26 ஆகஸ்ட் 2014

மைத்திரியை உளவு பார்த்தார் கோத்தா!

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை வேவுபார்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவினால் அனுப்பப்பட்ட நபரை அமைச்சர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆளும்கட்சி வட்டாரங்களில் பெரும்பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரை கோத்தபாய அமைச்சரை வேவு பார்ப்பதற்காக அவரின் மெய்ப்பாதுகாப்பு வட்டத்திற்குள் புகுத்தியுள்ளார்.
அமைச்சரின் மெய்ப்பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றிய இந்த நபர், அமைச்சரின் நடவடிக்கைகள், அவரை சந்திக்க வருபவர்கள் அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை நாளாந்தம் வழங்கிவந்துள்ளார். இதற்காக அந்நபரிற்கு 50.000 வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் அந்நபர் சகல உண்மைகளையும் கக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஏனைய பல மூத்த அமைச்சர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பிரிவினர் குறித்து மாத்திரமல்லாமல் ஏனைய பணியாளர்கள் குறித்தும் அச்சம் தோன்றியுள்ளது. தங்களிடம் பணி புரிபவர்களில் எத்தனை பேர் கோத்தாவின் விசுவாசிகள் என்ற மறைமுக கணக்கெடுப்பை அவர்கள் ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

25 ஆகஸ்ட் 2014

விஜயும் முருகதாசும் லைகாவினரால் மிரட்டப்பட்டார்களாம்?

இப்படி ஒரு கதை சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. கத்தி படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகிக் கொண்டால் போதும், சிக்கலின்றி படம் வெளியாகும் என்பதுதான் படத்தின் தற்போதைய நிலை. அதாவது கிளம்பியிருக்கும் எதிர்ப்பு என்பது கத்தி படத்துக்கு எதிரானதுதான். நடிகர் விஜய்க்கோ, இயக்கநர் ஏ ஆர் முருகதாசுக்கோ எதிரானதல்ல என்று தெளிவாக்கியுள்ளனர் போராட்டக்காரர்கள்.எனவே படத்தை லைகாவிடமிருந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்குக் கைமாற்றிவிட விஜய்யும் முருகதாசும் பெரும் முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்கு லைகாகாரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாமும் கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டோம். இப்போது இன்னொரு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்திலிருந்து லைகாகாரர்கள் விலக மறுத்ததோடு நில்லாமல், விஜய், முருகதாஸ் தங்களுடன் போட்டுள்ள ஒப்பந்தங்களைக் காட்டி மிரட்டினார்களாம். படத்தில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான். உங்களுக்கு கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது, என்றார்களாம். இந்தப் படம் குறித்தும், இதுபோன்ற செய்திகள் குறித்தும் தெளிவாக விஜய்யும் முருகதாஸும் லைகாகாரர்களும் தெளிவுபடுத்தும் இதுபோன்ற கதைகள் தொடரும் போல் தெரிகிறது!

24 ஆகஸ்ட் 2014

பாஜக ராஜபக்ஷவுக்குத்தான் விசுவாசமாக உள்ளது!

தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் - நல்லகண்ணுஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில மாநாடு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் மையத்தில் வைத்து நடந்தது. இதில் கலந்து கொண்ட இகம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியண் சுவாமி மற்றும் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர். பாஜக தலைவர்கள் தமிழர்களை விட ராஜபக்சேவுக்குதான் விசுவாசமாக உள்ளனர். இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங் கட்சியின் கொள்கையை தான் பாஜக பி்ன்பற்றுகிறது. இகம்யூ கட்சியை பொறுத்தவரை இலங்கை தமிழர்கள் சுய கவுரவத்துடன் வாழ தொடர்ந்து குரல் கொடுக்கும்.
தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கடைசி பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராட விடாமல் மக்கள் சாதி, மதம், மற்றும் இனத்தின் பெயரால் பிரிக்கப்பட்டு வருகின்றனர். தென் மாவட்டத்தில் சாதாரண மனிதராக இருந்த ஒருவர் தாது மணல் விற்று இன்று கோடீஸ்வரராக வலம் வருகிறார். தாது மணல் உள்ளிட்ட கனிம வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க தவறினால் வருங்கால வாரிசுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார் நல்லகண்ணு.

23 ஆகஸ்ட் 2014

மோடி கூட்டமைப்பினரை சந்தித்தார்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கூட்டமைப்புப் பிரதிகள் அவரைச் சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

22 ஆகஸ்ட் 2014

லைகாவின் பெயரை நீக்கி புதிய பெயரில் "கத்தி"விளம்பரம்!

கத்தி படத்தின் பிரச்சினையை, சீமான் ஆலோசனைப்படி மெல்ல தீர்த்துவிட முடியும் என நம்புகிறார்கள் முருகதாஸ் அன்ட் கோ. சீமானின் ஆலோசனைப்படி, லைகா நிறுவனத்தின் பெயரை மட்டும் தூக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர்.லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தை தயாரிப்பாளராக்கியுள்ளார்கள். லைகா போட்ட பணத்தை எப்படி செட்டில் செய்தார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. அந்த செட்டில்மென்ட் முடிந்ததா அல்லது எதிர்ப்புகளைச் சமாளிக்க பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு, சைலன்ட் தயாரிப்பாளர்களாக லைகாகாரர்கள் தொடர்கிறார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும். லைகா வெளியேறிவிட்டது என்பதைக் காட்டும் வகையில், இன்று மாலை கத்தி படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிடவிருக்கிறார்கள். அதில் லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் கத்தி என்ற மாற்றத்தைச் செய்துள்ளார்களாம். மாலை 6 மணிக்கு மேல் கத்தி புதிய போஸ்டர் வெளியாகும் எனத் தெரிகிறதது.

21 ஆகஸ்ட் 2014

புங்குடுதீவு நபர் நஞ்சருந்தி தற்கொலை!

களவு மற்றும் கொள்ளை ஆகிய குற்றச் செயல்கள் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நஞ்சு விதையொன்றை உண்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்றுறையில் உள்ள பொலிஸார் தெரிவித்தனர் என அறியவருகிறது.
புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசநாயகம் றொனாட்றீகன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை (20) மதியம் நஞ்சு விதையொன்றை உட்கொண்ட இவர் உடனடியாக புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு புதன்கிழமை (20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர் மேலும் கூறப்பட்டுள்ளது.

20 ஆகஸ்ட் 2014

கத்தி,புலிப்பார்வைக்கு தமிழக அரசு தடை விதிக்கக்கூடும்!

சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. வேந்தர் மூவிஸின் புலிப்பார்வை திரைப்படம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகனை சிறார் போராளியாக சித்தரிக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனமானது எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு சொந்தமானது. இக்குழுமம் இலங்கையிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதேபோல் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை தயாரிக்கிறது.இந்த இரு படங்களையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று 65 இயக்கங்களின் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிட்டால் அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இப்படி விஸ்வரூபமெடுத்திருக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தி மற்றும் புலிப் பார்வை திரைப்படங்களுக்கு அதிரடியாக தமிழக அரசு தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

19 ஆகஸ்ட் 2014

பாலகியை துஷ்பிரயோகம் செய்த அரக்கன் கைது!

கடைக்குச் சென்ற 5 வயதுச் சிறுமியை கடைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்,உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 50 வயதான வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் நேற்று யாழ்.சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதிவான் கறுப்பையா ஜீவராணி உத்தரவிட்டார். கடைக்குச் சென்ற சிறுமி வீட்டுக்குத் திரும்பிவர தாமதமானதை அடுத்து அதற்கான காரணம் குறித்து சிறுமியின் தாய் கேட்டுள்ளார்.
இதன்போதே தன்னிடம் கடைக்காரர் நடந்து கொண்ட விதம் குறித்து சிறுமி எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான குறித்த பெட்டிக்கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

18 ஆகஸ்ட் 2014

தம்பாட்டி மக்களுக்கு நீர் விநியோகம்!

தம்பாட்டி மக்களுக்கு நீர் விநியோகம்!வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிதண்ணீர் விநியோகம் இன்று திங்கட்கிழமைமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் நிலவும் வழமைக்கு மாறான வரட்சியால் பல்வேறு இடங்களிலும் குடிதண்ணீருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. உள்ளூராட்சி மன்றங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் குடிதண்ணீர் வழங்கலை பவுஸர்கள் மூலம் மேற்கொண்டு வந்தபோதும் குடிநீருக்கான தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில் அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் குடிதண்ணீர் வழங்கலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொள்ளும் குடிதண்ணீர் வழங்கும் சேவைக்கு மேலதிகமான உதவி தேவைப்படின் அதனை வடக்கு மாகாண விவசாய அமைச்சு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தம்பாட்டி கிராமத்துக்கு பவுஸர்கள் மூலம் நீர் வழங்கும் திட்டத்தை வடமாகாண விவசாய கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஊர்காவற்துறை பிரதேசசபையுடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. தம்பாட்டி கிராமத்துக்கான நீர்வழங்கும் நிகழ்வு அக்கிராமத்தின் பொதுநோக்கு மண்டபத்தில் சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான பா.கஐதீபன், விந்தன் கனகரட்ணம், இ.ஆர்னல்ட், ஊர்காவற்துறைப் பிரதேசபையின் செயலாளர் என். சுதர்ஐன், தம்பாட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் அ.அன்னராசா, நீர் வழங்கல் திட்டத்துக்கு நிதி உதவி வழங்கிய அன்பே சிவம் அமைப்பின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் கு.குமணன் உட்பட கிராமத்து மக்களும் கலந்துகொண்டனர்.

17 ஆகஸ்ட் 2014

இந்த கயவர்களால் ஆசிரியர்களுக்கு தலைகுனிவு!

மானிப்பாய் பிரதேசத்தில் மாணவி ஒருவரை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தவறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரை, கையும் மெய்யுமாகப் பிடித்த பொதுமக்கள் அவரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10.30 மணியளவில் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியர் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பித்து வருபவர் என்றும் தெரியவருகிறது. குறித்த மாணவி கல்விகற்கும் பாடசாலை அதிபர் வழங்கிய தகவலையடுத்தே ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

16 ஆகஸ்ட் 2014

புலிப்பார்வைக்காக மாணவர்களை தாக்கிய சீமானின் அடியாட்கள்!

புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்துக்கும், அதில் பங்கேற்ற சீமானுக்கும் கண்டனம் தெரிவித்த மாணவர்களை இரும்பு ராடால் கடுமையாகத் தாக்கினர் நாம் தமிழர், பாஜக மற்றும் ஐஜேகே கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் மாணவர்களுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை, கால்களிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்காமல், ஜாம் பஜாரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் காவலர்கள்.தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரனை கொடூரமாகக் கொன்றது சிங்கள ராணுவம். இதற்கான ஆதாரங்கள், படங்கள் வெளியான போது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. நீதி விசாரணை வேண்டும் என்ற குரல்கள் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்தான், ஈழத்துக்கு ஆதரவாகவும், தனக்கு எதிராகவும் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழகத்தில் உள்ள அமைப்புகளை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இறங்கினார் ராஜபக்சே. சகல பலவீனங்களையும் மறைத்துக் கொண்டு, வெளியில் வீராவேசமாகப் போராடுவது போல நடிக்கும் சில சினிமாக்காரர்களை குறிவைத்துப் பிடித்துள்ளது ராஜபக்சே தரப்பு. அவரது பினாமிகளின் ஊடுருவல் தமிழ் சினிமாவையே திகைக்க வைக்கும் அளவுக்கு பலமாக உள்ளது. இந்த பினாமிகள் தயாரிக்கும் படங்கள்தான் கத்தியும் புலிப்பார்வையும் என்கிறார்கள் தமிழ் சினிமாவின் இயக்கத்தை முற்றாக அறிந்த சில தயாரிப்பாளர்கள். இந்தப் படங்களுக்கு எதிராக மாணவர்களும், தமிழ் உணர்வு கொண்ட கட்சிகளும் அணி திரண்டன. இவர்களில் அரசியல் கட்சிகளை எப்படியோ சரிகட்டிவிட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த இரு படங்களையுமே எதிர்க்காதது பலத்த சந்தேகங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரிக்கும் புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்தாலும், மதிமுக பொதுச் செயலர் வைகோ பங்கேற்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து. எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் மற்றும் வேந்தர் மூவீஸ் உரிமையாளர். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இவர்தான். விழா நடந்து கொண்டிருக்கும்போதே, மாணவர்கள் சீமானை எதிர்த்து கோஷம் எழுப்பினர். தங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்த சீமானை கைது செய்யுங்கள் என்றும் கோஷம் எழுப்பினர். உடனே, இரும்புக் கம்பிகளுடன் தயாராக இருந்த நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி அடியாட்கள் பாய்ந்து வந்து, கேள்வி கேட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன், தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த செம்பியன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அரங்கில் இவ்வளவு கைகலப்பு நடந்தும், மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார் தலையிட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்த மாணவர்களை கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு முதலுதவி கூட அளிக்காமல், ஜாம்பஜார் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாணவர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 ஆகஸ்ட் 2014

தம்பி விஜய்,பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது!

தம்பி விஜய் பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள், என்று கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
செஞ்சோலையில் அப்பாவி ஈழத் தமிழ்க் குழந்தைகள் 63 பேரை இலங்கைப் பே'ய'ரசு விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்ற ஆகஸ்ட் 14ம் நாளில் கனத்த மனத்துடன் இந்த செய்தி அறிக்கையை எழுதுகிறேன்.ஆகஸ்ட் 14ம் நாள் உலகெங்குமுள்ள 10 கோடி தமிழர்களின் இதயம் அந்தக் குழந்தைகளின் ரத்தத்தால் நனைந்த நாள். இந்த நாளில், ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட அந்த மழலைகளை நினைவு கூரும் விதத்தில், அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும், அவர்களின் நினைவாக வன்னி மண்ணில் விளக்கேற்றப்பட்ட நாளைய தினமும் ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் குறைந்தபட்சம் ஒரு அகல் விளக்காவது ஏற்றப்படவேண்டும் என்று தமிழ்ப் பெருங்குடி மக்களைப் பணிவோடு வேண்டுகிறேன். ஆண்டுகள் கடந்த பின்னும் இதயத்தை உறைய வைக்கும் அந்தச் சம்பவத்தை மறக்க இயலாமல் நாம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கண்ணீரில் நம்முடன் இரண்டறக் கலக்க வேண்டிய நண்பர்கள் சிலர், மனிதமிருகம் ராஜபக்சேவின் நண்பர்கள் தயாரித்துள்ள ஒரு திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடுவதை எதிர்க்கலாமா - என்று கண்ணீர் மல்கக் கேட்பது எம்மைக் கவலையடையச் செய்துள்ளது. செஞ்சோலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் குண்டுவீசிக் கொல்ல பயன்படுத்தப்பட்ட அதே விமானத்தில் மனித மிருகம் மகிந்த ராஜபக்சேவின் விருந்தினர்களாக விண்ணில் உலா வந்த லைக்காமொபைல் நிறுவனத்தினர் தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்பது எம் இனிய நண்பர்களுக்குத் தெரியுமா தெரியாதா? அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் அறிதுயிலில் இருக்கிறார்களா?கத்தி - என்கிற இந்தப் படத்தை எடுத்தவர்கள் தரப்பிலிருந்து, 'தமிழர்களின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் நாங்கள் படமெடுப்போமா' என்றெல்லாம் தொடக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ராஜபக்சேவின் நண்பர்கள் - ராஜபக்சே குடும்பத்தின் கூட்டாளிகள் - ராஜபக்சே குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்றவர்கள் - எடுக்கிற படம்தான் இது என்பது அம்பலமான பிறகு, 'இந்தப்படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற அடுத்த கேள்வியோடு அரங்குக்கு வருகிறார்கள் சில நண்பர்கள். அவர்களைப் பார்க்கும்போது, எனக்கு அவமானமாக இருக்கிறது. எம் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நேரடியாக தமிழ்த் திரையுலகில் கால்பதிக்க முடியாது என்பதால்தான், லைக்கா மொபைல் - என்கிற தனக்கு நெருக்கமான சிநேகிதனின் முகமூடியுடன் தமிழ் சினிமாவில் கால் வைக்க முயல்கிறது ராஜபக்சே குடும்பம். இதைக் கூடவா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை? இன்று நீங்கள் லைக்கா மொபைலை அனுமதித்தால், நாளை - மகிந்த ராஜபக்சேவும் கோதபாய ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நமல் ராஜபக்சேவும் தமிழ்த் திரையுலகில் தங்களுக்கு நம்பகமான நண்பர்களை வெவ்வேறு முகமூடிகளுடன் திணிப்பதை உங்களால் எப்படித் தடுக்க முடியும்? 'இந்தப் படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற உங்களது கேள்வி, உங்களிடமே அப்போது எழுப்பப்படாதா? உங்கள் வார்த்தைகளாலேயே உங்கள் வாய் அடைக்கப்படாதா? என் இனிய நண்பர்களே, எச்சரிக்கையாயிருங்கள்.கத்தி - திரைப்படத்தின் கதை என்ன என்பதைக் குறித்து இங்கே எவரும் கேள்வி எழுப்பவேயில்லை. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோக்கள் செய்வதைப் போல், இந்தியாவுக்கு வரும் ஆபத்தை தம்பி விஜய் எப்படித் தடுக்கிறார் - என்பதே கூட கதையாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்தியாவாலும் இலங்கையாலும் எம் ஈழ உறவுகளுக்கு நேரும் ஆபத்துகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம். கத்தி திரைப்படத்தின் கதை என்ன? அதில் தமிழ்ச் சினிமாவின் பாரம்பரிய குத்தாட்டம் இருக்கிறதா இல்லையா - என்றெல்லாம் முட்டாள்தனமாகக் கேள்வி எழுப்பாமல், அது எவருடைய முதலீட்டில் எடுக்கப் படுகிறது என்றுதான் கேட்கிறார்கள் தமிழகத்தின் மாணவக் கண்மணிகள். கத்தி படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் அவர்களது கேள்வி. அந்த நியாயமான கேள்வியை எழுப்பும் எங்கள் மாணவத் தம்பிகளை மிரட்ட முயற்சிப்பது கடைந்தெடுத்த கோழைத்தனம். ராஜபக்சேவின் பினாமிகளோ - என்கிற சந்தேகம் எழுகிற அளவுக்கு ராஜபக்சேவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எடுக்கும் ஒரு படத்தைக் குறித்து கேள்வி எழுப்பும் அந்த மாணவத் தம்பிகள் மீது ஒரு துரும்பு பட்டால்கூட கத்தி படத்துடன் தொடர்புடைய தம்பி விஜய் உள்பட அத்தனைப் பேரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று பணிவன்போடு எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.நான் ஒரு தெருப் பாடகன். எம் மக்களுக்காகத் திரைப்படம் எடுக்கிற எளிய கலைஞன். என்னுடைய அடுத்த திரைப்படம் முடிவடையும் நிலையில் இப்படியொரு அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், என்னுடைய பட வெளியீட்டின் போது நான் இடைஞ்சல்களைச் சந்திக்க நேரலாம். அதற்காக அஞ்சி இதைப் பேசாதிருப்பது கோழைத்தனம் என்பதாலேயே இதைப் பேசுகிறேன். இப்போது பேசாமல் வேறெப்போது நான் இதைப் பேசமுடியும்? என் இனிய நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான்... செஞ்சோலையில் கொல்லப்பட்ட எங்கள் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடியுங்கள். அவர்கள் மீது குண்டு வீசிய விமானத்தில் உல்லாசப் பயணம் சென்றவர்களுக்காக கண்ணீர் வடிக்காதீர்கள்!  
தம்பி விஜய்க்கும் ஒரு வேண்டுகோள்....
பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய இருப்பும் நம் இதயத்தில் ஏந்தியிருக்கிற நெருப்பும்தான் தமிழரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். செஞ்சோலைக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும் நாளைய தினமும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்காக அன்புத் தம்பி விஜய் உணர்வோடும் உணர்ச்சியோடும் தன் இல்லத்தில் ஒரே ஒரு அகல் விளக்காவது ஏற்ற வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகிறேன்!

14 ஆகஸ்ட் 2014

கடற்படை காடையனை நையப்புடைத்த மருதங்கேணி மக்கள்!

யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சிறீலங்காவின் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது

செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதி வீடொன்றுக்குள் புகுந்த இந்த காடையன் 22 வயதான குடும்பப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.
இதன்போது, அந்தப் பெண் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அயல் வீட்டார்கள் ஓடி வந்து குறித்த காடையனை பிடித்து தாக்கியுள்ளனர்.
பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிடம் இந்த சிறீலங்காவின் காடையனை ஒப்படைத்துள்ளனர்.
பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான இவனை பளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் குறித்த காடை ஆஜர்படுத்தப்பட்டதும், அவனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 ஆகஸ்ட் 2014

ஊர்காவற்றுறையில் உரம் பயன்படுத்தி வெல்லம் தயாரித்தமை கண்டுபிடிப்பு!

மனித பாவனைக்கு உதவாதது எனக் கருதப்படும் பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல நிலையம் இன்று சுகாதாரப் பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டது. நேற்று சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க பனை வெல்ல நிலையத்தின் ஐலண்ட் பாம் (Island Plam) பனை வெல்ல உற்பத்திக்காக விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் - மனிதப் பாவனைக்கு ஒவ்வாத பொஸ்பேட் (அடி உரம்) பாவித்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. சுகாதாரப் பரிசேதகர்களால் அங்கு கைப்பற்றப்பட்ட பனைவெல்லம் மற்றும் அடி உரம் என்பன இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் பராப்படுத்தப்பட்டன. விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் பனை வெல்ல நிலையத்தை சீல் வைக்குமாறு சுகாதரப் பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

12 ஆகஸ்ட் 2014

கத்திக்கு எதிரான முற்றுகை!மாணவர்கள் அறிவிப்பு!

கத்தி படத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று கோரி படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நாயகன் விஜய் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான செம்பியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கத்தி படத்துக்கு எதிரான மிக பலமான போராட்டத்தை அனைத்து மாணவர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நடத்தப் போகிறோம். நிச்சயம் எங்கள் போராட்ட முடிவில் மாற்றமிருக்காது. இந்த போராட்டம் குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறோம். மாணவர்களுக்கு தேர்வுகள் முடிய வேண்டுமே என்பதற்காக காத்திருக்கிறோம். ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்துடனும் இந்தப் போராட்டம் பற்றி பேசி வருகிறோம். கத்தி படத்தின் நாயகன் விஜய், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரின் வீடுகள், தயாரிப்பாளரான லைகாவின் தி நகர் மற்றும் அடையாறு அலுவலகங்களை முற்றுகையிடுவோம். தமிழகத்தில் இந்தப் படம் எங்குமே வெளியாகக் கூடாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம். தமிழக அரசு இந்த விஷயத்தில் சரியான முடிவை எடுக்கும் என நம்புகிறோம்," என்று கூறியுள்ளார்.

11 ஆகஸ்ட் 2014

மன்னார் தளபதி ஜானின் மனைவி ஆணைக்குழு முன் சாட்சியம்!

காணமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதியின் ஆணைக்குழு முன் இன்று சாட்சியமளித்த விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்பு தளபதிகளில் ஒருவரான அந்தோனி இராயப்பு (ஜான்) அவர்களின் மனைவி இராயப்பு மிரேனியா தனது சாட்சியத்தை சற்று முன் மடு பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் - யுத்தம் நடைபெற்ற வேளையில் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைச் சரணடையுமாறும் அவ்வாறு சரணடைந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதயைடுத்து 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 18ஆம் திகதி அப்பகுதியிலுள்ள அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் (மைக்கல்) தலைமையில் அவர்களின் உதவியுடன் 40 விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் முல்லைத்தீவு பகுதியில் சரணடைந்தனர். இதில் எனது கணபுர் அந்தோனி இராயப்புவும் இருந்தார். அவருக்கு அப்போழுது வயது 43 எனது கணவர் 23 வருடங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பணியாற்றியுள்ளார்.பின் வட்டுவாகல் பகுதியிலுள்ள பாடசாலை முகாமில் கம்பிக்கூட்டில் அடைத்து வைத்தார்கள். அதன் பின் இதுவரை அவரை காணவில்லை. பின் அவரை தேடி பல முகாம்களுக்கு சென்றேன். இருந்தும் அவரை காண முடியவில்லை. பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் பல முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளேன். ஆனால் அவரை நான் இன்று வரை காணவில்லை. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சில தளபதிகள் மற்றும் உறுப்பினர்கள் விடுலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எனது கணவர் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை . பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறியதனாலேயே அவர் சரணடைந்தார். ஆனால் அவருடன் சரணடைந்த 40 பேருக்கும் என்ன நடந்தது என இன்றுவரை தெரியவில்லை. இவ்வாறான சூழலில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து வருகிறேன். ஒரு முறையாவது அவரை பார்த்தால் எனக்குப் போதும். அல்லது அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.நான் மிக கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறேன் இந்த சூழலில் சிலர் மது போதையில் எனது வீட்டிற்கு வந்து,அவர் வந்திட்டாரா? அவர் எங்கே என சொல்லி என்னை அச்சுறுத்தி வருகிறார்கள். நான் முச்சக்கர வண்டியில் சென்றால் முச்சக்கர வண்டி சாரதியை பார்த்து ஏன் ஏற்றி சென்றாய்? எங்கே கூட்டி சென்றாய்? என அச்சுறுத்தி வருகிறார்கள். எனது வீட்டிற்கு வருபவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள்.வரவர நான் மிகவும் பயத்தில் வாழ்ந்த வருகிறேன். எனவே எனது கணவன் இருக்கிறாரா இல்லையா என தெரிவிக்க வேண்டும். அவர் நிச்சயமாக இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.இதன்போது ஆணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவிக்கையில் - உங்களைச் சில ஆணைக்குழு அதிகாரிகள் பார்ப்பதற்கு வருவார்கள். அவர்களுக்கு ஒத்துழையுங்கள் அதன் மூலம் கணவரை கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி அந்தோனி இராயப்பு வின் மனைவி தெரிவிக்கையில் - இவ்வாறு பல வாக்குகள் ஏற்கனவே எனக்கு வழங்கப்பட்டு இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனக்கு எதுவித உதவிகளும் வேண்டாம் எனவே எனக்கு எனது கணவரை ஒரு முறையாவது பார்த்தால் போதும். இராணுவத்தினரே அவரை வைத்துள்ளனர். எனவே அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

10 ஆகஸ்ட் 2014

விசுவமடுவில் ஆணின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் பஸ் தரிப்பு கட்டடத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொட்டியடி, விசுவமடுவைச் சேர்ந்த எஸ்.ஜோர்ஜ் (வயது - 40) என்பவரே சடலமாக காணப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பஸ் தரிப்பிட கட்டடத்துக்குள் சடலம் காணப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்குவந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

09 ஆகஸ்ட் 2014

ஒரு குடும்பத்தை காப்பாற்றவே நிபுணர்குழு-மங்கள சமரவீர

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதப் படுகொலைகளில் ஈடுபட்ட சர்வதிகாரத் தலைவர்களைப் பாதுகாப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இலங்கையில் காணாமல்போனோர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.தே.கட்சியின் எம்.பியான மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிவிவகார சேவைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவகாரத்தில் உரையாற்றிய சமயமே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- "மனித உரிமைகள் கவுன்ஸிலினால் இலங்கையில் விசாரணைகளை நடத்துவதற்காக சர்வதேச விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசு உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதற் காக சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது. இக்குழுவில் டெஸ்மன்ட் டி சில்வா, கெப்ரிளைஸ், டாக்டர் கிரேன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் உள்ளூரில்விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கவுள்ளனர். இந்த மூவரடங்கிய குழுவினரின் பின்னணியைப் ஆராய்வோமானால், இக்குழுவின் தலைவராக உள்ள வர் டெஸ்மன்ட் டி சில்வா. இவர் இராணுவப் போரில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை நியாயப்படுத்தியவர். புலிகளின் பிடியிலிருந்து 3 இலட்சம் தமிழர்களை விடுவிப்பதற்காக 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது தவறல்ல எனக் கூறியவர். அதுமட்டுமன்றி, பிரிட்டனில் இடம் பெற்ற படுகொலை ஒன்று தொடர்பாக இவர் மூடிமறைப்புகளை மேற்கொண்டவர். இலங்கையின் தவறுகளையும் மூடிமறைக்கத் தொடர்ந்து பாடுபடுபவர். அடுத்தவர், கெப்ரிளைஸ். இவர் சர்வாதிகாரத் தலைவர்களை விடுவிக்கும் உரிமைக்காக செயற்படுவதில் நிபுணத்துவம் பெற்ற சட்ட நிபுணர். லிபியாவில் இடம்பெற்ற யுத்தத்தில் போர்க்குற்றச் சாட்டுக்குள்ளான லிபிய ஜனாதிபதி கேணல் கடாபி இவரைத் தொடர்பு கொண்டுள்ளார். கடாபியையும் அவரது மகனையும் பாதுகாப்பதற்காக இவர் உறுதி வழங்கியிருந்த போதிலும் அதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அடுத்தவர் டாக்டர் கிரேன். 2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் 156 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தியவர். இப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளரைப் பாதுகாத்து பழியை சாதாரண இராணுவத்தினர் மீது சுமத்தியவர். எனவே, தற்போது இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த மூவரும் யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதப் படுகொலை களைப் புரிந்தவர்களைப் பாதுகாத்தவர்கள். இவ்வாறான ஆட்சியாளர்களைப் பாதுகாத்து பழியை சாதாரண இராணுவத்தினரின் மீது சுமத்தியவர்கள். இதனால் இலங்கையிலும் இராணுவத்தினருக்கு எதிரான சூழ்ச்சி ஒன்று இடம்பெறுவதாகத் தோன்றுகின்றது. உத்தரவிட்டவர்கள் பாதுகாக்கப்பட்டு சாதாரணமானவர்கள் மீது பழி சுமத்தப்படப் போகின்றது. இந்த மூன்று நிபுணர்களும் நாட்டைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்படவில்லை. ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குடும்பத்திற்காக சட்டங்கள் கூட மாற்றப்படுகின்றன"என்றும் அவர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

08 ஆகஸ்ட் 2014

ஈராக்கில் உள்ள ஐஎஸ் இயக்கம் மீது தாக்குதலுக்கு ஒபாமா உத்தரவு!

வடக்கு ஈராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்த, தான் உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, மதச் சிறுபான்மையினர் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகவோ இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஈராக்கிற்கு மீண்டும் அமெரிக்கப் படைகளை அனுப்பும் உத்தேசமில்லை என்றும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் குழு தீவிரவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் அமெரிக்கா ஏற்கனவே மனிதாபிமான ரீதியில் விமானத்திலிருந்து பொருட்களை வீசிவருகிறது.
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் காரகோஷை ஐஎஸ் குழு பிடித்ததையடுத்து அங்கிருக்கும் பொதுமக்கள் பெருமளவில் வெளியேறிவருகிறார்கள்.
வியாழக்கிழமையன்று மாலையில், தனது பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, வெள்ளை மாளிகையில் பேசிய ஒபாமா, மவுண்ட் சின்ஜார் பகுதியில் சிக்கியிருக்கும் யாஸிதி சமூகத்தினருக்கு அமெரிக்க ராணுவ விமானங்கள், உணவையும் தண்ணீரையும் வீசியிருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த மலைப்பகுதியிலேயே தங்கியிருந்தால் அவர்கள் பட்டினியாலும் தண்ணீர் இல்லாததாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த இடத்தை விட்டு வெளியேறினால், ஐஎஸ் குழுக்களால் கொல்லப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"உலகில் பிரச்சனை ஏற்படும் ஒவ்வொரு தடவையும் அமெரிக்கா அதில் தலையிட முடியாது; தலையிடவும்கூடாது" என ஒபாமா தெரிவித்தார்.
"ஆனால், பயங்கரமான அளவில் வன்முறை நிகழும் வாய்ப்பிருக்கும்போது, அதுவும் குறிப்பாக ஈராக்கிய அரசு உதவி கேட்டிருக்கும் நிலையில், அமெரிக்கா சும்மா இருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் ராணுவ ஆலோசகர்களும் இருக்கும் இர்பிலை நோக்கி ஐஎஸ் படையினர் நகர்ந்தாலோ, பாக்தாதிற்கு அச்சுறுத்தலாக இருந்தாலோ வான் தாக்குதல் நடத்தப்படும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
மவுண்ட் சின்ஜார் முற்றுகையில் சிக்கியிருக்கும் பொதுமக்களைக் காப்பாற்ற முயலும்போது தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.
ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் சக்திகளுக்கு ஆதரவு
"ஈராக்கில் ஸ்திரத்தன்மையை அளிக்கக்கூடிய மிதவாத சக்திகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் தற்போது ஈராக்கில் நிலவும் பிரச்சனைக்கு அமெரிக்கத் தீர்வு என ஒன்றும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
ஈராக்கிய நிலை கூறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு அவை கூடியிருக்கும் நிலையில், அதிபர் ஒபாமா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் சிறுபான்மை மதக் குழுக்கள் சந்திக்கும் பிரச்சனை ஒரு "மாபெரும் மனிதப் பேரழிவாக" மாறும் நிலை ஏற்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
முன்பு ஐசிஸ் என்று அறியப்பட்ட ஐஎஸ் குழு, ஒரு சுன்னி முஸ்லிம் குழுவாகும். ஜூன் மாதம் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து வட ஈராக்கில் பல பகுதிகளை பிடித்து வருகிறது ஐஎஸ். சிரியாவின் சில பகுதிகளையும் ஐஎஸ் கட்டுப்படுத்தி வருகிறது.
தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இஸ்லாமிய அரசை உருவாக்கியிருப்பதாக ஐஎஸ் கூறிவருகிறது.
இதற்கிடையில், பாக்தாதில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

07 ஆகஸ்ட் 2014

அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பிய தமிழர்கள் மீது சித்திரவதை!

ஆஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை 'கார்டியன்' செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் தமிழர்களே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- ஆஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களில் தமிழர்கள் 4 பேரும் தனியாக பிரிக்கப்பட்டனர். நெல்சன் என அழைக்கப்படும் தமிழரின் முகத்தின் மீது அதிகாரி ஒருவர் தாக்கியதில் அந்த தமிழரின் முகத்திலிருந்து இரத்தம் கொட்டியது. அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர். "விடுதலைப் புலிகளுக்கு நீ பணம் கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா?" - என கேட்டு தாக்கினர். காலால் உதைத்தனர். இன்னொருவர் தண்ணீர் போத்தலால் அவரது முகத்தில் அறைந்தார். தமிழர்களை பின்னர் ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று வரிசையாக இருக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர் இன்னொரு இடத்திற்கு கூட்டி வந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். நெல்சன் தனது வீட்டு முகவரியை தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.அதே நாளில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தனது வீட்டுக் கதவை தட்டியதாக நெல்சன் மனைவி குறிப்பிட்டார். காலியில் நெல்சனை விசாரித்துக் கொண்டிருந்த அதிகாரிகளே அவர்களை இங்கு அனுப்பி இருந்தார்கள். அவ்வேளை அவர் தனது 14 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்குள் வந்த நபர்கள் நெல்சன் எங்கே எனக் கேட்டனர். அதில் ஒருவர் மகன் முகத்தில் ஓங்கி அறைந்தார். அப்பா எங்கே எனக் கேட்டனர். நான் தெரியாது என சொன்னேன் என அந்த சிறுவன் தெரிவித்தான். நெல்சன் ஜூலை மாதம் 9 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். அவர் தனது கிராமத்திற்கு திரும்பி உள்ளார். நெல்சனும் படகில் இருந்த ஏனைய 3 தமிழர்களும் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் தாங்கள் இன அடிப்படையில் துன்புறுத்தப்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு தமிழரும் புலி ஆதரவாளர்களோ எனச் சந்தேகிக்கப்படுகின்றனர். நெல்சன் தான் நாடு கடத்தப்பட்ட பின்னர் தனது நிலைமை மோசமாகியுள்ளது என தெரிவிக்கிறார். "நான் அச்சமடைந்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டார் என 'கார்டியன்' மேலும் தெரிவித்துள்ளது.

06 ஆகஸ்ட் 2014

தீவகத்திற்கான நீர் விநியோக தடையால் மக்கள் அவதி!

தீவகப் பிரதேசங்களுக்கான குடிதண்ணீர் விநியோகக் குழாய் சேதமடைந்ததால் நான்கு நாட்களாக குடிதண்ணீர் இல்லாது அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து மேலும் அறிய வருவதாவது:-
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அல்லைப்பிட்டியில் இருந்து தீவகப் பகுதிகளுக்கு குடிதண்ணீரை விநியோகித்து வருகின்றது.
நீர்ப்பற்றாக்குறை காரணமாக ஒன்றுவிட்ட ஒருநாளில் அரை மணி நேரமே இப்பகுதிகளில் நீர் விநியோகம் இடம்பெற்றுவருகின்றது.
இதனால் மக்கள் ஏற்கனவே குடிதண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அராலிச்சந்தியில் வீதித் திருத்தப் பணி இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது நீர் விநியோகக் குழாய் உடைவுற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தீவகப் பகுதிக்கான குடிதண்ணீர் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குடிதண்ணீர் விநியோகம் இலாததால் பெரும்பாலான மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
எனினும் தனியார் நிறுவனம் ஒன்று பௌசர் மூலமாக குடிதண்ணீரை விநியோகிக்கின்ற போதிலும் அதன் தூய்மை குறித்தும் மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனை சுகாதாரப் பகுதியினர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை குடி தண்ணீர் விநியோகக் குழாய் உடைவுற்று மூன்று நாட்களின் பின்னரே அதனைத் திருத்தும் பணியை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் ஆரம்பித்தனர் என்றும் அதுவும் மந்த கதியிலேயே அந்தத் திருத்தப்பணிகள் இடம்பெறுகின்றன எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

05 ஆகஸ்ட் 2014

பிரபாகரனின் உறுதியை இந்தியா புரிந்து கொள்ளத் தவறிவிட்டது – கேணல் ஹரிகரன்

இந்தியப் படையினர் சிறிலங்காவில் போருக்குள் வீழ்த்தப்பட்டதற்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி எடுத்த உணர்ச்சி வசப்பட்ட திடீர் முடிவு மட்டுமன்றி, அவருக்கு உணர்ச்சி வசப்பட்டு ஆதரவளித்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜியும் சமமான காரணம் என்று, முன்னாள் இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியான கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் நட்வர்சிங் எழுதியுள்ள நூலில், இந்தியப் படைகளை சிறிலங்காவுக்கு அனுப்புவதற்கு முன்னர், அமைச்சரவையின் அனுமதியைப் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது குறித்து, சிறிலங்காவில் 1987 தொடக்கம், 1990 வரை இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கேணல் ஹரிகரன், கருத்து தெரிவிக்கையில்,
“ராஜீவ்காந்தி திடீர் முடிவுகளையே எடுத்தார்.
பஞ்சாபில் ஹர்சன்ந் சிங் லோங்கோவால் உடன்பாடு, போடோலாந்து என்பவற்றிலும் இதுபோன்று தான் முடிவுகள் எடுக்கப்பட்டன.
அவருக்கு கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க நேரம் இருக்கவில்லை.
முன்னாள் வெளிவிவகாரச் செயலர் ஜே.என்.டிக்சிற் 'Assignment Colombo' என்ற தனது நூலில், வெளிநாடு ஒன்றில், கிளர்ச்சியாளர்களுடன் போரிடுவதற்காக, சிறிலங்காவுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்வதை அப்போதைய வெளிவிவகார அமைச்சர். பி.வி. நரசிம்மராவ், எதிர்த்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக கொழும்பு சென்றிருந்த போதே, சிறிலங்கா பிரச்சினையின் தீவிரத்தை ராஜீவ்காந்தி உணர்ந்து கொண்டதாக, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், சிறிலங்கா விவகாரங்களில் பரிச்சயமானவருமான பேராசிரியர் வி.சூரியநாராயன் தெரிவித்துள்ளார்.
உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்ட மறுநாள், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட போது ராஜீவ்காந்தி கடற்படைச்சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார்.
அப்போது, ஜெனரல் சுந்தர்ஜியின் கருத்தைக் கேட்டார்.
இராணுவத் தளபதியாக இருந்த அவர், விடுதலைப் புலிகளை 72 மணிநேரத்தில் தோற்கடித்து விட முடியும் என்றார்.
சிறிலங்காவின் கள நிலவரங்கள் குறித்து ஜெனரல் சுந்தர்ஜிக்கு எந்த யதார்த்தமும் தெரியாது.
இதனால், சிறிலங்காவில் இருந்து 19 மாதங்களின் பின்னர், இந்திய அமைதிப் படையினர் அவமானத்துடன் திரும்பியது.
ஆனால், சிறிலங்காவின் வடக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்தமை, தனது இராணுவத்தை திசை திருப்புவதற்கும், நாட்டின் பிறபகுதிகளில் கிளர்ச்சிகளை அடக்குவதற்கும் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு உதவியது என்று சூரியநாயணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் 1987 ஜூனில், ஒப்பரேசன் பூமாலை நடவடிக்கை மூலம், இந்தியா உணவுப் பொதிகளை வீசிய பின்னர், எந்த வெளிநாட்டு உதவிகளும் வராத நிலையில், உடன்பாட்டில், கையெழுத்திடுமாறு ஜே.ஆரின் கையை இந்திய முறுக்கிய போது, அவருக்கு சிறியளவு தெரிவுகளே இருந்தன என்கிறார் கேணல் ஹரிகரன்.
இந்தியாவின் கவலைகளை சிறிலங்கா புறக்கணித்தால், இந்தியா படைபலத்தைப் பயன்படுத்த தயங்காது என்பதை இது வெளிப்படுத்தியது.
இந்த நடவடிக்கை, சிறிலங்காவில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், பங்களாதேஸ் பாணியில், இந்தியா சுதந்திர தமிழீழத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தையும் மூட்டியது.
ஆனால் உடன்பாடு ஒன்றுபட்ட இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தியதுடன், சுதந்திர தமிழீழத்துக்கான போரையும் தணித்தது.
இறுதியில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, விடுதலைப் புலிகளுடன் இந்தியாவைப் போரிட வைத்தார்.
இந்தியாவில் இருந்து, திரும்பியதும், இந்தியாவின் வரிசையில் உள்ள கால் விரலாக இருக்கமாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலையில் நிகழ்த்திய உரையை இந்திய அரசாங்கம் கவனமான எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
புலிகள் தமது ஆயுதங்களை பெயரளவுக்கே ஒப்படைத்தனர். பயன்படுத்த முடியாத, பயனற்ற ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டன.
இந்திய அரசாங்கம், புலனாய்வு அமைப்புகள், இராணுவம் என்று எல்லோருமே, தமிழீழத்தை உருவாக்குவதற்கான போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர் என்றும் கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

04 ஆகஸ்ட் 2014

வவுனியாவில் லொறிக்கு தீவைப்பு!

வவுனியா, பண்டாரிக்குளம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்னர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் லொறி தீப்பற்றி எரிந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, பண்டாரிகுளம் வீதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த லொறிக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. வீதியால் பயணித்தவர்கள் இதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற பொலிஸார் தீயை அணைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. குறித்த லொறி கிளிநொச்சியைச் சேர்ந்தவருடையது என்று தெரியவந்துள்ளது இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

03 ஆகஸ்ட் 2014

மன்னியுங்கள் தாயே... ஜெ.விடம் 'மண்டியிட்ட' ராஜபக்சே!

கடந்த வெள்ளியன்று இலங்கை பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளப் பக்கத்தில் தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை வேறு வகையில் திரித்து இழிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதியான முதல்வரைக் குறித்து பெண் என்றும் பாராமல் இவ்வாறு தரக்குறைவாக கட்டுரை வெளியிட்ட இலங்கைக்கு எதிராக கண்டணங்களும், எதிர்ப்பும் வலுத்தது.இது தொடர்பாக இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மூலமாக தனது எதிர்ப்பை பதிவு செய்தது மத்திய அரசு.அதன் தொடர்ச்சியாக கட்டுரையை நீக்கிய இலங்கை பாதுகாப்புத் துறை, தவறுதலாக அக்கட்டுரை
பிரசுரமானதாக மோடியிடமும், ஜெயலலிதாவிடமும் மன்னிப்புக் கோரியது.அந்தவகையில், கோவை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை உண்டாக்கியுள்ளன. அந்த சுவரொட்டிகள் தமது கரங்களை கூப்பிய நிலையில் ஜெயலலிதா முன்னால் மண்டியிட்டு மகிந்த ராஜபக்ச மன்னிப்பு கோருவதைப்போன்று அமைந்துள்ளன.மேலும், அதில் "தாயே என்னை மன்னித்து விடுங்கள் நான் பிழை செய்துவிட்டேன்;" என இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கோருவதைப் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

02 ஆகஸ்ட் 2014

குடிவரவு அமைச்சர் ஸ்காட் மொரிசன்கோழை!

810019-scott-morrisonகுடிவரவு அமைச்சர் ஸ்காட் மொரிசன், “இக்கட்டான” மற்றும் “கோழைத்தனமான நடவடிக்கைகளில் மிகவும் பெயர் பெற்றவர் என எதிர் கட்சி விமர்சித்துள்ளது
பல எதிர்ப்புகள் பல ஆர்ப்பட்டங்களுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கத்துடன் பேசி எப்படியாவது இவர்களை இலங்கைக்கு அனுப்பும் திட்டம் தோல்வியடைந்தும் இந்தியாவுடன் பேசி கள்ளத்தனமாக சுங்க கப்பலை இந்தியா அனுப்பியிருந்தார்.
அந்த வாய்ப்பும் தோல்வி அடைந்த காரணத்தால் புகலிடக் கோரிக்கையாளர்களை கேரட்டின் முகாமுக்கு மாற்றுவதாக நாடகமாடி அவர்களை நவ்று முகாமுக்கு அனுப்பியது வன்மையாக கண்டிக்கத் தக்கது என தெரிவித்துள்ளது
ஆனால் அரசு செய்கின்ற இந்த கடும்போக்கான நடவடிக்கை சரியானது என நியாயப்படுத்தியுள்ளார் மொரிசன் அவர்கள் .
கேரட்டின் முகாம் சிறுவர்களுக்கு மோசமானது என கூரிய எதிர் கட்சி நவ்ரு முகாமில் சிறுவர்களின் பாதுகாப்பு மிகவும் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளது.

01 ஆகஸ்ட் 2014

நல்லூர் புனித பூமியை அசிங்கப்படுத்தும் காமப்பேய்கள்!

நல்லூர்ப் பின்வீதியில் உள்ள மாநகர சபைக்குரிய மலசலகூடத்தினுள் இன்று இரவு 9 மணியளவில் காமலீலையில் ஈடுபட்ட இரு ஜோடிகளை இளைஞா்கள் சிலா் பிடித்துள்ளனா் என செய்தியொன்று தெரிவிக்கின்றது.
இவா்களில் பெண்கள் வன்னிப் பகுதியைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவருவதாகவும் மற்றைய ஆண்கள் இருவரும் அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுவரும் கடைகளில் பணிபுரிபவா்கள் எனவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இவா்களை இளைஞா்கள் சிலா் பிடித்த போது, அக் கடைகளில் இருந்தவா்களில் சிலா் பிடிபட்டவா்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் 
இவ்வாறு பிடிக்கப்பட்டவா்கள் கடும் எச்சரிக்கையின் பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளனா் எனவும் கூறப்பட்டுள்ளது.
நல்லுார் திருவிழாக் காலங்களில் இப்பகுதிகளில் இவ்வாறானவா்களின் செயற்பாடுகள் அதிக அளவில் காணப்படுவதாகவும் அங்குள்ளவா்கள் தெரிவித்திருக்கின்றனர்.
நேற்றும் இவ்வாறான நிலையில் மலசலகூடப் பகுதியில் இருவா் காணப்பட்டதாகக் கேள்விப்பட்ட சில இளைஞா்கள் அங்கு சென்ற போதே இவா்கள் பிடிக்கப்பட்டதாக தெரியவருவதாக அச்செய்தி தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வரிடம் மன்னிப்புக் கோரியது சிறீலங்கா!

இலங்கையின் பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்படுவது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதும் கடிதங்களை முன்வைத்து, எழுதப்பட்ட கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆங்கிலத்தில் ஷெனாலி டி வடுகே என்பவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தலைப்புதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையையும் இலங்கை – இந்தியா நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தையும் மீறுவதாகவும், தமிழக முதலமைச்சர் சில காரணங்களைக் குறிப்பிடுகிறார் என்பதாலேயே பிற நாடுகளுக்குச் சொந்தமான கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்போதும் இலங்கை அரசு மீது குற்றம் சுமத்த தயாராக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தங்களுடைய மீனவர்களுக்காக குரல்கொடுக்க முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோதி ஒன்றும் தன்னுடைய அச்சுறுத்தல்களுக்கு தலையாட்டும் பொம்மையில்லை என்பதை தமிழக முதல்வர் விரைவிலேயே புரிந்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.இலங்கையின் பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் வெளியார் கருத்துத் தெரிவிக்கும் பகுதியில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரைக்கு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்டணத்தைத் தெரிவித்துள்ளனர்.
“கருத்து வேறுபாடுகள் என்பது அரசியலில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பதை ஏற்க முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
“இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ் இனத்தைத் தண்டிக்கவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தவும் நரேந்திர மோடி அரசு துணிந்து விட்டதோ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்” என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை இணையதளக் கட்டுரையின் தலைப்பு தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியை தங்களுக்கு நெருக்கமானவராகவும், அவரிடம் தமிழக அரசின் முயற்சி பலிக்காது என்பது போன்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்திய நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் இது குறித்துக் கேள்வியெழுப்பினார்.இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகம், இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா தன் அதிருப்தியைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டுமென்றும் இலங்கை அரசை நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரச் செய்ய வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், தமது இணையதளத்தில் சம்பந்தப்பட்ட கட்டுரை வெளியிடப்பட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமான அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சு இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.