21 அக்டோபர் 2016

யாழ்,பல்கலை மாணவர்கள் படுகொலை!ஐவர் கைது என தெரிவிப்பு!

கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.மாணவர்களின் கொலை தொடர்பிலான விசாரணைகள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் வருட மாணவர்களான கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷ்ன் என்ற 24 வயதுடைய மாணவனும், 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் என்ற 23 வயதுடைய மாணவனும் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் உயிரிழந்திருந்தனர். கந்தரோடையில் இருந்து யாழ்ப்பாணம் - பல்கலைக்கழக விடுதிக்கு, சென்று கொண்டிருந்த போது, கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இவர்கள் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக மாணவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாணவன் சுலக்சனின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதை சட்ட மருத்துவ அதிகாரி தனக்குக் காட்டியதாக அவரது தந்தையார் தெரிவித்தார்.
இதனால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம், இந்தக் கொலைகளுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை பகிஷ்கரித்துள்ளதுடன், உயிரிழந்த மாணவர்களின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பதாதைகளையும் தொங்கவிட்டுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடிகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.

14 அக்டோபர் 2016

அவுஸ்திரேலியாவில் மேயர் தர்மராசாவான ஈழத்தமிழன்!

நானும் லவனும் எங்கிருந்து வந்தோம், நாங்கள் யார், என்றில்லாமல் கிடைத்த சந்தர்ப்பங்களை இறுகப் பற்றிக் கொண்டோம்... சுய தலைமைத்துவப் பாடங்கள் ஆறு. மேயர் சேரலாதன் தருமராசா லவன், அவுஸ்திரேலிய இராணுவ மேயர் பற்றிப் பெருமை கொள்ளாது இருக்க முடியாது. நானும் அவரும் 19 வயதில் அவுஸ்திரேலிய மண்ணில் புகலிடம்கோரி 10ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். அவருடைய அனுபவங்கனைப் பகிர்வதில் எனக்குப் பெருமையாக உள்ளது. நீங்கள் எங்கு தொடங்குகிறீர்கள் என்பதில்லை எங்கு போகிறீர்கள் என்பதுதான். லவன் 15 வயதில் ஒரு அகதியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்தார், சகோதரியாருடனும், தாயாருடனும். அவருடைய தந்தை இல்லை. தாயார் ஒரு பரதநாட்டிய ஆசிரியர். அதனால் சீவியத்திற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. லவன் கடையில் வேலை செய்து குடும்பத்திற்கு உதவினார். குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு அவருடைய தோளில் விழுந்தது. எனினும் அவுஸ்திரேலியா அவருக்குப் பாதுகாப்பும் சந்தர்ப்பமும் அளித்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை கடும் உழைப்புடனும் விடாமுயற்ச்சியுடனும் சரியாகப் பயன் படுத்தினார். நானும் லவனும் எங்கிருந்து வந்தோம்?நாங்கள் யார்?என்றில்லாமல் கிடைத்த சந்தர்ப்பங்களை இறுகப் பற்றிக் கொண்டோம். உங்கள் கனவுகளை அடைய நேர் பாதை இருக்காது. லவன் என்றும் பட்டாளத்தில் சேர்வது போலிருக்கும். லவன் எல்லோருக்கும் விக்கிப்பீடியாதான். எனக்கு தேவையான எல்லாம் கற்றுக் கொடுத்தான்.
ஆனால் எதுவும் எண்ணியபடி நடப்பதில்லை. சீவியத்திற்குரிய பிளைப்பைத்தேட வேண்டும். நாம் ஒரு குடிபெயர்ந்த சமூகம். கிடைத்ததைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எப்படியோ சீவியம் பண்ணவேண்டும்.
லவன் சிட்னிக்குப் போனான். அங்கே ஆமி சேமப்படையில் பதிந்து கெண்டான். பட்டதாரித் தொழிலுக்கு விண்ணப்பிக்கவில்லை. அம்மாவுக்காகப் படித்த பட்டம்தானே! அவனுக்கு தான் என்ன செய்கிறேன் என்பதே தெரியாது.
அமைதியாக றோயல் மிலிரறி கொலீச்' சில் சேர்ந்தான். மனைவிக்குக்கூடத் தெரியாது. யாருக்கும் சொல்லவில்லை. தன் வருங்காலத்தைப் பணயம் வைத்தான்.
காலத்தின் விளைவாலும் விதி விட்ட வழியாலும் அவனுடைய விடா முயற்சியாலும் சரித்திரம் படைத்தான்.
தியாகங்களுடன் பிரயாணம் ஆனால் அன்பின் உழைப்பு லவனுடைய இளவயது ஆசை நிறைவேறியது. ஆனால் இன்னமும் தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. அவனுடைய பாதை சுலபமானதாக இல்லை. குடும்பத்தைப் பிரிந்து கடமை நிமித்தம் அவுஸ்திரேலியாவின் பல பாகங்களுக்கும் சென்றான். ஆனால் மிக உபயோகமானது என்றே சொல்ல வேண்டும்.
எதற்கும் ஒரு குழுத் தேவை. நான் அறிந்த மட்டில் லவன் நண்பர்களுடன் ஒளிவு மறைவின்றிப் பழகுவான். அவனுடைய மனைவி அவனுக்கு உறு துணை. அவனுடைய எல்லா முயற்சியிலும் அவளே கதாநாயகி. ஏன் லவனுக்கு அவளே வழிகாட்டி. லவனால் கட்டப்பட்ட கோட்டையின் அத்திவாரமே அவள்தான். உங்களுக்கு ஒரு கனவு நனவாக வேண்டுமானால் புத்திசாலித்தனமாக குழுவைத் தெரிவு செய்யவேண்டும். தனி மரம் தோப்பாகாது. தினமும் சிறிய செயல்கள் மீட்டவல்லவன் ஆமையும் முயலும் போட்டிபோல தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றிலும் நிதானமாக இருப்பான்.
ஒவ்வொரு அடிக்கும் பின்னால் அடுத்த அடியை வைத்துக் கொண்டே இருப்பான்.
வேர்களை மதியுங்கள். உங்கள் வினைச்சலுக்குக் காரணமானவர்களைப் பெருமைப் படுத்துங்கள்.
லவன் பெருமையுடன் ஒரு அவுஸ்திரேலியன்! பெருமையுடன் ஒரு தமிழன். இரண்டும் அவனுக்கப் பெறுமதியானவை. இது எல்லா குடியேற்ற வாசிகளுக்கும் அகதிகளுக்கும் பொருந்தும்.
லவன் இலங்கையிற் பிறந்து தமிழனாக வளர்க்கப்பட்டவன். போரின் கொடுமைகளை அனுபவித்த குடும்பம். லவன் பெருமையுடன் தமிழ் பேசவும் எழுதவும் செய்வான்.
அவனுக்கு தன் மொழி பண்பாடு சரித்திரம் யாவற்றிலும் அபாரப் பெருமை. யார் என்ன கூறினாலும் விட்டுக் கொடுக்க மாட்டான்.
ஆனால் அவுஸ்திரேலியாதான் அவனுக்கு வாழ்வு கொடுத்தது என்பதைக் கூறத்தவறமாட்டான். தன் நாடு தரத் தவறியதை தந்தது அவுஸ்திரேலியாதான் என்ற விசுவாசம் அவனுக்கு என்றும் உண்டு.
அதனால் அவன் அதனைப் பெருமைப் படுத்துவான். அவுஸ்திரேலியன் போலவும் இருப்பான் இலங்கையன்போலவும் இருப்பான்.
வேர்களை நினையுங்கள். உங்கள் விளைச்சலுக்குக் காரணமானவர்களை மறவாதீர்கள்.
லவன் பட்டாளத்தில் சேர எண்ணிய போது எனக்குப் புரியவில்லை. அது அவனுடைய கனவு! அவன் இன்று அதனை நனவாகக் காண்கிறான்! மேயர் தருமராசாவாக! அவனுடைய 35வது பிறந்த நாளில்! ஒரு பெரிய சாதனை! ஒரு சிறிய அகதிப் பையனுக்கு! வாழ்த்துக்கள்!
இது வெறும் தொடக்கம்தான்...! உனக்கு ஒரு பெரிய எதிர்காலம் உண்டு.

நன்றி:செய்தி இணையம்
 

02 அக்டோபர் 2016

பிரபாகரன் தெய்யோ…சிங்கள பெண் சிப்பாய்கள் நெகிழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பனம் பழம் சீசன். தீவுப்பகுதியில் கடமையிலிருந்து விட்டு விடுமுறையில் வீடு செல்வதற்காக புறப்பட்டு வந்து யாழ்ப்பாணம் நகரத்தில் பனம் பழப்பாணி, பனாட்டு, கருப்பட்டி, பனங்குட்டான் என்று ஆர்வத்தோடு வாங்கிக்கொண்டிருந்த பெண் இராணுவ சிப்பாய்களுடன் பேச்சுக்கொடுத்தோம்.
அவர்கள் தெறிக்க விட்டவற்றிலிருந்து ஒரு பகுதியே இது…
பிரதான வீதியிலிருந்து உள்ள பஸ்ஸே ஓடாத எட்டு பத்து கிலோமீற்றர்கள் கால் நடையாக நடந்தே வரவேண்டிய குக்கிராமங்களிலிருந்து முன்பெல்லாம் நாங்க சரியா கஸ்டப்பட்டிருக்கிறம். சுமாரா படிச்சிருந்தும் வேலையில்ல. எங்கட வாழ்க்கை எப்புடி அமையும், எப்பிடி குடும்பத்தை கொண்டு நடத்தப்போறம் என்ற பயம் வேற மனசுக்குள்ள ஓடிக்கொண்டேயிருக்கும்.
ஆனா… எங்களுக்கு பிரபாகரன் தான் தெய்யோ (தெய்வம்). இந்த தொழில், வாழ்க்கை, சந்தோசம் எல்லாமே எங்களுக்கு அவரால தான் கிடைச்சது. தெய்யோ… இல்லாட்டி இப்பயும் நாங்க ஊரில சரியா கஸ்டப்பட்டுக்கொண்டு தான் இருப்பம். இப்பயும் நெறைய புள்ளைங்க ஊரில கஸ்டப்பட்டுக்கொண்டிருக்காங்க.
அதப்பார்க்கேக்க எங்களுக்கு தெய்யோ… பிரபாகரன் தான் நெனைப்புக்கு வரும். தெய்யோ… இருந்தா இப்ப அவையளுக்கும் ஆமியில வேலை கெடைச்சிருக்கும்.
ஆமியில சேர்ந்தாப்புறம் ஆரம்பத்தில எங்களுக்கு பயமாய் தான் இருந்திச்சு. ‘கொட்டியா தாக்கும் எப்பயும் உஸ்ஸாரா இருங்கன்னு’ மேலதிகாரிகள் பயமுறுத்திக்கிட்டே இருப்பாய்ங்க. அப்புறம் எங்க மேல (பெண் இராணுவ படைகள் மீது) தாக்க வேணாம்முன்னு தெய்யோ… தன்ட கொட்டியாவுக்கு (விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கு) கொம்மாண்ட் (உத்தரவு) கொடுத்திருப்பதாக எங்கட மேல்மட்டத்தில பேசிச்சினம். அப்பத்தான் எங்களுக்கு உசிர் மேல நம்பிக்கையே வந்திச்சு.
(தங்களுக்குள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரிக்கிறார்கள்)
(அப்புறம் மேல சொல்லுங்க என்று கேட்கிறோம்)
ம்… எப்பவாய்ச்சும் வீட்டில இருந்து போனில அம்மா அப்பா நங்கி தம்பின்னு பேசுவாங்க. மாசத்தில மூனு காகிதமாய்ச்சும் (கடிதம்) போடுவாங்க. ஜாக்கிரத… ஜாக்கிரதன்னு சொல்லித்தான் எழுதியிருப்பாங்க. கவலையாய்யிருக்கும். லீவுல வீட்லப்போய், ‘எங்க மேல தாக்க வேணாம்முன்னு’ பிரபாகரன் தன்ட கொட்டியாவுக்கு கொம்மாண்ட் போட்டிருப்பதாகச் சொன்னம். ஊரில எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க. அதுக்கு மேல வீட்ல உசிர் பத்தி பயம் இல்லாம எல்லாரும் சந்தோசமா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க.
ஆனா… பிரபாகரன் கவுரம் பிடிச்சவர். தன்ட பெண் கொட்டியாவக்கொண்டு (விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்) உங்கள தாக்குவினம். உஸ்ஸாரா இருங்கன்னு மேலதிகாரிகள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனா… எங்களுக்கு அப்பிடியொரு சம்பவமே நடக்கேல்ல.
(தெய்யோ… தெய்யோ தான் என்று கோரஸ்ஸாக சத்தம் போட்டு சிரிச்சுக்கொண்டு சொன்னவர்கள். சட்டென சீரியஸ் ஆகி, ஹலோ… தெய்யோ இருக்கா? என்று மறுகேள்வி கேட்டு விட்டார்கள்)
எதிர்பாராத இந்தக் கேள்வியால் அப்படியே நிலைகுலைந்து போய்விட்டோம். (அவர்களுடைய முகம் விகாரமடைவதை உணர முடிந்தது)
ஹலோ… என்ன சொல்லுங்க… தெய்யோ இன்னவா? என்று மறுபடியும் அவர்கள் குரல் கேட்டு சுதாகரித்துக்கொண்ட நாம்,
‘இருக்கிறான் என்றாலும்
இல்லைதான் என்றாலும்
இருக்கும் அவன் மீதொரு
பயமும் – பக்தியும்’
எனும் பா.விஜய்யின் கவிதை வரிகள் நினைவில் வந்துபோக, மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு  அவர்களிடமிருந்து அப்பால் நகர்ந்தோம்.
இவ்வாறு ஒரு இணையத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்தது.