21 ஏப்ரல் 2015

மதுவருந்தி கூத்தடித்த மகிந்த ஆதரவாளர்கள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று இரவு உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மது அருந்தி கூத்தடித்ததாக அமைச்சர் கூறிய புகாரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஊழல் மோசடி தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபாய ஆகியோருக்கு அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கை நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்திய ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் 'சரக்கடித்ததாக' சர்ச்சை!! இதேபோல் இலங்கை நாடாளுமன்றத்திலும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் சம்மன் அனுப்பியதற்கு எதிராக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று இலங்கை நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தையும் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மது அருந்திவிட்டு கூத்தடித்தனர் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டி இருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்றும் அவர்கள் அமளியில் ஈடுபட நாடாளுமன்ற நடவடிக்கைகள் வரும் 27-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

08 ஏப்ரல் 2015

கமலினி செல்வராசன் காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி, தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளருமான கமலினி செல்வராஜன் நேற்றைய தினம் காலமானார்.இவர் காலஞ்சென்ற பிரபல வானொலி புகழ் கவிஞர் சில்லையூர் செல்வராசனின்துணைவியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

06 ஏப்ரல் 2015

நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்! நல்லூரில் பேரணி,அரசியல்வாதிகளுக்குத் தடை!

‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தொனிப் பொருளில் யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை(07.04.2015) மாபெரும் பேரணியொன்று நடைபெறவுள்ளது.
தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம், விதை குழுமம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து குறித்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. இது மக்களினதும், மாணவர்களினதும் போராட்டம். அரசியல் வாதிகளுக்குத் தடை என ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
குறித்த பேரணி தொடர்பாக மேற்படி அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வலிகாமம் பகுதியின் நிலத்தடி நீரில் ஏற்பட்டிருக்கும் மாசடைதல் தொடர்பில் பல்வேறு குழப்பகரமான ஊகங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. வடக்கு மாகாண சபை வெளியிட்ட 40 கிணறுகளைக் கருத்திற் கொண்ட ஆய்வு ரீதியான பரிசோதனை முடிவு மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தெளிவின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் மக்களால் எழுப்பப்பட்ட சாதாரண கேள்வியான இந்த நீரைக் குடிக்கலாமா? கூடாதா? என்ற கேள்விக்குப் பொறுப்பானவர்களால் பதில் அளிக்கப்படவில்லை. இந்த அடிப்படையானதும்.
எளிமையானதுமான கேள்விக்கான பதிலை வடக்கு மாகாண சபையில் நீருக்கான விசேட செயலணிpயின் தலைமையில் வழங்க வேண்டும். தலைமை பதில் அளிக்காதவிடத்து வடக்கு முதலமைச்சர் அல்லது ஆளுநர்,அரசாங்க அதிபர் ஆகியோர் இதற்கான பதிலைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த மாசடைதல் தொடர்பில் பொதுமக்களாகிய நாம் தெளிவின்றி இருக்கிறோம்.ஆகவே மக்களின் நம்பிக்கையையும், காத்திருப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு வாராவாரம் இந்த மாசடைதல் தொடர்பில் எந்த விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் எந்த எந்த இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது போன்ற தரவுகள் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
மக்களாகிய நாம் பல்வேறு தரப்புக்களையும்0 உதவிக்காக அணகினோம்.எமது குரலை வெளிப்படுத்தக் கோரினோம். ஆனால் குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகள் கூடக் கிடைக்கவில்லை. ஆகவே, விசேட செயலணியின் நிரந்தரத் தீர்வை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர், ஆளுநர் மற்றம் அரசாங்க அதிபரின் கூட்டுத் தலைமை மற்றும் கூட்டுப் பொறுப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும். இதுவே, செயல்திறன் மிக்க அணியாக இருக்கும் என்பது மக்களின் கருத்து.
மேற்குறித்த அம்சங்களை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவைத் தெரிவித்து மாபெரும் பேரணி நாளை செவ்வாய்க்கிழமை காலை 08 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்துக் கோயில் வழியாகச் சென்று முதலமைச்சர், அரசாங்க அதிபர் மற்றும் உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதி ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.
இது ஒரு கடைசிப் போராட்டமாக இருக்கும். இதன் போது மாணவர்களும்,பொதுமக்களும் ‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ என்ற கோஷத்துடன் இணைக்கப்படுவர். நாம் பொறுமையை இழந்து விட்டோம்.
நாம் எமது வாழ்வாதாரப் பிரச்சினை பற்றிப் பேசப் போகிறோம்.தமது இயற்கைக்காகவும்,தமது எதிர்காலச் சந்ததிக்காகவும் தமது வாழ்நாளில் ஒரு நாளைக் கொடுக்கத் தயாராகும் ஒவ்வொரு மனிதனையும் நாங்கள் நல்லூர் முன்றலில் சந்திக்க விரும்புகிறோம்.
முற்று முழுதான அரசியல் கலப்பற்ற பேரணியாக இது அமையும்.எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாது. சுருக்கமாகச் சொன்னால் இது மக்களதும், மாணவர்களதும் போராட்டம்.
அரசியல் வாதிகளுக்குத் தடை. இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்புக்களும்,பொது அமைப்புக்களும் கலந்து கொள்ளவுள்ளன.
இன மத பேதமற்ற ஒரு பேரணியாகவும் இது அமையும். நீருக்காகவும் எமது எதிர்காலத்திற்காகவும் ஒன்று திரள்வோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.