31 மார்ச் 2013

தமிழக போராட்டங்களால் கலங்கிப்போயுள்ள சிங்களம் புது டெல்லி செல்ல திட்டம்!

சிறிலங்காவுக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்பலைகளால் மஹிந்த அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சிறிலங்கா உயர்மட்ட குழுவொன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி செல்லும் சிறிலங்கா குழுவினர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகளின் சிறிலங்கா எதிர்ப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
நீண்ட காலமாக நிலவி வரும் இரு தரப்பு உறவுகளை பாதுகாக்கவும், தமிழகம் செல்லும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்க எடுக்கப்பட வேண்டுமென இந்தியாவை கோரவுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தல், தனி ஈழ இராச்சியம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைள தமிழக அரசியல்வாதிகள் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த அழுத்தங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எனவே, இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் சிறிலங்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலச்சந்திரன் தொடர்பில் கருத்துக்கூற தடுமாறிய பிரசாத் காரியவசம்!

1விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில், புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசம் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் ‘டெக்கான் ஹெரால்ட்‘ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குழப்பமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக வெளியான ஒளிப்படங்கள் குறித்து, சிறிலங்கா அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,“அந்தப் படங்கள் மாற்றம் செய்யப்பட்டவை.
அந்தப் படம் எடுக்கப்பட்ட பதுங்குகுழி சிறிலங்கா இராணுவத்தினருடையது அல்ல என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அந்தப் படங்களை முதலில் எம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தால், அதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் விசாரணக்கு உத்தரவிட்டிருக்க முடியும்.
அந்தப் படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டு நீதி கோரப்பட்டுள்ளதால், இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்தச் செவ்வியில் சிறிலங்கா தூதுவர் குழப்பமான கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ள அவரே, இன்னொரு கட்டத்தில் தம்மிடம் அதனை முதலில் தந்திருந்தால் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட படம் குறித்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் உறுதியான பதிலை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

30 மார்ச் 2013

போர் தொடங்கிவிட்டது- -அணு ஆயுதப் போர் வெடிக்கும்:வடகொரியா அறிவிப்பு

தென்கொரியாவுடன் போர் தொடங்கி விட்டதாக வட கொரியா பிரகடனம் செய்திருக்கிறது.இதனால் கொரிய தீபகற்ப பிரதேசத்தில் போர்ப் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. வடகொரியா- தென்கொரியா இடையேயான பதற்றம் கடந்த அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக நீடித்தே வருகிறது. தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து நிற்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. அதாவது பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ நிலைகளைத் தாக்கும் திறன் தங்களுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது வடகொரியா. இதைத் தொடர்ந்து 3-வது அணுகுண்டு சோதனையையும் வடகொரியா நடத்தியது. இதனால் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தியது அமெரிக்கா. அதே நேரத்தில் கொரிய தீபகற்பகப் பகுதியில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையையும் நடத்தி வருகிறது. இப்போர் ஒத்திகையை வடகொரியா கடுமையாக எதிர்த்து வந்தது. மேலும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் அதிநவீன அணுகுண்டுகளை வீசக் கூடிய 2 விமானங்கள் தென்கொரியாவின் தீவகப் பகுதி ஒன்றில் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்தது. இதைத் தொடர்ந்து இன்று வடகொரியா, தென்கொரியாவுடன் போரைத் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்திருக்கிறது. மேலும் வடகொரியா அரசு, கட்சிகள்,அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தென்கொரியாவுடனான அனைத்து வகையிலான ஒப்பந்தங்களும் கைவிடப்படுவதாகவும் இனி போர்க் காலங்களில் என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதுவே அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தென்கொரியா தொடருமேயானால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. இப் போர்ப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று ரஷியா,சீனா ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

29 மார்ச் 2013

எம்மீது வீண்பழி போடுகிறார்கள் என்கிறது பொது பல சேனா

வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற தேசத் துரோகச் சக்திகளும் சில சர்வதேச செய்தி நிறுவனங்களுமே இலங்கையில் நடக்கின்ற வன்முறைகள் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் மீது சேறு பூசுவதாக அந்த அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறுகிறார்.
அண்மைக் காலங்களாக இலங்கையில் நடந்துவருகின்ற வன்முறைச் சம்பவங்களுடன் தமது அமைப்பை தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் ஞானசார தேரர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய விடயங்கள்
ஆட்கடத்தல், துஷ்பிரயோகம், தாக்குதல், மனித உரிமை
இதேவேளை, எந்தவொரு நாட்டிலும் வன்முறைகள் நடப்பது இயல்பு என்றும் இவ்வாறான வன்முறைகளுக்கு சிலர் இனவாத சாயம் பூசுவதாகவும் அவர் கூறினார்.அத்துடன், பௌத்த மத அமைப்புகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கோடு வேற்று மதத்தவர்கள் பௌத்த பிக்குகளைப் போல உடையணிந்து தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டினார்.
'முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மீதும் குற்றச்சாட்டு'
இலங்கையில் முஸ்லிம் கடைகளில் பொருள்வாங்க வேண்டாம் என்றும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் தொலைபேசிகளில் எஸ்எஸ்எம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, இலங்கையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலரே இப்படியான தொலைபேசி எஸ்எஸ்எம் குறுஞ்செய்திகள் மூலமும் டுவிட்டர் போன்ற இணையதளங்கள் ஊடாகவும் இனவாத செய்திகளைப் பரப்பிவருவதாகவும் அவர்களை பாதுகாப்புத் தரப்பினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் பொது பல சேனா அமைப்பு கூறுகிறது.
பொது பல சேனா அமைப்பே நாட்டில் இனவாதக் கருத்துக்களை தூண்டிவருவதாக பல தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அந்த அமைப்புக்கு அரசின் உயர்மட்டத்திலிருந்து பண உதவி கிடைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அண்மையில் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமும் பொது பல சேனா அமைப்பின் ஞானசார தேரரே ஃபெஷன் பக் நிறுவனத்தின் மீதான தாக்குதலை அண்மையில் தூண்டியிருந்ததாக குற்றஞ்சாட்டுகிறார்.
பொது பல சேனா அமைப்பின் பயிற்சிக் கூடமொன்றின் திறப்பு விழாவில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்ட நிகழ்வையும் ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழோசையிடம் விமர்சித்தார்.

நன்றி:பி.பி.சி.

தமிழக தீர்மானமே வலிமையானது-தமிழ் மக்கள் பேரவை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது என யாழ் மாவட்ட மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் தமிழருக்கு சார்பான தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தாங்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்மானம் எமது இனத்தின் விடிவுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக விடிவிற்காகப் போராடி வீரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் மனங்களில் பால் வார்த்த தீர்மானமாக தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம் திகழ்வதாகவும் யாழ். குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்களின் சார்பில் யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் ஈழத் தமிழர்கள் சிங்களவர்களால் அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர்.
இந்த அடிமைத்தனத்தை எதிர்த்து கடந்த முப்பது வருட காலம் அகிம்சை ரீதியாகவும் முப்பது வருட காலம் ஆயுத ரீதியாகவும் நாங்கள் போராடினோம். ஆனால்இ எமது போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மீண்டும் அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர். இந்த நிலையில் யாருமே உதவிக்கு இல்லை என்று தவித்துக்கொண்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு சார்பாக தமிழக மாணவர்கள் அலை அலையாக எழுச்சியடைந்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் உச்ச நிலையாக தமிழக சட்டப் பேரவை ஈழத் தமிழ் மக்களுக்கு சார்பான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது.
இந்த தீர்மானத்தை சபையில் கொண்டு வந்து சமர்ப்பித்து நிறைவேற்ற முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். அவரின் இந்தச் செயற்பாடு எங்கள் மனங்களில் தேனாக இனிக்கின்றது. இந்தத் தீர்மானத்தால் ஈழத் தமிழர்கள் இன்று பெருமிதமடைகின்றனர். ஏழு கோடி மக்களின் தாயாக விளங்குகின்ற தமிழக முதல்வர் இன்று ஈழத் தமிழர்களையும் தன் பிள்ளைகள் போல் கருதி எங்களையும் அரவணைத்து நிற்கின்றமை வரலாற்றுத் திருப்பு முனையாக அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையும் இறந்த தினத்தையும் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் அவர் ஈழத் தமிழ் மக்கள் மீது கொண்ட அளப்பரிய அன்பும் அக்கறையுமே ஆகும். இன்று வரை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மூன்று எம்.ஜி.ஆர் மறுமலர்ச்சிக் கழகங்கள் இயங்கி வருகின்றன என்றால் அது எம்.ஜி.ஆர் மீது ஈழத் தமிழ் மக்கள் வைத்திருக்கின்ற அன்பிற்கும் மரியாதைக்கும் எடுத்துக்காட்டுக்களாகும்.
அதே எம்.ஜி.ஆரின் வழியில் இன்று எங்கள் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா தடம் பதித்துள்ளமை ஈழத் தமிழ் மக்களாகிய எமது விடுதலைக்கு முதற்படியாக இருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் எங்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யுத்தம் காரணமாக லட்சக்கணக்கான எங்கள் உறவுகள் கொல்லப்பட்டனர். ஏராளமான அப்பாவி மக்கள் காயப்படுத்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்னர். அந்தப் பெண்களின் நிலை கண்டும் ஈழத் தமிழரின் இன்னல் கண்டும் எமக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள ஜெயலலிதா அவர்கள் என்றும் எங்கள் மனக் கோயில்களில் பூசிக்கப்படுவார்.
தமிழர்களைக் கொன்றொழித்த சிறிலங்கா அரசுக்கும் அதன் இனவாதப் படைகளுக்கும் எதிராக ஜெனிவாவில் இரண்டு தடவைகள் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் அது வெறும் அடிப்படையற்ற தீர்மானமாகவே அமைந்துள்ளது. அந்த தீர்மானங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் எதுவித அக்கறையையையும் வெளிக்காட்டவில்லை. ஆனால்இ தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது ஐ.நா சபை தீர்மானத்தை விட ஆயிரம் மடங்கு வலிமையானது என்று யாழ். குடாநாட்டு மக்களாகிய நாம் கருதுகின்றோம். நேற்று புதன்கிழமை தொடக்கம் இன்று வரை யாழ்இ குடாநாட்டு மக்கள் தமிழக தீர்மானம் தொடர்பாக கதைப்பதிலேயே தமது பெருமளவு நேரத்தை செலவிடுகின்றனர். அந்தளவிற்கு இந்த தீர்மானம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால் இந்த தீர்மானம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டுமென்பதே எமது அவா ஆகும். இது செயற்படுத்தப்படும் திறன் வாய்ந்ததாக மாற வேண்டுமென்றும் குடாநாட்டு மக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு மீண்டுமொரு தடவை நாங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

தமிழ் மக்கள் பேரவை
யாழ்.மாவட்டம்

28 மார்ச் 2013

தமிழக சட்டமன்ற தீர்மானத்தால் பாராட்டு மழையில் நனைகிறார் முதல்வர்!

ஈழத் தமிழர்களுக்காக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகள் குவிகிறது.
இதுபற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து:-

தா.பாண்டியன், (இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர்)
இலங்கை மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கை ஈழத் தமிழர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமைந்துள்ளது.
மிகவும் துணிவுடன் மத்திய அரசிடம் வாதாடும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதிலும் வெற்றி கிட்டும். அவரது தீர்மானம் வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தும்.

வைகோ, (ம.தி.மு.க. பொதுச் செயலாளர்)
இலங்கை தமிழர்கள் நலன் கருதி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தமிழக முதல்- அமைச்சர் நிறைவேற்றிய தீர்மானம் வரலாற்று சிறப்புக்குரியது.
சுதந்திர தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இதே தீர்மானத்தை இந்திய பாராளுமன்றமும் நிறைவேற்றும் நாள் வரும். அனைத்து உலகம் அதை செயல்படுத்தும் நாளும் வந்தே தீரும். தீர்மானத்தை, நிறைவேற்றிய தமிழக சட்டசபைக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், மற்றும் ம.தி.மு.க. சார்பில் பாராட்டுதலை தெரிவிக்கிறேன்.

டாக்டர் ந.சேதுராமன் (மூவேந்தர் முன்னணி கழக தலைவர்)
ஐ.நா. சபையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து இரட்டை வேடம் போட்ட காங்கிரஸ் ஓட்டு மொத்த தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியது. காயம்பட்ட தமிழர் இதயங்களுக்கு மயிலிறகால் வருடுவது போல் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம். ஆயிரம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வரலாற்றில் நீடித்து நிற்கும்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா காவிரி உரிமையை பெற்றுத் தந்தது போல நாளை கச்சத்தீவு மட்டுமல்ல, தமிழீழம் பெற்று தருவார். அதற்கான துணிவுடமையும், அறிவுடைமையும் இரண்டற கலந்த வீரப்பெண்மணி அவர்.

சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)
உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனும் ஈழப் பிரச்சினையில் என்ன நடவடிக்கைகள் அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டும் என்று சிந்திக்கிறானோ அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக தமிழ் சமுதாயமே அவருக்கு துணை நிற்கிறது.

வேல்முருகன், (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்)
நட்புநாடு என்று நாடகமாடி இனப்படுகொலை நடத்தும் இலங்கையின் முகமூடியை கிழிக்க, தமிழீழம் அமைய இதுவரை எந்த ஆட்சியாளர்களும் செய்யாத, செய்யத் துணியாத நடவடிக்கைகள் தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் நடந்துள்ளது. இனமுழக்கங் களை வழங்கிய தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறோம்.
தமிழர் உரிமை காக்க முதல்- அமைச்சர் எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் தன்னெழுச்சியான மாணவர்களின் எழுச்சி மற்றும் பொதுமக்களின் திரட்சி ஒரு புத்தொளியை தமிழினத்திற்கு தரும் என நம்புகிறோம்.

அருள்தாஸ் (தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர்)
தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு பிறகாவது மத்திய அரசு தமிழர்கள் மீது அக்கறை கொண்டு ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க, தனிஈழத்தை உருவாக்க உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும்.
இதே போல் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழ் சமுதாய அமைப்பினர், மாணவர் அமைப்பினர் பலர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தேரரின் கூற்றுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலடி!

தமிழ் மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கொண்டு சென்றமையானது இலங்கையின் சட்டத்திற்கு முரணானது என எவராவது குற்றம் சுமத்தினால், எவரும் தனக்கெதிராக நீதிமன்றத்திற்கு செல்லலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அதியுயர் நாடாளுமன்ற மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக ராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமது நாடாளுமன்ற குழு ஜெனிவாவில் செயற்பட்ட விதம் தொடர்பில் கூட்டமைப்புக்கு எதிராக எவரேனும் நீதிமன்றத்திற்கு சென்றால் அதனை எதிர்கொள்ள கூட்டமைப்பு தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜெனிவாவுக்கு சென்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதான நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கை தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுப்படுத்தியிருந்தனர்.

27 மார்ச் 2013

இலங்கை நட்பு நாடல்ல:தமிழக சட்டசபையில் தீர்மானம்

இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும் இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று புதன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் குறித்து இலங்கை வாழ்த் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோரிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் இன்றைய தீர்மானம் வலியுறுத்துகிறது.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை, அதிமுக, ஜெயலலிதா, மஹிந்த ராஜபக்ஷ
தீர்மானத்தினை முன்மொழிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தமிழுணர்வாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது என்ற நிலையில், தமிழக மாணவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை முன்வைத்து, நடத்திவரும் தங்கள் அறப் போராட்டத்தைக் கைவிடவேண்டுமென்றும் கோரினார்.
முன்னதாக இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் அதன் தொடர்பான மாணவர் போராட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கையின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் பேசினர்.
திமுக மீது ஜெயலலிதா சாடல்
திமுக இரட்டை வேடம் என ஜெயலலிதா குற்றச்சாட்டு.
விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதா திமுக இப்பிரச்சினையில் இரட்டைவேடம் போடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
டெசோ அமைப்பிற்கு புத்துயிரூட்டியுள்ள கருணாநிதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று கூறும் அவர், அவரது தமக்கை மகன் மறைந்த முரசொலி மாறன் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் சன் குழுமத்திற்குச் சொந்தமான ஐபிஎல் அணி, சன் ரைசர்ஸில், இலங்கை வீரர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து மௌனம் சாதிக்கிறார் என்றார்.
ஆனால் தான் எப்போதுமே உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுத்துவருவதாகக்கூறிய அவர், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதைத் தடுத்து நிறுத்தியதையும், இந்தியாவில் எங்குமே அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியதையும், இலங்கையர் தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டதையும், இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடத்த அனுமதி மறுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
அவ்வாறான தனது நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் விதமாகத்தான் மாணவ-மாணவியரின் போராட்டம் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மாணவர் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன.

செய்தி:பி.பி.சி 

26 மார்ச் 2013

கூட்டமைப்புடன் பேச பீரீஸ் முட்டுக்கட்டை;ரஜீவ விஜேயசிங்க

newsஅரசியல் தீர்வுத்திட்டப் பேச்சு விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க, அரச தரப்பு பேச்சுக்குழு மறுசீரமைக்கப்படவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் பீரிஸ் தலைமை வகித்து முன்னெடுத்த எந்தத் திட்டம் வெற்றியளித்துள்ளது என்று கேள்வியெழுப்பிய அவர், பேச்சு குழம்பினால் தனக்குச் சிக்கல் ஏற்படும் எனத் தலையைப் பாதுகாக்க முனைபவர்களை வைத்துக்கொண்டு பேச்சை முன்னெடுப்பது சிக்கல்தான் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், தீர்வுத்திட்டப் பேச்சுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தீர்வுத்திட்டப் பேச்சுகள் தொடர்பில் தமக்கு உரிய வகையில் அறிவிக்கப்படாததால் தான் அந்தக் குழுவிலிருந்து ஆறு மாதங்களுக்கு முன்னரே வெளியேறிவிட்டார் என்றும் ரஜீவ விஜயசிங்க மேலும் கூறினார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் நோக்கில் போருக்குப் பின்னர் இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பித்தது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனையின் பிரகாரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பேச்சுகள் ஆரம்பமாகி சில மாதங்கள் சென்ற பின்னர் இடைக்காலத் தீர்வுத்திட்ட யோசனையை கூட்டமைப்பு முன்வைத்தது. எனினும், அந்த யோசனைத் திட்டத்தை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதனால், இருதரப்பு பேச்சுகளுக்கும் தடங்கல் ஏற்பட்டது. எழுத்துமூலம் உறுதிமொழி தராவிட்டால் பேச்சுகளைத் தொடர்வதில் பயனில்லை எனத் தெரிவித்து அதிலிருந்து கூட்டமைப்பு வெளியேறியது.
இருப்பினும், சில மாதங்களுக்குப் பின்னர் புரிந்துணர்வின் பிரகாரம் பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகின.
காலப்போக்கில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் பிரதமர் சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இராஜிநாமா செய்தமை உட்பட அரச தரப்பினரின் அசமந்தப் போக்காலேயே இந்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில், மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனையை முன்வைத்து கூட்டமைப்புக்கு நிபந்தனை விதித்ததால் தீர்வுத்திட்டப் பேச்சுகள் முடங்கின.
இவ்வாறு பேச்சுகள் முறிவடைந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசு கூட்டமைப்பு பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகவேண்டும் எனச் சர்வதேச சமூகம் கருத்து வெளியிட்டுள்ளது. அரசு இதயசுத்தியுடன் பேச்சை ஆரம்பிக்குமானால் அதில் பங்கேற்கத் தயார் எனக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அரசியல் தீர்வுத்திட்டப் பேச்சுகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்கு அரச தரப்புத் தயாராக உள்ளதா என அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவிடம் "உதயன்' வினவியது.
இதற்குப் பதிலளித்த அவர், பேச்சுகள் மீண்டும் ஆரம்பமானால் அது வரவேற்கக்கூடியதொன்று. இருப்பினும், சில தடங்கல்களும் உள்ளன. பதவியை மட்டும் காப்பாற்றிக்கொண்டால் போதும் எனச் செயற்படுபவர்களை வைத்துக்கொண்டு நேர்மையான பேச்சை முன்னெடுக்க முடியாது. எனவே, தீர்வு விடயத்தில் நீதியாகச் செயற்படும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் அரச தரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெறவேண்டும் என்று கூறினார்.
அப்படியானால் மீண்டும் பேச்சு ஆரம்பமாவதற்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸா தடங்கலாக இருக்கின்றார் என "உதயன்' அவரிடம் மற்றுமொரு கேள்வியைத் தொடுத்தபோது, அவ்வாறு நான் கூறவில்லை. பீரிஸ் தலைமை வகித்து முன்னெடுத்த எந்தத் திட்டம் வெற்றியளித்துள்ளது? பேச்சு குழம்பினால் தனக்குச் சிக்கல் ஏற்படும் எனத் தலையைப் பாதுகாக்க முனைபவர்களை வைத்துக்கொண்டு பேச்சை முன்னெடுப்பது சிக்கல்தான்.
பேச்சு மேசைக்குச் செல்லும்போது அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த எனக்கு இது குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை. இதனால் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே நான் இராஜிநாமாக் கடிதத்தை வழங்கிவிட்டேன்.'' நிமல் போன்றோர் அதிலிருந்தால்தான் பங்கேற்கத் தயார் என்று கூறியிருந்தேன் என்றும் அவர் கூறினார்.

25 மார்ச் 2013

சர்வதேசம் மத்தியஸ்தம் செய்தால் அரசுடன் பேசத்தயார்-சம்பந்தன்

“கடந்த காலங்களில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகளைக் குழப்பியது அரச தரப்புத்தான். இதனால் அதன் மீது எமக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், விசுவாசமாக ஆக்கபூர்வமாக நம்பகத்தன்மையுடன் சர்வதேசத்தை நடுவராக வைத்துக் கொண்டு அரசு பேச்சுகளை ஆரம்பித்தால் நாம் அதில் பங்கேற்போம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாட்டில் இனப்பிரச்சினை தொடர தாம் விரும்பவில்லை எனவும், அதற்கு மிக விரைவில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கும், மத்தியஸ்தம் வகிப்பதற்கும் உதவ தென்னாபிரிக்காவோ அல்லது ஏனைய மூன்றாம் தரப்போ முன்வருமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் வடக்குத் தேர்தலை நடத்தி, அதிகாரங்களைப் பகிர்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் நேற்று மாலை “சுடர் ஒளி’ வினவியது.
இதன்போது அவர் தெரிவித்தவை வருமாறு:
“இந்த நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப்பெற நாம் அரசுடன் விசுவாசமாக பேச்சு நடத்தச் சென்றோம். ஆனால், பல சுற்றுகளில் நடந்த அந்தப் பேச்சுகள் அனைத்தையும் பயனற்றதாக்கி, வடமாகாணசபைத் தேர்தலையும் இழுத்தடித்து எம்மை ஏமாற்ற முனைந்தது அரசு. இந்த நிலையை உணர்ந்துகொண்ட நாம் பேச்சிலிருந்து வெளியேறினோம்.
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்தோம்.
ஆனால், பேச்சைக் குழப்பியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனவும், அது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வருகின்றதில்லை எனவும் சர்வதேச நாடுகளுக்குப் பொய்களை அள்ளிவீசி வந்தது இந்த அரசு தற்போதும் இதனையே செய்துவருகின்றது.
ஆனால், நாம் ஏற்கனவே உண்மை நிலைவரத்தை பல தடவைகள் இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் தெரிவித்துள்ளோம். அரசு நம்பகத்தன்மையுடன் பேச்சுகளை ஆரம்பித்திருந்தால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்றிருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளோம்.
இந்நிலையில், இனப்பிரச்சினை அரசியல் தீர்வுப் பேச்சுகளை இலங்கை அரசு தமிழ்க் கூட்டமைப்பு மீண்டும் ஆரம்பிக்க மத்தியஸ்தம் வகிப்பதற்கு சர்வதேச நாடுகள் முன்வந்தால் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அத்துடன், செப்டெம்பர் மாதத்துக்குள் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழருக்கு அதிகாரங்களை அரசு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா குறியாகவுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக தனது இரண்டாவது பிரேரணையை கடந்த வாரம் ஜெனிவாவில் நிறைவேற்றிய அமெரிக்கா, இலங்கையில் அரசு கூட்டமைப்பு பேச்சு தொடர்பில் தற்போது தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயம்.
எனவே, விசுவாசமாக ஆக்கபூர்வமாக நம்பகத்தன்மையுடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பித்தால் நாம் அதில் பங்கேற்போம். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் நாம் காலத்தை இழுத்தடிக்க விரும்பவில்லை.
சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதுவே தமிழ் மக்களினதும் எதிர்பார்ப்பாகும்” என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி.
இதேவேளை, இலங்கை அரசு தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அரச தரப்பின் நிலைப்பாடு என்ன என்று கேட்பதற்காக பேச்சுக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவிடம் தொடர்புகொண்டு கேட்பதற்கு நேற்றுப் பல தடவைகள் முயன்றபோதும் அவை பலனளிக்கவில்லை.

24 மார்ச் 2013

அமெரிக்க தீர்மானம் உப்புச்சப்பற்றது;வடபகுதி சிவில் சமூகம் கருத்து!

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாடாகவே, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் உள்ளது. நாங்கள் சர்வதேசத்துக்கு எத்தனையோ விடயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லியுள்ளோம்.
ஆனால் அதில் ஒன்றைத்தானும் இதில் உள்ளடக்காமை எங்களுக்கு ஏமாற்றத்தையளிக்கின்றது. இவ்வாறு வடபகுதி சிவில் சமூகத்தினர் "உதயனிடம்' கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் இரண்டாவது வருடமாகவும் அமெரிக்காவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் வடக்கிலுள்ள சிவில் சமூகத்தினரிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது குறித்து மன்னார் ஆயர் இராசப்பு யோசப் ஆண்டகை தெரிவிக்கையில், கள்ளனிடமே களவு தொடர்பில் விசாரிக்கச் சொன்னால் எப்படியிருக்கும்? நாங்கள் இங்குள்ள நிலைமை தொடர்பாகவும், சர்வதேச தலையீடு ஏன் என்பது தொடர்பிலும் தெளிவாக விளக்கியும் அவர்கள் அதனை தமது வரைபில் உள்ளடக்காதது ஏமாற்றம்தான் என்றார்.
தனது பெயரை வெளியிட விரும்பாத அரச உத்தியோகத்தர் ஒருவர் தெரிவிக்கையில், ஜெனிவா தீர்மானத்தால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அமெரிக்கா, இந்தியாவுக்கு எது தேவையோ அதைக் கொடுத்தால் சரி. எங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
தமிழக மாணவர்களிடம் இருக்கின்ற உணர்வுகள் எங்கள் இளைஞர்களிடம் இருக்கின்றதா என்பதை நாம் ஒருமுறை பார்க்க வேண்டும். நீங்கள் நடத்துவது ராஜதந்திரம். அமெரிக்கா நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அன்றே தடுத்திருக்கலாம் என்றார்.
வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் தெரிவிக்கையில் :
இலங்கையின் மீள்குடியமர்வு நடவடிக்கைகளை அமெரிக்கத் தீர்மானம் பாராட்டியுள்ளது. இது எங்களுக்கு ஏமாற்றமாக இருக்கின்றது. இலங்கையில் உள்ளக இடப்பெயர்வு என்று சொல்வதைத் தொடக்கிவைத்தவர்கள் எங்கள் மயிலிட்டி, பலாலி மக்கள். முதன்முதலாக இடம்பெயர்ந்த இலங்கை மக்கள் நாங்கள். இன்னமும் சொந்த இடத்துக்குத் திரும்ப முடியாமல் இருக்கின்றோம்.
மீள்குடியமர்வு என்று சொல்லிக் காடுகளுக்குள் இரண்டு தடியும், தகரமும் வழங்கி மீளக்குடியமர்த்தினால் சரியா? எனவே அமெரிக்கத் தீர்மானம் எங்கள் மீள்குடியமர்வு பற்றிச் சொல்லத் தவறிவிட்டது என்றார்.
காணாமற் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கையில், காணாமற் போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெற்றால் மாத்திரமே நீதி நிலைநாட்டப்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் ஐ.நாவின் தலையீட்டைக் கோரி நிற்கின்றோம்.
அமெரிக்கத் தீர்மானத்தில் காணாமற் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று கூறப்பட்டதை வரவேற்கின்றோம் என்றார். மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை ஜெபமாலை தெரிவிக்கையில் :
அமெரிக்கத் தீர்மானம் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாடு போலுள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்கா தான் சமர்ப்பித்த வரைவுத் தீர்மானத்தில் உறுதியாக இருந்திருக்க வேண்டும் என்றார்.
வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவிக்கையில் :
எமக்கு ஏமாற்றமாக இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தில் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இருப்பினும் எங்களுக்காகக் குரல் கொடுக்கும் தாய்த் தமிழக மாணவர்களுக்காக நாங்கள் தலை வணங்குகின்றோம் என்றார்.

மகிந்த, கோத்தா, 14 இராணுவ அதிகாரிகள் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வர்!

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட்டாலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, மற்றும் 14 இராணுவ அதிகாரிகள் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் புதுடெல்லி சிறப்பச் செய்தியாளரான, வெங்கட் நாராயண் இதுகுறித்து எழுதியுள்ளதாவது-
2009இல் நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தனது பாதுகாப்புப் படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் குறித்த நம்பகமான சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் கோரிக்கையை சிறிலங்கா தொடர்ந்தும் புறக்கணிக்கும் என்று புதுடெல்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால், இந்த விசாரணைகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரரும், பாதுகாப்புச்செயலருமான கோத்தாபய ராஜபக்ச, மற்றும் குறைந்தது 14 மூத்த இராணுவ அதிகாரிகள் வகித்த முக்கியமான பங்கை வெளிப்படுத்தி விடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்த, மூன்று பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் இறுதிக்கட்டத்தில், குறைந்தது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவும் சுதந்திர வட்டாரங்களும் மதிப்பிட்டுள்ளன.
இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை இரண்டாவது ஆண்டாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அனைத்துலக சமூகம் கோரியுள்ளது.
நாசிக்களுக்கு எதிரான நூரன்பேர்க் விசாரணை மற்றும் கம்போடியா, ருவான்டா, யூகோஸ்லாவியா, சியராலியோன், லெபனான் போன்ற நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து நடத்தப்பட்ட ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளின் போது, அதற்குப் பொறுப்பான உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோன்று சிறிலங்காவிலும் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், சிறிலங்கா ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில், விசாரணை செய்யப்படுவோரின் பட்டியலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முதலிடத்தில் இருப்பார்.
அடுத்ததாக, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இருக்கக் கூடும்.
அவர், சிறிலங்கா அதிபரின் சகோதரர் என்ற நெருக்கத்தைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு என்னென்ன ஆயுதங்கள், கருவிகள் தேவையோ அவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
போரில் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த திறமையான மூலோபாயத்தை திட்டமிட்டு செயற்படுத்தியவர் என்ற மதிப்பை கோத்தாபய ராஜபக்ச பெறவேண்டும் என்றால், போரின் முடிவில் தனது படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்காக வெட்கப்படாமல் இருப்பது சாத்தியமில்லை என்று புதுடெல்லி நிபுணர்கள் வாதிட்டுள்ளனர்.
அதன்பின்னர், கூட்டுப்படைகளின் தலைவர் எயர் மார்சல் டொனால்ட் பெரேரா, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, விமானப்படைத் தளபதி றொசான் குணதிலக ஆகியோரும் விசாரிக்கப்படக் கூடும்.
மேலதிகமாக, அப்போது 53வது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் கமால் குணரத்ன, 55வது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வா, 57வது டிவிசன் தளபதியாக இருந்த பிரகேடியர் ஜெகத் டயஸ், 58வது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் சவீந்திர சில்வா, 59வது டிவிசன் தளபதியாக இருந்த பிரகேடியர் நந்தன உடவத்த, அதிரடிப்படை - 1 இன் தளபதியாக இருந்த பிரிகேடியர் றோகண பண்டார, அதிரடிப்படை - 2 இன் தளபதியாக இருந்த பிரிகேடியர் சத்யப்பிரிய லியனகே, அதிரடிப்படை-8இன் தளபதியாக இருந்தவரும், உண்மையில் பிரபாகரனைக் கொன்றவருமான கேணல் ஜிவி ரவிப்பிரிய ஆகியோரும் இந்த விசாரணையை எதிர்கொள்வர்.
டிவிசன்களின் தளபதிகளான இவர்கள், தப்பிப்பதற்கான எல்லா வழிகளையும் மூடி, வன்னியில் ஓரிடத்தில் சிக்க வைத்து விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள்.
ஈழப்போரின் மீறல்கள் குறித்த விசாரணைகளில் திருப்தி கொள்ளும் வரை அனைத்துலக சமூகம், நீதியாயமான நம்பகமான விசாரணைகளைக் கோரும் என்றும் புதுடெல்லி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

23 மார்ச் 2013

அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு… தமிழக அரசு உத்தரவு!

 Tn Govt Gives Police Protection M K Azhagiri முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்னைக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியது. அழகிரி உட்பட 5 மத்திய அமைச்சர்கள், தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். அதையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரிக்கு மட்டும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அழகிரி வீட்டில் வழக்கம் போல் 4 போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அழகிரியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு போலீசார் உடன்செல்வர். "எதற்காக அழகிரிக்கு பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற விபரம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது, தி.மு.க.வில் அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே மறைமுகமான மோதல் இருப்பதால், அழகிரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கலாம்" என்று மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் தமிழ் மக்களுக்கு பிரயோசனமற்றது!

ஜெனிவாவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றுப்பட்டுள்ள தீர்மானம் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழித்துள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இத் தீர்மானம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயற்பாடு என்பதால் தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஜ.நா மனிதவுரிமை கூட்டத் தொடரில் உரையாற்றி நாடு திரும்பியுள்ள அவர் இன்று நண்பகர் யாழ்.இராசாவின் தோட்ட வீதியில் உள்ள யாழ்.ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
இச் சந்திப்பில் ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
அமெரிக்காவால் ஜ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் என்று சொல்லப்படும் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி எந்தவிதத்திலும் சொந்தம் கொண்டாடவில்லை.
ஏனெனில் தமிழ் மக்களை ஏமாற்றி அழிவின் பாதையில் கொண்டு செல்ல நாம் ஒருபோதும் தயாராக இல்லை. இத் தீர்மானத்தை நாம் எதிர்ப்பதற்கு காரணங்கள் உள்ளது.
கடந்த வருடமும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் என்று சொல்லிக் கொண்டு சிறிலங்க அரசாங்கம் தனக்கு விசுவாசமானவர்களால் தனது யுத்தக் குற்றத்தை மூடி மறைப்பதற்காகவும், சர்வதேச விசாரணையில் இருந்து தப்பிக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கையினையே முன்வைக்கப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் தாயரிக்கப்பட்ட அறிக்கையினை நடைமுறைப்படுத்த ஒருவருட கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஒரு வருட கால அவகாசத்திற்குள் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக மோசமானதாகும்.
குறிப்பாக தமிழ் மக்களுடைய காணிபறிப்பு, பல்கலைக்கழகங்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் உச்சம், மீள்குடியேற்றம் என்னும் போர்வையில் மக்கள் காடுகளுக்குள் தள்ளிவிடப்பட்டது மற்றும் புணர்வாழ்வு அழிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான விடையங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறாமலும் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையினை கைவிடப்பட்டும் உள்ளதாக இம்முறை அமெரிக்காவல் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் எந்தவிதமான பிரியோசனம் இல்லா கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் மூலமாக 13 ஆவது திருத்தத்துடன் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நாம் இத் தீர்மானத்தை முழுமையாக எதிர்க்கின்றோம்.
எமது தழிழ் இனம் அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பிற்குப் அப்பால் சர்வதேசத்தில் தலையீட்டுடன் அல்லது சர்வதேசத்தின் முழுப் பார்வையில் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றும் இங்கு நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா-வின் நடவடிக்கையே சந்தேகத்துக்கு உரியது!

may17_protest[1]ஐ.நா. இப்போது தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், போர் நடந்துகொண்டு இருந்த காலத்தில் மௌனமாகப் பார்த்துக்​கொண்டு இருந்ததும் இதே ஐ.நா-தான். அதிகாரிகள். தமிழ் உணர்வாளர்கள் இதையும் ஒரு பக்கம் விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் ஒன்றுகூடலை நடத்தியது ‘மே-17’ இயக்கம். அதன் நிறுவனர்களில் ஒருவரான திருமுருகன் இதுபற்றி நம்மிடம் விரி​வாகப் பேசினார்.
கேள்வி: அமெரிக்கத் தீர்மானத்தை இரண்டு விதமாக விமர்சிக்​கிறார்களே?
பதில்: அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களுக்குச் செய்யும் மோசடி என்று முதலில் பேசியது எங்கள் இயக்கம்தான். இதுவரை உலகம் பார்க்​காத கொடூரத்தைச் செய்தது இலங்கை அரசு.
இதுபற்றி, சர்வதேச விசாரணை வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தபோது, உலகத்தை ஏமாற்றுவதற்காக ‘நாங்களே விசாரிக்​கிறோம்’ என்று இலங்கை அரசாங்கமே விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதை அடிப்படையாகக்கொண்டுதான் அமெரிக்கத் தீர்மானம் வடிக்கப்பட்டுள்ளது.
அது எப்படி சரியானதாக இருக்கும்? இலங்கை அரசை எவரும் நம்பாத நிலையில், அமெரிக்கத் தாம்பூலத்தில் வைத்து அதே ஆணைக்குழுவின் முடிவுகளை ஐ.நா. மூலமாக தமிழர்கள் தலையில் கட்டலாம் என்று நினைத்தனர்.
தமிழர்கள் கொஞ்சம் அசந்து இதை ஆதரித்திருந்தால்கூட சர்வதேச சமூகத்தின் காதுகளில் உருவாக்கி வைத்திருக்கும் நமது நியாயங்களையும் உரிமைக்குரலையும் ஒட்டுமொத்தமாக ஊத்தி மூடும் ஆபத்து அதில் இருக்கிறது. இது சம்பந்தமான விழிப்பு உணர்வை மாணவர்கள் ஊட்டியதால் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கேள்வி: ஐ.நா-வின் இந்த மனித உரிமை அமர்வில் வரவேற்கத்தக்க விஷயம் என்று எதுவுமே இல்லையா?
பதில்: ஐ.நா-வின் இந்த அமர்வு தமிழர்களைப் பொறுத்தவரை சிந்தனை மட்டத்தில் தோல்விஅடைந்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழர் தரப்புக் குரல் ஐ.நா. அமர்வில் ஒலித்திருக்கிறது. தமிழீழ மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியமோ, அமெரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ முடிவு செய்வது அல்ல.
ஈழத்து மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் குரலாக கஜேந்திரகுமார் பொன்​னம்பலத்தின் குரல் ஒலித்திருக்கிறது.
அவர், ‘ஈழத் தமிழ் மக்களுக்கு உடனடிப் பாதுகாப்பாக இடைக்கால நிர்வாக சபை வேண்டும். அது, இலங்கை அரசின் மேலாதிக்கத்தில் இல்லாமல் சர்வதேசக் குழுவின் கண்காணிப்பில் அமைய வேண்டும்’ என்று, ஐ.நா. அமர்வில் பேசி இருக்கிறார்.
மக்கள் தங்களது விருப்பங்களைச் சொல்லும் பொது வாக்கெடுப்பை நோக்கி நகரும் வரை இடைக்காலத் தீர்வாக இதைக்கொள்ளலாம்.
கேள்வி: ஐ.நா. தீர்மானத்தின் மூலமாக இராணுவ முற்றுகையில் இருந்து விடிவு கிடைத்தால்கூட, அது பெரிய விஷயம் அல்லவா?
பதில்: அப்படி நடந்தால் நன்மைதான். ஆனால், அது சாத்தியம் அல்ல. குறைந்தபட்சம், பறிக்கப்​பட்ட நிலங்களைத் தமிழர்களிடமே மீண்டும் வழங்கி, இராணுவத்தை விலக்கி, சுதந்திரமாகத் தொழில்​செய்யும்படியான உரிமைகள்கூட அமெரிக்கத் தீர்மானத்தில் இல்லை.
பொத்தாம்பொதுவாக, ‘இலங்கை நீதி வழங்க வேண்டும்’ என, கொலை செய்தவர்களிடமே மீண்டும் இவர்கள் கோருகி​றார்கள். இதை நாம் ஏற்றுக்கொண்டால், எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிடும்.
கேள்வி: இலங்கைக் கொடூரங்கள் குறித்து இதுவரை, தருஸ்மன் குழு அறிக்கை, டப்ளின் தீர்ப்பாய அறிக்கை, சார்ள்ஸ் பெற்றி அறிக்கை ஆகிய மூன்றும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் சில ஆவணப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இத்தனைக்கும் பிறகு, ஐ.நா. அதிகார​பூர்வமாக வாய் திறக்காதது ஏன்?
பதில்: ஐ.நா-வின் நடவடிக்கைகளில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. போர் முடிந்தவுடன் ஐ.நா-வின் உயர் சட்ட ஆலோசனைக் குழு, ‘ இலங்கை மீது உடனே சர்வதேச விசாரணையைத் தொடங்க வேண்டும்’ என்று சொன்னது. அதை நிராகரித்த பான் கி மூன், ‘இலங்கை அரசாங்கமே அதை விசாரிக்கலாம்’ என்று கூறினார்.
நல்லிணக்க ஆணைக் குழுவை ராஜபக்ச அமைத்தார். தருஸ்மன் குழு அறிக்கையையோ, கெலம் மேக்ரேயின் ஆவணங்களையோ அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளாத ஐ.நா., இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையை ஏற்றுக்கொள்கிறது என்றால்… அதை நாம் நிராகரித்துப் போராடுவதுதான் நேர்மையானது.
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியை விட்டு தி.மு.க. வெளியேறி இருக்கும் நிலையில், வருங்காலத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் டெசோவையும் இணைத்துக் கொள்வீர்களா?
பதில்: தி.மு.க-வோடு ஈழ ஆதரவு அமைப்புகளுக்கு இதுவரை கிடைத்த அனுபவமே போதுமானது. இன்றைக்கு எழுச்சி பெற்றிருக்கும் மாணவர் போராட்டங்களில் நுழைந்து அதனுடைய திசைவழியை மாற்றிவிடும் வல்லமைகூட தி.மு.க-வுக்கு உண்டு என்பதால், அவர்களுடன் இணைய மாட்டோம்.
தி.மு.க. வெளியேறி இருப்பது அவர்களது அரசியல் நலன் சார்ந்த நடவடிக்கையே தவிர, ஈழப் பிரச்சினைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது சாதாரண மக்களுக்குக் கூட தெரியும்!

ஜூனியர் விகடன்

22 மார்ச் 2013

சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டனர் மாணவர்கள்!

 Students Detained Bid Picket Pc Chennai House சென்னையில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். இலங்கையில் நடந்தது திட்டமிட்ட தமிழின படுகொலை என்பதை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும். ஐ.நா. மேற்பார்வையில் இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் கோரிக்கை. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட பள்ளி கல்வித்துறை வளாகம் முன்பு மாணவர்கள் கூடினர். இதனால் வளாகத்தின் முக்கிய நுழைவு வாயில் பூட்டப்பட்டது. மாணவர்கள், சாஸ்திரி பவனை முற்றுகையிடுவதற்கான ஊர்வலத்தை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இருந்து தொடங்கினர். போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்து தடுப்புகளை அமைத்தனர். ஆனால் தடுப்புகளை உடைத்த மாணவர்கள் அருகில் இருந்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு மாணவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயின் கல்லூரி மாணவர் கார்த்திக் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டதால், மயக்கமடைந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதே போல சென்னையில் மன்றோ சிலை அருகில் உள்ள தென்பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி நின்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு, ஊர்வலமாக ராணுவ தலைமை அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆவின் பாலகம் அருகில் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றம் எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. சென்னையில் நேற்று மட்டும் 22 இடங்களில் நடந்த மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

21 மார்ச் 2013

மத்திய அரசின் மிரட்டல் சட்டப்படி சந்திப்போம்:மு.க. ஸ்டாலின்

 Dmk Calls It Political Vendetta தமது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தி.மு.க. பொருளாளர் மு.க .ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலினின் வீட்டில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் 6 பேர் அடங்கிய குழு சோதனை நடத்தியது. இந்த சோதனை பற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், மத்திய அரசிலிருந்து நேற்றுதான் வெளியே வந்தோம். இன்று சோதனை என வந்திருக்கின்றனர். இது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசின் இந்த மிரட்டல், உருட்டலை நாங்கள் எதிர்கொள்வோம். எந்த வழக்கானாலும் இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்றார். மேலும் திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்று குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, வெளிநாட்டு கார் விவகாரம் தொடர்பாகத்தான் இந்த சோதனை என்றால் ஏன் ஒரு மாதத்துக்கு முன்பே நடத்தியிருக்கலாமே.. இல்லை ஒரு மாதம் கழித்துகூட சோதனை நடத்தியிருக்கலாமே.. நேற்றுதானே அரசில் இருந்து விலகினோம்.. இன்று சிபிஐ சோதனை நடத்துகிறது என்றால் அரசியல் பழிவாங்கல் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? என்றார். இதேபோல் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எப்படி செயல்படுகிறது என்பதற்கான உதாரணம் இது. இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான். சிபிஐ சோதனை நடத்தினாலும் வழக்கு பதிவு செய்தாலும் நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படப் போவது இல்லை என்றார். திமுகவின் மற்றொரு எம்.பியான டி.கே.எஸ். இளங்கோவனும் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சனல் 4 காணொளி தொடர்பில் சுயாதீன விசாரணை-பிரித்தானியா

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீன விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
நேற்றையதினம் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 45வது கூட்டத் தொடரின்போது, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பிரித்தானியப் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் மீது முன்னெடுக்கப்படுகின்ற தாக்குதல்களை பிரித்தானியா வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் பிரதம நீதியரசருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரனையின் மூலம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலும் சந்தேகம் கொள்கின்றது.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டினை நடாத்தும் நாடு ஜனநாயக வழிமுறையினை பின்பற்றுவது அத்தியாவசியமாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மக்கள் அடிப்படை மனிதவுரிமைகளை உள்நாட்டில் அனுபவிப்பதற்கு வழிகோலும்.
தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தாமதிப்பதாக குற்றஞ்சாட்டியதுடன் சனல்- 4 காணொளி தொடர்பில் சுயாதீன விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். என்றார்.
மேலும் எதிர்வரும் புரட்டாதி மாதம் ஜனநாயக முறையில் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் பிரித்தானியா கோரியுள்ளது.

20 மார்ச் 2013

தமிழீழம் உலகத் தமிழர்களின் தாகம்!

தாய்த்தமிழகம்,தமிழீழத் தாயகத் தமிழர்கள்,புலம்பெயர் தமிழர்கள் என்ற மூன்று பிரிவுகளும் இணைந்து போராடும் சூழல் வந்துள்ளது. புலிகளின் தாகமாக இருந்த 'தமிழீழம்' இப்போது, உலக தமிழர்களின் தாகமாக மாறியுள்ளது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.
சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணைய வழி நடந்த ஊடக மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசியபோது ருத்திரகுமாரன் இதைத் தெரிவித்தார்.
அவரது பேச்சு...
தமிழகத்தில் உணர்வெழுர்சியுடன் நடந்துவரும் மாணவர் போராட்டம் பாராட்டுக்குரியது. மாணவர் போராட்டம் மட்டுமே ஒரு இனத்தின் விடுதலைக்கு, எழுச்சியை ஏற்படுத்தும் சக்தி. மாணவர்களால மட்டுமே, இந்திய அரசை நிர்ப்பந்திக்க முடியும்.
இலங்கையில் ஈழத் தமிழர் மீது நடந்தது ஒரு இனப் படுகொலையே. அத்தகைய இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.மனித உரிமைச்சபையில், இந்திய அரசு 'அனைத்துலக சுயாதீனமான விசாரணையை' முன்னெடுக்க வலியுறுத்தும் வகையில், தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்பதை, தாய்த்தமிழக மாணவர் போராட்டங்கள் மூலமும், மக்கள் போராட்டங்கள் மூலமும், வலியுறுத்த வேண்டும்.
தி.மு.க தலைவர் கருணாநிதி, 'வலுவான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் எனக் கூறியிருப்பதை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. அந்த முடிவில் திமுக தலைவர் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி, 'அனைத்துலக விசாரணை, சிறிலங்காவுக்கு மீது பொருளாதார தடை' ஆகியவனற்றை கோரியிருப்பது பாராட்டத்தக்கது.
தமிழக ஆளுநர் உரையிலும், முதல்வரின் உரையிலும், 'இலங்கையில் நடந்தது ஒரு இனப் படுகொலையே' என்பதை கோரியிருப்பது வரவேற்கதக்கது. இந்திய மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
உலக நாட்டு அரசுகள் இலங்கையை எதிரி நாடாக கருத தயாராயில்லை. தங்களது அரசின் நலனில் நின்று கொண்டு, இலங்கைக் பிரச்சனையை அணுகுகின்றன. அதனால்தான் தெரிந்து இருந்தும், 'இனப்படுகொலை' என்ற சொல்லை பயன்படுத்த மறுக்கின்றன. அவர்கள் தங்களது அரசுகளின் நலனில் நின்று பார்ப்பதை மாற்றி கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களது நலனும், நமது கோரிக்கையும், சேரும் இடங்களை நாம் கண்டு அணுக வேண்டும்.
தாய்த:தமிழகம், தமிழீழத் தாயகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்ற மூன்று பிரிவுகளும் இணைந்து போராடும் சூழல் வந்துள்ளது. புலிகளின் தாகமாக இருந்த 'தமிழீழம்' இப்போது, உலக தமிழர்களின் தாகமாக மாறியுள்ளது.
தமிழீழத்தை பெற்று தர இந்திய முயலவேண்டும்.தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவினால், அது காஷ்மீரை இந்தியா தனிநாடாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற குரலை வலுப்படுதுவதாக ஆகுமே? என்பது தவறானது. காஷ்மீர் விவிகாரம் வேறு, ஆனால் இலங்கையில் நடந்தது 'இனப்படுகொலை'.
சுனாமி வந்தபோது, அழிவுகளில் சிக்கிய மக்களை மீட்க, புலிகள் உலக சமூகத்தின் உதவிகளை கொழும்பு மூலம் கொடுக்காதீர்கள் என்ற கோரிக்கையை வைத்தார்கள். அதேபோல இப்போது 'மீள்குடியேற்றம்' விரும்புவோர், கொழும்பு மூலம் அதை கொடுத்தால் அது தமிழ் மக்களுக்கு போய் சேராது . உலக நாடுகள் வடக்கு-கிழக்கு பகுதிகளான தமிழர் தாயகப் பிரதேசங்களில் தங்களது தூதரகங்களை திறக்க வேண்டும் என்றார் ருத்திரகுமாரன்.

19 மார்ச் 2013

ஊடகவியலாளர்களின் கேள்விகளால் தடுமாறும் தி.மு.க.தலைவர்!

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள தி.மு.க.ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது.அப்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்காது தட்டுத்தடுமாறி பதில் அளித்துள்ளார் கலைஞர் கருணாநிதி.

மாணவர் போராட்டம் சாதாரணமானதல்ல-அமெரிக்கா

தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உட்பட எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாகக் கருதிவிட முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனாஹே தெரிவித்தார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக 8 ஆவது நாளாகவும் தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் பேரெழுச்சி கொண்டுள்ள நிலையில், மாணவர்களின் இந்தப் போராட்டம் குறித்து அமெரிக்கத் தூதுவரிடம் ஜெனிவாவில் வைத்து "உதயன்' வினவியது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கம் ஒன்றில் வைத்து கருத்து வெளியிட்ட அவர், தமிழக மாணவர்களின் இந்தப் போராட்டத்தை சாதாரணமான ஒரு விடயமாக கருதி விட முடியாது என்றும் கூறினார்.
"கோடிக்கணக்கில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து நடத்தும் ஒரு போராட்டத்தை இலேசான விடயமாக கருதிவிட முடியாது. அது அமெரிக்கா இங்கு கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் தாக்கங்களை ஏற்படுத்துமென நான் கருதுகிறேன் என்றும் டோனஹே அம்மையார் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை விடயம் குறித்தான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுமா, இல்லையா என்ற கேள்வி நிலவிவரும் இவ்வேளையில், இதுகுறித்து இன்னும் ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

18 மார்ச் 2013

செந்தமிழன் சீமான் சுவிசில்!

20130318-140429.jpgஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருவதற்காக நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ் சென்றுள்ளார்.
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமாக மலர்ச்செண்டு, தமிழீழ தேசியக் கொடி போன்றவற்ற வழங்கி வரவேற்றனர்.
மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்க முன்மொழியும் சிறி லங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ள இந்தத் தருணத்தில் அவரின் சுவிஸ் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
அதேவேளை, குறித்த தீரமானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டுமெனக் கோரி தமிழக்கத்தில் மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இன்றைய தருணத்தில் சீமானின் வருகை இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் சீமான் அவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜெனீவா நகரில் ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள மாபெரும் கவன ஈர்ப்பு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தக் கவன ஈர்ப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணிவரை நடைபெறும்.
முதற்தடவையாக சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்துள்ள செந்தமிழன் சீமான் அவர்களின் வருகை சுவிஸ் தமிழர் மத்தியிலே புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

சேந்தாங்குளம் மக்களின் அவலம்!

sentha[1]நாங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு 2 வருடங்கள் கடந்துவிட்டன. ஆயினும் இதுவரை எமக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இதேநேரம் நாங்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட சமகாலப் பகுதியில் ஏனைய பிரதேசங்களில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கூட எமக்குக் கிட்டவில்லை” இவ்வாறு இளவாலை சேந்தாங்குளம் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வலி.வடக்கு குடிமக்கள் குழுக்களுக்கான கூட்டம் நகுலேஸ்வரம் முன்பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன்போதே குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மேற்கண்டவாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
“மீளக்குடியமர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மின்சாரம், நீர், மலசல கூடம் போன்ற அடிப்படை வசதிகள் அரசியல் செல்வாக்குடனேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. சேந்தாங்குளம் பகுதியில் 105 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டோம்.
நாங்கள் கடற்றொழில், விவசாயம் என்பவற்றையே வாழ்வாதாரத் தொழில்களாகக் கொண்டுள்ளோம். ஆனால் எமது தொழிலை மேற்கொள்வதற்குரிய எதுவித உதவிகளும் வழங்கப்படவில்லை. தொழில் ஊக்குவிப்பு உதவிகளும் கிடைக்கவில்லை.
இந்திய அரசினால் வழங்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்திலும் கூட நாங்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்தப் பகுதிக்கான மீள்குடியமர்வுக்கும் பொறுப்பான அரச அதிகாரிகளின் அசமந்தத்தாலேயே அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்காத நிலையில் 2 வருடங்களாக அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். இனியாவது அதிகாரிகள் கண்திறந்து, எமக்கான வாழ்வாதார வசதிகளைச் செய்துதர வேண்டும்” என்று கோரியுள்ளனர்

17 மார்ச் 2013

மாதவன் மாஸ்ரரும் வீரச்சாவடைந்துள்ளார்!

a_Mathavan_master_1தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர் தொடக்கம் பொட்டமான் வரை புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர்.
புலனாய்வுத்துறையில் பலரை உருவாக்கியதோடு புலனாய்வின் வீச்சை அதிகரித்து செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர். உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் இவர் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்தார். அண்மையில் வெளியான இலங்கையரச பயங்கரவாத அரசின் யுத்தக்குற்ற மீறல் படங்களில் மாதவன் மாஸ்டரின் படமும் வெளியாகியுள்ளது.mathavan-640x374

16 மார்ச் 2013

இடைக்கால அரசு,போர்க்குற்ற விசாரணை,ஐ.நா.வில் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்!

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரழிவில் இருந்து அவர்களைக் காப்பாற்ற இடைக்கால அரசு ஒன்றை சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் வலியுறுத்த வேண்டும் என்று நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் வலியுறுத்தினார் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னப்பலம்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பருவகால மீளாய்வுக் கூட்டத்தில் அவர் நேற்று உரையாற்றினார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் வழியாக அவருக்கு இந்தச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அவரது உரையின் முழு வடிவம் இங்கு தரப்படுகிறது.
நாம் இந்த அவை நிறுவப்பட்ட காலத்தில் இருந்÷த குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை ஒவ்வொரு நாடு தொடர்பாக நடைபெற்றுவரும் மனித உரிமை மீளாய்வு முறையைத் தொடர்ந்து அவதானித்து வந்துள்ளோம். இப்பொழுது இரண்டாவது சுழற்சியில் இருக்கும் இச் செயன்முறையில், சில நாடுகள் முதல் சுழற்சியின்போது இந்த அவையால் செய்யப்பட்ட பரிந்துரைகளை முற்றாக நடைமுறைப்படுத்தாது விடுத்திருந்தமையை அவதானிக்கலாம் குறிப்பாக இலங்கை இதற்கு நல்லதோர் உதாரணமாகின்றது.
இந்த மனித உரிமைகள் மீளாய்வு முறையானது வரலாற்று ரீதியாக சுதந்திரம், இனத்துவம், மொழி, காலாசாரம், என்பவற்றின் அடிப்படையில் தம்மை ஓர் தேசமாகக் கருதும் தமிழர்கள் போன்ற ஒரு மக்கள் கூட்டத்திற்கு தமது பிரச்சினைகள் பற்றி எடுத்தியம்புவதற்கான வாய்ப்பை வழங்குவதில்லை என்பதற்கு இலங்கை தொடர்பாக நடத்தப்பட்டு முடிந்த மனித உரிமை மீளாய்வு நல்லதோர் உதாரணம்.
அவர்களுடைய உண்மையான பிரச்சினைகளும் விருப்புகளும் ஒரு தேசத்தை அழிக்கும் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் வெறுமனே தனிநபர் மனித உரிமைப் பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கை தொடர்பான, கடந்த மனித உரிமைகள் மீளாய்வின்போது ஆஸ்த்திரியாவினால் முன்வைக்கப்பட்ட யோசனையில் "தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்'' என்பதில் மட்டுமே "தமிழர்கள்' பற்றிய குறிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது, தமிழர்கள் ஒரு பிரத்தியேகமான மக்கள் என்ற வகையிலும் அவர்களுக்குப் பிரத்தியேகமான பிரச்சினைகள் இருக்கின்றன என்ற வகையிலும் தமிழர்களது பெயர்தானும் இவ்விவாதத்தில் வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது.
இந்த மனித உரிமை மீளாய்வானது எந்தளவிற்கு தமிழர்களை நீக்கி நடத்தப்படுகின்றது என்றால், 65 வருட கால சிங்கள தமிழ் இன முரண்பாட்டைப் பற்றிப் பெரிதும் அறியாதவர்கள் ""மீளிணக்கம்'' என்பதனுள் எந்தத் தரப்புகள் உள்ளடங்குகின்றன என்பதனைக்கூட அறியாதவர்களாகி விடுவார்கள்.
திட்டமிட்ட வகையில் தமிழர்களது தேசிய இருப்பை இல்லாமல் செய்வதற்கான முயற்சியே இலங்கையின் 26 வருடகால போருக்கான காரணமாகும். "இலங்கை'சுசு என்பது உண்மையில் "சிங்கள பௌத்த அரசு'' என்பதன் ஓர் குறியீட்டுப் பெயராக இருக்க, இலங்கை அரசாங்கம் தாம் ""இலங்கையர்'' என்ற அடையாளத்தினை முன்னிறுத்தி வேலை செய்வதாகக் கூறும்போது நாம் அச்சமடைகின்றோம்.
இந்த வேளையில் நாம் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஓர் நிலைமாற்று கால நிர்வாகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது தாயகமான வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் பேரழிவில் இருந்து உடனடியாக பாதுகாக்கும் நோக்கில் அமைக்குமாறு கோரி நிற்கின்றோம்.
இறுதியாக இலங்கை அரசாங்கமானது சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பான மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகச் செய்யப்பட்டுவரும் அனைத்துலக பரிந்துரைகளையும் நிராகரித்து வருவதனால் ஓர் சுயாதீன, சர்வதேச விசாரணையை நாம் கோரி நிற்கின்றோம் என்றார்.

விடுமுறை அறிவிப்பையும் மீறி தீவிரமானது மாணவர் போராட்டம்!

 Anti Lanka Protests Rage Tn Students Demand Eelam தமிழகத்தில் மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டும் மாணவர்கள் போராட்டம் முழு வீச்சில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழக மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 7 பேர் உடல் நிலை கவலைக் கிடமானது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 மாணவர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் மேலும் 8 மாணவர்கள் இவர்களுடன் இணைந்திருக்கின்றனர். சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர். நந்தன் கல்லூரிதான் சென்னை மாணவர்களுக்கு இப்போது மைய போராட்ட களமாக மாறி வருகிறது. உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக பல கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு குவிந்துள்ளனர். திருச்சியிலும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூரில் பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களும் ஈழத் தமிழருக்காக போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதேபோல் கோவையில் மாநகராட்சி பள்ளிக் கூட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகியிருக்கின்றனர். கோவை ஒண்டிப்புதூரில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம் நடத்தியதற்காக 38 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை மதிமுக அலுவலகத்தில் 6-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக சட்ட மாணவிகள் போராட்டத்தை நடத்தினர். ராஜபக்சே உருவபொம்மையை விளக்கு மாறால் அடித்தும் செருப்பால் அடித்தும் தீயிட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். திருநெல்வேலியில் சித்த மருத்து மாணவ, மாணவியர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கடலூர், விருத்தாசலம் மாணவர்களும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

15 மார்ச் 2013

சிங்கள கொடியவர்கள் புரிந்த மற்றுமொரு கொடூரம்!(காணொளி)

WARCRIME_1இறுதிப்போரின்போது இடம்பெற்றுள்ள சிங்களப் படையினரின் கொரூரமான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் வீடீயோ காட்சிகளையும் இந்தியத் தொலைக்காட்சியான புதிய தலைமுறை வெளியிட்டுள்ள. அதிர்ச்சியூட்டும் இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக புதிய தலைமுறை என்ன சொல்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்.
“கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை ராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்… காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின.
இதேபோல ஒவ்வொருவரையும் செயலற்றவராக்கி உதவியற்ற நிலையில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர். அதற்கான விடை நம்மிடம் இல்லையென்றாலும், சாட்சியமாக இதுவரை வெளிவராத காட்சிகள் அடங்கிய பதிவுகள் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளன.
கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிராயுதபாணியான ஆண்கள், ஆடைகளின்றி இழுத்துத்தள்ளப்படுகிறார்கள்.. பின்னால் இருந்து வெற்றி எக்காளத்துடன் இலங்கை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறார்.
ஒரு போர் மூண்டால் ராணுவ வீரர்கள் உயிர் துறப்பார்கள். உயிருடன் பிடிபடுபவர்கள் போர்க் கைதிகளாவார்கள். ஆனால் போரில் கைதிகளாக பிடிபட்டவர்களை கொல்வதென்பது சர்வதேச சட்டங்களின் படி ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.
போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் அத்தனையுமே போர்க்குற்றங்கள்தான்.
போர்க்கைதிகள் கொல்லப்படுவது பற்றியும், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது பற்றியும் பேசும் சர்வதேச சட்டங்கள் போர்க்காலத்தில் கொல்லப்படும் குழந்தைகள் பற்றி இதுவரை எங்குமே பேசவில்லை என்பது தான் துயரம்.
அப்படி ஒரு சிறுவனை கொல்லும் காட்சிகள் பிரத்யேகமாக புதிய தலைமுறைக்கு கிடைத்திருக்கிறது.
மேற்காணும் புகைப்படத்தில், இலங்கை ராணுவத்தினரிடம் பிடிபட்ட இளைஞர்கள் மத்தியில் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான். அடுத்து, அந்த சிறுவனின் உடல், தலை சிதைத்த நிலையில் மற்ற உடல்களுடன் சேர்ந்து கிடக்கிறது.
லண்டனைச் சேர்ந்த உலகத் தமிழர் பேரவை தனக்கு கிடைத்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்தை புதிய தலைமுறைக்கு வழங்கியிருக்கிறது. இதை நாம் ஒரு முறைக்கு இருமுறையாக உறுதிப்படுத்திக்கொள்ள தடயவியல் துறையில் பெரும் நிபுணத்துவம் பெற்ற ஒரு வல்லுநரை அணுகி ஆய்வு செய்தோம்.
மாநிலத்தில் பல குற்ற வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு பெரும் துணையாக இருந்த, 22 ஆண்டுகாலமாக மாநில தடய அறிவியல் துறையில் பணிபுரிந்த திரு.சந்திரசேகரன், இந்த காட்சிகளை நன்கு ஆயுவு செய்து, தனது ஆய்வு விவரங்களை விவரித்தார்.
2009 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப்போர் முடிந்ததற்கு பிறகு, இதுவரை பல அதிர்ச்சிகரமான காட்சிப்பதிவுகள், புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
உலகத்தமிழர் பேரவை வெளியிட்ட இந்த காட்சி ஆதாரங்கள், ஒருவேளை அந்தச் சிறுவன் உயிரோடு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை முற்றாக சிதைத்திருக்கிறது.
ராணுவத்தின் பிடியில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இருந்ததையும், உயிரற்று கிடந்த புகைப்படங்களும் உலகையே உலுக்கின. அந்த புகைப்படங்கள் கேலம் மேக்ரேவின் நோ ஃபயர் ஸோன் ஆவணப்படத்தில் அந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இலங்கை ராணுவம் அரங்கேற்றிய போர்க்குற்றங்களின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்திய அந்த புகைப்படங்களோடு புதிய தலைமுறைக்கு கிடைத்த காட்சி ஆதாரங்கள், போர்க்குற்றத்தின் இன்னொரு வடிவத்தை வெளிச்சமிட்டுக்காட்டின.
உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்களுக்கோ, மனித உரிமை மீறல்களுக்கோ சாட்சியம் இல்லை என்று நினைத்தது இலங்கை. ஆனால். எதை வெற்றிக்களிப்பில் பதிவு செய்தார்களோ அந்த காட்சிகள்தான் இன்று சாட்சியங்களாக அவர்களுக்கு எதிரானதாக திரும்பிக்கொண்டிருக்கின்றன.
இந்த வீடியோ ஆதாரங்கள் மூலம் வெளிப்படும் ஓர் உண்மை, இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டவர்களே, இந்த நீளமான வீடியோ காட்சிகளையும் எடுத்துள்ளனர்.
ஒரு கையில் துப்பாக்கி ஏந்தி சுட்டவர்கள். மறு கையில் தங்களிடம் உள்ள கைபேசியில் அதனை பதிவு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. சாட்சியமற்ற போராக கருதப்பட்ட இலங்கை யுத்தத்தில் சாட்சியமாக நின்று இந்த விடியோ காட்சிகள், உலக சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி எடுத்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றன..
இறந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி மட்டும் அல்ல.. காணாமல் போன குழந்தைகளைப் பற்றி கூட ஐநா அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், குழந்தைகளின் மறுவாழ்வுப்பணிகளை இலங்கை அரசு சிறப்பாக மேற்கொண்டிருந்ததாக பாராட்டு தெரிவித்திருந்தது ஐநா அறிக்கை.
பொதுமக்களையும், குழந்தைகளையும் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களோ, புதிய தலைமுறை வசம் கிடைத்துள்ள விடியோகாட்சிகளோ, அந்த குழந்தைகள் போரில் சிக்கி உயிரிழந்ததாக இலங்கை சொல்லும் நொண்டிச்சாக்கை நிராகரிக்கின்றன.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உடலாவது அடையாளம் தெரிந்த ஓர் உடலாக இருக்கிறது.
ஆனால் நமக்கு கிடைத்த காட்சியில் உள்ள சிறுவன் யாரென்றே தெரியாது. இவனைப்போல எத்தனை எத்தனையோ சிறுவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

14 மார்ச் 2013

தமிழீழமும் தமிழகமும் தமிழர்களுக்கு-மலேசியாவில் போராட்டம்!

கோழைத்தனமும் ஊழலும் நிறைந்த இந்தியா உன் தூதரகத்தை மூடு என   மலேசியத் தமிழர்கள் ஆர்ப்பரித்தும் இந்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
மலேசியா தலைநகரமான கோலாலம் பூரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பு தமிழர்கள் நேற்று இந்த முற்றுகைப் போராட்டத்தை  நடத்தி உள்ளனர். இதில் ஈழ தமிழருக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என போராட்டத்தின் போது மக்கள் தெரிவித்தனர்.தமிழீழம்,தமிழ்நாடு தமிழர்களுக்கு என்ற சுலோகங்களையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

சிறிலங்கா தொடர்பில் கியூபா அமெரிக்கா இடையில் கடும் சொற் போர்!

இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து விளக்கமளிப்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தின்போது குறித்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட கியூபா, இவ்விவகாரம் தொடர்பில் வோஷிங்டனுடன் நேரடிச் சொற்போரிலும் ஈடுபட்டது.
கியூபா பிரதி நிதிகளுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் சூடான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெறுகையில், இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா குரல்கொடுத்தன.
இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பிரேரணையை நலிவடையச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டன.
இவ்வேளையில், குறுகீடு செய்து களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள், கனடா இராஜதந்திரிகள் ஆகியோர் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு முழுமையான ஆதரவை வெளியிட்டதுடன், அதில் காட்டமான முன்மொழிவுகளை உள்ளடக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதிகள் வழமையான பாணியில் மௌனம் காத்தனர். அமெரிக்கப் பிரேரணை விடயத்தில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் இலங்கைப் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஜெனிவா இராஜதந்திர சமர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா இன்று உத்தியோகபூர்வமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கின்றது.

13 மார்ச் 2013

ஜெனிவாவில் சிறிலங்காவுக்குத் தொடங்கியது தலைவலி!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் நேற்று இடம்பெற்ற பொதுவிவாதத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியுள்ளனர்.
இந்த விவாதம், சிறிலங்கா குறித்த விவாதமாக இருக்காத போதிலும், சிறிலங்கா நிலைமைகளை சுட்டிக்காட்டி இந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

கனடா -
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது.
“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, சிறிலங்கா தனது தேசிய செயற்திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த ஆண்டு கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்தவுள்ள சிறிலங்கா, கொமன்வெல்த் அமைப்பின் கொள்கைகள் மற்றும் அடிப்படைப் பெறுமானங்களின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும்.
போரின் போது இடம்பெற்ற, மனிதஉரிமை மற்றும் மனதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகளை சிறிலங்கா ஆரம்பிக்க வேண்டும்” என்று கனடா கேட்டுக் கொண்டுள்ளது.

அயர்லாந்து -
இந்த விவாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய அயர்லாந்து பிரதிநிதி, கடந்த ஆண்டில் சிறிலங்கா மிகவும் வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்தையே காட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா -
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை கவலையளிக்கிறது என்றும் பொதுவிவாதத்தில் இது குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வரவேற்பதாகவும் பிரித்தானியப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் -
நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட தேசிய செயற்திட்டத்தை ஜப்பான் வரவேற்றுள்ளது.
இந்த தேசிய செயற்திட்டத்தில் உள்ளடக்கப்படாத பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை சிறிலங்கா ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் திட்டத்துக்கு சிறிலங்கா வழங்கியுள்ள குறிப்பிட்ட ஒத்துழைப்பையும், இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்துக்கு குறிப்பாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக குழுவை வரவேற்றதையும் ஜப்பான் வரவேற்றுள்ளது.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவது, உரிய நேரத்தில் பொதுச்சேவை ஆணைக்குழுவை நியமிப்பது உள்ளிட்ட தேசிய செயற்திட்டமத்தை உறுதியாக நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் இருப்பதாகவும் ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.

சுவீடன் -
நீதித்துறை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து சுவீடன் பிரதிநிதி நேற்றைய விவாதத்தின் போது கவலை வெளியிட்டார்.

சுலோவாக்கியா -
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து கவலை வெளியிட்ட சுலோவாக்கியா நாட்டுப் பிரதிநிதி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக தேசிய செயற்திட்டத்தை காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒஸ்ரியா -
சிறிலங்காவில் உள்ள சிறுபான்மை தமிழர்களின் நிலை குறித்து தமது நாடு கவலை கொள்வதாக இந்த விவாதத்தில் பேசிய ஒஸ்ரியப் பிரதிநிதி தெரிவித்தார்.

டென்மார்க் -
டென்மார்க் நாட்டின் பிரதிநிதியும், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த தமது நாடு கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு -
சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மான வரைபை அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் பிரதிநிதி வரவேற்றுள்ளார்.
அண்மையில் சிறிலங்காவின் தலைமைநீதிபதி அரசியலமைப்புக்கு மாறாக பதவி விலக்கப்பட்ட சம்பவம் அந்த நாட்டின் மனிதஉரிமைகள் நிலை சரிவைச் சந்தித்துள்ளதற்கான அறிகுறியாகும்.
பூகோள கால மீளாய்வின் போதும் சிறிலங்கா பொறுப்ப்புகூறல் பற்றிய பரிந்துரைகளை நிராகரித்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பசுமைத் தாயகம் -
பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதி உரையாற்றியபோது, சிறிலங்காவில் 2009இல் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தற்போது, மத்திய அரசின் அதிகாரங்களை அரசியலமைப்புக்கு முரணாக விரிவாக்கவும், சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது.
சுதந்திரமான அனைத்துலக ஆணைக்குழு மூலம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துலக கல்வி அபிவிருத்தி நிறுவனம் -
அனைத்துலக கல்வி அபிவிருத்தி நிறுவனம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது, பெரியளவிலான கொடுமைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட போது அவர்களுக்கு உதவ ஐ.நாவும், அனைத்துலக சமூகமும் தவறிவிட்டன.
சிறிலங்காவில் தமிழ் மக்கள் இன்னமும் மனிதஉரிமை மீறல்களாலும், இனஒதுக்கலாலும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு அனைத்துலக சமூகமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மார்ச் 2013

பற்றி எரிகிறது தாய் தமிழகம்!

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும் என்றும் இலங்கை அரசுமீது தமிழர் படுகொலைக்கான போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு வலியுறுத்தியும் மாணவர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம், வீதி மறியல் போராட்டங்கள் காரணமாகப் பற்றி எரிகிறது தமிழகம்
முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த லொயோலாக் கல்லூரி மாணவர்கள் 8 பேரையும் தமிழகப் பொலிஸார் நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரெனக் கைது செய்ததை அடுத்தே தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மேலும் 27 மாணவர்கள் சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுக் குரல்கள் தமிழகம் எங்கும் வலுத்து வரும் நிலையில் மாணவர்களின் இந்தப் போராட்டங்கள் அங்கு பெரும் கொந்தளிப்பையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
மாணவர்கள் அனைவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிவருகின்றனர்.
இந்தப் போராட்டங்களால் தமிழக அரசும் மத்திய அரசும் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொலிஸார் மாணவர்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோது அவை பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழ் இனப் படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நேற்றுத் திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதம் மற்றும் வீதி மறியல் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
லொயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்தனர். இந்த மாணவர்களுக்குத் தமிழகம் முழுவதும் மாணவர்களின் ஆதரவு வலுத்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் நேற்று முன் தினம் நள்ளிரவிலேயே லொயோலாக் கல்லூரி மாணவர்கள் 8 பேரையும் கைது செய்து வலுக்கட்டாயமாகப் பொலிஸார் போராட்டத்தைக் கலைத்தனர்.
இருப்பினும் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் லொயோலாக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர். திருச்சி சென். ஜோசப் கல்லூரி மாணவர்கள் 10 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள், காரைக்குடி அழகப்பா கல்லூரி, ஆனந்தா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை, பெரம்பலூர், தஞ்சாவூர், மன்னார்குடி என ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

11 மார்ச் 2013

உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் உட்பட உணர்வாளர்கள் நள்ளிரவில் கைது!

News Serviceஇலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக தொடர்ந்தது . உண்ணாவிரதத்தை ஆதரித்து, தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதனிடையே, மாணவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தனர். மேலும், மத்திய அரசின் பிரதிநிதிகள் நேரில் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வந்த நிலையில் இன்று 11.03.2013 அதிகாலை 1.45 மணியளவில் உண்ணாவிரத பந்தல் அருகில் போலீஸ் படை குவித்து போராட்டம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் உடனிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் இயக்குனர்.கௌதமன், இயக்குனர்.களஞ்சியம், ம.தி.மு.க. மல்லை சத்யா , வேளச்சேரி மணிமாறன் திருமலை(சி.பி.ஐ), கென்னடி, மே 17 இயக்கம் திருமுருகன், தோழர்.கயல்விழி ,தோழர்.இராஜா ஸ்டாலின்,செந்தில்,அருண்செளரி,திருமலை உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் கைதுசெய்யப்பட்டு அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நாலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

லயோலா கல்லூரி மாணவர்கள் தமது உண்ணாவிரதத்திற்காக முன்வைத்துள்ள கோரிக்கைகள்:
1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே.

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்.

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம். போன்ற போரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

10 மார்ச் 2013

ராஜபக்சே தலைக்கு ரூ1 கோடி!

பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட படத்தை கண்டு பதறித்துடிக்கிறது தமிழகம். “போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே கும்பல் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்’ என்கிற கோரிக்கைகளை முன்னிறுத்தி உணர்வாளர்கள் நடத்தும் போராட்டங்களால் தமிழகம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.
ம.தி.மு.க., தமிழர் தேசிய இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு, தமிழக எழுச்சி இயக்கம், தமிழக பெண்கள் செயற்களம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 14 இயக்கங் கள் இணைந்து நடத்திய சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வீரியமாக இருந்தது. வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான உணர்வாளர்களின் கோபமும் ஆவேசமும் உணர்ச்சிப்பிழம்பாக வெடித்தன.
ராஜபக்சேவின் இன வெறியை சித்தரிக்கும் பதாகைகளையும் பாலச்சந்திரன் படுகொலை பதாகைகளையும் ஏந்தியபடி திரண்டிருந்தனர் உணர்வாளர்கள். ராஜபக்சே கும்பல்களை போர்க் குற்றவாளிகளாக அறிவித்து சர்வதேச கூண்டில் ஏற்று என்று முழங்கிக்கொண்டிருந்தார் வைகோ. அப்போது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த உணர்வாளர்கள் திடீரென்று ராஜபக்சேவின் உருவ பொம்மையை தூக்கிக் கொண்டு வந்து செருப்பால் அடித்தும் தீ வைத்து கொளுத்தியும் தங்களது கோபத்தை தீர்த்துக் கொண்டனர். ராஜசேகரன் என்ற உணர்வாளர் ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு தீ வைத்து விட்டு, “”செத்தாண்டா ராஜபக்சே” என்று ஆவேச குரல் எழுப்பினார்.
இலங்கைக்கு எதிராக 1 மணி நேரம் கண்டன கோஷங்களை எழுப்பிய உணர்வாளர்களை அழைத்துக்கொண்டு இலங்கை தூதரகத்தை முற்றுகையிட வைகோ, நெடுமாறன், வேல்முருகன் ஆகியோர் நடந்து சென்றனர். 100 அடி தூரம் நடந்து சென்ற அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீஸ்.

06 மார்ச் 2013

ஒரு பக்கம் போர்க்குற்றச்சாட்டு, மறுபக்கம் போர்ப்பயிற்சி – அமெரிக்காவின் இரட்டைமுகம்?

US-SL-train-2சிறிலங்கா இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணைகளை வலியுறுத்தி வரும் அமெரிக்கா, இன்னொரு பக்கத்தில் சிறிலங்கா படையினருக்கு தொடர்ந்து பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் படை அதிகாரிகள் குழுவொன்று சென்ற மாத நடுப்பகுதியில், வவுனியா பிரதேசத்தில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சிகளை அளித்துள்ளது.
பூ ஓயாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு முகாமில் இந்த கூட்டுப்பயிற்சி இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 18ம் நாள் தொடக்கம் 22ம் நாள் வரை இடம்பெற்ற இந்தப் பயிற்சியில், சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல், மருத்துவப்படைப் பிரிவு மற்றும் ஆயுத தளபாட தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமான சிறிலங்காப் படையினர் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் 18வது மருத்துவப் படைத்தலைமையகம், பசுபிக் விமானப்படை, பசுபிக் பிராந்திய பொதுசுகாதார தலைமையகத்தின் மிருக மருத்துவ நிபுணர்கள், 8வது அரங்க உதவித் தலைமையகத்தின் வெடிபொருள் நிபுணர்கள் சிறிலங்கா படையினருக்குப் பயிற்சிகளை அளித்துள்ளனர்.
மனிதாபிமான உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
கண்ணிவெடிகளை அகற்றுவதை மையப்படுத்தியே இந்தப் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் சிறிலங்கா அரசாங்கமோ, இராணுவமோ இதுபற்றி எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வாசகங்களில் திருப்தியில்லை-சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் தற்போது இடம்பெற்றுள்ள வாசகங்கள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று ஜெனிவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வாசகங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த முறை கொண்டுவரப்படும் தீர்மானம் கடந்த முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை விட கடுமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போர் குற்றம் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை தேவை என்பதை தாம் கேட்பதாகவும், இறுக்கமான ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அதே நேரம் மனித உரிமைப் பேரவைகளுக்கான அமெரிக்கத் தூதர், இந்த விடயம் தொடர்பாக இலங்கையோடு இணைந்து செயல்பட முடியும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் போரில் முக்கியப் பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதி அமெரிக்க இராணுவப் பல்கலைக்கழகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்காவை மட்டுமே நம்பி தாம் இருக்க முடியாது என்று தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன் பல்வேறு நாடுகளின் தூதர்களை சந்தித்து தமது நிலைபற்றி விளக்கிக் கூறுவதாகத் தெரிவித்தார்.
மனித உரிமைப் பேரவையின் அமர்வையொட்டி பல்வேறு கவன ஈர்ப்பு நிகழ்வுகளை மனித உரிமை அமைப்புகளும் அரசு சாரா நிறுவனங்களும ஏற்பாடு செய்துள்ளன.

05 மார்ச் 2013

இராணுவ அதிகாரியை அனுப்ப மறுத்த கோத்தா!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கும் சிறிலங்கா அரசகுழுவில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் எவரும் பங்கேற்கவில்லை.
இதற்கு முன்னைய கூட்டங்களில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பங்கேற்று, அரசகுழுவினருக்கு உதவியிருந்தனர்.
இம்முறையும் சிறிலங்கா இராணுவ மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கோரியிருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தை மையப்படுத்திய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு முறியடிக்க, இராணுவ அதிகாரி ஒருவர் பங்கேற்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்ட போதும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இம்முறை சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் எவரையும் அனுப்புவதில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஜெனிவா சென்ற சிறிலங்கா தூதுக்குழுவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் செயற்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளாலேயே சிறிலங்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அந்த குற்றச்சாட்டுகளை முறியடிக்க உதவாமல் நழுவிக் கொண்டுள்ளது குறித்து சிறிலங்கா குழுவினர் விசனம் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசின் அடாவடித்தனம் நீடித்தால் ஐ.நாவிலிருந்து விலக்கப்படும்:கனடிய பா.உறுப்பினர்!


இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக தமிழ் நாட்டு மருத்துவ பேராசிரியர் தாயப்பன் கலந்து கொண்டதுடன், கனடா நாட்டின் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழருக்காக குரல் கொடுப்பவருமான ஜிம் கரியானஸ் வழங்கிய தனதுரையில், தமிழர்களாகிய உங்களோடு தோளோடு தோள் கொடுத்து நிற்பதில் மிகுந்த மகிழ்சி அடைகிறேன். இலங்கையரசின் இனப் படுகொலையை உங்களோடு இணைந்து நாமும் எதிர்க்கிறோம். அந்த அரசு தொடர்ந்து இந்த நிமிடம் வரை தமிழர்கட்கு இன்னல்களையே செய்து வருகிறது. இப்படிப்பட்ட மனித விழுமியங்கள் தெரியாத இவ் அரசிற்கு ஒரு செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் செயற்பாடுகளில் கண்ட காணவுள்ள படு தோல்விகளை இச் சிறிலங்கா அரசு நன்கறியும். இந்நிலை நீடிக்குமானால் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் என்பதுடன் என்றும் எம் உறவுகளாம் உங்களின் போராட்டத்திற்கு எம் தார்மீக ஆதரவு உள்ளது எனவும் குறிப்பிட்டார். இவர்களுடன் பிரான்ஸ் நாட்டு மாநகர சபை உறுப்பினர்கள், இத்தாலி நாட்டு மனித உரிமை ஆர்வலர், பல நாட்டு பிரதிநிதிகள் மற்றும் தமிழ் நாட்டு உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசின் அடாவடித்தனம் நீடிக்குமானால் பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும், ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் என கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானஸ் தெரிவித்தார். நேற்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம் மக்கள் புடைசூழ பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக்கும் பல வகை பதாதைகளைத் தாங்கியவாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமானது.