26 மார்ச் 2012

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரிசல்!

இந்தியாவின் தீர்மானம் இலங்கைக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடும் என அந்நாட்டு பிரதமர் மன்மோகன்சிங்கினால் வெளியிடப்பட்ட கருத்து, இலங்கைக்கு பாதகமாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் இந்த அறிவிப்பு, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராக இருந்த பல நாடுகளின் தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கத் தயாராகியிருந்த பல நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளதனை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

25 மார்ச் 2012

அமெரிக்க பிரேரணை பிழையான முன்னுதாரணம் என்கிறார் தமரா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை பிழையான முன்னுதாரணமாக கருத முடியும் என ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிட பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டமைப்பு மற்றும் கொள்கைகளுக்கு புறம்பானதாகும்.சில நாடுகளின் மறைமுக அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காக மனித உரிமை பேரவையை பகடை காயாக பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இறைமை, சுயாதீனத்தன்மை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்க தொடர்ச்சியாக இலங்கை போராடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமராவுக்கு சிங்களத்தின் நன்றிக்கடன்!

Kunanajakamசுவிஸில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.பிரதிநிதியுமான தமரா குணநாயகம் சிங்களவர்களுக்கெதிரான துரோகி என்றும் அவர் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏவுக்கு பணியாற்றி வருகின்றாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான அரசுசார்பு திவய்ன சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சில் ஜெனிவா தூதராக பணியாற்றிவரும் தமரா குணநாயகம் தொடர்பாகத் தற்போது சிறிலங்கா புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள திவய்ன, இந்தப் தமிழ் பெண் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்ட தினத்தன்று இரவு அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் இணைந்து, இந்தப் பெண் அதிகாரிக்கு ஆடம்பர விடுதி ஒன்றில் விருந்துபசாரம் ஒன்றை நடத்தியுள்ளனர் என்றும் திவய்ன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கள பேரினவாதிகளின் பக்கம் நின்று தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் தமரா குணநாயகம் போன்றவர்களுக்கு சிங்கள பேரினவாதம் வழங்கும் பரிசு இதுதான் என்பதை சிறிலங்கா பேரினவாதிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் சில தமிழர்கள் உணர்ந்து கொள்வதற்கு இது நல்ல பாடமாகும்.
இப்போது தமரா குணநாயகம் துரோகி ஆக்கப்பட்டிருக்கிறார். நாளை சிங்கள பேரினவாதிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் டக்ளஸ், கருணா, பிள்ளையான், போன்றவர்களுக்கும் இதேகதிதான் என்பதை அவர்கள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை என புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க அதிகாரியின் உரையை நிறுத்தியது சிறிலங்கா!

Michael J.Delaneyஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் சிறிலங்கா அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது.
தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், “தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் பொருளாதார அபிவிருத்தியின் பங்கு” என்ற தலைப்பில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார். ஆனால் திடீரென இறுதி நேரத்தல் அவரது உரை நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் மைக்கல் டிலானி வரும் 27ம் நாள் திட்டமிட்டபடி சிறிலங்காவுக்கு வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கான நுழைவிசைவு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும், கொழும்பில் இருதரப்பு வர்த்தக உறவுகள் தொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார் என்றும் சிறிலங்காவின் வர்த்தக தொழில்துறை அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
எனினும் இவரது உரை நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை லக்ஸ்மன் கதிர்காமர் நிலையம் தெளிவுபடுத்த மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் அமைந்துள்ள நேட்டோவின் தென்பிராந்திய கட்டளைப்பணியகத்தில் முன்னர் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய மைக்கல் டிலானி, அதன்பின்னரே தற்போதைய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியான இவர், உலகளவிலான அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவராவார். இவரது உரைக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் அனுமதி வழங்கியிருந்தார்.
ஆனால், வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும், சிறிலங்கா அதிபரின் ஆலோசகரான சஜின் வாஸ் குணவர்த்தனவே இவரது உரையை திடீரென நிறுத்துமாறு உத்தரவிட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
டிலானி ஒரு அமெரிக்கர் என்றும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கரை இங்கு பேசவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த உரை நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 மார்ச் 2012

பிரேரணை நிறைவேற்றம் பீரிசும் குதூகலத்தில்!

ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் அமெரிக்காவைவிட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அதிக சந்தோசத்தில் இருப்பதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கெதிராக அமெரிக்காக கொண்டுவந்த பிரேரணை, இந்தியாவின் ஆதரவுடன் ஒன்பது மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவரான மகிந்த சமரசிங்கவின் தலைமையின் கீழ், தன்னை ஜெனீவா அனுப்பியதால் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெரும் மனக்கவலையுடன் காணப்படுகிறார்.
மகிந்த ராஜபக்‌ஷ தன்னை மட்டம்தட்டுவதற்காக இவ்வாறு திட்டமிட்டு செயற்பட்டதாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்தார். அத்துடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோரது ஜெனீவா செயற்பாடுகளையும், இராஜதந்திர நகர்வுகளையும் ஆரம்பம் முதலே ஜீ.எல். பீரிஸ் விமர்சித்து வந்தார்.
முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிசுடன் இணைந்து தனக்கு ”ஜெனீவா தோல்வி பீரிஸ்” என்ற பட்டப்பெயரை சூட்டி, தன்னை மட்டம்தட்டியதற்கு இந்தத் தோல்வி சிறந்த அடியாகவும், பாடமாகவும் இருக்கும் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து சந்தோசப்பட்டதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக சர்வதேசம் தன்னையே ஏற்றுக்கொண்டுள்தாக தெரிவித்த அமைச்சர் ஜீ.எல், இந்தத் தோல்விக்கு தானே பதில்சொல்ல வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தப் பிரேரணைத் தோற்கடிக்கும் வழிமுறைகளைக் கண்டறிய இருந்த சிறந்தவொரு சந்தர்ப்பத்தை ஜனாதிபதி தடுத்துவிட்டதாகவும், அமெரிக்காவின் அழைப்பை ஏற்று தான் அங்கு சென்றிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது எனவும் கூறியுள்ளார். எனினும், எக்காரணம் கொண்டும் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி விதித்த கடுமையான உத்தரவே இந்தத் தோல்விக்கு வித்திட்டதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிரட்டல் குறித்து நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்திற்காக கொழும்பில் இருந்து வந்திருந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களை இலங்கைத் தூதுக் குழுவினர் மிரட்டியதாக ஐ நா மனித உரிமை பேரவையின் செயலாளர் நாயகம் நவி பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரம் ஜெனிவாவில் இருக்கும் இலங்கைத் தூதரின் அலுவலகத்திற்கு அநாமதேய மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும் அது குறித்து பொலிஸார் விசாரிப்பதாகவும் நவி பிள்ளையின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரை இலங்கையில் அமைச்சர் ஒருவரும் அரசு ஊடகங்களும் மிரட்டுவதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் புகார்களை பேரவையின் தலைவர் நவி பிள்ளை எப்படிப் பார்க்கிறார் என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் நாயகம் நவி பிள்ளையின் பேச்சாளர் ரூபர்ட் கோல் வில்லிடம் பீபீசியின் சார்பில் கேட்கப்பட்டபோது,
“இது போன்ற ஒன்றை நாங்கள், ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலின் சமீபத்திய வரலாற்றில் கண்டதேயில்லை. இந்த அளவுக்கு அச்சுறுத்தல்கள்…. அரசாங்க பிரதிநிதிக்குழுவின் அளவு உட்பட, அதில் 71 பேர் இருந்தார்கள். இதை விட மிகவும் சங்கடமான விஷயம், இலங்கைக்குள்ளேயே நடத்தப்பட்டுவரும் ஒரு அவதூறு பிரச்சாரம்தான்.
பத்திரிகைகள், இணைய தளங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் வரை பட்டியலிடலாம். சில தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளின் வாசகத் தொகுப்பை நான் படித்துப் பார்த்தேன். அவைகள் உண்மையில் அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றன” என்றார் அவர்.
அமைச்சர் மெர்வின் சில்வா, மனித உரிமை ஆர்வலர்கள் பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ போன்றோரைப் பற்றி குறிப்பிட்ட கருத்துக்களை நீங்கள் கேட்டீர்களா அது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது,
“சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அதைப் பார்த்தேன். ஆனால் இந்த குறிப்பிட்ட சம்பவம், இலங்கையில் நீண்ட காலமாக தொடர்ந்து அரச அதிகாரிகளாலும், செய்தியாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாலும், எழுதப்பட்டு வரும், மிக மோசமான அருவருக்கத்தக்க கட்டுரைகளின் தொடர்ச்சியாகவே தெரிகிறது என்றார்.
“செய்தியாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் என்று வேண்டுமென்றேதான் சொல்கிறேன் ஏனென்றால் இங்கே ஐ.நா மன்ற மனித உரிமை அமைப்புகளில் இருக்கும் நாம், பத்திரிகை சுதந்திரத்தை மிகவும் பலமாக ஆதரிப்பவர்கள், அது வேண்டும் என்று நம்புபவர்கள் .
ஆனால் இலங்கையில் எழுதப்பட்டு வரும் இது போன்ற கட்டுரைகளில் பெரும்பாலானவை, வன்முறையைத் தூண்டும் வகையிலானவை. இதன் விளைவுகளை நீங்கள் அதன் வாசகர்கள் எழுதியிருக்கும் பின்னோட்டத்திலேயே பார்க்கலாம். சிலர், இந்த மனித உரிமை ஆர்வலர்களின் வீடுகளைக் கொளுத்தவேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். சிலர் அவர்கள் கொல்லப்படவேண்டுமென்று கூட நேரடியாகவே கூறுகிறார்கள்.” என்றார் ஐ நா அதிகாரி.
இந்த புகார்களை ஐநா மனித உரிமைக் கவுன்சில் கண்காணிப்பதாகவும் அவர் கூறினார். தமது கவலைகள் குறித்து இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐ நா அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன் என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மேர்வின் சில்வா அச்சுறுத்தல் விடுத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வா, இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்களின் கைகால்களை உடைப்பேன் என்று எச்சரித்துள்ளார்.
சுனந்த தேசப்பிரிய, நிமால் பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரைப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லி அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.
மனித உரிமை விவகாரத்தில் இலங்கைக்கு எதிராகக் குரல்கொடுத்திருந்த பத்திரிகையாளர் போத்தள ஜயந்தவை இலங்கையை விட்டு தானே விரட்டியடித்ததாகவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

23 மார்ச் 2012

ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!

தமிழ் வானொலி அறிவிப்புத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.
பழம் பெரும் அறிவிப்பாளரான இவர் காலமாகிய செய்தி கேட்டு இவரது ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். ராஜேஸ்வரி சண்முகம் என்ற இந்தப் பெயர் இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் நன்றாக பரிச்சயமானது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சுமார் அரை நூற்றாண்டுகளாகப் பணியாற்றி நேயர்களை தன் அன்புக் குரலால் கட்டிப் போட்டவர். வானொலிக் குயில் என்றே இவர் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுவார். இவரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்களை பின்னர் அறியத் தருவதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். வானொலித் துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

மகிந்தவிற்கு ஜெனீவாவில் விழுந்த முதல் அடி!

ஜெனீவா மாநாட்டில் நேற்று (22) இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை, 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இலங்கைக்கு கிடைத்த இந்தத் தோல்வி ராஜபக்‌ஷவின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு விழுந்த முதல் அடி என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த பிரேரணைக்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட வேண்டும். அதன்படி பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன மக்கள் சேவை ஆணைக்குழு, காணாமல் போகும் சம்பவங்களை விசாரிப்பதற்கான விசேட ஆணைக்குழு ஆகியவற்றை நியமிக்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, இணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புதல், வடக்கிலுள்ள இராணுவ ஆட்சியை தளர்த்துதல், பொலிஸ்துறையை, பாதுகாப்பு அமைச்சிலிருந்து வேறுபடுத்தல் உட்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். எனினும், இவற்றைச் செய்தால் ராஜபக்‌ஷ நிர்வாகம் செயலிழந்துபோகக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்ததம் முன்னெடுக்கப்பட்டதைப் போல் ஜெனீவா பிரேரணையை எதிர்கொண்ட ராஜபக்‌ஷ அரசாங்கம், ஆரம்பம் முதலே அதனைத் தோற்கடிப்பதற்கு முயற்சித்தது.மேற்குலகத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறக்கப்பட்டு பிழையாக வழிநடத்தப்பட்டனர். இவ்வாறு வீதியில் இறக்கப்பட்ட சக்தி தற்போது தமிழ் மக்களுக்கு எதிராகவும் திருப்பிவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படுதை எதிர்ப்பதற்காக வீதியில் இறக்கப்பட்ட மக்கள் திசைதிருப்பபட்டுள்ளனர்.இவ்வாறு மக்களை வீதியில் இறக்கி தற்போதைய அரசாங்கம் இனவாத சக்தியை வலுப்படுத்திக்கொண்டுள்ளது. அத்துடன், தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்குவதற்கு இந்த சக்தி இடளிக்கும் என்ற நம்பிக்கையும் அற்றுப் போயுள்ளது.
பல்வேறு கருத்துக்கள், கொள்கைகளைக் கொண்ட கட்சிகளையும், பங்காளிகளை இணைந்துகொண்டுள்ள மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், அவர்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி ராஜபக்‌ஷ நிர்வாகத்தை வலுப்படுத்தும் அரசியல் செயற்பாட்டையே இதுவரை முன்னெடுத்துவந்தது. எனினும், ஜெனீவா பிரேரணையானது ராஜபக்‌ஷ நிர்வாகத்தை வலுப்படுத்தும் அரசியல் செயற்பாட்டிற்கு விழுந்த அடியாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஜெனீவா பிரேரணையை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளினாலோ, நடைமுறைப்படுத்தத் தவறினாலோ எதிர்காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாக பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

22 மார்ச் 2012

சிறிலங்காவை தோற்கடித்தது அமெரிக்கா!


இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை ஐக்கிய அமெரிக்கா சற்று முன்னர் ஐநா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் முன்வைத்துள்ளதுடன், அது தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெற்றதில் அமெரிக்காவின் தீர்மானம் வாக்களிப்பில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நாடுகளில் 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட்ட 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்திக்கின்றன.
கியூபா, சீனா, ஈக்குவடோர், ரஷ்யா, உருகுவே, கிரிஸ்கிதான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மாலைதீவு, பங்களாதேஷ், நைஜிரியா, உகண்டா உட்பட்ட 15 நாடுகளே எதிர்த்து வாக்களித்திருக்கின்றன.
இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றது.

கேணல் ரமேசை கொன்று எரியூட்டியது சிங்களப்படை!

விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருக்கின்றன.
அவரிடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொள்ளும் காணொளிகள் வெளியாகிய நிலையில் தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் சிறீலங்கா இராணுவத்தினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா (18.08.1964) என ரமேசின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
காணொளியில் சாதாரண உடையில் இருந்த ரமேசிடம் இராணுவ உடைகளை அணுயுமாறு பலவந்தப்படுத்திய சிறீலங்கா படையினர் அதன் பின்னர் அவரை படுகொலை செய்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.

21 மார்ச் 2012

இறுதித் தீர்மானம் இன்று,சிறிலங்கா கலக்கம்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பெரும்பாலும் அமெரிக்கா இன்று சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜெனிவாவில் குவிந்துள்ள சிறிலங்காவின் 70 இற்கும் அதிகமான இராஜதந்திரிகள் கலக்கத்துடன் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வரைபு ஏற்கனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது.
எனினும் அதில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், இறுதித் தீர்மானம் இன்று பெரும்பாலும் சபையின் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்படாது போனால் நாளைய கூட்டத்தில் முன்வைக்கப்படும்.
கூட்டத்தொடரின் இறுதிநாளான வரும் வெள்ளிக்கிழமை இந்தத் தீர்மானம் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இந்தத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடும் என்று ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எந்த நிலையை எதிர்கொள்வதற்கும் தாம் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ்,தி.மு.க.துரோகங்களை மன்னிக்க முடியாது.

ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகச் செயலை மறைகவே மத்திய அரசு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்துள்ளது. எனினும் மத்திய அரசையோ, அதில் அங்கம் வகிக்கும் தி.மு.கவையோ மன்னிக்க முடியாது என ம.தி.மு.க. பொதுச்யெலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்காகவே ஐ.நா. சபையின் மனிதவுரிமை பேரவைக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆதரிக்க முன்வந்துள்ளது. இது சந்தர்ப்பவாதம்.
சிறிலங்கா போர்க்குற்றவாளி என்றால், இந்தியா, அந்தப் போர் குற்றத்துக்கு உதவியாக இருந்துள்ளது. எனவே, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசையும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த தி.மு.க.வுக்கும் இதில் பங்கு உண்டு. எனவே அவர்கள் தற்போது சிறிலங்காவை எதிர்த்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது. என்றார்.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது, உண்ணாவிரதம் என்று கூறினார்களே தவிர, மத்திய ஆட்சியில் இருந்து இராஜினாமா செய்கிறோம் என்பது போன்ற எந்த முடிவையும் எடுக்காமல் தி.மு.க. சுய நலத்துடன் நடந்து கொண்டதாக சுட்டிகாட்டிய வை.கோ,
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் இவ்விவகாரத்தில் முழு பரிகாரமாக அமையும் என்று, தான் நம்பவில்லை என்றார்.

20 மார்ச் 2012

ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய சுவிசில் கைது!

ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவை சுவிட்ஸர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுனந்த தேசப்பிரிய சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் அமைப்பாளராக கடமையாற்றி வந்தார். தற்போது வெளிநாடொன்றில் அடைக்கலம் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட இலங்கையர்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்த காரணத்தால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது எனத் தெரிவித்து ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை, சுனந்த ரகசியமாக வீடியோ பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்தே சுனந்த தேசப்பிரயவை சுவிட்ஸர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஜெனீவாவிலும் சிங்களக் காடையர் அட்டகாசம்!

seithy.com gallery news
ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தியுள்ளனர்.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்.
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் குறித்து, இந்த உப மாநாட்டினை பல அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட்டாக நடத்தியிருந்தன. அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோர் இந்த உப மாநாட்டில் பங்கெடுத்திருந்தனர்.
இதில் குறிப்பாக சிறிலங்காவில் கடந்த ஓரு ஆண்டுகாலமாக கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த தனது கணவனைத் தேடிவருவரும் சிங்களப் பெண்ணொருவர் கலந்து கொண்டு நிலைமைகளை விபரித்திருந்தார்.
மேலும் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறிலங்காவின் அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், பார்வையாளர்களாக பங்கெடுத்திருந்த 15க்கு மேற்பட்ட சிங்களக் காடையர்கள், எழுந்து கூச்சல் போடத் தொடங்கினர்.
ஐ.நாவுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் மிக மோசமான முறையில், தகாத வார்தைகளை பிரயோகித்தனர். அடாவடித்தனமான முறையில் நடந்து கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தும் பாங்கில் செயற்பட்டனர்.
சிங்களக்காடையர்களின் இந்த நடவடிக்கையினை பங்கெடுத்திருந்த பல மேற்குலக நாட்டவர்கள் வன்மையாக கண்டித்தனர். இது சிறிலங்காவல்ல இப்படி அடாவடித்தனத்தையும், அச்சுறுத்தலையும் விடுப்பதற்கு. இது ஐ.நா மனித உரிமைச் சபை. இங்கு பண்பான முறையில், மரியாதையுடன் நடக்க வேண்டுமென, சிங்களக் காடையர்களுக்கு மேற்குலக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் சிங்களக்காடையர்கள் கத்தல், கூச்சலென அடாவடித்தனத்தை மேற்கொண்டனர். ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள், சிங்களக் காடையர்களின் இச் செயலை வன்மையாக கண்டித்ததோடு, ஐ.நா காவல்துறையினா அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டது.
குறித்த இந்த சிங்களக் காடையர்களுடன், சமீபத்தில் சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டிருந்த, மகிந்தவின் வலதுகரங்களான இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களும் இங்கு இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது.
மறுபுறம், ஐ.நா மனித உரிமைச் சபைக்கு வெளியே, ஐ.நா முன்றலில் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக ஆர்பாட்டமொன்றை சிங்களர்கள் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்தை ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட, தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் மீது அச்சுறுத்தி, தங்களது அடாவடித்தன்தை சிங்களக்காடையர்கள் காட்டியுள்ளனர்.
நாதம் ஊடகசேவை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

19 மார்ச் 2012

இன்று ஜெனிவாவில் சனல் 4 ஆவணப்படம்.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட சிறிலங்கா போர்க்குற்றம் தொடர்பான ஆவணப்படம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இன்று காண்பிக்கப்படவுள்ளது. இதற்குப் போட்டியாக இலங்கை அரசு தயாரித்துள்ள "விந்தையான முன்னேற்றம், முரண்பாடு, சமாதானம், அபிவிருத்தி மற்றும் வளமான வாழ்க்கை" எனும் தலைப்பில் இலங்கை தூதுக்குழுவினர் விவரணப் படமொன்றை நாளை காண்பிக்கவுள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இன்று திங்கட்கிழமை ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மகாநாட்டின் போது ஏக காலத்தில் இன்னுமொரு மண்டபத்தில் காண்பிக்கவுள்ள தொலைக்காட்சி விவரணப் படங்களிலுள்ள தகவல்களை மறுதலிக்கும் முகமாக, இலங்கை தூதுக் குழுவினர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை மற்றுமொரு நிகழ்ச்சியை ஜெனீவா ஐ.நா. சபை கட்டிடத்தில் இடம்பெறவிருக்கின்றது. இதற்கு சகல அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளையும் சமுகமளிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைக்காட்சி திரைச்சித்திரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பே உலகின் முன்னிலையில் உள்ள ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும் அதற்கு வெகு தூரத்தில் இரண்டாவது இடத்தில் அல்குவைதா அமைப்பும் இருக்கிறதென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் மனித உரிமைகள் தூதுவரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர்களான பைசர் முஸ்தபா, நியோமல் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜீன்வாஸ் குணவர்தன, ரஜீவ் விஜேசிங்க, மட்டக்களப்பு மாவட் டத்தின் இணைப்பாளர் தம்பிமுத்து, ஜெனீவா ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் ஆகியோரும் பங்குகொள்கின்றார்கள்.

18 மார்ச் 2012

“நாயும் குதிரைக்குட்டியும்"சிறிலங்காவை கடிந்த ஷ்பிளினர்!

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் சிறிலங்கா குழுவுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஐ.நாவுக்கான பிரதிநிதி பீற்றர் ஸ்பிளினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா தரப்பு பக்கநிகழ்வை வழங்கிய ஜாவிட் யூசுப், ராஜீவ விஜேசிங்க, ஜீவன் தியாகராஜா ஆகியோரை, “நாயும் குதிரைக்குட்டியும் விளையாட்டு“ விளையாடுவதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஸ்பிளினர் குறிப்பிட்டார்.
இதற்கு சிறிலங்கா தரப்பு கோபத்துடன் பதிலளித்தது.
ஸ்பிளினரின் கருத்தை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட ஜீவன் தியாகராஜா, பக்கநிகழ்வு யாரையும் இகழ்வதற்கானது அல்ல என்றும் ஸ்பிளினர் தவறான முகவருக்கு பணியாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இருதரப்புக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
அதேவேளை, ஊடக சுதந்திரம், மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக சிறிலங்கா தரப்பு வெளியிட்ட கருத்துக்களை ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, மற்றும் கொழும்பைச் சேர்ந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளான பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்ணான்டோ, சுனிலா அபயசேகர போன்றோரும் வன்மையாக மறுத்ததால் பல சந்தர்ப்பங்களில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

சனல் 4 ஆவணப்படத்தினால் பதற்றமான இராணுவத்தரப்பு!

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களை வெளிப்படுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி புதியதொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு வெளியான இந்த வீடியோவை உடனடியாகவே அரசாங்கம் நிராகரித்துள்ளது.ஆனால் இந்த வீடியோ அரச, இராணுவ உயர் மட்டங்களுக்குத் தெரிந்தே போர்க்குற்றங்கள் நடந்தன என்று அடித்துச் சொல்கிறது.
குறிப்பாக பாதுகாப்பு வலயங்கள் மீதான ஷெல் தாக்குதல்கள் குறித்து அரச தரப்பு நன்றாகவே அறிந்திருந்தது என்கிறது இந்த ஆவணப்படம்.இதற்குச் சான்றாக ஐ.நா பணியாளர்களுடன் தொடர்புடைய சம்பவம் ஒன்றையும் சனல்4 ஆதாரப்படுத்தியுள்ளது. அதைவிட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சூழல் குறித்தும் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, அது ஒரு திட்டமிட்ட நீதிக்குப்புறம்பான படுகொலை என்று கூறியுள்ளது சனல் 4.
இந்த ஆவணப்படத்தை வெளியிட முன்னரே, அதன் உள்ளடக்கம் பற்றிய சில கட்டுரைகள் பிரித்தானிய நாளேடுகளில் வெளியாகின.சனல் 4 ஆவணப்படத்தில் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விவகாரம் இடம்பெறுவதாக முதல் முறையாக கடந்த 11ஆம் திகதி அதிகாலையில் தான் பிரிட்டனின் “தி ரெலிகிராப்“ செய்தி வெளியிட்டது.
அதற்கு அரசதரப்பில் இருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.பாலச்சந்திரன் கொலை செய்யப்படவில்லை என்றோ, அதில் படையினர் தொடர்புபடவில்லை என்றால், அவர் எத்தகைய சூழலில் கொல்லப்பட்டார் என்ற விளக்கத்தையோ அரசதரப்பு இதுவரை முறைப்படியாக வெளியிடவில்லை. ஆனால், 11ஆம் திகதி பிரிட்டன் நேரப்படி மாலை 4.38 மணியளவில் “டெய்லி மெயில்“ நாளிதழில் ஒரு கட்டுரை வெளியானது.
அதில் சனல் 4 வீடியோவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் தொடர்பான ஆய்வும் இடம்பெறும் என்று கூறப்பட்டிருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்த பின்னர் வெளியிடப்பட்ட படங்களில் காணப்படும் முரண்பாடுகள் குறித்தும், அவரது தலையில் ஏற்பட்டுள்ள பாரிய காயம் குறித்தும் சனல் 4 ஆவணப்படம் ஆராயும் என்றும் அந்தக் கட்டுரை கூறியது. இந்தக் கட்டுரை பிரிட்டனில் வெளியானபோது, இலங்கையில் நேரம் இரவு 10 மணியாகி விட்டது.
மறுநாள் 12ஆம் திகதி, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இந்தியாவின் தென் பிராந்திய இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் அஜய் சிங்கை இராணுவத் தலைமையத்தில் சந்தித்து விட்டு முல்லைத்தீவுக்குப் பறந்தார். முல்லைத்தீவு படைத் தலைமையகம், அதன் கீழ் ஒட்டுசுட்டானில் உள்ள 64ஆவது டிவிஷன் தலைமையகம், புதுக்குடியிருப்பில் உள்ள 68ஆவது டிவிஷன் தலைமையகம் ஆகியவற்றில் படையினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன் இறுதிப்போர் நடந்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். முல்லைத்தீவில் படையினர் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி பிரபாகரனின் மரணம் தொடர்பாக சனல் 4 ஒரு வீடியோவை வெளியிடப் போவதாக அறிவதாகவும், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இராணுவம் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.அங்கு அவர், “உண்மையை உலகுக்கு காட்ட இராணுவம் விரும்புகிறது. எனவே இறுதிப்போர் குறித்து முறையான, ஒத்திசைவான ஆதாரங்களின் அடிப்படையில் ஆவணப்படம் ஒன்றை நாம் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த உண்மைத் தகவல்களை இந்த ஆவணப்படம் கொண்டிருக்கும்.அப்போது அங்கிருந்தவர்களின் செவ்விகளும் அதில் இடம்பெறும். இதன் மூலம், நந்திக்கடலில் உண்மையில் என்ன நடந்தது என்பதை உலகம் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டும். 53ஆவது டிவிஷன் இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதாகவும்“ அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பற்றிய காட்சிகள் குறித்து செய்திகள் வெளியான போது அதை முறியடிப்பது குறித்து இராணுவத்தரப்பு எதையும் கூறவில்லை. ஆனால், பிரபாகரன் விவகாரம் பற்றி அலசப் போவதாகத் தகவல் வந்ததும், இராணுவத் தளபதி சில மணி நேரங்களிலேயே ஒரு பதில் ஆவணப்படம் தயாரிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த விடயத்தில் மட்டும் அவர் ஏன் இத்தனை அவசரப்பட்டார் என்ற கேள்வி இப்போது உச்சம் பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடிக்கின்றன. இதன் காரணமாக, பிரபாகரன் இன்னம் உயிருடன் இருப்பதாக நம்பும் ஒரு தரப்பினரும் உள்ளனர். பிரபாகரனின் மரணம் பற்றி திடீரென அறிவிக்கப்பட்ட விதம், அவரது சடலத்தின் தோற்றங்களின் மாறுபாடு, தலையில் உள்ள பாரிய காயம், அவரது மரணம் எப்போது நிகழ்ந்தது என்று இன்னம் உறுதியாக அறிவிக்கப்படாதது என்று பல கேள்விகளுக்கான தீர்க்கமான பதில் இன்னம் இல்லை.
இந்தநிலையில், இராணுவத் தரப்பு பிரபாகரனின் மரணம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வீடியோவை தயாரிக்கின்ற நிலையில் அது சர்ச்சைக்குரிய விவகாரமாகியுள்ளது என்பது உறுதி.ஆனால், சனல் 4 ஆவணப்படத்தில் இந்த விவகாரம் குறித்து அதிகம் அலசப்படவில்லை. ஆனால் சனல் 4 ஆவணப்படம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் இராணுவத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிகிறது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய திடீரென முல்லைத்தீவுக்குச் சென்றதும், பிரபாகரனின் மரணம் பற்றிய ஆவணப்படத்தை தயாரிக்கும் அறிவிப்பை 68ஆவது டிவிஷன் படையினர் மத்தியில் வெளியிட்டதற்கும் தொடர்புகள் உள்ளன. 68ஆவது டிவிஷனில் இடம்பெற்றிருந்த 4ஆவது விஜயபா காலாட்படை பற்றாலியனே, பிரபாகரனின் சடலத்தை நந்திக்கடலில் இருந்து மீட்டதாக அறிவிக்கப்பட்டது.68ஆவது டிவிஷன் படையினரின் தாக்குதலிலேயே அவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அந்த மரணம் பற்றி சர்ச்சைகள் தோன்றும் போது அதிலுள்ள படையினர் குழப்பமடைவது இயல்பு.
இத்தகைய நெருக்கடி மிக்க சூழலில், இராணுவத்தளபதி வன்னிக்கு மேற்கொண்ட பயணம் படையினரின் குழப்பத்தைத் தீர்ப்பதற்குத் தான். அவரது உரையில், படையினரை ஜனாதிபதியோ, பாதுகாப்புச்செயலரோ கைவிடமாட்டார்கள் என்ற உறுதியான தொனியையும் அவதானிக்க முடிகிறது. “போரின் போது மனித உரிமைகளை மீறியுள்ளதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், ஜனாதிபதியும், பாதுகாப்புச்செயலரும் நாம் எவ்வாறு பணியாற்றினோம் என்பதை நன்கு அறிவார்கள்.
மிகச்சிறிய நாடான எம்மால், பயங்கரவாதத்தை தோற்கடிக்க டியும் என்று சர்வதேசம் நம்பவில்லை.நாம் பெற்ற வெற்றியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் இராணுவத்துக்கும், அரசுக்கும் கெட்டபெயரை ஏற்படுத்த ஜெனீவாவில் கூட்டாக வேலை செய்கிறார்கள். அரசாங்கத்தை தூக்கியெறிய முனைகிறார்கள்.
போரில் என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். பொய்யான குற்றச்சாட்டுகளின் பின்னால் உள்ள உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை அனைவருக்கும் உள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவினால், கூறப்பட்டுள்ள விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்திடம் அத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க எவரும் முன்வரவில்லை.
சாவகச்சேரியில் 3 படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்களுடன் உள்ள நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய சம்பவமானாலும் அது ஒட்டுமொத்த இராணுவத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.“ என்றும் இராணுவத்தளபதி கூறியிருந்தார். இராணுவத்தளபதி சந்தித்த, 68ஆவது டிவிஷனும், 64ஆவது டிவிஷனும் இறுதிப்போரில் பங்கெடுத்தவை.
அதுபோலவே, மறுநாள் மன்னாரில் உள்ள 54ஆவது டிவிஷனுக்கும் சென்று இராணுவத்தினருடன் பேசியுள்ளார் லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய.இந்த டிவிஷன் ஆனையிறவு வீழ்ச்சியுடன் கைவிடப்பட்டு, அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டதாயினும், இதிலுள்ள படையினர் வன்னிப் போரில் பங்கேற்றவர்கள்.
ஏற்கனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானபோதும், அதன் பரிந்துரைகளால் படையினர் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக இதுபோன்ற பயணத்தை இராணுவத்தளபதி மேற்கொண்டிருந்தார்.போர்க்குற்றங்களுக்காக தாம் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் படையினர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, அரசாங்கம் தம்மைக் கைவிட்டு விடுமோ என்ற எண்ணம் அவர்களிடம் வந்து விடக்கூடாது என்று கவனமாக இருக்கிறது இராணுவத் தலைமை.ஜெனீவா தீர்மானம், சனல் 4 குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில் இராணுவத்தரப்பு அவசரப்பட்டு நிதானமிழப்பதையும் காண முடிகிறது. பரபரப்பாக பதற்றமாக இராணுவத்தரப்பு எடுக்கும் நடவடிக்கைள் பல சமயங்களில் அதன் பலவீனத்தை வெளிப்படுத்தி விடுகின்றன.
(சுபத்திரா-வீரகேசரி)

17 மார்ச் 2012

குற்றவாளிகளிடமே நீதியின் விசாரணை! தீர்வு எவ்வாறு கிடைக்கும்?

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத் தொடரில் சிறீலங்கா தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானம், அந்நாட்டைக் கண்டிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டதல்ல என்றும் இந்த விவகாரம் குறித்து எல்லாப் பிராந்தியங்களின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளையடுத்துப் பயனுள்ள பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன.
அதன்படி பல உறுப்பு நாடுகளின் விவாதங்களுக்குப் பின்னர் ஒரு நியாயமான சரியான தீர்மானத்தையே தாங்கள் முன்வைத்துள்ளதாகவும் ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சம்பர்லெய்ன் டொனாகோ கூட்டத் தொடரில் உரையாற்றியபோது விளக்கமளித்துள்ளார்.
மூதூர், சம்பூர்… என சிங்கள இராணுவம் முன்னேறிய பகுதி எங்கும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளையும், வன்முறைகளையும் தொடர்ந்தபடியேதான் நகர்ந்தன. இதில் சர்வதேசத்தின் தொண்டு நிறுவனமாக பட்டினிக்கு எதிரான அமைப்பின் 15 பிரதிநிதிகள் ஒன்றாக படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் கிழக்கு மாகாணத்திலேயே தான் நிகழ்ந்துள்ளது.
ஐந்து மாணவர்களின் கொடூரப் படுகொலையும் கிழக்கிலேயேதான் நிகழ்ந்தது. ஆனால், அத்தனையையும் மறைத்து, கிழக்கின் நிலைமையை கருத்தில் எடுக்காமல் வடக்கில் மட்டுமே இராணுவத்தினரின் அத்துமீறல்கள் நிகழ்ந்ததுபோலவும் அங்கிருந்து இராணுவம் விலகவேண்டும் என்பதுபோலவும் அமைந்துள்ள அறிக்கையானது, தமிழரின் தாயகத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதையே காட்டுகின்றது.
அமெரிக்காவின் இந்தப் பிரேரணை எதிர்பார்த்தபடி வலுவானதாக இல்லாவிட்டாலும், யானைப் பசிக்கு சோளப்பொரி போன்று இருந்தாலும், அமெரிக்கா இதனை மனித உரிமைகள் அமைப்பில் கொண்டுவந்துள்ளமையை இரண்டு விடயங்களில் வரவேற்கலாம்.
ஒன்று இந்த அறிக்கையைத் தாக்கல் செய்ததன் ஊடாக சர்வதேசச் சட்டங்களை, போர் மரபுகளை, மனித உரிமைகளை மீறியே செயல்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, சிறீலங்காவை ஒரு குற்றவாளியாக சர்வதேசத்தின் முன் அடையாளப்படுத்தியிருக்கின்றது.
டப்ளின் தீர்ப்பாய அறிக்கை, ஐ.நா. நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை என இறுதிப்போரில் நிகழ்ந்த மனித இனத்திற்கு எதிரான குற்றங்களைக் கண்டறிந்த இரண்டு பெரும் அமைப்புக்களின் அறிக்கைகள் உள்ளபோதும், அவை இரண்டையும் ஒதுக்கிவிட்டு, இன அழிப்புப் போரில் முப்படைகளையும் தலைமை தாங்கி வழிநடத்திய சிறீலங்காவின் ‘ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக தீர்வைப்பெற அமெரிக்கா முயன்றிருக்கின்றது.
அதாவது, குற்றவாளிகளே தாங்கள் புரிந்த குற்றங்களை கண்டறிந்து, அதற்கான தண்டனையை அல்லது தீர்ப்பை வழங்கிக்கொள்ளும் விசித்திர உரிமை உலக வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் போரில் நிகழ்ந்த குற்றங்களை நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக குறைந்தளவேனும் கண்டறிந்துள்ள சிறீலங்கா, அந்தக் குற்றங்களுக்கான தீர்வை வழங்கவேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதாவது, நீங்களே கண்டறிந்த குற்றங்களுக்கு நீங்களே தீர்வை வழங்குங்கள் என்பதுதான் அமெரிக்காவின் பிரேரணையின் கோரிக்கையாக இருக்கின்றது. அதற்காக ஒரு ஆண்டு கால அவகாசத்தையும் அது சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது. ஓராண்டு காலம் என்பது சிறீலங்காவை தமது வழிக்குக் கொண்டுவர அமெரிக்கா வைத்துள்ள ஒரு ‘செக்’ என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்ற விடயம் ஒருபுறம் இருக்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுக்களை நடைமுறைப்படுத்தக்கூடாது என சிங்கள ஆளும்கட்சியில் உள்ள பேரினவாதக் கட்சிகளே போர்க்கொடி தூக்கிவிட்டதால் மகிந்த அரசினால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.
எனவே, தான் விசாரித்துக் கண்டறிந்த குற்றங்களுக்கே தீர்வை வழங்கமுடியாத நிலையிலிருக்கும் சிறீலங்கா, டப்ளின் தீர்ப்பாய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயத்தையோ அல்லது ஐ.நா. நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையோ ஏற்று தீர்ப்பை வழங்கிவிடமாட்டாது.
எனவே, சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலையை எதிர்காலத்தில் சர்வதேசம் புரிந்துகொள்வதற்கும், தமிழர்கள் தங்களது நீதியான போராட்டத்தைத் தொடர்வதற்கும் இந்தப் பிரேரணை வழிவகுக்கும். இது அமெரிக்காவின் பிரேரணையில் உள்ள இன்னொரு வரவேற்றகத்தக்க விடயமாகப் பார்க்கமுடியும்.
நன்றி : ஈழமுரசு

16 மார்ச் 2012

'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' போலியானது"-கோத்தபாய.

சனல்4 தொலைக்காடசியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சிறீலங்காவின் போர்க்குற்ற காணொளியான 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' போலியானது என பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஐபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், திட்டமிட்ட முறையில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதன் போலித் தன்மையை நிரூபிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு சில ஆவணப்படங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகத் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறீலங்கா படை வீரர்கள் பரிசுத்தமானவர்கள், எந்தவித போர்க்குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மாறாக விடுதலைப் புலிகளே போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். மூன்று தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சனல்4 ஊடகம் சிறீலங்காவிற்கு எதிராக செயற்படும் நோக்கில் போலியான தகவல்களை ஆதரமின்றி இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

11 மார்ச் 2012

ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா.


ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் முழுமூச்சுடன் செயற்படும் அமெரிக்கா - ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந் நடவடிக்கைக்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலருமான ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா. இதற்கமைய தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிரேரணையை ஜெனிவாவில் நிறைவேற்ற ஜிம்மி கார்ட்டர் முழுவீச்சில் செயற்பட்டு வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
"எமது முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர் ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டவராவார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதால் இதுவரை பல நாடுகள் எமது பிரேரணையை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளன.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராவார். உலகளாவியரீதியில் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு அவர் பெரிதும் உதவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராளி என்று வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலாவை தலைமையாகக் கொண்ட "த எல்டர்ஸ்" அமைப்பு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் ஆதரிக்க வேண்டுமென கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் ஜிம்மி கார்ட்டரும் ஒரு முக்கியமான உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

04 மார்ச் 2012

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் போர்க் குற்ற காணொளி.

இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு வீடியோ ஒன்றை ஒளிபரப்பு செய்து உள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென அமெரிக்கா போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்ற சூழலில் இவ்வீடியோ ஒளிபரப்பப்பட்டு உள்ளது.