28 மார்ச் 2015

மைத்திரிபாலவின் சகோதரரின் இறுதிச்சடங்கு திங்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பரொருவரினால் கடந்த 26ஆம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான இவர், இன்று சனிக்கிழமை காலை மரணமடைந்தார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
1972ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி, பொலன்னறுவையில் பிறந்த இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இளைய சகோதரராவார். பொலன்னறுவை லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், கம்பஹா உடபில மகா வித்தியாலத்தில் சாதாரண தரம் வரையிலும் பயின்றார். அத்துடன் கம்பஹா கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை நொபாவௌ மகா வித்தியாலயம் ஆகியவற்றியில் உயர் தரம் பயின்றுள்ளார்.

27 மார்ச் 2015

முதல்வருக்கு அழைப்பில்லாததால் ரணிலின் அழைப்பை சிறீதரன் நிராகரிப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று பங்குகொண்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோர் பங்கேற்ற போதிலும், எஸ்.ஶ்ரீதரன் எம்.பி. அதனைப் பகிஷ்கரித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன்” என்று கூட்டமைப்பின் சிறிதரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இருப்பினும், அந்நிகழ்வில், சிறிதரன் எம்.பி கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்து கூறிய அவர், “பிரதமர் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்வுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் நானும் அந்நிகழ்வுகளுக்கு செல்லவில்லை” என்றார்.

15 மார்ச் 2015

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோரைக் கொன்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்! - மன்னார் ஆயர்.

இறுதிக்கட்டப் போரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித்தேவன், நடேசன் உள்ளிட்டவர்களைச் மஹிந்த அரசு சுட்டுக் கொன்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட அதிவணக்கத்திற்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையின் ‘நோ பயர் சோன்’ (யுத்த சூனிய வலயம்) என்ற பெயரில் சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பிலும், அதற்கு இலங்கையில் தடைவிதிக்கப்படலாம் என்று பரவலான செய்திகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், நடந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டாலேயே நல்லிணக்கம் உருவாகும். உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

13 மார்ச் 2015

மோடி யாழ்.வரும் போது பேரணி நடத்த ஏற்பாடு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில், யாழ்.நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் அமைதிப் பேரணி ஆகியன இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளளன. மக்களின் மீள்குடியேற்றம், காணாமல் போனோர் மற்றும் மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளின் துரித தீர்வுக்கு உதவுமாறு இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
வடக்கைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த அமைதிப் பேரணிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. காலை 9.30 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடுவோர், அங்கு கவனயீர்பு போராட்டத்தை ஆரம்பிப்பர். பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணியாக இந்தியத் துணைத் தூதரகத்துக்குச் செல்லவுள்ளனர். அங்கு இந்தியப்பிரதமர் மோடிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட உள்ளது.
வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, வலி.வடக்கு பிரஜைகள் குழு, மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், காணாமல் போனோருக்கான அமைப்புக்கள் ஆகியன போராட்டத்திற்கான முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளன.
மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது நலன் விரும்பிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

11 மார்ச் 2015

'நோ பயர் ஷோன்'ஆவணப்படத்தை இலங்கையில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்!

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய 'நோ பயர் ஷோன்' ஆவணப் படத்தை இலங்கையில் ஒளிபரப்பு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால அனுமதிக்க வேண்டும் என அதன் தயாரிப்பாளர் கெலும் மக்ரே கேட்டுக் கொண்டுள்ளார். சிங்கள மொழியில் பிரயாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம் பிரிட்டன் நாடாளுமன்றில் நேற்று திரையிடப்பட்டது.
இதனபோதே கெலும் மக்ரே மேற்படி கோரிக்கையை விடுத்தார். இதன்போது, சிங்கள மக்கள் உண்மைகளை அறிந்து விடக் கூடாது எனக் குற்றங்களை இழைத்தோர் எண்ணுகின்றனர். எனவே இந்த ஆவணப் படத்தை இலங்கையின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதிக்கக் கூடாது. இந்த ஆவணப்படத்தின் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

08 மார்ச் 2015

கூட்டமைப்பு சோரம் போய் விட்டது:மக்கள் பாடம் புகட்டுவர்!

பிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றி மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள் மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஆ.ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று சனிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பல உயிர் தியாகங்களையும், இழப்புக்களையும் சந்தித்த தமிழ் இனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைகுனிய வைத்துள்ளது. இது வரை காலமும் தமிழ் மக்கள் மத்தியில்; தமிழ் தேசியம், வடகிழக்கு இணைப்பு என்ற கோசம் எழுப்பியவர்கள் இன்று மாற்றானிடம் மண்டியிட்டு அமைச்சு பதவிகளை பிச்சை எடுத்துள்ளார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதிக்கு பூரண ஆதரவினை தெரிவித்து அவர் வெற்றியும் பெற்று விட்டார் இன்று வரை எமது தமிழ் சமுகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுன்வரவில்லை, இன்று பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் புலிகள் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரு சிலரையேனும் விடுவிக்கக்கோரி ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை.வடகிழக்கில் யுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான விதவைகள் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்து கொடுக்கவில்லை
இவற்றையெல்லாம் மறந்து தன்மானம் இழந்து எமது தமிழ் சமூகத்தின் சுய கௌரவத்தை கொச்சைப்படுத்தி இன்று அற்ப சலுகைகளுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சோரம் போய் விட்டார்கள். இதற்காகத்தான எமது தமிழ் சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.
இந்த மாகாணசபை முறைமை தமிழ் சமூகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்தையும் இழந்து தவிக்கும் எமது சமூகத்திற்கு மாகாணசபை ஆட்சியில் தலைமையை கைப்பற்றி முழுமையான சேவையை செய்வதை விடுத்து கிழக்கு மாகாணசபையில் அதிக தமிழ் பிரதிநிதிகளை கொண்டிருந்தும் அதிக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றும் இன்று சோரம் போய் பிச்சைப்பாத்திரம் ஏந்தி அமைச்சு பதவிகளை பெற்றிருக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் எமது உரிமைகள் வெல்லப்படும்வரை உள்ளுராட்சி தேர்தலையே புறக்கணிப்போம் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, புலிகள் மறைந்த பின் தங்கள் போலியான முகமுடியை அகற்றி உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாகாணசபை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவில் தான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்கு? இது தானா? தலைமைத்துவம். இன்று ஏனைய கட்சிகளுடன் அமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைபின் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் மேடைகளில் எதை பேசுகிறார்கள் தாங்கள் மட்டும் தான் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் ஏனைய கட்சிகளுக்கு முடியாது என்று தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வெரு தமிழருக்கும் உரிமையுண்டு தற்போது தமிழ் தேசியக் கூட்மைப்புக்குள் கொள்கை இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
இன்று இலட்சியம் கொள்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு மானம் இழந்து மரியாதை இழந்து சுய கௌரவம் இழந்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுவததை இனியும் தமிழ் சமுகம் அனுமதியாது . தமிழ் இனத்தின் உரிமைகளை உரிய முறையில் வென்றெடுக்காமல் பிச்சைக்காரன் தனது ஆராத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள்; தமிழ் சமுகம் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு ஓர் சரியான பாடத்தை எதிர்காலத்தில் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை நெஞ்சம் பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட அரசியல் வாதிகளை நினைக்கும் போது.