மையை கண்டறியும் நடுநிலையான- சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அடம்ஸ் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுக்களை நியமிக்கும் நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 பிப்ரவரி 2012

அரசை பாராட்டுகிறார் சம்பந்தன்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக அரசாங்கம் மேற்கொண்ட புனர்வாழ்வுத் திட்டம் ‘மிகச் சிறப்பானது’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இப்புனர்வாழ்வுத் திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் முழுமையான பொறுப்புணர்வுடன் தமது கடமையை மேற்கொண்டுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். விசேடமாக, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என அவர் நேற்று கூறினார்.‘அவரின் மிகச்சிறந்த செயற்திட்டம் தொடர்பாக எமக்கு ஏராளமான அறிக்கைகள் கிடைத்தன. பெரும் எண்ணிக்கையான இளம் ஆண்களும் பெண்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். இப்புனர்வாழ்வுத்திட்டம் மிகச்சிறப்பாக நடந்தது’ என இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
எவ்வாறெனினும் தற்போது தமது குடும்பத்தினருடன் வாழும் இந்த இளைஞர்களின் ஜீவனோபாயத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
‘இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க நாம் முன்வந்துள்ளோம். எனினும் இந்த உதவியை ஏற்க அரசாங்கம் இன்னும் ஆர்வம் காட்டவில்லை. டக்ளஸ் தேவானந்தா, றிஷாட் பதியுதீன் ஆகிய இரு அமைச்சர்களிலேயே அரசாங்கம் இவ்விடயத்தில் சார்ந்துள்ளது’ எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன சிலர் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.’ இன்று பெற்றோர்கள் சிலர் வடக்கில் திரிந்து காணாமல் போன தமது இளம் பிள்ளைகளை தேடி வருகின்றனர். இந்நிலை குறித்து நாம் வருந்துகிறோம்’ என அவர் கூறினார்.
அரசு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அரசுக்கு சாதகமான கருத்தினை வெளியிட்டிருக்கின்றமை தற்போது மிக முக்கிய தேவையா? என்று நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

14 பிப்ரவரி 2012

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் பான் கீ மூனிடம் நவநீதம்பிள்ளை கேள்வி.

இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதி ஷவேந்திர சில்வா,பான் கீ மூனின் அமைதிக்காப்பு படைக்கான சிரேஸ்ட ஆலோசனைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் தாம் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அப்போது 58 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய ஷவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரை அமைதி காப்பு படைகளுக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகளுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவுமே நியமித்துள்ளன.
எனவே போர்க்குற்ற சந்தேகத்திலுள்ள சவேந்திரவின் நியமனம் தொடர்பில் தமது அலுவலகம் உரிய கவனம் செலுத்தி வருவதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார். இந்தநிலையில் நவநீதம்பிள்ளையின் கருத்து குறித்து ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் உடனடியாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி தரப்பும் நவநீதம்பிள்ளையின் கருத்துக்குறித்து உடனடியாக விமர்சனம் எதனையும் வெளியிடவில்லை.

13 பிப்ரவரி 2012

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியமும் தீர்மானம் கொண்டுவந்தது.

அமெரிக்க அதிகாரிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையை ஸ்தாபிக்கவேண்டும் என்று கோரியுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகளிடம் கோரப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின்படி மியன்மார், ஈரான், சிரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தொடர்பில் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் என்பதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையில் இருந்து அதிகரித்து வரும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐரோப்பிய காவல்துறை அமைப்பான யூரோபோல் அறிவித்துள்ளது.

இன்னர்சிற்றி பிரஷிற்கு கடிதம் அனுப்பினாராம் இலங்கை தூதர்.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் இன்னசிற்றி பிரஸின் இணையத்தளத்திற்கு செய்திகளை வழங்கும் மெத்தியூ ரசல் லீக்கு அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையணிக்கு சிரேஸ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பிலேயே இந்த கடித்தம் எழுதப்பட்டுள்ளது.
மெத்தியூ ரசல் லீ இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பிழையான தகவல்களை வெளியிடுவதாக இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்த குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து சவேந்திர சில்வாயை, அமெரிக்க நீதிமன்றம் விடுவித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தூதுவரின் இந்த கடிதத்தின் பிரதிகள் ஐக்கிய நாடுகளின் சபையின் செயலாளர் பான் கீ முனுக்கும் அவரின் பேச்சாளர் மாட்டின் நெசக்கிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

12 பிப்ரவரி 2012

இலங்கையை செல்லமாக எச்சரித்தாராம் ராப்.

போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு சிறிலங்கா அரசிடம் போர்க்குற்ற விவகாரங்களை கையாளும் அமெரிக்காவின் சிறப்புத்தூதுவர் ஸ்டீபன் ராப் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நான்கு நாள் பயணமாக கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்த ராப், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட உயர் மட்டப் பிரமுகர்கள் பலரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசிய அவர் யாழ்ப்பாணம், வன்னிப் பகுதிகளுக்கும் சென்று தகவல்களை திரட்டியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்து 33 மாதங்களாகியுள்ள நிலையிலும் சிறிலங்கா அரசாங்கம், மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து ராப் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிகட்கிழமை ரவூப் ஹக்கீமைச் சந்தித்த போது அவர், “தாம் சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், ஆனால் சிறிலங்கா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவது முக்கியம்“ என்றும் எடுத்துக் கூறியுள்ளார்.
அதேவேளை, நாகரிகமான முறையில் ராப் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா உள்நாட்டுப் விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி மீறல்கள் குறித்த விசாரிக்கத் தவறினால், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று அச்சுறுத்தும் தொனியில் ராப் சிறிலங்கா அரசுக்கு தகவல் பரிமாறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பை முதலில் சந்திக்கவுள்ள அமெரிக்க பிரதிநிதிகள்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர். நேற்று (11-02-12) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வந்துள்ள இவர்கள் இன்று (12-02-12) மாலை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்த சந்திப்பானது இன்று மாலை 04.45 அளவில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் தீர்வு பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 பிப்ரவரி 2012

கூட்டமைப்பு காணி அதிகாரத்தை கைவிடுகிறதா?சுமந்திரனின் கருத்தால் சந்தேகம்!

மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம். பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாவிடின் அதிகாரப் பகிர்வின் அர்த்தம் என்ன? அதன் நோக்கமே நிறைவேறாமல் போய் விடும் எனத் தெரிவித்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் காணி அதிகாரம் தொடர்பில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமை சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து விபரம் வருமாறு,
பொலிஸ் அதிகாரம் இன்றி சட்டங்களை நடைமுறைப் படுத்த முடியாத அதிகார மற்ற சபைகளாக மாகாண சபைகள் இருப்பது அதிகாரம் எதுவுமே வழங்கப்படாத செயற்பாட்டை விட மோசமானதாகும்.
பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது தற்போதைய அரசியலமைப்பின் ஓர் அங்கம் என்பதாலும் கடந்த கால அரசியலமைப்பு மறுசீரமைப்பு யோசனைகளில் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையினாலும் அதனை அமுல்படுத்தாமல் இருக்கின்றமைக்கு நியாயமான காரணத்தைக் கூற முடியாது.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அரசு முன்னுக்குப் பின் முரணான வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரத்தைப் பகிரமுடியாது என்று ஜனாதிபதி பகிரங்கமாகக் கூறினாலும் நாட்டின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்குச் செல்வதாகவும் ஜனாதிபதி இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார். கிருஷ்ணா அந்த விடயத்தைக் கூறியபோது அதனை எதிர்க்காத ஜனாதிபதி தற்போது அது தொடர்பில் தனக்குப் பொறுப்பு இல்லை என்று காட்ட முயற்சிக்கின்றார். பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை அரசுக்குத் தெளிவாகத் தெரியும். அப்படியானால் அரசின் நிலைப்பாடு என்ன? பொலிஸ் அதிகாரத்தைப் பகிர வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகின்றது.
இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக பொலிஸ் அதிகாரத்தைப் பகிரும் செயற்பாடு அவசியமாகும். விசேடமாக அனைத்து மாகாணங்களுக்கும் பொலிஸ்படை ஒன்றை உருவாக்குவது அரசியலமைப்பின்படி அவசியம். தற்போது அரசியலமைப்பின் கீழ் அதிகாரத்தைப் பகிர்வதற்கு தேவையான ஏற்பாடுகளில் 9 ஆவது பிரிவுக்கு அமைய பொலிஸ் அதிகாரம் குறித்து கூறப்பட்டுள்ளதுடன் மாகாணசபை பட்டியலில் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.
எமது அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதிப்படுத்தலானது அயல் நாடு ஒன்றின் உயர் அதிகாரியிடமிருந்து தெரியவேண்டியுள்ளமை சிந்திக்கவேண்டிய விடயமாகும். எவ்வாறாயினும் தற்போது உறுதிப்படுத்தல் கிடைத்துள்ள நிலையில் அதனை நடை முறைப்படுத்தும் நம்பிக்கையைக் காட்ட வேண்டும்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் 1995, 1997, 2000 ஆம் ஆண்டுகளில் வந்த யோச்னைகள் மற்றும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை என்பவற்றில் கூட மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. பொலிஸ் அதிகாரத்தைப் பகிரவேண்டும் என இதில் கூறப்பட்டுள்ள நியாயப்படுத்தல்கள் பொதுவான சிங்கள மக்களின் கருத்து இதில் உடன்பட்டுள்ளது என்பதனை காட்டுகின்றது என்றார் அவர்.
மத்தியவங்கி ஆளுநருடன் மூன்று சுற்றுச் சந்திப்புக்களை தனிப்பட்ட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்த சுமந்திரன் சந்திப்பின் பின்னர் அரசாங்கம் வழங்குகின்ற (காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்ற) தீர்வினைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தினை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என்று ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை வற்புறுத்தியதாக தகவல் ஒன்று முன்னரே வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10 பிப்ரவரி 2012

சுதந்திரநாள் நிகழ்வுகளை விடுத்து வழிபாட்டில் ஈடுபட்டார் கோத்தபாய!

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் 64வது சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளாமல், சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா மீதான அனைத்துலக நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கு வழிபாடு நடத்தவே அவர் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவின் சுதந்திர நாளான கடந்த 4ம் நாள் தனது மனைவி மற்றும் மகனுட ன் மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் அவர் வழிபாடு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபருக்கு அடுத்து ஆட்சியில் அதிகாரம் செலுத்தி வரும் கோத்தாபய ராஜபக்ச சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்காமல், வழிபாட்டுக்காக சென்றது, போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் அவர் கொண்டுள்ள அச்சத்தை பிரதிபலிப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

09 பிப்ரவரி 2012

பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பீரிஸ்!

இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின உளகளாவிய குற்றவியல் நீதி அலுவலகத்துக்கான தூதுவர் ஸ்டீபன் ஜே றப் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று முன்தினம் சந்தித்து கலந்தரையாடினர். இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் வலரி பாலரும் கலந்துகொண்டார்.
மேற்படி சந்திப்பில் ஸ்டீபன் ஜே றப், இலங்கை படைகளின் போர்க்குற்றங்கள்தொடர்பில் பல கேள்விகளை கேட்டதாகவும் அதன் போது பீரிஸ் சில கேள்விகளுக்குதடுமாறி மழுப்பல் பாணியில் பதிலலித்ததாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்டீபன் ஜே றப் சில ஆதாரங்களுடன் பிரிஸிடம் கேள்விகளை கேட்டபோது, போர் நடந்து கொண்டிருந்த இறுதிக் காலப்பகுதியில் என்ன நடந்தது என்பதை தங்களால் உறுதி செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவித்ததாகவும் உறுதிப்படத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

08 பிப்ரவரி 2012

சுயாதீன சர்வதேச பொறிமுறை அவசியம்"அமெரிக்காவிடம் சம்பந்தன் வலியுறுத்து!

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி விசாரணைகளைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் ராப்பை நேற்றுக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் என்று நம்பகரமாக அறிய வந்துள்ளது.
அமெரிக்க சிறப்புத் தூதுவருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றுப் பிற்பகலில் சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.
கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நெருங்கும் வேளையில் இலங்கை வந்துள்ள சிறப்புத் தூதுவருடன் கூட்டமைப்பினர் இலங்கையின் போர்க் குற்ற விவகாரம், ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர், அதில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவரவுள்ள பிரேரணை ஆகியன குறித்தே அதிக நேரம் பேசியதாகத் தெரியவருகிறது.
அத்துடன் இலங்கை அரசின் பொறுப்புக்கூறும் கடப்பாடு, மனித உரிமைகள் விவகாரம் உட்படச் சமகால விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இறுதியுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் அமெரிக்கா எவ்வாறானதொரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது எனச் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் ராப் தலைமையிலான குழு, கூட்டமைப்புக்குத் தெளிவுபடுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.
அதேவேளை, இலங்கை அரசின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு பொறிமுறை சிறந்ததொரு உபாயமாக அமையவில்லை என அமெரிக்க அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்து தனது நிலைப்பாட்டை அமெரிக்க அதிகாரியிடம் தெளிவுபடுத்தியுள்ளது எனத் தெரியவருகிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பக்கச்சார்பற்ற சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று அவசியம் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரை அமெரிக்கா அவசரமாக இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழினப் படுகொலையாளனை விடுவிக்க தமிழ் மக்களும் ஆதரவு என்கிறார் மனோ!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் போராட்டத்தில் தமிழ் மக்கள் இணைந்து கொள்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா நிறுத்தப்பட்ட போது எதிர்ப்பை வெளியிட்ட விக்ரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் இன்று சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோருகின்றனர்.
சரத் பொன்சேகா ஓர் சாதாரண நபர் அல்ல. சட்ட ரீதியான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நாற்பது லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர். அந்தக் காலத்தில் உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதியாக ஆட்சியாளர்கள் சரத் பொன்சேகாவை வர்ணித்தனர் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் போராடுகிறார்கள்,ஆனால் மனோ கணேசனோ இன்னுமொரு குற்றவாளியை வெளியே கொண்டு வர தமிழ் மக்கள் ஆதரவு என்கிறார்.மனோ கணேசனின் போக்கு புரியாத புதிர்தான்.)

07 பிப்ரவரி 2012

அவுஸ்ரேலியாவில் தவறி விழுந்தார் கெகலிய!

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவுஸ்திரேலிய மெல்போன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேல்போனில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் உள்ள தனது மகனை சந்திக்கச் சென்ற வேளை, தவறுதலாக விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வே.பாலகுமார்,யோகி ஆகியோர் தடுப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான வே.பாலகுமாரன் மற்றும் யோ.யோகி ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் போர்முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர முன்னர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், நம்பத்தகுந்த - சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவர்கள் தடுப்பில் இருப்பதாக கூறியுள்ளார்.
தெற்கிலுள்ள இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில்- இறுக்கமான இராணுவப் பாதுகாப்பின் கீழ்- புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுடன் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பாலகுமாரன், யோகி, லோறன்ஸ் திலகர், பாப்பா, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட சுமார் 50 விடுதலைப் புலிகள் உடற்சோதனைகளின் பின்னர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைக் கண்டதாக நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்திருந்தனர்.
இவர்களின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எந்தத் தகவலையும் வழங்க மறுத்து வருகிறது.
இந்தநிலையிலேயே பாலகுமாரன், யோகி ஆகியோர் போர் முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர ஒரு ஆண்டுக்கு முன்னர் கூறியிருந்தார்.
எனினும் பாலகுமாரன், யோகி ஆகியோர் கடுமையான செயல்முறைகளின் மூலம் விசாரிக்கப்பட்ட பின்னர் நன்றாக கவனிக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
எனினும் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனரா என்பது பற்றியோ, அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றியோ தகவல் வெளியிட அந்த வட்டாரங்கள் மறுத்துள்ளன.
பாலகுமாரன் பற்றி `டெக்கன் குரோனிக்கல்` செய்தியாளர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் தவிர்த்திருந்த நிலையில் தான் `சிறிலங்கா` கார்டியன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கவிஞர் புதுவை இரத்தினதுரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலையிலும், லோறன்ஸ் திலகர் மனக்குழப்பத்தினால் தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையிலும் இருப்பதாகவும் `சிறிலங்கா கார்டியன்` தகவல் வெளியிட்டுள்ளது.