13 பிப்ரவரி 2016

மீண்டும் ஒப்பந்தம் இட்டனர் தி.மு.கவும் காங்கிரசும்!

தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை தி.மு.க.காங்கிரஸ் இணைந்து சந்திக்கும் என இருகட்சிகளும் தெரிவித்துள்ளன. தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இடையேயான சந்திப்பையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது.காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் ஆகியோர் சனிக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்திற்கு வந்து சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், தி.மு.க. - காங்கிரஸ் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார்.எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது இனிமேல்தான் முடிவுசெய்யப்படும் என்றும் இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுமா என்பதை தி.மு.க. தலைமையே முடிவுசெய்யும் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.ஈழப் பிரச்சனையை முன்வைத்து 2013ஆம் ஆண்டில் தி.மு.க.வும் காங்கிரசும் பிரிந்த நிலையில், இப்போது மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது குறித்துக்கேட்டபோது, அரசியலில் பல்வேறு நெருக்கடிகள், சூழல் காரணமாக பல்வேறு விதமான முடிவுகளை எடுக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால், பெரும்பலான தருணங்களில் இந்த இரண்டு கட்சிகளுமே இணைந்து தேர்தலை சந்தித்திருப்பதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தே.மு.தி.கவுக்கு கருணாநிதி ஏற்கனவே ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன. 2013ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக எழுந்த பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இரு கட்சிகளுமே தனித் தனியாக சந்தித்தன.

09 பிப்ரவரி 2016

யாழ்,பிரதேச செயலகங்களுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நியமனம்!

வட,மாகாணசபை
யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலுமுள்ள தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் செயற்படுவதற்காக, வட மாகாண சபை உறுப்பினர்களை ஒவ்வொரு பிரதேச செயலகம் ரீதியாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.பிரதேச செயலகங்களுக்குரிய அபிவிருத்தி, ஏனைய துறைசார் பௌதீக வள தேவைகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை மாகாண சபை உறுப்பினர்கள் முன்னெடுப்பதுடன், அவர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை மட்டும் தன்னிடம் முறையிடுமாறு முதலமைச்சர் தெரிவித்ததுள்ளார். இதன்மூலம், வட மாகாணத்துக்குட்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி, ஏனைய துறைசார் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை இலகுவில் நடைமுறைப்படுத்துவதற்கு வடமாகாண சபையால் முடியும் என எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

நியமனம் பெற்றோர் பெயர்விபரம்:
01.அனந்தி சசிதரன்- வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை)
02. எம்.கே.சிவாஜிலிங்கம்- வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி)
03. விந்தன் கனகரட்ணம் - காரைநகர்
04. பா.கஜதீபன்- நல்லூர்
05. ச.சுகிர்தன் - வேலணை தெற்கு, நெடுந்தீவு
06. கே.சயந்தன்- யாழ்ப்பாணம்
07. கே.சர்வேஸ்வரன்- கரவெட்டி
08. ஆ.பரஞ்சோதி- உடுவில்
09. சி.தவராசா- பருத்தித்துறை
10. வே.சிவயோகன்- கோப்பாய்
11. எஸ்.அகிலதாஸ் - ஊர்காவற்றுறை
12. கே.தர்மலிங்கம்- சங்கானை, சண்டிலிப்பாய்
13. இமானுவல் ஆர்னோல்ட்- சாவகச்சேரி

03 பிப்ரவரி 2016

தமிழீழம் குறித்துப் பேசுவதில் பயனில்லை-சிறீதரன்

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிறிதரன் தெரிவித்ததாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சிவஞானம் சிறிதரன்,
“தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிடவில்லை. தமிழீழ கோரிக்கைக்கு அப்பால் சென்று தீர்வை முன்வைத்து போட்டியிட்டவர்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர். கிடைக்கப்போகும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலுள்ள அரசியலமைப்புக்களை போன்றதொரு அரசியலமைப்பை இலங்கையில் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை ஆதரிக்க வேண்டும். தமிழீழம் பற்றி பேசி, புதிய அரசியலமைப்பு முயற்சிகளை குழப்பாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இன்று சிறிதரன் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் நிறுவனத் தலைவரான தந்தை செல்வா அவர்கள் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி 1976 ஆம் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தது. “மேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.” என தீர்மானத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தை செல்வா அவர்கள் தீர்மானத்துடன் நின்றுவிடாது, மக்கள் கருத்தை அறியும் முகமாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியானது இந்த தீர்மானத்தை முன்வைத்து மக்கள் ஆதரவைக் கோரியது. தமிழ் மக்களும் அமோக ஆதரவைத் தெரிவித்து கூட்டணியை வெற்றிபெறச் செய்தார்கள் என்பது வரலாறு,
ஆனால் அதன் பிறகு தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியோ தாம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை. தமிழீழத்தை கைவிடுகிறோம் என எந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டு மக்களைச் சந்தித்ததில்லை . நிலைமை இப்படியிருக்கும்போது தமிழ் மக்கள் தமிழீழத்தை நிராகரித்துவிட்டார்கள் என்று சிறிதரனால் எப்படி முடிவுக்குவர முடிந்தது. அடுத்து வரும் தேர்தல்களில் சிறிதரனாவது கிளிநொச்சியில் ‘தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம்’ ‘என் தலைவர் பிரபாகரன் இல்லை சம்பந்தன் தான் ‘ என்ற உண்மையைச் சொல்லி வாக்குச் சேகரிப்பாரா என்பது சமானியர்களின் கேள்வி.

நன்றி:தமிழ் லீடர்