31 ஜனவரி 2016

ஒரு பெண் போராளியின் வாழ்க்கைப் போராட்டம்!

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகவுள்ளன. இந்த நிலையில் போருக்குப் பின்னரான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் பற்றி பேசுகின்ற இலக்கியப் படைப்புகள் பல வெளிவருகின்றன.
அந்த வகையில், முன்னாள் போராளிகளான பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கும் விதத்தில் யாழிசை என்ற நாவல் ஒன்று வெளிவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட இந்த நாவல், இலக்கிய உலகில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நாவலை எழுதிய சிவ ஆரூரன் என்ற சிவலிங்கம் ஆரூரன் ஒரு பொறியியல் பட்டதாரி.
மெகசின் சிறைச்சாலையில் கடந்த 8 ஆண்டுகளாக 'அரசியல்' கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சிவ ஆரூரனின் முதல் இலக்கிய முயற்சி இந்த நாவல் தான்.
சிறைச்சாலையில் நூல் வாசிப்பு மூலம் பெற்ற இலக்கிய அறிவையும் வாழ்க்கை அனுபவத்தையும் கொண்டு அவர் இந்த நாவலை எழுதியுள்ளார்.இந்த நாவல் பற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வவுனியாவில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளரும் திறனாய்வாளருமாகிய நடராஜா பார்த்தீபன், 'அண்மைக் காலத்திலே நான் வாசித்த நாவல்களிலேயே இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல் என்று கூற விரும்புகிறேன்' என்றார்.'யாழிசை நாவலின் கதாநாயகி சமூகத்திலே படுகின்ற துன்பங்களையும், கஸ்டங்களையும் இந்தக் கதையின் ஊடாகக் காட்டுகின்ற நாவலாசிரியர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் இன்றைய சமூக வாழ்க்கையை குறியீடாக சித்தரித்திருக்கின்றார் என்பதை மறுக்க முடியாது' என்றார் பார்த்திபன்.
எம் மண்ணின் மைந்தர்கள் பற்றி தத்ரூபமான கதையை நாவலாசியர் அமைத்துள்ளார் என்றார் பார்த்திபன்.

நன்றி:பிபிசி தமிழோசை

23 ஜனவரி 2016

வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ஜெர்மனி!

ஜெர்மனியின் எசன் நகர்
உலகிலே வாழ்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 41 ஆவது இடத்திலுள்ளது. இதில் ஜெர்மனி முதலாம் இடத்திலும் கனடா, பிரித்தானியா ஆகியன இரண்டாம், மூன்றாம் இடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அண்மையில் உலகப் பொருளாதார மாநாடு சுவீடனில் உள்ள லாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களிடையே இது தொடர்பான கருத்துக்கணிப்பு நடைபெற்றபின்னரே இந்தப் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. இதில் முன்னணியில் இருக்கும் 60 நாடுகளின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்து. உலகின் 60 நாடுகளின் கலாசாரம், தொழில், பாரம்பரியம், வர்த்தகம், வாழ்கை தரம் போன்ற 24 வகை தகுதிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண்களின் அடிப்படையில் இதில் முதலாம் இடத்தினை ஜேர்மனி, இரண்டாம் மூன்றாம் இடத்தினை முறையே கனடா, பிரித்தானியாவும் பெற்றுள்ள நிலையில் 4 ஆம் இடத்தினை அமெரிக்காவும் பெற்றுக்கொண்டன. மேலும் ஐந்து தொடக்கம் 10 வரையில் முறையே சுவீடன் (5), அவுஸ்திரேலியா (6), ஜப்பான் (7), பிரான்ஸ் (8), நெதர்லாந்து (9), டென்மார்க் (10) ஆகிய நாடுகளும் பெற்றுக்கொண்டன. இதில் சீனா 17ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

11 ஜனவரி 2016

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (38). இவரது மனைவி கலைச்செல்வி (32). இவர்களுக்கு கவிப்பிரபா (13), நவீனா (7) என்று இரு பெண் குழந்தைகளும், பத்து மாதத்தில் குகன் என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.நவீனாவுக்கு காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தது. கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல, பத்து மாத குழந்தை குகனுக்கும், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது, சில நாட்களுக்கு முன் தெரியவந்தது.குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு குறித்து, கலைச்செல்வி தொடர்ந்து கவலையுற்று வந்துள்ளார். இதனால், மேலும் விரக்தியடைந்த கலைச்செல்வி, நேற்று காது குறைபாடுள்ள இரு குழந்தையும் தன்னுடைய உடலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு, கயிற்றின் இன்னொரு முனையில் பெரிய கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.இந்நிலையில், அதிகாலையில் தூங்கி எழுந்த மூத்த மகள் கவிப்பிரபா, தனது தாய், தங்கை, தம்பியை காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை எழுப்பியுள்ளார்.கதவை திறந்து பார்த்தபொழுது வீட்டின் வெளிப்பக்கக் கதவு பூட்டியிருந்ததால், அருகில் உள்ள ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து திறக்கச் சொல்லியுள்ளார். பின்னர், கலைச்செல்வியையும் குழந்தைகளையும் தேடிப்பார்த்துள்ளனர்.எங்கும் காணாததால், மீண்டும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலைச்செல்வி எழுதி வைத்திருந்த கடிதம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த செல்வராஜ, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன் பேரில், உடுமலை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து, சடலங்களை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.