31 ஜூலை 2014

பிரான்சில் தமிழ் இளைஞனின் உடலம் மீ்ட்பு!

பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய ஈழத் தமிழ் இளைஞன் ஒருவருடைய உடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது.
இச்சடலம் 23வயது டைய இராஜதுரை லஜீவன் என அடையாளம் காணபட்டு ள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என அறியப்படுகிறது.

30 ஜூலை 2014

பிரித்தானிய யுவதி மீது கிழக்கில் பாலியல் துஷ்பிரயோகம்!

பிரித்தானியாவைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (29.07.14) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில், உல்லை அறுகம்பை பிரதேசத்திலேயே இந்த துஷ்பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடலில் பல காயங்களுடன் நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் (29.07.14) பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த பிரித்தானியப் பெண், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரவு 7.30 மணியளவில் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

29 ஜூலை 2014

இந்தியா பங்கேற்க கூடாது:வைகோ

இலங்கையில் நடைபெற உள்ள ராணுவ கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவருமே பங்கேற்கக் கூடாது என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி உள்ளார். கொழும்பில் ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4வது சர்வதேச ராணுவ கருத்தரங்கு நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் தாம் கலந்து கொள்ள இருப்பதாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: - தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு, கொழும்புவில் ஆகஸ்ட் 18 முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இராணுவக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கின்றது. - இக்கருத்தங்கில் இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுப்பிரமணியசாமி உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்வர் என்றும் செய்தி வெளியாகி இருக்கின்றது. - இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது. - அண்மையில் சுப்பிரமணிய சாமி, சேஷாத்திரி சாரி உள்ளிட்டவர்கள் சிங்கள அதிபர் இராஜபக்சேவைச் சந்தித்து, இலங்கை அரசுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும், ஐ.நா. மனித உரிமைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. - இந்நிலையில், இலங்கை அரசு நடத்தும் இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு குழுவும் பங்கேற்பது தமிழர்கள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டுவதாகும். - சிங்கப்பூரில் நடந்த ஒரு கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சி வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப்பாளர் சேஷாத்திரி சாரி பேசும்பொழுது, "வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது" என்று குறிப்பிட்டு இருக்கின்றார். - அப்படியானால் இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டதை சர்வ சாதாரணமாக நினைக்கிறாரா? இதுபோன்ற மிகவும் ஆபத்தான நச்சுக் கருத்தை சேஷாத்திரி சாரி தெரிவித்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். - உலகம் தடை செய்து இருக்கின்ற இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியும், குண்டுகளை வீசியும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்து மனிதப் பேரழிவை நடத்திய இராஜபக்சே அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை இங்கிலாந்து சேனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் விசாரணைக்குழுவும் இதனை உறுதி செய்து இருக்கின்றது. - பன்னாட்டு நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்வது, இலங்கை அரசோடு சேர்ந்துகொண்டு நீதியை குழிதோண்டிப் புதைக்கப் போகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. - ஐ.நா. மனித உரிமைகள் குழுவில், இலங்கை அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வற்புறுத்தி வரும் நிலையில், இந்திய இராணுவத் தளபதிகளும், பா.ஜ.க. குழுவும் இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்பது என்பது சகிக்க முடியாத, மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும்.ஏழரைக் கோடித் தமிழர்களின் உணர்வுகளை மதித்துச் செயல்படும் வகையில், இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

27 ஜூலை 2014

சிறீலங்கா ஆணைக்குழு முன்பும் சாட்சியமளிக்க சொல்கைம் தயாராம்!

சிறீலங்கா
அரசாங்கத்தின் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவும் தான் தயார் என்று நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:- என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. எனக்கு தெரிந்தவற்றை எவர் முன்னிலையிலும் தெரிவிப்பதற்கு தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. விசாரணை குழு முன்னிலையில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னர் சொல்கைம் குறிப்பிட்டிருந்தமை முக்கியமானது.

26 ஜூலை 2014

கத்தி படத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

தமிழினப் படுகொலையாளி ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரிப்பில் விஜய் நடிக்கும் கத்தி படத்தை வெளியிடக் கூடாது என விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மனு கொடுத்தனர் மாணவர்கள் அமைப்பினர். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பெரும் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான லைக்கா நிறுவனத்தினர்.விஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மாணவர்கள்!இவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதாகவும், தொழில் ரீதியாக இருவரும் கூட்டாளிகள் என்றும் ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளனர் தமிழ் உணர்வாளர்கள். ஆனால் இந்த எதிர்ப்பினை நடிகர் விஜய்யோ, இயக்குநர் முருகதாசோ கண்டு கொள்ளவில்லை. மாறாக இருவரும் தொடர்ந்து கத்தி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் ரத்தத்தில் வெறியாட்டம் போட்ட கயவர்களின் கூட்டாளிகளுடன் தமிழ் சினிமா உலகம் கைகோர்த்திருப்பதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பு நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைச் சந்தித்து இந்தப் படத்தை தடை செய்யக் கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில், "சிங்கள அரசு தூக்கிப் போடும் எலும்புத் துண்டினைச் சுவைக்கும் சிலர், இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சுமூகமாக வாழ்வது போன்ற மாயையை உலகத்தினர் மத்தியில் ஏற்படுத்த முயன்று வருகின்றனர். அதன் ஒரு பகுதிதான் இந்த கத்தி படமும். தமிழினப் படுகொலையாளிகள் தயாரிக்கும் இந்தப் படத்தைக் கைவிடக் கோரி ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தும் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார்கள். தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மனதை இந்த செயல் புண்படுத்தியுள்ளது. இந்த கத்தி படத்தை எக்காரணம் கொண்டும் வெளியிட வேண்டாம் என்று அனைத்து மாணவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த கோரிக்கைக்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் செவி சாய்க்காவிட்டால், பெரும் போராட்டத்தை நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

பிதிர்க்கடன் தீர்க்க கீரிமலையில் குவிந்தனர் தந்தையை இழந்தோர்!

கீரிமலையில் பிதிர்க்கடன் கழிக்க திரண்டனர் பல்லாயிரம் பேர்!
(கீரிமலை)படம்-மலரும்.கொம்
கீரிமலையில் பிதிர்க்கடன் கழிப்பதற்கு சுமார் பல்லாயிரக்கணக்கானோர் இன்று சனிக்கிழமை திரண்டு பெற்றோர்களுக்கான பிதிர்க் கடன்களைக் கழித்தனர். அதிகாலை முதல் கீரிமலையில் கூடிய மக்கள் கீரிமலை கடற்கரையில் விசேடமாக அமைக்கப்பட்ட பிதிர்க்கடன் சாலைகளில் தானம் கொடுத்து தமது பெற்றோர்களை நினைந்து பிதிர் கடன்களை நிறைவேற்றினர். கீரிமலை கேணியிலும் கடலிலும் புனித நீராடி இன்று பிதிர்க்கடன் தீர்த்தனர்.உலகப்பரப்பெங்கும் பரந்து வாழும் இந்துக்கள் இன்று உபவாசம் இருந்து பிரிந்து விட்ட தமது தந்தையரை நினைந்து பிதிர்க்கடன் நிறைவேற்றுகின்றனர்.

25 ஜூலை 2014

இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே,நான் ஒரு கிறிஸ்தவ இந்து!

"இந்தியா இந்து தேசமாகத்தான் இருக்கிறது.. இந்தியர்கள் அனைவருமே இந்துஸ்தானில் வாழும் இந்துக்களே என்று கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோசா கூறியுள்ளார். கோவா அமைச்சர் தீபக் தவலிகர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியாவை இந்துராஷ்டிரமாக்கி காட்டுவார் என்று கூறியிருந்தார். நாடு முழுவதும் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கோவா துணை முதல்வர் டிசோசாவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டிசோசா, இந்தியா என்பது இந்து தேசமாகத்தான் இருக்கிறது.. இந்து தேசமாகவே இருக்கும். இனிதான் இந்து தேசம் உருவாக்க வேண்டும் என்பதில்லை. இதுதான் இந்துஸ்தான். நான் உட்பட அனைத்து இந்தியர்களும் இந்துக்களே.. நான் ஒரு கிறிஸ்தவ இந்து" என்றார். கோவாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை இன தலைவர்களில் மிகவும் மூத்தவர் டிசோசா என்பது குறிப்பிடத்தக்கது.

24 ஜூலை 2014

மகிந்தவின் வருகை இடைநிறுத்தம் தமிழ் மக்களின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி!

ஒண்றிணைந்த தமிழ்மக்களின் உணர்வுக்கொந்தளிப்பில் சிக்கிட அஞ்சிய சிங்கள இனவெறியன் மகிந்தவின் ஸகொட்லாந்து வருகை நிறுத்தம்.
கிளஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாயத்துக்கான முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை மகிந்த ஏற்க மறுத்துள்ளார்
பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவில் மாபெரும் கொட்டொலிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பொது நலவாய விளையாட்டு ஆரம்ப விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வருகை தர இருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த கவனஈர்ப்புப் போராட்டத்திலேயே பிரித்தானியாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் நேற்று யூலை 23ஆம் நாள் கலந்து கொண்டார்கள்.
பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பேருந்துகளில் ஸ்கொட்லாந்து நோக்கிப் படையெடுத்திருந்தார்கள்.
1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரச பயங்கரவாதத் தமிழின அழிப்பு நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதையும், தமிழ் இனத்தையே கருவோடு அழித்தொழிக்கும் நடவடிக்கையை திட்டமிட்ட வகையில் சிங்கள இனவாத அரச கட்டமைப்பானது தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதையும், உலகநீதிமன்றில் வெளிக்கொண்டு வந்து தங்கள் இலக்கை வெல்லும் வரை சளைக்காமல் செல்வோம் என்னும் உறுதியோடு தொடரும் மக்கள் போராட்டத்தின் தொடராக நேற்றைய போராட்டமும் முன்னெடுக்கப் பட்டிருந்தது.நேற்று யூலை 23 காலையிலிருந்து பெருமளவில் மக்கள் ஒன்றுசேரத்தொடங்கிய மக்கள் மிகுந்த உணர்வெழுச்சியுடன் ஓங்கிக்குரல் எழுப்பத்தொடங்கினர்.
மாலை மணி 4.30 க்கு தமிழீழத்தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தமிழீழத்தேசியக்கொடியை ஏற்றிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழவின் பொறுப்பாளர் ராஜமனோகரன் அவர்களால் மண் மீட்புப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும், கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனையடுத்து 1948ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சிங்கள பௌத்த இனவாத அரசின் கொடுங்கோல் ஆட்சியாளர்களாக இருந்த 6 பிரதமர்களினதும் 5 அரசுத்தலைவர்களினதும் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் விதத்தில் 11 சுடர்கள் ஏற்றப்பட்டன.
இந்தநேரத்தில் அங்கு நிறைந்திருந்த மக்கள் மிகுந்த உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருந்தார்கள் என்பதை ஒவ்வொருவர் முகங்களும் எடுத்துக்காட்டின
மக்களின் கொட்டொலி முழக்கங்கள் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தன
எனினும் நேற்றைய விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைக்க ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ வர இருந்த, பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பொறுப்பைத் தற்போது வகிக்கும் சிங்கள கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சவின் வருகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டப் பேரலையே அவருடைய பயண நிறுத்தத்திற்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் சில கருத்து வெளியிட்டுள்ளன. இந்த சேதி போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்மக்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்துள்ளது.
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத கறுப்புநாள். இனவாத சிங்கள அரசால் தமிழர் கொன்றழிக்கப்பட்ட யூலை 23ஐ தமிழ்மக்கள் கறுப்புநாளாக நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
கறுப்புயூலையின் 31ஆம் ஆண்டினை நினைவுகூரும் இந்த நெருப்பு நாளில் தமிழினத்தை கருவறுக்கும் சிங்கள இனவெறியன் மகிந்த ராஜபக்ஸ வருகை தருவதா என்ற கொதிப்புடன் பெருந்தொகையான மக்கள் இந்த கொட்டொலிப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் கலந்து கொண்டு கொட்டொலிகளை எழுப்பிய மக்களின் குரல்களில் அவர்களின் ஆத்திரமும், ஆவேசமும் பலமாக வெளிப்பட்டது.
இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ஸவின் இந்த பின்வாங்கல் மேலும் மேலும் தமிழ்மக்களுக்கு உறுதியையும்,உத்வேகத்தையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பொதுநலவாயநாடுகளின் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களும், பார்வையாளர்களுமென அலைஅலையாக சென்று கொண்டிருந்த உலகநாடுகளின் மக்களின் கவனத்தையும், சர்வதேசஊடகங்களின் கவனத்தையும், தமிழ்மக்களின் இந்த உணர்வுமயமான போராட்டம் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

23 ஜூலை 2014

யாழ்,பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!

பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!யாழ்,பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது. நெல்லியடிப் பகுதியில் வசிக்கும் நாகராசா சுதாகரன் (வயது 21) என்ற மாணவனே இவ்வாறு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. விடிகாலை 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் "மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்" என்று அவர் பதிவிட்டுள்ளாராம். விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.யாழ்,பல்கலை மாணவர்களின் தொடர் மரணங்கள் தமிழ் சமூகத்திற்கே பேரிடியாய் அமைந்துள்ளது.மரணங்களின் மர்மங்கள்தான் துலங்காமல் இருக்கின்றது.

22 ஜூலை 2014

"போர்க்குற்றவாளி கோத்தபாயவே"சாட்சியமளிக்க தயார்-படையதிகாரி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்ட தனிநபரின் பாவத்திற்காக, அவரை காப்பாற்றுவதற்காக படையினரும் முழுநாடும் பலியாக முடியாது என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரே அந்த பாவங்களுக்கு காரணமானவர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ள அந்த அதிகாரி, இலங்கை இராணுவத்திலேயே தொடர்ந்து பணிபுரிவதால் தனது பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்தவில்லை.
உயர்மட்ட உடன்படிக்கையின் படி நடேசனும், புலித்தேவனும் சரணடைந்தனர், அவர்களை என்ன செய்வது என படையினர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டனர்,- மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா அவர்களை கொன்றுவிடுமாறு கோத்தபாஜ ராஜபக்சவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்தார். அவர்களை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார். அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.சனல் 4 வெளியிட்ட வீடியோக்களில் காண்பிக்கப்பட்டது போன்று கோத்தபாய ராஜபக்சவின் உதத்ரவின் கீழ், சரணடைந்த நூற்றுக் கணக்கானவர்கள் வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா முன்னரங்க நிலைகளுக்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரி கிறிஸாந்த சில்வாவிடம் சரணடைந்த நூற்றுக் கணக்கானவர்கள், புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வேளை அந்த இராணுவ அதிகாரி வன்னி கட்டளை தளபதியாக இருந்த முன்னால் இராணுவத் தளபதி ஜகத் டயசின் உத்தரவை பின்பற்றினார். அவருக்கு கோத்தபாஜ ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார். (இதன் பின்னர் கிறிஸாந்த சில்வா ரஷ்சிய தூதரகத்திற்கு நியமிக்கப்பட்டார்.)என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கட்டளைத் தளபதி யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதை ஏற்றுக் கொண்டார். ஆனால் சரணடைந்த மக்கள் குறித்து பெருமளவு இராணுவத்தினர் மனிதாபிமானத்துடனேயே நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். கோத்தாவின் முட்டாள் தனமான பிடிவாதத்தால் தான் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றன ஆகவே அவர்தான் இதற்கு பொறப்பு கூற வேண்டும் முழு இராணுவத்தினரும் அல்ல என்றும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
விசாரணைக் குழு முன் சாட்சியமளிக்கப் போகிறீர்களா என்ற எமது கேள்விக்கு ஆம் என பதிலளித்த அந்த அதிகாரி இல்லாவிட்டால் முழுப் படையினருடைய கௌரவமும் பாதிக்கப்படும் என்றார்.அவருடனான பேட்டி கீழ் வருமாறு.
கேள்வி: அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தார்களா?
பதில்: ஆம். அவர்கள் அப்படித்தான் சரணடைய வந்தார்கள். அவர்களை கொல்லுமாறு உத்தரவிடப்பட்டது. அவர்கள் மேலிடங்களின் இணக்கப்பாட்டுடனேயே தாங்கள் வந்துள்ளதாக மன்றாடினர்.
கேள்வி: யார் இவ்வாறு மன்றாடியது?
பதில்: புலித்தேவனும் நடேசனும் தான். அவர்கள் கால்களில் வீழ்ந்து மன்றாடினார்கள். இவ்வாறான தருணங்களில் ஒருவரை சுடக் கூடாது என படையினருக்குத் தெரியும். அவர்களுக்கு அவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்களால் இது முடியாது முடியாது என்றார்கள். ஆனால் இல்லை இல்லை எவரையும் பொறுப்பேற்கக் கூடாது சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவு வழங்கப்பட்டது.
கேள்வி: யார் அதை தெரிவித்தது?
பதில்: சவிந்திர சில்வாவே அந்த உயர்மட்ட உத்தரவை வழங்கினார். படையினர் அவர்கள் அழும் போது தங்களால் எதனையும் செய்ய முடியாது எனத் தெரிவித்தனர். உண்மையில் அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். புலித்தேவன் அவர்களது அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்.அவர்களுடன் சரணடைந்த பெண்மணி இன்னும் இருக்கிறார். முட்டாள் தனமான பிடிவாதத்தின் காரணமாக சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு இதனைச் செய்ததே பெரும் தவறு. மாற்று சட்ட நடவடிக்கைகள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து கோத்தபாய சிறிதும் சிந்திக்கவில்லை. சரணடைபவர்களை கொலை செய்யும் நாகரிக நாடு எதுவும் இருக்க முடியாது. இதன் காரணமாக இந்தக் குற்றத்திற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.
யுத்தத்தில் நாங்கள் ஈடுபட்டிருந்த வேளை எதிரிகளை கைது செய்துள்ளோம். அவர்களை நாங்கள் சுட்டுக் கொண்றது கிடையாது. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவில்லையா? படையினருக்கு அவ்வாறு தெரியும். அவர்கள் சுடமாட்டார்கள். உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வரும் போதே இந்தத் தவறைச் செய்வார்கள்.
இவ்வாறு சரணடைந்தவர்கள் பலர் முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்களில் பலர் தனியாக இனம் காணப்பட்டு பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள். இதையே சனல்4 வீடியோ காண்பிக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அவ்வேளை வன்னி கட்டளை தளபதியாக இருந்த முன்னாள் இராணுவ தளபதி அவருக்கு கிடைத்த உத்தரவை தொடர்ந்து புலனாய்வு பிரிவினருக்கு இந்த உத்தரவை வழங்கினார். 
கேள்வி: யார் அது எந்த முகாம்?
பதில்: முள்ளிவாய்க்காலிருந்து வருபவர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களுடன் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம் அது.-வவுனியாவில்- கிறிஸாந்த சில்வா அந்த முகாம் பொறுப்பதிகாரியாக விளங்கினார்- அவர் தற்போது ரஷ்சியாவிற்கான துணை தூதுவர்.
கேள்வி: FMA என்பதன் அர்த்தம் என்ன?
பதில்: முன்னரங்கு பராமரிப்பு பகுதி என்பது இதன் அர்;த்தம்.கைதிகள் இங்கு கொண்டுவரப்படுவார்கள், யுத்தக் கைதிகளுக்கான முகாம்கள் இங்குள்ளன. எவராது இங்கு சரணடைந்தால் அவர்களிற்கு ஒரு இலக்கத்தை வழங்கி சட்ட விசாரணை முடியும் வரை அவர்களை பாதுகாக்க வேண்டும்-அவர்களை சுட்டுக்கொல்ல முடியாது.
கேள்வி: கிறிஸாந்த சில்வாவிற்கு உத்தரவுகளை வழங்கியது யார்?
பதில்: கோத்தபாயவின் பேரில் அப்போதைய வன்னி கட்டளை தளபதியாக விளங்கிய முன்னால் இராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய இந்த உத்தரவை வழங்கினார். அவர்களை விடுதலை செய்து இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கிறிஸாந்த சில்வாவிற்கு உத்தரவுகளை வழங்கினார். நூற்றுக்கணக்கானவாகள் கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
கேள்வி: அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனரா?பதில்: ஆம். ஏனையவர்களுடன் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் இறந்தனர். இது ஒரு சபிக்கப்பட்ட விடயம், வழக்கு. இது ஒரு சாதாரண விடயம் அல்ல. பொன்சேகாவும் இதற்கு அனுமதியளித்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் அதற்கு அனுமதி அளித்திருந்தால் அவரும் பொறுப்புக் கூற வேண்டும். அவர் அங்கு இருந்தாரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் யுத்தத்தில் சரணடைந்த எவரும் சுட்டுக் கொல்லப்படடக் கூடாது.
கேள்வி: இந்த விடயங்களை மனித உரிமை ஆணைக் குழு முன் அம்பலப்படுத்த நீங்கள் தயாரா?
பதில்: ஆம்.
கேள்வி: அப்படியானால் நீங்கள் துரோகி இல்லையா?
பதில்: எப்படிச் சொல்ல முடியும். நாங்கள் தானே யுத்தத்தில் முழுமையாக ஈடுபட்டவர்கள். யுத்தத்தில் எந்தக் கட்டத்திலும் நாங்கள் தப்பி ஓடவில்லை. இரண்டு தடவை எனக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் ஏற்பட்டன. முட்டாள் தனமான பிடிவாதத்தால் தனியொருவர் செய்த குற்றங்களுக்காக நாட்டையும் முழுப் படையினரையும் பலியாக்க வேண்டுமா? அந்த தனி நபரை காப்பாற்றுவதற்காக.
உரிய சாட்சியங்களை முன் வைக்காவிட்டால் பாதிப்புகளை சந்திக்கப் போவது முழு நாடும் மக்களும் தான்.
கேள்வி: யார் அந்த தனி நபர்? உங்களுக்கு தெரியுமா?
பதில்: கோத்தபாய ராஜபக்ச.

மாணவியை கடத்திச்சென்றது வெள்ளைவான் கும்பல்!

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் சிலாபத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருக்கிறார். பாடசாலை முடிந்தபின் தன்னுடனும் மற்றுமொரு மாணவியுடனும் வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தபோது இனந்தெரியாத சிலரால் தனது மகள் கடத்தப்பட்டார் என அந்த மாணவியின் தந்தை சிலாபம் பொலிஸில் நேற்றிரவு முறைப்பாடு செய்துள்ளார். கடத்தியவர்கள் பற்றியோ கடத்தப்பட்ட மாணவி பற்றியோ இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், அவர்களைத் தேடிப்பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

21 ஜூலை 2014

இந்தியாவும் ஐ.நா.விசாரணையாளர்களை அனுமதிக்காதாம்!

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஐந்து நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
குறித்த விசாரணைக் குழுவினர் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா அனுமதி கோரிய போதிலும், இந்தியா அதற்கு அனுமதியளிக்கவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
மூன்று நிபுணர்கள் மற்றும் 13 பிரதிநிதிகளுடன் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு இலங்கை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்,இந்தியா ஏற்கனவே குறித்த விசாரணைக் குழுவிற்கு வீசா வழங்க மறுத்துள்ள நிலையில், ஏனைய அண்டை நாடுகளும் அதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் இதேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்
இலங்கைக்கு அருகாமையில் உள்ள நாடொன்றிலிருந்து விசாரணைகளை நடாத்தவே ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினர் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானும் தனது இலங்கை தொடர்பிலான விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாவும் 
முதல் தடவையாக சார்க் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

20 ஜூலை 2014

மூன்று நாடுகளில் இருந்து ஐ.நா.விசாரணை!

இலங்கை தொடர்பிலான விசாரணைகள் மூன்று நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறுவப்பட்டுள்ள விசாரணைக் குழுவினர் மூன்று நாடுகளிலிருந்து விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.
நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.
இலங்கையில் விசாரணை நடாத்துவதற்கு அனுமதி கோரப்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் தகலவ்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச விசாரணைக்குழுவினர் இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதியளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கத் திட்ட வட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடாது என இலங்கையில் எவ்வித சட்டங்களும் கிடையாது என்ற போதிலும், சாட்சிமளிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில் சாட்சியாளர்களின் பெயர் விபரங்கள் இருபது ஆண்டுகளுக்கு இரகசியமாக பேணப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

19 ஜூலை 2014

ஐ.நாவும் எம்மை புறக்கணிக்கிறது என வடக்கு முதல்வர் விசனம்!

இலங்கையில் உள்ள ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றில் வட மாகாணசபையை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணசபையின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் அரசாங்க தரப்பினர் முடக்கி வருகின்ற சூழ்நிலையில், ஐநா பிரதிநிதியும் தம்மை புறக்கணித்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன்விழாவையொட்டி சனிக்கிழமை இடம்பெற்ற மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
வடமாகாண சபைக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துச் செல்வதைக் குறித்துக்காட்டுவதாக அவருடைய இந்த உரை அமைந்திருக்கின்றது.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் மூலமாக தமது மாகாணசபை உறுப்பினர்கள் பதவிக்கு வந்துள்ள போதிலும், அந்தச் சட்டம் தோல்வியடைந்த சட்டமாகவே இருக்கின்றது என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
வடமாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் இராணுவ பின்புலத்தைக் கொண்டுள்ள வடமாகாண ஆளுனர் ஆகியோருக்குப் பதிலாகப் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் உறுதியத்திருந்த போதிலும், அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அவர் மீண்டும் இங்கு வலியுறுத்தி கூறியுள்ளார்.
இதன்போதே, ஐநா நிறுவனமும் கூட வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்பட்டிருப்பதாக அவர் அதிருப்தியோடு கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

சம்ஸ்கிருத வாரம் தமிழக முதல்வரும் எதிர்ப்பு!

பழமையான தமிழ் மொழியின் அடிப்படையில், வளமான கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் அதிகாரபூர்வமாக சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் பதிமூன்றாம் தேதிவரை, சமஸ்கிருத வாரத்தை எல்லா மாநிலங்களிலும் கொண்டாட வேண்டுமென மத்தியப் பள்ளிக் கல்வித் துறையின் செயலர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் தீவிரமான சமூக நீதி இயக்கமும் மொழி இயக்கமும் நடைபெற்றுள்ளது. ஆகவே அதிகாரபூர்வமாக சமஸ்கிருத வாரத்தை தமிழகத்தில் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் மொழிப் பாரம்பரியத்தின் அடிப்படையில், செம்மொழி வாரம் கொண்டாடுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். அந்தந்த மாநிலங்களின் மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்ப, கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் வகையில், இந்தக் கடிதத்தை மாற்றும்படி இந்திய அரசின் அதிகாரிகளை நீங்கள் அறிவுறுத்த வேண்டுமென கோருகிறேன்.
நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தின் கலாச்சார, மொழி உணர்வுகளுக்கு இதுவே பொருத்தமானதாக இருக்கும்” என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

18 ஜூலை 2014

இலங்கையில் 15 நாட்கள் விசாரணை! ஐ.நா.அறிவிப்பு!

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவின் நான்கு விசாரணையாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவும், 15 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விசாரணையாளர்களுக்கு மேலதிகமாக இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விசாரணையில் பங்கெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் இலங்கை வரவுள்ள நான்கு விசாரணையாளர்களும் 15 நாட்கள் இலங்கையில் கள நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களிடம் நேர்காணல்களையும் செய்யவுள்ளனர்.
அந்த வகையில் மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவானது விரைவில் விசாரணை செயற்பாட்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு விசாரணையாளர் 10 மாத காலத்தில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த கண்காணிப்பையும் ஆவணப்படுத்தலையும் முன்னெடுக்கவுள்ளார்.
மேலும் அந்தவ­கையில் விசாரணை செயற்பாடுகள் பிரயாணங்கள் ஆவணப்படுத்தல் உள்ளிட்ட செலவுகளுக்காக 14,609,00 டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விசாரணையாளர்களின் பிரயாணச் செலவுக்காக 111,700 டொலர்­களும் விசேட நிபுணர்களின் பிரயாணச் செலவுக்கு 84,000 டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலோசகர்களுக்கான செலவாக 49,600 டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
.எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் விசாரணை செயற்பாட்டின் எந்தவொரு நகர்வையும் ஏற்கப்போவதுமில்லை என்றும் விசாரணை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படவும் மாட்டாது என்றும் அரசாங்கத் தரப்பில் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகின்றது.
2014 ம் ஆண்டு ஜூன் 15 ம் திகதி முதல் 2015 ம் ஆண்டு ஏப்ரல் 15 ம் திகதி வரையான காலப்பகுதியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செயற்பாட்டு காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதியாகும் போது விசாரணைக் குழுவின் முழுமையான அறிக்கை தயார் செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்படுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

17 ஜூலை 2014

சின்னமடுப்பகுதியில் கைக்குழந்தையுடன் சென்ற தாயை உதைத்து தள்ளிய காட்டுமிராண்டிகள்!

ஊர்காவற்றுறை பகுதியில் கைக்குழந்தையுடன் வீதியால் சென்ற வாய்பேசமுடியாத பெண் உந்துருளியில் சென்றவர்களினால் காலால் உதைத்து வீழ்த்தப்பட்டார்.
இதில் அவரும் அவரது குழந்தையும் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை சின்னமடுப் பகுதியில் இடம்பெற்றது.
இது குறித்துத் தெரியவருவதாவது:- சம்பவ தினம் வீதியால் கைக்குழந்தையுடன் நடந்து வந்த வாய்பேசமுடியாத பெண்ணை மதுபோதையில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்து வந்த ஊர்காவற்றுறையில் அரச அலுவலகம் ஒன்றில் சிற்றூழியராகப் பணியாற்றும் ஒருவர் காலால் உதைத்து வீழ்த்தியுள்ளார்.
இவர் கடமை நேரத்தில் இருக்கும் போது இந்தச் செயலைப் புரிந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொலைவில் இருந்து அவதானித்த போக்குவரத்துப் பொலிஸார் அவர்களைத் துரத்திச் சென்றபோதும் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பொலிசார் காயமடைந்த பெண்ணையும் குழந்தையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தில் சுதர்சினி (வயது 36) என்ற பெண்ணே காயமடைந்தவராவார்.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடிவரும் தேடிவரும் சமயத்தில் ஊர்காவற்றுறை காவல் நிலையத்துக்குச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யாமல் சமசரசமாகப் போகும்படி கூறியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்டவரை பொலிஸ் நிலையத்துக்கு கூட்டிவரும்படி கோரியுள்ளார். சம்பந்தப்பட்டவர் காவல் நிலையம் வரவே அவரைக் கைதுசெய்து காவலில் வைத்தனர். மறுநாள் 16ஆம் திகதி அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிவான் 18ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதேவேளை, வழக்கு விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் காயமடைந்த பெண்ணின் வீட்டுச் சென்ற மேற்படி குழுவின்
பிரதிநிதிகள் இந்த விடயத்தை பெரிதுபடுத்தாமல் சமரசமாகப் போகும்படியும் நீதிமன்றுக்கு சாட்சியமளிக்க செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தினர் எனக் கூறப்பட்டது.

காலம்சென்ற பாதிரியாரை புனிதராக போப் அறிவிக்கவேண்டும்-மன்னார் ஆயர்

அடுத்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள போப் பிரான்சிஸ், போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இதற்கான ஒரு கோரிக்கை வடகிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்பால் போப்பிடம் வைக்கப்பட்டுள்ளதை, பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்.
போப் பிரான்சிஸின் பயணத்தின்போது, மடுமாதா தேவாலயத்தில் காலஞ்சென்ற ஒரு கத்தோலிக்க பாதிரியாரைப் புனிதராக அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க வேண்டும், இவை இரண்டும் இல்லையென்றால், அவரது வருகையானது காலத்துக்கு முதிர்ச்சி அடையாததாகத்தான் இருக்கும் எனவும் ஆயர் ராயப்பு ஜோசப் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ் தமது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார் என்று தாங்கள் நம்புவதாகக் கூறும், மன்னார் ஆயர், தமது கோரிக்கை அவரது பிரதிநிதி மூலம் ரோமுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.மன்னார் மாவாட்டம் மடுப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை போப் சந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில், இறைவனிடம் அவர்களின் விடுதலைக்காக, மகிழ்ச்சிக்காக, சுதந்திரத்துக்காக மக்களுடன் சேர்ந்து அவர் அங்கு ஜெபிக்க வேண்டும் என்று தமது தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயர் ராயப்பு ஜோசப் கூறுகிறார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காவும், அவர்களது உரிமகளுக்காகவுமே, நீதியையும் உண்மையையும் அடிப்படையாகக் கொண்டே அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவர் மாதம் 13 ஆம் தேதி இலங்கை வரும் போப் பிரான்சிஸ், கொழும்பு மற்றும் மன்னார் பகுதியில் திருப்பலி மற்றும் ஜெபக் கூட்டங்களில் கலந்துகொண்ட பிறகு, 15 ஆம் தேதி காலை பிலிப்பைன்ஸ் செல்கிறார். அவர் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் வாய்ப்பு இல்லை என்றும் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

நன்றி:பி.பி.சி

16 ஜூலை 2014

குளிப்பதை பார்த்ததாக கூறி கள் இறக்கும் தொழிலாளி மீது தாக்குதல்!

சங்கானைப் பகுதியில் கனடாவில் இருந்து விடுமுறையில் வந்து தங்கி நின்ற குடும்பப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது ஒரு நபர் அயல் பகுதிக் காணியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் இருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அலறியுள்ளார்.
சங்கானைப் பகுதியில் பெண் யுவதி ஒருவர் குளிப்பதைப் பார்த்ததாகத் தெரிவித்து கள் இறக்கும் தொழிலாளி கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இவரது சைக்கிளும் அடித்து நொருக்கப் பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த வீட்டில் நின்ற உறவினர்கள் அந் நபரை கீழே இறக்கி கடுமையாகத் தாக்கி கட்டி வைத்திருந்துள்ளனர். தான் கள் இறக்கும் தொழிலாளி என்றும் தென்னை மரத்தில் ஏறி கள் இறக்கிக் கொண்டிருந்த போதே பெண் கத்தியதாகவும் இவர் தெரிவித்தும் அதைக் கேளாது குறித்த நபரைத் தாக்கி யுள்ளனர். அத்துடன் அவரது சைக்கிளும் அடித்து நொருக்கப்பட்டது.
அதன் பின்னர் குறித்த நபரைப் காவல்துறையிடம் கொடுப்பதற்கு எத்தனித்த போது குறித்த பெண்ணின் அயல் வீட்டில் இருந்தவர்கள் அந்த நபர் வழமையாக அங்கு வந்து கள் இறக்குவதாகத் தெரிவித்தும் அவரது நடவடிக்கை தவறானதாக இவ்வளவு காலமும் இருந்ததில்லை எனத் தெரிவித்ததால் எச்சரிக்கை செய்ய ப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த கள் இறக்கும் தொழிலாளியின் சகோதரிகள் இருவர் அங்கு வந்து வெளிநாட்டில் இருந்து வந்த குடும்பத்துடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அதையும் அயலவர்கள் தடுத்து நிறுத்தி அடித்து நொருக்கப்பட்ட சைக்கிளுக்கு அதைத் திருத்துவதற்கான பணத்தையும் பெற்றுக் கொடுத்ததாகத் தெரியவருகின்றது.

15 ஜூலை 2014

காங்கிரஷ் செய்ததைத்தான் மோடி அரசும் செய்கிறது!

ஈழத்தமிழர் பிரச்னை விடயத்தில் காங்கிரஸ் ஆட்சியில் என்ன நிலைப்பாடு இருந்ததோ, அதே நிலைப்பாடுதான் தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள மோடி அரசிடமும் உள்ளது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன். கரூரில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு:- 'இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை அமைத்த விசாரணை குழுவை இலங்கை அரசு மறுத்து விட்டது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்திய மத்திய அரசு, ஐ.நா. மனித உரிமை குழு தேவையற்றது என்ற நிலையில் உள்ளது. மத்திய அரசின் இந்த போக்கு உலக தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிற்கு சொந்தமான ஒரு தீவை, வேறு ஒரு நாட்டிற்கு வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

14 ஜூலை 2014

காரைநகரில் கொலையிலிருந்து காப்பாற்றப்பட்ட இளைஞன்!

தமது நண்பனான ஒருவரை திட்டமிட்ட முறையில் கொலை செய்வதற்கு முயன்ற இருவா் வட்டுக் கோட்டைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டனா். கசூரினாக் கடற்கரையில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் அங்குள்ளவா்களைப் பரபரப்புக்குள்ளாக்கியது.
தமது நண்பனான இளைஞா் ஒருவருக்கு மதுவை நன்றாக குடிக்கக் கொடுத்து அவன் போதையில் இருக்கும் போது கடலில் அழுத்திக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனா் நான்கு நண்பா்கள். இத் திட்டமிடலை நன்றாகச் செயற்படுத்தி அவனை குறித்த நால்வரும் கடலுக்குள் அமுக்கிக் கொண்டிருந்த போது அங்கு நின்ற பொதுமக்கள் கண்டு கூக்குரல் இட்டு கத்தியபோது அப்பகுதியில் நின்ற மீனவா்கள் சிலா் குறித்த இடத்திற்கு விரைந்து சென்று மூழ்கிக் கொண்டிருந்திருந்த நண்பனைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தனா். குறித்த நான்கு பேரையும் பொதுமக்கள் பிடிக்கத் துரத்திய போது அவா்களில் இருவா் பிடிக்கப்பட்டனா். மற்றைய இருவரும் ஓடிவிட்டதாகத் தெரியவருகின்றது.
இவா்களை அங்கு வந்த வட்டுக்கோட்டைப் பொலிசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனா். இது தொடா்பாக வட்டுக் கோட்டைப் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா் என குறிப்பிடப்படுகிறது.குறித்த நான்கு பேரும் கொக்குவில் பகுதியைச் சோ்ந்தவா்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

13 ஜூலை 2014

மகிந்தவே 2022வரை ஜனாதிபதி என்கிறார் ஹெகலிய!

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்த உடன் மக்களிடம் சென்று 2022ம் ஆண்டு வரை நாட்டை எழுதி எடுத்து கொள்ளுங்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே 2022 ம் ஆண்டு இந்த நாட்டின் ஜனாதிபதி என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொள்ள சூட்சுமமான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
200க்கும் அதிகமான இணையத்தளங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நடவடிக்கை தற்பொழுது செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க சந்தை சந்தையாக சென்றாலும் அவருடன் மக்கள் இல்லை. இதனால் அரசாங்கத்தின் மீது சேறுபூசி வருகின்றனர்.
200க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் தினமும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடுகின்றன.
மக்கள் இருக்கும் சகல இடங்களுக்கும் தமது பிரதிநிதிகளை அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறது.
ஜே.வி.பியும் இதற்கு பங்களிப்பு செய்கிறது. இவற்றுக்கு பதிலளிக்க எமக்கு அறிவு இருப்பதாக நம்புகிறோம்.
போரில் வென்றாலும் போர் வெற்றியின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி வருகின்றனர். போரில் வென்றதன் பிரதிபலன்களை நாம் அனுபவித்து வருகின்றோம் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கண்டி கட்டுகஸ்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊவா மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்திய பின்னர், எந்த தேர்தலையாவது நடத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்த உடன் மக்களிடம் சென்று 2022ம் ஆண்டு வரை நாட்டை எழுதி எடுத்து கொள்ளுங்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே 2022 ம் ஆண்டு வரை இந்த நாட்டின் ஜனாதிபதி எனவும் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

12 ஜூலை 2014

வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் படுகாயம்!

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் கிராமத்தருகே விறகு எடுக்கச் சென்ற இரு தாய்மார்கள் வெடிவிபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 5.30மணியளவில் விறகு எடுப்பதற்காக ஆனந்தபுரம் 5ம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஐவர் மந்துவில் பகுதிக்கு சமீபமாக உள்ள சிறிய காட்டுப் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர்.
அங்கு விறகு வெட்டும்போது அவர்கள் பயன்படுத்திய கோடரி ஒன்று வெடிபொருள் ஒன்றில் பட்டதும் அது வெடித்துச் சிதறியிருக்கின்றது.
சம்பவத்தில் ஆறு பிள்ளைகளின் தாயாரான சீவரத்தினம் அம்பிகா (வயது 50) மற்றும் மூன்று பிள்ளைகளின் தாயரான பிரியதர்சினி (வயது 24) ஆகியோரே படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில்
அவர்களில் அம்பிகா என்ற பெண் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.

11 ஜூலை 2014

நயினை நாகபூஷணி அம்பாள் தேர் இன்று!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. 16 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. நாளை 12ஆம் திகதி தீர்த்தத் திருவிழா இடம்பெறும். இன்றைய தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளிள் அருளாசியைப் பெற்றனர். நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் நயினை நாகபூஷணி அம்மனைத் தரிசிக்க அடியார்கள் திரண்டிருந்தனர். பக்தர்களின் போக்குவரத்து வசதி கருதி விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

10 ஜூலை 2014

ஆசிரியருக்கு காதல்வலை வீசும் மாணவி!

யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றி்ல் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளாா் உயா்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி. குறித்த ஆசிரியா் க.பொ.த சாதாரண தரத்தின் கீ்ழ் உள்ள மாணவா்களுக்கு கல்வி கற்பித்து வருவதாகவும் வன்னிப் பகுதியில் இருந்து அண்மையில் இடமாற்றம் பெற்று அப் பாடசாலையில் கல்வி கற்பித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.
மாணவ தலைவா்களில் ஒருவராக உள்ள குறித்த மாணவி இவ் ஆசிரியாிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுள்ளாா். எதற்காக எனக் கேட்ட போது ஆசிரியா் ஒருவரைப் பற்றி சொல்வதற்கு எனக் கேட்டு வாங்கி தனது இலக்கத்தையும் கொடுத்ததாகத் தெரியவருகின்றது. அதன் பின்னா் ஆசிரியருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தனது காதலைத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவ் ஆசிரியா் உடனடியாகவே மாணவிக்கு தொடா்பு எடுத்து ஏசிய போது தன்னைக் காதலிக்கா விட்டால் தற்கொலை செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளாா். இச் சம்பவம் தொடா்பாக அதிபருடன் கலந்தாலோசித்த ஆசிரியா் குறித்த மாணவியின் வீட்டுக்கு அதிபருடன் சென்று மாணவியின் நிலையைச் சொல்லியுள்ளதாகத் தெரியவருகின்றது, தற்போது குறித்த மாணவி பாடசாலை வராது வீட்டில் நிற்பதாகவும் தனது நண்பிகளிடம் குறித்த ஆரிசியா் தன்னைக் காதலிப்பதாக தவறான முறையில் எஸ்.எம்.எஸ் அனுப்பி வருவதாகவும் தெரியவருகின்றது. இந்த விடயத்தால் அப்பாடசாலையின் குறிப்பிட்ட சில வகுப்புக்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

09 ஜூலை 2014

பாதுகாப்புசபைக்கு நியமிக்கப்படுகிறார் மிசேல் சிசன்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன் ஐ.நா பாதுகாப்பு சபைக்கான அமெரிக்காவின் உதவி பிரதிநிதியாக நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்த முடிவு தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிசனை பாதுகாப்பு சபைக்கு நியமிக்க ஒபாமா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிச்சேல் சிசன் தற்போது அமெரிக்காவின் வெளியுறவு சேவை உறுப்பினராகவும் இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமான தூதுவராகவும் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

08 ஜூலை 2014

திருமாவளவனை நம்பி என் வாழ்க்கையைத் தொலைத்தேன்-இளம்பெண் புகார்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனை நம்பி என் வாழ்க்கையைத் தொலைத்தேன். இப்போது என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர் என்று டிஜிபி ராமானுஜத்திடம் இளம்பெண் புகார் கொடுத்திருக்கிறார். கோவை மாவட்டம் கணபதியைச் சேர்ந்தவர் கவிதா (34). இவர் டிஜிபி ராமானுஜத்தை திங்கள்கிழமை மாலை சென்னையில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். அவரை நம்பி எனது கணவரை விவாகரத்து செய்தேன். இந்நிலையில், சாதியை காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தேன். திருமாவளவன் என்னுடன் தொடர்பில் இருந்த நேரத்தில் எனக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்தை ஜெயந்தி, கார்த்திக் ஆகியோருக்கு அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தேன்.ஜெயந்தியும், கார்த்திக்கும் நகைக்கடை நடத்துவதாகவும், தற்போது பணத்துக்கு பிரச்சினை இருப்பதால், சில நாட்கள் கழித்து முழு தொகையையும் கொடுப்பதாகவும் கூறினர். இதை நம்பி நானும் எழுதி கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் என்னை மிரட்டுகின்றனர்.திருமாவளவன் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு இரு நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து என்னை சந்தித்தார். அப்போது, ‘திருமாவளவனுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொத்துக்கான முழு தொகையையும் பெற்றுக் கொண்டேன்' என்று எழுதிக் கொடுக்கும்படி மிரட்டினார். இதற்கு மறுத்ததால் என்னையும், எனது 4 வயது பெண் குழந்தை யையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.மேலும் ஜெயந்தி, கார்த்திக், சந்துரு, விஜயகுமார், ரேகா, சீனிவாசன் ஆகியோரும் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். திருமாவளவனை நம்பி எனது குடும்பத்தை இழந்துவிட்டேன். அவரது கட்சியினரை நம்பி எனது சொத்துக்களை இழந்துவிட்டேன். இப்போது என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.எனவே, எனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக வன்னியரசு கூறியதாவது: எங்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் பொய்யானது. மனநலம் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெண் இப்படி பேசுகிறார். கடந்த ஆண்டுகூட இது போன்ற பொய்ப் புகாரை அளித்திருந்தார். அதில் உண்மை இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.அந்தப் பெண்ணுக்கும் தலைவருக்கும் (திருமாவளவன்) பெரிய அளவில் பரிச்சயம் இல்லை. ஒரு விழாவில் ஒரேயொரு முறை அவரைப் பார்த்திருக்கிறார். அந்த பெண் ஒருவருக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துவிட்டார். அதற்கு இப்போது கூடுதல் தொகை கேட்டு வருகிறார் என்று வன்னியரசு கூறியுள்ளார்.

நாடு கடத்தப்பட்டவர்கள் பூசாவில்!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று மீண்டும் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 41 புகலிடக் கோரிக்கையாளர்களும் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார். கடற்படையினரின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் 'சமுத்ரா' அவர்களை காலித்துறைமுகத்துக்கு அழைத்து வந்தது. மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் குற்றவிசாரணை பிரிவினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து 41 புகலிடக் கோரிக்கையாளர்களும் அவுஸ்ரேலிய கடற்படையினரால் இலங்கை கடற்படையினரிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 24பேர் பெண்களாவர். அத்துடன் 9 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்கள் தற்போது பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட ஆண்கள் வேறொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று 41 பேரும் காலி நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்படவுள்ளனர். இதன்போது சிறுவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

07 ஜூலை 2014

ஆட்களைப் பார்த்து உதவும் டக்ளஸ்!

கடந்த காலங்களில் என்னிடம் வந்து யார் அழுதாலும் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இன்றி உதவினேன். இப்போது நான் அப்படியில்லை. அவர்களைப்பற்றிச் சரியாக ஆராய்ந்த பின்னரே உதவும் நிலைக்கு மக்கள் என்னை மாற்றிவிட்டார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ். மாவட்டப் பாரவூர்திச் சங்கத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு கோண்டாவிலில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் யாழ். மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்படும் மணலை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். இந்தத் திட்டம் இன்னும் ஒரு வார காலத்தினுள் நடைமுறைக்குவரும். இதன்மூலம் பாரவூர்தி உரிமையாளர்களுக்கு தொழில் வாய்ப்புச் சீராகக் கிடைக்கும். இதனைவிட யாழ். மாவட்டத்துக்கு திருகோணமலையில் இருந்து கப்பல் மூலம் சீமெந்து இறக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தின் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு உப்பு உற்பத்தி ஆரம்பித்ததும் பாரவூர்தி உரிமையாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக் கிட்டும். இவை எல்லாம் ஒருசேரக் கிடைக்க நீங்கள் முதலில் எனக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும். வேறு அரசியல்வாதிகளிடம் சென்று ஏமாராமல் என்னை அணுகி உங்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுங்கள். நான் யாரையும் பழிவாங்குபவன் அல்லன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக்கூட நான் பழிவாங்க முயற்சிக்க வில்லை. அவரின்மேல் எனக்குக் கோபம் இருந்தது. ஏன் என்றால் அவர் எனது தம்பியை கொன்றார். நான் யாரையும் அழிக்க - இரத்தம் சிந்த கட்சியை நடத்தவில்லை. உங்களை அழைக்கவும் இல்லை. உங்களுடைய எதிர் காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றுகிறேன் என்று டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

06 ஜூலை 2014

பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதாக யாழில் இளைஞர்கள் கைது!

யாழ். நகரப்பகுதியில் சிவில் உடையில் நின்றிருந்த சிங்களப் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழ் இளைஞர்கள் இருவர் நேற்றிரவு கைதாகியுள்ளனர். யாழ்.பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு அருகாகவுள்ள புல்லுக்குளம் பகுதியில் நின்றிருந்த இரு பொலிசார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்த முற்பட கற்களால் வீசியதில் பொலிசார் ஒருவரது மண்டை உடைந்து படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த புல்லுக்குளம் பகுதியில் சிவில் உடையினில் பொழுது போக்கிக்கொண்டிருந்த இரு பொலிசார் குறித்த தமிழ் இளைஞர்கள் இருவருடனும் முரண்பட்டுள்ளனர். இதைனையடுத்து பரஸ்பரம் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையிலேயே பின்னர் கற்களால் வீசியதாக தெரியவருகின்றது. இதையடுத்து அருகிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் உதவி கோரியதையடுத்து திரண்டு சென்றவர்கள் குறித்த இளைஞர்களை கைது செய்ததுடன் கடுமையாக தாக்கியுமுள்ளனர் எனத் தெரியவருகிறது.

05 ஜூலை 2014

இன்று கரும்புலிகள் நாள்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 27ஆண்டுகள் கடந்துவிட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.
இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வாறு ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீர வரலாறானார்கள்.
2007ம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம் மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, 2009 ஆம் ஆண்டு வான் கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.
முள்ளிவாய்க்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீர வரலாறானார்கள்.
வெளியில் தெரியாத அந்த அற்புத வீர மறவர்களையும் நாம் நினைவிற்கொண்டு வீர வணக்கம் செலுத்தி நிற்கின்றோம்!

04 ஜூலை 2014

புலிகள் அமைப்பில் கணக்காளராக இருந்தவரும் தமிழகம் வந்தாராம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிக் கணக்காளர்களில் ஒருவரை இந்தியப் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு கைதானவர் அண்மையில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலமாக அகதிகளாக தனுஸ்கோடியைச் சென்றடைந்த நால்வரில் ஒருவரே என்றும் கூறப்படுகின்றது. கடலின் கரைப்பகுதியில் மார்பளவு நீருக்குள் இறக்கி விடப்பட்ட இவர்களை தமிழகப் கரையோரக் காவல் படையினர் காப்பாற்றி தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போதே நால்வரில் ஒருவரான எஸ். சதீஸ் (வயது 39) என்பவர் தமிழீழழ விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவில் கணக்காளராக இருந்தவர் என்றும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஒரு பட்டதாரி எனவும், கடந்த 2004 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கணக்காளராக இவர் இருந்தார் என்றும் தெரிகிறது. இதேபோன்று கைதான பெண்ணான சாந்தி (வயது 39) என்பவர் ஈ.பி.டி.பியின் அலுவலகத்தில் பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது. கைதானவர்களில் எஸ்.ரவீந்திரன் (வயது 38), மலர் (வயது 55) ஆகியோரும் அடங்குவர். இதேவேளை சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியா சென்றடைந்த நால்வரும் தலா 10 ஆயிரம் ரூபாவை படகுக்காரர்களுக்கு வழங்கினர் எனவும் அவர்கள் அதிகாலை 1.30 மணியளவில் இந்தியக்கரையில் நால்வரையும் இறக்கி விட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

03 ஜூலை 2014

நிச்சயித்த பெண் ஓட்டம்!திடீர் மணமகளான ஆசிரியை!

திருமணத்திற்குப் பின்னர் இந்தியாவை விட்டு தாய்லாந்திற்குச் செல்ல முடியாது என்று மணப்பெண் ஒருவர் மண்டபத்தை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் திருமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் . தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார். அதே மாதவரம் தணிகாசலம் நகரில் வசித்து வரும் பெண்ணுக்கும், இவருக்கும் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமண ஏற்பாடுகள்: பம்மலில் இருவருக்கும் நேற்று திருமணம் நடத்துவது என்று முடிவு செய்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தது. நேற்று முன்தினம் காலையிலேயே உறவினர்கள் பலர் மண்டபத்துக்கு வந்துவிட்டனர்.
காணமல் போன மணமகள்: இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், வீட்டில் இருந்த மணமகளை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடினர். அதிர்ச்சியடைந்த மணமகன்: ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு மணமகளை காணவில்லை என்ற தகவலை தெரிவித்தனர். அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசில் புகார்: இந்நிலையில் ஸ்ரீதரின் மாமா, மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, மணப்பெண்ணின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் எம்கேபி நகர் பாரதியார் நகரில் உள்ள முருகன் கோயிலில் இருப்பது தெரிந்தது.
தாய்லாந்து செல்ல விருப்பமில்லை: அவரிடம் சென்று விசாரித்த போது தாய்லாந்து செல்ல எனக்கு பிடிக்கவில்லை. அதனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.
போலீசார் அறிவுரை: இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவருக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
திடீர் மணமகளான ஆசிரியை: இதையடுத்து திருமணத்துக்கு வந்திருந்த புதுச்சேரியை சேர்ந்த உறவினர் மகளான ஆசிரியை ஒருவரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து ஸ்ரீதருக்கும், ஆசிரியைக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடந்தது. தம்பதிகள் மகிழ்ச்சியுடன் புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொண்டனர். டீச்சர் நீங்களாவது தாய்லாந்து போவீங்களா....?

02 ஜூலை 2014

சிங்களப்படைக்கு பயிற்சியை நிறைவு செய்த தமிழ்ப்பெண்கள்!

சிறீலங்காவின் தரைப்படைக்கு புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை(02.07.14)தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர்.
முல்லைத்தீவு படைத்தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட இந்த யுவதிகள்,தரைப்படையின் பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் படையில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத கால பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனராம்.
முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் சிங்கள கட்டளை தளபதி (இன அழிப்பாளன் என குற்றம் சாட்டப்படுகின்ற) மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் சிங்களப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

01 ஜூலை 2014

இந்திய தாதியர் போராளிகளின் பிடியில் பாதுகாப்பாக உள்ளனராம்!

இராக்கில் நடந்து வரும் தொடர் வன்முறையில் புதிய குண்டு வெடிப்பு தாக்குதல்களினால், திக்ரித் நகரில் உள்ள இந்திய செவிலியர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனையின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரித்தின் இந்த மருத்தவமனையில் 46 இந்திய செவிலியர்கள் சிக்கியுள்ளனர்.அந்த மருத்துவமனை வளாகத்தில் குண்டுகள் வெடித்ததை அடுத்து, மருத்துவமனையின் அடித்தளத்தில் அடைக்கலம் பெறுமாறு ஒரு ஆயுததாரி தங்களிடம் கூறியதாக செவிலியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு திரும்ப வேண்டுமா அல்லது இராக்கிலேயே நெருக்கடி இல்லாத பகுதிகளில் தங்கிவிட வேண்டுமா என்ற மனக் குழப்பத்தை பல செவிலியர்கள் எதிர்கொள்கின்றனர்.
திங்கட்கிழமையன்று அந்த மருத்துவமனை வளாகத்தில் புதிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டதாக, மரியானா ஜோஸ் என்ற அந்த மருத்துவமனையில் சிக்கியிருக்கும் ஒரு செவிலியர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் சமையலறை அமைந்துள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில், தங்குமிடம் எற்படுத்திக் கொள்ளுமாறு ஒரு ஆயுததாரி தெரிவித்ததாக, மரியானா ஜோன்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தங்களுக்கு பயமாக உள்ளதாகவும், அடித்தளத்தில் எவ்வாறு தங்குவது என்று தெரியவில்லை என்று அந்த செவிலியர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் அருகே குண்டு வெடிப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும்.குண்டு வெடிப்புகள் துவங்கிய உடனேயே அந்த ஆயுததாரிகளில் ஒருவர், பாதுகாப்புக்காக அடித்தளத்தை நோக்கி தன்னை பின்பற்றி செல்லுமாறு தெரிவித்ததாக அந்த செவிலியர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஏனைய ஆயுததாரிகளுடன் சேர அந்த நபர் வெளியே சென்றுவிட்டதாகவும், மருத்துவமனையில் உள்ள இராக்கிய உதவியாளர்களும் அடித்தளத்தில் இருப்பதாகவும் அந்த செவிலியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்கள் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டதாகவும், இராக்கிய இராணுவம் மற்றும் ரெட் கிராஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக இந்திய தூதரகத்தில் உள்ளவர்கள் தெரிவித்ததாகவும் அந்த செவிலியர் தெரிவித்தார்.
அடித்தளத்தில் சிக்கியுள்ள இந்திய செவிலியர்கள் குறித்து இராக்கிய பொது மக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருத்தின் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பாக்தாத் மற்றும் எர்பில் ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள விமான நிலயங்களுக்கு செல்லும் வழியில் உள்ள வீதிகளில், கடந்த மூன்று வாரங்களாக இராக்கிய இராணுவத்திற்கும் ஐசிஸ் போராளிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்று வருதால், இந்த செவிலியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு உணவு அளிக்கப்பட்டுவருவதாகவும், மருத்துவமனையில் எந்த நோயாளிகளும் இல்லை என்றும் செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.