28 ஜூன் 2015

ஐ.நா.போர்க்குற்ற அறிக்கையில் மகிந்த சகோதரர்கள்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம் என்று ஐ.நா வட்டாரங்களை மேற்கோள்காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை தொடர்பான விசாரணைகளில், குறித்த நபர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் மேலும் ஐந்து இராணுவ ஜெனரல்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவர்கள் மீது கட்டளையிடல், கடத்தல், மனித படுகொலை, வழிநடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்மாக ஒப்படைக்கப்பட உள்ளது. அத்துடன் இந்த அறிக்கை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளின் போது வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 ஜூன் 2015

வித்தியா கொலை தடையங்களை அழிக்க சிரமதானம்!துவாரகேஸ்வரன் குற்றச்சாட்டு!

வித்தியா படுகொலை சூத்திரதாரிகளை காப்பாற்ற திட்டமிட்ட சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஐ.தே.கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சட்டத்தரணி தவராசா ஆகியோர் இவ்விடயத்தினில் பின்னின்று செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வித்தியா படுகொலை தொடர்பிலான சான்றாதரங்களை அழிப்பதற்கு சிரமதானமென்ற பேரினில் புங்குடுதீவினில் கனரக வாகனங்கள் மூலம் தடயங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.வித்தியாவினது உறவுகளது எதிர்ப்பினை தாண்டி அவ்வாறு தடயங்கள் அகற்றப்பட்டுள்ளன.
வித்தியா படுகொலை வழக்கினை குழப்பியடிக்கவும் குற்றவாளிகளை தப்ப வைக்கவும் சுவிஸிலிருந்து பெருமளவு பணம் கைமாற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆவணங்கள் எனக்கு கிட்டியுள்ளது.அவை விரைவினில் அம்பலப்படுத்தப்படும்.
சட்டத்தரணி தவராசா பொறுப்பாக கடமையாற்றாமையினாலேயே அரச சட்டத்தரணிகளாக மூவரை கொழும்பிலிருந்து தருவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அவர்களுள் ஒருவர் எனது சகோதரன் மகேஸ்வரன் படுகொலை சூத்திரதாரிக்கு மரணதண்டனை வாங்கிக்கொடுத்த திறமையாளன்.
வித்தியா கொலை சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.மக்களது நிலைப்பாடும் அவ்வாறாகத்தான் உள்ளது.
குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இத்தகைய கும்பல்கள் செய்யும் முயற்சி வெற்றி அளிக்காதெனவும் அதற்கு மக்கள் அனுமதிக்கப்போவதில்லையெனவும் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசியல் நோக்கமேதுமின்றி வித்தியாவின் படுகொலையாளிகள்; தண்டிக்கப்படவேண்டுமெனவும் அதற்காக குரல் கொடுத்து சிறை சென்றிருந்த 150 பேரிற்கும் பொறுப்பாக வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

01 ஜூன் 2015

ஓமந்தையில் சிறுமி மர்மமான முறையில் மரணம்!

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர்
பெண்கள் சிறுமியருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலியல் சித்திரவதைகள் என்பவற்றுக்கு முடிவுகட்டி, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாடளாவிய ரீதியில் குரல் கொடுக்கப்பட்டு வரும் வேளையில், ஓமந்தை பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தனது கொட்டில் வீட்டிற்குள் கழுத்தில் சுருக்கிட்டு மர்மமான முறையில் இறந்த நிலையில் திங்களன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த சிறுமியின் தாய் தந்தையர் வவுனியா நகருக்கு முக்கிய அலுவல் காரணமாகச் சென்றிருந்தபோது தனிமையில் அந்த சிறுமி வீட்டில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லாதிருந்த இந்தச் சிறுமியே, தனது தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிந்தபோது சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்றிருந்தார். உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி:பிபிசி தமிழோசை