28 பிப்ரவரி 2013

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கடுமையானதாகவே இருக்கும்!

Denise-Rollinsஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இம்முறை அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம், கடுமையானதாகவே இருக்கும் என்று அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் ஆசியப் பிரிவின் மூத்த பிரதி உதவி நிர்வாகியான டெனிஸ் றோலின்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,
“பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குப் பதிலளிக்குமாறு தனியே அமெரிக்கா மட்டும் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
இதே மனோநிலையில் தான் பலநாடுகள் இருக்கின்றன.
சிறிலங்கா அரசுக்கு எதிரான கிளரச்சியை ஏற்படுத்த அமெரிக்கா முனையவில்லை.
எந்த இரகசிய நடவடிக்கையிலும் அமெரிக்கா இங்கு ஈடுபடவில்லை.
அவ்வாறு சந்தேகம் கொள்பவர்கள், தற்போதைய திட்டப் பகுதிகளை பார்வையிட முடியும்.
அமெரிக்காவின் உதவித் திட்டங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. இதில் சிறிலங்கா அரசு தொடர்புபடவில்லை.
இதே விதிமுறைதான், ஏனைய நாடுகளிலும் அமெரிக்க உதவித் திட்டங்களின் போது கடைப்பிடிக்கப்படுகிறது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிங்களவராக பிறந்தமைக்கு வெட்கப்படுகிறேன்;-நிமல்கா பெர்னாண்டோ

News Serviceஇலங்கையில் நடந்த மனித உரிமைமீறலுக்கும் யுத்தக்குற்றத்திற்கும் எந்த தீர்மானத்தை கொண்டு வந்தாலும் போதாது என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டிற்கு எதிரான சர்வேச மக்கள் இயகத்தின் தலைவருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிங்களவராக பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நிமல்கா பெர்னாண்டோ
யுத்தக்குற்றத்திற்கு தண்டனை வேண்டும்
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறலிலும் யுத்தக்குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளது. இதனை நிருபிக்கும் வகையில் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டமை தொடர்பான படங்கள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்துள்ள நிமல்கா பெர்னாண்டோ யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழிர்களை மனிதாபிமான நடவடிக்கையில் கொன்றதாக அரசு தட்டிக்கழிக்கிறது என்றார். இதை எல்லாம் சிங்கள ஊடகங்கள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு கீழ் கட்டுப்பட்டு வெளியிடமுடியாமல் இருக்கின்றன. இங்குதான் சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள் என்பதை உணர்த்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார் நிமல்கா பெர்னாண்டோ. உயிருடன் ஒரு சிறுவனை பிடித்துக்கொன்றமைக்கு சாட்சியங்கள் உண்டு. சனல் 4 வீடியோ அனைத்துமே மனித உரிமைகள் மீறல்களுக்கு சாட்சிகளாக அமையும். இந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் அவர். அமெரிக்கா, சீன - இலங்கை உறவு பிடிக்காமை தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வரலாம். அதேபோல எல்லா நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் தேவைக்காகத்தான் எதிர்ப்பும் ஆதரவும் காட்டுகின்றன. எப்படியான போதிலும் மனித உரிமைமீறல்கள் யுத்தக்குற்றங்கள் என்பவற்றுக்காக எந்தவொரு நாடும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை என்று மேலும் குறிப்பிட்டார் நிமல்கா பெர்னாண்டோ.
அரசியல் தீர்வு அவசியம்
சர்வதேசம் இலங்கைக்கு எதிராக செயற்படுவதால் தனது முக்கியத்துவத்தை உயர்த்த முடியும் என்று தெரிவித்த நிமல்கா பெர்னாண்டோ உலக நாடுகளில் தமிழ் மக்கள் சட்ட விரோதமாக குடியேறுவது முதல் எல்லாப் பிரச்சினைக்கும் ஒரே தீர்வாக அமைவது இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை அமுல் படுத்துவதே ஆகும் என்று குறிப்பிட்டார்.
குற்றங்களில் பொன்சேகாவுக்கும் பங்குண்டு
ஐ.நாவின் விசாரணைகளுக்கு எதிராகவே பொன்சோ செயற்படுவார் என்று தெரிவித்த நிமல்கா பெர்னாண்டோ யுத்ததில் பொன்சேகாவுக்கும் முக்கிய பங்குண்டு என்று சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தில் அரசை எதிர்த்தால் இவரும் சிக்கிக்கொள்வார் என்ற நிலையில் இருந்துதான் பேசுகின்றார். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்காக முன்னாள் இராணுவத்தளபதி என்ற வகையில் பொன்சேகாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
விசாரணை தேவை
தமிழர்களை ஏமாற்ற முடியாது. இவர்கள் இன்று சர்வதேசத்தின் உதவியுடன் ஜெனிவாவில் உறுதியாகப் போராடுகிறார்கள் என்று குறிப்பிட்ட நிமல்கா பெர்னாண்டோ தற்போது கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். சர்வதேசம் இலங்கைக்கு ஒரு சந்தர்பபத்தை வழங்கியுள்ளது. எல்.எல்.ஆர்.சி அறிக்கை ஒரு பக்கம் சார்பானது. அதையே நடைமுறைபடுத்த மாட்டோம் என்கிறது அரசு. அதனால் மேலும் கடுமையான ஒரு தீர்மானத்தை ஐ.நா கொண்டு வரவேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் மனித உரிமை பேரவைக்கு கையெழுத்திட்ட நாடு என்ற வகையில் இலங்கை பதிலளிக்க வேண்டியது அதன் கடமை என்று கூறிய நிமல்கா பெர்னாண்டோ அரச சார்பற்ற நிறுவனம் என்ற வகையில் சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை அமைத்து அதனுடாக இலங்கை விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

27 பிப்ரவரி 2013

இரு மனப்போக்கில் ஐநா செயலாளர் பான் கீ மூன்!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஐக்கிய நாடுகள் சபையின் இரு மனப்போக்கு தொடர்ந்தும் காணப்பட்டே வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான மகன் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரித்துக் காட்டும் நிழற்படங்கள் குறித்து செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு நன்கு தெரியுமென அவரது பேச்சாளர் கடந்தவாரம் இன்னர் சிற்றி பிரஸிடம் தெரிவித்திருந்தார்.
இத்தகைய நிழற்படங்கள் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் புதிய ஆவணத் திரைப்படமான போர் அற்ற வலயம் இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது இத்திரைப்படம் காட்டப்படுவதனை தடுக்கும் விதத்தில் இலங்கை அரசு தற்போது செயற்படுகின்றது.

சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டிய​போதுகூட, தன்னைச் சுடப்​போகி​றார்கள் என்பது அவருக்குப் புரிய​வில்லை.

vikadan_001-1இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் மரணத்துக்கு இன்று உலக சாட்சி​யாக இருப்​பது சனல்-4 வெளியிட்ட ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களும் புகைப்படங்களும்​தான்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்​படங்கள், ரமேஷின் வீடியோ தொடங்கி ஆயிர​மாயிரம் ஈழத் தமிழர்களின் குருதியற்ற உடல்கள் வரை விரியும் அந்த வீடியோ காட்சிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் மரண சாசனம்.
நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே-வைத் தொடர்பு கொண்டோம். அவர் சொன்ன தகவல்கள் அத்தனையும், இலங்கை அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை.
கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது?
ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53-ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர்கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள்.
இனி உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் எந்த தகவல்​களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த வீடியோக்​களை எடுத்த இரண்டு சிங்களப் படை வீரர்கள் என்னிடம் சொன்னவை. வீடியோவாகவும் பதியப்​பட்டவை. அவர்கள் இருவரும் 53-ம் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இறுதிக் கட்டம் வரை இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பணியாற்றியவர்கள். போர் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர். எல்லா வீடியோக்களும் அவர்களின் மொபைல் போன்களில் எடுக்கப்பட்டவை. போர் நடக்கும் இடங்களில் வீடியோவோ, புகைப்படங்களோ எடுக்க அனுமதி கிடையாது. மொபைலில் எடுத்ததும் இரகசியமாக எடுத்தவைதான்.
இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதி ஒரு கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் இருக்கும் சிறிய பகுதி. அந்தப் பகுதியில்தான் மக்களை கொன்று குவித்துப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
2009 மே மாதம் 18-ம் தேதி இரவு போர் தீவிரமடைந்து, அங்கிருக்கும் மரங்களையும் வாகனங்களையும் இராணுவம் கொளுத்தியது.
அப்போது பாலச்சந்திரன் தன் மெய்காப்பாளர்கள் நால்வருடன் இரவு முழுவதும் பதுங்குகுழியில் இருந்திருக்கிறார்.
காலையில் வேறு வழியே இல்லாமல் மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி 53-ம் படையில் சரணடைந்தனர். மே 19-ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்கள் சரணடைந்ததும், பாலச்சந்திரனையும் அவரது மெய்க்காப்பாளர்களையும் தனித்தனியே பிரித்து விட்டனர்.
சரணடைந்தவர்களைப் பற்றி அங்கே பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்.
கோத்தபாய இந்தத் தகவலை கருணாவிடம் சொல்லி இருக்கி​றார். ‘அவனை உயிரோடு விட்டால், அது நமக்குத்தான் பிரச்சினை. அந்த பையன் ஒரு மைனர். சட்டத்தின்படி எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. சட்டத்தின் பிடியில் இருந்து அவன் தப்பி​விட்டால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகக்கூட அவன் வந்துவிடலாம். எல்லோரையும் போல அவனையும் கொன்றுவிடலாம்’ என்று கோத்தபாயவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார். அதற்கான உத்தரவு 53-ம் படைக்குப் பிறப்பிக்கப்பட்டது.
காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் உடல் அருகில் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டிருக்கிறார்கள். யாரைக் கொன்றாலும் தடயம் இல்லாமல் எரித்து விடுவது​தான் அந்த படைப் பிரிவின் வழக்கம். பாலச்சந்திரனையும் அப்படித்தான் தூக்கிச் சென்றுவிட்டனர். பாலச்சந்திரன் சரணடைந்தபோது காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோவும், 9.30 மணிக்கு அவர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும்தான் இப்போது வெளியானது.
கே: பாலச்சந்திரனிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறதா?
ப: பாலச்சந்திரனிடம் அவரின் அம்மா பற்றியும், அக்காவைப் பற்றியும் கேட்டார்களாம். ‘நானும் என் அம்மாவும் நேற்று ஒன்றாகத்தான் இருந்தோம். தப்பிக்க வேண்டும் என சொன்னவுடன் அவர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் ஒரு குழுவாகவும் கிளம்பும்போது இடையில் அம்மாவைக் காணோம்.
அவர்கள் இப்போது எங்கே என்று எனக்கு தெரியாது’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை. சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டிய​போதுகூட, தன்னைச் சுடப்​போகி​றார்கள் என்பது அவருக்குப் புரிய​வில்லை.
கே: வீடியோ பொய் என்று இலங்கை அரசு சொல்கிறதே?
ப: அந்த மொபைலில் இருந்த வீடியோவை நானே பலமுறை பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகுதான் ஆவணப்படம் எடுத்தோம். வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வுக்கும் உட்படுத்தினோம். வீடியோவில் இருப்பது அத்தனையும் உண்மை… உண்மை… உண்மை.
இப்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்த உதவிகளையும் இலங்கை அரசு செய்வது இல்லை என்றார் அழுத்தம் திருத்தமாக.
நோ பயர் ஸோன் தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். கடைசிக் கட்டப் போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர். அவரிடமும் பேசினோம்.
இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இன அழிப்பின் சோகம் இது. மிகச்சிறிய பரப்பளவு ​கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடை​பட்டிரு​ந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப் போனார்கள்.
தமிழ் மக்கள் கூட்டம் இராணுவத்திடம் சரண​டைய வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்’ என்று கட்டளை இட்டது இராணுவம்.
வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர். வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகா​மிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள்.
போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை இராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து சென்று தாக்கும். உலக நாடு​கள் எதுவும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தாது. ஒயிட் பாஸ்பரஸ் அதைவிடக் கொடூரமானது.
ஒரே ஷாட்டில் 100-க்கு மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் சுற்றியிருக்கும் எல்லா ஆக்ஸிஜனையும் உறிஞ்சிக்கொண்ட பிறகுதான் வெடிக்கும். அதனால் குண்டு பாதிப்பையும் தாண்டி பலர் மூச்சுத் திணறியே இறந்தனர்.
சனல்-4 வெளியிட்டு இருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் உதாரணங்கள் மட்டும்தான். ஒட்டுமொத்தமும் வெளிவந்தால், இலங்கை தாங்காது.

ஜூனியர் விகடன்

26 பிப்ரவரி 2013

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மூன்று அமைப்புக்கள்!அலறுகிறது திவயின

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனி உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மூன்று தரப்புகள் செயற்பட்டு வருவது தெரியவந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இந்த மூன்று தரப்பிற்கும், அமெரிக்காவில் செயற்படும் மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்காவினால் வழிநடத்தப்படும் மேற்குலக நாடுகளும், புலம் பெயர் புலிகள் அமைப்புகளும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன.
மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு இலங்கைக்கு எதிராக 04 அமைப்புகள் அறிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளதுடன் அவர்கள் அரசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக திவயின தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு அனுப்பிய இரகசியத் தகவல்

salman-periesஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, எதிர்க்காமல் இருக்கும்படி சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறும் இரகசியத் தகவல் ஒன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
“சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு கிடைத்த இந்த இரகசிய தகவல், சிறிலங்கா அரசாங்கத் தரப்புக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்று சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறும் வகையில் அந்த இரகசியத் தகவல் அமைந்திருந்ததாக, தகவல்கள் கூறுகின்றன.
ஜெனிவாவில் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், பெரும் எண்ணிக்கையான உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றும், அது சிறிலங்காவுக்கு பாரிய தோல்வியை ஏற்படுத்தும் என்றும் சல்மான் குர்சித் அந்த இரகசியத் தகவலில் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க, சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று சல்மான் குர்சித்துக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதில் அனுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

25 பிப்ரவரி 2013

பிரபாகரன் மகன் கொலை குறித்து விசாரிப்போம்.. சொல்கிறார் சென்னை சிறுவனைக் கொன்ற டக்ளஸ்!

 Absconding Accused Douglas Says Sl Will Investigate விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இவரே சென்னையில் சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் சிக்கி தலைமறைவாகி இலங்கைக்கு ஓடியவர் என்பது குறிபபிடத்தக்கது. கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்திருந்த டக்ளஸ் இதுகுறித்து அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. உண்மையென்றால் அது குறித்து விசாரணை செய்யப்படும். ஐ.நா.வின் மனித உரிமை மீறல் குறித்த பொதுவாக்கெடுப்பில் கடந்த முறை இந்தியா ஆதரிக்காது என்று கூறி எதிர்த்துவிட்டது. இந்த முறை எதிர்ப்பதாக கூறி வருகிறது. பொறுத்திருந்து பார்த்தால் இந்தியாவின் முடிவு தெரியும். இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையே நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் டக்ளஸ்.

மாத்தளை மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச தர விசாரணைக்கு ஐநா கோரிக்கை!

மாத்தளை மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச தர விசாரணைக்கு ஐநா கோரிக்கை மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இந்த மாதம் 12ஆம் திகதிவரை மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து 153 மனிதர்களுடை எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் வைத்திய அறிக்கை எதிர் வரும் மார்ச் மாதம் வெளியிட உள்ளதாக மாத்தளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஜூன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்ட பிரதேசத்திற்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடேசன், புலித்தேவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு நேரடிச்சாட்சிகள் - த இன்டிபென்டென்ட் தகவல்!

News Serviceஇலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மேலும் இரண்டு கண்கண்ட சாட்சிகள் முன்வந்துள்ளதாக தெ இன்டிபென்டன்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சாட்சிகளாக செயற்பட முன்வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். எனினும் இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக இவர்கள் தமது பெயர்களை வெளியிட மறுத்துள்ளனர். முதலாமவர், விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு மெய்காவலராக செயற்பட்டு வந்தார். இறுதிப்போரின் போது காயமடைந்த அவர், படையினரிடம் சரணடைந்த நிலையில் படையினரால் தமக்கு விடுதலைப்புலிகள் தொடர்பில் தகவல் தருபவராக பயன்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், தாம் எதிர்ப்பார்க்காத வகையில் நன்கு ஒழுங்கமைப்பட்ட வகையில், விடுதலைப்புலிகள், படையினரிடம் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பின்னர் சடலங்களாக கிடந்தமையை தாம் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆசிரியராக செயற்பட்ட ஒருவர், தாம் விடுதலைப் புலிகளின் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவதை கண்டதாகவும் பெருமளவான இராணுவத்தினர் முன்னிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சரணடைந்தவர்கள், கொல்லப்பட்ட நிலையில், சுமார் 40 விடுதலைப்புலிகளின் குழு ஒன்று படையினரிடம் சரணடைய பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள குறித்த ஆசிரியர், அவர்கள் தொடர்பில் இன்று வரை தகவல்கள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

24 பிப்ரவரி 2013

நாளை சிறிலங்காவுக்கான யுத்தகாண்டம் - தமிழர்களுக்கு விடிவு வருமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடர், சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகிறது.
நாளை ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால், சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் மார்ச் மாதம் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக பிரேரணையை எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ளது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெறம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச் செயலர் பான் கீமூனிடம் சிறிலங்கா அரசு கையளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவுக்கு எதிராக சாட்சியங்களை பதிவு செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு எதிராக காத்திரமான அழுத்தங்கள் இந்த கூட்டத்தொடரின் போது பிரயோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சனல்4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்ற காணொளியும் இதற்கு வலுச் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் உள்ளனர்.
சர்வதேச ரீதியாக எதிர்பார்க்கப்பட்டிருக்கும் இந்த கூட்டத்தொடர், தமிழர்களுக்கான தீர்வுக்கு விடியலைத் தேடித் தருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சிறிலங்காவில் இந்தியாவின் ‘றோ’ உளவாளிகள்!

சுற்றுலா நுழைவு விசாவிலும் மற்றும் புடவை வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற போர்வையிலும் சிறிலங்காவுக்குள் நுழைந்துள்ள இந்திய உளவாளிகளைக் கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வின் முகவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இவர்களை சுற்றிவளைத்துப் பிடித்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
வடக்கு, கிழக்கில், புடவை வியாபாரிகள், விவசாயிகள் என்ற போர்வையில் திரியும் ‘றோ’ சந்தேகநபர்களை பிடிக்கும் இந்த நடவடிக்கைக்கு, சிறிலங்கா படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், இவர்கள் அதிகளவில் செயற்படுவதாகவும் சிறிலங்கா குடிவரவுத் திணைக்களம் கூறியுள்ளது.
ஏற்கனவே, சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பலர் உடனடியாக நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே. வடக்கு,கிழக்கில் அறுவடை வேலைகளுக்கு இந்தியத் தொழிலாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவுள்ளதாக, மற்றொரு கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
பெருமளவானோர் வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச்சென்றுள்ள நிலையில், சிறிலங்காவில் விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டே, இந்திய விவசாயத் தொழிலாளர்கள் 3 மாத கால நுழைவு விசாவுடன், இந்தப் பணிகளில் ஈடுபட அனுமதி அளிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் சிறிலங்கா குடிவரவுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் வடக்கு கிழக்கு பகுதிகளில், நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், இந்திய விவசாயத் தொழிலாளர்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னேற்பாடாக, வடக்கு, கிழக்கில் உள்ள பிரதேச செயலர்களிடம் இருந்து தேவைப்படும் தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை கோரியுள்ளார்.

23 பிப்ரவரி 2013

தமிழகத்தில் காங்கிரஸ் அலுவலகத்தை மூடக்கோரி மே17 இயக்கம் போராட்டம்!

may-17a.pngஇலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்க வலியுறுத்தி, சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற போது, வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, தேசிய பாதுகப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் துணை போனதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.மன்மோகன் சிங்,பிரணாப் முகர்ஜி ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும் திருமுருகன் தெரிவித்தார்.

பெர்லினில் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தது தமிழ் வான்

berlin_tamilvan_001நீதி கோரி ஐநா செல்லும் தமிழ் வான் யேர்மனி தலைநகரம் பெர்லினில் இரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.
நேற்று காலை நடைபெற்ற சந்திப்பில் யேர்மனியில் உள்ள spd கட்சி மற்றும் die Linke எனும் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களோடு ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விடையமாகவும் தற்காலிக நிலைமை குறித்தும் ஆழமாக உரையாடப்பட்டது.
இவ் உரையாடலில் கருத்துக்கள் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை ஆதரித்து பேசினர். தொடர்ந்து குறிப்பாக தாயகத்தில் சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மிக அக்கறையோடு உரையாடப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் சந்தித்த ஒரு கட்சி, சிறிலங்காவின் மனித உரிமை மீறல் விடையமாக மீளாய்வு செய்து அறிக்கையினை பாராளுமன்றத்தில் எழுத்து மூலமான விவாதத்திற்கு விடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அவ் அறிக்கை அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தொடர்ந்து நவநீதம்பிள்ளை அவர்களிடம் கையளிகப்படும்.
அரசியல் சந்திப்புகளை தொடர்ந்து Berlin ,Brandenburger Tor மற்றும் Gedächtniskirche am Zoo எனும் மக்கள் நடமாடும் இடங்களில் கண்காட்சி வைக்கப்பட்டு வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விடையங்கள் துண்டுப்பிரசுரம் ஊடாக எடுத்துரைக்கப்பட்டது.
மாலை நேரம் தேசத்தின் அன்னை வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வோடு மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.
தேசியத் தலைவரின் தாயின் திருவுருவப் படத்திற்கு தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றிவைத்து, தொடர்ந்து அனைத்து மக்களும் சுடர்- மலர் வணக்கம் செலுத்தினர்.
அதை தொடர்ந்து சிவந்தன் அவர்கள் புலம்பெயர் மண்ணிலே வெகுசன மக்கள் போராட்டங்களின் முக்கியத்தை எடுத்துரைத்ததோடு, மக்களின் அடித்தளத்தில் மட்டுமே எமது மக்களின் விடிவு இருப்பதை சுட்டிக்காட்டினார்.
Duisburg நகரத்தில் இருந்து சிவந்தன் அவர்களோடு இணைந்து தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் செல்வன் லக்சன் அவர்கள் இன்றைய காலத்தில் இளையோர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் சார்ந்து மிக உணர்வுபூர்வமாக விளக்கினார்.
இப்போராட்டத்தை முன்னெடுக்கும் உறுதிஉள்ள இளையோர்களின் தாய்மண் மீது வைத்திருக்கும் உணர்வுகளை மக்கள் கண்டு கண்ணீர் வடித்தனர். அத்தோடு அவர்களின் நீதிக்கான பயணம் நிச்சயம் வெல்ல வேண்டும் என்று வாழ்த்தி பெர்லின் தமிழ் மக்கள் சார்பாக தேசிய செயற்பாட்டாளர் சிறி அவர்கள் மலர்செண்டு வழங்கி இளையோர்களை ஊக்குவித்தார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு தமிழ் வான் தனது பயணத்தை ஆரம்பித்து அடுத்த நகரங்களாக Hannover மற்றும் Bremen னை சென்றடைகின்றது.berlin_tamilvan_005

22 பிப்ரவரி 2013

மகிந்த மீது போர்க்குற்ற விசாரணை வேண்டுமென பஞ்சாப் அரசியல் கட்சி வலியுறுத்தல்

மஹிந்த ராஜபக்ஷ மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பஞ்சாப் தீவிர அரசியல் கட்சி வலியுறுத்துஇந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து சனல் 4 ஒளிப்படம் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி தெரிவித்துள்ளார்.
சனல் 4 வெளியிட்ட 12 வயது சிறுவனின் கொலை ஒளிப்படம் இலங்கை மனித உரிமை மீறல் புரிந்துள்ளமைக்கு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு தமிழ் மக்கள் பிரச்சினை அல்ல எனவும் மனிதாபிமான பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த மாதம் ஜெனீவாலில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க பிரேரணைக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் இதுவிடயம் குறித்து இந்தியா அமைதிகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மௌனம் புதிய ஒன்று அல்ல எனவும் பல தடவைகள் இந்தியா இரட்டை நிலைப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளதாகவும் டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிறுவர்கள், குழந்தைகள் என பாராது செயற்பட்டதுபோல் 1984களில் இந்தியா சீக்கியர்களுக்கு எதிராக செயற்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1984 தர்பார் சாஹிப் மோதலில் இந்திய அரசு படைகள் சீக்கிய போராளிகள் மற்றும் யாத்திரிகர்கள் சிறிய குழந்தைகள் ஆகியோரை பிரித்துப் பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகள போட்டிகளை தமிழ்நாட்டில் நடாத்த முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதாகவும் அவர் ஒரு தைரியமான பெண் எனவும் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடயத்தில் தமிழக சட்ட சபையின் தீர்மானம் நிறைவேற்றி தனது தைரியத்தை உறுதிப்படுத்தியவர் எனவும் டால் கல்சா கட்சியின் தலைவர் எச்.எஸ்.தாமி தெரிவித்துள்ளார்.

தமிழீழ சுதந்திர சாசனத்தின் அறிமுக கூட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முரசறையும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான அறிமுக பொதுக்கூட்டத்திற்கு கனேடிய - அமெரிக்க தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் தமிழீழத் தேசியத் துக்க நாளான மே-18ம் நாளில் - ஈழத் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் தமிழீழ சுதந்திர சாசனத்தினை முரசறையவுள்ளார்கள். தென்னாபிரிக்க விடுதலைக்கு முக்கிய காரணியாக விளங்கிய ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் முரசறைந்த தென்னாபிரிக்க விடுதலை சாசனம் மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் முரசறைந்த பாலஸ்தீன விடுதலை சாசனம் ஆகியன உலக வரலாற்றில் முக்கிய பதிவுகளாகவுள்ளன.
இந்நிலையில் உலகத் தமிழர்களால் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனம், அமையவிருக்கும் தமிழீழம் குறித்தான ஓர் வரைவினை உலக அரங்கில் முன்வைக்கவுள்ளது. இந்த சாசனத்தின் முரசறைவுக்காக இதன் உருவாக்கத்திற்கான மக்களின் கருத்துக்களை அறியும் பொருட்டு கேள்விக் கொத்தொன்று வெளியிடப்படுவதோடு, தமிழீழ சுதந்திர சாசனத்தின் அவசியத்தினை வெளிப்படுத்தும் கையேடு ஒன்றும் வெளியிடப்படுகின்றது. இந்நிகழ்வில் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்து, மக்களுடன் கருத்துப் பகிர்வு செய்யவுள்ளார்.
காலம்: 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம்: Auditorium, 1020 Humboldt Parkway - Buffalo, New York 14211
இந்த நிகழ்விற்கு கனடாவில் இருந்து செல்வதற்கான கட்டணமின்றிய பயண ஒழுங்குகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. Scarborough, Markham, Mississauga, Brampton ஆகிய பகுதிகளில் இருந்து காலை 10மணிக்கு வாகனங்கள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயண ஒழுங்குகள் பற்றிய விபரங்களுக்கு :
Joe Antony 416-854-4143,
Vin Mahalingam 647- 209-4100,
Jegan 716-352-8300(Buffalo),
ஒன்றாய் இணைவோம்! நாளை மலரும் தமிழீழம்!

21 பிப்ரவரி 2013

பிணங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு தண்ணீர்குடித்தோம்!

இலங்கையில் இறுதிக்கட்ட போரில் நடந்த கொடுமைகள் குறித்த சேனல்-4 புதிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'நோ பயர் சோன்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணபடம் 90 நிமிடம் ஓடுகிறது.
இலங்கை இறுதிகட்ட போரின்போது 'நோ பயர் சோன்' என்று அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் சிங்கள ராணுவம் எந்த மாதிரி கொடுமையான தாக்குதல் நடத்தின என்பது பற்றிய முழு விபரங்களும், அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சேனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்படத்தில் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. ஆவண படத்தில் இலங்கை தமிழ்ப்பெண் வாணி விஜி,
’’இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நானும் ஏராளமான அப்பாவி தமிழர்களும் இடம்பெயர்ந்து உயிர் தப்பிக்க பாலத்தின் வழியாக கடந்து சென்றோம். அப்போது ஒரு மூதாட்டி இலங்கை அதிகாரிகளிடம் தண்ணீர் கேட்டார். அந்த மூதாட்டியை பார்த்து சிரித்த அதிகாரி, 'பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரை குடி' என்று ஏளனமாக கூறினார்.
பாலத்தின் அடியில் நான் பார்த்தபோது போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணங்கள் மிதந்தன. வேறு வழியின்றி பிணங்களை ஒதுக்கித்தள்ளி விட்டு அந்த தண்ணீரை எடுத்து குடித்தோம்’’ என்று கூறியுள்ளார்.
இறுதிக்கட்ட போரில் ஐ.நா. ஊழியர் பீட்டர் மெக்கே உயிர் தப்பினார். அவர் 'சேனல் 4' பேட்டியில்,
’’அது ஒரு மாலை நேரம். 4 மணி இருக்கும். கடுமையான வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நானும், ஏராளமான மக்களும் உயிர் தப்பித்தோம். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து தெற்கு பகுதியில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாங்கள் மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புகளுக்கிடையில் ஒழிந்து இருந்தோம். எங்கள் மீதும் எல்லா திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கண் விழித்து பார்த்தபோது என் மீது ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. அவரது உடலை வெடிகுண்டு துகள்கள் கிழித்திருந்தன. அந்த பெண் உயிருக்கு போராடினார். காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மறுநாள் காலையில் அந்த இடம் பேரழிவு தளமாக காட்சியளித்தது.
எங்கு பார்த்தாலும் பிணங்கள். அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக ராணுவம் அறிவித்தது. அங்கு தஞ்சம் புகுந்த மக்களை ராணுவம் ஏன் குண்டு வீசி கொல்ல வேண்டும்.
பொதுமக்கள் சாவதை ராணுவம் பொருட்படுத்தவில்லை. திட்டமிட்டே அப்பாவிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த இடத்தில் 5 பேர் இறந்து கிடந்தனர். அவர்களுடன் ஒரு சிறுவனும் பிணமாக கிடந்தான்.
அந்த சிறுவன்தான் பிரபாகரன் மகன் பாலசந்திரன். பாதுகாவலர்களுடன் பாலச்சந்திரன் இறந்து கிடந்தான். அவன் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவன் 2 அடி நெருக்கத்தில் சுடப்பட்டு இருக்கிறான். இது கொலைதான். சிறிதளவும் அதில் சந்தேகம் இல்லை. இது ஒரு போர்க்குற்றம். இதுபற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

பாலச்சந்திரன் குறித்து வெளியான படங்கள் பார்த்தோம்"ஐ.நா.தெரிவிப்பு

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன ஒரு உண்மையான மற்றும் விரிவான தேசிய செயல்முறை மூலம் இடம்பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இவ்வாறு கூறியுள்ளார்.
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் குறித்து வெளியான வீடியோ, படங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மார்டின் நெசர்க்கி, ´நாங்கள் அந்த வீடியோ, படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது´ என்றார்.
அங்கு அவர் மேலும் இலங்கை தொடர்பில் கூறியதாவது,
´இலங்கை குறித்து ஐநாவின் உள்ளக குழு மூன்று அறிக்கை தயாரித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கு அல்ல. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கே ஆகும். இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன ஒரு உண்மையான மற்றும் விரிவான தேசிய செயல்முறை மூலம் இடம்பெற வேண்டும் என ஐநா செயலாளர் நாயகம் கூறியுள்ளார்´ என மார்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.

20 பிப்ரவரி 2013

இந்தப் பெண்களுக்கு என்ன நடந்தது?

2009ம் ஆண்டு மே 18ம் திகதி போர் முடிவுற்றதாக இலங்கை இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்று மாலை டிரக்டர் வண்டி மற்றும் பஸ் என்பனவற்றில் பல ஆயிரக்கணக்கான பெண்களும் இளைஞர்களும் ஏற்றப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் புலிகள் என்று இராணுவம் கூறியது. தாம் சந்தேகப்பட்ட அனைத்துப் பெண்களையும் இலங்கை இராணுவம் விட்டுவைக்கவில்லை. அவர்களை அவர்களது பெற்றோருக்கு, முன்னால் கொண்டுசென்றது இராணுவம். இவர்களில் பலர் இதுவரை விடுதலையாக வில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
சனல் 4 தற்போது வெளியிடவுள்ள, ஆவணப் படத்தில் இக் காட்சிகள் வருகிறது. இப் பெண்களை இலங்கை இராணுவம் டிரக்டர் வண்டியில் ஏற்றிச் செல்வதும், அவர்களைக் கொண்டுசெல்லவேண்டாம் என அவர்களது பெற்றோர் கதறுவதும், தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலரை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்று பின்னர் எரியூட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கொலைக்களங்கள் பற்றி சேனல்-4 ஆவணப்பட இயக்குநர் புதிய தலைமுறைக்கு பேட்டி

CH4விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை, சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், மணல் மூடைகளுக்கு நடுவே, சட்டை கூட அணியாமல் லுங்கியை போர்த்திக் கொண்டு காயங்களுடன் பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. 2 வது படத்தில், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கேமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பிரபாகரன் மகன் குறித்து வெளியான படம் போலியானது என்று இலங்கைத்தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் அமைதியை குலைக்க சிலர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இலங்கை கொலைக்களங்கள் பற்றி சேனல்-4 ஆவணப்பட இயக்குநர் புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டியளித்தார்.
அப்போது பாலச்சந்திரன் படம் ஜோடிக்கப்பட்டது என்ற இலங்கை அரசின் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தார். மேலும் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்வதில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது எனவும் போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் மகன் கொலை மட்டும் அல்ல, பாலியல் வன்கொடுமை, சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்றதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்ணக் கொடுத்துவிட்டு சிறுவனை சுட்டுக்கொல்வது மனிதாபிமானமா?; இனியும் சர்வதேசம் தாமதிக்கக் கூடாது-சுரேஷ்

“ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒன்றரை மணித்தியாலங்கள் ஒளிபரப்பப்படவுள்ள காணொலியில் உள்ள ஒரு பகுதியே பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாகத் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள்.
இதைவிட நெஞ்சை உலுக்கும் கொடூரமான சம்பவங்களும் வெளிவரக்கூடும். எனவே, இந்தியா உட்பட உலக நாடுகள் தாமதிக்காது இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரனின் படுகொலை குறித்த புதிய ஆதாரமாக, அவர் வன்னியில் இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட பின்னர் படுகொலைசெய்யப்பட்ட புதிய புகைப்படங்களை “சனல் 4′ ஊடாகப் பெற்று லண்டனின் “த இன்டிபென்டென்ட்’ நாளேடு மற்றும் இந்தியாவின் “த இந்து’ நாளேடு என்பன வெளியிட்டுள்ளன.
“சாப்பாடு கொடுத்தபின் படுகொலை புலிகள் இயக்கத் தலைவரின் இளைய மகனின் இறுதிக் கணங்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையிலேயே மேற்படி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிரபாகரனின் இளைய மகன் வன்னியில் இறுதி யுத்தத்தில் அகப்பட்டுப் பலியாகினார் எனவும், தமது படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசி நிலப்பரப்பைக் கைப்பற்றியவேளை, முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் அவரின் உடலைக் கைப்பற்றியதாகவும் இலங்கை அரசு முன்னர் அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படங்கள், இலங்கை அரச தரப்பு இதுவரை கூறிவந்ததற்கு மாறாக பாலச்சந்திரன் உயிருடன் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதையும் பின்னர் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும் தெளிவாகவே காட்டுகின்றன என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான புகைப்படங்கள் குறித்து “சுடர் ஒளி’யிடம் நேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:
“இலங்கை அரசானது தாம் வன்னியில் இறுதி யுத்தத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் எனக் கூறிவருகின்றது. ஆனால், அவர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் விசித்திரம் இப்போது அம்பலமாகியுள்ளது.
சரணடைந்த பச்சிளம் பாலகனுக்கு சாப்பிட “பிஸ்கட்’ வழங்கி சித்திரவதைசெய்து சுட்டுப் படுகொலைசெய்வதுதானா இலங்கை அரசின் மனிதாபிமானம்? வழமையான பாணியில் இலங்கை அரசு பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளிவந்துள்ள புகைப்படங்களையும் மற்றும் வெளிவரவுள்ள காணொளிகளையும் முற்றுமுழுதாக மறுக்கும்.
யாழ். தெல்லிப்பழையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இராணுவப் புலனாய்வாளர்கள் காட்டிய காட்டுமிரண்டித்தனத்தைக் கூட இலங்கை மூடிமறைக்க முற்படுகின்றது.
தமிழ், ஆங்கில, சிங்கள ஊடகங்களில் வெளிவந்த இராணுவப் புலனாய்வாளர்களின் படங்கள், காணொளிகளைக்கூட அதிநவீன தொழில்நுட்பத்தில் திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளிவந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வெளிவரவுள்ள காணொளிகளையும் “தொழில்நுட்பத்தில் திரிபுபடுத்தப்பட்டிருப்பவை’ என்று இலங்கை அரசு கூறும்.
ஆனால், இந்தியா உட்பட உலக நாடுகளின் கையில்தான் இலங்கை அரசின் இந்தக் கொடூர செயல்களுக்கான பதில்கள் தங்கியிருக்கின்றன. இந்தக் கொடூரக் காட்சிகளைப் பார்வையிட்ட பின்னர் அரசியலுக்காக அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு உலக நாடுகள் அமைதியாக இருக்கக்கூடாது.
இந்தியா உட்பட உலக நாடுகள் ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை ஆதரிக்கவேண்டும். அத்துடன், தாமதிக்காது இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.
இந்த விசாரணைகளின் ஊடாக தமிழ் மக்கள் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைக்கவேண்டும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைக்கவேண்டும்; தீர்வு கிடைக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதையே வலியுறுத்தி நிற்கின்றது” என்று தெரிவித்தார் சுரேஷ்.

19 பிப்ரவரி 2013

பாலச்சந்திரனைக் கொலை செய்ததன் சூத்திரதாரி யார்?

News Serviceதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் நேரடி ஆலோசனைக்கமைய 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று கடமையாற்றிய பிரிகேடியர் கமல் குணரத்னவின் பட்டாலியனே இந்தச் சிறுவனை சுட்டுக்கொன்றுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். இன்னும் தெளிவாகக் கூறுவதாயின், இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 08 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார்.
இதன்போது லெப்டினன் கேர்ணல் அலுவிகார அவரது 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு அறிவித்துள்ளார்.
கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினனர் நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்னவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் பிரத்தியேகமாக விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர் கருணாவிற்கு அறிவித்துள்ளார்.
இதன்போது பாலச்சந்திரன் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக வரக்கூடும் என்பதுடன் சிறு வயது என்பதால் நீதிமன்றத் தண்டனைகளிலிருந்தும் தப்பிவிடுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவு எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கருணா கூறியுள்ளார்.
இதற்கமைய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்ட கோத்தபாய ராஜபக்‌ஷ, மேஜர் ஜெனரலின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பிரித்தானியாவின் ''செனல் 4'' தொலைக்காட்சியும் பல தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில் இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். மற்றையவர் செய்த பாவத்திற்கு தான் தண்டனை பழி ஏற்க முடியாது என்பதனால் இந்தத் தகவல்களை வெளியிடுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

11 ஐரோப்பிய நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்கத் தயார்

News Serviceசிறிலங்காவுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
நேற்று பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதை இலக்காக கொண்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒஸ்ரியா, அயர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெய்ன், சுவிற்சர்லாந்து, செக் குடியரசு, எஸ்தோனியா, மொன்ரினிக்ரோ, போலந்து, ருமேனியா ஆகிய 10 நாடுகள், வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாலச்சந்திரனை பிடித்து வைத்து பின்னர் கொடூரமாக சுட்டுக்கொன்ற சிங்களக்காடைகள்!

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச் சிறுவன் இருத்தி வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதோ சிற்றுண்டி கொறிக்க வழங்கப்பட்டிருக்கின்றது. அவன் நிமிர்ந்து பார்க்கிறான். யாராவது தெரிந்த முகங்கள் தென்படாதா என்ற ஓர் ஏக்கம் அவன் விழிகளில். அந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன். 12 வயதுடைய சிறுவன். புதிய ஆதாரப் புகைப்படங்கள் ஒரு நெஞ்சை உருக்கும் கதையைச் சொல்கின்றது. இந்த சிறுவன் போரிலோ அல்லது குறுக்குச் சூடுகளிலோ கொல்லப்படவில்லை. சிறீலங்கா இராணுவத்தால் பிடிக்கப்பட்டுப் பதுங்கு குழியினுள் சிலமணி நேரங்கள் இராணுவக் காவலுடன் வைத்திருக்கப்பட்டு அதன் பின்னர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் இவரது சடலம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் சடலம் காட்டப்படது. ஆனால் இப்போது சிறீலங்கா இராணுவத்தினர் தமது வெற்றியின் கொண்டாட்ட விருதாக இந்தச் சிறுவனைச் சுட்டுக் கொண்டிருப்பது கண்கூடாக நிரூபணம் ஆகியுள்ளது. இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றது. இது இராணுவத்தினரின் விருப்பத்தின் பேரில் இராணுவத்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து படுகொலைகள் புரியும் துணைக் குழுக்களாலோ மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட படுகொலையாகும். கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள் ஒரே புகைப்படக்கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை ஆராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder உடலின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன் மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.
துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும் குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தள்ளார். மேலும் அவர் இந்தப் படங்கள் எந்த விதமான மாற்றங்களுக்கோ ஏமாற்றுகளுக்கோ உட்படாதவை என்றும் படங்கள் நூறு சதவீதம் உண்மையானவை என்றும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எடுக்கப்பட்டுள்ள காணொளியும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் Callum Macrae கூறுகையில் இதுவரை இலங்கை அரசுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டதாக எந்தவொரு ஆதாரமும் வழங்கப்படவில்லை என கூறினார். இலங்கை அரசு ஏற்கனவே கூறுகையில் போரின் போது அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் மனித உரிமை செயளாலராக பான் கீமுன் இருந்த போது அவர் அனுப்பிய குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்புகைப்படங்களால், டேவிட் கேமரூன் வரும் நவம்பர் மாதம் பங்கு பெறுவதாக உள்ள உலகப் பொது மாநாட்டில் பங்கு கொள்வதில் பெரும் சிக்கலாக அமையும். ஆனால் தற்போது இந்தியா வந்துள்ள கேமரூன் இம்மாநாட்டில் பங்கு பெறுவது குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஆனாலும் சில சமூக அமைப்புகளும், வெளிநாட்டு அமைப்புகளும் இம் மாநாட்டில் பங்கு பெறக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இதில் பாலச்ந்திரனின் சடலத்தின் அருகில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மகிந்த இராஜபக்ச அரசு இன்னமும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றம் பற்றியேதான் பேசிக் கொண்டிருக்கப் போகின்றது என தெ இண்டிபெண்டண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

18 பிப்ரவரி 2013

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்கால தடை!

பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேரை பிப்ரவரி 20-ந் தேதி தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. 1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர் .இதில் 21 போலீசார் உயிரிழந்திருந்தனர். இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும் கடைசியாக 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோர் ஜனாதிபதியிடம் கருணை மனுவும் அளித்திருந்தனர். அண்மையில் இந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தங்களது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் புதன்கிழமை (பிப்ரவரி 20) வரை வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தூக்கை எதிர்நோக்கியிருக்கும் 4 வீரப்பன் கூட்டாளிகளுக்கும் சற்றே ஆறுதல் அடைந்திருக்கின்றனர். தூக்கு தேதி கோரி மனு இதனிடையே இன்று மைசூர் தடா நீதிமன்றத்தில் பெல்காம் சிறை அதிகாரி, 4 வீரப்பன் கூட்டாளிகளையும் தூக்கிலிடுவதற்கான தேதியை அறிவிக்கக் கோரி மனு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில்தான் உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவும் வெளியானது. இதனால் இனி உச்சநீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில்தான் வீரப்பன் கூட்டாளிகளுக்கான தூக்கு தண்டனை அமையும்.

பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை!

பிரித்தானியா கடந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுத் தளத்திலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மனித உரிமை நிலைமைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வரும் இலங்கைக்கு பாரியளவில் ஆயுதங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக காட்டியன் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தனிப்பட்ட ரீதியில் அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் ஆயுத விற்பனை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், ஆயுத விற்பனையின் போது மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கவனத்திற் கொண்டே பிரித்தானிய அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

இரணைமடு விமானத்தளம் சிங்களவர்களின் சுற்றுலா மையம்!

iranaimadu_runway_003விடுதலைப் புலிகளின் விமானப் படைத்தளம் இலங்கை விமானப் படையினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகளின் விமானங்களின் பிரதானமான விமானத்தளமான விளங்கிய இரணைமடு விமானப்படைத்தளமே இவ்வாறு புனரமைக்கப்பட்டு வருகின்றது.
2009 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தளம் போருக்குப் பின்னர் சிறிலங்கா விமானப் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
இந்த விமானத்தளத்திற்கு தமிழர்கள் எவரும் செல்ல இதுவரை அனுமதிக்கப்படாத நிலையில், தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு அந்த விமானத்தளம் ஒரு சுற்றுலா மையமாக மாறியிருக்கின்றது.

17 பிப்ரவரி 2013

ப.சிதம்பரம் எங்கே போட்டியிட்டாலும் ஜெயிக்க விடமாட்டோம்: சீமான் ஆவேசம்!

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறயுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த சுபா. முத்துக்குமாரின் நினைவிடத்தில் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இதற்கு வருகை தந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகாவில் ஆதரவு "அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதால் வெறுப்படைந்த ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களைய சமாதானப்படுத்தவும், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாக உள்ள கர்நாடகாவில் ஆதரவு திரட்டவேண்டும் என்பதற்காகத்தான் வீரப்பன், ராஜீவ் காந்தி ஆகியோர் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற உள்ளார்கள். ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமானவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும், அமைச்சராவும் இருக்கிறார்கள் என்பது அக் கட்சியினருக்கே தெரியும். இதை திருச்சி வேலுச்சாமி எழுதிய புத்தகம் நன்றாக விளக்குகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக வாய்திறந்தாலே எங்கள்மீது தடைபோடும் காங்கிரஸ் கட்சியினர் ஏன் இதுவரை புத்தகத்துக்கு தடைவிதிக்கவில்லை? தலைமை சரியில்லை எல்லா கட்சியினருமே 40 நாடாளுமன்ற தொகுதியும் எங்களுக்குத்தான் என்கிறார்கள். எத்தனை நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் இந்தியா சரியான பாதையில் போகாது. இந்த நாட்டை, இந்த மக்களை நேசிக்கிற தலைமை இங்கு இல்லை. தமிழினத்தின் விடுதலை இந்தியா மட்டுமின்றி, எந்த நாட்டையும் நம்பி இல்லை. நாங்களே ஏற்படுத்திக்கொள்வோம். தமிழகஅரசின் முழு திட்டங்களும், மின் பிரச்னையால் மறைக்கப்படுகிறது. மின் பிரச்னையும் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. மதுவிலக்கு அமல்படுத்துக குஜராத்தில் மதுவிலக்கு, தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் அம்மாநில முதல்வர் பாராட்டப்படுவதன் பின்னணி அவர் அந்த மண்ணின் மைந்தர், கேரளாவிலும் மதுக்கடைகளுக்கு வரையறை உள்ளது. ஆனால், தமிழகத்தில்தான் விடியவிடிய வியாபாரம் நடக்கிறது. தெருவுக்கு 2 மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கு பாதுக்காக்கப்படும் என்று கூறுவது தவறானது. சிதம்பரத்தை ஜெயிக்க விடமாட்டோம் தமிழினத்துக்கு எதிராகவுள்ள காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், மத்திய மந்திரியாகவும் உள்ள சிதம்பரம் தமிழகத்தைவிட்டு புதுச்சேரி என வேறு எங்கு போட்டியிட்டாலும் அவரையும், அக்கட்சியைச் சேர்ந்தோரையும் தோற்கடிப்போம் இவ்வாறு சீமான் பேசினார்.

பரான் சவுகரலிக்கு பிரத்தியேக பாதுகாப்பு வழங்குமாறு நவிபிள்ளை கோரிக்கை

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு இலங்கை அரசாங்கம் பிரத்தியேக பாதுகாப்பு வழங்க வேண்டும் என நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.
தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பரான் சவுகரலி கடந்த 15ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார்.
இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலைமைக் குறித்து விரைவில் தாம் ஒரு விசேட சந்திப்பை ஏற்பாடு செய்யப் போவதாகவும் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில்; இட நெருக்கடியால் திண்டாடும் நோயாளர்

hospitalசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெறும் கிளினிக்குகளில் இடநெருக்கடி ஏற்படுவதால் இருப்பதற்கு இடமின்றி நோயாளர்கள் திண்டாடும் நிலை ஏற்படுகிறது என்று பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி உதயனுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது கிடைத்த தகவல்கள் வருமாறு:
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கண், தோல், குழந்தைகள், பல் சார்ந்த கிளினிக்குகள் வைத்தியசாலை நிர்வாக அலகுக் கட்டத்தின் மேல் மாடியிலும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், போசாக்கு குறைந்த பிள்ளைகள் போன்ற கிளினிக்குகள், சிறுவர் விடுதியிலும் இடம்பெறுகின்றன.
உளநலம், கசம், புற்றுநோய் ஆகியவற்றுக்கான கிளினிக் அதற்கான கட்டடத்திலும், நீரிழிவு, பொது மருத்துவம் உட்பட ஏனைய கிளினிக்குகள் தனியான கட்டடத்திலும் இயங்குகின்றன.
நிர்வாக அலகு, குழந்தைகள் விடுதி, உளநலம் உட்பட்ட கிளினிக்குகள் இடம்பெறும் இடங்களில் தலா 50 தனியான இருக்கைகளும், பொது மருத்துவம், நீரிழிவு உட்பட்ட கிளினிக்குகள் நடைபெறும் இடத்தில் தலா 6 பேர் வீதம் இருக்கக் கூடிய 18 வாங்குகளும் காணப்படுகின்றன.
முறைப்பாடு தெரிவித்த நபரின் கூற்றுப் பிரகாரம் அது பொது மருத்துவக் கிளினிக் நடைபெறும் இடம் என்று நினைக்கிறோம். நீரிழிவு மற்றும் பொது மருத்துவம் ஆகிய கிளினிக் நடைபெறும் வேளைகளில் அங்கு வரும் நோயாளர்களின் நலன்கருதி பொது வைத்திய நிபுணர் உட்பட ஐந்து வைத்திய அதிகாரிகள் கடமையில் உள்ளனர்.
நோயாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு கிளினிக் கொப்பியில் எழுதப்படுகிறது. காலை 8 மணி குறிப்பிட்டிருக்கும் ஒருவர் காலை 7.30 மணிக்கு வந்து கொப்பியை அடுக்கி விட்டு வாங்குகளில் வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கொப்பிகளை எடுத்து பதிவுகள் செய்தபின்னர் வரிசைக்கிரமமாக உள்ளவர்களிடம் வழங்குவார். ஒரு மணித்தியாலத்தில் 50 தொடக்கம் 60 நோயாளர்கள் சோதிக்கப்பட்டு மருந்துகள் எழுதப்படும்.
9 மணியெனப் பதிவு செய்தவர்கள் 8.30 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் வந்து கொப்பி அடுக்க வேண்டும். இதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு நோயாளர்கள் சிரமமின்றிச் சிகிச்சை பெறமுடிகிறது.
கிளினிக் கொப்பி பார்த்து குறிப்பிட்டுள்ள நேரம் குறிப்பிட்ட இடத்தில் கொப்பிகளை அடுக்குவதற்கு ஓர் உத்தியோகத்தர் கடமை புரிகிறார். 11 மணிஎன நேரம் குறிப்பிட்ட ஒருவர் கொப்பியைக் கொண்டு காலை 8 மணிக்கு வருவாராயின் அவர் அங்கு குறித்த நேரம் வரை காத்திருக்க வேண்டும்.
நேரம் முந்தி வருபவர்கள் கிளினிக் மருந்து கொடுக்கும் பகுதி விறாந்தையில் தங்கி தமது நேரம் வரும் போது இருக்கையில் அமர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறாக நேரம் தவறி வருபவர்களே நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.
11 மணிஎன நேரம் குறிப்பிட்ட ஒருவர் கொப்பியைக் கொண்டு காலை 8 மணிக்கு வருவாராயின் அவர் காத்திருக்க வேண்டும்.

16 பிப்ரவரி 2013

சொந்த பூமியை மீட்கும்வரை போராட்டம்",சுரேஷ் பிரேமசந்திரன்

நாம் வீதியில் இறங்கி போராடாவிட்டால் எமக்கு எம் நிலம் கிடைக்காது. இதற்கு முன்னர் ஒரு சில பகுதிகளை சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகமே எமக்கு இந்த அரசாங்கம் தந்திருக்கிறது என தமிழ் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பிருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15) வலி வடக்கு பிரதேசத்தில் மீள் குடியேறாதோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வலி வடக்கு பிரதேசத்தில் மட்டுமின்றி கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை என வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இராணுவம் பல காணிகளை கையகப்படுத்தியுள்ளது. இன்று நாம் இந்த உண்ணாவிரதத்தை நடாத்துவது கூட இராணுவத்துக்கு விருப்பமான செயல் அல்ல.
எதிர் கட்சி தலைவர் வந்து போகும் வரையில் அமைதியாக நின்ற இராணுவம் தமது புலனாய்வு பிரிவினரை அனுப்பி இங்கு என்ன அட்டகாசம் செய்தார்கள் என்பதை இங்கு நேரடியாக பார்த்தீர்கள். அமைதியாக நாம் போராட்டத்தை முன்னெடுப்பதை கூட சகித்து கொள்ள முடியாத இராணுவமே இங்கு உள்ளது.
அதே போல் பொலிசாரும் இங்கு அராஜகம் செய்தவர்களையும் அடாவடி செய்தவர்களையும் கைது செய்யாமல் அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்புவதிலேயே இருந்தார்கள்.
யாழ்ப்பாண டி ஐ ஜி இராணுவ தளபதிகளுடன் பேசி இனி இவ்வாறானவை நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் வெறுமனவே பொலிசாரை பார்வைக்கு அனுப்புவதிலே எந்த அர்த்தமும் கிடையாது. இவ்வாறனவற்றை தடுக்க எம்மால் முடியாது இராணுவத்திற்கே முழு அதிகாரமும் இருக்குதென்றால் அதனை பொலிசார் வெளியில் சொல்லவேண்டும். ஏனென்றால் இங்கு நடைபெறும் காடைத்தனம் என்பது இன்று நேற்றல்ல பல போராட்டங்களில் இந்த காடைத்தனம் இராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இன்று மாலை நாம் வீடு திரும்பும் போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் முன்னரும் இவ்வாறு நடைபெற்றது. கல்லெறிந்தார்கள் கழிவொயில் ஊற்றினார்கள் இன்னும் செய்வார்கள். ஆனால் நாம் இவை எவற்றுக்கும் அஞ்சாமல் எமது காணிகளுக்கு நாம் போக வேண்டும் அதற்காக தொடர்ந்து போராட வேண்டும்.
மயிலிட்டி என்பது இலங்கையில் அதிக மீன் வளம் கொண்ட பிரதேசம் அதனை மக்களிடம் கையளிக்காமல் பொருளாதாரம் பற்றி பேசுகிறது என்றால் இந்த அரசாங்கம் ஒரு முட்டாள் தனமான அரசாங்கமாகவே இருக்க முடியும். அதே போல் இந்த வலிகாம் வடக்கு மண் விவசாய மண் அதனை இன்று இராணுவம் கையகப்படுத்தி மக்கள் விளைநிலங்களில் அவர்கள் விவசாயம் செய்கின்றார்கள் ..
எனவே எமது சொந்த நிலங்களுக்கு எங்களை விடுவிக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் போராட்டங்களை பல வழிகளில் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

எம்மைச் சுரண்டித் தின்னும் தம்பியா மார்ச் மாதத்துக்குள் நடையைக் கட்டு!

“ஹலால் மூலம் மக்களிடம் சுரண்டித் தின்னும் தம்பியா, மார்ச் மாதத்துக்குள் கடைகளைவிட்டு நீங்கள் வெளியேறாவிட்டால் உங்களுக்கு மரணம்தான்…” இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு குருநாகல், நாரம்மல பிரதேசத்திலுள்ள 50 முஸ்லிம் வர்த்தகர்களுக்கு பௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தால் துண்டுப் பிரசுரம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் நாரம்மல பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் மரணப் பீதியுடன் வாழ்வதுடன், அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த வர்த்தகர்கள் நாரம்மல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சமயம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் விசேட பொலிஸ் பிரிவினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் ஷத்தார் விளக்கமளிக்கையில்,
குருநாகல், நாரம்மல பிரதேசத்தில் கடந்த பல வரு டங்களாக முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 50 முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை தபால் மூலம் 50 துண்டுப்பிரசுரங்கள் கிடைத்தன. அந்த துண்டுப்பிரசுரங்கள் பௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தால் அனுப்பப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பவை வருமாறு:
“ஹலால் மூலம் மக்களின் பணத்தைச் சுரண்டித் திண்ணும் தம்பியா, மார்ச் மாதத்துக்குள் கடைகளை விட்டு நீங்கள் வெளியேறாவிட்டால் உங்களுக்கு மரணம்தான்…” என்று எழுதப்பட்டிருந்தது.
இவ்வாறு 50 துண்டுப் பிரசுரங்கள் அனுப்பப்பட்டிருந்தன. இதையடுத்து முஸ்லிம் வர்த்தகர்களிடமும், பிரதேச மக்களிடமும் மரணப்பீதி ஏற்பட்டதுடன், பெரும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னர் நாம் நாரம்மல பொலிஸ் நிலையத்திலும், மதம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் விசேட பொலிஸ் பிரிவினரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம். இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, திங்கட்கிழமை இரவு நாரம்மல குருவிக்கொடுவ பகுதியிலுள்ள 6 முஸ்லிம் கடைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.அத்துடன், தொழுகைகளுக்காகச் சென்ற இருவரும் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பிலும் பொலிஸ் முறைப்பாட்டில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.
இந்தப் பிரச்சினையானது குருநாகல் மாவட்டத்திலுள்ள பௌத்த பிக்குகளா லும், பௌத்தர்களாலும் ஏற்படுத்தப்படுவதொன்றல்ல. இது வெளிமாவட்டங்களில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் சதித்திட்டம்.
எனவே, இது விடயம் தொடர்பில் குருநாகல் மாவட்டத்திலுள்ள பௌத்த பிக்குகளுடனும் பேச்சு நடத்த நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன், பாதுகாப்பு அதிகாரிகளிடமும் இது தொடர்பில் பேசிவருகிறோம் என்றார்.

15 பிப்ரவரி 2013

சர்வதேசத்துக்கு தமிழர் மீது அக்கறை இருக்குமானால் நேரடித் தலையீடு தேவை;கஜேந்திரகுமார்

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு உண்மையில் அக்கறை இருக்குமாயின், இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதனை விடுத்து, ஜெனிவாவில் மாறிமாறி தீர்மானங்களைக் கொண்டு வந்து தமது வல்லாதிக்கப் போட்டிக்காக தமிழர் பிரச்சினையை ஒரு களமாகப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
அமெரிக்கா கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் எந்தப் பயனையும் தரவில்லை.
தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தமிழர் தாயகத்தில் இருந்த நிலைமையை விட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கத் தீர்மானம் என்ன பயனை தமிழ் மக்களுக்கு தந்துவிட்டது என்ற கேள்வி எழுகிறது.
உலக நாடுகள் தமது வல்லரசுப் போட்டிக்காக தமிழர் நலனை கையாளுகின்றன. இதுவே தமிழர் பிரச்சினை.இன்று சர்வதேச மட்டத்தில் அது பேசுபொருளாகியுள்ளது. நாம் இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைகள் உட்பட சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகத்தன்மை கொண்டதுமான விசாரனை அவசியமானது.
சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு பொறுப்பானவர்கள் இலங்கையில் நேரடியாக களநிலையை அவதானிக்க வேண்டும். அப்படியான ஒரு விசாரணை நடத்தக்கூடிய அளவுக்கு இலங்கையின் அரசியல், பாதுகாப்பு நிலைமை இல்லை. காரணமற்ற கைதுகளும், தடுத்து வைப்புகளுமே மலிந்து காணப்படுகின்றன.
இலங்கையில் இன அழிப்பு நிறுத்தப்பட வேண்டுமாயின் அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். சர்வதேசத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்தப்படும் இடைக்கால நிர்வாகமே தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு கிடைப்பதற்கு ஏற்றதாக அமையும்.
வெறுமனே இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதால் மாத்திரம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. இதனை நாம் வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 49 நாடுகளுக்கும் கடிதம் அனுப்பவுள்ளோம் என்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் அட்டகாசம்!

வலி.வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் நுழைந்து ஊடகவியலாளர்களின் கமராக்களை அடித்து நொருக்கியதுடன் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வலி.வடக்கில் தமது நிலங்களை விடுமாறு கோரி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் போது போராட்ட இடத்திற்குள் நுழைந்த இராணுவ சீருடை அணிந்தவர்கள் உதயன் இணையத்தள ஊடகவியலாளர்களின் கமராவினை அடித்து நொருக்கியதுடன் கமராவையும் பறித்து சென்றுள்ளனர்.
அத்துடன் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் போராட்டம் முற்றுப்பெறாது தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
எனினும் சில மணித்தியாலங்களில் அவர் வெளியேறியதும் போராட்ட இடத்தில் உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள் கலந்து கொண்டிருந்த மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு தாக்கியுள்ளனர். மக்கள் குறித்த நபர்களைப் பிடித்து காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
எனினும் அவர்கள் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டதனையடுத்து இராணுவத்தினர் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
அதனையடுத்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இராணுவ சீருடையுடன் நுழைந்தவர்கள் உதயன் இணையத்தள ஊடகவியலாளர்களின் கமராவினை அடித்து நொருக்கியதுடன் அதனையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தினையடுத்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இராணுவம் மற்றும் பொலிஸாருடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளார் என தெரிய வருகின்றது.

14 பிப்ரவரி 2013

சம்பந்தனை சந்திக்க மகிந்த விரும்புகிறாராம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்திப் பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஜெனிவாவில் எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிக்கவும், பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தாமல் விடுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்குடனுமே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கண்சிகிச்சை ஒன்றுக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். கடந்த மாதம் 5 ஆம் திகதி சம்பந்தனின் பிறந்தநாள் அன்றைய தினம் அவர் இந்தியாவில் இருந்தார். ஜனாதிபதி மஹிந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதன் போது, நாடு திரும்பியதும் உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று ஜனாதிபதி சம்பந்தனிடம் கூறியுள்ளார். அதற்கு நாடு திரும்பியதும் பார்க்கலாம் என்று சம்பந்தன் பதிலளித்துள்ளார்.
தற்போது இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மிகக் கடுமையான நெருக்கடி ஏழுந்துள்ளது. இந்த மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக காட்டமான பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஜனாதிபதியைச் சந்திப்பதைச் சம்பந்தன் பெரும்பாலும் தவிர்த்துக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்த வெறிக்கு ஏன் இராஜ மரியாதை?

பாவத்தைப் பண்ணிவிட்டு பரம்பொருளின் காலைக் கழுவினால் காப்பாற்றுவாரா? 'மாட்டார்� என்கிறது இந்து தர்மம்! மயான பூமியில் இருந்து இன்னும் ஓலக் குரல் நின்றபாடு இல்லை. கொக்கரிப்பு அதிகமாகக் கேட்கிறது. கடந்த 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, தன்னுடைய மனதில் கொஞ்சமும் ஈரம் இல்லை என்பதை மகிந்த ராஜபக்ச காட்டிவிட்டார். திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக் கடற்கரையில் நடந்த விழாவில் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய ராஜபக்ச, "இனத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரித்து ஓர் இனத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. நாட்டின் அனைத்துச் சமூகங்களும் சம உரிமையுடன் வாழ்வதே இதற்குத் தீர்வாகும்.
இனவேறுபாடுகளைப் போலவே மத வேறுபாடுகளும் நாட்டின் அழிவுக்கே வழிவகுக்கும்'' என்றெல்லாம் நீட்டி முழக்கியவர், "அன்று பாதையில் நடந்து செல்லும்போது மரண பயம் இருந்தது. இன்று அப்படி இல்லை. இங்கு இன, மத மோதல் இல்லை" என்றும் சொல்லியிருக்கிறார்.
'இலங்கையில் தமிழருக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது� என்பதைப் பட்டவர்த்தனமாக உடைத்துப் போட்டுள்ளார். இனம் பார்க்க வேண்டாம், மதம் பார்க்க வேண்டாம், சாதி பார்க்க வேண்டாம். ஆனால், மனிதன் என்று கூடப் பார்க்க வேண்டாமா?
2009-ம் ஆண்டு வரை போரை நடத்துவதற்கும், ஆயுதம் வைத்திருப்பதற்கும், குண்டுகள் போடுவதற்கும் ராஜபக்சவுக்குத் தன்னளவில் ஒரு காரணம் இருந்தது. 'இலங்கையைத் துண்டாட நினைக்கும் ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் துடைத்தெறிய வேண்டும்� என்பது அது.
அதற்குப் பிறகும்... அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, சித்ரவதை, சிறைக் கொடுமைகள், காணாமல் போதல், கற்பழிப்புகள் குறைந்ததா? இல்லை.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்துக்குள் புகுந்த போலீஸ் 44 பேரைக் கைதுசெய்து, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து, கொழும்புக்குக் கொண்டு போய் அடைத்துவிட்டது.
தன்னுடைய கணவன் என்ன ஆனார் என்று தெரியாமல் தவித்த ஒரு பெண், அவர் சிறை வைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து, சென்று பார்த்துத் திரும்பி உள்ளார். 'வன்னியில் இருந்து நாங்க யாழ்ப்பாணத்தில் வந்து குடியிருக்கிறோமாம். இதுதான் நாங்க செய்த தப்பாம்� என்று கதறி உள்ளார்.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். எந்தச் சொத்தும் கிடையாது. கணவனின் அன்றாடக் கூலியில்தான் வயிற்றைக் கழுவிக்கொண்டு இருந்தார்கள். அத்தகைய கணவனும் இரண்டு மாதங்களாக இல்லை என்றால்... அந்தப் பெண், இரண்டு குழந்தைகளின் நிலைமை என்னாகும்?
போருக்கு முன்னால் புலிகளை மட்டும் பயங்கரவாதிகளாகச் சொன்னவர்கள், இன்று தமிழர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகக் காட்டி களை எடுக்கும் காரியத்தை மட்டுமே செய்கிறார்கள்.
இனம், மதம் பார்ப்பது இல்லை என்று ராஜபக்ச சொல்வதைக் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், தமிழர்கள் பெரும்பான்மை இருந்த இடங்களாகப் பார்த்து, அங்கு சிங்களக் குடியேற்றங்களைச் செய்வது திட்டமிட்ட காரியம்தானே. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தால் அல்லவா, தமிழர் தாயகம் என்று பேச முடியும் என்பதற்காகவே இவை செய்யப்படுகின்றன.
எங்களை விமர்சிப்பவர்கள் இலங்கைக்கு வந்து பார்க்கட்டும். மறுசீரமைப்பு வளர்ச்சிப் பணிகள்தான் அவதூறுப் பிரசாரங்களுக்கான பதில்'' என்று சொல்லி இருக்கிறார் ராஜபக்ச.
தமிழர்களின் பூர்வீக வாழிடங்களில் சிங்களர்களைக் குடியேற்றுவதும், இந்து ஆலயங்களைப் போல அனைத்துத் தமிழர் பகுதிகளிலும் புத்தவிகாரைகள் அமைப்பதும்தான் ராஜபக்சவின் மறுசீரமைப்பு.
அவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்புத் தெரிவிக்கும் இந்திய மத்திய அரசு, இரண்டு கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும்.
ராஜீவ் காந்தியின் கனவு, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு. அந்தக் கோரிக்கையைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார் ராஜபக்ச.
மன்மோகன் சிங், இந்திய மக்களின் வரிப் பணத்தில் பல நூறு கோடியைக் கொடுத்து, தமிழ் மக்களுக்கு வீடு கட்டித் தரச் சொன்னார். அதில் எத்தனை வீடுகளைத் தமிழர்களுக்குக் கட்டிக் கொடுத்தார் ராஜபக்ச?
ராஜீவின் கனவும் மன்மோகன் கொடுத்த பணமும் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்தின் பிரதிநிதிக்கு நாம் ஏன் இராஜ மரியாதை தர வேண்டும்?
ஆனால், தனக்கு எதிராக உலகம் ஒன்று திரண்ட பயம், மகிந்தாவின் கண்களில் தெரிகிறது. கோயில் கோயிலாக அலைவதும் அதற்காகத்தான்.
எல்லாம் அறிந்த ஆண்டவன் இதனை அறிய மாட்டானா?

நன்றி - ஆனந்த விகடன்

13 பிப்ரவரி 2013

பா.உ.சிறிதரனை நான்காம் மாடிக்கு வருமாறு அழைப்பாணை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீண்டும் கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 18ம் திகதி குறித்த விசாரணைக்கு சமுகமளிக்குமாறு இன்று அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அலுவலகத்தில் அரசு மீட்டதாக தெரிவித்த வெடிபொருள் மற்றும் இறுவட்டு தொடர்பிலேயே மேலதிக விசாரணைக்கு சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்கு சமுகமளிக்ககோரும் அழைப்பாணைக் கடிதம் சிங்களமொழி மூலமே தமக்கு அனுப்பப்பட்டிருந்ததாக சிறிதரன் தெரிவித்தார்.
எனினும் அன்றைய தினம் அரசின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடத்தப்படவுள்ள கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்த கொள்ள வேண்டியிருப்பதாகவும் அத்துடன் சிங்களத்தில் எழுதப்பட்ட அழைப்பாணையில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில் தம்மால் வாசித்து அறிய முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து தனி தமிழ் மூலம் எழுதப்பட்ட அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிறிதரனது உதவியாளர் பொன்காந்தன் மற்றும் மாவட்ட கூட்டமைப்பு அமைப்பாளர் வேழமாலிகிதன் ஆகிய இருவரும் தற்போது 4ம் மாடியிலேயே தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக நம்பப்படுகின்றது.

இலங்கைக்கு நிபந்தனை; பொதுநலவாய அமைப்பு அதிரடி நடவடிக்கை

பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமானால் இலங்கை அரசு முக்கியமான நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டுமெனப் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலகம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
* முக்கிய துறைகளுக்கு சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல்
* பாதுகாப்பு அமைச்சிலிருந்து பொலிஸ் துறையை விலக்கல்
* நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறை
கொழும்பில் தங்கியுள்ள பொதுநலவாய நாடுகள் அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை அரசிடம் ஒப்படைத்திருப்பது அரசுக்கு கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.
மனித உரிமைகள், தேர்தல்கள், ஊடக சுதந்திரம் ஆகிய மூன்று துறைகளுக்கும் சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படவேண்டும், பொலிஸ் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி சிவில் நிர்வாக சேவையாக மாற்றுதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் நடைமுறைப்படுத்தல் உட்பட்ட முக்கிய கோரிக்கைகளையே பொதுநலவாய அமையம் நிபந்தனைகளாக முன்வைத்துள்ளது.
பொதுநலவாய அமையத்தின் இந்த நிபந்தனைகளால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள இலங்கை இந்த நிபந்தனைகள் தொடர்பில் அவசர ஆலோசனைகளை உள்ளூர நடத்தி வருகிறது.
பொதுநலவாய நாடுகள் அமையத்தின் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படமுடியாத ஒரு சூழ்நிலை இருப்பதால் அமையத்தின் மாநாடு இலங்கையில் நடக்கக்கூடிய வாய்ப்பு இல்லையென மூத்த இராஜதந்திரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இதேவேளை, பொதுநலவாய நாடுகள் அமையத்தின் மாநாடு ஏற்கனவே திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறாத பட்சத்தில் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அந்த அமைப்பிலிருந்து விலகிக்கொள்வது தொடர்பில் இலங்கை ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கைக்கு சர்வதேச விசாரணை தேவை

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைமைகள் கண்காணிக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் நகல் பிரதியொன்று இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வலயத்தில் உட்கட்டுமான வசதிகளை மீளமைத்தல், இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் போன்ற விடயங்களில் அரசாங்கம் பாரியளவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நீதி, நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைளில் இன்னமும் பாரியளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சட்டம், தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டம், சட்டவிரோத கைதுகள் கடத்தல்களுக்கு எதிரான சட்டம், சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத தண்டனைகளுக்கு எதிரான சட்டம் போன்றனவற்றை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்றம், காவல்துறை திணைக்களம் போன்ற தேசிய நிறுவனங்கள் சுயாதீனப்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் உரிய முறையில் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரியுள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சகல தரப்பினரதும் பிரச்சினைகளுக்கு காத்திரமான முறையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

12 பிப்ரவரி 2013

ஸ்கான் இயந்திரத்துக்குள் மரணித்த மகளின் விசாரணையை மூடி மறைக்க இடமளிக்க வேண்டாம்: தாய்

நவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார்.
வலியால் வருந்துவது போல சில அறிகுறிகள் காணப்பட்டதால் ஜனவரி 31இல், தனது மகளை கொழும்பு, நவலோகா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
‘தனது மகளை பார்வையிட்ட வைத்தியர், இரத்த பரிசோதனைகளையும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கையையும் பெறுமாறு கூறினார். தனது மகள் புத்தினி கௌசல்யாவுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து எம்.ஆர்.ஐ ஸ்கானிங் இயந்திரத்துக்குள் கிடத்தினர். 30 நிமிடங்களின் பின் ஒரு சத்தம் கேட்டது.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தின் பின் எனது மகளை வெளியே எடுத்தனர். அவள், நீல நிறமாகிவிட்டதையும் வயிறு வீங்கிவிட்டதையும் நான் கண்டேன். இது நடந்து 10 நிமிடங்களின் பின்னரே வேறு வைத்தியர்கள் அங்கு வந்தனர்.
பின்னர், எனது மகளை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். அவள் உடல் குளிர்ந்துவிட்டது என நான் கூறிய பின், அவளை வெப்பம் வழங்கும் இயந்திரத்தினுள் வைத்தனர். அவர்கள் எங்களை நான்கு நாட்களாக ஏமாற்றினர்.
நான்காம் நாள் அவளது மூக்கினுள் எறும்புகள் வரிசையாக செல்வதை கண்டேன். தனது மகள் ஸ்கான் இயந்திரத்தினுள் இறந்துவிட்ட போதிலும் நிர்வாகம் அதை மறைத்து மகள் நான்கு நாட்களின் பின் இறந்ததாக அறிவித்தனர்’ என்று அச்சிறுமியின் தாய் கூறினார்.
அடுத்த விசாரணை தினத்தில் வைத்தியசாலை அதிகாரிகளை சர்சியமளிக்க அழைப்பாணை விடுப்பதாக கூறிய நீதவான், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இலங்கையில் மாநாடு நடாத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை!

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடாத்தப்படுவது குறித்து பொதுநலவாய நாடுகள் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடைபெறும் என கமலேஷ் ஷர்மா உறுதி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை பொதுநலவாய செயலக ஊடகப் பேச்சாளர் ரிச்சாட் உக்கு மறுத்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா 10ம் திகதி இலங்கை செல்வார் என்று மாத்திரமே செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை விஜயம் குறித்து பொதுநலவாய நாடுகள் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா, நாளை 13ம் திகதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என ரிச்சாட் உக்கு தெரிவித்துள்ளார்.

11 பிப்ரவரி 2013

ராஜிவ் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக முடியலையே..:ரகோத்தமன் அதிரடி!

 Rajiv Cas Not Completely Ragotham முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்று அக்கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்திருக்கிறார். அப்சல் குருவைத் தூக்கிலிட்ட நிலையில் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லையே என்று ஒருதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் பலவும் பல கோணங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ராஜிவ் கொலையாளிகள் விவகாரமும் அப்சல் குரு விவகாரமும் எப்படி வேறுபட்டது என்று டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் பகவான்சிங் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில், ராஜிவ் காந்தி கொலையாளிகளை தூக்கிலிட்டால் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் இந்த வழக்கிக் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தக் கட்டுரைக்காக பேட்டியளித்திருக்கும் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை அதிகாரி ரகோத்தமனோ வழக்கு விசாரணையே இன்னமும் முழுமை அடையவில்லை என்று கூறியுள்ளார். ராஜிவ் கொலையாளிகளான தணு மற்றும் சிவராசனுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினருக்குமான தொடர்பு என்ன? 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி திடீரென ரத்து செய்தது ஏன்? என்பது போன்ற கேள்விகளுக்கு மரகதம் சந்திரசேகர் மற்றும் கருணாநிதியிடம் விசாரணையே நடத்தப்படவில்லை. ஒரு வழக்கில் அத்தனை அம்சங்களுமே விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் அப்படி நடக்கவில்லையே என்று குமுறியிருக்கிறார். இதேபோல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஜெனீவாவிற்கு செல்வதா?இல்லையா?கூட்டமைப்பு ஆராய்கிறதாம்!

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத்தொடரின் ஓரங்க கூட்டங்களில் கலந்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன என்று அறியமுடிகிறது.
இந்தமுறை ஜெனிவாக் கூட்டத்தொடர் நடைபெறும் காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு அங்கு சென்று இராஜதந்திரிகளுடன் பேசி, இலங்கை அரசுக்குத் தீர்வு விடயத்தில் அழுத்தங்களைக் கொடுக்க முயற்சிக்க வேண்டுமென கூட்டமைப்புக்குள் ஒருசாரார் கருதுகின்றனர்.
ஆயினும் இது விடயத்தில் கூட்டமைப்பின் தலைமைத்துவம் இதுவரை உத்தி யோகபூர்வமான முடிவு எதனையும் எடுக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், "ஜெனிவாவுக்குத் தமிழ்க் கூட்டமைப்பு செல்வதா, இல்லையா என்பது தொடர்பில் கட்சி ஆராய்ந்து வருகிறது. எனினும், உத்தியோகபூர்வமாக முடிவு எதனையும் எடுக்கவில்லை.
ஜெனிவாவுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் சென்றாலும் அங்கு சென்று பிரேரணையை எங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியாது. ஜெனிவாவில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்துப் பேசுவதை விட அந்தத் தூதுவர்கள் பொறுப்பு வகிக்கும் நாடுகளுடன்தான் நாங்கள் பேச்சு நடத்தி சில காய்நகர்த்தல்களைச் செய்யவேண்டும்.
அந்த இராஜதந்திர செயற்பாட்டை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். அண்மையில் கூட தென்னாபிரிக்கா சென்று நாம் பேச்சு நடத்தி ஆபிரிக்க நாடுகளிடம் எமது பிரச்சினைகளை முன்வைத்துள்ளோம்.
அதேபோல், ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளுக்கு நாம் இராஜதந்திர ரீதியில் விளக்கங்களை அளித்துவருகிறோம். எவ்வாறாயினும், ஜெனிவாவுக்குச் செல்வது தொடர்பில் இப்போது ஆராய்ந்து வருகிறோம்'' என்றார்.
இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதுபற்றித் தெரிவிக்கையில்
இதுகுறித்துச் சில தினங்களில் நாம் ஒன்றுகூடி முடிவெடுக்கவுள்ளோம்.
இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தவுள்ள ஜெனிவா மாநாடு நடைபெறும் நாள்களில் அங்கு பல சர்வதேச நாடுகளின் கூட்ட அமர்வுகள் நடைபெறும். அனேகமாக இந்த அமர்வுகளில் எமது கூட்டமைப்பின் தலைவரும் இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உண்டு.'' என்றார்.

10 பிப்ரவரி 2013

பாதுகாப்பு சபை செல்கிறது இலங்கை விவகாரம்!! முடிவெடுத்தார் நவிப்பிள்ளை!

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையின் பின்னர், இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவுசெய்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.தனக்கு இருக்கும் தற்துணிவின் அடிப்படையிலேயே அவர் இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. ஐ.நா.மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு தொடர்ந்தும் பின்னடித்துவருகிறது.
இந்நிலையில் இம்முறையும் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையொன்றை அமெரிக்கா ஜெனிவாக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளது.
அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு தனது தற்துணிவின் அடிப்படையில் எடுத்துச்செல்கிறார் என்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பின்னர் இலங்கை அரசு மனித உரிமை விடயங்களில் அதிக கவனம் செலுத்தும் என்று உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்தன.
ஆயினும் அந்தப் பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு தொடர்ந்தும் இழுத்தடிப்பைச் செய்துவருகிறது. அத்துடன் நாட்டின் மனித உரிமை விடயங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஐ.நா. முகவர் அமைப்புக்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன் சட்டத்தின் ஆட்சியும் இலங்கையில் கேள்விக்குறியான நிலையில் உள்ளது என உலக நாடுகள் பலவும் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் இலங்கை விவகாரத்தை இம்முறை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் மிகக் கவனமாகக் கையாள்வதற்கு மேற்கு நாடுகளும், இந்தியாவும் தீர்மானித்துள்ளன.
இதன் வெளிப்பாடாக கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணையை விடவும் இம்முறை வரவுள்ள பிரேரணை மிகக் கடுமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பிரேரணை அங்கு நிறைவேற்றப்பட்ட பின்னர், இலங்கை விவகாரத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வதற்கு மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன.
ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தல், ஐ.நா. அமைதிப் படையை நிலைநிறுத்தல், இராணுவ ரீதியான அழுத்தங்கள் வழங்கல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆயினும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் சீனாவும், ரஷ்யாவும் “வீட்டோ’ அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவர இயலாது என்று மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இலங்கை விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என மேற்குலக நாடுகள் விடாப்பிடியாக இருப்பதால் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறும் சாத்தியம் உள்ளதாக கொழும்பு இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

அரசிற்கு எதிராக பலமான கூட்டணி..?

அரசியல் கட்சிகள் 10 மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பு தொடர்பான இணக்கப்பாடு நாளை (11) எட்டப்படவுள்ளது.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இது தொடர்பான விசேட உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடாத்தும் நோக்கில் இந்த புதிய எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
எளிமையான நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து செயற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய சோசலிசக் கட்சி, புதிய சமசமாஜ கட்சி, புதிய இடதுசாரி கட்சி, மவ்பிம தேசிய முன்னணி, ருஹூனு மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் கட்சி, தமிழ் முஸ்லிம் தேசிய பேரவை உள்ளிட்ட கட்சிகள் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்க உள்ளன.
கூட்டமைப்பு கட்சிகள் ஒன்றையொன்று விமர்சனம் செய்யாது பிரச்சாரங்களில் ஈடுபடுவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15, 16 மற்றும் 17ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பாரியளவில் எதிர்ப்பு பேரணிகள் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.