31 அக்டோபர் 2013

பெற்ற மகளை ஏவிக்கொன்ற பெண் பேய்!

தனது உடல் சுகத்தையே பெரிதாக எண்ணிய ஒரு பெண் பேய், தான் பெற்றக் குழந்தை, தனது கள்ளக்காதலர்கள் இருவரை விட்டுக் கொலை செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அந்தக் கொடுமைக்காரப் பெண்ணின் பெயர் ராணி. 24 வயதாகிறது. திருமணமான இவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாள். கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த ராணி. இந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களுடன் கள்ளக்காதலில் திளைத்து வந்தார். அதில் ஒரு நபரின் பெயர் ரஞ்சித். இவர் லாரி டிரைவர். இன்னொரு நபரின் பெயர் கேசின். இந்த நபருக்கு வயது 19தான். இருவரும் ராணியுடன் நெருக்கமாகப் பழகினர். இதை ராணியும் ஏற்று ஒரே சமயத்தில் இருவருடனும் பழகி வந்துள்ளார். இருவரின் நட்பு கிடைத்ததால் காமம் கண்ணை மறைக்க ஆரம்பித்தது ராணிக்கு. அதற்கு தனது மகள் பெரும் இடையூறாக இருப்பதாக நினைத்தார் ராணி. மகளைக் கொன்று விட்டு எப்போதும் இந்த இரு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருக்கவும் தீர்மானித்தார். தனது முடிவை இரு கள்ளக்காதலர்களிடமும் தெரிவிக்கவே, அவர்களும், ராணியுடனான இன்பம் தடைபடாமல் தொடர்ந்தால் போதும் என்று எண்ணி, சரி என்று கூறினர். கடந்த 29-ந் தேதி ராணி வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டுக்கு வந்துள்ளனர் இரு கள்ளக்காதலர்களும். பின்னர் குழந்தையின் கழுத்தை கொடூரமாக நெரித்துக் கொலை செய்தனர். பாவம், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து போனது. பின்னர் ஒரு ஜேசிபியில் குழந்தையின் உடலைப் போட்டு நீண்ட தூரம் சென்று குழி தோண்டிப் புதைத்துள்ளனர். இதெல்லாம் முடிந்த பின்னர் வீடு திரும்பிய ராணி குழந்தையைக் காணோம் என்று கூறி கண்ணீர் வீட்டுக் கதறி அழுது பெரிய்ய டிராமா போட்டுள்ளார். மேலும் போலீஸிலும் ஒரு புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் ராணியின் நீலிக் கண்ணீரை கண்டுபிடித்து விட்டனர். உரிய முறையில் விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டது... ராணியின் குரூரமான மறுபக்கமும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர் ராணியையும், அவரது இரு கள்ளக்காதலர்களையும் போலீஸார் கைது செய்தனர். உடல் சுகத்திற்காக இப்படி ஒரு கொடூரமா... ?

30 அக்டோபர் 2013

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை!

அடுத்தமாதம் கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் தாம் பங்கேற்க வாய்ப்பில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்கவோ, அதில் உரையாற்றவோ சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்த அழைப்பையும் அனுப்பவில்லை.அங்கு நான் செல்வேன் என்று நினைக்கவில்லை.கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நான் ஆலோசனை கேட்பேன்.கட்சியின் முடிவுகளுக்கு அமையவே நான் நடப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொமன்வெல்த் மாநாட்டில் பொருத்தமான ஒரு அமர்வில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை உரையாற்ற அழைப்பது குறித்து சிறிலங்காவின் ஆளும்கட்சித் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

29 அக்டோபர் 2013

இராணுவப் பிரசன்னம் சிவில் நிர்வாகத்துக்கு தடை!

newsவடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்கும் வரை சிவில் நிர்வாகத்தில் தடை இருந்து கொண்டே இருக்கும். விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காக கிட்டுப்பூங்கா உட்பட அனைத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன். வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை வரவேற்கும் முகமாக நல்லூர் பிரதேச சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. எமது இளம் சிறார்களுக்கு மனநிறைவான பயிற்சியை பொழுதுபோக்கைக் கொடுக்கவல்லதாக கிட்டுப் பூங்கா உள்ளது. அதனை விடுதலைப்புலிகள் முன்னர் பயன்படுத்தினர் என்பதற்காக அது உட்பட வன்னியில் கூட புலிகளின் பயன்பாட்டில் இருந்த இடங்களை கையகப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.இத்தகைய சுயநலன்களுக்காக இயற்கைச் சூழல்களை அழிப்பதை ஏற்கமுடியாது. பழைய பூங்காவில் அரச அதிபருக்கு மட்டும் தங்குமிடம் அமைக்க முடியுமாக இருந்தது. ஆனால் ஏனைய மரங்கள் அனைத்தையும் அழித்து ஒழித்து ஆளுநர் தனக்கு அலுவலக தங்குமிடமும் அமைத்து இயற்கை வளத்தை அழித்து விட்டார். அந்தப் பூங்காவில் முன்னர் சூழல் சிறப்பாக இருந்தது என்றார் ஐங்கரநேசன்.

28 அக்டோபர் 2013

தேனிலவுக்காக ஊட்டி சென்ற யாழ்.இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன். சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர்.
பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்கள். தொடர் மழை காரணமாக அங்கு பாறைகள் பாசி படர்ந்து இருந்தன. இதனால் ஒரு பாறையில் ரீகன் ஏறியபோது அது வழுக்கி கால் தடுமாறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்தார் ரீகன்.
தண்ணீர் வேகமாக போய்க் கொண்டிருந்ததாலும், சுழல் இருந்ததாலும் அதில் சிக்கிக் கொண்ட ரீகன் உதவி கோரி அலறினார். அவரது மனைவி உள்ளிட்டோரும் உதவி கேட்டு கதறினர். தீயணைப்புத் துறைக்கும் தகவல் போனது. ஆனால் ரீகன் தண்ணீருக்குள் போய் விட்டார். தீயணைப்புப் படையினர் வந்து நீண்ட நேரம் தேடியும் ரீகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ரீகனின் சடலம் கிடைத்தது. இலங்கைத்தமிழர் ஒருவர் தேனிலவுக்காக வந்த இடத்தில் நீரில் விழுந்து பலியான தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் சங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ரீகனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

27 அக்டோபர் 2013

சரத்குமார் தாயார் மறைவுக்கு வைகோ அஞ்சலி!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா ராமநாதன் நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், புஷ்பலீலா ராமநாதன் உடலுக்கு நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் வைகோ. செயலாளர் வைகோ அவர்கள் அஞ்சலி செலுத்தினார். அவருடன் தேர்தல் பணிச் செயலாளர் கழககுமார், எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

26 அக்டோபர் 2013

பொதுநலவாய மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது!

இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நேற்று மாலை யாழ். நகரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டை மற்றும் அதில் கலந்து கொள்ளும் நாடுகளை புறக்கணிக்க வில்லை எனவும் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டையே தமது கட்சி புறக்கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எனினும் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் சர்வதேச தலைவர்களுடன் மாநாட்டிற்கு வெளியாக தமது கட்சி சந்தித்து கலந்துரையாடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள தலைவர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

25 அக்டோபர் 2013

கோத்தாவின் கருத்து நகைப்பிற்குரியது - சுரேஷ்

பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சட்டம் ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு என பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவித்துள்ள நிலையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ் அதிகாரங்களை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்கி அவரது கடமையை செய்ய வழிவிட வேண்டும் அத்துடன் மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது சர்வதேச சட்டங்களை மீறிய செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கு அமைய கல்லறைகளை இடிக்க முடியாது. இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் போராளிகளுக்காவும் நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

24 அக்டோபர் 2013

தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத் தீர்மானத்தை திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன. தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது, இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்பது தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதை ஏற்று தமிழக சட்டசபையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அத்தீர்மானத்தில், இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் 15-ந் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இம்மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ள கூடாது. சிங்களருக்கு இணையாக தமிழர்களும் வாழ உரிய நடவடிக்கையை இலங்கை அரசு எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத நிலையில் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தின் மீது சட்டசபை அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். பின்னர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

23 அக்டோபர் 2013

பின்லாந்தில் தமிழீழ தேசியத் தலைவரின் தபால் தலை வெளியீடு!

தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் பின்லாந்தில்… பின்லாந்து அரசு ஊடாக முதல்தரமான (first class) தபால்த்தலை வெளியிட்டு பெருமையும், சிறப்பையும் சேர்த்துள்ளார்.
இவர் கடந்த வருடமே பல தடவைகள் இதே போன்ற தபால்த் தலை வெளியிட பல தரப்பட்ட முயற்சிகள் எடுத்த போதிலும், அந்த நாடு நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் வெளியிட்டே தீர வேண்டும் என்ற வெறியுடன் பல கடினமான முயற்சிகளோடு பின்லாந்து அரசினை நாடி இது பற்றிப் பேசி சம்மதிக்க வைத்து தமிழர்களின் விடிவிற்காகப் போராடிய வீரத்தலைவன் என்ற அடிப்படையில் தமிழீழ தேசியத் தலைவர், அவர் குடும்பத்துடன் இருக்கின்ற படத்தினை தபால் தலை ஊடாக வெளியிட்டு தமிழர்களின் வீரப் போராட்டத்தையும், தமிழர்களின் ஒரே தலைவன் பிரபாகரன் என்பதையும் இத்தபால் தலை ஊடாக சொல்லிச் சிறப்பித்திருக்கிறார்.
பின்லாந்து அரசும், தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புக்களை ஏற்று முதல் தரமான (first class) தபால் தலை வெளியிட்டு எங்கள் தேசியத் தலைவரையும் அவரின் குடும்பத்தையும் கௌரவப்படுத்தியுள்ளது.கடந்த வருடங்களில் தமிழீழச் சின்னங்கள் பதிக்கப்பட்ட தபால் தலைகள் பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா, நோர்வே, ஜேர்மனி ஆகிய நாடுகளில் அந்த நாட்டு அரசாங்கங்கள் ஊடாக ஈழத்தமிழர்கள் வெளியிட்டு சிறப்பித்து கௌரவப்படுத்தியிருந்தது யாவரும் அறிந்ததே.

22 அக்டோபர் 2013

பொதுநலவாய மாநாட்டை கென்யா புறக்கணிப்பு!

newsஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கென்யா அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என கென்யா ஆபிரிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது என இராஜதந்திர தரப்புக்களை சுட்டிக்காட்டி கென்யாவின் த ஸ்டார் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் ஏற்கனவே உகண்டா, தான்சானியா, றுவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா மற்றும் ஸம்பியா ஆகிய நாடுகள் இலங்கை மாநாட்டில் பங்கேற்க முடிவெடுத்துள்ளன. இருப்பினும் கென்யாவின் ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலத்திலேயே கென்ய ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கென்யா தமது ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட போதும் அதனை தடுக்கமுடியவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 அக்டோபர் 2013

தடையை மீறி ஈரானிடம் எண்ணெய் வாங்குகிறது சிறிலங்கா!

ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ள போதிலும், மூன்றாவது தரப்பு மூலம், சிறிலங்கா தொடர்ந்தும் ஈரானிடம் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணுவாயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.
இந்தநிலையிலேயே, அமெரிக்காவின் தடையையும் மீறி, அனைத்துலக கடற்பரப்பில் வைத்து, ஈரானிய மசகு எண்ணெயை, சிறிலங்கா அரசாங்கம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலமாக, வாங்கி வருகிறது.
சிறிலங்காவில் உள்ள சபுகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில், ஈரானிய மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் வசதிகளே உள்ளன.
ஈரானிய மசகு எண்ணெய் சீராக கிடைக்காததால் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை அடிக்கடி மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

20 அக்டோபர் 2013

விக்னேஸ்வரனுக்கு கெகலிய எச்சரிக்கை!

வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சீ.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்த போதும், அவர் யாப்புக்கு எதிராகச் செயற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் கேகலிய ரம்புக்வெல. சில நாட்களாக ரம்புக்வெலவும், சிவியும் சொற்போரில் ஈடுபட்டுவருகின்றார்கள். அதில் ஒருபகுதியாகவே கேகலிய மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரம்புக்வெல தனது எச்சரிக்கையில் கூறியதாவது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் ஜனாதிபதியின் முன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது நற்செய்தி ஆனால் அரச வேலைத் திட்டங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயற்பட்டால், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தவர் என்றும் பாராமல் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 அக்டோபர் 2013

விடிவை நோக்கி ஒன்றிணைந்து செயற்படுவோம்!

வலி.மேற்கு பிரதேச சபையின் கலாசார மண்டபம் 40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.
வழக்கம்பரை முத்துமாரி அம் மன் ஆலயத்தில் இருந்து மதியம் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, விருந்தினர்கள் தமிழர் பண்பாட்டு மரபுக்கு அமைய திறப்பு விழா மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், க.சுரேஷ் பிரேமச்சந்திரன், இ.சிறீதரன் ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் சபைச் செயலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சபைக் கட்டடத்தின் முன்னால் அமைக்கப்பட்ட தமிழ் தாய் சிலை திறந்து வைக்கப்பட்ட பின்னர் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு ஆசியுரை வழங்கிய நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும், தென்னிந்திய திருச்சபையின் போதகர், இன்று இருப்பதைப் போன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், எமது இலட்சியத்தை எட்டும் வரை அது தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
அத்துடன் தமிழர்கள் வீழ்ந்து விடவில்லை என்றும், "பீனிக்ஸ்' பறவைகள் போல மீண்டும் தங்கள் வாக்குகளால் எழுந்து நிற்கிறார்கள் என்றும், அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தேசியத்தின் பால் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மாகாண சபை உறுப்பினர் த. சித்தார்த்தன் தனது உரையில், தமிழ் மக்களின் விடிவு நோக்கிய பயணத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் 30 பேரும் ஒன்றாகச் செயற்படுவோம் என்று கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தனது உரையில், 13ஆவது திருத்தம் எங்களுக்கான தீர்வில்லை என்பதைச் சர்வதேசமே ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால்தான் 13ஆவது திருத்தத்தை தாண்டிய தீர்வை அவர்கள் வலியுறுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.
அரச அதிகாரிகள் சுதந்திரமாகத் தமது கன்னிப் பேச்சுக்களை இன்று பேசியிருக்கின்றார்கள். காலமும் மாறியிருக்கின்றது. ஆட்சியும் மாறியிருக்கின்றது. சகல அரச அதிகாரிகளும் சுதந்திரமாக இனிச் செயற்படலாம் என்று மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தனது உரையில் கடந்த 21 ஆம் திகதிக்கு முன்னரான நிலைமையில் இருந்திருந்தால், இன்று நாம் நிகழ்வுக்கு வந்ததைக் கண்டதும் அரச அதிகாரிகள் ஓட்டமெடுத்திருப்பர் என்றும் குறிப்பிட்டார்.

18 அக்டோபர் 2013

தமிழர்களின் கனவு நனவாகும்-மோடி

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்குவோம்" என்று பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தெரிவித்தார்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆமதாபாத்தில் இருந்து தனி விமான மூலம் இன்று பிற்பகல் 3. 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க.வினர் உற்சாகமாக வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில், தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, திருச்சி மாநாடு பா.ஜ.க.வுக்கு மகத்தான வெற்றி என்றார்.
காங்கிரஸ் அல்லாத இந்தியா என்பது மக்களின் கனவாக இருக்கிறது என்றும், தமிழகத்தில் மாற்றத்திற்கான அலை நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால்தான் பைலின் புயலால் கூட இங்கே பாதிப்பில்லை என்று மோடி கூறினார்.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, கருப்பு பணத்தை மீட்காமல் உத்தரபிரதேச மாநிலத்தில் புதையல் தோண்டுகிறது மத்திய அரசு என்று சாடினார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்குவோம் என்றும் மோடி கூறினார்.
பா.ஜ. நிர்வாகிகளுடன் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திலிருந்து தி.நகரில் உள்ள பா.ஜனதா தமிழக அலுவலகமான கமலாலயம் சென்றார் மோடி. அங்கு தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்கிறார்.
சென்னை பல்கலைக்கழகம்
அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழக, நூற்றாண்டு விழா கலையரங்கிற்கு செல்கிறார் மோடி. இங்கு நானி பால்கிவாலா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மோடியின் வருகையையொட்டி, விமான நிலையத்திலிருந்து தமிழக பா.ஜனதா அலுவலகம் வரும் பாதை, நூற்றாண்டு விழா கலையரங்கம் என பல பகுதிகளிலும், போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சு பொறுப்புக்கள் பகிர்ந்தளிப்பு!

வட மாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சுக்கள், பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள், அரசியலமைப்பு ஏற்பாடு, அமைச்சர்களுக்கு அறிக்கையிடுவதற்கு பொறுப்பான உறுப்பினர்கள் விபரங்களைக் கொண்டதாக இப் பட்டியல் அமைந்திருக்கிறது.
முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கு 16 அமைச்சுக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ளுராட்சி மற்றும் மாகாண நிர்வாக அமைச்சில் நிர்வாகம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. சட்டம், ஒழுங்கு அமைச்சில் மனித உரிமைகள் உட்பட மாகாணத்திற்குட்பட்ட பொலிஸ், பொதுமக்கள் ஒழுங்கு விவகாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் அமைச்சில் நிதியும் மாகாணப் பொருளாதார திட்ட அமுலாக்கல் தொடர்பாக அறிக்கையிடும் பொறுப்பு கலாநிதி கே.சர்வேஸ்வரனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அமைச்சில் வீதிகள், பாலங்கள், மாகாண வீடமைப்பு தொடர்பாக அறிக்கையிடுவதற்கு பொறியியலாளர் வி.சிவயோகன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு வங்கிகள் போன்ற விடயங்கள் சட்டத்தரணி கே.சயந்தன் மற்றும் சுகிர்தனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. காணி அமைச்சின் கீழ் காணிகள், சுவீகரிப்பு தொடர்பாக அறிக்கையிடும் பொறுப்பு அமைச்சர் டெனீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையிடும் பணி திருமதி. அனந்தி சசிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம், மீள் கட்டுமானம் தொடர்பாக அறிக்கையிடுவதற்கு அன்ரன் ஜெயநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கல்வி அமைச்சராக குருகுலராஜாவும், சுகாதார அமைச்சராக பி.சத்தியலிங்கமும், மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராக டெனீஸ்வரனும் விவசாய அமைச்சராக ஐங்கரநேசனும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

17 அக்டோபர் 2013

ராஜபக்சவிற்கு எதிரான போராட்டம் தொடரும்-மங்கள

ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் எவ்வளவு சவால்கள் ஏற்பட்டாலும் இந்த மோசடியான அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை. எனக்கு எதிராக ராஜபக்ச ராஜமகேந்திரன் கூட்டணி செயற்படுகின்றது. அத்துடன் மாத்தறை பொலிஸார் எனக்கு எதிராக செயற்பட முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

16 அக்டோபர் 2013

வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அரசு நிறைவேற்ற வேண்டும்!

வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அரசாங்கம் அதை கட்டாயமாக நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இதை பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவோ போராட்டம் செய்வதாகவோ நினைத்து வட கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களை துன்பத்தில் விழுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்த அவர் சட்டத்தின் அடிப்படையில் தமது நடவடிக்கைகள் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வெறுமனே அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்டுபிடித்துக்கொண்டு பகைக்கத்துக்கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை எனவும் அதனால் அரசாஙக்கத்தை எதிர்க்கப்போவதுமில்லை என்று குறிப்பிட்டதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை செய்ய அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வட மாகாணத்தில் மக்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

15 அக்டோபர் 2013

தோழர் தியாகு உண்ணாவிரதம் இன்றோடு நிறுத்தம்?

ஆரம்பத்தில் இருந்தே இந்தியா தனது பிடியை இலங்கை மீது இறுக்க நினைத்தாலும், அது சீனாவின் மீதுள்ள பக்தியினால் முரண்டு பிடித்தே வருகின்றது. இந்நிலையில் காமென் மாநாடு தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என பல முனைகளில் ஆய்வுகள், போராட்டங்கள் என நடந்து வருகின்றது.இந்தியா வழக்கம் போல் மவுனத்தை மட்டுமே பதிலாக அனைவருக்கும் வழங்கி வருகின்றது. ஆனால் அது நேற்று வரைதான் இன்று மன்மேகன் சிங் அவர்கள் கருணாநிதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா, தமிழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் என்பதும், தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதை நேரடியாக தோழர் தியாகுவிடம் கேட்டால், அது காங்கிரஸ் அரசுக்கு கவுரவமாக இருக்காது என்ற நினைப்பில் இடையில் கருணாநிதியை ஆட்டத்தில் புகுத்தியுள்ளது காங்கிரஸ்.
ஒரு வழியாக இந்தியா பங்குபற்றாது என்ற நிலைப்பாட்டிற்கு வரலாம் என்றால் அது இயலாது, காரணம் இறுதி நேரத்தில் இலங்கை பேரங்களுக்கு அடிபணிந்தாலோ அல்லது தடாலடியாக காலில் விழுந்தாலோ எதாவது காரணம் சொல்லி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் வாய்ப்பும் உள்ளதுஅல்லது பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் பங்குபற்றுமாறு இந்தியா செய்யும்.
இலங்கை அப்படிச் செய்யவும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் இந்தியா புறக்கணித்தால் மேலும் சில நாடுகள் புறக்கணிக்கும் வாய்ப்பு தானாக உருவாகும் எனவே இலங்கை தனது நிலையில் இருந்து கீழ் இறங்க தயாராகவே இருக்கும்.
இதற்கிடையில் தமிழகத்தின் பல தலைவர்களின் கடும் அன்பினால் ஆன வேண்டுகோளுக்கு இணங்க, தோழர் தியாகு தனது உண்ணாவிரத்தை இன்று முடிவுக்கு கொண்டு வருவார் என தமிழக போராட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

14 அக்டோபர் 2013

தி எக்கொனமிஸ்ட் ஆசிரியர் மீது பாய்கிறது சிறிலங்கா!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பாலச்சந்திரனை சிறிலங்கா இராணுவத்தினரே படுகொலை செய்தனர் என்பதை, புதுடெல்லிக் கருத்தரங்கில் வலியுறுத்திய, தி எக்கொனமிஸ்ட் இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாசிரியர் மீது, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்தவாரம் புதுடெல்லியில் நடந்த 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கில், உரையாற்றிய தி எக்கொனமிஸ்ட் இதழின் ஆசியப் பிரிவு பொறுப்பாசிரியர் அடம் றொபேட்ஸ், சிறிலங்கா இராணுவத்தினரே பாலச்சந்திரனைப் படுகொலை செய்ததாகவும், சிறிலங்காப் படையினர் கைகளைப் பின்புறம் கட்டி போர்க்கைதிகளைப் படுகொலை செய்தது, குற்றவாளிகள் காணொலியை வெளியிட்டிருக்காவிட்டால் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற தொடரை வெளியிடும் சனல் 4 தொலைக்காட்சிக்கு நம்பகத்தன்மையை பெற்றுக் கொடுக்க, அனைத்துலக செஞ்சிலுகைக்குழு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான நெல்சன் மண்டேலா நிலையம், ஜமியா, மில்லியா பல்கலைக்கழைகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கை, தி எக்கொனமிஸ்ட் இதழின் பிரதிநிதி, பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரும் கூட, போருக்குப் பிந்திய யாழ்ப்பாணம் குறித்து, இருண்ட விம்பத்தைக் காட்ட அடம் றொபேட்ஸ் முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
விடுதலைப் புலிகளை சிறிலங்கா அழித்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் அதனால் தான், போருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் மாநாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்குலக ஊடகங்கள் தீவிரப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

13 அக்டோபர் 2013

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு!

உலகமெங்கும் படை நடத்தி வெற்றி கொண்டாடிய மாவீரன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் தமிழன் வாழ்ந்ததின் அடையாளமாக தஞ்சையில் உள்ளது.
இப்போது நமது இனம் வீழ்ந்ததன் அடையாளமும் தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் முற்றமாய்… வீழ்ந்தது எழுவதற்கே…
உலக வல்லாதிக்கமெல்லாம் ஓன்று கூடி எழுபதாண்டுகால ஈழவிடுதலையை வீழ்த்த இனப்படுகொலை 2009 இல் ஈழத்தில் செய்து இனத்தை வீழ்த்தியது. மாவீரர்கள் துயிலும் இல்லம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டது ஈழத்தில்.
ஆனால் நமது அடையாளங்களை காக்க அமைக்கப்பட்டதே “முள்ளிவாய்க்கால் முற்றம்”. நமது இனம் பட்ட அவலத்தை கற்களில் ஓவியமாய் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது….
உள்ளத்தை உருக்கும் காட்சிகள்… காண்போர்கள் கண்ணீர் சிந்துவதை யாராலும் தடுக்கமுடியாது… வரும் நவம்பர் 8, 9, 10 நாட்களில் திறப்பு நிகழ்வு நடக்க இருக்கிறது… வாருங்கள் உறவுகளே தஞ்சைக்கு… இனம் காக்க மீண்டும் எழுவோம்…

12 அக்டோபர் 2013

பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளாமை விபத்தினால் இல்லை!

அரசியல் ரீதியான முரண்பாடுகளே பதவிப்பிரமாண நிகழ்வில் பங்கேற்காமைக்கு காரணம் -பதவிப்பிரமாண நிகழ்வில் தான் பங்கேற்காமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன என்று தமிழீழ விடுதலை இயக்கம் TELO சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவாகியுள்ள வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிடுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வில் நான் கலந்து கொள்ளாமைக்காண காரணம் எனது மனைவி விபத்தில் சிக்கியதே என வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மைகளும் இல்லை.எனது மனைவி அவ்வாறான விபத்தில் மாட்டிக்கொள்ளவும் இல்லை. சில ஊடகங்கள் தாம் சார்ந்த அரசியல் நலன்களுக்காக நடக்காத ஒன்றை திருவுபடுத்தி நடந்ததாக செய்திகளை வெளியிட்டு இருந்தமை வருந்தத் தக்கது.'
"நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளது. அதனை வெகு விரையில் வெளியிடுவேன்' என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 அக்டோபர் 2013

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்!

இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தகூடாது இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்கவேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கையை முன்வைத்து தோழர் தியாகு அவர்கள் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் .
தோழர் தியாகு அய்யா அவர்களுக்கு ஆதரவாகவும் கோரிக்கையை வென்றெடுக்கவும் காமன் வெல்த் கூட்டமைப்பின் தலைவர் ஆன இங்கிலாந்து அரசை கண்டிக்கும் விதமாக இங்கிலாந்து பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாகவும், வடபழனியில் இருக்கும் ”போரம் விஜயா மால்” லிலுள்ள இங்கிலாந்து நிறுவனமான மார்க் & ஸ்பென்சர் நிறுவனத்தை முற்றுகையிடுவோம்.

நாள் 12.10.2013- காலை 10 மணி
மார்க் & ஸ்பென்சர்ஸ்,
Forum Vijaya Mall
வடபழனி

மாணவர்களே!! பொதுமக்களே!! தமிழர்களாய் திரள்வோம்!!
பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்
9962670409,
9843512389,
9677226318

10 அக்டோபர் 2013

சம்பந்தன்,விக்கி,சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிங்கக் கொடி குழு உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழின அழிப்புக்கு பொறுப்பான மகிந்த ராஜபக்சவுடன் உண்டு மகிழ்ந்து உறவாடுவதால் ஆத்திரமும் அதிருப்தியுமுற்றுள்ள முல்லைத் தீவு மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வெற்றியின் முதல் அறிவிப்பு முல்லைத் தீவிலிருந்தே அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற கோசங்களை கோரிக்கையாக முன்வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குப் பிச்சை கேட்டு தேர்தலில் பெருவெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது. ஆயினும், தேர்தலில் வென்ற பின் முன்வைத்த கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாகவே, இனஅழிப்பாளர்களோடு கூடி குலாவி வருவதோடு இன நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்கள் மீதான கட்டமைப்பு சார் இனஅழிப்புக்கு துணைநிற்கிறது.
சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் நடவடிக்கையால் சில த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் அதிருப்தி அடைந்துள்ளதாக அறியமுடிகிறது. இதன் அடிப்படையிலேயே சம்பந்தன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிவாஜிலிங்கம் சிங்கக் கொடி குழு என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும் சிங்கக்கொடி குழுவுக்குமிடையில் பாரிய பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

கின்னஸ் புத்தகத்தில் மகிந்த அமைச்சரவை!

உலகின் மிகப்பெரிய அமைச்சரவையாக மகிந்த அரசின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது.2005ம் ஆண்டு நவம்பர் 17ம் திகதி பதவியேற்ற மகிந்த அமைச்சரவையில் 52பேர் இடம்பெற்றிருந்தனர்.பின்னர் அமைச்சரவை 68டாக அதிகரித்தது.இத்தகவலை கின்னஸ் புத்தகம் வெளியிட்டுள்ள நிலையில் இன்றும் ஒன்பது அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.மகிந்த கட்சியில் உள்ள அனைவருக்கும் அமைச்சுப்பதவி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

09 அக்டோபர் 2013

டேவிட் கமரூன் கடுமையான செய்தியை மகிந்த அரசுக்கு சொல்வாராம்!

டேவிட் கமரூன் கடுமையான செய்தியுடன் இலங்கை விஜயம் செய்கின்றார்பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கடுமையான செய்தியுடன் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச தலைமைக்கு கடுமையான செய்தியொன்றை கமரூன் அறிப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்க உள்ளார். கனடா அமர்வுகளை புறக்கணித்துள்ள நிலையில் பிரித்தானியா அமர்வுகளில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது.
எனவே, பிரித்தானியா அமர்வுகளில் பங்கேற்பதனை நியாயப்படுத்தும் வகையில் கமரூன் கடுமையான செய்திகளை இலங்கை அரசாங்கத்திற்கு சொல்ல முற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் அமர்வுகளை நடாத்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

08 அக்டோபர் 2013

தோழர் தியாகு கைது செய்யப்பட்டமைக்கு சீமான் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிட்டுள்ள அறிக்கையில்,
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி ”வெற்றி அல்லது வீர சாவு” என்ற முழக்கத்துடன் இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கம் சார்பில், காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வந்த தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
7ஆம் நாளாகப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் வந்த மருத்துவர் குழு தியாகுவின் உடல்நிலையைச் சோதித்து, பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமெனக் காவல்துறை சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறார்.
மாநில அரசாங்கமோ மத்திய அரசாங்கமோ உண்ணாவிரதப் போராட்டத்தின் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் தராமல், அதைப் பற்றிய எவ்வித கருத்தும் கூறாமல், எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் கைது செய்திருப்பது உச்சகட்ட அடக்குமுறை. கூடங்குளம் தொடங்கி இன்றைய தியாகுவின் கைது வரை ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு எதிராக அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கை போராடுபவர்களின் கோரிக்கைக்கையைக் காதுகொடுத்து கேட்க கூடத் தயாரில்லை என்பதையே காட்டுகிறது. ஜனநாயக விழுமியங்களை மீறி அரசுகளே செயல்படுவது மிக வேதனையானது.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டு அங்கே நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும், மாநாட்டை இலங்கையில் நடந்த முடிவு செய்த அமைப்புகளுக்கு நிதி உதவிகளை நிறுத்தப்போவதாகவும் கனடா நாட்டின் பிரதம மந்திரி ஸ்டீபன் கார்பர் இன்று அறிவித்துள்ள நிலையில் 6 கோடி தமிழ் மக்களைத் தன்னகத்தே கொண்ட இந்திய திருநாடு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தமிழர்களின் கோரிக்கைக்கு இதுவரை பதிலும் சொல்லாமல் இருப்பது இவ்வரசு எந்த அளவுக்குத் தமிழர்களை மதிக்கிறதென்பதை காட்டுகிறது.
தியாகுவின் கோரிக்கை ஒரு தனி மனிதனின் கோரிக்கையோ ஒரு அமைப்பின் கோரிக்கையோ அல்ல அது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை. ஒரு லட்சத்தி எழுபத்தையாயிரம் தொப்புள்க்கொடி உறவுகளை இழந்து தவிக்கும், அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை. நியாயமிக்க இக்கோரிக்கையை மதிக்காது இந்திய காங்கிரஸ் அரசாங்கமும், கட்சிகளும் செயல்பட்டால் அதற்கான எதிர்வினையை எம்மக்கள் தாங்கள் செலுத்தும் வாக்குகள் மூலமாக வரும் தேர்தலில் காட்டுவார்கள் என்பதையும் அதற்கான பரப்புரையில் முழுமூச்சாக நாம் தமிழர் கட்சி செயல் படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

07 அக்டோபர் 2013

இன்றைய நாளை துக்க நாளாக அனுஷ்டிக்க கோரிக்கை!

பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தாய்குலத்தை மானபங்கப்படுத்திய மகிந்த ராஜபக்ச முன் விக்னேஸ்வரன் சத்திய பிரமாணம் எடுப்பது, ஜனாதிபதியை போர்க்குற்றங்களில் இருந்து தப்புவிக்கும் நடவடிக்கை என்று புலம் பெயர் தமிழ்மக்களின் அமெரிக்கா அமைப்பான ஒபாவுக்கான தமிழர் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
சத்தியப்பிரமாணம் எடுக்கும் திங்கள் கிழமையை துக்க நாளாக அனுஸ்டிக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு ஆமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தது, ஜனாதிபதியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேயன்றி, ஜனாதிபதியை காப்பாற்றுவதற்கு அல்ல என்றும், ஜனாதிபதி முன்னால் சத்தியப்பிரமாணம் செய்வது தமிழ் மக்களின் முதுகில் குத்தும் செயல் என்றும், நம்பி வாக்களித்த மக்களை நடு ஆற்றில் விடும் நடவடிக்கை என்றும் இவ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனாதிபதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம் என்று மார்தட்டி வீரம் பேசிய விக்னேஸ்வரனின் வார்தையை நம்பியே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்களே அன்றி, தமிழ் மக்களின் தன்மானத்தை அடகுவைத்து, தமிழ்ர்களை வெட்கி தலை குனிய வைப்பதற்கு அல்ல என்றும் புலம் பெயர் அமைப்புக்கள் கூறுகின்றன.
விக்னேஸ்வரன் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சமுன் தமிழர்களின் தன் மானத்தை அடகு வைத்து சத்தியப்பிரமாணம் செய்யும், வரும் திங்கள் (October 7) கிழமையை தமிழ் மக்கள் ஒரு துக்க நாளாக அனுஸ்டிக்கும் படி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவே படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கும் மானபங்கப்படுத்தப்பட்ட எமது தாய்க்குலத்துக்கும் நாம் செய்யும் அஞ்சலியாகும்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

06 அக்டோபர் 2013

கூட்டமைப்பு ஒரு குடையின் கீழ் வரவேண்டும்-மன்னார் ஆயர்

newsதமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு ஒருமித்து செயற்பட வேண்டியது அவசியம் என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய ஐந்து கட்சிகளும் ஒரு கட்சியின் கீழ் வரவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் சிவில் சமூகத்தினரினதும் விருப்பமாகும். இவ்வாறு ஒரு கட்சியின் கீழ் இந்த ஐந்து கட்சிகளும் வருவதன் மூலம் கட்சி வேறுபாடு ஏற்படாமல் இருப்பதுடன், ஒவ்வொரு கட்சிக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற நிலைமையும் ஏற்படாது. தமிழரின் உரிமைக்காகவும் தமிழரின் அரசியல் ரீதியான நன்மைக்காகவும் எந்தவித பக்கச்சார்புமின்றி எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கும் ஒரு பெயரில் ஒரு சின்னத்தின் கீழ் இந்த ஐந்து கட்சிகளும் செயற்படுவதே காலத்தின் தேவையாகும். இவ்விடயம் தொடர்பில் நாம் தீவிர கவனமெடுத்துள்ளோம். ஏற்கனவே நாம் இந்த ஐந்து கட்சிகளுடனும் இது தொடர்பில் பேசியிருக்கிறோம். எனவே இது விடயமாக இந்த ஐந்து கட்சிகளின் தலைவர்களும் காலம் தாழ்த்தாது நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

05 அக்டோபர் 2013

மஹிந்த முன்னிலையில் உறுதிமொழி எடுக்ககூடாது:சட்டத்தரணிகள் சங்கம்

Jaffna bar associationஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளதுடன், கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்கள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது.
''ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசின் அடக்குமுறைக்கு எதிராக, அந்த அடக்குமுறைக்குள் இருந்து கொண்டு, அரசின் சலுகை, அபிவிருத்தி மாயைகளுக்குள் சிக்கி விடாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் மூலம், தமது எதிர்ப்பை மக்கள் காட்டியுள்ளனர். இத்தருணத்தில் வட மாகாண முதலமைச்சராக திரு. சி. வி. விக்கினேஸ்வரன் மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யத் தீர்மானித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்'' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அவர்களின் கையில் உள்ள மை காய்வதற்கு முன் தமிழ்க் கூட்டமைப்பு தூக்கி வீசி விட்டது என்றும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்திருக்கின்றது.
இந்தச் செயற்பாடு மகிந்த ராஜபக்க்ஷ அரசுக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழுத்தத்தைக் குறைத்து விடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்வரும் மார்ச் மாதம் கோர வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்திருக்கும் இந் நிலையில் இச் செயற்பாடு தவறான சமிக்கைகளை சர்வதேசத்திற்கு கொடுத்துவிடும் என தெரிவித்துள்ள தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் இவ்வாறான செயற்பாடுகளை ஏனைய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடப்பட்டிருக்கின்றது.

விக்னேஸ்வரனது பதவி ஏற்பை ரெலோ புறக்கணிக்க முடிவு!

வட மாகாண சபைக்கான முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்பை புறக்கணிக்கப் போவதாக டெலோ இயக்கம் அறிவித்துள்ளது. போர்க் குற்றவாளியாக கூட்டமைப்பினால் தேர்தல் காலத்தில் முன்மொழியப்பட்டவர் மகிந்த ராஜபக்ச.
அவர் முன்னிலையில் தமிழ் மக்களினால் ஏகோபித்த ஆதரவினால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சீ.வி.விக்கினேஸ்வரன் பதவி பிரமாணம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதனாலேயே டெலோவின் பொதுக்குழு நேற்று வவுனியாவினில் ஒன்று கூடி பதவியேற்பு நிகழ்வை புறக்கணிப்பதென தீர்மானித்துள்ளதாக கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதனிடையே கூட்டமைப்பிலுள்ள ஏனைய பங்காளிக்கட்சிகளும் இவ்விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. தன்னிச்சையாக கூட்டமைப்பின் தலைமை மஹிந்தரை சந்தித்தமை மற்றும் முதலமைச்சரை அவர் முன்னிலையினில பதவியேற்க திட்டமிட்டமை தொடர்பில் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தமிழரசு கட்சியிலும் சரவணபவன் மற்றும் சுமந்திரன் தவிர்ந்த ஏனையவர்கள் சம்பந்தனது நடவடிக்கைகளால் அதிர்ந்து போனாலும் , கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு செல்ல வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கு தற்போது ஏற்பட்டு உள்ளதாகவும் எனினும் பொது செயலர் மாவை சேனாதிராசா இந்தியாவிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

04 அக்டோபர் 2013

கொடுமைகள் கண்டு கொதித்து எழுந்த இளைஞன் தான் தோழர் தியாகு!

தோழர்களே… 1960-களில் தஞ்சை மாவட்டத்திலே தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருந்த கொடுமைகள் கண்டு கொதித்து எழுந்த இளைஞன் தான் ‘’தோழர் தியாகு’’.
தலித்மக்களை தொடர்ந்து அடித்தும்,உதைத்தும்,சாணிப்பால் கொடுத்தும் கொடுமை படுத்திக்கொண்டிருந்த முத்துதங்கப்பா எனும் வெறி நாயை வெட்டி கொன்றுவிட்டு,14 ஆண்டுகள் சிறையில் வாழ்ந்தவர்.சாதிய கட்டுமானங்களை உடைத்து அந்த காலகட்டத்திலேயே ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்தவர்.மாக்சிய தளத்தில் ஊறிதிளைத்த ஒரு மாக்சிய அறிஞர்.மூலதனம் எனும் மாக்சிய பொக்கிசத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்.
தலித் மக்களோடு மக்களாக அதாவது தஞ்சையிலே தானும் ஒரு தலித்தாக வாழ்ந்து,அவர்களோடே கூலி விவசாயத்தில் ஈடுபட்டு உழைத்து வாழ்ந்தவர்.தியாகு சாதியத்தை மறுக்கும் ஒரு தூய தமிழர்.தமிழ்தேசியத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.தனித்தமிழ்நாடே தமிழின விடுதலை என்பதில் உறுதியாக கொண்டவர்.நக்சலைட் வாழ்க்கையிலும் சரி, தமிழ்த்தேசியவாதியாகவும் சரி பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்தித்தவர்.”வெற்றி அல்லது வீரசாவு” என்று பட்டினி அறப்போர் தொடுத்துள்ளார்.3ம் நாள் இரவு 10 மணிவரை மன உறுதியுடன்,சோர்வில்லாமல் இருக்கிறார்.தோழரின் இந்த போராட்டம் வெற்றி அடைய பாடுபடுவோம்.

மு.களஞ்சியம்

கைதிகளை சந்திக்க சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி!

இலங்கைக் கைதிகளை சந்திக்க சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கைப் பிரஜைகள், நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
குறித்த இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கை அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். 2011ம் ஆண்டில் குறித்த இலங்கைப் பிரஜைகளின் புகலிடக் கோரிக்கையை சுவிட்சர்லாந்து குடிவரவுத் திணைக்களம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைதிகளை பார்வையிட்டு அவர்களின் சுக நலன்களை விசாரிப்பதற்கு சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு அனுமதியளிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சொந்த நாட்டில் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுகின்றார்களா என்பதனை சுவிஸ் அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை சுவிட்சர்லாந்து தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

03 அக்டோபர் 2013

பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை-ஜீ.எல்.பீரிஸ்

இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதில் அளிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
த கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, இலங்கை மீது சர்வதேச நாடுகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகவும், மேற்குலக நாடுகளும், தமிழ் பிரிவினைவாத அமைப்புகளின் தகவலை மாத்திரம் கொண்டு, இலங்கை மீது பாரபட்சம் காட்டி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அரசாங்கம் உரிய செயற்பாட்டை முன்வைக்க தவறினால், சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரித்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள அமைச்சர், இலங்கை அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

02 அக்டோபர் 2013

இளைஞனை கோடரியால் தாக்கிய கொலை வெறியர்கள்!

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளரான இளைஞன் மீது அடையாளம் தெரியாதோர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு நாளின் பின்னர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆதரவாக கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி ஊற்றுப்புலத்தினைச் சேர்ந்த ஸ்ரீராம் விஜிதன் என்பவர் கடந்த 29ஆம் திகதி இரவு வீடு நோக்கிச் சென்ற போது இடை மறித்த அடையாளம் தெரியாதோர் கோடரியால் தலையில் கொத்தி அவரைப் படுகொலை செய்ய முற்பட்டிருக்கின்றனர்.
அவர் கையால் தடுக்க முற்பட்டவேளை கை உடைந்ததுடன் தலையிலும் படுகாயம் அடைந்திருக்கின்றார். சம்பவத்தினை அடுத்து அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய தாக்குதலாளிகள் அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி அங்கிருந்து அகன்று சென்றிருக்கின்றனர். இருப்பினும் மறு நாள் வரையில் மயக்கமடைந்த நிலையில் அதே இடத்தில் காணப்பட்ட அவர் மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார் இன்னிலையில் பிரதேச மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட இளைஞர்களை இலக்குவைத்து சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலில் முதியோர் இல்லம் சென்ற முதல்வர்!

newsவடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி ஒருவர் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடம் இருந்து நேற்றுக் காலை தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து நேரடியாக சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியயோர் இல்லத்துக்குச் சென்றார். முதியோர் தினமான நேற்று அவர் அங்கிருந்து முதியோர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் அவர்களுக்கு உணவுப் பொருள்களையும் வழங்கினார். அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தார். அவருடன் அளவளாவிய முதலமைச்சர், தமழர்களின் உரிமைக்காக தனது வாக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து அதன் வெற்றிக்கு உதவி புரிந்த அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். முதல்வராக நியமனக் கடிதம் பெற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் பணி இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

01 அக்டோபர் 2013

பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்கிறது!

thinakkural_logoயாழ்ப்பாணத்தினிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகையான யாழ்.தினக்குரலினது அலுவல செய்தியாளர்கள் இருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் எனக்கூறிக்கொள்பவர்களினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறித்த பத்திரிகையினது ஆசிரிய பீடமே இம்முறைப்பாட்டை செய்துள்ளது. பல தடைவைகளாக குறித்த பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த குறித்த நபர்கள் இவ்விரு பத்திரிகையாளர்கள் தொடர்பான தகவல்களை தமக்கு சமர்ப்பிக்குமாறு ஆசிரிய பீடத்தை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகின்றது.
எனினும் அவர்கள் தம்மை அடையாளப்படுத்துவம் வகையிலான ஆவணங்களை தமக்கு சமர்ப்பிக்கவில்லையென்பதால் அத்தகைய தகவல்களை வெளியிட ஆசிரிய பீடம் மறுதலித்துள்ளது.இந்நிலையினில் குறித்த பத்திரிகையாளர்களது வதிவிடப்பகுதிகளில்  குறித்த நபர்கள் தொடர்ச்சியாக நடமாடுவதாகவும் தகவல்களை சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்த நிலையினிலேயே இப்புகார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களினில் பல பத்திரிகையாளாகள் கொல்லப்பட்டிருந்தமை மற்றும் காணாமல் போயிருந்தமை தொடர்பினில் அச்சமான சூழலே தொடர்கின்ற நிலையினில் இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோத்தபாயவின் நேரடி வழி நடத்தலில் இயங்கி வரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பிரிவொன்று முன்னதாக நாவலர் வீதியினில் நமது ஈழநாடு பத்திரிகை அலுவலக கட்டிடத்தினில் தற்போது செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.