27 நவம்பர் 2014

படைகளின் முற்றுகைக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் மாவீரர் சுடர்!

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்களால் சுடர்  ஏற்றப்படலாம் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள்,உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில். பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

22 நவம்பர் 2014

பதற்றத்தில் மகிந்த கட்சியினர்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சிதாவலை ஊக்குவிக்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ள அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்கான பெரும் நாடகமொன்றின் ஒரு பகுதியாகவே இது இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. சந்திரிகா குமாரதுங்கவின் நாடகத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரத்தை வகிக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை இந்த முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அழகபெரும, இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்காக நிதிவழங்குகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகப் போட்டியிடுவது என்ற மைத்திரிபாலவின் முடிவு குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்,பல்கலை மாணவனைக் காணவில்லை!

யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ் என்பவரே காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது. நீர்வேலியில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு 7 மணியளவில் புலனாய்வாளர்கள் சென்று சுற்றிவளைத்திருக்கின்றனர். நிலைமையை உணர்ந்த குறித்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் வீட்டிலிருந்தவர்களிடம் நிவாஸ் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து புலனாய்வாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிய போதிலும் இதுவரையில் நிவாஸின் தொடர்பு வீட்டாருக்கு கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது. அவருடைய தொலைபேசியும் செயற்பாட்டில் இல்லை என்றும் அவருடைய உறவுகள் கவலை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 நவம்பர் 2014

மஹிந்த - மைத்திரி அவசர சந்திப்பு!

மஹிந்த - மைத்திரி அவரச சந்திப்பு: சமரச முயற்சி என்றும் தகவல்!சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசின் அமைச்சருமான மைத்திரிபால பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை சமரசப்படுத்தி தன்வசப்படுத்த மஹிந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் மைத்திரிபாலவை அழைத்து மஹிந்த அவசரமாகக் கலந்துரையாடி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்பு நிறைவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால இன்று வெள்ளிக்கிழமை தமது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு எதிரணியின் பக்கம் சேருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 நவம்பர் 2014

நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் நீதியான விசாரணை தேவை!

வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணையை பொலிசார் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேற்று சென்று பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களுடனும், நகுலேஸ்வரனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடனும் துக்கம் விசாரித்து கலந்துரையாடிய, சிவசக்தி ஆனந்தன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நகுலேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாகவும், படுகொலைக்கு பயன்படுத்திய ரி-56 வகை துப்பாக்கியை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நீதி நியாயமாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
ஏனெனில் யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் சாதாரண நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழந்திருக்கும் முதலாவது சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் தொடர்பில், விடுவிக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவரும் தத்தமது எதிர்காலம் தொடர்பில் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். வடக்கு முழுவதும் இச்சம்பவத்தால் ஒருவித பதட்டம் மேலோங்கி காணப்படுகின்றது.
எனவே பொதுமக்களின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை குழப்பியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையும் படுகொலையையும் வன்மையாக கண்டிப்பதோடு, நகுலேஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கைப்பேணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசு முனைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

15 நவம்பர் 2014

தீவகத்தின் சமகால நிலமைகள் குறித்து விந்தனுடன் தீவக பிரதிநிதிகள் சந்திப்பு!

யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளின் சமாகால நிலமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 13.11.14 அன்று புலம்பெயர்ந்து வாழும் நெடுந்தீவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வர்த்தகருமான செல்வரட்ணம் சுரேஸ் என்பவரின் ஏற்பாட்டில் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் மகாலிங்கசிவத்தின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தீவகத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தீவகத்தின் அபிவிருத்தி குறித்து முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர் சுரேஸ் செல்வரட்ணம் தெரிவித்தார்.

13 நவம்பர் 2014

கட்டளை பிறப்பித்தவர்களே தண்டிக்கப்படுவர்-அமெரிக்கா

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான கட்டளைகளை பிறப்பித்த நபர்களே தண்டிக்கப்படுவர் என அமெரிக்க நிபுணர் பெட்ரிக் ட்ரேனொர் தெரிவித்துள்ளார்.பெட்ரிக் அமெரிக்க நீதிமன்ற திணைக்களத்தின் விசேட விசாரனைப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன கால யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட உத்தரவுகளை, கட்டளைகளை பிறப்பித்த நபர்களே தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்தள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றங்கள், சர்வதேச ரீதியான விசாரணைக் குழுக்கள் போன்றன யுத்தக் குற்றச் செயல்களை தலைமை ஏற்று வழிநடத்தியவர்களுக்கு எதிராகவே விசாரணை நடத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால யுத்தக் குற்றச் செயல் பதிவுகள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதுடன், சாட்சியாளர்களும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.இவ்வாறான நிலைமைகளின் போது நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளுக்கான கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஊடகங்களின் தகவல்களின் தகவல்களை திரட்டி ஆராய்வதன் மூலம் நடவடிககை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நாட்டின் பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதே சர்வதேச சமூகம் சட்ட நவடிக்கை எடுக்கும் எனவும் முன்னரங்கில் கட்டகளை ஏற்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

09 நவம்பர் 2014

‘பிரபாகரன் மாலைப் பொழுது’

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் 60 கவிஞர்கள் கூடி கவியரங்கம் நடைபெற உள்ளது.புலவர் புலமைப் பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் நடைபெற உள்ளது.
கிறித்து பிறப்பிற்கு முந்திய நாளான 24ம் திகதி கிறிஸ்மஸ் மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது பிறந்த நாளான 26ம் திகதிக்கு முந்தைய நாளான 25ம் திகதி ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ என்று கடைப்பிடிக்கும் விதமாக இந்த கவியரங்கு நடைபெற உள்ளது.

07 நவம்பர் 2014

சிறீலங்காவை கண்டிக்கிறார் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும். இந்த புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைக்குழு திரும்பத் திரும்பக் கோரிய போதிலும் அதனை ஒரேயடியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையானது, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேர்மையை குறைப்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கத்தின் நேர்மை குறித்த கவலைகளையே ஏற்படுத்தும் என்று ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

06 நவம்பர் 2014

சிறீலங்காவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது என்பதை இலங்கை விளங்கிக்கொள்ளவேண்டும் என ஐ.நா.மனித உரிமை கவுன்சிலுக்கான அமெரிக்க பிரதிநிதி ஹெய்த் ஹார்ப்பர் டுவிட்டர் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.ஐ.நா.மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த விசாரணைகளில் அந்த அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க முயல்பவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது குறித்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகநாடுகளின் தூதுவர்களை சந்தித்தவேளை, வன்னியில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் திரட்டி ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்ததன் பின்னணியிலேயே அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

03 நவம்பர் 2014

தமிழகத்தில் காங்கிரஸ் உடைந்தது!

புதிய கட்சி தொடங்கப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அறிவித்த சில மணி நேரங்களில் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ் மேலிடம். தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்ததால், வாசனை நீக்கியதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே. வாசன், புதிய கட்சியின் சின்னம் மற்றும் கொடியை விரைவில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து விலக வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டார். ஆனால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடம் வாசனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். வாசன் தனிக்கட்சி தொடங்குவதால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அவரை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார். வழக்கமாக முக்கியத் தலைவர்கள் விலகும் நிலை வரும்போது காங்கிரஸ் தலைமை சமாதானம் பேசிப் பார்க்கும். ஆனால் வாசனை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

01 நவம்பர் 2014

வைகோ திமுகவுடன் சேரக் கூடாது!

வைகோ திமுகவுடன் சேரக் கூடாது... காங்கிரஸிலிருந்து வாசன் விலக வேண்டும்! - தமிழருவி மணியன்திமுகவுடன் வைகோ தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது. ஜிகே வாசன் காங்கிரஸிலிருந்து விலகி வர வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறினார்.காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டபோது அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் இனத்தின் நலனுக்காக, ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு காண்பதற்காக மோடியின் அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எந்த செயலையும் செய்யவில்லை. தற்போது 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கே காரணம். எனவே நடைமுறையில் இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக கட்சிகள் வெளியேற வேண்டும்.ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தமிழக பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினால் இந்த மண்ணை பற்றி சிந்திக்கக் கூடியவர்கள் என ஏற்றுக்கொள்ளலாம்.தமிழ் இனத்துக்காக தொடர்ந்து போராடும் போர்க்குணம் மிக்க போராளி வைகோ. பொது வாழ்வில் நேர்மையான அவர் தி.மு.க.வுடன் கைகோர்க்கக் கூடாது. அவரிடம் பேசியதில் வைகோவுக்கு அந்த எண்ணம் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. வைகோ தி.மு.க.வுடன் சேர மாட்டார் என நம்புகிறேன். அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க எண்ணும் டாக்டர் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவாரா? என தெரியவில்லை.ஜி.கே.வாசன் என் நெருங்கிய நண்பர். நேர்மையானவர். கடந்த 5 ஆண்டுகள் கப்பல் போக்குவரத்து துறையில் கேபினட் மந்திரியாக இருந்தபோது எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை. காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேற வேண்டும். அவர் வெளியேறிவிட்டால் தமிழகத்தில் காங்கிரசின் கதை முடிந்து விடும். வாசன் வெளியேறினால் அவரை நான் ஆதரிப்பேன்.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.