29 ஜூலை 2016

தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் முடிவில் மாற்றமில்லை-அங்கெலா மெர்கல்

ஜெர்மனியில் சமீபத்தில் தஞ்சம் கோரி வந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில்,தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் தன்னுடைய கொள்கையை கைவிட முடியாது என ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் குடியேறிகளாக வந்த இருவர், இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் அமைப்பின் பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தியதன் மூலம், அவர்களுக்கு ஆதரவளித்த நாட்டை கேலி செய்துள்ளனர் என்று அங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் பாதுகாப்பை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளார்.
ஆனால்,ஜெர்மனியின் வெளிப்படையான கலச்சாரத்தை தீவிரவாதிகள் குறைத்து மதிப்பீடு செய்வதை அனுமதிக்க முடியாது என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

25 ஜூலை 2016

ஜெர்மனியில் மீண்டும் தாக்குதல்!

ஜெர்மனியில் இசை விழா ஒன்று நடந்த இடத்துக்கு வெளியே குண்டை வெடிக்கச் செய்த சிரியாக்காரர் பல்கேரியாவுக்கு நாடுகடத்தப்படவிருந்தவர் என்று ஜெர்மனி கூறுகின்றது.
தற்கொலை செய்துகொண்ட தாக்குதலாளி பன்னிரெண்டு பேரை காயமடையச் செய்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு தெற்கு மாநிலமானபவாரியாவில் அன்ஸ்பக் நகரில் நடந்துள்ளது.
இசை விழா நடந்த அரங்குக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தாக்குதலாளி தனது முதுகுப் பையில் இருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
ஜெர்மனியின் தெற்கு நகரான அன்ஸ்பர்க்கில் இசை திருவிழா ஒன்றில் 15 பேரை காயமடையச் செய்த தாக்குதலுக்கு, தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதல்தாரி தயாரித்த கைபேசி வீடியோவில், ஐ .எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பகாடியிடம் தாக்குதல் தாரி தனது விசுவாசத்தை காண்பிப்பதாக தெரிகிறது என பவேரியன் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் நாட்டின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தஞ்சம் மறுக்கப்பட்ட சிரியா நாட்டு நபர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, பொது இடங்களில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க ஜெர்மன் உள்துறை அமைச்சர் தாமஸ் டி மைசிரி உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல்தாரி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெர்மன் வந்ததாகவும், அங்கு தஞ்சம் மறுக்கப்பட்டதால் பல்கேரியாவிற்கு செல்ல இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ்

22 ஜூலை 2016

ஜெர்மனியில் தாக்குதல் பலர் பலி!

தெற்கு ஜெர்மன் நகரான முனிஸில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.
அங்கு காவல்துறையினர் சுற்றி வளைத்து எதிர் நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரி ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.ஒலிம்பியா வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதிக்கு மக்களை வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் பல பேர் உயிரிழந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக காவல்துறை கூறுகிறது.திங்கட்கிழமையன்று போவேரியாவில் குடியேறி ஒருவர் தொடரூந்தில் ஐந்து பேரை குத்தியதை அடுத்து பாதுகாப்பு படைகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.மேலும் பல தாக்குதல்கள் நடக்கலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.ஒரு தாக்குதல்தாரியைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் உலங்குவானூர்திகள்  பறப்பதாகவும், கடைகளில் உள்ள ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிகிறது.

19 ஜூலை 2016

ஜெர்மனியில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!

ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் தொடரூந்து ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கானிஸ்தான் குடியேறி ஒருவரை ஜெர்மானியப் போலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.இந்தக் குடியேறி கையில் ஒரு கோடாரி மற்றும் ஒரு கத்தியால் பயணிகளைத் தாக்கியதாகவும், அவரால் தாக்கப்பட்டவர்களில் நால்வர் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.
பவேரியா மாகாண உள்துறை அமைச்சர் ஜோயாச்சிம் ஹெர்மன் இந்த தாக்குதலுக்கான உள்நோக்கம் என்னவென்று இது வரை தெரியவில்லை என்றார்.
பிரான்ஸில் நடந்ததைப் போல இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்கள் ஜெர்மனியிலும் நடக்கலாம் என்று கணிசமானவர்கள் அஞ்சுவதாக  ஜெர்மனியில் உள்ள பிபிசி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளதாக "பிபிசி தமிழ்" செய்தி வெளியிட்டுள்ளது.

16 ஜூலை 2016

துருக்கியில் 200பேர்வரை பலி!

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுக்க நடந்த மோதல்களில் சுமார் 200 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள்.
துருக்கியின் இரு பெரு நகரங்களான இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் ஒரே இரவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, 1500க்கும் மேற்பட்ட ஆயுத படையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி அதிபர் ரீஸெப் தாயிப் எர்துவான் தொலைக்காட்சி உரையில், இந்த முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
தன்னுடைய அரசை கவிழ்க்க செய்யப்பட்ட முயற்சிகள் தேசத்துரோக செயல் என்றும், ராணுவம் சுத்தபடுத்தப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
29 கர்ணல் மற்றும் 5 தளபதிகள் இதுவரை துருக்கி ராணுவத்தில் தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாோஸ்போரஸ் நீரிணை மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட படையினர் கையை மேலே தூக்கியபடி சரணடைய வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒன்று காட்டியது.

நன்றி:பிபிசி தமிழ்

08 ஜூலை 2016

சிங்கள மயமாகிறது நாயாறு! தமிழர் செல்ல அனுமதி மறுப்பு!!

சிங்கள மயமாகிறது நாயாறு! தமிழர் செல்ல   அனுமதி மறுப்பு!! - இராணுவம் துணைபோகிறது   எனக் குற்றச்சாட்டுமுல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன எனவும், தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அந்த கிராமத்திற்குள் நுழைவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் முல்லைத்தீவு மீனவ அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை இராணுவமும் அதற்குத் துணைபோகின்ற அதிகாரிகளும் நாயாறு கிராமத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையை பூர்த்திசெய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:- முகத்துவாரம் கிராமத்தை தமிழ் மக்களிடமிருந்து கைப்பற்றிய பின்னரே நாயாறு கிராமத்தை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. இப்பகுதியில் 299 சிங்கள குடும்பங்களைக் குடியேற்றும் பணி தற்போது பூர்த்தியடைந்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட கடலோரப் பகுதியில் தற்போது நிரந்தரமாக வாழத்தொடங்கியுள்ளனர்."குறிப்பிட்ட பகுதி இராணுவ வலயமாகப் பேணப்படுகின்றது. தமிழர்களும் கிராம சேவகர்களும் இந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாக அனுமதி மறுக்கப்படும் நிலை காணப்படுகின்றது'' என்று கரைத்துறைப்பற்று தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரிய கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டி சிங்கள குடியேற்றத்திற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றபோதிலும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு சிங்கள மீனவர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை வழங்கிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மீனவர்களுக்கென அமைக்கப்பட்ட கூட்டுறவுச்சங்க கட்டடத்தை சிங்கள மீனவர்கள் முற்றாக ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1983ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்டது நாயாறு கிராமம். இதன் காரணமாக முழு கிராமமும் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலையேற்பட்டது. 27 வருடங்களுக்குப் பின்னர் 2010இல் மீண்டும் குறிப்பிட்ட அளவு குடும்பங்கள் குடியேறின. எனினும், தற்போதைய அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் அந்தப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட பெரும்பான்மை மீனவர்களால் அந்தப் பகுதியின் தமிழ் கிராமத்தவர்களால் விரட்டப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.