16 நவம்பர் 2011

மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பில் ஒருமித்த உடன்பாட்டுக்கு வருமாறு நாடுகடந்த தமிழீழ அரசு வேண்டுகோள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதய காலகட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் ஆகும். இக் காலகட்டம் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசு என்ற கொள்கை நிலையினை உயிர்ப்போடு பேணி அந்த உயரிய இலட்சியத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் செயற்படும் தீர்மானகரமான காலகட்டம்.
இந்த இலட்சியப்பயணத்தில் நம்மை வழிநடாத்துபவர்கள் நமது மாவீரர்களே.
தமது தன்னலமற்ற ஈகத்தால், அளப்பெரும் வீரத்தால் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து நமது தாயக மண்ணில் ஆகுதியாகிப் போனவர்கள் நமது மாவீரர்கள்.
தியாகதீபம் திலீபனின் வார்த்தைகளில் கூறுவதாயின் மலரும் தமிழீழத்தை வானத்தில் இருந்து பார்ப்பதாக நமக்குக் கூறிவிட்டு நம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டவர்கள் இம் மாவீரர்கள்.
இம் மாவீரர்களை மையமாகக் கொண்டுதான் ஈழத்தமிழர் தேசம் ஒன்றுபட்ட தேசமாக விளங்க முடியும்.
இவர்கள் விட்டுச் சென்ற இலட்சியச்சுவடுகள்தான் நமக்கான வழிகாட்டிகள்.
நமது மாவீர்களின் இலட்சியத்தை முன்னெடுப்பதில் தமிழ்த்; தேசியச் செயற்பாட்டாளர்களுக்கிடையே கொள்கையளவில் மாறுபட்ட கருத்துக்கள் கிடையாது.
அணுகுமுறைகள் சார்ந்து நமக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக செயற்பட முடியாமலும் போயிருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் ஒரு ஜனநாயகச் சூழலில் மிக இயல்பானவை.
நமக்கிடையே இருக்கக்கூடிய எவ்விதமான அணுகுமுறை வேறுபாடுகளும்; நமக்கிடையிலான உரையாடலுக்கூடாகக் கையாளப்படக்கூடியவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் ஒருவரையொருவர் மதிக்கவும் அங்கீகரிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் இவ் வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை இரு பிரிவுகளாக நடாத்துவது தொடர்பான தகவல்கள் நம்மையும் நமது மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளன.
பல மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இவ் விடயத்தில் தலையிடுமாறும் ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஆவன செய்யுமாறும் தொடர்ச்சியான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.
இருந்த போதும் நமது மாவீரர் குடும்பநலன் பேணும் அமைச்சின் ஊடாக ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பினை விடுத்ததைத் தவிர நாம் மேலதிகச் செயற்பாடுகளில் இதுவரை ஈடுபடவில்லை.
இதற்கு ஒரு முக்கிமான காரணம் இருந்தது.
மாவீரர் நாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் நிலைமை திடீரெனத் தோற்றம் பெற்றதொன்றல்ல. விடுதலை அமைப்பின் இரண்டு கட்டமைப்புக்கள் தாம் ஒன்றாகச் செயற்படுவது தொடர்பாக நீண்டகாலம் பேச்சுக்களில் ஈடுபட்டு அதில் வெற்றியடைய முடியாமல் போனமையின் எதிர்மறைப் பெறுபேறாகவே இந் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
இவ் இரண்டு கட்டமைப்புக்களிலும் ஒன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறது என்பது ஊர் அறிந்த விடயம்.
இச் சூழலில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான முறையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல் சாத்தியம்தானா எனும் கேள்வி எமக்கிடையே இருந்தது.
இருந்த போதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் எனும் வகையில் நாம் நமது கடமைகளை மேற்கொள்ளுதல் அவசியமானது என நாம் உணரும் காரணத்தினாலும், இவ் விடயத்தில் மாவீரர் குடும்பங்கள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஒருங்குபட்ட முறையில் மாவீரர்நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு வழிகோலும் வகையிலுமான பேச்சுக்களில் உடனடியாக ஈடுபடுவதென நாடு கடந்த தமிழீழ அரசாங்ககத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இப் பேச்சுக்களை நடாத்துவதற்கென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பநலன் Nபுணும் அமைச்சினால் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் பிரதிநிகள் உடனடியாக நியமனம் செய்யப்படுவார்கள்.
முரண்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினர்களுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு, இம் முரண்பாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, இரண்டு பகுதியினருக்கும் ஏற்புடையதான ஒரு பொது ஏற்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நமது பிரதிநிதிகள் ஈடுபடுவார்கள்.
நமது இம் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவீரர் நாள் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பகிரங்கமாகக் கோருகிறது.
இம் முயற்சிக்கான ஆதரவினை வழங்குமாறு பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் உள்ள பொது அமைப்புக்களையும் ஊடகங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.
நமது மாவீரர்களின் கனவை நனவாக்கும் நோக்கம் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரோக்கியமாக அடுத்த கட்டம் நோக்கி நகர்வது ஈழத் தமிழர் தேசத்தின் ஒருமைப்பாட்டான செயற்பாடுகளில் இருந்தே கட்டியமைக்கப்படக் கூடியது.
இதனை உணர்ந்து நாம் அனைவரும் செயற்படவேண்டியது இன்றைய காலத்தின் தேவை மட்டுமல்ல மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான வணக்கமாகவும் அமையும்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

15 நவம்பர் 2011

றூம் போடுவது தப்பில்லை என்கிறார் ரெமீடியாஸ்!

நேற்று முந்தினம் யாழில் சுமங்கலி லாட்ஜை சுற்றிவளைத்த பொலிசார் பல பெண்களையும் ஆண்களையும் கைதுசெய்து விபச்சார வழக்கில் சிறைவைத்துள்ளனர். சுமங்கலி லாட்ஜில் விபச்சாரம் நடப்பது யாழில் அனைவரும் அறிந்த ஒரு விடையம். இது ஒரு புறம் இருக்க சிக்கியுள்ள பெண்களையும் ஆண்களையும் வெளியே எடுப்பதற்காக நேரடியாகக் களமிறங்கியுள்ளார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகரும் வழக்கறிஞருமான திரு ரெமீடியஸ் அவர்கள். அதாவது சுமங்கலி லாட்ஜில் நடப்பது விபச்சாரம் அல்ல அங்கே ஆண்களும் பெண்களும் தமக்கு பிடித்தவர்களுடன் வந்து தங்கிச் செல்வது வழக்கம் என்று இவரே தன் வாயல் கூறுகிறார். அத்தோடு மட்டும் நின்றுவிடாது காதலர்கள் மற்றும் கலியானம் ஆக இருப்பவர்களும் அங்கே வந்து ரூம் போடலாம் அதில் என்ன தவறு என்று நேரடியாகவே கேட்க்கிறார் இவர் ! (ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது).
புளொட் அமைப்பின் ஆயுதப் பிரிவின் முக்கிய நபரான ரஞ்சன் என்பவரே இந்த சுமங்கலி லாட்ஜை நடத்திவந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தற்போது ரெமீடியஸ் அவர்கள் இறங்கியுள்ளார். லாட்ஜில் நடந்தது விபச்சாரம் இல்லை என்று நீதிமன்றில் நிரூபித்தால் ரஞ்சன் வெளியே வந்துவிடுவார் அவ்வளவு தான். இதற்காகவும் மற்றும் விபச்சார வழக்கில் இருந்து குறித்த பெண்களும் ஆண்களும் தப்புவதற்காகவும் தற்போது இவர் புதிய யுக்திகளையும் கையாண்டும் உள்ளார். அதாவது அகப்பட்டிருக்கும் ஒரு பெண்ணையும் ஆணையும் காதலர்கள் என்று கூறி அவர்களை நீதிமன்ற அனுமதியோடு திருமணம் முடித்துவைக்கவும் இவர் முனைப்புக்காட்டி வருகிறார். இப்படிச் செய்தால் விபச்சாரம் என்ற குற்றச்செயல் அடிபட்டுப்போய் காதலர்கள் வந்து உல்லாசமாக இருந்துவிட்டுச் சென்றார்கள் என இவ்வழக்கை இலகுவாக திசைதிருப்பிவிட முடியும் அல்லவா ?
நாம் அறிந்தவரையில் பொலிசார் ஏதோ சாட்டுக்கு இவர்களைப் பிடித்துக்கொண்டுபோய் நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் கிணறு தோண்ட பூதம் வெளிக்கிட்ட கதைகயாக அங்கே இவர்களின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி மிக மிகக் கடுமையானவர் என்பது தற்போது தான் இவர்களுக்குத் தெரியவந்துள்ளதாம். இதனால் அவசர அவசரமாக ரெமிடியசை களமிறக்கியுள்ளனர் சிலர். அதிர்வின் நிருபர் அவரைத் தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டபோது அவர் கூறிய பதில்கள் இங்கே ஆடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.


நன்றி:அதிர்வு

நோர்வேயின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் உருத்திரகுமாரன் எதிர்ப்பு.

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வி கண்டதற்கு, விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் தமது கொள்கையில் கடைப்பிடித்த இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்தை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் நிராகரித்துள்ளார்.
நோர்வேயின் நிலையுடன் சிறிலங்கா அரசுடன் நடத்தப்பட பேச்சுகளின் போது விடுதலைப் புலிகளின் சட்டஆலோசகராக பங்கேற்ற அவர், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலே இந்தக் கருத்தை நிராகரித்துள்ளார்.
“விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களில் உளச்சுத்தியுடனேயே ஈடுபட்டனர்.
பேச்சுக்கள் நடக்கும்போதே, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதம் என்ற கண்ணாடியின் ஊடாகப் பார்த்து, அவர்கள் கொண்டிருந்த சமபல நிலையைக் குலைத்த, அனைத்துலக சமூகம் தான் இந்தப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததற்குக் காரணம்.
விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களின் போது, பல விட்டுக் கொடுப்புகளைச் செய்தனர்.
போர்நிறுத்த மீறல்கள் விவகாரத்திலும், சிறிலங்கா அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது.
போர்நிறுத்த மீறல்கள் விடயத்தில், சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட,மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது, அதன் கீழுள்ள தார்ப்பரியத்தைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.“ என்று அவர் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினை விவகாரத்தில் புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை,சிறிலங்காவில் வசிக்கும் தமிழர்கள் எடுக்க வேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள வி.ருத்திரகுமாரன்,
" புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல.
சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இருக்கவில்லை.
சிறிலங்கா ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது.
எனவே புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்கா பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை," என்றும் அவர் கூறியுள்ளார்.

14 நவம்பர் 2011

அமெரிக்காவும் நோர்வேயும் செய்த பாவத்திற்கு பாவமன்னிப்பு கோருகின்றனர்!

யுத்தத்தின் போதும் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்காத நோர்வே இன்று அனைத்தும் முடிந்த பின்னர் பாவ மன்னிப்பு கோருவது எவ்விதத்தில் நியாயமாகும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கையில்லாததன் காரணமாகவே பொதுநலவாய விளையாட்டுப் போட்டி கைநழுவிப் போனதென்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அழிவிற்கும் யுத்தத்திற்கும் இந்தியாவே காரணம் என நோர்வே எக்சொல்ஹெய்ம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இதனை அனைவரும் அறிவார்கள். அன்று யுத்தம் நடந்த போது தமிழ் மக்கள் கொல்லப்படும் போது நோர்வேயோ, அமெரிக்காவோ யுத்தத்தை நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று அனைத்து அழிவுகளும் இடம் பெற்ற பின்னர் நோர்வேயும் அமெரிக்காவும் செய்த பாவத்திற்கு "பாவ மன்னிப்பு" கோருகின்றனர். இது எவ்வாறு நியாயமாகும். இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நாட்டில் கொலைகள் அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள் அதிகத்துள்ளன. இவ்வாறான சூழலில் இங்கு வந்து விளையாட்டுக்களில் ஈடுபட்ட பின்னர் உயிரோடு வெளியேற முடியுமா என்ற அச்சம் வெளிநாடுகளில் உருவாகியுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு முதன் முறையாக விண்ணப்பித்தும், அனுதாபரீதியிலாவது அதிகப்படியான வாக்குகள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. 47 அதிகப்படியான வாக்குகளை பெற்று விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு அவுஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ளது. சட்டம், ஒழுங்கு நாட்டிற்குள் இல்லாததால் 27 வாக்குகளே இலங்கைக்கு கிடைத்துள்ளன எனவும் அரசாங்கத்தின் பாவத்திற்கு நாடும் மக்களும் தலைகுனிந்துள்ளனர் என விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.

றோவுடனும் தான் பேச்சு நடத்தியதாக சொல்கிறார் எரிக் சொல்கைம்!

2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியாவும் இரகசியமாக சந்தித்ததாக நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியிலேயே சொல்ஹெய்ம் இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும் இச்சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பது குறித்தோ இதில் இரு தரப்பிலும் யார் யார் பங்குபற்றினார்கள் என்ற விபரத்தையோ வெளியிடுவதற்கு சொல்ஹெய்ம் மறுத்துள்ளார்.
இத்தகவல் உண்மையானால், ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தையடுத்து 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியா தடை செய்தபின் அவ்வமைப்புடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய முதல் சந்தர்ப்பமாக இது இருக்கும்.
பலர் எண்ணுவதற்கு முரணாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதிலும் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான அப்போதைய இந்திய அரசாங்கம் திரைமறைவில் முக்கிய பாத்திரம் வகித்ததாக சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்னர் இந்தியாவின் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பான றோ அதிகாரிகளுடனும் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் தான் பல்வேறு தடவை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
றோ அதிகாரிகளுடனான சில சந்திப்புகள் புதுடில்லி விமான நிலையத்தில் இடம்பெற்றது என அவர் கூறினார்.
இலங்கையும் இந்தியாவும் 2001- முதல் 2002 வரை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமைதியாக கலந்துரையாடியதாகவும் ஒவ்வொரு விடயமும் இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டது எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்தியா சிறந்த ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சமாதான செயற்பாடுகளில் வேறெந்த பெரிய சர்வதேச செயற்பாட்டாளர் எதுவும் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை.
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் எந்தெந்த நாடுகள் இடம்பெற வேண்டும் என்றுகூட இந்தியா ஆலோசனை கூறியது எனவும் சொல்ஹெய்ம் கூறினார்.
இலங்கை பிரிக்கப்படுவதை இந்திய அதிகாரிகள் கடுமையாக எதிர்த்தனர் எனவும் தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினர் எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

13 நவம்பர் 2011

முகாமிலுள்ள மக்களை படுகொலை செய்து பின்புறம் வீசிய சிங்களப்படைகள்!

2009ம் ஆண்டு மேதம் 17 மற்றும் 18ம் திகதி இராணுவத்திடம் சரண்டைந்த பொதுமக்களில் பலரை இராணுவத்தினர் அழைத்துச் சென்று சுட்டுக்கொண்றுள்ளனர். இதனைப் பல தமிழர்கள் முன்னர் கூறியுள்ளபோதும் அதனை அப்போது உறுதிப்படுத்த முடியவில்லை ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சில அதனைக் காட்டுவதாக அமைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சரணடைந்த பொதுமக்களில் புலிகள் எனத் தாம் சந்தேகித்த நபர்களை இராணுவம் தனியாக அழைத்துச் செல்வது வழக்கம் எனவும் ஆனால் அவர்கள் முகாம்களுக்குத் திரும்ப வருவதே இல்லை எனவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாம்களின் பின்புறத்தில் வைத்து சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் உடலங்கள் முகாமின் பின்பகுதிகளில் அல்லது ஒதுக்குப்புறமான இடங்களில் காணப்பட்டதாக பல சாட்சியங்கள் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். நந்திக்கடல் பகுதியில் வைத்து கண்களைக் கட்டி புலிகள் உறுப்பினர்கள் பலரை இராணுவம் கொலைசெய்ததுபோல தடுப்பு முகாம்களிலும் மற்றும் தடுப்பு முகாம்களுக்கு மக்களைக் கொண்டுசெல்லும் போதும் இராணுவம் பலரை இவ்வாறு சுட்டுக்கொண்றுள்ளது. வகை தொகையின்றி சந்தேகப்படும் அனைவரையும் இராணுவம் சுட்டுள்ளது.
இதனை விடக் கொடுமை என்னவென்றால் புலிகளின் முக்கிய உறுப்பினர் சாயலில் உள்ள பல தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொணறது தான். பின்னர் உண்மையான முக்கிய உறுப்பினர்களை தடுப்பு முகாமில் வைத்து இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர். அப்போது அவர்கள் ஆச்சரியப்பட்டதும் உண்டாம். வன்னியில் இருந்த சுமார் 3 தடுப்பு முகாமில் இருந்து காணாமல் போன தமிழ் இளைஞர்கள் தொகை மட்டும் 300 ஐ தாண்டும் என்று தற்போது வெளியே வந்துள்ள அகதி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் தான் இவர்களை இராணுவம் கொண்டுசென்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழத்திற்கான விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும் என கவிஞர் காசி ஆனந்தன் முழக்கம்!

முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம் தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள். நாங்கள் நெருப்பின் நடுவில் இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும் என்று சென்னையில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் முழங்கினார்.
சென்னையில் நேற்று முன்தினம், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய சிந்தல், பொழிச்சல், நறுக்கு ஆகிய புதுக்கவிதை வடிவில் எழுதப்பட்ட மூன்று நூல்கள் வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு ஆவேசமாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உலகத் தமிழர் இயக்க தலைவர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் மணிவண்ணன், கவிஞர் தமிழிச்சி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் தெரிவித்ததாவது:
வியட்நாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவில் புதுக்கவிதை எழுதியவர்களும் இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள். கருத்து வெளியிட்டவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொலையுண்டு விழுந்த நேரத்தில், உலகத்தில் யார் ஈழத்தமிழ் மக்களுக்காக எழுதினார்கள்?
எத்தனையோ பெரிய கொடுமைகள் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டன. யார் அந்த மக்களுக்காகக் கைகொடுத்தார்கள்? பெண் உறுப்பில் வெடிகுண்டு வைத்து மட்டக்களப்பில் கோணேஸ்வரி சிதைக்கப்பட்டாள்.
புங்குடுதீவு கண்ணகி கோவிலில் வைத்து சாரதாம்பாள் வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள். அவர்களின் வேதனைகளை இந்த உலகம் கணக்கில் எடுக்கவில்லை.
இவ்வாறே போரின் இறுதியில் இசைப்பிரியா. அவளைச் சிறைப்படுத்திய இனவெறியர்கள் போர்க்கைதிகளை நடத்தும் உலக விதிப்படியா நடத்தினார்கள்? இல்லையே!
இன்று அவற்றையெல்லாம் எழுத்தில், கவிதையில், திரைப்படத்தில், சிற்பத்தில் வடிக்கும் காலம் வந்துள்ளது. ஓவியர் சந்தானம் முள்ளிவாய்க்கால் படுகொலையினை வைத்து வரைந்த படத்தினை மாதிரியாகக் கொண்டு முருகன் என்கின்ற சிற்பி தஞ்சையில் சிலை வடிக்கிறார். அந்த நினைவுச்சின்னம் முள்ளிவாய்க்கால் கொடுமையினை இந்த உலகுக்கு என்றும் பறை சாற்றி நிற்கும்.
அப்படிப்பட்ட கலைஞனே இன்று இந்த மண்ணுக்குத் தேவை. தமிழீழத்திற்காக தமிழ்நாட்டில் பல படைப்பாளிகள் படைப்புக்களை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு எழுதிய எழுத்தாளர்களின் அளவு, ரஷ்ய விடுதலைப்போரின்போது எழுதிய எழுத்தாளர்களின் அளவு, தமிழினத்தின் விடுதலைக்காக நடந்த போராட்டத்திற்காக எழுதியவர்களை எண்ணித்தான் பார்க்கவேண்டும்.
பல திரைப்படங்கள் இன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் இன்னும் கூடுதலான திரைப்பட கலைஞர்கள் தமிழினத்திற்கு கைகொடுக்கவேண்டும். விடுதலைக்காக கலைஞர்கள் இயங்கவேண்டும் எழுதவேண்டும், என்ற கருத்தினை படைப்பாளிகள் மத்தியில் முன்வைக்கின்றேன்.
உலகில் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் அத்தனை அரசுகளின் கீழ் இயங்குகின்ற நாடுகளிலும் அறவழியில் போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளை எதிர்த்து வாய் திறந்து பேசமுடியாத நாடாக உலகில் இலங்கை மட்டுமே காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் அப்படிப்பட்ட கொடுமையான சூழலில் வாழ்கிறார்கள்.
தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இயக்கம் தமிழர் கூட்டமைப்பு. அவர்களால் எந்த அறப்போராட்டத்தையும் முன்னெடுக்க முடியவில்லை. அவர்களால் அங்கு பேசமுடியாது. பேசினால் நாளை அவர்களுக்கு உயிர் இருக்காது. ம்.. என்றால் சிறைவாசம். ஏன்... என்றால் வனவாசம் என்ற நிலை இன்று தமிழீழத்தில் இருக்கிறது. இதை கேட்பதற்கு யாருமே இல்லை.
முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம் தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள். நாங்கள் நெருப்பின் நடுவில் இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும் என்றார் காசிஆனந்தன்.

12 நவம்பர் 2011

சமாதான முயற்சி தோல்வியடைந்தமைக்கு இந்தியாவும் முக்கிய காரணம்!நோர்வே அறிக்கை.

புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும் என்று நோர்வேயிடம் இந்தியா கூறியதாக, தோல்வியடைந்த சிறிலங்காவின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதிக்கான அடமானங்கள்‘(Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை இன்று, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2003-2004 இல் சமாதான முயற்சிகள் மெதுவாக அவிழத் தொடங்கிய போது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் அணுகியதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆனால் 2004இல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களின் அபிலாசைகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டாலும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினது இராணுவத் தீர்வு முயற்சிக்கு எதிராக எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட சந்திப்புகளில் நோர்வேயை “புலிகளின் நண்பர்“ என்று இந்தியா விமர்சித்ததாகவும், “புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும்“ என்று கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா படைகளுக்கு இந்தியா ரேடர்கள், புலனாய்வுத் தகவல்களை வழங்கியது.
சிறிலங்காவுக்கு தாக்குதல் போர்த்தளபாடங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையை புதுடெல்லி கடைப்பிடித்தாலும், வேறு எவரிடம் இருந்தும் ஆயுதங்களை சிறிலங்கா கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் மீதான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, சிறிலங்காவுக்கு போரை நடத்துவதற்கு உந்துதலாக அமைந்தது.
2004இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ராஜிவ்காந்தியின் துணைவியார் சோனியாகாந்தி, இந்தியாவின் சக்திவாய்ந்த நபராக மாறியது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2008 இறுதியில் பொதுமக்களின் இழப்புகளை மட்டுப்படுத்துமாறு புதுடெல்லி கோரிய போதிலும் கூட, இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் ஆதரவு வழங்குவதில் இந்திய அரசாங்கம் மிகவும் தெளிவாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் இறுதி நாட்கள் பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கையில், புலிகள் மிக நெருக்கமாக சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு கொழும்பு மிகமிக குறைந்தளவு ஆர்வமே காட்டியது.
போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டியிருக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
சமாதான முயற்சிகளில் இந்தியா கூடுதல் பங்கு வகிக்குமாறு 2007இல் நோர்வே தொடர்ச்சியாக வலியுறுத்திய போதும் புதுடெல்லி அதை நிராகரித்து விட்டது.
இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த போது தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகியது.
போரின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத்தேர்தல் குறித்து சிறிலங்கா கவலை கொண்டிருந்தது.
காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட்டு வேறு யாரும் பதவிக்கு வந்தால் புலிகளுக்கு உதவி கிடைக்கலாம் என்ற கவலை சிறிலங்காவுக்கு இருந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, முன்வரைவு அறிக்கையை ஏற்று ஆயுதங்களை கீழே போட இணங்குமாறு ஆலோசனை கூறியதாகவும், ஆனால் இந்த நகர்வு புலிகள் ஆதரவு அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்ததும், இது காங்கிரசின் தந்திரம் என்று நிராகரிக்குமாறும், தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் புலிகளை மீட்கும் என்றும் அவர் உறுதி கூறியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அது நடக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார் என்றும் நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுநலவாய விளையாட்டுப்போட்டி,தோற்றது ஸ்ரீலங்கா.

2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றெடுத்துள்ளது. இதனால் ஹம்பாந்தோட்டையில் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இலங்கையின் கனவு வீணாகியுள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரமும் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை பெறுவதற்குப் போட்டியிட்டன.
இது தொடர்பான பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் வாக்கெடுப்பு நேற்று இரவு நடைபெற்றது. இவ்வாக்கெடுப்பில் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 2018ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகளை நடத்துவதற்கு 43 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இலங்கையில் குறித்த போட்டியினை நடத்துவதற்கு 27 உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.
பொதுநலவாய போட்டிகளை நடத்தும் உரிமையினை ஐந்தாவது தடவையாக அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த அழைத்தாராம் மன்மோகன் மறுத்தாராம்!நம்ப முடிந்தால் நம்புங்கள்!

இலங்கை வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் நேரில் சந்தித்து விடுத்த அழைப்பை இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அடியோடு நிராகரித்து விட்டார் எனத் தெரியவருகிறது.
“தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவது உட்பட இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும்வரை தன்னால் இலங்கைக்கு வர இயலாது” என்று ஜனாதிபதி மஹிந்தவிடம் நேரில் தெரிவித்துவிட்டார் மன்மோகன்சிங்.
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மாலைதீவில் தனியாகச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
மாலைதீவில் பிரதமர் மன்மோகன் சிங், அடு அடோல் என்ற கூட்டு தீவுப் பகுதியில் உள்ள ஷாங்கிரிலா ரிசார்ட் என்ற சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். சார்க் நாடுகளின் ஏனைய தலைவர்களும் இதே இடத்தில் தங்கியுள்ளனர்.
இங்கு நேற்றுமுன்தினம் காலை 9.30 மணிக்கு முதலில் பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் நடந்த பேச்சில் இந்தியாவுக்கு “அதிக சுலுகை அளிக்கப்படும் நாடு” என்ற வர்த்தக அந்தஸ்தை வழங்கும் முடிவில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்காது என மன்மோகன் சிங்கிடம் கிலானி உறுதியளித்தார்.
இதன் மூலம், பாகிஸ்தானில், இந்தியப் பொருள்களுக்கு, மற்ற நாட்டுப் பொருள்களை விட குறைவான இறக்குமதி வரியே விதிக்கப்படும். இந்த அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்கனவே அளித்துள்ளது.
மேலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இரு நாட்டினரும் எளிதாகச் சென்று வரும் வகையில் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன. பேச்சுக்குப் பின்னர் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த நடைபெற்று வரும் பேச்சில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம், இரு தரப்பினருக்கும் திருப்தியாக உள்ளது. எனவே, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது, எதிர்த்து குற்றம் சாட்டுவது போன்றவை மறக்கப்பட வேண்டும் என மன்மோகன் சிங் கூறினார்.
இந்தச் சந்திப்பு முடிந்ததும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியவை வருமாறு;
இந்தச் சந்திப்பின்போது இலங்கைத் தமிழர்களின் மீள்குடியமர்வு மற்றும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் விளக்கம் கேட்டார் எனக் கூறப்படுகிறது.
இதன்போது இலங்கைக்கு வருமாறு மன்மோகன் சிங்கை மஹிந்த ராஜபக்ஷ அழைத்தார். எனினும், இலங்கைத் தமிழர்கள் மீள்குடியமர்வு விவகாரம், அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் தீர்வு, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் நல்ல தீர்வு ஏற்படும்வரை இலங்கைக்கு வர இயலாது என மன்மோகன் கூறிவிட்டார் எனவும் கூறப்படுகிறது.

11 நவம்பர் 2011

தமிழர்களை ஒன்றிணைத்து விடுவேன் என இந்திய அரசு அஞ்சுகிறது!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேலூர் சிறையில் இருக்கும் தண்டனையாளர் மூவரையும் சந்தித்து பேசினார்.பின்னர் வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
சிறையில் உள்ள 3பேரின் தூக்கு தண்டனை வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 3 பேரும் சட்டரீதியாக விடுதலையாவார்கள்.
தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
தூக்கு தண்டனையே கூடாது என்று தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு அமைப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் ஆகியவை நடத்தி எங்கள் உணர்வை வெளிபடுத்தி வருகிறோம்.
கொலைக்கு தண்டனை கொலையாகாது. 21 ஆண்டுகள் நீண்ட ஆயுள் தண்டனை அனுபவித்து உள்ளனர். அவர்களுக்கு 2 தண்டனை கொடுக்க கூடாது.
29-ந்தேதி கோர்ட்டில் நடக்கும் வழக்கில் அவர்கள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் 2008-ல் இருந்து 10 ஆண்டுகள் அமெரிக்கா, கனடா செல்ல விசா எடுத்து உள்ளேன். தற்போது சர்வதேச அளவில் தமிழர்களை நான் ஒருங்கிணைத்திடுவேன் என்ற அச்சம் காரணமாக எனக்கு அமெரிக்கா, கனடாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மாலைதீவில் டக்ளசை சந்தித்தார் மன்மோகன் சிங்!

தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருடன், பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்துறை அமைச்சரும், ஈபிடிபி பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவும் மாலைதீவு சென்றுள்ளார்.
நேற்று சங்கிரி-லா விடுதியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தபோது டக்ளஸ் தேவானந்தா, ஜி.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, சஜின் வாஸ் குணவர்த்தன, ஏ.எச்.எம்.அஸ்வர், லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்திய நீதிமன்றம் ஒன்றில், கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் புதுடெல்லியில் சந்தித்தது குறித்து ஏற்கனவே சர்ச்சைகள் உருவாகியிருந்தன.
இந்தநிலையில் நேற்று டக்ளஸ் தேவானந்தா மீண்டும் இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா சிறிலங்காவின் அமைச்சராக இருப்பதாலும், இரு நாடுகளுக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் உடன்பாடு இல்லை என்பதாலும், டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
ஆனால் கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திரவின் படுகொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை சிறிலங்கா அரசின் வேண்டுகோளின் பேரில், இந்திய அதிகாரிகள் மும்பையில் கைது செய்து சிறிலங்கா அரசிடம் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வே வெளியடவுள்ள அறிக்கை சம்பந்தமான நிகழ்வில் கலந்துகொள்ள மிலிந்த பயணம்.

இலங்கையின் சமாதான முன்னநகர்வுகள் குறித்து நோர்வேயில் இன்று விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ள நிலையில் இந்நிகழ்வில் பங்குகொள்ளவென இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் மிலிந்த மொறகொட நோர்வே சென்றுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வே மிலிந்த மொறகொடவை நோர்வே அனுப்ப பணித்துள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடெஜ் தலைமையில் இவ்வறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இவ்வறிக்கையானது கிறிஸ்டியன் மிச்சேல்சன் கல்வியகத்தால் (Christian Michelsen Institute) தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம், 2009 சமாதான உடன்படிக்கை காலம், தமிழ் புனர்வாழ்வு அமையம், புலிகளின் சமாதான செயலகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவை குறித்து அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

10 நவம்பர் 2011

சவேந்திர சில்வாவிற்கு இராஜதந்திர விலக்களிக்கக் கூடாது.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விலக்களிக்க கூடாது என அமெரிக்க மத்திய நீதிமன்றில் சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.அதேவேளை, சவேந்திர சில்வாவின் இராஜதந்திர பதவியை ரத்து செய்யுமாறு மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் போர்க் குற்றவாளி கடமையாற்றி வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் மிகப் பெரிய நிறுவனம் என்ற ரீதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சவேந்திரவிற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராஜதந்திர வரப்பிரசாதங்களை பயன்படுத்தி குற்றச் செயல்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள அனுமதியளிக்கக் கூடாது எனவும் கோரப்பட்டுள்ளது.

மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினராகிறார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனோ கணேசனுக்கு நாடாளுமன்ற பதவியை வழங்குவதன் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள எம்.சுவாமிநாதன் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என யானைச் சின்னத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலில் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அந்தத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார். ஆயினும் பின்னர் அது வழங்கப்படவில்லை. இதனால் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி ஜனநாயக மக்கள் முன்னணி சுயாதீனமாகச் செயற்படத் தொடங்கியது.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. ஆயினும் சபையில் நிலையான ஆட்சியை வழங்குவதற்கு ஐ.தே.க ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவை நாடியிருந்தது.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க லண்டன் செல்வதற்கு முன்னர் மனோ கணேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியதோடு 8ம் திகதி கொழும்பு மாநகர சபை கூட்டத்தில் தமது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறும் தான் லண்டனில் இருந்து திரும்பியதும் உடன்படிக்கைகள் செய்து கொள்ள முடியும் எனவும் கூறியிருந்தார்.
இதுவரை வெளியிடப்படாத அவ் உடன்படிக்கையின் படியே மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிகின்றது.

09 நவம்பர் 2011

இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் இரண்டை வெளியிட தயாராகிறது சனல்போர்.

புதிய சாட்சியங்களுடன் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் ஒளிபரப்பவுள்ளதாக சனல்-4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் பிரித்தானியாவின் ஊடக ஒழுங்குமுறையை மீறவில்லை என்று அறிவிக்கப்பட்ட அடுத்த வாரமே, அதன் இரண்டாவது பாகத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற கொடூரங்களை விபரிக்கும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ என்ற ஆவணப்படத்தை சனல்-4 தொலைக்காட்சி கடந்த ஜுன் மாதம் ஒளிபரப்பியிருந்தது.
கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட காணொலிப் படம் இதன் பிரதான போர்க்குற்ற சாட்சியமாக இணைக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை விபரிக்கும் இந்த ஆவணப்படம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்திருந்தது.
இந்த ஆவணப்படம் நியுயோர்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகங்களிலும், இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, டென்மார்க், நோர்வே உள்ளிட்ட பல நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டனை வழங்கப்படாத போர்க்குற்றங்கள்‘ (தலைப்பு இன்னமும் முடிவாகவில்லை) என்ற பெயரில் இரண்டாவது ஆவணப்படத்தை அடுத்த ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பதாக சனல்-4 தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கென இயக்குனர் கல்லும் மக்ரே ஒளிப்படங்கள், காணொலிப் பதிவுகள்,நேரில் கண்ட சாட்சிகள், ஆவணங்கள் போன்ற புதிய சாட்சியங்களை சேகரித்துள்ளதாக இதன் தயாரிப்பாளர் ஜொன் சினோ தெரிவித்துள்ளார்.
“போர்க்குற்றங்களுக்கு அதிகாரபூர்வமாக உடந்தையாக இருந்தவர்கள் பற்றிய மேலதிக சாட்சியங்களை இது வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் எதைக் கண்டறிந்தோம் என்பதை தொடர்ந்து உலகிற்கு வெளிப்படுத்துவோம். முதலாவது ஆவணப்படத்தைப் போலவே இந்தப் படக்காட்சிகளும் அதிர்ச்சிகளைக் கொடுப்பதாகவும் விழிப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று நம்புகிறோம்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, இந்த ஆவணப்படத்தைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ள சனல்-4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்புவிவகார தலைவர் டொரத்தி பைன்,
“சிறிலங்காவின் கொலைக்களங்கள் மூலம் கொடூரங்கள் வெளிப்படுத்தப்பட்டது உலகெங்கம் கவலையை தோற்றுவித்ததுடன் மேலதிக விசாரணைகளுக்கும் அழைப்புகள் விடப்பட்டன.
இதன் அடிப்படையிலேயே உண்மையைக் கண்டறிந்து தொடர்ந்து வெளிப்படுத்த முடிவு செய்துள்ளோம்“ என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிக்குழு.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு ஒன்றை அமைக்கும் முயற்சியில் பிரித்தானிய தழிழர் அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. இக்குழுவை அமைக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளிற்காக பிரித்தானிய தமிழர் அமைப்பு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து இவ் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு,
கலந்துரையாடல்
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவை அமைக்கும் முயற்சி
கலந்து கொள்வோர் :
Ø கலாநிதி . செயிட் கமல் – ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்.
Ø திரு. லீ ஸ்கொட் – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் , தலைவர் – தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு.
இடம் : Gearies Junior School, Gants Hill Crescent
Gants Hill, Ilford, IG2 6TU
காலம் : 11 November 2011 7 P.M
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவை அமைக்கும் முயற்சியின் ஆரம்பமாக பிரித்தானிய தமிழ் கன்ஸ்வேட்டிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடலில் போர்க்குற்ற விசாரனைக்கான அழுத்தங்கள் , மற்றும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆற்ற‌க்கூடிய பணிகள் தொடர்பாகவும் ஆராயப்படும்.
திரு லீஸ் கொட் அவர்களின் தலைமையிலான தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு ஆற்றும் பணிகள் தொடர்பாகவும் , இனிவரும் காலங்களின் எம் முன்னே உள்ள பணிகள் தொடர்பாகவும் திரு லீ அவர்கள் விளக்கமளிப்பார்.
நாம் எவ்வாறு இப்பணிகளில் இணையப்போகின்றோம் எனவும் ஆராயப்படும் எமக்காக இப்பணிகளை கொண்டு செல்லும் எமது நண்பர்களை ஊக்கப்படுத்த நாம் அனைவரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்வோம்.

08 நவம்பர் 2011

மாலைதீவில் மகிந்தவை சந்திப்பார் பிளேக்.

மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில், தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.
அட்டு நகரில் எதிர்வரும் 10ம், 11ம் நாட்களில் 17வது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையேற்கவுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக றொபேட் ஓ பிளேக் இன்று மாலைதீவு பயணமாவதாகவும், இவர் எதிர்வரும் 13ம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கும் அமெரிக்க குழுவில் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்ரெனிசும் இடம்பெறவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதனை விரைவில் பகிரங்கப்படுத்துவது, அறிக்கையின் பரிந்துரைகளின் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து அவர், சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தில் மட்டும் இருப்பதால் பிரஜோசனமில்லை"சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

சித்திரவதைகள் தொடர்பாக சிறிலங்கா நம்பகமான விசாரணைகள் எதையும் நடத்தவில்லை என்றும் இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்த மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை கோரியுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை இதுதொடர்பாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளது.
சிறிலங்கா படைகளுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜொலன்டா போஸ்டர் தெரிவித்துள்ளார்.
“சட்டத்தில் மட்டும் வைத்திருந்தால் போதாது. அதை நீங்கள் நடைமுறைப்படுத்தாது போனால், அர்த்தமில்லை. சித்திரவதைகளுக்கு எதிரான சட்டத்தை சிறிலங்கா கொண்டுள்ள போதும், அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சித்திரவதைகள் தொடர்பாக கடந்த 14 ஆண்டுகளில் 3 வழக்குகளையே சிறப்பு காவல்துறை அலகு முன்னெடுத்துள்ளது.
2008ம் ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவல் ஒன்றில், அதற்கு முந்திய நான்கு ஆண்டுகளில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக 90 பேருக்கு எதிராக 42 குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறியிருந்தது.
மேலதிகமாக 31 சித்திரவதை வழக்குகள் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் யாருமே நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
சிறிலங்கா காவல்துறையினராலும் சிறைக்காவலர்களாலும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர் சிறிலங்கா இராணுவத்தினராலும், இராணுவம், கடற்படை ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் துணை ஆயுதக் குழுக்களினாலும் தொடர்ச்சியாக சித்திரவதைகள் செய்யப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர்.
பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ள போதும், அவை குறித்த விசாரணைகளும் மோசமான நிலையிலேயே இருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.
கட்டாயமாக காணாமற்போகும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களில் சித்திரவதைகள் செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன.
விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதைகளின் சாட்சிகளாக உள்ளனர்.
சிறிலங்காவில் குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி, காலவரையறையின்றி, பலரும் வருடக்கணக்கில் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா காவல்துறை, சிறைக்காவலர்கள், மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக எந்த நீதி விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா விவகாரம் குறித்து மீளாய்வு செய்யும் அதேவேளை, சித்திரவதைகளில் தொடர்புபட்ட படையினரை சிறிலங்கா அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.
இதனிடையே இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக மன்னிப்புசபை, ஆசிய மனிதஉரிமைகள் ஆணையம், சித்திரவதைகளில் இருந்து விடுதலை, சிறுவர்களுக்கான எல்லாத் தண்டனைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலக முயற்சி, அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு, அனைத்துலக குறைபாடுகளுக்கான கூட்டமைப்பு, சட்டவாளர் உரிமைகள் கண்காணிப்பகம்-கனடா, லண்டனை தளமாக கொண்ட றீட்றெஸ், றீட்றெஸ் ஆசிய சட்ட வளங்கள் நிலையம் மற்றும் ஏசிஏரி பிரான்ஸ், சிறிலங்கா அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு, தமிழ் தகவல் நிலையம், சித்திரவதைகளுக்கு எதரான சுவிஸ் அமைப்பான ட்ரயல் ஆகிய 12 அமைப்புகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் ஆராயப்படவுள்ளன.

ஸ்ரீலங்காவில் இடம்பெறும் சித்திரவதைகள்!சனல்போர் புதிய காணொளியை வெளியிட்டது.

போர் முடிவடைந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதற்கான ஆதாரக் காணொளியையும் அது வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இலங்கைச் சிறையில் இருந்து தப்பி பின்னர் பிரித்தானியா வந்து அகதிகள் அந்தஸ்த்து கோரிய இருவரது காணொளிகளை அது தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ் இளைஞர்களைக் கட்டிவைத்து வயராலும் மற்றும் கம்புகளாலும் முதுகில் பலமாக அடித்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர். அதுமட்டும் அல்லாது கழுத்தில் கம்பியைப் போட்டு சுருக்கிட்டு பின்னர் தண்ணீர் தொட்டி ஒன்றில் தன் தலையை மூழ்க்கவிட்டதாகவும் அப்போது தான் மூச்சுத் திணறி கிட்டத்தட்ட தான் இறக்கும் நிலைக்குச் சென்றதாகவும் ஒரு தமிழ் இளைஞர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு தமிழ் இளைஞர் தெரிவிக்கையில் தன்னைக் கட்டி வைத்து அடித்ததாகவும் பல நாட்களாக தான் சிறையில் வாடிய நிலையில் தாகத்துக்கு தண்ணீர் கேட்டவேளை சிறு நீரை இராணுவத்தினர் தந்து குடிக்கச் சொன்னதாகவும் கூறியுள்ளார். இதனை விட தான் போரில் அகப்பட்டு இறந்திருக்கலாமே எனத் தான் எண்ணியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையானது ஐ.நாவின் உறுப்பு நாடாக இருக்கின்ற போதும் அது ஐ.நா சாசனங்களை மீறி பாரிய சித்திரவதைகளை மனித குலத்துக்கு எதிராகச் செய்துவருகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. போர் குற்றம் மற்றும் இன் அழிப்பு என்பன ஒரு புறம் இருக்க தற்போது தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்யும் மேலதிக குற்றச்செயல்களில் இலங்கை ஈடுபட்டும் வருகிறது என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதுவரை பிரித்தானியாவில் உள்ள சுமார் 35 தமிழ் இளைஞர்களை சனல் 4 தொலைக்காட்சி தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இவர்களில் பல ஒரே வகையான சித்திரவதை தமக்கு இழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். சித்திரவதைக்கு எதிரான மனித அமைப்புகள் சில ஐ.நா விடம் இது குறித்து முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. இதன் அடிப்படையில் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா வின் அதிகாரிகள் இது குறித்து ஆராய உள்ளனர். இதனால் இலங்கை மேலும் சிக்கலுக்குள் தள்ளப்படும் அபாயம் தோன்றியுள்ளது. போர்குற்றச்சாட்டு இன அழிப்பு என்று இலங்கை மீது இரு முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரவதை என்னும் ஒரு களமும் புதிதாகத் திறக்கப்பட்டு இலங்கை அரசு மீது மும் முனைத் தாக்குதல் நடைபெற ஆரம்பமாகியுள்ளது.

07 நவம்பர் 2011

தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுக்காதவர் அப்துல் கலாம்,அவர் சொல்லிவிட்டார் என்பதால் நாம் ஏற்க முடியுமா?

தமிழர் நல் வாழ்விற்கு என்றும் குரல் கொடுக்காதவர் - . இந்தியன் என்பதில் பெருமை கொள்பவர் - அப்துல் கலாம்
40கி.மி தொலைவில் நடந்த ஒரு இனப்படுகொலையை பற்றி வாயை திறக்காத இவரை விட சந்தர்ப்பவாத அரசியல்வாதி மேலானவர். தனது ஊரில் இருந்து 100 கி.மி தூரத்தில் நடந்த பரமகுடி கொலைகளை கண்டிக்காதவர்..சொம்பை தூக்கிக்கொண்டு கூடன்குளம் வருகிறார்... இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கபடுமாம்..... நாங்கள் செத்துபோவதை கண்டுகொள்ளாத அப்துல்கலாம் ஒரு விசுவாச அரசாங்க கிளார்க் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும். இவரையெல்லாம் விஞ்ஞானி, தலைவர் என்கிற தமிழர்களை பரிதாபமாக பார்க்கத் தோன்றுகிறது.
அப்துல்கலாம் எளிமையானவர், நேர்மையானவர், ஊழல் கறை படியாத கரங்களை கொண்டவர் என்பதையெல்லாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர் மீது இப்போது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுவது ஏன்? இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஒடுக்கப்பட்ட போதும், படுகொலை செய்யப்பட்ட போதும், தன் சொந்த ஊரிலேயே மீனவர்கள் சுடப்பட்டு வீழ்ந்து கொண்டிருக்கும் போதும் மக்கள் பக்கம் நின்று பாதுகாப்புக்கு குரல் கொடுக்காத இந்த மனிதர் தான் பொறுப்பேற்றிருந்த அணுசக்தி துறைக்கு ஒரு இடர்ப்பாடு என்றதும் மக்கள் பாதுகாப்புக்கு சர்டிபிகேட் வழங்குவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது நாம் வைத்திருக்கும் மரியாதை இன்னும் இருக்கிறது. அதற்காக அப்துல்கலாம் சொல்லிவிட்டார் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்துல் கலாம் என்கிற மனித நேயமற்ற ஒரு அரசாங்க கூலிக்கு கண்டனம் தெரிவிப்போம்.... மக்களோடு நிற்காதவன், மக்களை புரிந்து கொள்ளாதவன் யாராக இருந்தாலும் மக்களால் நிராகரிக்கப் படுவான் என்பதை அதிகார பாசிஸ்டுகளுக்கு உணர்த்துவோம்.. அப்துல் கலாம் நிராகரிக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல... நம் குழந்தைகளை அவரிடம் இருந்து காப்பற்றவேண்டிய கடமையும் நமக்குண்டு... வெளிப்படையாக அப்துல் கலாமிற்கு கண்டனைத்தை பதிவு செய்வோம்.. கூடன்குளம் போராளிகளுக்கு துணை நிற்போம்.

விடுதலைப் போராட்டம் தோற்றது எதனால்? – லண்டனில் காரணம் சொன்னார் சக்தி எப்எம் குணா! (விளாத்தியடி விண்ணாணம்)

வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? நல்லாய் இருக்கிறியளே? புதினங்கள் பல பல விதமாக வருகுது பாருங்கோ… நேற்றுப் பாருங்கோ லண்டனில கூட்டமைப்பின்ர தலைவர் சம்பந்தன் எதிர்காலத் தலைவர் எண்டு சொல்லிக் கொள்ளுற சுமந்திரன் அவையள் பங்கு கொண்ட கூட்டம் ஒண்டு நடந்ததெல்லே?
அதில விசேசம் என்னண்டால் பாருங்கோ, அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை செய்தவர் யார் தெரியுமே? தமிழினத்த பாரிய அழிவுப் பாதைக்குக் கொண்டு போன ரணில் விக்கிரமசிங்கவ தேசியத் தலைவராகக் கொண்டு செயற்படுற மகாராஜா நிறுவனத்தின்ர சக்தி வானொலியில பத்து வருசத்துக்கும் மேலாக பணியாற்றின குணா என்ற நபர் பாருங்கோ. அவர் பாருங்கோ பத்துவருசமா கொழும்பில இருந்திட்டு இப்ப புலத்தில போய் நிண்டு கொண்டு அங்க தேசியத்துக்காக குரல் கொடுக்கிற ஒரு வானொலியில அ(க)றிவிப்பாளராக இருக்கிறேராம்.
இதில என்ன வில்லண்டம் எண்டால் அவர் பாருங்கோ, அங்க வரவேற்புரை செய்யப் போனால் வரவேற்புரை செய்யிறத விட்டிட்டு சுமந்திரன் ஐயா முதல் தரம் லண்டன் போகேக்க அங்க அவர் கதைச்சதில சில இணையத்தளங்கள் கத்தரிச்சு எடுத்து அவருக்கு எதிராக செய்தி போட்டதாகக் கவலப்பட்டவராம். சுமந்திரன் ஐயா என்ன செய்தார், என்ன செய்யிறார் கனடாவில எங்க தங்கினவர் எண்டது இவருக்குத் தெரியுமே? தமிழனத்தின்ர துரோகி டி.பி.எஸ்.ஜெயராஜ் வீட்டில தான் சுமந்திரன் ஐயா தங்கியிருந்தவர் சாப்பிட்டவர் எண்டதெல்லாம் இவருக்குத் தெரியுமே?
இவர் பாருங்கோ கொக்குவில்ல என்ன செய்தநீங்கள், யாழ்ப்பாணக் கம்பஸ் நிகழ்ச்சி ஒண்டுக்கு அறிவிக்க ஆசையாப் போய் அங்க இருந்து கம்பஸ் பொடியள் அடிச்சுக் கலைச்சது, சமாதான காலத்தில வன்னிக்குப் போய் அங்க ஒண்டு இரண்டு ஊடகங்களுக்கும் போய் “நான் முந்தி உங்களோட கொஞ்சநாள் வேலை செய்தனான். ஆனால் அந்த விசயத்தயோ, நான் இப்ப வன்னிக்கு வந்த விசயத்தயோ சக்தியில வேலை செய்யிறாக்களுக்குச் சொல்லிப் போடாதேங்கோ பிறகு வேலை இல்லாமல் பண்ணிப்போடுவங்கள்” எண்டு சொன்னது எல்லாம் எங்களுக்கும் தெரியும் கண்டியளோ? அவர் வந்து பிளைக்கப்போனால் பிளைக்கிற அலுவல பாக்கிறதவிட்டிட்டு தேசியம் பற்றியும், தேசியத்தின்ர பாதையில நிக்கிற இணையத்தளங்கள் பற்றியும் கதைக்கிறதுக்கு அவருக்கு அருகதை இல்லை எண்டத அவர் புரிஞ்சு கொள்ளவேணும் கண்டியளோ?
சக்தியில இருக்கேக்க அடுத்த பணிப்பாளரா வாறதுக்கு எனக்குத் தான் தகுதி இருக்கு, எனக்குத் தான் தகுதி இருக்குது எண்டு புலம்பிப் புலம்பி கடைசில ஒண்டும் நடக்கேல்ல கண்டியளோ? புதிசா தேசியம் பற்றி வகுப்பெடுக்கிறதுக்கு நீங்கள் லண்டனில யாரையும் பாருங்கோ, எது சரி? உண்மையான தேசிய வாதியள் ஆர் ?ஆர்? எண்டுறது எங்களுக்கும் தெரியும்.
ஆனால் பாருங்கோ, நீங்களே எங்கட போராட்டத்த விமர்சிக்கிற அளவுக்கு உங்களுக்குத் தகுதி இருக்குதோ? எண்டத உங்கள நீங்களே கேக்க வேணும் பாருங்கோ. “எந்த விசயத்தையும் வெளிப்படையாக கதைக்க வேணும், அப்பிடி கதைக்காததால தான் எங்கட கடந்த காலப் போராட்டம் தோல்வி அடைஞ்சது” எண்டு லண்டனில எங்கட மக்களுக்கு முன்னால மேடையில சொல்லுற அளவுக்கு நீங்கள் வந்திட்டியள் என்ன? காலம் எப்பிடி எப்பிடி எல்லாம் மாறும் எண்டதுக்கு நீங்கள் ஒரு பெரீய உதாரணம் கண்டியளே?
யார் யாரோ? தேசியத்துக்காக உயிரக் குடுத்து செத்துப்போய், கால் கையள இழந்துபோனது உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. இங்க இருக்குமட்டும் இருந்து கொண்டு மஹிந்தவும், ரணிலும் சொல்லுற கோமாளிக்கதையள், சனம் சாகச் சாக மக்கள் சாகவில்லை புலிகளே செத்துப் போகினம் எண்ட எல்லாக் கதையளையும் தலைப்புச் செய்தியா வாசிச்சுத் தள்ளிப்போட்டு இப்ப லண்டன் போய் நிண்டு கொண்டு போராட்டம் அழிஞ்சதுக்கு நீங்கள் காரணம் சொல்லுறியளே? இந்த நூற்றாண்டில நீங்கள் தான் பாருங்கோ பெரிய சோ(ஜோ)க்கர் என்ன?
ம்… தமிழினத்த கடவுள் தான் காப்பாற்ற வேணும் எண்டு சொல்லி தந்தை செல்வா சொன்னது உண்ம தான் பாருங்கோ..

மாவீரர்களாகிய பொது மக்களுக்கும் ஒரு நடுகைக்கல் வையுங்கள்"ஒரு பெண் போராளியின் கோரிக்கை.

என் பாச உறவுகளே! உங்களுடன் நான் சிறிது நேரம் பேச விரும்புகிறேன், கொஞ்சம் செவிகளைக் கொடுங்கள். நான் உங்களுடன் உரிமையாகப் பேசமுடியும். வன்னியின் மடியில் வாழ்ந்தவள். என் குடும்பத்துக்காகவும் உங்களுக்காகவும் என் மண்ணின் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக போராடியவள். என் குடும்ப உறவுகளை தொலைத்து ஏமாற்றப்பட்டவள்.தமிழனின் போராட்டம் நேர்மையானது, உண்மைக்காக போராடுபவர்கள் என்று எம்மைத் திட்டித் தருவதாகக் கூறி தட்டி வீழ்த்திவிட்டது உலக வல்லரசுகள்.
நாம் 1ஆம் – 2ஆம் உலகப் போர்களை வரலாற்று ஏடுகளிலேயே படித்து வந்தோம். ஆனால் நாம் அதை விடக் கொடுமைகளை அனுபவித்து விட்டோம். வலி சுமந்தவர்களாக வாழ்கிறோம்.
எம் தலைவன் போராட்ட வடிவங்களாக அகிம்சைப் போராட்டத்தை தியாகி தீலிபன் அண்ணா மூலமாகவும், மக்கள் படையில் தியாகி அன்னை பூபதி மூலமாகவும், ஆயுதப் போராட்டத்தை வரிப்புலிப் போராளிகளாகவும், அதைத் தாங்கும் தூண்களாக மக்களையும் வைத்து போராடிக் காட்டியவர்.
உலகத்தின் எல்லாக் காதுகளுக்கும் தமிழன் என்று ஒரு இனம் தொன்று தொட்டு இறைமையுடன் வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்று உரக்க கூறி விட்டார், ஆயுதம் அடங்கிவிட்டது.
உலகத்தின் எல்லா மூலைக்குள்ளும் அகதி அந்தஸ்து பெற்றவர்களாக உயிர் பயமற்று தமிழர் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வன்னி மண்ணில் போருக்குள் வாழ்ந்து மண்ணுக்காக தம் உறவுகளை விதைகுழிகளில் விதைத்து விட்டு, அந்த மான மறவர்களுக்கு முன்னால் நின்று போட்டு, விளக்கேற்றி ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்த முடியாமல் அந்த மாவீரர் கோயில்கள் இருக்கும் திசை நோக்கி கை கூப்பி மௌனமாக அழ மட்டுமே அந்த உறவுகளால் முடியும்.
ஆனால் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் கைகளையோ, கண்களையோ நாம் வாழும் நாடுகள் கட்டிப்போடவில்லையே........எமக்காய் வாழ்ந்து எமக்காய் தங்கள் உயிர்களைத் தந்த அந்த உறவுகளை நினைவு கூரும் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்,
இப்போது நாம் போராடவில்லை,"செத்தவர்கள் போராடுகிறார்கள்".
இறுதிப்போரில் 30000 அல்ல அதற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் , இல்லை போராடினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் ஒட்டு மொத்த மக்களும் தடைகளை உடைத்துக் கொண்டு ஒரே தடவையில் வெளியேறி இருக்க முடியும், இவ்வளவு மக்கள் அழிப்பு வந்திருக்காது. அவர்கள் வரிப்புலி தலைவனுடன் சேர்ந்து போராடினார்கள். தலைவனுக்கு கை கொடுத்து தலைவனுக்கு அருகிலேயே இருந்தார்கள்.
எதிரியால் தலைவனை நெருங்க முடியவில்லை, அதனாலேயே சிங்கள வெறியாட்சியாளனின் படைகள் தாயின் வயிற்றுக் குழந்தையுடன் சாப்பாட்டிற்காக வரிசையாக நின்ற குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என ஈவிரக்கமின்றி எப்படியெல்லாம் கொல்லமுடியுமோ, அப்படிக் கொலை செய்யப்பட்டார்கள்.
வரிப்புலிப் போராளிகள் சத்தியப் பிரமாணம் செய்தார்கள் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்". மக்கள் படை சத்தியம் செய்தார்கள் "தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்", இவர்களும் போராளிகள்.
வரிப்புலிப் போராளிகள் தமிழீழ விருட்சத்திற்கு இரத்த நீரூற்றினார்கள். இறுதிப்போரில் மக்களே தசைகளையும் எலும்புகளையும் உரமாக்கினார்கள். இவர்களும் மாவீரர்களே.
மான மறவர்களுக்கு நினைவுகள் வைத்து பூசிக்கும் போது ஒட்டு மொத்தமாக உரமான எம் மக்களுக்கு ஒரே ஒரு நினைவுக்கல் வையுங்கள்.
எம் தலைவன் எம் கண் முன் தோன்றும் போது நிச்சயம் உங்களை பாராட்டுவார்.
இந்த மாவீரர் நாளில் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்வோம். நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன், " செத்தவர்கள் போராடுகிறார்கள்" என்று.
தமிழினப் படுகொலைகளிற்கு சாட்சியமாக புகைப்பட காணொளிகள் வாயிலாக அவர்கள் போராடுகிறார்கள்.
இவர்களுடைய சாவுகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை நான்- நீ என்று போட்டி போடுவதை விடுத்து எம் நாட்டின் விடிவுக்காக ஒற்றுமையாக நாம் வாழும் நாடுகளின் முன் நின்று ஐ.நாவின் காதுகளுக்கு கேட்கும் வரை உரத்துக் குரல் கொடுப்போம், எம் இனத்திற்கு விடிவு கிடைக்கும் வரை.

06 நவம்பர் 2011

தமிழக மீனவர்கள் மீது கற்களால் அடித்தது ஸ்ரீலங்கா கடற்படை!

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஆறு தமிழ்நாட்டு மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் 10 மீன்பிடிப்படகுகள் சேதமடைந்துள்ளதாக பிரிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
கச்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை மீன்டிபிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீதே, அங்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் படகு ஒன்றின் யன்னல் கண்ணாடி உடைந்து கண்ணாடித் துண்டுகள் வெட்டியதால் மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். கல்வீச்சினால் மேலும் ஐந்து மீனவர்கள் காயமடைந்தனர்.
சிறிலங்கா கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டு மீனவர்கள் ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மீனவர்கள் மீது பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வந்த சிறிலங்கா கடற்படை, தற்போது கற்களை வீசித் தாக்கத் தொடங்கியுள்ளது.

கனடா ஸ்காபரோவில் மாவீரர் பணிமனை திறந்து வைக்கப்பட்டது.

கனடாவின் ஸ்காபரோ நகரில், மார்க்கம் வீதியில் 2691 அறையிலக்கம் 9B என்ற முகவரியில் அமையப் பெற்ற புதிய காரியாலயத்தில் மாவீரர் பணிமனை வெகு விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது.மாவீரரை மனங்களில் நிறுத்திய படி குழுமிய மக்கள் வெள்ளத்துடன் திறப்பு விழா ஆரம்பமானது. முறைப்படியாகக் கனடிய அரசுக்கு அறவித்து தேவையான அனுமதியைப் பெற்றபின் மக்களுக்காக மக்களால் மக்களிடமிருந்த உருவாகியுள்ள செயற்பாட்டாளர்களால் இந்தப் பணிமனை திறந்து வைக்கப்பட்டது,இப்ணிமனைத் திறபுபு நிகழ்வினை, மாவீரராகிவிட்ட மேஜர் நிதிலாவின் அன்னையார் திருமதி செல்வநாயகம் சம்பிரதாயபூர்வமாகக் குத்து விளக்கேற்ற, மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்கள் வாயிற் கதவில் நாடாவை வெட்டி விழாவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்கள், தமிழின செயற்பாட்டாளர்கள், தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பேராளர்கள், உடகவியலாளர்கள் எனப் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகபகும்.
நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய, பணிமனை திறப்பதற்கான குழுவின் ஒரங்கிணைப்பாளர் திரு சத்தி வேலுப்பிள்ளை அவர்கள், இப்பணிமனையானது, வெறமனே மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துகின்ற பணிமனையாக இல்லாமல் மாவீரரர்களின் பதிவுகளைப் பேணும் வைப்பகமாகவும் அமைய வேண்டும் என்பது தான் தமது நோக்கம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த மாவீரா பணிமனை திறக்கப்பட்ட செயற்பாட்டில் எதுவிதமான அரசியல் நோக்கமும் இல்லை என்று கூறியதுடன் பணிமனை ஏன் திறக்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும் குழுமியிருந்தமக்களுக்கு அளித்தார்.
2011 ம் ஆண்டுக்கான மாவீரா தினம் எதிர்வரும் 27ம் திகதி காரல 6மணி முதல் மாலை 10மணி வரை ரொரன்ரோ டவுண்ஸ் வியூ பார்க் மைதானத்தில் 5000 பேர் வரை அமரக்கூடிய மண்டபத்தில் நடைபெறும் என்றும் அத்தினத்தில் மக்கள் பெருந்திரளாக வந்து மாவீரர் தெய்வங்களுக்குத் தமது வணக்கத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பேராளர் ஜோ அந்தோனி ”இது மாவீரருக்கான காலம் அவர்களுக்கு நாம் இங்கு ஆலயம் அமைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஆலயம் பெரிய அளவில் அமைய வேண்டும். அப்பணியை இப்பணிமனையின் ஏற்பாட்டாளர்கள் செய்து முடிப்பார்கள் என நம்புகிறேன், இப்படியான வெளிப்படையான செயற்பாடுகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து கனடியத்தமிழர் பேரவையின் தேசிய ஊடகப் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை, தனதுரையில் “மாவீரர்கள் மக்களுக்காகத் தமது வாழ்க்கையை ஆகுதியாக்கியவர்கள்,இத்தகைய புனிதமான செயலைச் செய்தவர்கள் இன்று எங்கோ உறங்குகிறார்கள், இம்மாதத்தில் அவர்களை நினைக்க வேண்டியது எமது கடமை – இப்படி வெளிப்படையாக இப்பணிமனையின் அமைப்பாளர்கள் செய்யும் இநதச் செயலுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்”. என்றார்.
நா.க.த.அ பேராளரான ஈழவேந்தன் 2009 ஆண்டு வரை முப்படைகளையும், சிவில் நிர்வாக அலகுகளையும் கொண்ட நடைமுறை அரசொன்று தமிழீழத்தில் இருந்தது என்பதை நினைவு படுத்தினார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேராளர் வின் மகாலிங்கம், நாம் எல்லோரும் எப்படியிருந்தாலும் மனோ பலத்துடன் இருந்து எம் மாவீரர்களக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்றார். எம் தமிழ் மக்கள் பிரதிபலன் எதிர்பாராது எங்கள் இனத்துக்கான செயற்பாடுகளில் ஈடபடவேண்டும் என்று தனதுரையில் கேட்டுக் கொண்டார் தேசியத் தலைவரின் மைத்துனரான திரு.ராஜேந்திரம்.
இவர்களைத் தொடர்ந்து பேசிய திருமதி உதயா பிரபாகரன், ”இது கார்த்திகை மாதம் மாவீரருக்குரிய மாதம் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் கட்டுப்பாட்டுக்குள் இம்மாதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தகர்த்தெறியப்பட வேண்டும் என்பதற்காவே இம் மாவீரர் பணிமனை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இம் மாவீரர் பணிமனை திறக்கப்பட்டுள்ளது போல் 2012ல் மாவீரர் பூங்கா திறப்பதற்கான பரப்புரையில் எல்லோரும் ஈடுபட வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.
இறுதியாக உரையாற்றிய மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் மாவீரர்கள் சத்திய வேள்வியில் உருகிப் போனவர்கள், தன்னலமின்றித் தமதுயிரைத் தியாகம் செய்தவர்கள் என்றார். அவர் மேலும் பேசுகையில் “இப்பணிமனைப் பணி போன்ற ஆரோக்கியமான பணிகள் தொடர வேண்டும் அதற்கு என் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்” என்றார்.

இனவாதி குணதாசவின் கூற்றுக்கு சிறிதரன் பதிலடி!

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் அவர்களது வாழ்வுக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மரண தண்டனை விதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றது. இயலும் என்றால் அவர்கள் அதைச் செய்யட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவற்றைக் கண்டு ஒரு போதும் அஞ்சாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கை அரசையும் மீறி தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. உதவிச் செயலரைச் சந்தித்தமைக்காகவும் வெளிநாடுகளில் இலங்கையில் பிரிவினை வாதத்தைத் தோற்றுவிக்கும் வகையில் பேசியமைக்காகவும் வெளிநாடு சென்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவி நீக்குவதுடன் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்த கருத்துத் தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து தான் அவர்கள் தங்களது அராஜகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால் கைது செய்யட்டும். அதற்காக ஒருபோதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பயப்படப்போவதில்லை.
தமிழ் மக்கள் இலங்கையில் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்ற செய்தியை வெளியுலகுக்கு சொன்னவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான். தமிழ் மக்கள் எப்போது தங்களது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராடுகின்றார்களோ அப்போதெல்லாம் சிங்கள இனவாதம் தலைவிரித்தாடிய வரலாறுகள் தான் இருக்கின்றன.
தந்தை செல்வாவின் காலத்தில் அமிர்தலிங்கத்தை கைது செய்தார்கள். பண்டா செல்வா ஒப்பந்தம் நடந்த வேளையில் அதனைக் குழப்பியவர் ஜே.ஆர். அதன் பின்பு இலங்கை இந்தி ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடக்கு, கிழக்கை பிரித்தவர்கள் இனவாதிகளான ஜே.வி.பியினர் தான்.
தமிழ் மக்களுக்கு எப்போதும் தீர்வு கிடைக்கக் கூடாதென்பதுடன், அவர்கள் இலங்கையில் ஒரு தேசிய இனம் இல்லை என்று வெளிக்காட்டுவதில் சிங்கள இனவாதிகளும், சிங்களக் கட்சிகளும், பௌத்த பிக்குகளும் முதன்மை வகித்திருக்கின்றார்கள். இதனை விட விகாரமாதேவி தமிழனின் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று விரும்பிய வரலாறுகளும் உண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மை நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துச்சொல்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக போராடியவர்கள் நாங்கள். ஆயுதமேந்திப் போராடிய காலம் முடிவடைந்து ஜனநாயக ரீதியாக உலகுக்கு உண்மையைச் சொல்லி எமது உரிமையைக் கேட்கின்றோம்.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறுகிறது. இதனை முழு உலகமும் பார்த்துக்கொண்டு தான் இருந்தது. ஆனால் எமக்குத் தெரிந்த வரையில் ஒர இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசு இங்கு ஒரு தேசிய இனத்தை அழித்தது என்பதையும் இங்கு இந்த மண்ணில் இன அழிப்பு நடந்தது என்பதை நிரூபித்து இங்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என்ற நிலைப்பாடு உணர்த்தப்பட வேண்டும்.
இதன் மூலமாக தமிழ்மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்காக அவர்கள் எம்மை கைது செய்து சிறையில் அடைந்தாலும் மரண தண்டனை வழங்கினாலும் பரவாயில்லை. எதற்கும் முகம் கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

05 நவம்பர் 2011

செந்தமிழன் சீமானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது அமெரிக்கா!

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கை:
உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீமான் நியூயார்க் சென்று சேர்ந்தபோது, அவரை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி விமான நிலையத்திலேயே தடுத்து வைத்துள்ளனர்.
இதற்கான காரணம் கேட்டதற்கு, சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்றும், அவரை அனுமதித்தால் அது அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகலாம் என்ற அச்சம் காரணமாக அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
சீமானுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோது இந்த உண்மைகள் அவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இதிலிருந்து தமிழினத்தின் நலனுக்கு எதிரான சக்திகள் அளித்த தகவல்கள் பேரிலேயே சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
இது அமெரிக்காவில் நடை முறையில் உள்ள மனித உரிமை, கருத்துச் சுதந்திர சட்ட உரிமைகளுக்கு முரணான நடவடிக்கையாகும். இந்நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக உண்மையாகப் போராடிவரும் அனைத்து தமிழர் தலைவர்களும் இப்படிப்பட்ட சட்ட அராஜகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக உள்ள அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை இதேபோல்தான் சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியேற்ற துறை விமானத்தில் வைத்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. அதுதான் இன்றைக்கு சீமானுக்கும் நடந்துள்ளது.
தமிழீன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள பவுத்த இனவாத ஆட்சியின் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று, தமிழினப் படுகொலைக்கு உதவிய அரசுகள், இன்று தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அரசியல் தளத்திலும் முடக்க இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுகின்றன.
இன்றைக்கு சீமானுக்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தமிழினத்தின் அரசியல் போராட்டம் ஒருபோதும் முடங்கிவிடாது. தமிழீழ விடுதலைக்காகப் போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் ஆத்ம பலத்தை சிந்தையில் ஏந்தி விடுதலைப் போராட்டம் வென்றே தீரும்.
இன்று இரவு ஒரு மணிக்கு சென்னை திரும்பும் சீமானை வரவேற்க நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கனடா தமிழர்களுக்கு அடிபணிந்து விட்டதாம்!சுற்றவாளி போல் பேசும் குற்றவாளிகளின் கூட்டாளி.

போர்க்குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை கனடா நிறுத்திக் கொண்டால், சிறிலங்காவுக்குப் பாரிய இழப்பு ஏற்படும் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆனால் கனடாவின் உதவிகள் தடைப்பட்டு, இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள கனடா, 1950ம் ஆண்டில் இருந்த நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் போர் முடிவுகள் வந்த பின்னர் 35 மில்லியன் டொலரை கனடா உதவியாக வழங்கியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கனேடியப் பிரதமர், அடுத்த கொமன்வெல்த் மாநாடு சிறிலங்காவில் நடைபெற்றால் அதைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒட்டாவா தூதரகத்தில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,
“சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கனடா எம்மைக் கைவிட்டு விடக் கூடாது.
எமக்கு எல்லா நாடுகளினது ஆதரவும் தேவைப்படுகிறது. குறிப்பாக கனடாவின் உதவி அவசியமானது.
அவர்கள் பொருள் உதவி செய்துள்ளார்கள். வழமைக்குத் திரும்புவதற்கு அவர்கள் எமக்கு உளரீதியான பலத்தைக் கொடுக்க வேண்டும்.
கனடா உதவிகளை வெட்டினாலோ, அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை புறக்கணித்தாலோ அதை நாம் இல்லாமல் செய்ய வேண்டும்.
சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெலத் கூட்டத்தில் கனடாவின் பங்கு இல்லையென்றால் மோசமாக இருக்கும்.
ஐ.நா நிபுணர்குழுவின அறிக்கை பாரபட்சமானது. ஒருபக்க சாட்சியங்களைக் கொண்டது.
அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னர் நிபுணர்குழுவுக்கு முன்பாக எமது ஆலோசனைகளை கூறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிடுமானால், சிறிலங்கா அரசாங்கம் அதற்கான கதவுகளைத் திறந்து விடத் தயாராகவே உள்ளது.
ஆனால் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவது சிறிலங்காவின் இறைமையை மீறுகின்ற செயலாகும்.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரும், கனடாவில் வாழும் சுமார் 300,000 பேரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தே கனேடிய அரசாங்கமும், கனேடியப் பிரதமர் ஹார்பரும் அடிபணிந்து விட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இந்தக் குற்றச்சாட்டை கனேடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நிராகரித்துள்ளார்.
மனிதஉரிமைகளின் சார்பிலேயே கனடா இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“கனேடியப் பிரதமரின் உறுதியான நிலைப்பாடு குறித்து கனடாவிலுள்ள தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருணா,பிள்ளையான் இருவரையும் ஏன் மகிந்த அவுஸ்ரேலியா அழைத்து செல்லவில்லை?

108பேருடன் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற மகிந்த ராசபக்ச அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கருணாவையோ பிள்ளையானையோ கூட்டிப்போகவில்லை. இது பற்றி கருணாவோ அல்லது பிள்ளையானோ வாய்திறக்க முடியுமா என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கு சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டிச்செல்லவில்லை என கருணாவும் பிள்ளையானும் தெரிவித்திருப்பது பற்றி அரியநேத்திரனிடம் கேட்ட போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
தமிழ் மக்களைப்பற்றி பேசுவதற்கோ அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி பேசுவதற்கோ கருணாவுக்கோ பிள்ளையானுக்கோ உரிமை இல்லை. இவர்கள் செல்லாக்காசுகள். இவர்கள் ஒட்டியிருக்கும் அரசாங்கம் கூட இவர்களை கணக்கெடுப்பதில்லை.
இவர்களின் பிரசாரங்கள் எதுவும் எடுபடாது என ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும். இதனால்தான் இவர்களை எங்கும் கூட்டிச்செல்வதில்லை என அரியநேத்திரன் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு சென்றது பிரதேசங்கள் பற்றி பேசுவதற்கல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பேசுவதற்கே அங்கு சென்றுள்ளனர். அந்த குழுவுக்கு தலைமை தாங்கியிருப்பவரே கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்தான். இந்த நிலையில் இதை புரியாதவர்கள் போல் இவர்கள் பிதற்றுகிறார்கள் என்றும் அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்களைப் புறந்தள்ளிச் சென்றுள்ளது என்றால் அதனைப் பற்றி பேச வேண்டியவர்களும் கவலைப்படுபவர்களும் நாமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கருணாவோ அல்லது பிள்ளையானோ அல்ல.
அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றியோ தமிழ் மக்கள் பற்றியோ பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது.
அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்து கொண்டிருக்கும் இவர்கள் இப்போது பிரதேச, மாகாண வாதத்தின் ஊடாகப் பிழைப்பு நடத்த முயற்சிக்கின்றனர்.
நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச வாதத்துடன் செயற்படும் ஒரு கட்சியல்ல என்பதனை நான் இவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என அரியநேத்திரன் தெரிவித்தார்.

04 நவம்பர் 2011

கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணத்திற்கு இனச்சாயம் பூசுவது தீர்வு கிடைப்பதை தடுக்கவே!

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதை தடுப்பதற்காகவே பேரினவாதிகள் கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயத்திற்கு இனவாதச் சாயம் பூசுகின்றனர் என்று புளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நாட்டுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படாதபோது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அக்காலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளமை வரலாறாகுமென்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன் மேலும் தெரிவித்திருப்பதாவது:
வெளிநாடு சென்றுள்ள கூட்டமைப்பினர் எந்தவொரு இடத்திலும் தனித் தமிழீழம் தொடர்பாக கருத்துக்களை வெளியிடவில்லை. அத்தோடு தமிழ் அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றமை இது முதற்தடவையல்ல. கடந்த காலங்களிலும் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்காத போது பல தமிழ் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
அது மட்டுமல்ல இன்றைய ஜனாதிபதி கடந்தகால ஆட்சியாளர்கள் மனித உரிமைகளை மீறுவதாக ஐ.நா. சென்று முறைப்பாடுகளை செய்துள்ளார். தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல பல்வேறு காலகட்டங்களில் சிங்களத் தலைவர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காததன் காரணமாகவே தலைவர்கள், வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். தீர்வுகள் கிடைக்குமானால் வெளிநாடு சென்று முறையிடும் தேவை ஏற்படாது. ஆனால் பேரினவாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதை தடுக்கின்றனர். இதனை இவர்கள் கைவிட வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பொலிசார் உறுதியாம்!

யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை ஒரு மாதகாலத்துக்குள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரன் தெரிவித்ததாக அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் யாழ். மாவட்டத்துக்குப் புதிதாக வந்துள்ள பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் தொடர்பாக அரச அதிபர் தெரிவித்தவை வருமாறு:
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் கூடிய நேரம் கலந்துரையாடப்பட்டது. பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் எனக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளைப் பொலிஸாரிடம் வழங்கியுள்ளேன். இது தொடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகப் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ். குடாநாட்டு மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்குரிய சகல வழிவகைகளையும் மேற்கொள்வதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடனே பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்யச் செல்லும் பெண்களைப் பொலிஸார் தொலைபேசி இலக்கங்கள் கேட்பது தொடர்பிலும் தெரிவித்தேன். இந்த விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்ததாக அரச அதிபர் குறிப்பிட்டார்.
இதேவேளை நீதிமன்றங்களும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கு அரச அதிபர் என்ற ரீதியில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா.தங்களை தாங்களே விசாரணை நடத்தலாம் என்கிறார் பீரிஸ்!

இலங்கையில் நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் போது ஐ.நா. முறைமை தோல்வி கண்டமை தொடர்பாக “அவர்கள் (ஐ.நா.) தங்களைத் தாங்களே விசாரணை நடத்த விரும்பினால் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என்று கொழும்பு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, “ஐ.நா. தவறிழைத்ததாகத் தெரிவிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த யூ.என்.எவ்.பி.ஏ.இன் முன்னாள் பணிப்பாளர் தோரயா ஒபாய்ட்டை ஐ.நா. நியமித்திருப்பது தொடர்பாக நிலைப்பாடு எதனையாவது இலங்கை கொண்டிருக்கின்றதா? என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் கேட்கப்பட்டபோது, “அவர்கள் விரும்பினால் அதனைச் செய்ய முடியும்’ என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.
2009 ஜனவரி முதல் மே வரையில் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து சுயாதீனமாக தோரயாவால் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. அச்சமயம் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப்பிரதிநிதியாக இருந்த நீல்புனேயின் அறிக்கை தொடர்பாக பீரிஸின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
“உதாரணமாக, உணவு விநியோகம் (நிறுத்தம்) தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் (புனே) எழுதியிருந்த அறிக்கைக்கு நேரடியாக முரண்பட்டுள்ளது. அவர் இங்கு களத்தில் இருந்தார். என்ன நடக்கின்றது என்பதை அவர் நேரடியாக அறிந்திருந்தார்’ என்று பீரிஸ் கூறியுள்ளார்.
“என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக தூதுவர்கள் சிலரும் அறிந்திருந்தனர். ஏனெனில் அவர்களும் சம்பந்தப்பட்ட குழுவில் இருந்தனர். குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதை அவர்கள் யாவரும் அறிவார்கள்’ என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

03 நவம்பர் 2011

ஸ்ரீலங்கா சார்பான தீர்மானம் பொதுநலவாய அமைப்பின் ஜனநாயக கோட்பாடுகளுக்கு கரும்புள்ளி!

ஸ்ரீலங்காவிற்கு ஆதரவான பொது நலவாய அமைப்பின் தீர்மானம் அவ் அமைப்பின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளுடன் முரண்பட்டுக் காணப்படுவதுடன் பொதுநலவாய அமைப்பின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும். இவ்வாறு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சுட்டிக் காட்டி நியூசிலாந்து ஊடகமான ஸ்கோப் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை 2013ல் இலங்கையில் நடத்துவது தொடர்பான பொருத்த ப்பாடுகளை மீள ஆராய்வதில்லை என அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது. இத் தீர்மானமானது பொது நலவாய அமைப்பின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளுடன் முரண்பட்டுக் காணப்படுவதுடன் அவ் அமைப்பின் வரலாற்றில் இத் தீர்மானமானது அதன் தரம் தாழ்ந்த விடயமாகவும் உள்ளது. 2009-ல் இடம் பெற்ற பொது நலவாய அமைப்புத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இலங்கையில் 2011 ல் இம் மாநாட்டை வைப்பது என்கின்ற தீர்மானம் பிற்போடப்பட்டு 2013 ல் மேற்கொள்வவெனத் தீர்மானிக்கப்பட்டது.
2009ஆண்டிலிருந்த இலங்கையின் நிலைப்பாட்டில் தற்போது சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான அனைத்துலகின் கவனம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் இதனை ஏற்று இக் குற்றச்சாட்டுத் தொடர்பாக நேர்மையான நீதியான முயற்சிகளை எடுப்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் இதனை ஏற்க மறுத்துள்ளது.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் மற்றும் யுத்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக பெறப்பட்ட நம்பகத்தன்மையான சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சுயாதீனமான அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக இலங்கையின் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணை முயற்சிகள் போதியளவு நம்பகத்தன்மையானயாக‌ இல்லாமையாலேயே இவ்வாறான அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. எது எவ்வாறிருப்பினும மிகப் பரவலாக இலங்கை அரசாங்கம் மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்திலெடுக்கின்ற விடயத்தில் பொதுநலவாய அமைப்பு பராமுகமாக நடந்துக் கொண்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளில் சில தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளன.
2013ல் இடம்பெறவுள்ள பொது நலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை இலங்கையில் வைப்பதற்கு அனுமதித்தமை இலங்கை இவ்வமைப்பின் உறுப்பு நாடாக தொடர்ந்தும் நிலைத்திருக்க அனுமதியளித்தமை போன்ற விடயங்களின் மூலம் பொதுநலவாய அமைப்பானது தனது எதிர்காலப் போக்கை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது.
பொதுநலவாய அமைப்பு தனது வரலாற்றில் தென்னாபிரிக்காவின் இன ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக தனது எதிர்ப்பைக் காட்டியது போன்று இனிவருங்காலங்களில் மனித உரிமைச் செயற்பாட்டில் தான் எவ்வாறான தீர்வுகளை எடுக்கவுள்ளதை தற்போதைய பேர்த் மாநாட்டில் இலங்கை தொட ர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

சிங்கள அரசை குளிர்விக்க கூட்டமைப்பை சந்திப்பதை தவிர்த்த பான் கீ மூன்!

இலங்கை அரசு வழங்கிய கடுமையான இராஜதந்திர அழுத்தத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெற வில்லையெனத் தெரிகிறது.
இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் அந்தஸ்திலுள்ள உயரதிகாரியான லிங்க்பாஸ்கோவைச் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர் அவருடன் பேச்சுகளை நடத்திய பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்திருக்கின்றனர்.
முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்தித்துப் பேசுவதற்குப் பூர்வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கனடாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு அவசரமாக மீண்டும் அமெரிக்கா திரும்பியிருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் சென்றனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தச் சந்திப்பு நடைபெறமாட்டாதென கூட்டமைப்பினருக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்தே ஐ.நா. சபையில் அரசியல்துறைக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் லிங்க்பாஸ் கோவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா.செயலாளர் நாயகத்தைச் சந்திக்கும் விடயத்தில் இலங்கை அரசு வழங்கிய கடும் அழுத்தமே இதற்கான காரணமென்று நம்பப்படுகிறது. முன்னதாக இது விடயம் குறித்து கொஹன்ன, பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் ஐ.நா. செயலாளர் நாயகம், தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களை சந்திக்கமாட்டார் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தனர்.
இதேவேளை, இந்தவிடயம் குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் கருத்தை அறிவதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. அரச அழுத்தத்திற்கு அடிபணிந்து ஐ.நா. செயலாளர் நாயகம் மேற்கொண்ட இந்தத் தீர்மானம் தமிழ்ச் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

02 நவம்பர் 2011

கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பது தவறு என்கிறார் சிங்கள அமைச்சர் பீரிஸ்!

உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாகி விட முடியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐ.நா பொதுச்செயலர் சந்திக்கவுள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“ஐ.நா முறையை சிறிலங்கா எதிர்க்கவில்லை. யாரை வேண்டுமானாலும் அவர்கள் சந்திக்கலாம்.
சிறிலங்காவில் பல அரசியல்கட்சிகள் உள்ளன. அவற்றில் சில நாடாளுமன்றத்தில் தமிழ்மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன.
ஆகவே சிறிலங்காவில் உள்ள தமிழ்மக்களின் ஒரே பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்றும், தமிழ் மக்களின் கருத்தை அவர்கள் பிரதிபலிப்பதாகவும் கருதுவது அடிப்படையில் தவறான நம்பிக்கையாகும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கப் பயணம் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியிருக்கவில்லை.
தேசிய பிரச்சினை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு நாட்டுக்குள்ளே உள்ளது. இங்கிருந்தே அதற்கு தீர்வு எட்டப்பட முடியும்.
வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேசுவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
நாடாளுமன்றத்தின் மூலமோ, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமோ தான் இதற்கு தீர்வு எட்ட முடியும்.
நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையை சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கவுள்ளது. அவர் அதனைப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அது பொதுமக்களுக்கு எப்போது பகிரங்கப்படுத்தப்படும் என்று என்னால் கூறமுடியாது. ஏனென்றால் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை.“ என்று அவர் கூறியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், தொரயா ஒபெய்ட் அம்மையாரை நியமித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்ட ஜி.எல்.பீரிஸ், “அவர்கள் தம்மை விசாரிக்க விரும்பினால் அதைச் செய்யட்டும்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டில் சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு முன்னர் மனிதஉரிமை செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் கூறியுள்ள கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“வேறு நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக எமது கொள்கைகளைத் தயாரிக்க முடியாது.
சிறிலங்கா ஒன்றும் எவருடையதும் காலனித்துவ நாடல்ல. இது சுதந்திரமான இறைமையுள்ள நாடு.
எமக்கு எந்த நாடும் உத்தரவிட முடியாது. காலக்கெடு விதிக்கவும் முடியாது.
மக்களுக்கு எது நல்லதோ அதனையே நாம் மேற்கொள்வோம். வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்க மாட்டோம். பிரித்தானியாவின் கருத்தை நாம் நிராகரிக்கிறோம்“ என்று கூறியுள்ளார்.

பனஞ்சாராயம் கேட்டாராம் பசில்!

சில்ப 2011 கண்காட்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பனம் சாராயம் இருக்கின்றதா, அது எங்கே…? எனக் கேட்டார்.கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் மூன்று தினங்கள் சில்ப 2011 கண்காட்சி கண்டியில் சிறிமாவோ பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் பங்குபற்றிய பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினத்திடமே மேற்கண்டவாறு கேட்டார் அமைச்சர் பஸில்.வருடாந்தம் இந்தக் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இதில் உள்ளூர் உற்பத்தித் துறைகள் தொடக்கம் சகல துறைகளினதும் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்படும்.கண்காட்சியைப் பார்வையிட்டு வந்த சமயம் பனை அபிவிருத்திச் சபையின் காட்சி அறையிலும் நுழைந்தார் அமைச்சர். அப்போது பனம் சாராயம் இருக்கிறதா எங்கே எனக் கேட்டார்.
பனம் சாராயம் விற்பனை செய்வதற்கான தரச்சான்றிதழ் கிடைக்குமாயின் அதனையும் உற்பத்தி செய்து காட்சிப்படுத்த முடியும் என்று பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் கூறியுள்ளார்.

01 நவம்பர் 2011

பரிஸில் ஆயுததாரிகளின் தாக்குதலில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரதிநிதி படுகாயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள், வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
26.10.1996ஆம் ஆண்டு இதேபாணியில் பாரிசில் நிகழ்த்திய கொலைவெறித் துப்பாக்கிச்சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் கந்தையா நாதன், ஈழமுரசு இதழின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
தற்பொழுது இதேபாணியில் பருதி அவர்கள் மீது கைக்கூலிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதபாணிகளால் கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆள் சேர்க்கிறது ஜே.வி.பியின் கிளர்ச்சி குழு!

ஜே.வி.பியில் இருந்து விலகிய கிளர்ச்சி அணியினர், தற்போது, கிராம மட்டத்தில் இருந்து தமது அணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.உயர்தரம் மற்றும் சாதாரண தரம் ஆகிய வகுப்புகளில் கல்வி பயின்று வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூர்த்தி அதிகாரிகள் போன்றோரை உறுப்பினர்களாக சேர்ப்பதே இவர்களின் இலக்காக உள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது, வடக்கு கிழக்கு இளைஞர்கள், யுவதிகள் குறித்தும், ஜே.வி.பியின் கிளர்ச்சி அணியினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கிளர்ச்சி அணியின் உயர் மட்டத் தலைவர்களின் ஆலோசனையின் பேரில், அதன் இரண்டாம் கட்ட தலைவர்கள் இணைந்து, தமது அணிக்கான புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.