30 ஏப்ரல் 2013

அவுஸ்திரேலியாவிலிருந்து 819 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான முறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை நாடு கடத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
போலி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் வலுவான ஆதரவு காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், அரசாங்கத்தின் குடிவரவுக் கொள்கைகளில் அழுத்தங்களை ஏற்படுத்த முடியாது என அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்க தீவிர கண்காணி;ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
2012 ஜனவரி மாதம் முதல் 2013 ஏப்ரல் மாதம் வரையில் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 3286 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களையும் குழந்தைகளையும் விற்கும் நாடு இலங்கை!

மனித உயிருக்கான மரியாதை அற்றுப்போயுள்ளது.பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர்;குழந்தையை வீசி எறிகின்றனர்.
பெண்கள்,குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக இலங்கை திகழ்கின்றது என்று மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மனமேந்திர தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடற்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தங்காலை கரையின் ஊடாக ட்ரோலர் படகைப் பயன்படுத்தி 35 நாள்களில் ஆஸ்திரேலியாவுக்கு ஆள்களைக் கடத்துகின்றனர்.
வரலாற்றுக் காலத்தில் காணப்பட்ட அடிமைச் சேவக முறைமை இன்று சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளது.
மனித உயிருக்கான மரியாதை அற்றுப் போயுள்ளது. பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர்; குழந்தையை வீசி எறிகின்றனர். சந்தேகநபர்களை பொலிஸார் சித்திரவதை செய்ய முடியாது.
இந்த ஆண்டில் இதுவரையில் இவ்வாறான சித்திரவதைகள் தொடர்பில் ஒரு சம்பவமே பதிவாகியுள்ளது. எனினும், ஏதேச்சாதிகரமாக கைது செய்தல் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராகப் பதிவாகியுள்ளது.
பொலிஸ் நிலையங்களில் ஒரு முறைப்பாட்டை சரியான முறையில் பதிவு செய்யக் கூடிய அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சட்டவிரோதமான உத்தரவுகளை கடைநிலை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய தில்லை. என்றார்.

29 ஏப்ரல் 2013

சர்வதேச மன்னிப்பு சபை புதிய அறிக்கை!

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், தற்போதும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த புதிய அறிக்கையை சர்வதேச மன்னிப்புச் சபை நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடவுள்ளது.
லண்டனில் வைத்தே இந்த அறிக்கையை வெளியிட உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், தற்போதும் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் அது புதிய அறிக்கை ஒன்றை நாளை லண்டனில் வெளியிடுகிறது.
இலங்கையில் நடந்த போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்களை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதிய அறிக்கையை வெளியிடுகிறது. அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் மாயமாவது, ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் தாக்கப்பட்டு வருவது, அந்நாட்டு நீதிபதிகளுக்கு விடுக்கப்ட்ட மிரட்டல்கள், பிபிசி நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது அதன் சேவை துண்டிக்கப்பட்டது, மகளிர் தொண்டு அமைப்பினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் குறித்த தகவல்கள் புதிய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

28 ஏப்ரல் 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய தீர்மானம்!

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மேற்படி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மாநாட்டின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன. அத்தீர்மானங்கள் பின்வருமாறு,

•தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவு செய்யப்படவில்லை.

•பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள், சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்க வேண்டும்.

•ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.

•இந்த முயற்சிகள் வெற்றிபெறமுடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் ஒரு முன்னணியாக, தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும்.

•தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் இதில் சேர விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும்’ என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமெரிக்கத் தூதுவர் வரம்பு மீறுகிறாராம்!

அமெரிக்கத் தூதுவர் வரம்பு மீறிச் செயற்படுகின்றார்அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் வரம்பு மீறிச் செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
1961ம் ஆண்டு வியன்னா பிரகடனத்தின் அடிப்படையில் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய இராஜதந்திரிகளுக்கு அதிகாரம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிங்கள முஸ்லிம் பதற்ற நிலமை குறித்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் மிச்சல் சிசன் கலந்துரையாடியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். திருகோணமலை சிங்கள மக்களினால் முஸ்லிம் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனரா என சிசன், கேள்வி எழுப்பியுள்ளார்.

27 ஏப்ரல் 2013

பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில்தான் நடக்குமாம்!

23வது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நவம்பர் 15 முதல் 17 வரையான காலப்பகுதியில் நடக்கவுள்ளதுபல்வேறு நாடுகளின் எதிர்க்கட்சிகள், அமைப்புகள், மனிதஉரிமைக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போதிலும், 23வது கொமன்வெல்த் உச்சி மாநாடு திட்டமிட்டபடி சிறிலங்காவிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நேற்று நடைபெற்ற கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்குப் பின்னர், பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சரும், கொமன்வெல்த் அமைச்சரவைக் குழுவின் தலைவருமான டிபு முனி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் உச்சி மாநாட்டை நடத்தும் முடிவு அரசுத் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அதனை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“பல்வேறு நாடுகளின் விவகாரங்கள் குறித்து ஒளிவுமறைவின்றி விவாதிக்கப்பட்டது.
இதன்போது, சிறிலங்கா குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆனால், அது குறித்து பகிரங்கமாக கருத்துக் கூற முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்காக சிறிலங்கா செய்து வரும் ஏற்பாடுகள் குறித்து கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா திருப்தி வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

26 ஏப்ரல் 2013

கே.பி., தயா மாஸ்டர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள்!

வசந்த பண்டார 
பிரபாகரன் சிறந்த போராளி. போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் கே.பி., தயா, மாஸ்டர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள். எனவே தமிழ் மக்கள் ஒரு போதும் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் காணி அதிகாரங்களை ரத்து செய்துவிட்டே வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை நாம் எதிர்ப்போம். அத்தோடு இத் தேர்தலை நடத்தினால் அமைச்சர்கள் சிலர் அரசை விட்டு வெளியேறுவார்கள். இதுவே அரசாங்கத்திற்கு சாவு மணியாக அமையும் .
அதேவேளை கே.பி., தயா மாஸ்டர் போன்றோரை வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்கி எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென நினைப்பது அரசாங்கத்தின் முட்டாள் தனத்தை வெளிப்படுத்துகிறது. ஏனென்றால் தமிழ் மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நிராகரிப்பார்கள்.
பிரபாகரனின் பிரிவினை வாதத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் ரீதியாக பிரபாகரனை எதிர்க்கின்றோம். ஆனால் ஒரு போராளி என்ற ரீதியில் பிரபாகரன் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை. கே.பி., தயா மாஸ்டர் போன்றோர் பணத்துக்காக போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள். எனவே தமிழ் மக்கள் இவர்களை ஆதரிக்கமாட்டார்கள் நிராகரிப்பார்கள்.
இத் தேர்தலில் கள்ள வாக்குகளை போட்டு எப்படியாவது வெற்றி பெற அரசாங்கம் முயற்சித்தால் அது சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிக்கும். ஏனென்றால் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள். மறைமுகமான ரீதியிலும் சர்வதேச கண்காணிப்பு முடக்கி விடப்படும்.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி உறுதியாகும். அதன் பின்னர் கூட்டமைப்பு ஈழத்திற்கான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும். மாகாண சபைக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க வேண்டுமெனக் கோரி நீதிமன்றம் செல்லும்.
எனவே வட மாகாண சபை தேர்தலை நடத்துவது மீண்டும் பிரிவினைவாதத்திற்கு ஊக்க மருந்து வழங்கப்படுவதாகவே அமையும். யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்த போதும் வட பகுதியில் சீனித் தொழிற்சாலையோ சீமெந்து உற்பத்தி தொழிற்சாலையோ அல்லது வேறெந்த தொழிற்சாலைகளோ ஆரம்பிக்கப்படவில்லை. இதுவரையில் புகையிரதப் பாதையும் போடப்படவில்லை. இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லை. எம் மக்களது உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எனவே தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்

முப்பது நாட்களேயான குழந்தையை தொடரூந்தில் விட்டு சென்ற தாய்!

30 நாள் குழந்தை 
பிறந்து 30 நாள் ஆன ஆண் குழந்தையோடு. சென்னை எழும்பூரில் இன்று (26.04.2013) காலை புறப்பட இருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெண்மணி ஏறினார். சென்னை எழும்பூர் தாதர் எக்ஸ்பிரஸ் காலை 6.50 மணிக்கு கிளம்ப தயாராக இருந்தது. திடீரென அந்த பெண் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு இறங்கினார். ரயில் புறப்பட்டது. எஸ்.7 கோச்சில் இருந்த அந்த குழந்தை அழு ஆரம்பித்தது.
இதனைப் பார்த்த பயணிகள் ரயிலில் உள்ள டிடிஆருக்கு தகவல் கொடுத்தனர். அவர் எஸ் 7 கோச்சுக்கு வந்து விசாரித்துள்ளார். நடந்ததை பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பீச் ரயில்வே ஸ்டேசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 7.12 மணிக்கு ரயிலை நிறுத்தை குழந்தை அங்கு ஒப்படைக்கப்பட்டது. ஆய்வாளர் பினய் ஆண்டணி, உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி இவர்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.
ராயபுரத்தில் குழந்தைகள் இல்லத்தில் குழந்தையை ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

25 ஏப்ரல் 2013

மாணவியிடம் பாலியல் சேட்டை விட்ட நகரசபை உறுப்பினர்!

ஓட்டமாவடியைச் சேர்ந்த றுபாஸா மஹ்றூப் என்ற மாணவியை காத்தான்குடியில் அவர் கல்வி கற்பதற்காகத் தங்கியிருந்த வீட்டிலிருந்து தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள காத்தான்குடி நகர சபையின்
ஆளுந்தரப்பு உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் மாஸ்டரின் சார்பில் சட்டத்தரணி எம்.ஐ.எம். றகீப் முன்வைத்த முன்பிணை கோரும் மனுவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். அப்துல்லா நேற்று (24.04.2012) வியாழக்கிழமை நிராகரித்தார்.
இவர் அடாவடி அமைச்சர் றிசாத் பதியுதீனின் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
கடந்த 22ம் திகதி திங்கட்கிழமை நண்பகல் அளவில் இச்சம்பவம் காத்தான்குடியை அடுத்துள்ள புதுக்குடியிருப்பு என்னும் தமிழ்க் கிராமத்தில் நடைபெற்றது. காரில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகக் கொடுமைகள் தாங்காது கதவைத் திறந்து கொண்டு வெளியில் பாய்ந்து விடுவேன் என அம்மாணவி விடுத்த எச்சரிப்பையடுத்து நகர சபை உறுப்பினர் காரை நிறுத்தினார். அவ்வேளை இம்மாணவி வீதியில் இறங்கி அழுதவாறு நடந்து சென்றார்.
இதனை அவதானித்த பயணிகள் சிலர் அம்மாணவியிடம் நடந்த விபரத்தைக் கேட்டு அவரை காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள் வந்த நேரத்தில் சம்மௌன அலுவலகம் மூடப்பட்டு இருந்ததால் காத்தான்குடியில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து மக்கள் கூட்டம் அவ்வீட்டை முற்றுகையிட்டது.
காத்தான்குடி பொலிசார் தகவல் கிடைத்து அங்கு வந்து மாணவியிடம் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் மாணவியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரது வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
இதேவேளை, காத்தான்குடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மேற்படி நகர சபை உறுப்பினரை வாழைச்சேனையில் வைத்து பொதுமக்கள் மறுதினம் மடக்கிப் பிடித்தனர். அவரை வாழைச்சேனைப் பொலிசார் பொறுப்பேற்க மறுத்தபோது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை (ஓட்டமாவடி) தவிசாளர் ஹமீதிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
இந்நிலையிலேயே நேற்று காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், உறுப்பினர் அப்துல் லத்தீப் ஆகியோர் கல்முனைக்குச் சென்று சட்டத்தரணி எம்.ஐ.எம். றகீப் மூலமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.
அதனைப் பரிசீலித்த நீதிபதி அப்துல்லா முன் ஜாமீன் கோரிய மனுவை நிராகரித்ததுடன் சந்தெக நபரை உடனடியாகக் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
இதையடுத்து குறித்த நகர சபை உறுப்பினர் தலைமறைவாகியுள்ளார்.
இவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோரின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணி மேடைப் பேச்சாளரும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இயங்கிவரும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களில் பொருளியல் பாடம் கற்பித்து வரும் ஆசிரியரும் ஆவார்.

காலிமுகத்திடலில் குப்பை பொறுக்கினார் அமெரிக்க தூதர்!

மிச்சேல் ஜே சிசன்
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்ட உலக பூமி தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க தூதரகம் ஈடுபட்டது.
அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், தூதரகப் பணியாளர்களுடன் இணைந்து காலிமுகத்திடல் கடற்கரையில் கிடந்த குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

24 ஏப்ரல் 2013

கோத்தாவும் தயாவும் சந்திப்பு!

தயா-கோத்தா 
கோதபாய ராஜபக்ஷவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் என்பவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தயா மாஸ்டருடன் மேலும் 23 பேரையும் கோதபாய ராஜபக்ஷ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வரணி 52ம் படைப் பிரிவு தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில புதிய முகங்களையும் இம்முறைத் தேர்தலில் அறிமுகம் செய்ய ஆளும் கட்சித் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மணல் அள்ள சென்ற மக்கள் மீது படைகள் தாக்குதல்!

முல்லைத்தீவு, மாந்தை மணல் எடுக்கச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களின் சாரதிகளும் பொது மக்களும் சிராட்டிக்குளம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்திய அரசின் நிதி உதவியுடன் கிடைக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்காக உதவி அரசாங்க அதிபரின் அனுமதியோடு சிராட்டிக்குளம் பறங்கி ஆற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை மணல் எடுக்கச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களின் சாரதிகளும் பொது மக்களுமே இவ்வாறு சிராட்டிக்குளம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பறங்கி ஆற்றில் நேற்று மணல் அள்ளச் சென்றோர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அங்குள்ள வீட்டு வேலைக்குத் தேவையான மணலை இனிமேல் எடுத்துவர மாட்டோம் என உளவுயந்திர சாரதிகள் மறுத்துவிட்டனர்.
இதனால் இப்பகுதியில் வீட்டுத்திட்ட வேலைகள் இடைநிறுத்தப்படும் நிலை தோன்றியுள்ளது.
இதே நேரம் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள ஒப்பந்தக்காரர்களால் அமைச்சர்களின் செல்வாக்குடன் வியாபார நோக்கில் தேவையான கிறவல், மணல் மற்றும் மரம் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன.
இது குறித்துப் படையினர் பாராமுகமாகச் செயற்படுகின்றனர்.
வடக்கில் இராணுவமானது சகல சிவில் நிர்வாகங்களிலும் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நான்கு வருடங்களின் பின்பு தமக்குக் கிடைத்த வீடுகளைக்கூட கட்டிமுடிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.
இராணுவத் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதுடன் போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் சுதந்திரமாக தமது வீட்டினைக் கட்டுவதற்குத் தேவையான மணலை அனுமதியுடன் அள்ளவும் பாதுகாப்பான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திரு. வேதநாயகத்திடம் தான் கேட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

23 ஏப்ரல் 2013

துரோகி பட்டம் சூட்டி விடுவார்கள் என சம்பந்தன் அஞ்சுகிறார்-மகிந்த

பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வர முடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
புலம் பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து ஈழம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நிற்கின்றனர். இவ்வாறான நிலையில் எப்படி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும்.
யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஒன்றுபடுத்தி ஒற்றுமைப்படுத்தியுள்ளேன். இந்த நிலையில் மீண்டும் பிரிவினைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுக்கு வரமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தீர்வு விடயத்தில் விருப்பம் கொண்டுள்ளார். ஆனால் அவரால் கூட பேச்சுக்கு வரமுடியாத நிலை காணப்படுகின்றது.
அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி எத்தகைய இணக்கப்பாட்டிற்கு அவர் வந்தாலும், துரோகிப்பட்டமே அவருக்கு கட்டப்படும் என்ற அச்சத்தினாலேயே அவர் பேச்சுக்கு வருவதை தவிர்த்து வருகின்றார்.
கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் சுமந்திரன் எம்.பி. அடுத்த தலைமையை கைப்பற்றும் நோக்கில் செயற்படுகின்றார். அவருக்கு பல பகுதிகளிலிருந்தும் உதவிகள் கிடைக்கின்றன.
கூட்டமைப்பினர் தீர்வினை இந்தியா பெற்றுத்தரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், உள்ளனர். அது சாத்தியமற்ற விடயமாகும்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பினர் வருவார்களேயானால் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.
ஆனால் கூட்டமைப்பினர் ஈழம்தான் தமக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கு நாம் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளை அனுப்புவதில் சிறிலங்கா படைகளுக்கு தொடர்பு!

அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் படகுகளை அனுப்புவதன் பின்னணியில், சிறிலங்கா படைத்தரப்பு தொடர்புபட்டுள்ளது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆட்களை படகுகளில் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதன் பின்னணியில், சில குற்றக்குழுக்களுடன் சிறிலங்கா படைத்தரப்பும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது.
அண்மையில் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற இரு குழுவினர் பிடிபட்டதை அடுத்தே, இந்த நடவடிக்கைகளில் சிறிலங்கா படைத்தரப்புக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அகதிகள் படகுகளை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, முன்னதாக அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் படகுகளை அனுப்புவதன் பின்னணியில் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச இருப்பதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்படத்தக்கது.

22 ஏப்ரல் 2013

வடமாகாணசபை தேர்தல் டக்ளஸ் தனித்து களமிறங்குகிறார்?

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவாணந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி பெரும்பாலும் தனித்துப் போட்டியிடக் கூடும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈபிடிபியும் இடம்பெற்றுள்ள போதிலும், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.
பெரும்பாலும் ஈபிடிபி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே வாய்ப்புகள் உள்ளன.
இதையடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயாநிதி மாஸ்டரை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது குறித்து அவர் உறுதிப்படுத்தாத போதிலும், இன்னும் இரண்டு வாரங்களில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 ஏப்ரல் 2013

நல்லிணக்கம் குறித்துப் பேச பாலிதவுக்கு என்ன அருகதை?சுரேஷ்

சுரேஷ் பிரேமச்சந்திரன் 
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு எதிர்மறையாக அந்த மக்களை அழித்தொழிக்கும் வகையில் செயற்படும் இந்த அரசுக்கோ,பாலித கொஹன்னவுக்கோ நல்லிணக்கம் பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.இவர்கள் இனவாதத்திமிரில் பேசுகின்றனர்.
இதனால் புரிந்துணர்வு ஒருபோதும் உருவாகாதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
“குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை’என்று ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பாகக் கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகளை விசாரணைகள் எதுவுமின்றி சிறைச்சாலைகளில் வைத்திருக்கிறீர்கள்.தொடர்ந்து இவர்களை தடுத்து வைத்திருப்பதன் மூலம் நல்லிணக்கம் வரும் என்று பாலித எண்ணுகின்றாரா?
கைது செய்த சரணடைந்த பலரின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது. இது பற்றி அரசு மௌனமாக உள்ளது.குறைந்தபட்சம் அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா?அல்லது இல்லையா என்று கூடச் சொல்லாமல் நல்லிணக்கம் பற்றிப் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.
போர் முடிந்து 4ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அரசு என்ன செய்துள்ளது?
தமிழரின் பூர்வீக நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்வது,பௌத்த கோயில் அமைப்பது,காணிகளை அடாத்தாகப் பிடித்து இராணுவ முகாம் அமைப்பதுதான் நல்லிணக்கத்தின் வெளிப்பாடா?என்றார்.

20 ஏப்ரல் 2013

வடமாகாண முதல்வர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்?

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பு கொண்டுள்ளதாகவும், அதற்கு அவர் இணங்கியுள்ளதாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தவில்லை.
கொழும்பு சிறி கதிரேசன் மண்டபத்தில் வரும் 26ம் நாள் இடம்பெறவுள்ள தந்தை செல்வாவின் 36வது நினைவுக் கூட்டத்தில், நினைவுப் பேருரையாற்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் உரையாற்றவுள்ளார்.
முன்னதாக, மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோர், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படலாம் என்று ஊகங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது!

ஜெனீவாவில் சுரேஷ் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கொழும்பில் உள்ள பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் நாலாம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் 2 மணிநேரம் இந்த விசாரணை நடந்துள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியொன்று தொடர்பில் வெளியான செய்தியொன்று பற்றியே இந்த விசாரணையின்போது கேள்விகள் கேட்கப்பட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தச் செய்தியில் இராணுவ இரகசியங்கள் வெளியாவதாக, பத்திரிகைக்கு விபரம் தெரிவித்தபோது சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிந்திருக்கவில்லையா என்றும் விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் இரண்டு இலட்சம் பேரில் ஏறக்குறைய ஐந்து பொதுமக்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடமாகாணத்தில் நிலைகொண்டிருப்பதாகத் தான் தெரிவித்தது ஒன்றும் புதிய விடயமல்ல என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
ஏற்கனவே பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளியாகியுள்ள தகவல்களையே தான் கூறியதாகவும் இராணுவ இரகசியம் எதுவும் தெரியாத தன்னால் அது குறித்து எவ்வாறு தகவல்களைச் சொல்ல முடியும் என்றும் விசாரணையின்போது தான் பதில் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வடபகுதியில் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து தாங்கள் தொடர்ச்சியாகப் பேசி வருவது அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதனால், தங்களை மௌனமாக இருக்கச் செய்யும் வகையில் அச்சுறுத்துவதற்காகவே இத்தகைய விசாரணைகள் நடத்தப்படுவதாக தாங்கள் கருதுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
இதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் பிபிசிக்கு அளித்த செவ்வியொன்று தொடர்பில் நாலாம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

19 ஏப்ரல் 2013

புலிகளின் உளவாளி என்று கைதான இளைஞர் விடுதலை!

இராமேஸ்வரம் மண்டபம் முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உளவுத் தகவல் கொடுத்ததுடன், புலிகளின் உளவுப் பிரிவில் இருந்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில் குறித்த இளைஞனை விடுதலை செய்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாத்திற்கும் 2010 மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கிளிநொச்சிப் பிரசேத்தில் வன்செயல்கள் இடம்பெறும் வகையில் விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவில் அங்கம் வகித்ததுடன், இராமேஸ்வரம் மண்டபம் முகாமிலிருந்து உளவுத் தகவல்களை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வழங்கினாரெனவும் குற்றஞ்சாட்டப்பட்டு கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகநாதன் வாசுதேவன் என்ற இளைஞனுக்கு எதிராக மேற்படி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கின் விளக்கம் வவுனியா மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.
இதன் போது எதிரியான ஜெகநாதன் வாசுதேவன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம், சுய விருப்பின் பேரில் வழங்கப்படவில்லையென்பதும், அவர் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்ததாகவும் நிரூபிக்கப்பட்டது.
எனவே குறித்த வாக்கு மூலத்தை சாட்சியாக ஏற்கவில்லையென்றும், வேறுசாட்சியங்களின்மையாலும், நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் குறித்த இளைஞனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

18 ஏப்ரல் 2013

நஞ்சு வைத்தோம், பலிக்கவில்லை, பின்னர் பெற்றோரை வெட்டிக்கொன்றோம்- மகளின் வாக்கு மூலம்

தாயையும் தந்தையும் நஞ்சு வைத்து கொல்வதற்கு ஆரம்பத்தில் திட்டமிட்ட போதிலும் அது வெற்றி அளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வித்ததாக கொல்லப்பட்டவரின் மகள் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.
செங்கலடி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில் கடந்த 8ம் திகதி நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட வர்த்தகரான சிவகுரு ரகு ( 48வயது) அவரது மனைவி விப்ரா ( 41வயது) ஆகியோர் நித்திரையில் இருந்த போது கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடத்தினர். அந்த விசாரணையின் போது கொல்லப்பட்டவரின் மகள் ரகு தக்ஸினாவின் காதலன் சிவநேசராசா அஜந்தன் ( 16வயது) என்பவர் வர்த்தகர் ரகுவுக்கு எச்சரிக்கை விடுத்து சென்ற சம்பவம் தெரியவந்தது.
மகளை காதலிக்க கூடாது என ரகு ஒரு தடவை அஜந்தன் என்ற மாணவனுக்கு எச்சரிக்கை விடுத்த போது உனக்கு செய்து காட்டுறன் வேலை, என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
காவல்துறையினர் அஜந்தன் என்ற அம்மாணவனை கைது செய்து விசாரணை நடத்திய போது பல தகவல்கள் தெரியவந்தது.
இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மகளான ரகு தக்ஸினா(16) மற்றும் அவளின் காதலன் சிவநேசராசா அஜந்தன்(16) கித்துள் கரடியனாற்றை சேர்ந்த குமாரசிங்கம் திலக்சன்(16) செங்கலடியை சேர்ந்த புவிச்சந்திரன் சுமன் (16வயது) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்களாவர்.
கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்திய போது தாங்களே இக்கொலையை செய்ததாகவும், இக்கொலையை தனது காதலி தக்ஸிகாவே செய்யுமாறு தூண்டியதாகவும் கொலையை நடத்திய பிரதான நபரான அஜந்தன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ரகு தக்ஸிகா காவல்துறையினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் அதிர்ச்சி தரும் பல தகவல்களை கூறியுள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் மகளான தக்ஸிகா பின்வருமாறு கூறியுள்ளார்.
நான் அஜந்தனை காதலித்து வந்தேன். பெற்றோர் கடைக்கு சென்ற பின் வீட்டில் தனிமையில் இருவரும் சந்திப்போம். இரு வருடங்களாக ( 14வயதிலிருந்து) அஜந்தனுடன் உடலுறவு கொண்டு வந்தேன்,
இதனை அறிந்த எனது பெற்றோர் காதலுக்கு தடை போட்டனர். எனது காதலுக்கும் அச்சுறுத்தல் விடுத்தனர். இதனால் பெற்றோர் உயிருடன் இருந்தால் காதலுக்கு தடையாக இருப்பார்கள் என கருதியதால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அவர்களுக்கு நஞ்சை போட்டு கொல்ல வேண்டும், அல்லது அவர்களை வெட்டி கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அதனை தான் செய்வதாக எனது காதலன் கூறினார்.
கொலை நடப்பதற்கு முதல் நாள் 7ஆம் திகதி அம்மா அப்பா, சகோதரி, ஆகியோருடன் நான் மட்டக்களப்பு நகருக்கு புதுவருடத்திற்கு உடுப்பு எடுப்பதற்கு சென்றோம். அப்போது எனது காதலனுக்கு கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டு கதவு திறப்பு எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை சொன்னதுடன் சமயலறையில் இருக்கும் சாப்பாட்டிற்குள் நஞ்சை கலந்து விடுமாறு கூறினேன்.
அதன் படி எனது காதலன் வீட்டிற்கு வந்து உணவில் நஞ்சை கலந்து வி
ட்டு சென்றார். மாலை 7மணியளவில் வீட்டிற்கு வந்தோம். எனக்கு பசிக்கவில்லை என உணவை உண்ணவில்லை. அப்போது சகோதரி உணவில் ஏதோ மணப்பதாக கூறினார். எனது தந்தையும் கறியை பார்த்து விட்டு ஏதோ மணக்கிறது என கூறி அதனை உண்ணாது கொட்டி விட்டார்கள்.
இதனால் எமது திட்டம் தோல்வியடைந்தது. எப்படியாவது அன்றிரவு எனது பெற்றோர் இருவரையும் கொல்ல வேண்டும் என திட்டமிட்டேன். காதலனுக்கு தொலைபேசி எடுத்து நஞ்சு கலந்த உணவை அவர்கள் உண்ணவில்லை, அவர்கள் நன்றாக நித்திரை கொண்டபின் தகவல் தருகிறேன். நீங்கள் வந்து அவர்களை கொலை செய்யுங்கள் என கூறினேன், அதன் படி எனது தாயும் தந்தையும் நன்றாக நித்திரை கொண்ட பின் காதலனுக்கு தகவல் அனுப்பினேன். எனது காதலன் இரு நண்பர்களுடன் நள்ளிரவு வேளையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வளவு கேற்றை திறந்து உள்ளே விட்டேன், எங்கள் நாய் குலைத்தது. நாயை ஒருவாறு கட்டுப்படுத்தி விட்டு வீட்டு கதவை திறந்து விட்டேன்.
அவர்கள் மூவரும் எனது பெற்றோர் படுத்திருந்த அறைக்குள் சென்று இருவரையும் வெட்டி கொலை செய்தனர். அதனை நான் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் காதலனையும் நண்பர்களையும் பத்திரமாக அனுப்பி வைத்தேன். அவலக்குரல் கேட்டு அங்கு எனது அம்மாவின் தகப்பனார் வந்தார். எனக்கு எதுவும் தெரியாதது போல நடந்து கொண்டேன்
இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் மகளான தக்ஸிகா என்ற 16வயது மாணவி தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் அனுபவித்த சுமையை இன்று சிங்கள மக்களும் அனுபவிக்கின்றனர்!

அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களாக நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி தனது ஆட்சியை கொண்டு நடத்தியது ஆனால் அதன் பிரதிபலிப்புக்கள் தற்போது ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
இலங்கை உலக நாடுகளிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் இன்று அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன.
யுத்தம் நிறைவடைந்து நாட்டில் ஜனநாயகம் நிலவுவதாக கூறப்படுகின்றது. ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடங்கியுள்ள எந்தப் பரிந்துரையையும் அரசாங்கம் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
அதன் பிரதிபலிப்புக்கள் தற்போது ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன அதிலொன்று தான் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய உதவித் தொகையில் 20 வீதக் குறைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய உலக நாடுகளும் எமது நாட்டுக்கு எதிராக இவ்வாறு செயற்படுமேயானால் அரசாங்கம் அல்ல நாட்டு மக்களே பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.
ஆரம்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களே இவ்வாறான சுமைகளை தாங்கினர். ஆனால் தற்போது சிங்கள மக்களும் இச் சுமையை சுமக்க தள்ளப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

17 ஏப்ரல் 2013

சிங்களத்தின் தான்தோன்றித்தன செயற்பாடுகள் தொடர்கிறது!

attack_002[1]இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளாவளை பகுதியில் தமிழர்கள் மீது இனந்தெரியாத சிங்கள கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 பேர் அடங்கிய இந்த குழு, ஏற்கனவே வெள்ளாவளை இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்கதல்களுடன் தொடர்புடைவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை அவர்கள் கோவில் நிர்வாக சபை உறுப்பினர்களையே தேடி வந்துள்ளனர். எனினும் அவர்கள் அங்கு இல்லாத நிலையில், கோவில் நிர்வாக சபையின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் 3 தமிழர்கள் காயமடைந்த நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16 ஏப்ரல் 2013

சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுமியர்களை காணவில்லை!

யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் மற்றும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள பிள்ளைகள் சார்பாக இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் இராஜசிங்க தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாக கைதடியில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் 35 மேற்பட்ட சிறுவர்கள் வாழ்ந்துவருவதாகவும் அண்மைக்காலமாக இவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விரக்கதியடைந்த சிறுமி ஒருவர் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் ஏனைய பெண் பிள்ளைகளால் இது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இது தொடர்பில் சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் கேட்டபோது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் 10 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும் இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்த்தரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்த்தரிடம் கேட்டபோது இது தொடர்பான தகவல்களை தன்னால் தரமுடியாது என்றும் அவ்வாறு தகவலை தான் வெளியில் சொன்னால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எற்கனவே நான்கு வருடங்களில் 10 மேற்பட்ட இடமாற்றங்களைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வட இலங்கை மக்கள் அரசு மீது கடும் கோபம்!

மேலோட்டமாக பார்ப்பதற்கு அமைதியும் நிம்மதியும் நிலவுவது போலத் தோன்றினாலும், இலங்கையின் வட பகுதியில் உள்ளே மக்களிடையே கடும் கோபமும் குறைகளும் உள்ளன என்று அங்கு அண்மையில் சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவின் ஒரு உறுப்பினர் கூறுகிறார்.
போருக்கு பின்னர் வட மாகாணத்தில் சிறிதளவு அமைதி திரும்பியிருந்தாலும், அங்குள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனதில் நிறைய குறைகள் இருக்கின்றன என்று அக்குழுவின் ஒரு உறுப்பினரான சௌகத ராய் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
போர் முடிந்த பிறகு குறைகளைத் தீர்த்து, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் நடவடிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை என்றும், 13 ஆவது சட்ட திருத்தத்திலுள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்துவது, நல்லிணக்க ஆணைக் குழுவின் அபரிந்துரைகளை அமல்படுத்துவது ஆகியவை தொடர்பிலும் முன்னேற்றம் இல்லை என்றும் தமிழ் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பில் ஒரு கால அட்டவணையும் நிர்ணயிக்கப்பட வேண்டும் எனக் கூறும் அவர், அது மக்கள் மனதில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் முதல்படியாக அது அமையும் எனக் கூறுகிறார்.
இலங்கையில் தாங்கள் கண்டது, கேட்டது பற்றி இந்திய அரசிடமும் நாடாளுமன்றத்திலும் பேசப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசு இனப்பிரச்சினைகான தீர்வைக் காணும் எனும் நம்பிக்கை தனக்கு இல்லை எனவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், அது இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் எனும் காரணத்தாலேயே ஜனாதிபதியைச் சந்திப்பதில் இந்தக் குழு ஆர்வம் காட்டவில்லை என்றும் சவுகத் ராய் கூறுகிறார்.
இறுதிகட்ட போரின் போது நடந்ததாகக் கூறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்கள் ஐ நா மனித உரிமைகள் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து தமது குழு அதிகம் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தி:பி.பி.சி.தமிழோசை 

15 ஏப்ரல் 2013

காதலன் மூலமாக பெற்றோரை படுகொலை செய்த கொடூர மகள்!(எச்சரிக்கை!படம் கோரமானது)

தன் காதலுக்காக மகளே தன் காதலனை கொண்டு பெற்றோரை கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி செங்கலடி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில், செங்கலடி விப்ரா மளிகை கடை உரிமையாளரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி ரகு விப்ரா ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் கொல்லப்பட்டவர்களின் மகள் மற்றும் அவரின் காதலன், காதலனின் நண்பர்கள் என நான்கு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்கள். இவர்களே இந்த கொலையை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
16வயதான அந்த மாணவி தனது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து காதலன் மூலமாக பெற்றோரை கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ தினம் இரவு மயக்கம் அடையக்கூடிய மருந்து ஒன்றை பெற்றோர் உண்ட சாப்பாட்டில் கலந்திருக்கிறார்.
பெற்றோர் நித்திரைக்கு சென்றதும் தன் காதலனுக்கு தகவல் கொடுத்ததாகவும், 16வயதுடைய அந்த மாணவனும் அவரின் நண்பர்கள் இருவரும் வீட்டிற்குள் புகுந்து இந்த கொலையை செய்து விட்டு தப்பி சென்றதாகவும் தெரியவருகிறது.

மாணவர் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா என்கிறார் குணதாச!

தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்பு போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழகத்துடன் அமெரிக்காவிற்கு பிரத்தியேக உறவுகள் காணப்படுகின்றன.
அண்மையில் முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருந்தார்.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் சாதாரண மக்களினால் முன்னெடுக்கப்படவில்லை.
இலங்கையில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருத வேண்டும்.
ஜெயலலிதா சிறந்த நடிகை என்ற போதிலும் புத்தியுடையவரல்ல.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டவும், தமிழகத்தில் சாதாரண மக்களின் இன உணர்வுகளைத் தூண்டவும் சிலர் முயற்சிக்கின்றனர்.
சீன, இந்திய எழுச்சி காரணமாக அமெரிக்கா வலுவிழந்து செல்கின்றது.
எனவே ஆசிய பிராந்திய வலயத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதனை அமெரிக்கா விரும்புகின்றது.
தமிழகத்தில் தனி ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு குழப்பங்கள் விளைவித்தால் அது அமெரிக்காவிற்கு சாதகமாகவே அமையும் என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

14 ஏப்ரல் 2013

9 கருணை மனுக்களை நிராகரித்தார் பிரணாப் முகர்ஜி!

பிரணாப் முகர்ஜி கடந்த 9 மாதத்தில் 9 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.மூலம் 14 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி ஆகி உள்ளது.பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அவர் கடந்த 9 மாதங்களில் அடுத்தடுத்து பல தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுத்துள்ளார். மொத்தம் 9 கருணை மனுக்களை அவர் நிராகரித்துள்ளார். இதன் மூலம் ஒரு பெண் உட்பட 14 பேருக்கு தூக்கு தண்டனை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் பிரணாப் தள்ளுபடி செய்த முதல் கருணை மனு, மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்பின் மனுவாகும். 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் தூக்கில் போடப்பட்ட முதல் குற்றவாளி கசாப்தான். அடுத்ததாக சொத்து தகராறில் 3 உறவினர்களை கொலை செய்த அத்பீர் என்பவரின் கருணை மனுவை ஏற்று, அவரது தண்டனையை ஆயுள் சிறையாக பிரணாப் குறைத்தார். இதை தொடர்ந்து கடந்த ஜனவரியில் சாய்மன்னா நதிகாரின் கருணை மனுவையும், பிப்ரவரியில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்ற அப்சல் குருவின் கருணை மனுவையும் நிராகரித்தார். பின்னர், வீரப்பன் கூட்டாளிகளான சைமன், ஞானபிரகாசம், மாதையன், பிலேந்திரன் ஆகியோரது கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதை தொடர்ந்து பலபேரை கொன்ற சுரேஷ் மற்றும் ராம்ஜி, குர்மீத் சிங், ஜாபர் அலி ஆகியோரது தூக்கு தண்டனையை பிரணாப் முகர்ஜி உறுதி செய்தார். பிறகு, பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த தரம்பால், மற்றும் தனது பெற்றோர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 8 பேரை கொலை செய்த அரியானா முன்னாள் எம்.எல்.ஏவின் மகள் சோனியா, அவளது கணவர் சஞ்சீவின் கருணை மனுவை அவர் நிராகரித்தார்.இதற்குமுன் ஜனாதிபதிகளாக இருந்தவர்களில் சங்கர் தயாள் சர்மா தனது பதவி காலத்தில் வந்த 14 கருணை மனுக்களையும் நிராகரித்தார். கே.ஆர்.நாராயணன் தனக்கு வந்த 10 மனுக்களில் ஒன்றை கூட பைசல் செய்யவில்லை. பின்னர் பதவி ஏற்ற அப்துல் கலாமுக்கு புதிதாக 16 கருணை மனுக்களும் வந்தது. ஆனால், 2 மனுக்கள் மீது மட்டுமே அவர் முடிவு எடுத்தார். பிரதிபா பாட்டீல் தனது பதவி காலத்தில் மொத்தம் 34 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் உட்பட மொத்தம் 3 மனுக்களை அவர் நிராகரித்தார்.இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவை கொல்ல கார் குண்டு வைத்த தேவேந்தர் பால் சிங் புல்லரின் கருணை மனுவையும் அவர் நிராகரித்தார்.

13 ஏப்ரல் 2013

புல்லர் வழக்கின் தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தாது-அற்புதம்மாள் நம்பிக்கை

புல்லர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமது மகனின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புல்லர் வழக்கு தீர்ப்பு 1993ஆம் ஆண்டு டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் பஞ்சாப்பைச் சேர்ந்த புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2003-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியிருந்தார். அந்த மனு 2011ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. 8 ஆண்டுகாலம் கழித்து தமது கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை நேற்று நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யா பெஞ்ச், குடியரசுத் தலைவர் காலதாமதமாக கருணை மனுவை நிராகரித்தார் என்பதற்காக தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க முடியாது என்று கூறி புல்லர் மனுவை நிராகரித்தார். 7 தமிழர் வழக்கு இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்ட 3 தமிழர்களும் தங்களது கருணை மனுவை 11 ஆண்டுகாலம் கழித்து குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் தங்களது தூக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதும் இதே நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்த உள்ளது. இதனால் புல்லர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு 3 தமிழர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. மேலும் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் தங்களுக்கு விதிக்கபட்ட தூக்கை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலும் புல்லர் வழக்கின் தீர்ப்பு எதிரொலிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அற்புதம் அம்மாள் நம்பிக்கை இந்நிலையில் ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் புல்லர் வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது பயத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் புல்லர் வழக்கு வேறு. என் மகன் மீதான வழக்கு வேறு. புல்லர் வழக்கின் தீர்ப்பு என் மகன் வழக்கில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன். வழக்கறிஞர்கள் எங்களுக்கு நம்பிக்கையான தகவல்களையே தந்து வருகின்றனர். நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம். உலக நாடுகள் தூக்கு தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த இந்தியாவில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது. தமிழகத்திலேயாவது தூக்கு தண்டனையை ஒழிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக ஆக்க வேண்டும். சட்டசபையைக் கூட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் மனு அளித்து என் மகனை தன்னிடம் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

12 ஏப்ரல் 2013

மூன்று தமிழர்களையும் தமிழக முதல்வரால் காப்பாற்ற முடியும்!

ஜெயலலிதா ஜெயராம் 
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தாம் அனுப்பிய கருணை மனுவை தாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார்.
இதனால் தமது தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்பது 1993ம் ஆண்டு 9 பேர் பலியான குண்டு வெடிப்பில் சிக்கிய பஞ்சாப்பை சேர்ந்த புல்லரின் கோரிக்கை.
இவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் கருணை மனுவை தாமதமாக நிராகரிப்பதை ஒரு காரணமாக ஏற்று தூக்கை குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
இதே புல்லர் வழக்குடன் சேர்த்துதான் ராஜிவ் வழக்கில் 3 தமிழர்களின் மனுவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போதைய தீர்ப்பின் தாக்கம் அந்த வழக்கின் தீர்ப்பிலும் இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் தாக்கம் மூன்று தமிழர் வழக்கின் தீர்ப்பிலும் நிச்சயமாக இருக்கும்.
அதில் சந்தேகம் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் என்னமாதிரியான தீர்ப்பு அளித்தாலும் அதிலிருந்து மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்.
மூன்று தமிழருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் என்ன மாதிரியான தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் கூட தமிழக சட்டசபை தீர்மானத்தின் அடிப்படையில் மூவரையும் முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

11 ஏப்ரல் 2013

அமெரிக்க தூதரின் கோரிக்கை நிராகரிப்பு!

micel_sison_001[1]இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல் தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசேன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
1957ம் ஆண்டு இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில் குற்றமாகும்.
இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான விசாரணை அறிக்கையை வெளியிட நேரிடும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் சர்ச்சைகள் எழக்கூடுமெனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் இராணுவ விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 ஏப்ரல் 2013

சுயாட்சியுடன் கூடிய இடைக்கால அரசே உடனடித்தேவை!

இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்குத் தீர்வு எதுவும் கிடைக்காது என்பதால், நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்டும் வரைக்கும் சுயாட்சியுடன் கூடிய இடைக்கால மாகாண அரசு ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர். இந்தியத்துணைத் தூதரகத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் ஆயர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
அந்தச் சந்திப்பில் அனைத்துத் தரப்பினராலும் ஒற்றுமையுடன் இடைக்கால அரசு ஒன்றுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது “தமிழ்மக்கள் தமது பிரச்சினைக்கான தீர்வாக எதனை விரும்புகிறார்கள்? அதற்கு இந்தியா எந்த வகையில் உதவமுடியும்?” என்று இந்திய தூதுக்குழுவினர் வினவினர்.
அதற்குப் பதிலளித்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகள், “தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுவதற்கு முன்பதாக தற்போது இடம்பெறும் இனஅழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
முல்லைத்தீவில் ஓர் இரவில் 9 ஆயிரம் சிங்களவர்களைக் கொண்டு வந்து குடியேற்றுகின்றனர். தமிழர் தாயகப் பிரதேசங்களில் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் விதத்தில் அரசு செயற்படுகின்றது.
வலி. வடக்கு மக்கள் சொந்த இடங்களுக்குச் சென்று மீளக்குடியமர முடியாமல் இருக்கின்றனர். அவர்களது நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முடக்கப்பட்டு, அங்கு இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர். மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.
மக்கள் சுதந்திரமாக ஒன்று கூடி கதைக்க முடியாத நிலைமை இருக்கின்றது. எங்கும், எதிலும் இராணுவத்தினரின் தலையீடுதான். இதனால் மக்களால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாதுள்ளது.
மேலும் இறுதிக் கட்டப் போரில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர். ஐ.நாவால் நியமிக்கப்பட்ட குழுக்கள் கூட 40 ஆயிரம்பேர், 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தப் பாதிப்பை எதிர்கொண்ட மக்களுக்கு இதுவரையில் எதுவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இது திட்டமிட்ட இனப்படுகொலை. இதனை இந்தியா ஏற்க வேண்டும்.
இந்த தமிழின அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் திட்டமிட்டரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக வடக்கு கிழக்கில் சர்வதேசத்தின் அல்லது இந்தியாவின் கண்காணிப்பின் கீழ் இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பிரிக்கப்பட்ட எமது தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கு மீளவும் இணைக்கப்பட வேண்டும். இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு போதும் தமிழர்களுக்கு நிரந்தத் தீர்வாக அமையாது. மேலும் இந்த அரசு 13 ஆவது திருத்த சட்டத்தில் மாகாண சபைகளுக்கு கொடுத்த அதிகாரங்களையும் மீளவும் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் மாகாணசபையினாலோ அல்லது அதனைக் கொண்டிருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தினாலேயோ தமிழர்களுக்கு நிரந்தரமான எந்தத் தீர்வையும் பெற முடியாது.
மாகாணசபை முற்று முழுதாக ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே 13 ஆவது திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு செயற்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
யாழ். வந்த இந்தியக்குழுவில் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகத்தா றோய், பாரதீய ஜனதாக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரகாசு ஜவதேகர், அனுராக்தாகூர், பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனஞ்ஜய்சிங், இந்திய தேசியக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்தீப் தீக்ஷித், மதுகௌட் ஜக்சு ஆகியோரும் இந்திய உயர்மட்ட தூதுக் குழுவைச் சேர்ந்த இந்திய அபிவிருத்தி கூட்டு நிர்வாகம், வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலர் எஸ்.இராகவன், இந்திய நிதி ஆலோசகரும், வெளிவிவகார அமைச்சின் சிறப்புச் செயலருமான பமல் ஜீங்கா ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இவர்களை தமிழர் தரப்பு சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், க.சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்கள் எனப் பலரும் சந்தித்தனர்.

09 ஏப்ரல் 2013

சிறிலங்கா நிலைமைகள் தொடர்பில் அமெரிக்கா கவலையாம்!

சிறிலங்காவில் அதிகரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த உணர்வுகளால் முஸ்லிம்களை வதைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படும் வெளிநாட்டுச் செய்தியாளர்களை அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், நேற்று சந்தித்துப் பேசினார்.
சிங்கள பௌத்த தேசியவாதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க உரைகள், இழிவுபடுத்தல்கள், முஸ்லிம்களின் வணிகம் மற்றும் வழிபாட்டு இடங்களின் மீதான தாக்குதல்களின் பின்னணியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளான பின்னரும் தொடரும் உள்ளூர் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் குறித்தும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான எண்ணற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள், தாக்குதல்களை அதிகாரிகள் தடுக்க இயலாதுள்ளமை குறித்தும் அமெரிக்கத் தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார்.

08 ஏப்ரல் 2013

மக்களைக் காக்க தவறிய இலங்கை-ஐ.நா. பணிக்குழு

"பொதுமக்களை வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்வதிலிருந்தும், அவர்களைக் காப்பாற்றும் கடப்பாட்டிலிருந்தும் இறுதிப்போரின் போது இலங்கை தவறிவிட்டது''
இவ்வாறு ஐ.நா. பணிக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக நிலுவையில் இருக்கும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகல முறைப்பாடுகளையும் துரிதகதியில் விசாரித்து அவற்றை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அரசை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் அல்லது தன்முயற்சியின்றி காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழு கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஐ.நா. பணிக்குழு நிறுவப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இலங்கை அரசுக்கு காணாமல் போனோர் தொடர்பாக 12 ஆயிரத்து 433 சம்பவங்கள் தொடர்பாக அறிவித்திருக்கின்றது.
இவற்றில் 40 சம்பவங்கள், அவைகளுக்குரிய இடங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், 6 ஆயிரத்து 535 சம்பவங்கள் அரசு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் தீர்க்கப்பட்டன. இதைவிட 222 சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருந்தமையால் அவை நீக்கப்பட்டன. எனினும் 5ஆயிரத்து 676 சம்பவங்கள் தீர்க்கப்படாமல் எஞ்சியுள்ளன.
இவற்றில் 4 சம்பவங்களை அவற்றின் அவசரத்தன்மை கருதி உடனடியாகத் தீர்க்குமாறு இலங்கை அரசைக் கேட்டிருந்தோம். மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளர் லலித் வீரராஜா மற்றும் நாம் இலங்கையர் மணவர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமற் போனமை, இந்திய வம்சாவளியினரான தொழிலதிபர் இராமசாமி பிரபாகரன் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி சிவில் உடையில் வந்தவர்களால் கடத்தப்பட்டமை, திருமதி வசந்தமாலா பத்மநாதன் என்பவர் வவுனியாவில் ஒரு வங்கிக்கு அருகில் 2011ஆம் ஆண்டு மே 4ஆம் திகதி புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை என்பனவே அந்தச் சம்பவங்களாகும்.எனினும் இவை குறித்து முன்னேற்றகரமான பதில் எதுவும் இலங்கை அரசிடமிருந்து கிடைக்கவில்லை.
சகல மக்களும் வலுக்கட்டாயமாக காணமற் போகச் செய்வதிலிருந்து காப்பற்றப்பட வேண்டும் என்ற பிரகடனத்தை செயல்படுத்துவதில் இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் எதிர் நோக்கப்பட்ட இடையூறுகள் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு மே 4 ஆம் திகதி ஐ.நா. பணிக்குழு இலங்கை அரசுக்கு அனுப்பிய குற்றச்சாட்டுகளுக்கும் இலங்கை அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அத்துடன் இது குறித்து 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 ஆம் திகதி அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மாத்தளைப் புதைகுழியில் கோத்தாவின் பங்கு – கருத்து வெளியிட மறுத்த பேச்சாளர்

Mohan_Samaranayake_மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரத்தில் சிறிலங்காப் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச குற்றங்களுக்கு உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டுக் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளார் சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க.
மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி குறித்து அதிபர் ஆணைக்குழுவை நியமிக்க சிறிலங்கா அதிபர் முடிவு செய்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
அவரிடம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று மாத்தளைப் புதைகுழி விவகாரத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும் தொடர்புள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து கேள்வி எழுப்பியது
அதற்கு, அவர் அதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்து விட்டார்.
அதேவேளை,அதேவேளை, மாத்தளைப் புதைகுழி தொடர்பாக விசாரிக்க அதிபர் ஆணைக்குழுவை நியமிக்கப் போவதான சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பை ஜேவிபி நிராகரித்துள்ளது.
காலத்தை இழுத்தடிக்கவே சிறிலங்கா அரசாங்கம் அதிபர் ஆணைக்குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விவகாரம்
குறித்து முறைப்படியான நீதிமன்ற விசாரணைகளே நடத்தப்பட வேண்டும் என்றும் ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

07 ஏப்ரல் 2013

மோசமான கூட்டணியில் சிறிலங்கா – நியுயோர்க் ரைம்ஸ்

அனைத்துலக அளவில் ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஐ.நா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட மிகவும் முக்கியமான- ஆயுத வர்த்தக உடன்பாட்டின் மீதான வாக்கெடுப்பை சிறிலங்கா புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
154 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டுக்கு எதிராக ஈரான், வடகொரியா, சிரியா ஆகிய நாடுகள் வாக்களித்திருந்தன.
இந்த வாக்கெடுப்பின் போது வாக்களிக்காமல் புறக்கணித்த 23 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்றாகும்.
சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஸ்யா, குவைத், கட்டார் ஆகிய நாடுகளும் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
இந்தநிலையில், கொழும்பில் தற்போதைய ஆட்சியை கடுமையாக விமர்சித்து வரும் ‘நியுயோர்க் ரைம்ஸ்‘, இந்த வாக்கெடுப்பை புறக்கணித்த 23 நாடுகளில் பல, அண்மைக்காலத்தில் மனிதஉரிமைகள் விடயத்தில் மாசமான பதிவுகளைக் கொண்டிருப்பவை என்று விமர்சித்துள்ளது.
பாஹ்ரெய்ன், மியான்மார், சிறிலங்கா போன்ற நாடுகளைச் சுட்டிக்காட்டி, இது ‘மோசமான கூட்டணி‘ என்றும் ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

06 ஏப்ரல் 2013

சிறிலங்காவை அண்மிக்கும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள்!

சிறிலங்காவை அண்டிய கடற்பரப்பில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சஞ்சரிப்பதாக இந்திய ஊடகமான ஹெட்லைன்ஸ் ருடே தகவல் வெளியிட்டுள்ளது.
இந்து சமுத்திர கடற்பரப்பில் அடிக்கடி சீன அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் சஞ்சரித்துள்ளதாகக் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இனந்தெரியாத 22 நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய மற்றும் சிறிலங்கா கடற்பரப்பில் சஞ்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்திய, அமெரிக்க புலனாய்வுத் தகவல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்து சமூத்திரப் பகுதிக்குள் சீனாவின் நீர்மூழ்கிகள் சவால் எதுவுமின்றி பிரவேசிப்பது இந்திய கடற்படைக்கு மிகவும் குழப்பகரமான விடயமாக அமையும்.
இந்தியாவின் அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு 90 கிலோமீற்றர் தொலைவில் சீனாவின் நீர்மூழ்கி காணப்பட்டதென்ற சந்தேகம் தொடர்பாடல் ஒன்றின் மூலம் ஏற்பட்டிருந்ததாக ஹெட்லைன்ஸ் ருடே தகவல் வெளியிட்டுள்ளது.
மலாக்கா நீரிணைக்கு வடமேற்கில் ஆறு தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காவுக்கு தெற்கே 13 தொடர்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அரபிக் கடலுக்கு அப்பால் இரு தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீர்மூழ்கிக் கப்பல்களை இவ்வாறு பயன்படுத்தக் கூடிய வல்லமை சீனாவிற்கு மட்டுமே காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் கோடிப் புறத்துக்குள் ஊடுருவதற்கு சீனாவின் நீர்மூழ்கிகள் தயாராகிக் கொண்டிருக்கக் கூடும் என்று
அந்த ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.

05 ஏப்ரல் 2013

தமிழகம் சிங்கத்தை சீண்டிப்பார்க்கக் கூடாது-மேர்வின்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என சிறீலங்காவின் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.தமிழகத்துடன் சிறந்த உறவுகள் காணப்படுகின்றது,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
எனினும் உறங்கும் சிங்கத்தை எழுப்பி காயமடைய வேண்டாம். இலங்கைக்கு எதிராக தமிழக திரைநட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும் விமர்சித்துள்ள அவர், உண்மையான ஹீரோக்களாக இருந்தால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும் அதை இடைநடுவில் கைவிட்டிருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டினர் சிங்கத்தை சீண்டிப்பார்க்க முயற்சிக்கக் கூடாது அவ்வாறு சிங்கத்தை சீண்டுவதால் தமிழகம் காயமடையப் போகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

04 ஏப்ரல் 2013

கொரியக் குடாநாட்டில் போர் வெடிக்கும் அபாயம் - கலக்கத்தில் சிறிலங்கா

கொரிய குடாநாட்டில் அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் சிறிலங்காவை கலக்கமடையச் செய்துள்ளது.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கொரிய குடாநாட்டில் போர் வெடித்தால் அது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அச்சம் கொண்டுள்ளது.
தென்கொரியாவில் சுமார் 20 ஆயிரம் சிறிலங்கர்கள் பணியாற்றி வருகின்றனர்.
போர் வெடித்தால், இவர்கள் வேலையிழந்து சிறிலங்கா திரும்பும் நிலை ஏற்படும்.
அதனால் பாரிய அந்நியச் செலவாணி இழப்பு சிறிலங்காவுக்கு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு இது பேரிடியாக அமையும்.
அதேவேளை, கொரிய குடாநாட்டில் போர் வெடித்தால், தென்கொரியாவில் உள்ள 20 ஆயிரம் சிறிலங்கர்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றி கொழும்புக்கு அழைத்து வருவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஆலோசனைகளை நடத்தியுள்ளது.
இந்த விடயத்தில் அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பு ஆகியவற்றின் உடனடி உதவிகளைப் பெறுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதிகளவிலான சிறிலங்கர்களுக்கு தென்கொரியா அண்மைக்காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.
சிறிலங்காவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சேவை, உற்பத்தி, மற்றும் கட்டுமானத்துறைகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.