25 நவம்பர் 2017

முதல்வரை சந்தித்தார் கஜேந்திரகுமார்!

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே நேற்றுக் காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது.அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனான சந்திப்பின் போது, அரசின் தீர்வு மக்களுக்கு போதாமை தொடர்பாக கருத்திற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வடக்கு முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“அரசியல் ரீதியாக சேர்ந்திருக்காவிட்டாலும், கொள்கை ரீதியாக சில விடயங்களில் ஆராய வேண்டிய நிலை மற்றும் தற்போதைய அரசின் தீர்வு மக்களுக்கு போதாது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், அரசியல் ரீதியாக எதுவும் கலந்துரையாடவில்லை. இருவரும் மக்கள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் கொள்கை ரீதியான ஒருமைப்பாடு தொடர்பாக கலந்துரையாடினோம்” என கூறினார்.

01 நவம்பர் 2017

80 வயது மகனை பராமரிக்கும் 98 வயது தாய்!

பிரித்தானியாவில் முதியோர் இல்லத்தில் வசித்துவரும் 80 வயது மகனை பராமரிக்கும் பொருட்டு 98 வயது தாயார், அதே முதியோர் இல்லத்தில் சென்று தங்கியுள்ளார்.
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள Moss View முதியோர் இல்லத்தில் தான் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்தே வசித்து வருபவர் 80 வயதான டோம்.
இதுவரை திருமணம் செய்து கொள்ளாத டோமுக்கு தினமும் காலை வணக்கம் சொல்லவும், உணவு தயாரானதும் சென்று கூப்பிடவும், அவருக்கு யாரும் இல்லை என்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக Ada Keating என்ற டோமின் 98 வயது தாயார் தெரிவித்துள்ளார்.
எப்போதெல்லாம் தாம் வீட்டை விட்டு வெளியே செல்கின்றேனோ அப்போதெல்லாம் டோம் தமக்காக காத்திருந்ததாகவும், தாம் வீட்டுக்கு வந்த அந்த நொடி ஓடி வந்து தம்மை இறுக்கமாக அணைத்து அன்பை வெளிப்படுத்துவார் எனவும் Ada Keating நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லத்தில் அனைவரும் தமது தாயாரை அன்புடன் கவனிப்பதாக கூறும் டோம், சமயங்களில் தமது தாயார் தம்மை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதெல்லாம் அடாவின் பேரப்பிள்ளைகளும் தவறாமல் வந்து டோமையும் அடாவையும் சந்தித்துவிட்டு செல்கின்றனர்.
முதியோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் பிலிப் தெரிவிக்கையில், இந்த தள்ளாத வயதிலும் தாய் மகன் பாசத்தை கண்கூடாக பார்க்கும் போது உண்மையில் நெகிழ்ச்சியாக உள்ளது என்றார்.