31 மே 2014

ராகுல் காந்தி கோமாளி!

ராகுல் காந்தி ஜோக்கரே தான்.. சஸ்பென்ட் செய்யப்பட்ட காங். தலைவர் ராகுல் காந்தியை கோமாளி என்று நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று காங்கிரசில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட கேரள முன்னாள் அமைச்சர் டி.எச்.முஸ்தபா கூறினார். லோக்சபா தேர்தலில் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள காங்கிரஸ் தலைமையகமான இந்திர பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் சார்பில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டது. ஒட்டுமொத்த தோல்விக்கு மத்திய அரசின் மக்கள் விரோத ஆட்சியும், ஊழல் பிரச்னைகளும், விலைவாசி உயர்வும்தான் காரணம் என கூறப்பட்டது. காங்கிரஸ் தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் டி.எச்.முஸ்தபா சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ராகுல்காந்தியை ஜோக்கர் என்று கூறி இருந்தார். முஸ்தபாவின் இந்த பேச்சு குறித்து நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ராகுல் காந்தியை அவதூறாக பேசிய முஸ்தபாவை சஸ்பென்ட் செய்ய அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சஸ்பென்ட் செய்யப்பட்டது குறித்து முஸ்தபா செய்தியாளர்களிடம் கூறும்போது, 'ஏற்கனவே நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சரியான முடிவை எடுக்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதால் தான் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஏகாதிபத்திய சிந்தனைக்கு காங்கிரசில் இடமில்லை. பா.ஜ.க. சார்பில் பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு வாக்குச்சாவடிகள் வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், காங்கிரசில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. மூத்த உறுப்பினர் என்ற முறையில் கருத்துகளை சொல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இருக்குமேயானால் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குறித்து நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார்.

30 மே 2014

இந்திய பயணத்துக்கு பின் மிரளும் இலங்கை!

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் டெல்லி பயணத்துக்குப் பின்னர் அந்த அரசு மிகவும் மிரண்டு போயிருப்பதை அந்நாட்டு அமைச்சர் நிமல சிறிபால டி சில்வாவின் நேற்றைய பேட்டியும் வெளிப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே டெல்லி வந்திருந்தார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி ஈழத் தமிழர் பிரச்சனை,. மீனவர்கள் பிரச்சனை குறித்து காட்டமாகவே விவாதித்திருந்தார். இதைத் தொடர்ந்து இலங்கைக்குப் போன உடனேயே இந்தியாவின் சம்பூர் அனல்மின் திட்டத்தை உடனே விரைந்து முடிக்க வேண்டும் என்று ட்விட்டர் வழியே ராஜபக்சே கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இந்திய அரசின் வெளியுறவுத் துறை செயலர் வெளிப்படையாக அளித்த பேட்டியிலேயே 13வது அரசியல் திருத்தம் மற்றும் அதற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காண்போம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக சொல்லியிருக்கிறார்களே.. உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு நேரடியாக பதிலளிக்காத நிமல சிறிபால டி சில்வா, இந்திய பாரதிய ஜனதாவால் இலங்கை அரசுக்கு பிரச்சனைகள் உருவாகியிருப்பதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. முந்தைய காங்கிரஸ் அரசை கையாண்டதைப் போல இலங்கை அரசு இப்போது செயல்பட முடியாது என்று சில ஊடகங்கள் சொல்கின்றன. இன்னும் சில ராஜபக்சேவின் அரசாங்கமே இல்லாமல் போய்விடும் என்கின்றன. ஆனால் இலங்கை அதிபருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையேயான முதலாவது சந்திப்பு வெற்றிகரமாக இருந்தது. இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவதாக அமைந்தது. இலங்கையின் நிலைப்பாட்டை இந்திய பிரதமர் மோடியிடம் ராஜபக்சே விளக்கினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததையும் காதுகொடுத்து ராஜபக்சே கேட்டுக் கொண்டார். எங்களைப் பொறுத்தவரையில் பிரச்சனைகளுக்கு பேச்சுகள் மூலம் தீர்வு காண விரும்புகிறோமே தவிர முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் மூலம் அல்ல. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், யுத்தம் முடிந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வந்திருக்கிறார். இலங்கை நிலவரங்களை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என நம்புகிறோம் என்றார். ரொம்பவே மிரண்டு கிடக்கிறதோ!

25 மே 2014

தமிழர் சொத்துக்களை அபகரித்தல் தொடர்கிறது!

கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம், தடைவிதிக்கப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் எல்லா நிதிகள், ஏனைய நிதிச் சொத்துகள், பொருளாதார வளங்களையும், முடக்கும் வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று ஐ.நா பாதுகாப்புச்சபையின் 1373 தீர்மானத்துக்கு அமைய வர்த்தமானியில் பெயரிடப்பட்ட இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்களையே முடக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த தடை அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்குப பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இதற்கான வர்த்தமானி அறிவிப்பை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று பிரகடனப்படுத்தப்பட்ட, அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் எல்லா சொத்துகள் மற்றும் நிதிகள், பொருளாதார வளங்களும், அவர்களினால் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்களின் வசமுள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பான உத்தரவு சிறிலங்கா மத்திய வங்கியின் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவினால், சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் குறிப்பாக வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

22 மே 2014

மோடி பதவியேற்பு விழாவை முதல்வர் புறக்கணிப்பார்?

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அழைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கக் கூடும் என்று தெரிகிறது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வரும் 26-ந் தேதியன்று மாலை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் நேற்று வெளியானது முதலே தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளன.பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக பொதுச்செயலர் வைகோ, ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது என மோடியை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மே 17 இயக்கத்தின் சார்பில் வரும் 25-ந் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே ராஜபக்சேவை அழைத்ததற்கு புதிய மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபை தீர்மானங்களை சுட்டிக்காட்டியும் முந்தைய காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்தியதையும் அதில் விவரித்துள்ளார். அத்துடன் புதிய மத்திய அரசின் நடவடிக்கையானது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி, வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் மோடி பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காமல் புறக்கணிக்கக் கூடும் என்றே தெரிகிறது.

18 மே 2014

வீதியில் அமர்ந்து அனந்தி போராட்டம்!

உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் நடமாட்டமேதுமற்ற கீரிமலையின் எல்லையில் அவர் பொலிஸ் மற்றும் படையினரது சோதனை சாவடி முன்பதாக இப்போராட்டத்தினை கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக முன்னெடுத்து வருகின்றார்.
முன்னதாக உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலையில் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கீரிமலைக்குச் செல்லும் பிரதான வீதி மார்க்கங்கள் அனைத்திலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டுள்ளன.
அந்தப் பிரதான வீதிகளினூடாகவோ குறுக்கு வீதிகளினூடாகவோ யாரும் கீரிமலைக்குச் செல்ல முடியாதவாறு இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் குறித்த புதிய சோதனை சாவடியொன்றினில் அனந்தி வழிமறிக்கப்பட்ட நிலையில் தன்னை கீரிமலைக்கு செல்ல அனுமதிக்க கோரி வீதியின் நடுவில் அமர்ந்து அவர் போராட்டத்தை முன்னெடுத்தார்.அவ்வேளையில் தான் படை அதிகாரிகளினால் அச்சுறுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவித்த அவர் தன்னை புகைப்படமெடுத்து அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

17 மே 2014

மூன்று நாள்களுக்கு எந்த நிகழ்வும் நடத்தக்கூடாதாம்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவிவழங்கும் நிகழ்வை நடத்தியபோது அங்குவந்த இராணுவத்தினர், இங்கு மூன்று நாள்களுக்கு எந்த நிகழ்வும் நடத்தக்கூடாது என்று எச்சரித்து நிகழ்வை குழப்ப முயற்சித்துள்ளனர். எனினும் தான் உதவி வழங்கும் நிகழ்வையே ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த மாகாணசபை உறுப்பினர், மெளன வணக்கத்துடன் அந்த நிகழ்வை ஆரம்பித்தார். இந்த நிகழ்வை இன்று முற்பகல் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நடத்தியுள்ளார். நிகழ்வு நடந்து முடியும்வரை இராணுவத்தினர் அங்கேயே காத்திருந்தனர். இதனால் முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் பதற்றம் நிலவியது.

10 மே 2014

யாழில் 800 இளைஞர் யுவதிகளை படையில் இணைக்க நடவடிக்கை!

பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு தொண்டர்கள் என்ற போர்வையில் 800 படை வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட படையின் ஊடக இணைப்பாளர் மல்லவராட்சி இன்று வெளியிட்டார்.
படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள சிவில் அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
அதன்போதே குறித்த அறிவித்தலையும் உத்தியோக பூர்வமாக தெரிவித்தார் மல்லவராட்சி. அவர் மேலும் தெரிவிக்கையில், வயதின் அடிப்படையில் ஓய்வுபெற்றவர்கள், சேவை அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வேறு தொழில் தேடி இடைவிலகிச் சென்றவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தொண்டர்களாக கடமையாற்றுவதற்கு 700 தொடக்கம் 800 வெற்றிடங்கள் உள்ளன.
எனவே நாம் கட்டாயப்படுத்தவில்லை விரும்பியவர்கள் இணைந்து கொள்ளமுடியும். இதற்காக காங்கேசன்துறையில் 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதன்போது மரவேலை, கைத்தொழில் முயற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பயிற்சி நிறைவில் வலுவான சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் பயிற்சிக்காலத்திலும் சம்பளம் வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன இலவசமாக வழங்கப்படுவதுடன் குடும்பத்தினருக்கும் சலுகைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவடைந்ததும் படை தொண்டர்களாக உள்வாங்கப்பட்டு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா சம்பளமும் வழங்கப்படும்.
குறித்த பணியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல விரும்பாதவர்கள் கடிதம் மூலம் அறிவித்து விட்டு விலகிச் செல்ல முடியும். இதற்கு எதுவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இதற்கு 18 வயது தொடக்கம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆண்கள் 22 வருட நிறைவிலும் , பெண்கள் 15 வருட நிறைவிலும் ஓய்வு பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு ஓய்வூதியமும் வழங்கப்படும். மேலதிக கல்வியினை தொடர விரும்புபவர்களுக்கு அரசாங்கம் மற்றும் தனியார் ஊடாக வழங்கப்படுவதுடன் வெளிநாட்டு புலமைப்பரிசில்களும் வழங்கப்படும்.
எனினும் அதிகாரிகளை இணைப்பதற்கே வர்த்தமானியில் அறிவிக்கப்படுமே ஒழிய தொண்டர்களை இணைப்பதற்கு அல்ல. இவ்வாறே தான் தெற்கிலும் தொண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.எனினும் கடந்த காலங்களில் வடக்கில் ஆட்களை இணைப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களாக இணைந்து தங்களுடையதும், குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பிணை இளைஞர், யுவதிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

09 மே 2014

யாழ்.பல்கலையில் நடந்த அமைதிப் போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இனந்தெரியாதவர்ளால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் இன்று நண்பகல் 11.15 மணியளவில் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மௌன எதிர்ப்புப் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தங்கும் பொது மண்டபத்தில் இருந்து பல்வேறு வகையான கண்டனங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கிய வண்ணம் ஊர்வலமாக பிரதான வாயில் வரை வந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அமைதியான முறையில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை பாதாதைகளை தாங்கிய வண்ணம் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அமைதியான முறையில கலைந்து சென்றார்கள்.
அவர்கள் தாங்கியிருந்த பதாதைகளில் -
'யாழ்.பல்கலைக்கழகம் என்பது கல்விக் கழகமா அல்லது கொலைக்களமா', 'நினைத்த நேரத்தில் பல் கலைக்கழகத்தை மூடுவது தான் மாணவர்களின் மையக் கல்வியா', 'யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மகத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனையல்ல புரிந்து கொள்ளுங்கள்', 'பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துக','அச்சுறுத்தலும் கொலை மிரட்டலும் பயங்கரவாதம் இல்லையா','ஆசியாவின் அதிசயம் பல்கலைக்கழக ஆசிரியர்களை கொல்வதா' போன்ற சுலோகங்கள் அடங்கியிருந்தன.

08 மே 2014

சிறீலங்காவிற்கு பத்தாயிரம் கோடி ஒதுக்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்!

சிறிலங்காவில் போரினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய இலங்கை ரூபா மதிப்பீட்டின்படி பத்தாயிரம் கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையானது ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ள ஒரு நாடாகும். அந்த வகையில் இங்கு போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருபதாயிரம் வீடுகள் மற்றும் 200 பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
அதற்கு மேலதிகமாக அந்தப்பிரதேசங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப வேறு திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

07 மே 2014

இலங்கைப் போர்க்குற்ற விசாரணைக்கு மேற்கு நாடுகள் நிதியுதவி!

இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள 15 லட்சம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்கவே இந்தத் தொகை தேவைப்படுவதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கணக்கிட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதியில் சுமார் இருநூறு மில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் தொகையை திரட்டிக் கொள்வது மற்றும் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பன தொடர்பில் ஐ.நா தலைமையகத்தில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே இலங்கைக்கு எதிரான இந்த சர்வதேச விசாரணைக்குத் தேவையான பணத்தில் ஒருபகுதியை கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. மேலும் தேவைப்படும் எஞ்சிய பணத்தைத் திரட்டித் தரவும் அந்நாடுகள் முன்வந்துள்ளன. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை அமைப்பது மற்றும் அதன் பொறுப்புகள் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளது.
அதேவேளை, இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த நோர்வே நிதி உதவிகளை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி வழங்குவது குறித்து நவனீதம்பிள்ளையுடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

06 மே 2014

திருகோணமலைக் கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல்!

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் இன்று செவ்வாய் அதிகாலை முதல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். 15 வயதிற்கு மேற்பட்டவர்களை தாங்கள் விசாரிக்கப்போவதாகவும் இதற்கு பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறும் படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்ததன் பின்னர் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத்துறை, ஈச்சிலம்பற்று, புன்னையடி, கல்லடி இலங்கைத்துறை முகத்துவாரம் போன்ற கிராமங்களே சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்,மற்றும் விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
இதேவேளை 15 வயதிற்கு மேற்பட்டவர்களையும் சந்தேகித்திற்கிடமானவர்களையும் படையினர் தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை இலங்கைத்துறை கடற்கரைப் பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று, 2 மகஸின்கள், 78 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

05 மே 2014

இந்தியாவின் நடுநிலமைக்கு கூட்டமைப்பே காரணம்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2012 ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமைக்கு தமிழ் நாட்டில் இடம்பெற்ற பாரிய போராட்டங்கள் தான் காரணம். இதை தெரிந்து கொண்ட சுமந்திரன் தமிழ்நாட்டில் பேசும் போது உங்கள் பிரச்சினையினை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எம்பிரச்சினையினை நாம் பார்த்துக் கொள்கின்றோம் என்று கூறினார்.
இவ்வாறு சுமந்திரன் தமிழ்நாட்டினை வாயை மூடும்படி கூறியதால் தான் இம்முறை தமிழ்நாட்டின் போராட்டங்கள் பலவீனமுற்று காணப்பட்டது. ஆகையால் இந்தியாவின் இந்த முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம்.
சுமந்திரன் ஐ.நா.அமர்வுகள் தொடர்பான பல பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். நாம் சர்வதேச விசாரணையினை கோரவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார். மனித உரிமை மீறல் விசாரணை மட்டும் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பது இலங்கை அரசின் எதிர்பார்ப்பு என்றும் இதற்கு மேலாக போர்க் குற்ற விசாரணையும் இடம்பெறும் என்று சுமந்திரன் கூறுகிறார்.
அமெரிக்கத் தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டே கருத்துக்களை மட்டுப்படுத்தியுள்ளது. மனித உரிமை என்பது வேறு, மனிதாபிமான சட்டம் என்பது வேறு. மனித உரிமை விசாரணை நடக்க வேண்டுமானால் அதில் மனிதாபிமான சட்டத்திற்குள் அடங்காதவை நடத்தப்படவேண்டும். ஆனால் உண்மையில் தமிழருக்கு இடம்பெற்ற அநியாயம் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்குள் வரும் என்று நாம் கூறினோம் தமிழர் தொடர்பில் இத்தீர்மானத்தில் எதுவும் இல்லை என ஒரு சில தரப்பினர் கூறியமையினாலேயே நாம் இதனை எதிர்த்தோம் என்று ஆபிரிக்க நாடுகள் கூறியதாக சுமந்திரன் கூறியிருந்தார்.ஆனால் உண்மையில் நான் அந்நாட்டவர்களுடன் கதைத்த போது, ‘அமெரிக்க கொண்டு வரும் எந்தத் தீர்மானத்தினையும் ஏற்பதில்லை என்றும், அமெரிக்க உள்நாட்டு அரசியலினைக் குழப்பி அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதினாலேயே ஏற்பதில்லையெனத்’ தெரிவித்திருந்தனர்.ஆகவே ஐ.நா.வில் நானும் கலந்துகொண்டேன் என்ற வகையில் மக்களுக்கு உண்மையினை கூறவேண்டிய கடமைகள் எமக்குண்டு. ஆகவே மக்கள் எதை சொன்னாலும் நம்புவார்கள் என்று நினைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பிழையான கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

04 மே 2014

கோபியின் மனைவி உட்பட மூவர் விடுதலை!

இலங்கையில் அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் வெள்ளியன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த நால்வரில் இருவர் பெண்கள். இருவர் ஆண்கள்.
நெடுங்கேணி காட்டுப்பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பொன்றின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரான கோபி என்று இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த கஜீபன் என்பவரின் மனைவி சர்மிளா, கஜீபனின் தாயாருக்கு உதவியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படும் புவனேஸ்வரி ஆகிய இரண்டு பெண்களுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் விடுதலைப் புலிகளை மீளிணையச் செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள் என்றே கோபி என்ற கஜீபன் உள்ளிட்ட மூவரின் மீதும் அரசு குற்றம் சாட்டியிருந்தது.
இவர்களுடன் பேக்கரி உரிமையாளர் எனக் கூறப்படும் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பேக்கரியில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொருவர் விடுதலையாகியுள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கும், விடுதலைப்புலிகளை மீளிணையச் செய்வதற்கும் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் உதவியோடு இலங்கையில் சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக இராணுவம் குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும், அவர்களுக்கு உதவினார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
அவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பூஸா முகாம் உட்பட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டிருப்பவர்கள் உட்பட கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பற்றிய மேலதிக தகவல்களை காவல்துறை பேச்சாளரிடம் உடனடியாகப் பெறமுடியவில்லை.

01 மே 2014

18 நாடுகளில் புலிவேட்டையாம்!

அனைத்துலக ரீதியாக சுமார் 18 நாடுகளுக்கு தமது புலனாய்வு குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் இவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கண்காணிக்கவும் அவர்களை சர்வதேச பொலிசாருடன் சேர்ந்து கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பார்கள் என போர்க்குற்றவாளி கோத்தபாய அறிக்கைவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாம்.. இந்தக் கோரிக்கை விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள நாடுகளிடம் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கோத்தா.