31 ஜூலை 2013

தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

கஜேந்திரகுமார் 
வடமாகாண சபைத் தேர்தல்!
எமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே!
சிறீலங்கா அரசும் அதனுடைய சர்வதேச ஆதரவு சக்திகளும் தமிழ் அரசியலின் தேசியவாத சிந்தனையை இல்லாது ஒழித்து 13ம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதி;ர்வரும் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதான அறிவிப்பை இவ் அறிக்கை ஊடாக வெளிப்படுத்துகின்றது.
1987 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற பெயரில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு எம்மீது திணிக்கப்பட்ட நாளில் இருந்து அதனை தமிழ் மக்கள் நிராகரித்து வந்துள்ளார்கள். காரணம் மாகாணசபைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை துளியேனும் திருப்திப்படுத்தாதது மட்டுமல்ல, பேரெழுச்சி பெற்று நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடூர கரங்களில் இருந்து எமது தேசத்தின் இருப்பை பாதுகாக்க எந்த வழியிலும் உதவப் போவதுமில்லை என்பதுமாகும்.
இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயக பூமி என்பது எமது திண்மமான நிலைப்பாடு. தமிழர் தேசத்தை இருகூறிட்டு வடமாகாண சபைத் தேர்தலை நடாத்தி தமிழ் மக்களின் தேசிய அரசியலை வடமாகாணத்திற்குள் முடக்கிவிட சிங்களம் கங்கணம்கட்டி நிற்கின்றது.
எமது சம்மதமின்றி எம்மீது திணிக்கப்பட்ட ஓர் அரசியல் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை, அதனைத் தொட்டுப்பார்க்கத் தாயராகவும் இல்லை. மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் வழங்குவதனை எத்தகைய காரணங்களினாலும் நியாயப்படுத்திவிட முடியாது என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இது எமது தேசிய உரிமைப் போராட்டத்தின் ஆன்மாவை உலுக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
அறிவிக்கப்பட்டுள்;ள மாகாணசபைத் தேர்தலின் புறச்சுழலை அவதனிக்கும்போது உரிமைக்கான எமது போரட்டம் பதவிக்கான போரட்டமாக மாற்றப்பட்டு விட்டதென்ற வேதனையான உண்மை எம்மை கலங்கவைகிறது. மேலதிகமாக, தமிழ்த் தேசிய அபிலாசைகளை பிரதிபலிக்கின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும் தரப்புக்கள் இந்த மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் கொடுப்பதன் ஊடாக ஒரு இன அழிப்பில் இருந்து தமிழ்த் தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்ற இனப்பிரச்சினையின் பரிமாணத்தை மாற்றி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் இருக்கக் கூடிய ஓர் அதிகாரப் போட்டி என்ற புதிய வடிவத்தை கொடுப்பதற்கு துணைபோகின்றனர்.

எம் உறவுகளே…
வெளிசத்திகள் தத்தமது நலன்களை இத்தீவில் நிலைநிறுத்திக்கொள்வதற்காக இத்தேர்தலில் தமிழ் மக்களை முழுமையாகப்பங்கேற்க வைத்து மாகாணசபையை தீர்வாக ஏற்றுக்கொண்டுள்ளனர் எனக்காண்பிக்க முயல்கின்றன. அந்த யதர்த்தத்தினை உணர்ந்து தமிழ் மக்களின் நலன்களை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக புறக்கணித்து நிற்கின்றது. எமது ஆதரவு எந்த ஒரு கட்சிக்கோ, சுயேட்சைக் குழுவிற்கோ இல்லை. நாம் இத்தேர்தலில் தம்மை ஆதரிப்பதாக கூறுபவர்களிடத்தில் விழிப்பாக இருக்குமாறும் தயவாக வேண்டுகின்றோம்.
இத்தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் மாகாண சபைகளைத் தமிழ்மக்கள் தீர்வாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என யாரும் காட்ட முற்படின் அது 26 ஆண்டுகாலம் மாகாண சபைகளை நிராகரித்து நடைபெற்;ற உரிமைப் போராட்டத்தில் உயிர் நீர்த்த அனைத்து ஆன்மாக்களுக்கும் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகவே நாம் பார்க்கின்றோம். இத்தேர்தலில் பங்குபற்றுவதா? வாக்களிப்பதா? யாருக்கு வாக்களிப்பது? போன்ற தீர்மானங்களை நாம் ஒவ்வொரு தமிழ் மக்களின் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

30 ஜூலை 2013

வன்னி வரும் நவநீதம்பிள்ளை இரணைமடுவில் இறங்குவார்!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட ஓடுபாதை வழியாகவே வன்னிக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தெரியவருகிறது.ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் உண்மையைக் கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இவரது பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய,ஐ,நா மனித உரிமைகள் ஆணையாளரின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆப்ரஹாம் மதாய் தலைமையிலான குழுவொன்று கடந்த வாரம் இலங்கை வந்திருந்தது.நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், தனியார் விமானம் மூலமே, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்வதற்கே ஐ.நா அதிகாரிகள் விருப்பம் கொண்டிருந்தனர்.ஆனால், இலங்கை அரசு தனது விமானப்படை விமானங்களில் பாதுகாப்பாகப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.இலங்கை விமானப்படையின் ஹெலி ருவர்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் அல்லது ஹெலிகளில் நாட்டின் எந்தப் பகுதிக்கும் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகளிடம், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி,முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவுள்ளனர். இந்தக் குழுவினர், விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு, இலங்கை விமானப்படையால் திருத்தியமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இரணைமடு ஓடுதளம் வழியாகவே பயணத்தை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவநீதம்பிள்ளையின் பயணத்துக்கு ஐ.நா ஒற்றை இயந்திர விமானத்தையே தெரிவு செய்ததாகவும், ஆனால் இலங்கை விமானப்படை,இரட்டை இயந்திர விமானத்தை சேவையில் ஈடுபடுத்துவதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.நவநீதம்பிள்ளையின் பயணத்துக்குத் தனியார் விமானத்தைப் பயன்படுத்தினாலும்,கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்கள் தவிர,நாட்டில் உள்ள ஏனைய அனைத்து விமான நிலையங்களும் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால்,தனியார் விமானங்களும் அவற்றையே பயன்படுத்தியாக வேண்டும் என்றும் ஐ.நா அதிகாரிகளிடம் இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கை விமானப்படை விமானத்தில் நவநீதம்பிள்ளை குழுவினர் வடக்கு,கிழக்குப் பகுதிகளுக்கு அச்சமின்றிப் பயணம் செய்ய முடியும் என்று ஐ.நா அதிகாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட போதிலும், ஹெலி ருவர்ஸ் விமானங்களில் பயணிக்கும் யோசனையை ஐ.நா குழு நிராகரித்து விட்டது.இலங்கை விமானப்படை குடியியல் விமானப் போக்குவரத்து நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலும்,அதில் பயணம் மேற்கொள்வது தவறான விம்பத்தைக் காட்டும் என்பதால்,ஐ,நா இந்த வாய்ப்பை விரும்பவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

29 ஜூலை 2013

தமிழரசுக் கட்சி வேட்புமனுத்தாக்கல்!

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசுக் கட்சி இன்று மதியம் 12 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யும் மூன்றாவது கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் சார்பில் வடக்கு தேர்தல் களத்தில் எழிலனின் மனைவி!

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட தலைமைச்செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர். இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
36 பேரைக்கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர்.இதில் 48ஆண்களும் 03 பெண்களும் அடங்கியுள்ளனர். யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலனும் போட்டியிடுகின்றனர்.
இன்று கையொப்பமிட்டுள்ள திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணம்�� திருமதி மேரிகமலா குணசீலன் ஆகிய இரு பெண் வேட்பாளர்களுக்கும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் சக ஆண் வேட்பாளர்களும் தமது வாழ்த்துகளையும்�� ஆசிகளையும் வழங்கியுள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பானது வேட்பாளர்கள் தெரிவில் மிகக்குறைந்தளவு பிரதிநிதித்துவத்தை பெண்களுக்கு கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

28 ஜூலை 2013

விக்னேஸ்வரனை விமர்சிக்க பசிலுக்கு அருகதையில்லை – சம்பந்தன்

சம்பந்தன்-மகிந்த 
அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பசில் ராஜபக்ச கம்பகாவில் போட்டியிட முடியுமானால், விக்னேஸ்வரன் ஏன் யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
தமிழ் மக்களால் நேசிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதன்மை வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையும், சக்தியும் உள்ளது.
எமது வேட்பாளர் குறித்து குறை கூறுவதற்கு சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
வடக்கு, கிழக்கு மக்களால் மிகவும் நேசிக்கப்படும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, எந்தவித அவமானமும் ஏற்படவில்லை.
தமிழ் மக்கள் மத்தியில் இந்தவிதமான பிரதேசவாதங்கள் ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.
விக்னேஸ்வரனை நாம் வடக்கு மாகாணசபைக்கான முதன்மை வேட்பாளராக நிறுத்தியுள்ளது, பலரையும் அச்சமடையச் செய்துள்ளது.
விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் தான்.
அவருக்கு சொந்தமான காணிகள், நிலங்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளன.
அத்துடன், வடக்கில் நீண்டகாலம் நீதிவானாகவும் பணியாற்றியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களின் மொழி, கலை, கலாசார, பண்புகள் தொடர்பான மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர்.
வடக்கு, கிழக்கு மக்களின் அபிலாசைகளை நன்கு உணர்ந்தவர்.
அனைவராலும் பொருத்தமான ஒருவர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர். நீதிவழுவாத தீர்க்க தரிசனம் மிக்கவர்.
அத்தகைய ஒருவரை நாம் வடக்கு மாகாணசபையின் முதன்மை வேட்பாளராக நிறுத்தியுள்ளமை, வடபகுதி மக்களுக்கு மட்டுமன்றி, அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும்.
எமது தெரிவை விமர்சிக்க சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எந்த உரிமையும் கிடையாது.
தமிழ் மக்கள் எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே இருக்கின்றனர்.
அதேபோன்று தமிழ் மக்களின் அபிலாசைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு உணர்ந்து வைத்துள்ளது.
இன்றைய சூழ்நிலையில் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் அனைவரது கவனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் திரும்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வடக்கைச் சேர்ந்தவர் அல்லாத ஒருவரை வடக்கு மாகாணசபையின் முதன்மை வேட்பாளராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளதன் மூலம், வடக்கு மக்களை அவமானப்படுத்தி விட்டதாக, சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

27 ஜூலை 2013

இலங்கையர்கள் தப்பியோட்டம்!

இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இவ்வாறு இலங்கையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
மூன்று இலங்கையர்களும்,மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.தற்போது 60 புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த முகாமில் இருப்பதாகவும்,ஆறு பேர் தப்பிச்சென்றுள்ளதாகவும் முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் எவ்வாறு குறித்த இலங்கை மற்றும் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றார்கள் என்பது புரியவில்லை என முகாம் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

26 ஜூலை 2013

சிறுவனின் மரணத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் இரங்கல்!

படகு விபத்தில் உயிரிழந்த புகலிடக் கோரிக்கைச் சிறுவனின் தந்தைக்கு கெவின் ரொட் இரங்கல்
கெவின்  ரூட்
அண்மையில் இந்தோனேஷிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கைச் சிறுவனின் தந்தைக்கு, அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரொட் இரங்கல் தெரிவித்துள்ளார். மூன்று வயதான பர்மிதன் பாலமனாறன் என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த படகில் 150க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளதாகவும், படகு விபத்தில் 13க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் தந்தைக்கு பிரதமர் ரொட், தொலைபேசி மூலம் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார். பர்மிதனின் தந்தையான நாகராசா கடந்த சில ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவியும் பிள்ளையும் குடு;ம்ப வீசா கிடைக்காத காரணத்தினால் இலங்கையில் தங்கியிருந்தனர். நாகராசா பேர்த்தில் உள்ள தொழிச்சாலையொன்றில் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 ஜூலை 2013

பின்வாங்கிய முஸ்லிம் காங்கிரஸ்!

13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை, கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்திருந்த தீர்மானம் கிழக்கு மாகாணசபையில் நேற்று விவாதிக்கப்படவிருந்த நிலையிலேயே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.
இதனால், இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கக் காத்திருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் உள்ளிட்ட 13 எதிரணி உறுப்பினர்களும் ஏமாற்றத்துடன் சபையில் இருந்து வெளியேறினர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட குழுக்களின் தலைவர் ஏ.எம். ஜமீல், இந்த தீர்மானம் குறித்து விவாதம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை முன்னெடுப்பதில்லை என்று கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை திருத்தும் முடிவை பிற்போட்டுள்ளதால், பொருத்தமான நேரத்தில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

24 ஜூலை 2013

தமிழ் மொழியை புறக்கணிக்கும் மாணவர்கள்:தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!

மாணவர்கள் மதிப்பெண் கூடுதலாகப் பெற தமிழ் மொழியல்லாத பிற மொழிகளை தேர்வு செய்யும் போக்கினை தமிழக அரசு தடுத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மேனிலைப் பள்ளிகளில் (பிளஸ் 2) இரண்டாவது மொழிப் பாடமான தமிழை புறக்கணித்துவிட்டு பிரெஞ்ச், ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தேர்வு செய்து படிக்கும் நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இப்படி தமிழ் மொழியை படிப்பதை தவிர்ப்பது திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பள்ளி பாடத் திட்டத்தில் முதல் மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழிப் பாடமாக தமிழும் இருந்து வருகிறது. தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்கிற காரணத்தைக் காட்டி, தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதம், பிரஞ்ச், ஜெர்மன் ஆகிய ஏதாவது ஒரு அந்நிய மொழியை தேர்வு செய்து படித்துவிட்டு தேர்வு எழுதுகிறார்கள். மெட்ரிக்குலோஷன் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படும் பள்ளிகளில் இரண்டாவது மொழிப் பாடமாக இருக்கும் தமிழுக்கு பதிலாக அயல் மொழிகளை படித்து தேர்வு எழுதுவது ஊக்குவிக்கப்படுகிறது.
சமஸ்கிருதம், பிரெஞ்ச், ஜெர்மனி போன்ற மொழிகள் படிக்கும்போது, அதற்கான பாடத் திட்டம் மிக எளியதாக (எலிமெண்ட்ரி லெவல்) தயாரிக்கப்பட்டுள்ளதால், அரசு நடத்தும் மேனிலைத் தேர்வில் அதிக மதிப்பெண்களை - அதாவது 200க்கு 199 என்றெல்லாம் பெறுவது - சுலபமானது என்பதனால் பல மாணாக்கர்கள் இப்படி அயல் மொழியை தேர்வு செய்து படிக்கிறார்கள். ஆனால் பிளஸ் 2 வகுப்பிற்கான தமிழ் மொழி பாடத் திட்டம் உயர்ந்த நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதில் தங்களால் 200க்கு 160 மதிப்பெண் கூட பெற முடியாது என்று அந்த மாணவர்களும் கருதுகின்றனர். தமிழ் மொழி தொடக்கப்பள்ளியில் இருந்து கற்றுவரும் மாணவர்களுக்கு தமிழக அரசு பாடத் திட்டம் எந்த விதத்திலும் கடினமானதாக இல்லை. ஆனால், பிற மாநிலங்களில் சென்று தங்களை பட்டப் படிப்பை தொடர நினைக்கும் நகர வாழ், மேல் தட்டு வீட்டுப் பிள்ளைகள் அயல் மொழிப் பாடங்களை எடுத்து அதிக மதிப்பெண் பெற இப்படியான ஒரு வழியை கடைபிடிக்கிறார்கள்.
இப்படி ஒரு நிலையை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், நாளையடைவில், தமிழ் மொழியை படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தமிழ் மண்ணிலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகும் . எனவே, இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழை புறக்கணிக்கும் நிலையை தடுத்திட வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.