31 மார்ச் 2014

கோத்தாவின் திட்டம் பலிக்குமா?

தமிழ்த் தேசியத்திற்காக பாடுபடுகின்ற புலம்பெயர் உணர்வாளர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முனைப்புக்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வரும் புலி ஆதரவு அமைப்புக்களை தடை செய்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறான அமைப்புக்கள் குறித்த நாடுகளின் அரசியல் கட்சிகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதுடன், இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நிறுவனங்களை தடை செய்வதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது, 2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் தமிழீழ விடுதலை; புலிகளின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அரசாங்கம் சில திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போதும் சில புலி ஆதரவு அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு இடையில் பிளவு காணப்பட்டாலும், சில முக்கியமான தருணங்களில் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

30 மார்ச் 2014

இலங்கையின் மீது பொருளாதாரத் தடை-யாஸ்மீன் சூகா

இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக தாருஸ்மான் தலைமையில் நிறுவப்பட்ட நிபுணர் குழுவில் சூகாவும் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறான தடைகள் விதிக்கப்படும் என்பதனை குறிப்பிட முடியாத போதிலும் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் பாதகமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரச அதிகாரிகளுக்கான பயணத்தடை, வெளிநாட்டு முதலீட்டு தடை, சொத்து முடக்கம் போன்ற பல்வேறு வழிகளில் தடைகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சுயாதீன விசாரணைகளை இலங்கை ஜனாதிபதி நிரகாரித்தமை அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

29 மார்ச் 2014

'தமிழ் மக்களுக்கு ஐநா தீர்மானத்தால் பலன் கிடையாது' - கஜேந்திரகுமார்

ஐநா மனித உரிமைக் கவுன்ஸிலில் இலங்கை குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசுக்கு எதிரான ஒரு தீர்மானமாக அல்லாமல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு தீர்மானமாகவே தாம் கருதுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தாலும் அதனால் இலங்கை தமிழ் மக்களுக்கு பெரிதாக எந்த விதமான பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழோசைக்கு செவ்வி ஒன்றை வழங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இருந்தபோதிலும் அந்த தீர்மானத்தின்படி ஒரு விசாரணை ஒன்று இலங்கையில் நடக்குமானால், அதில் மக்கள் கலந்துகொள்வதை தாம் எதிர்க்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

28 மார்ச் 2014

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையில் இலங்கை தொடர்பிலான விசாரணைகளை நடாத்த அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த கால காயங்களை ஆற்றுப்படுத்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாடு திருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள காத்திருக்கும் இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றியாக நேற்றைய தீர்மானம் கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த அரசாங்கம் தவறிய காரணத்தினால் சர்வதேச விசாரணைகளை நடாத்த வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.இதுவரையில் இலங்கை அரசாங்கம் குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணை நடாத்த முன்வரவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

27 மார்ச் 2014

தீர்மானத்திற்கு ஆதரவாக பல நாடுகள் இணைவு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவான நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, மொரிஷியஸ், மெசிடோனியா, மொன்டன்கரோ ஆகிய நாடுகளே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தன.எனினும், தற்போது இந்த எண்ணிக்கை 35 நாடுகளையும் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அல்பானியா, அஸ்ட்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரேஷியா, சைப்பிரஸ், டென்மார்க், இஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜோர்ஜியா, ஜெர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லைசட்டசைன், லித்துவேனியா, லக்ஸ்ம்பெர்க், மொரிஸியஸ், மொன்டன்கரோ, நெதர்லாந்து, நோர்வே, போலாந்து, போர்த்துகல், ரொமானியா, செய்ன்ட் கீட்ஸ், நெவிஸ், சியரே லியோன், ஸ்லோவாக்கியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து, மெசிடோனியா, அமெரிக்கா, பிரித்தானியா, வட அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.
இணை அனுசரணை வழங்கும் நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உறுப்பு நாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் இன்றைய தினம் தீர்மானம் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை தொடர்பான தீர்மானம் இலகுவில் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 மார்ச் 2014

சிறீலங்கா தூதரகத்தில் சுமந்திரனுக்கு அமோக வரவேற்பு!

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் கலந்து கொண்ட சுமந்திரனுக்கு சிறீலங்காத் தூதரகம் சிறப்பு வரவேற்பை அளித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக கருத்துக்களைச் சொல்ல வருபவர்களை சிறீலங்கா கடுமையாக அச்சுறுத்தியும் அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தியும் வரும் நிலையில், கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டதாகக் கூறும் சுமந்திரனுக்கு சிறீலங்காத் தூதரகம் ஜெனீவாவில் வரவேற்பு அளித்துள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள சிறீலங்காவின் தூதரகத்திற்கு சென்ற சுமந்திரனை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்காக சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க மகிழ்ச்சி பொங்க வரவேற்பளித்ததாக தெரியவருகின்றது. தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த சுமந்திரன் ஜெனீவா சென்றுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துவரும் நிலையில், இவருக்கு சிறீலங்கா தரப்பு மகிழ்ச்சியான வரவேற்பளித்துள்ளமையானது பலத்த சந்தேககங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியுடன் ஜெனீவாவிற்குப் பயணம் மேற்கொண்ட சுமந்திரன், சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த வேண்டாம் என்றும் சிறீலங்கா உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தாங்கள் சந்தித்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் சிறீலங்காவின் சார்பாக வலிந்துகேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சுமந்திரன் ஜெனீவாவிலுள்ள சிறீலங்காத் தூதரகம் சென்றிருந்தவேளை அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் பிரசன்னமாகி இருந்ததாகத் தெரியவருகின்றது.

25 மார்ச் 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வெளியானது!

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை கேட்டுக் கொள்வதாக இந்த தீர்மான வரைபு அமைந்துள்ளது.
இந்த இறுதி வரைபின் முக்கியமான 8வது பந்தியில், குறிப்பிடத்தக்கதான இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிவந்துள்ள இந்த தீர்மான வரைபே இறுதித்தீர்மான வரைபாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், வரும் வியாழக்கிழமை (27-03-2014) சபையில் வாக்கெடுப்புக்கு இது விடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை கேட்டுக் கொள்வதாக இந்த தீர்மான வரைபு அமைந்துள்ளது.இதன்பால் 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியே விசாரணைக்கு உட்படுத்தப்படும் காலவரையறையாகவுள்ளது.
வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்த தீர்மான வரைபின் 8வது பந்தியில், குறிப்பிடத்தக்கதான இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்வழி, இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள் தொடர்பாக, விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சிறப்பு நடைமுறைகளின் உதவியுடன், உண்மைகளை நிறுவி, மீறல்கள் இடம்பெற்ற சூழல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினை இத்தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
விசாரணைக்கான காலவெளியில் 1983ம் ஆண்டு முதல் விசரணைகள் நடத்தப்பட வேண்டும் என கனடா வாதிட்டிருந்தது. தற்போது உள்ளடக்கப்பட்டுள்ள காலவெளியின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ் தலையிலான அரசாங்கத்தின் ஆட்சிக்காலமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதோடு, ஐ.தே.க அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் தவிர்க்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

24 மார்ச் 2014

யாழில் போராட்டம்:பல்கலை மாணவர்கள் கைது!

யாழ் நுண்கலைப்பீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்தில் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டமையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திட்டமிட்டு எம்மை பழிவாங்காதே, பொலிசே மாணவரை பொங்க வைக்காதே, பொலிசாரே சார்பாக நடக்காதீர்கள், விபூசிகா ஜெயக்குமாரியைக் கைது செய்த நீ இவர்களை ஏன் கைது செய்யவில்லை போன்ற பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

23 மார்ச் 2014

அழகிரியை அவரது வீடு சென்று சந்தித்தார் வைகோ!

அழகிரியிடம் மதிமுக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு தான் கேட்டதற்கு அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று அவர் தெரிவித்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு சென்று அவரை இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நடந்தது.இச்சந்திப்பு தொடர்பில் வைகோ தெரிவிக்கையில்,அண்மையில் நானும், அழகிரியும் மதுரையில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்தோம். அப்போது இருவரும் பேசி அன்பை பரிமாறினோம். அந்த சமயத்தில் தான் மதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமாறு அவரிடம் கேட்டேன். அவரோ வீட்டுக்கு வாருங்கள் என்றார். அதன் படி இன்று அவரை சந்தித்து பேசினேன்.இன்று நாங்கள் இருவரும் பழைய நினைவுகளை பரிமாறினோம். இருவருக்கும் பழைய சினிமா பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அழகிரிக்கு பழைய சினிமா பாடல்கள் கேட்பது மிகவும் பிடிக்கும். நாங்கள் ஏற்கனவே பழைய பாடல்கள் அடங்கிய சி.டி.க்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம்,நான் அமெரிக்கா சென்றபோது அங்கிருந்து செங்கிஸ்கான் சிடி வாங்கி வந்து அழகிரிக்கு கொடுத்தேன். கடந்த 1993ம் ஆண்டு நான் அழகிரியை அவரது வீட்டில் சந்தித்து பேசியதை அவர் நினைவு கூர்ந்தார். இருவரும் பழைய நினைவுகளை பரிமாறினோம்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அழகிரியிடம் கேட்டேன். அவரும் வாழ்த்திவிட்டு, அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்றார்.என வைகோ கூறினார்.

பதிலளிக்க முடியாமல் திணறுகிறது சிங்களத்தரப்பு!

ஜெனிவாவில் நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுக்கு புறம்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது பலத்த வாக்குவாத நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச பௌத்த நிதியம் ஏற்பாடு செய்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலிலேயே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பௌத்த மத குழுக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
அரசாங்கத்துக்கு ஆதரவாக காட்டப்பட்ட ஆவண படத்தின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.
மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையத்தின் பிரதிநிதி அரசாங்கத்தின் போர்க்குற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
அவரின் வாதம், இலங்கையில் இருந்து சென்றுள்ள ஊடகவியலாளர் ஒருவர் உட்பட்ட அரசாங்க ஆதரவாளர்களால் குறுக்கீடு செய்யப்பட்ட போதே வாக்குவாதம் இரண்டு தரப்பினருக்கும் இடையில் தீவிரமானது.

கொழும்பு அமெரிக்க தூதரக பாதுகாப்பு அதிகரிப்பு!

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த வாரம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே, இந்த வாரத்தில் கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் எதிரில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தூதரகத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது, இலங்கைக் காவல்துறையினரின் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்கத் தூதரக ஊடக அதிகாரி ஜூலியானா ஸ்பவான் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகாமையில் மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22 மார்ச் 2014

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவு எமக்கே என்கிறார் பிரித்தானிய பிரதமர்!

நான்காம் கட்ட ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள் மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட இருக்கும் தீர்மானத்திற்கு அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினதும் ஆதரவைத் தாம் உறுதி செய்திருப்பதாகப் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியப் பேரவையில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புக்களைத் தொடர்ந்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்திருக்கும் டேவிட் கமரூன், கடந்த காலங்களில் நிகழ்ந்தேறிய சம்பவங்களுக்கு சரியான தீர்வை எட்டும் வகையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதே தனது ஆவா என்றும், எனினும் இதனை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளத் தவறியிருக்கும் நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு இப்பொழுது தேவைப்படுவது பன்னாட்டு சுயாதீன விசாரணை என்றும் தெரிவித்துள்ளார். இதுவிடயத்தில் தான் ஆழமான கரிசனையைக் கொண்டிருப்பதோடு, இதற்கென அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்திற்கு இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான ஆதரவைத் தான் உறுதி செய்திருப்பதாகவும் பிரித்தானியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

21 மார்ச் 2014

சிறீலங்காவிற்கு எதிராக புதிய அறிக்கை வெளியாகியுள்ளது!

இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட கொடூரமான துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக மற்றுமொரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. பிரித்தானிய மனித உரிமைகள் சபையின் சட்டத்தரணிகள் ஒன்றியம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், 2009ம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் தமிழ் மக்கள் பல்வேறு விதமாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்கிய அனைத்து தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் சித்திரவதையை அனுபவித்துள்ளனர். குறிப்பாக பாலியல் துஸ்பிரயோகங்கள், பலவந்தமான வன்புணர்வுகள் மற்றும் சுய பாலியல் சார்ந்த செயற்பாடுகளில் பலவந்தமாக ஈடுபடுத்தல், சிகரட்டுகளாலும், எரியும் நெருப்பாலும் சூடுவைத்தல் போன்ற சித்திரவதைகளுக்கும் அவர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கையை வெளியிட்டு வைத்து பிரித்தானிய மனித உரிமைகள் சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் தலைவர் யாசிம் சூக்கா, பாலியல் ரீதியான கொடுமைகளில் தாம் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சாதாரண மாதிரிகளே என்றும், இதனைவிட கொடூரங்கள் பல இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றுக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

20 மார்ச் 2014

பயிற்சியின் போர்வையில் தமிழ்ப் பெண்கள் மீது சிங்களப் படைகள் கொடூர வதை!(காணொளி)

சிங்கள ஆயுதப் படைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் பயிற்சியின் போர்வையில் கொடூர வதைகளுக்கு உட்படுத்தப்படும் திடுக்கிடும் காணொளி ஒன்று வெளிவந்துள்ளது. இதில் நிலத்தில் வீழ்ந்து கிடந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும் தமிழ்ப் பெண்கள், தடிகள் கொண்டு சிங்களப் படையினரால் கொடூரமாக தாக்கப்படுகின்றனர். சிங்களப் படைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் பலர் படையதிகாரிகளால் தொடர்ச்சியாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் தற்பொழுது இக் காணொளி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

19 மார்ச் 2014

ஐ.நாவில் அனந்தி எழிலனின் அதிரடிப் பேச்சு!

அனந்தி சசிதரன் மீண்டும் தடாலடியாக நேற்று ஜெனீவா அமர்வில் தனித்தமிழில் உரையாற்றி இலங்கை அரசை அதிர வைத்துள்ளார். அத்துடன் முதன் முதலாக தமிழில் ஜெனீவாவில் பேசி ஆங்கிலம் தெரியாதவர்களிற்கு அங்கு இடமில்லையென்ற சுமந்திரன் கும்பலது போலி முகத்தையும் அவர் கிழித்துள்ளார். அவர் 2 நாட்கள் கலந்து கொண்டது மட்டுமல்ல மொத்தம் நான்கு முறை இன அழிப்பு, சர்வதேச விசாரணை, ஐ.நா ஈழத் தமிழர்களுக்குச் சரியான தீர்வு வழங்குவதற்குத் தவறுவதையும், அரை குறை தீர்மாங்கள் குறித்து ஈழத் தமிழர்கள் கடும் அதிருப்தி அடைத்திருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
இவர் முன்வைத்த 4 உரைகளும் ஒரு தொகுப்பாக நோக்கப்படும் என்றும் தனக்கு கிடைத்த 8 நிமிடங்களில் ஈழத் தமிழருக்கான குரலை அவர் தெளிவாக முன்வைத்திருப்பதாகவும் புலம் பெயர் வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, இன அழிப்பு என்று கதைக்க வேண்டாம், சர்வதேசத்தை விமர்சிக்க வேண்டாம், அதிகமாக எதையும் வலியுறுத்தவேண்டாம், அது ராஜதந்திரமாகாது என்று அங்கலாய்க்கும் செயற்பாட்டாளர்களுக்கே அனந்தி அவர்களின் உரை உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஜெனீவாவில் இருக்கும் புலம் பெயர் வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
ஐ. நா மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் புள்ளி 4 இன் கீழ் பொது விவாதம் இடம்பெறும் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 2 நிமிடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். இதில் இடம் பெறுவதற்கு குறித்த நிறுவனத்திற்கு எகோசொக் எனப்படும் அங்கீகாரம் இருக்கவேண்டும். பல வருடங்களாக ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் கரன் பார்க்கர் போன்றவர்கள் இந்த வெளியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கரன் பார்க்கர் அம்மையார் இவ்வருடம் இன அழிப்பு என்பதையும், சுயநிர்ணய உரிமை என்பதையும் வலியுறுதி தனது கருத்தைப் பதிவு செய்தார். சென்ற வருடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதே இடத்தில் உரையாற்றியிருந்தார்.
அந்த இடத்தில் இம்முறை அனந்தி உரையாற்றியுள்ள நிலையில் அனந்தியின் துணிகரமான முதல் நாள் உரையின் பின்னர், பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இன அழிப்பு என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர். நேற்றுச் செவ்வாய்க்கிழமையன்று அனந்தி உள்ளடங்கலாக குறைந்தது மூவர் ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்பு குறித்து பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
தவிரவும், ஐ நா மனித உரிமை சபையில் எமது கருத்தை தமிழ் மொழியிலேயே முன்வைக்க முடியும் என்பதையும் அனந்தி நிறுவியிருக்கிறார்.
அவரது தமிழ் உரையின் முழு வடிவமும் பின்வருமாறு:
பெரு மதிப்புக்குரிய இந்தப் பேரவையானது பெருங்குற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.
இலங்கைத்தீவின் வட மாகாண சபையில் தேர்தலூடாகாத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவும் இன்று நான் இங்கு நிற்கிறேன். போரின் முடிவில் எனது கணவர் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைவதை நேரடியாக பார்த்த சாட்சியமாக காணாமற்போரைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருள் ஒருத்தியாக அவர்களையும் நான் இங்கு பிரதிதிநிதுவப்படுத்துகிறேன்.
இன அழிப்புப் போரின் பின்னராக இன்னமும் 146,000 இற்கும் அதிகமானவர்களின் கதி தெளிவு படாத நிலையில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
2009ம் ஆண்டில் ஆயிரக்கணக்கில் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐ.நா மன்றமும் சொல்லியிருக்கிறது.
2009 மே மாதத்திற்குப் பின்னரும் இன அழிப்பு வேறு வடிவங்களில் அதிகரித்திருக்கும் ஒரு தொடர்நிலையாகி விட்டது.
சிங்களவர்களைப் படையினராகக் கொண்ட சிறீலங்கா இராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் தொகை அதிகரித்து வருகிறது. எமது காணிகள் மீது எமக்கே உரிமை இல்லாத நிலை காணப்படுகிறது. எமது மண் எம்மிடமிருந்து சிறீலங்கா இராணுவத்தாலும் சிங்களவர்களாலும் பறிக்கப்படுகிறது.
நான் இன்று இங்கு பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் கூட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவர், அருட்தந்தை பிரவீன் அவர்களும், ருக்கி பெர்ணாண்டோ அவர்களும் ஒரு தமிழ்த் தாயினதும், மகளினதும் மனித உரிமைக்கு குரல் கொடுக்க கிளிநொச்சி சென்றதற்காகப் பயங்கரவாத தடைச் சட்ட சரத்துக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ ஆக்கிரமிப்பினால் எமது பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லாதிருக்கிறது. பாலியல் வன்புணர்வும், பாலியல் வன்முறையும் நாளாந்தம் நடக்கின்ற நிலையாகிவிட்டது. பல கோயில்களும் தேவாலயங்களும் அழிக்கப்பட்டு அங்கு புத்த சிலைகள் நிறுவப்படுகின்றன. எமது பண்பாடு நாளாந்தம் சீரழிக்கப்படுகிறது. சிங்கள அரசு எமது மண்ணையும், பண்பாட்டையும், வரலாற்றையும், ஏன் எமது மனப் பதிவுகளையும் கூட அழித்துவிட முனைகிறது. இவையெல்லாவற்றையும் பற்றி பல அறிக்கைகள் பேசுகின்றன.
பிறேமனில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்ததென்பதையும், இன அழிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது என்பதையும் அறுதியிட்டுச் உரைத்திருக்கிறது. அப்படியிருந்தும், ஐ.நா மன்றம் இதைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை. இன அழிப்பு நடைபெறுகிறது என்பதை அங்கீகரிக்கவும் இல்லை. தாயகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு குரல் கொடுக்கவல்ல ஒருத்தியாக நான் இதைச் சொல்கிறேன். இங்கு கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானங்கள், தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் நகல் உட்பட, பலனளிக்காமல் இருப்பது குறித்து எமது மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவை தீர்க்கவில்லை. தமிழ் என்ற சொல்லே இல்லாத நிலையே காணப்படுகிறது.
சிறீலங்கா அரசு தன்னைத் தானே மாற்றிக்கொள்ளும் தகைமை அற்றது. அது ஒரு இன அழிப்பு அரசு. அது தன்னைத் தானே விசாரிக்கும் ஆற்றல் அற்றது. எனவே இன அழிப்பு மீதான ஒரு சுயாதீனமான, சர்வதேச விசாரணை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படவேண்டும்.
நான் இங்கு மீண்டும் ஒரு தாயாகவும், எமது தாயகத்தில் தமிழ்த் தாய்மாரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருத்தியாகவும் பேசுகிறேன். எமது குழந்தைகளினதும் எமதும் எதிர்காலம் எமது அடையாளத்துடனும், பாதுகாப்பானதாகவும், அமைதியானதாகவும், சுயமரியாதை கொண்டதாகவும், நியாயமானதாகவும் அமைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
மிகவும் கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கு 60 வருடத்துக்கு மேலாக உட்படுத்தப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசத்திற்கு நியாயம் நல்க வேண்டிய கடமைப்பாடு இந்த உலகின் கைகளில் உள்ளதென தெரிவித்துள்ளார்.

18 மார்ச் 2014

தமிழ் பெண் சிப்பாய்கள் கருக்கலைப்புக்கு உட்பட்டுள்ளனர்!

நீண்டகால கருத்தடை முறைமையினை தமது பெண் சிப்பாய்களிற்கு செய்யுமாறு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விடுக்கப்பட்ட பணிப்புரையினை, கடுமையான உத்தரவினை அடுத்து கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலை அதிகாரிகள் அதனை அமுல்படுத்தியதாக வடக்கு மருத்துவ வட்டாரச் செய்திகள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தன.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த ஆண்டில் இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் இருவர் உடல்நலக் குறைவினால் அண்மையில் கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இவர்களை வைத்தியர்கள் சோதணைக்குள்ளாக்கிய போது இருவரும் கருவுற்றிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. திருமணமாகாத நிலையில் இவர்கள் கருவுற்றிருக்கின்றமை, குறிப்பாக சர்ச்சைக்குரிய வகையில் இராணுவத்தில் இணைந்து பணியாற்றும் போது கருவுற்றமை தொடர்பில் வைத்திய பொறுப்பதிகாரிகளது கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.அவ்வேளையில் குறித்த இலங்கை இராணுவத்தினை சேர்ந்த தமிழ் யுவதிகள் இருவரும் தமக்கு முகாமில் முன்னெடுக்கப்பட்டுவரும் பாலியல் சித்திரவதைகளை வெளிப்படுத்தியதுடன் தமது கருக்களை கலைத்துவிடவும் கோரியுள்ளனர். எனினும் இதற்கு மருத்துவர்கள் மறுதலித்துள்ளதுடன் பெற்றோரிற்கு அறிவிக்க முற்பட்டுள்ளனர். ஆயினும் வன்னி படைத் தலைமை யகத்திலிருந்து வைத்திய சாலை உயர்மட்டத்திற்கு சென்ற தொலைபேசி அழைப்பினையடுத்து அவர்களிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் நீண்டகால கருத்தடை கருவிகளும் பொருத்தப்பட்டதாக தெரியவருகின்றது.ஏற்கனவே இவ்வாறு இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளிற்காக குரல் கொடுத்த மருத்துவர் ஒருவர் கைதாகி சிறையில் நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் தற்போது வேலையினையும் இழந்து வீட்டில் வசித்து வருகின்றார். அத்தகைய வாழ்க்கை தமக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் இராணுவ பணிப்பில் கருக்கலைப்பு மற்றும் கருத்தடைகளை வைத்தியர்கள் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

நன்றி:குளோபல் தமிழ் செய்திகள்

17 மார்ச் 2014

கைதானவர்கள் கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்!

கிளிநொச்சியில் ஞாயிறன்று கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரும் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற தாயாரும், அவருடைய 14 வயதுடைய மகளும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற மனித உரிமைகள் ஆவண மையத்தின் ஆலோசகராகிய ருக்கி பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் பணிப்பாளராகிய அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகிய இருவரும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டபோது தர்மபுரம் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இவர்கள் தகவல்களைத் திரட்டச் சென்றிருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றது.
"காணாமல் போயுள்ளவர்களுக்காக அவர்களது உறவுகள் போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் செயற்பட்டாலும் அவர்களும் கைதுசெய்யப்படலாம் அல்லது காணாமல் போகச் செய்யப்படலாம் என்பதை வெளிப்படுத்துவதாகவே கிளிநொச்சியில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் அமைந்திருக்கின்றன.இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.இந்தக் கைது நடவடிக்கையானது, இலங்கை அரசியலமைப்பில் பொதுமக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரத்தை மீறுவதாக அமைந்திருக்கின்றது என்று மனித உரிமைகளுக்கும் ஆய்வுக்குமான நிலையமும், நீதியும், நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பும் குற்றம் சுமத்தியிருக்கின்றன.
இந்த அமைப்புக்களின் பணிப்பாளராகிய கீர்த்தி தென்னக்கோன் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கையில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தன்னிச்சையாக ஒருவரைக் கைதுசெய்து தடுத்துவைக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும், வலிந்து வாக்குமூலங்களைப் பதவுசெய்யும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கவும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் 48 மணித்தியாலங்கள் ஒருவரைத் தடுத்துவைக்கலாம் என்ற சட்டத்தின் பாரதூரமான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநாவின் மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ள சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரைக் கைதுசெய்திருப்பதானது, இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டு நிலைமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியம் என்ற சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே வழிகோலியுள்ளது என்றும் கீர்த்தி தென்னக்கோன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

16 மார்ச் 2014

ஆசிரியரின் கொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்!

கஜேந்திரன் த.தே.ம.மு.
ஆசிரியரின் கொலை தொடர்பில் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றினை மேற்கொள்ள அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கற்பித்த ஆசிரியர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
வவுனியா நேரியகுளம் மகாவித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றிய கார்த்திகேசு நிரூபன் கடந்த வருடம் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தலுக்கு முதல் நாள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற போது காணாமல் போயிருந்தார்.
மார்ச் 12ம் திகதி ஏ-9 பிரதான வீதியில் 225வது மைல்கல்லுக்கும் 226 வது மைல்கல்லுக்கம் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் அவரது எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார் என்றே தடயப் பொருட்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற கணக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் மூலை முடுக்கெங்கும் குவிந்துள்ள நிலையில் நடைபெற்றுள்ள தென்றால் அரசுக்கு தெரியாத வகையில் இக்கொலை ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது.
எனவே அதற்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் இப்படுகொலையினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இக்கொலை தொடர்பில் சிறீலங்கா அரசு நேர்மையான விசாரணைகளை இன்றுவரை மேள்கொள்ளவில்லை. எனவே இக்கொலை தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றினை மேற்கொள்ள அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக் கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முனன்ணி முழுமையான ஆதரவு தெரிவிக்கின்றது.
இப்போராட்டத்தில் அனைத்து மக்களையும் பொது அமைப்புக்களையும் கலந்து கொண்டு படுகொலைக்கு நீதிகோருமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் ஆசிரியர் நிருபனின் இழப்பால் தவித்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மார்ச் 2014

விபூசிகாவின் தாயார் பூசாவில்!

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் வியாழனன்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதுடைய மகளும் வெள்ளியிரவு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.தாயாராகிய ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு மேல் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதேநேரம், அவருடைய 14 வயது மகளாகிய விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்திய தேவைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது அந்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவரைத் தமது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்காகவே, விஜயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.இதேவேளை, வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரையில் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த விஜயக்குமாரியின் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும், சுற்றிவளைப்பு காரணத்தினாலும் பெண்களான தாயும் மகளும் கைது செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விபரம் தெரியாத நிலை நீடித்திருந்ததாலும், அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியதாக, அங்கு சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்திற்கும், இந்தப் பெண்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் குற்றமற்ற அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்.
காணமல் போயுள்ள தனது மகனுடைய விடுதலைக்காகப் போராட்டம் நடத்தியமைக்காகவே இந்தப் பெண்ணும் அவருடைய மகளும் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும், முறைப்படி யாழ் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், வவுனியா சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

14 மார்ச் 2014

கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு!

பரந்தன் - கிளிநொச்சிக்கு இடையில் அடையாள தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று கிளிநொச்சி பொலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.
இறந்தவர் புகையிரதத்தில் பயணிக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என பொலீஸார் சந்தேகின்னறனர்.இறந்த உடலின் தலை பகுதி முழுமையாக சிதைந்து காணப்படுவதாகவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் திடீர் மரணவிசாரனை அதிகாரி கே.வி.கே.திருலோகமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

13 மார்ச் 2014

அண்ணாவை தாங்கோ என கதறிய சிறுமி கடத்தப்பட்டுள்ளார்!

காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயும் மகளுமான குடும்பமொன்றினை இலங்கை படையினர் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.நவநீதம்பிள்ளையின் யாழ்.பொதுநூலக விஜயத்தின் போதும் கமருனின் விஜயத்தின் போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா –வயது 13 என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது.
இந்நிலையில் இறுதி யுத்தத்தின் பின்னராக எஞ்சிய தனது தாயுடன் முரசுமோட்டையினில் வசித்து வந்த குறித்த சிறுமியும் தாயுமே கடத்தப்பட்டுள்ளனர். எனினும் முன்னதாக படையினர் இளைஞன் ஒருவனை துரத்தி வந்ததாகவும் குறித்த இளைஞன் இவர்களது வீட்டினூடாகவே தப்பி ஒடியிருந்ததாகவும் அதை தொடர்ந்து வீட்டை சுற்றி வளைத்துள்ள படையினர் தாய் மற்றும் மகளை கடத்தி சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் துரத்தி வரப்பட்ட இளைஞர் யார் என்பது பற்றியோ அவர் எங்குள்ளார் என்பது பற்றியோ தகவல்கள் இல்லையென கூறப்படுகின்றது.குறித்த சிறுமியான விபூசிகா அண்மையிலேயே பெரியவளானதுடன் புலம்உறவுகள் சிலர் ஊடகவியலாளர்கள் ஊடாக அவளது கல்வியை தொடர வழி சமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

12 மார்ச் 2014

சுமந்திரன்,அனந்தி இருவரும் ஜெனீவாவில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு மீண்டும் ஜெனீவா பயணமானார். இதேசமயம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் மீண்டும் ஜெனீவா சென்றிருக்கின்றார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவா புறப்பட்டார் என்று கூறப்படுகின்றது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு நீதி கேட்கும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் எம்.பி. அங்கு சென்றிருக்கின்றார்.
இதேசமயம், வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு தனது பிரதிநிதியாக அனந்தி சசிதரன் ஜெனீவா செல்வார் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.கடந்த மாத முற்பகுதியில் ஜெனீவா சென்றிருந்த சுமந்திரன் எம்.பி.யும், அனந்தி சசிதரனும் அங்கு ஒன்றாகப் பல நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கைத் தமிழர் தரப்புக் கருத்துக்களை வலிமையாக முன் வைத்திருந்தனர்.தாங்கள் கூட்டாகப் பல நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்தமை குறித்து நாடு திரும்பியதும் பத்திரிகைகளுக்கு சிலாகித்து அனந்தி சசிதரன் பேட்டியளித்திருந்தார்.
எனினும், கடந்த வாரம் மீண்டும் ஊடகவியலாளரைச் சந்தித்த அனந்தி சசிதரன், மேற்படி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தமது கருத்தை வெளியிட சுமந்திரன் எம்.பி. தம்மை அனுமதிக்கவில்லை என்ற சாரப்பட பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் இப்போது இருவருமே தனித்தனியாக ஜெனீவாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். இருவரும் தத்தமது தனித்தனி நிகழ்ச்சித் திட்டத்தின் படி அங்கு தமது பணிகளை முன்னெடுப்பர் என்று கூறப்பட்டது.

10 மார்ச் 2014

ஆதரவு திரட்டுகிறார் கமரூன்!

யாழில் கமரூன் 
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு தரக் கோரி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தனிப்பட்ட ரீதியாக கடிதங்களை அனுப்பியுள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் பணியக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, ‘தி கார்டியன்‘ நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
“சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய அனைத்துலக அழைப்புகளுக்கு அந்த நாடு திருப்தியான பதில் அளிக்கத் தவறியுள்ளதால், அமெரிக்கா மற்றும் ஏனைய மூன்று நாடுகளுடன், போர்க்குற்றங்கள் குறித்த முழுமையான அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதில் பிரித்தானியாவும் இணைந்து கொண்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த போது, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான விசாரணைகளை நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
சிறிலங்கா அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது.
இதையடுத்து, ஏனைய நான்கு நாடுகளுடன் இணைந்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பிரித்தானிய அரசாங்கம், தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது.
போரின்போது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட, மனிதஉரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அழைப்புக்கு ஆதரவாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வாக்கெடுப்பு இந்த மாத இறுதியில் நடத்தப்படவுள்ளது.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, ஏனைய நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு நாம் கடுமையாகப் பணியாற்றுகிறோம்.
சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் மனிதஉரிமைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தரக் கோரி, பிரதமர் டேவிட் கமரூன், பல நாடுகளின் தலைவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாக கடிதங்களை எழுதியுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

09 மார்ச் 2014

உள்ளக விசாரணை கோருவதற்கு அமெரிக்காவும் ஐ.நாவும் எதற்கு?

அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருமென்று நம்பியிருந்த போதும் அது இப்பொழுது ஏமாற்றம் தந்து நிற்கின்றது. மேலும், ஐ.நா.சபையின் மனித உரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்படும் விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதேவேளை இலங்கையில் உள்ளக விசாரணை குறித்து கூறுவதற்கு ஐ.நாவோ அமெரிக்காவோ தேவையில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள வரைபு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இலங்கை இழைத்த மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட வேண்டுமென சிபாரிசு செய்தது போலவே, அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்திலும் அது வலியுறுத்தப்படுமென உலகம் நம்பிக் கொண்டிருந்த வேளையில் திடீரென அமெரிக்க தீர்மானத்தின் வலுத்தன்மை குறைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி தருகின்ற விடயமாக மாறியுள்ளது.
ஆனால் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த அறிக்கையில் சர்வதேச விசாரணையொன்று போர்க்குற்றம் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் அத்தகையதொரு சிபாரிசு இல்லாமலே போய்விட்டது. ஆகவே இந்த விடயம் பெருத்த ஏமாற்றம் தரும் விடயமாக தமிழ் மக்களுக்கு ஆகிவிட்டது. காரணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எவ்வகை ஈடுபாட்டைச் செலுத்தி தனது அதிகார வரம்புக்குள் உண்மையைக் கண்டறிய விளையும் என்பதில் சந்தேகங்கள் நிலவலாம்.
அதேவேளை இலங்கை அரசை நீங்களே விசாரணை செய்யுங்கள் என சுதந்திரமாக விட்டால் அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே விசாரிப்பதனால் உண்மையும் கண்டறியப்பட மாட்டாது. நீதியும் கிடைக்காது. இது தான் இவ்வளவு காலமும் இலங்கையில் நடைபெற்ற விசாரணைகளாகும். தங்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை தாங்களே விசாரணை நடத்துமாக இருந்தால் இலங்கையில் எந்தவித போர்க்குற்றமும் இழைக்கப்படவி்ல்லை, எவ்வித மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லையென்றே கூறி தாம் தப்பித்துக் கொண்டுவிடுவார்கள். இப்படியான தீர்ப்பை வழங்குவதற்கு அமெரிக்காவோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ எமக்கு வேண்டியதில்லை.
எனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணையொன்று மேற்கொள்வதன் மூலமே இலங்கையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியும். எனவே தான் வெளிநாட்டு அமைப்புக்களினதோ நாடுகளினதோ மேற்பார்வை இருக்க வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

08 மார்ச் 2014

ராம்ஜெத்மலானிக்கு பாராட்டு விழா!

ராம்ஜெத் மலானி 120 ஆண்டுகள் நோய் நொடியின்றி நன்றாக வாழ வேண்டும். அவரது 100வது பிறந்தநாள் விழாவை நாம் சென்னையில் கொண்டாட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக பிரபல வக்கீல் ராம்ஜெத் மலானி உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். இதன் காரணமாக 3 பேரும் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பினார்கள். அவர்களது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து ராம்ஜெத் மலானிக்கு தமிழர் அமைப்புகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தன.ம.தி.மு.க. வழக்கறிஞர் பேரவையில் ராம்ஜெத்மலானிக்கு இன்று காலை சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மகாலில் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு வந்த ராம் ஜெத்மலானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வைகோ பொன்னாடை போர்த்தி வரவேற்றார். விழாவில் ராம்ஜெத் மலானியை பாராட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அவர் கூறியதாவது முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதில் ராம் ஜெத்மலானிக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் கடுமையாக பாடுபட்டு வருகிறார்.3 பேரின் உயிரைக் காப்பாற்ற அவர் பணம் வாங்காமல் வாதாடியுள்ளார். அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.அவருக்கு தமிழ்ச்சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. ராம்ஜெத்மலானி 120 ஆண்டுகள் நோய் நொடியின்றி நன்றாக வாழ வேண்டும். அவரது 100-வது பிறந்தநாள் விழாவை நாம் சென்னையில் கொண்டாட வேண்டும் என்றார் வைகோ.விழாவில் மல்லை சத்யா, பகுதி செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி, சட்டத்துறை செயலாளர் ஜூ.தேவதாஸ், கே.கழககுமார், சு.ஜீவன், வக்கீல் டி.ஜ.தங்கவேல், மதுரை டாக்டர் பி.சரவணன், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் ஓ.சோமு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தாயகம் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

07 மார்ச் 2014

நடவடிக்கை எடுக்க இதுவே சரியான தருணம்!

நோபல் பரிசு பெற்ற தென் ஆப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின், இலங்கை தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் அழைப்பு விடுத்துள்ளது.
மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க இதுவே ஐக்கிய நாடுகளுக்கு கிடைத்துள்ள உரிய தருணம் என அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
பேராயரின் அறிக்கையானது இலங்கையின் ஆர்வலர்கள், உலகம் முழுவதிலும் உள்ள 12க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.நா உறுப்பு நாடுகள் விழித்துக்கொள்ள சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
இலங்கையில் போர் நடைபெற்ற போது இடம்பெற்ற அட்டூழியங்களை கண்டறிய நீதி மற்றும் பொறுப்புக் கூறும் சர்வதேச விசாரணை கட்டமைப்பை ஐக்கிய நாடுகள் ஏற்படுத்த வேண்டும் என பேராயர் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் இறப்புகள் குறித்து விசாரணை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது.
தெளிவான ஆதாரங்கள் இருந்த போதிலும் சுதந்திரமான விசாரணைகளை நடத்தும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகிறது.
மனித உரிமை பேரவையில், இலங்கையில் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இதுவே ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு உரிய நேரமாகும் என பிராட் எடம்ஸ் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, இலங்கை தொடர்பில் விசாரணையை நடத்த சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சிறுபான்மை இன குடிமக்களின் உரிமைகளுக்கு மரியாதை வழங்க ஒரு முறையான ஒழுங்குமுறை இல்லாததே இலங்கையில் எதிர்நோக்கப்படும் பாரிய பிரச்சினையாகும் எனவும் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை மோதலுக்கு பின்னரான செயற்பாடுகளை நேரம் எடுத்து செய்யும் போது அந்த விடயங்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும்.
போர் முடிவடைந்து சுமார் 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நிலைமைகள் மோசமடைந்துள்ளதே தவிர சிறந்ததாக மாறவில்லை எனவும் டெஸ்மண்ட் டுட்டு தெரிவித்திருந்தார்.

06 மார்ச் 2014

சுமந்திரன் மீது அனந்தி குற்றச்சாட்டு!

தமிழ்  தேசியக்கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எந்தவொரு சந்திப்பிலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. என்னையும் எதுவும் பேச அனுமதிக்கவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்,ஊடக அமையத்தில் இன்று (06.03.14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வடமாகாணசபையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன் அங்கு வடமாகாணசபை சார்பில் என்னையே ஜெனிவாவிற்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்வகையினில் தமிழரசுக்கட்சியின் அனுசரணையுடன் நான் பல்வேறு சிரமங்களிற்கு மத்தியில் ஜெனீவா சென்றிருந்தேன்.
அங்கு சென்று இறங்கியதுமே தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நான் விடுதலைப்புலிகளது முக்கிய போராளியான எழிலனின் மனைவி என்பதால் என்னையும் சர்வதேச பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் போராளியாகவே பார்ப்பார்களென தெரிவித்ததுடன் என்னை ஏதும் பேச வேண்டாமெனவும் தானே எல்லாவற்றினையும் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரலில் அவர் என்னை அங்கு அழைத்து சென்றிருப்பார் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக அங்கு சென்றிருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
18 நாட்டு ராஜதந்திரிகள் சகிதம் கடந்த பெப்;ரவரி 13ல் இடம்பெற்ற ஜெனீவா சந்திப்பில் கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்டிருந்த சுமந்திரன் போர்குற்ற விசாரணை தொடர்பாகவோ இன அழிப்பு தொடர்பாகவோ ஏதும் பேசியிருக்கவில்லை. என்னையும் பேச விடவில்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக நான் இருந்தேன். குறுக்கிட்டு அங்கு பேசியிருக்க முடியுமாயினும் ராஜதந்திரிகளிடையே கௌரவத்தினை மதித்து தான் பேசாதிருந்ததாகவும் அனந்தி மற்றொரு கேள்விக்கு அங்கு பதிலளித்தார்.
ஏதாவதொரு பிரேரணையினை கொண்டுவந்தால் போதுமென்பதே அவரது நிலைப்பாடாக இருந்ததெனவும் அவர் தெரிவித்தார்.
ஜெனீவாவினில் ஓர் போர்க்குற்ற விசாரணை வருமென நம்பிருந்த எமது மக்கள் விரக்திக்குள்ளாகி இருக்கிறார்கள். காணாமல் போனோர் தொடர்பில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் அற்றுப்போயுள்ளது. எமது மக்கள் கடும் மன உளைச்சலிற்கு உள்ளாகியுள்ளார்கள். இன அழிப்பிற்கு சர்வதேசம் நீதியான தீர்வொன்றினை தராதென எமது இளம் சமுதாயம் கருதி மாற்றுவழிகளை தேடிக்கொள்ளுமானால் அகிம்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளே அதற்கு பொறுப்பாக வேண்டியிருக்குமெனவும் அனந்தி தெரிவித்தார்.

05 மார்ச் 2014

."அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானம்"மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து , தமிழர்களுக்கான நீதியை மறுத்து ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் அமெரிக்க ”அயோக்கிய” தீர்மானத்தை உலகத் தமிழர்களும், தமிழ் மாணவர்களும் மிக கடுமையாக எதிர்க்கிறோம்.
இலங்கை அரசுக்கு எதிரானது என்ற பெயரில் வெறும் ”உள்நாட்டு” விசாரணையை கோரும் தமிழீழ விடுதலைக்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான இந்த அயோக்கிய தீர்மானத்தை தொடர்ந்து எதிர்ப்போம், எரிப்போம்.
தமிழர்களின் கோரிக்கையான, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் இனப்படுகொலைசெய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கான நீதியாக
1) தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து,
2)இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை உடனே நடத்து
என்ற கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை மாணவர்களின் போராட்டம் இனப்படுகொலையில் பங்காற்றிய அமெரிக்க,இந்திய,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு எதிராகவும், அவைகளின் வணிக நிறுவனங்களுக்கு எதிராகவும் நடைபெறும்.
தமிழீழ தேசத்தை தங்களது பொருளாதார நலனுக்காக ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்க,இந்திய, இங்கிலாந்து,இலங்கை ஆகிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக, அவைகளின் சதிகளை உடைக்க தமிழக மாணவர்கள் கிளர்தெழுவோம்.
அமெரிக்க தீர்மானம், ”அயோக்கிய” தீர்மானம்!!
போர்க்குற்றமல்ல, அது இனப்படுகொலையே!!
தமிழரின் தாகம்!! தமிழீழ தாயகம்!!
மாணவர்கள் அனைவரும் தமிழர் கடலருகே ஒன்றுகூடுவோம்.

04 மார்ச் 2014

அமெரிக்காவின் தீர்மானம் போராட்டத்தை முடக்குவதற்கே–திருமுருகன் காந்தி

பீரிஸ்-பிஸ்வால் 
தமிழீழ விடுதலையை நீர்த்துப் போகச் செய்வதற்கும், புலிகளின் அரசியல் ஆதரவு ஈழவிடுதலை செயல்தளத்தினை முடக்குவதற்கும் மட்டுமே இந்த தீர்மானம் பயன்படப் போகிறது.
அமெரிக்கா ஏதோ யோக்கியமான தீர்மானம் கொண்டு வருகிறது, அதை இந்தியாதான் நீர்த்துப் போகச்செய்கிறது என்றெல்லாம் நம்பிக்கொண்டு பிரச்சாரம் செய்தவர்களை என்னவென்று சொல்வது?
கடந்த வருடம் கொண்டு வந்ததைப் போலவே இவ்வருடமும், இலங்கைக்கு தமிழினப்படுகொலையை நடத்தி முடிக்க மேலும் அவகாசத்தினை கொடுத்திருக்கிறார்கள்.
ராஜபக்சேவினை தண்டிப்பதற்கான அரசியல் வேறு, ஈழவிடுதலைக்கான அரசியல் வேறு. ராஜபக்சேவினை தண்டிப்பதன் மூலம் ஈழவிடுதலையை வென்றுவிடலாம் என்று பிரச்சாரம் வலுவாக நடக்கவே செய்கிறது. 2011இல் இதை எச்சரித்தோம். அமெரிக்கா-இந்தியா-இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ராஜபக்சேவினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே ஆட்சி மாற்றம் செய்துவிட்டு வேரொருவரை கொண்டுவர இந்த மனித உரிமை மீறலை பயன்படுத்துகிறார்கள். இதை ராஜபக்சேவே கடந்த மாத பேட்டியில் கொடுத்திருக்கிறார்.
இதை 2011இல் ஐ.நாவின் நிபுணர் அறிக்கை வெளியிட்ட பொழுதே இதை எச்சரித்தோம். அப்பொழுதிருந்து இன்றுவரை எங்கள் மீது “சிங்களக் கைகூலிகள், இந்திய உளவாளிகள்” என்று பட்டம் கட்டுவதை மட்டுமே செய்தார்களே ஒழிய எங்களது கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை..
ஐ.நாவும், அமெரிக்காவும், இந்தியாவும், இங்கிலந்தும் இணைந்து ”ஆட்சி மாற்றமே தமிழர்களுக்கு தீர்வு” என்கிற வேலையை செய்கின்றன. இதனாலேயே ராஜபக்சே இவர்களை எதிர்க்கிறார். தமிழர் விரோத அரசியலை செய்வதால் நாமும் எதிர்க்கிறோம்.
இவர்களின் சுருக்க அரசியல் :
இங்கிலாந்து -அமெரிக்காவின் விருப்பம் : ஆட்சி மாற்றம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் நல்லிணக்க அடிப்படையில் வாழ்வது, புலிகள்-தமிழீழ ஆதரவு அரசியலை முடக்குவது.
இந்தியா: ஆட்சி மாற்றம், 13 வது சட்ட திருத்ததின் அடிப்படையில் மாகாண உரிமைகள். தமிழ்தேசிய கூட்டமைப்பினைக் கொண்டு இலங்கையிடம் பேரம் பேசுதல். புலிகள்-தமிழீழ ஆதரவு அரசியலை முடக்குவது.
ஐ.நா: இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புகளை வலுபடுத்துவது, சீர்திருத்துவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் இலங்கையர்களாக வாழ நல்லிணக்க-உண்மை அறியும் முறையை ஏற்படுத்துவது. இதற்கான இடைக்கால நீதி வழங்கு முறையை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்திற்கான காரணத்தினை ஏற்படுத்துவது.
இந்த நோக்கங்களை நிறைவேற்றுமளவிற்கும், தமிழர்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கும், தமிழகத்தில் சூழலை உருவாக்க ’அமெரிக்க-ஐ.நா அதரவு’ கருத்துப் பிரச்சாரம் செய்வதற்கு என்.ஜி.ஓக்களை களம் இறக்குவது. இவர்களுக்கு துணையாக அரசியல் இயக்கங்களை மாற்றுவது.
மேல் சொன்ன அனைத்தும் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. நெருக்கடிக்குள்ளாக்கும் எந்த ஒரு கேள்வியையும் இவர்களை நோக்கி எழுப்பாமல் தமிழ்ச் சமூகம் எப்பொழுதும் போல கடந்து போகுமோ என அச்சமே இருக்கிறது.

சமந்தா பவர் நேற்று ஜெனிவா வரவில்லை!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரின் உரை இடம்பெறவில்லை.
நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முதல்நாள் அமர்வில், உயர்நிலைப் பிரதிநிதிகளின் உரைகள் வரிசையில், அமெரிக்கா சார்பில் ஐ.நாவுக்கான தூதுவர் சமந்தா பவர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சமந்தா பவர் விபரிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்றைய அமர்வில் சமந்தா பவரின் உரை இடம்பெறவில்லை.
உக்ரேன் விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடி குறித்து ஆராய, நியுயோர்க்கில் நேற்று நடந்த ஐ.நா பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றதால், சமந்தா பவர் ஜெனிவா செல்லவில்லை.
இதற்கிடையே, அமெரிக்கா சார்பில், சமந்தா பவருக்குப் பதிலாக, இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ்நிலைச் செயலர் சாரா சீவோல் உரையாற்றுவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலராக உள்ள சாரா சீவோல், இன்று பிற்பகல் உரையாற்றுவார் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் இன்றைய நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03 மார்ச் 2014

நவனீதம்பிள்ளையின் அறிக்கையில் திருத்தங்கள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
இது தொடர்பான உத்தேச அறிக்கை ஒன்று ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பதிலளித்துள்ளது.
இந்த பதில்களின் அடிப்படையில் அறிக்கையின் ஒரு சில விடயங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தல், வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையை குறைத்தல் போன்றவற்றுக்கு கால வரையைறையொன்றை நிர்ணயித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அதில் கோரப்பட்டிருந்தது.
எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பதில்களைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இறைமையுடைய நாடு என்ற ரீதியில் இலங்கை தொடர்பில் அவ்வாறான பணிப்புரைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்வைக்க முடியாது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரன் கொல்லப்பட்டமை தொடர்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

02 மார்ச் 2014

இலங்கை படையை விடவும் கொடூரமான க்யூ பிரிவு பொலிசார்!வாலிபர் உண்ணாவிரதம்

திருச்சி சிறப்பு முகாமில் அகதி ஒருவர் 01.03.2014 தொடக்கம் பட்டினிப்போராட்டம் நடத்துகின்றார் . உமாரமணன் கந்தசாமி (34)என்பவரே தன்னை UNHCR மூலம் இலங்கைக்கு அனுப்பும் படி கோரி பட்டினிப்போராட்டத்தை நடத்துவதாக அறிய முடிகின்றது.2008 ஆம் ஆண்டு தமிழகம் வந்த இவர் இலங்கைக்கு மருத்துவப்பொருட்கள் கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற பொய்யான காரணத்தை கூறி கைது செய்த Q பிரிவு காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் . அங்கிருந்து நீதிமன்ற பிணையில் வெளியே வந்தவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மீண்டும் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருந்தனர் . அக்குற்றச்சாட்டு நீதி மன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தமையால் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டார்.விடுதலையானவர், வழக்கிற்கு தவறாமல் நீதிமன்றம் சென்று வந்தார்.குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்த இவரை அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி மீண்டும் கைது செய்த Q பிரிவினர் புழல் சிறையில் அடைத்தனர் .7 மாதங்கள் சிறையில் இருந்த அவர் பிணையில் வெளியே வந்ததும் மீண்டும் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளனர் . நான்கு மாதங்களாக சிறப்பு முகாமில் எதுவித காரணமும் கூறாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவரது மனைவியிடம் சென்ற Q பிரிவு அதிகாரிகள் அவருக்கு மிரட்டல் விடுத்ததுடன் கணவரை பார்க்க செல்லக்கூடாது என்றும் அவ்வாறு சென்று பார்த்தால் அவரையும் அவரது சகோதரர்களையும் சிறப்பு முகாமில் அடைத்து விடுவதாக பல முறை மிரட்டல் விடுத்துள்ளனர் .இது குறித்து அதிகாரிகளிடம் பலதடவை முறையிட்டும் மிரட்டல்கள் அதிகரித்ததே தவிர எதுவித பலனும் கிடைக்கவில்லை.Q பிரிவினரின் தொந்தரவு தாங்க முடியாத உமாரமணனின் மனைவியும் அவர்களது பெற்றோரும் இவரிடமிருந்து விவாகரத்து கேட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது . அதனால் விரத்தியடைந்த நிலையில் இருந்த இவர் தமிழகத்தில் இனியும் வாழ முடியாது என்ற நிலையிலேயே தன்னை இலங்கைக்கு அனுப்பும் படி கோரி பட்டினிப்போராட்டம் நடத்துகின்றார் .இலங்கையில் இராணுவத்தின் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியும் என்றும் தமிழத்தில் , தமிழர்கள் என்று கூறிக்கொண்டிருக்கின்ற காவல்துறையின் நீதிக்கு புறம்பான கொடுமைகளை தாங்கிக்கொண்டு வாழ முடியாதுள்ளது .தமிழத்தில் காலவரையரையற்ற தடுப்பு என்பது குடும்பங்களையே நிரந்தரமாக பிரித்து விடுகின்றது . இவ்வாறு பல குடும்பங்களின் நிலைமைகள் உள்ள போதும் Q பிரிவினரின் மிரட்டல்களால் வெளியில் சொல்ல யாரும் முன்வருவதில்லை . இவ்வாறான கொடுமைகளால் தொடர்ந்தும் வாழ முடியாது என்பதாலேயே இலங்கையில் ஆபத்து என்று தெரிந்தும் அங்கு அனுப்பும் படி கோரிக்கை விடுத்து பட்டினிப்போராட்டம் நடத்துவதாக அறிய முடிகின்றது .
அண்மையில் திருச்சி சிறப்பு முகாமில் மாற்றுத்திரனாளிக்கு உரிய வசதி செய்து தரும்படி தாசில்தாரிடம் கேட்ட நால்வர் பொய்யான வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தமையும் அதனைத்தொடர்ந்து உமாரமணனின் பட்டினிப்போராட்டமும் அங்கு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

01 மார்ச் 2014

வன்முறையின் உச்சம் காங்கிரஸ்!

ஈழத்தில் இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வீர மரணம் அடைந்த திலீபனுக்கு விடுதலைப் புலிகளின் சார்பில் யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் பதினான்கு ஆண்டுகள் யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட திலீபனின் நினைவு இல்லம் சிங்களவர்களால் இடிக்கப்பட வில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் அமைக்க முடிவெடுத்த நேரத்தில், இந்திய காங்கிரஸ் அரசின் ஆலோசனையின் பேரில் திலீபனின் நினைவு மண்டபம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது . எனவே வன்முறைகளை தூண்டுவதும், சிலைகள், நினைவிடங்களை உடைக்கும் கலாச்சாரம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான
ஒன்று என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.