17 ஜூலை 2012

தமிழக அகதிகள் முகாமில் 6 வயதான சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 6 வயதான சிறுமியொருத்தி, பாலியல் வல்லுறவுக்குட்பட்டு கொலைசெய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்முகாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிரிஜா அல்லது ஸ்ரீநிதி எனும் இச்சிறுமியின் உடல், மேற்படி முகாமிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மதகு ஒன்றின் கீழிருந்து நேற்று மீட்கப்பட்டது. இச்சிறுமியின் கழுத்திலும் கைகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. இச்சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இப்பாலத்தின் கீழ் சடலம் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி அகதிகள் முகாமைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவர் கைது செய்யப்பட்டள்ளார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என தினமலர் பத்திரிகை தெரிவித்துள்ளது.
20 வருடகாலமாக இயங்கும் இந்த அகதிகள் முகாமில் இத்தகையதொரு சம்பவம் நடைபெற்றமை இதுவே முதல்தடவை எனக்கூறப்படுகிறது.

சிறீலங்கா படையதிகாரிகள் தமிழகத்திலிருந்து வெளியேற்றம்.

தமிழகத்தில் பயிற்சிக்குச் சென்ற இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்று காலை வெளியேற்றம்தமிழகம் குன்னூரில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கேற்க சென்றிருந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்று காலை அங்கிருந்து வெளியேறினர்.
இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அங்கு ஒரு கருத்தரங்கில் பங்கேற்க சென்றிருந்த இலங்கை அதிகாரிகள் இன்று காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த கருத்தரங்கு நாளை 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எவ்வாயினும், குறித்த அதிகாரிகளை இந்தியாவில் இருந்து பயிற்சிகளை பெறாமல் நாட்டிற்கு மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குன்னூரில் வான்படை பயிற்சி பெறும் இலங்கை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் நேற்று தனித்தனியே அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இந்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 ஜூலை 2012

கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஆப்பிறுக்குகிறார் சம்பந்தர்!

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள போதிலும், அதன் அங்கத்துவ கட்சிகளிடையே வேட்பாளர்களை பங்கிடுவதில் சுமுகமான உடன்பாடு இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவான ஒரு தேர்தல் சின்னத்தின் கீழ், வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் கிழக்கு மாகாண சபைக்கான வேட்பாளர் தெரிவு குறித்த பேச்சுக்கள் நடைபெற்றன.
இருப்பினும் அதில் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.
திருகோணமலையில் 10 வேட்பாளர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 3 வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய நான்கு கட்சிகளுக்கும் வழங்குவது என தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாகவும், அதனை ஏற்பதற்குத் தாங்கள் மறுத்ததையடுத்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் 4 வேட்பாளர்களை தருவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவை ஏற்று, தமது கட்சிகள் நான்கும் தலா ஒரு வேட்பாளரை நியமிக்க உடன்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 14 வேட்பாளர்களில் 7 பேரை தமிழரசுக் கட்சிக்கும் மிகுதி 7 பேரை ஏனைய நான்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுத்து 4 பேரை மட்டுமே ஒதுக்குவதற்கு முன்வந்ததாகவும் பின்னர் 5 பேராக அது அதிகரிக்கப்பட்டதாகவும் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.
தங்களது கோரிக்கையான 7 பேர் தேவை என்பதை பிடிவாதமாக வலியுறுத்திய போதிலும், உடன்பாடு எட்டப்படாத நிலையில், தமிழரசுக் கட்சியை மட்டும் போட்டியிடச் செய்து தமது 4 கட்சிகளும் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பது அல்லது தமிழரசுக் கட்சியை விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தனியாக போட்டியிடுவது என்ற முடிவுக்கு வருவது பற்றியும் தாங்கள் சிந்தித்ததாக செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.
இருப்பினும் இந்த முடிவுகள், இன்றைய அரசியல் சூழலில் மட்டக்களப்பு பிரதேசத்தின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமது கட்சி ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, மட்டக்களப்பில் 5 பேரை தாங்கள் வேட்பாளர்களாக நியமிப்பதற்கு விருப்பமின்றி உடன்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

சிறையில் கொலை செய்யப்பட்ட நிமலரூபன் தொடர்பில் மூன்று நீதிமன்றங்களில் வழக்குகள்!

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தின் பின்னர் அடிகாயங்களுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் மரணமடைந்த கணேசன் நிமலரூபன் தொடர்பில் வெவ்வேறு நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.
நிமலரூபனின் சடலத்தை அவரது சொந்த ஊராகிய வவுனியா நெளுக்குளத்திற்குக் கொண்டு செல்வதற்கான உத்தரவைக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ௭திர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, நிமலரூபனின் மரணம் தொடர்பாக ராகம நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணை 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, சமூகமளித்து சாட்சியமளிக்க வேண்டும் ௭ன்று நிமலரூபனின் தாய், தந்தையரை நீர்கொழும்பு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
நிமலரூபனின் சடலத்தை வவுனியா பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, மஹர - கடவத்தை நீதிமன்ற நியாயாதிக்கப் பகுதிக்குள்ளேயே அடக்கம் செய்ய வேண்டும் ௭ன்று இம் மாதம் 23 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கியுள்ள மஹர - கடவத்தை நீதிமன்றத்தில் 23 ஆம் திகதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது ௭ன்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா சிறைச்சாலை சம்பவத்தையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 38 பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மனித உரிமை அமைப்புகளும் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருப்பது தெரிந்ததே.

15 ஜூலை 2012

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஹசன் அலி மறுப்பு.

newsகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்படி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை கட்சியின் செயலாளர் ஹசன் அலி நேற்று மாலை உறுதியாக நிராகரித்து விட்டார் என நம்பகரமாகத் தெரியவருகிறது.
அரசுக்கும் மு.காவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது என்றும் முதலாம் பிரிவு ஆசனப் பங்கீடுகள் குறித்தும் இரண்டாவது பிரிவு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி இருந்தது என்றும்
இருப்பினும் முதலாவது பிரிவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே அரசு உடனடியாக கையெழுத்து இட முன்வந்தது என்றும் இரண்டாவது பிரிவில் கையெழுத்து இடுவதற்கு அரசு தயக்கம் காட்டியது என்றும்
இதன் காரணமாகவே மு.கா. சார்பில் கையெழுத்து இடுவதற்கு ஹசன் அலி மறுத்தார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டாவது பிரிவில் அரசு கையெழுத்து இடாதவரை எந்தவொரு புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் அரசுடன் தான் கையெழுத்திடப்போவதில்லை என ஹசன் அலி ஹக்கீமிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த கருத்துப்பிளவுகள் மேலும் அதிகரித்துள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

14 ஜூலை 2012

நாயை உசுப்பேத்தினால் என்ன செய்யும்?

கோத்தபாய ராஜபக்ஸ யார்? விக்கிரமபாகு கருணாரத்ன பதில்கோத்தபாய ராஜபக்ஸ ஒழுக்கமான முறையில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எமக்குத் தெரியும். நாய் ஒன்றை உசுப்பேத்தினால் ஊ.. பௌ.. என்று கத்தும் அதனைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.
தவளையை அடித்தால் ஊ பக.. பக.. என்று சத்தமிடுவதை தவிர வேறு ஒன்றும் அதற்குத் தெரியாது.
ஒழுக்கமான முறை என்று இவரை நினைத்தால் நாம் குற்றவாளிகள்..
அவர் இருக்கும் நிலையில் பதிலளித்துள்ளார். அதுதான் உண்மையான கதை.
அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸை தொலைபேசி ஊடாக மிரட்டிய சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவே இவ்வாறு தெரிவித்தார்.
ஜயவர்த்தனபுர கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடக அடக்கு முறைக்கு எதிரான மாநாட்டில் உரையாற்றிய அவர், ராஜபக்ஸ அரசின் மனநிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றினால் வடக்கு கிழக்கு இணைப்புக்கு வாய்ப்பு.

இரண்டு மாகாணங்களினதும் ஆட்சியைக் கூட்டமைப்பு கைப்பற்றும் பட்சத்தில் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பில் இரண்டு மாகாண அரசுகளும் பேசி சில முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே இந்தத் தேர்தலில் நாங்கள் முழு மூச்சாகப் பங்குபற்றி ஆட்சியைக் கைப்பற்றுவதே நோக்கமாகும் என வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு பயணம் செய்த அவர் மட்டக்களப்பு ரெலோ அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்தமுறை நாங்கள் போட்டியிடவில்லை. இம்முறை நாங்கள் போட்டியிடுவதன் நோக்கத்தை நாங்கள் ஏற்கனவே சொல்லியுள்ளோம். இந்தத் தேர்தலானது வரலாற்று முக்கியத்துவமிக்க தேர்தலாகும்.
காரணமென்னவென்றால் உலக நாடுகளுக்குத் தமிழ் மக்களின் உரிமை மற்றும் இன்று என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை வெளிக்காட்டவேண்டிய ஒரு தேர்தலாகவே நாங்கள் நோக்குகின்றோம்.
இதில் அரசு கூடுதலான ஆசனங்களைப் பெறும் பட்சத்தில் கிழக்கு மாகாண மக்கள் தங்களை ஆதரிக்கின்றனர், கிழக்கு மாகாணத்தில் எதுவித பிரச்சினையும் இல்லை. அதேபோன்று வடக்கு மக்களையும் நாங்கள் சரியான முறையில் வழிநடத்திச் செல்லும்வாய்ப்பு இருக்கின்றது என்று நியாயப்படுத்தி ஐ.நா அழுத்தங்களைக் குறைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.
கிழக்கு மாகாண மக்கள் கடந்த தேர்தல்களிலும் சரி உரிமை பிரச்சினைகளிலும் சரி உணர்வோடு, தேசியத்தோடுதான் இவ்வளவு காலமும் வாழ்ந்துவருகின்றனர். இன்றும் அதற்கான உதாரணங்கள் பலவற்றைக் கூறலாம்.கடந்த தேர்தல்களில் பல அழுத்தங்கள் இருந்தும் கூட மிரட்டல்கள் இருந்தும் கூட தங்களது வாக்குகளைத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்திருந்தனர்.
இன்று அரசோடு இருக்கின்ற பிள்ளையான் போன்றவர்களுக்கும் முரளிதரன் போன்றவர்களுக்கும் இங்கு மக்கள் ஆணை வழங்கவில்லை.குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகளுடன் இருந்த தமிழர்கள் வெல்லப்படவில்லை.
அவர்களை வெல்ல வைக்க கிழக்கு மக்கள் விரும்பவில்லை. இதிலிருந்து கிழக்கு மாகாண மக்களின் உணர்வுதெட்டத்தெளிவாக தெரிகின்றது. இதில் மிக முக்கியமாக அனைவரும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் நிச்சயமாக ஆட்சியை கைப்பற்றலாம்.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்வேண்டும் என்ற சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி இந்த மக்கள் அதனை உருவாக்கியுள்ளனர்.
என்றைக்கும் இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம்தான் மக்கள் இருக்கின்றார்கள் என்று இந்த இலங்கை அரசும் உலக நாடுகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்றார்.

13 ஜூலை 2012

மன்மோகன் சொன்ன நன்றியால் நெகிழ்ந்துபோனதாம் சிறுத்தை.


திண்டிவனம் பகுதியில் கட்சி கொடியேற்றுதல், திருமண விழாக்கள், படத்திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனையை கேட்கக்கூடிய தேசிய அளவில் நாம் முக்கியத்துவம் பெற்றுள்ளோம்.
இதை பெருமைக்காக கூறவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பில் பேசியவர் இந்தியாவில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார். எனவே ஆச்சரியமாக, எதிர்பார்க்காததுமாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றேன். சில நொடிகளில் பிரதமரின் குரல் ஒலித்தது. குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வில் தங்கள் ஆலோசனை வேண்டும் என்றார். அதற்கு நான், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாங்கள், கூட்டணி சார்பில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் ஆதரிப்போம் என்றேன். அதற்கு பிரதமர் நன்றி என்று 3 முறை கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார்.
நாளை (14-ந் தேதி) டெல்லியில் இதுதொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். உங்களின் சார்பாக நான் கலந்து கொள்ள இருக்கிறேன். இதற்கெல்லலாம் காரணம் என் உயிரினும் மேலான 45 லட்சம் தொண்டர்களின் அன்பும், பாசத்தாலும் தான் முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

படைகள் வெளியேறவேண்டும் என சுரேஸ் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாம்.

வடபகுதியில் உள்ள இராணுவப்படையணிகள் 1983 ஆம் ஆண்டில் நிலைக்கொண்டிருந்த இடங்களில் மாத்திரமே வரையறுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கை கூட்டமைப்பின் உள்நோக்கத்தை வெளிகாட்டியுள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக திவயின தெரிவித்துள்ளது.
1983 ஆம் ஆண்டு வவுனியா, பலாலி இராணுவ முகாம்களை தவிர ஏனைய முகாம்கள் அகற்றப்பட்டதால், விடுதலைப்புலிகள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 29 வருடங்களுக்கு பின்னர், இராணுவத்தினரை, அவர்கள் நிலைக்கொண்டுள்ள இடங்களில் இருந்து வெளியேறுமாறு பிரேமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கையானது மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்த வழிவகுப்பதாகும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்ததாக திவயின கூறியுள்ளது. 

முள்ளிவாய்க்கால் புதைகுழிகளை வெளிப்படுத்திய அமெரிக்க செய்மதிப் படங்களை நிராகரிக்கிறார் கோத்தாபய!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் பற்றிய, அமெரிக்க செய்மதியினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை அமெரிக்க செய்மதி ஒன்று படம்பிடித்திருந்தது.
இந்தப் படங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதைக்கப்பட்ட தற்கு ஆதாரமாக, மூன்று புதைகுழிப் பிரதேசங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர்.
இவற்றில் ஒன்றில் 1436 புதைகுழிகளும், மற்றொரு இடத்தில் 960 புதைகுழிகளும் புதிதாக தோன்றியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் அந்தப் புதைகுழிகள் காணப்படவில்லை.
இதனால், இவை போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் புதைகுழிகள் என்று அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, இவை பொதுமக்களின் புதைகுழிகளே அல்ல என்றும் விடுதலைப் புலிகளின் புதைகுழிகள் என்றும் கூறியுள்ளார்.
“மனிதாபிமான நடவடிக்கையின் போது முல்லைத்தீவில், விரிவாக்கப்பட்ட இந்த மூன்று புதைகுழிப் பகுதிகளில் ஒன்றில் அதிகபட்சமாக 1346 புதைகுழிகள் காணப்படுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான இடுகாடு என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு இடத்தில் 960 புதைகுழிகள் காணப்படுகின்றன.
இவற்றையும் இணைத்து இறுதிக்கட்டப் போரில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கற்பனையில் செய்யப்பட்டு, மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன“ என்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
தியத்தலாவவில் கடந்தவாரம் சிறிலங்கா இராஜதந்திரிகள் மத்தியில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

12 ஜூலை 2012

தமிழினத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரே வழி நாடு கடந்த தமிழீழ அரசுதான்.

இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உள்ளான நமது இலங்கைத் தமிழினம், தன்னை தொடர்ந்து பாதுகாக்கக் கூடிய ஒரே வழி நாடு கடந்த தமிழீழ அரசுதான் என்று நிச்சயமாக நம்பியபடியால் நாம் அந்த அரசை நிறுவியுள்ளோம் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.கடந்த 7ம் திகதி சனிக்கிழமை அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாணத்தில் உள்ள பல்டிமோர் நகரில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிபோது தெரிவித்தார்.
மேற்படி கருத்தரங்கில் கனடாவிலும் அமெரிக்காவிலும் இருந்து சென்றவர்கள் பங்கு கொண்டார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் கனடாவிற்கான அங்கத்தவர் நிமால் விநாயகமூர்த்தி மேற்படி கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாடு கடந்த அரசின் உண்மையான நோக்கங்களை நமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக தமிழ் மக்கள் தற்காலத்து அரசியல் விஞ்ஞானத்திற்கு அளித்த மரியாதை என்றுதான் நான் நாடு கடந்த அரசாங்கத்தை கூறுவேன்.
தமிழ் மக்கள் தாங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு கொடுத்த மரியாதையும் இதுதான். நாடு கடந்த அரசாங்கம் தாயகத்தில் வாழும் தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழர்களும் இணைந்துள்ளனர். அத்துடன் தமிழீழம் என்ற கோட்பாட்டை மிகுந்த உயிர்த்துடிப்புடன் பேணிவருவதும் நமது நாடு கடந்த தமிழீழ அரசு.
உதாரணமாக நமது தாயகத்தில் நமது மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணமடைந்த நமது போராளிகள் மற்றும் போராளித் தலைவர்களின் நினைவாக நாம் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யக்கூட இலங்கை அரசு தடை விதிக்கின்றது.
ஆனால் இலங்கையில் ஆயுதப் புரட்சி செய்து மரணித்த மக்கள் விடுதலை முன்னணியின் கொல்லப்பட்ட போராளிகளின் நினைவாக இலங்கையில் அரச அனுமதி கிடைக்கின்றது. எனவே இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தி மறைந்த போராளிகளுக்கு மரியாதை செய்யவும் அதற்கான நிகழ்வுகளை நடத்தவும் நமது நாடுகடந்த அரசாங்கம் முயன்று வருகின்றது.
மேலும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு உலகில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவோ அன்றி அங்கீகாரமோ இல்லை. இவ்வாறு நமக்கு அங்கீகாரம் இல்லை என்பதை அறிந்து கொண்டு நாம் இயங்காமல் இருந்து விட முடியாது.
அந்தந்த நாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு நாம் ஆளாகி விட முடியாது. அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நாம் போராடாமல் இருக்க முடியாது.
பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால முயற்சியாகவும் தமிழீழத்தை நோக்கிய போராட்டத்திற்கு ஒரு உந்து சக்தியாகவும் நாம் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளோம் என்பதையும் நான் எமது தமிழ் மக்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
முள்ளிவாய்க்காலில் நமது மக்களுக்கு எதிராகவும் நமது போராளிகளுக்கு எதிராகவும் 2009 ம் ஆண்டு கொடிய யுத்தம் நடைபெற்றபோது, முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல உலகம் முழுவதுமே போராட்டக் களங்களாக மாறியிருந்தன.
தமிழகத்தில் கூட பல போராட்டங்களை நமது உறவுகளுக்காக அங்குள்ள தலைவர்களும் தமிழ் நாட்டு மக்களும் நடத்தினார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.
மேலும் தாயகத்தில் தற்போது அரசாங்கத்தின் நில அபகரிப்புக்கு எத்pராக நடைபெறும் பல போராட்டங்களுக்கு உலகெங்கிலம் பல ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன. இலங்கையில் பல சமயங்களைச் சேர்ந்த மக்களும் நமது போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவைத் தருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
எனவே நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்த்திற்கு புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் பேராதரவைத் தரவேண்டும். ஒரு பலமுள்ள அமைப்பாக நமது அரசு உலகின் கண்களுக்கு தெரியும் ஒரு நாளுக்காக நாம் மேலும் உறுதியுடன் போராட வேண்டும் என தெரிவித்தார்.

11 ஜூலை 2012

இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்தவர் மீது கொலை வெறி தாக்குதல்!

மலேசிய லிட்டில் இந்தியா பிரதேசத்தில் மக்கள் நீதி கட்சியின் உறுப்பினர் மீது தாக்குதல்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள தமிழர்கள் செறிந்து வாழும் லிட்டில் இந்தியா (பிரிக்பீல்ட்ஸ்) பிரதேசத்தில் இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்த மக்கள் நீதி கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மக்கள் நீதி கட்சியின் செய்தி பிரிவு தலைவரான எம்.எஸ். அர்ஜூன், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரில் ஒருவர், தனது முகத்தில் பல தடவைகள் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறியுள்ளார்.
பங்ஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ஜூனனுக்கு முகத்தில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளதாக அவரது மகன் கலைமுகிலம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மலேசிய அரச காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு முண்டுகொடுத்து அரசியல் தீர்விற்கான வாய்ப்பை சிதறவிடக்கூடாது!


தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக்கூடிய நியாயமான அரசியல் தீர்வு ஒன்று காணப்படுவதை சர்வதேச சமூகம் பொறுப்பேற்றுள்ள இந்த தருணத்தில் அந்த வாய்ப்பை சிதறடிப்பதற்கு அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தான் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு உதவக்கூடாது என்றும் வலியுறுத்தியதாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை குறிப்பிட்டார்.
எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபையின் தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் பதவி வகிக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"கிழக்கு மாகாண சபை தேர்தல் தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சனை சர்வதேச மயமாக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் சந்திக்க போகும் முதலாவது ஜனநாயக சோதனையாகும்.
இச்சோதனையில் தமிழ் பேசும் மக்கள் வெற்றியிட்ட வேண்டும். அவ்வெற்றி தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியில் இடம்பெறும் ஒரு தமி;ழ் வேட்பாளர் கூட வெற்றி பெற முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
வெற்றி பெறும் தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ் மக்கள் இதனை தனது தலையாய கடமையாக எடுத்துக்கொண்டு செயற்பட வேண்டும்" என்றார்.

தமிழ்க்கைதிகளின் உறவுகள் ஐ.நாவுக்கு கடிதம்.

சிறைச்சாலைகளுக்குள் தங்களின் உறவுகள் எதிர் நோக்கும் அவலங்கள் குறித்து விளக்கியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சபைக்கு விரைவில் கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் சிபார்சு செய்துள்ள போதிலும், இந்த விடயம் குறித்து அரசு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன் னெடுக்கவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்படவுள்ளது.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள் அண்மைக் காலமாக தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்களை இந்தக் கடிதத்துடன் இணைக்கவுள்ள கைதிகளின் உறவுகள், தங்களின் உறவுகளின் விடுதலை விடயத்தில் சர்வதேசத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும்
தலையீடு இன்றியமையாத தேவை எனவும் கடிதத்தினூடாக வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மூவரைத் தமிழ்க் கைதிகள் சிறைப்பிடித்ததையடுத்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கி அவர்களின் கை, கால்களை முறித்துள்ளனர். இதனால் கைதிகளின்
நிலைமை கவலைக்கிடமானது.
ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சத்திரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.
நிமலரூபனுக்கு நேர்ந்த கதி தங்களது உறவுகளுக்கும் நேர்ந்துவிடுமோ என்ற அச்ச நிலைமை உருவாகியுள்ளதையடுத்தே தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும், விடுதலையை வலியுறுத்துமாறு குறிப்பிட்டும் தமிழ்க் கைதிகளின் உறவுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மனித உரிமைகள் சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

10 ஜூலை 2012

ஒரு சில படையினர் குற்றம் புரிந்திருக்கக்கூடும் என்கிறார் கோத்தபாய!

குற்றச் செயல்களில் ஈடுபடும் படையினர் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என கோதபாய தெரிவித்துள்ளார்.
படைவீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவ சட்டங்களுக்கு அமைய கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும், கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் படைவீரர்களுக்கு தப்பிக்க வாய்ப்பில்லை.
குற்றச் செயல்களில் ஈடுபடும் படைவீரர்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசேட பொறிமுறைமையொன்று காணப்படுவதாகவும், அந்தப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கை வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது பற்றி விசாரணை செய்ய இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்
தனிப்பட்ட நபர்கள் அல்லது குழு தொடர்பில் உரிய ஆதாரங்கள் இருந்தால் அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கோதபாய
இராணுவமும் அரசாங்கமும் பொதுமக்களை பாதுகாப்பத்தில் கூடுதல் சிரத்தை காட்டிய போதிலும், யுத்தத்தின் போது ஓரளவு பொதுக்கள் இழப்புக்களை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமான முறையில் படையினரை இணைத்துக் கொண்டதுடன், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டதாக கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பசுபிக் நாடுகளில் 3இலட்சம் பேரின் இணைய இணைப்பு பாதிப்பு!

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பசுபிக் நாடுகளில் 3இலட்சம் பேரின் இணைய இணைப்பு பாதிப்புஅமெரிக்கா , பிரித்தானியா உட்பட ஐரோப்பிய , ஆசிய பசுபிக் நாடுகளில் உள்ள சுமார் 3இலட்சம் இணையப்பாவனையாளர்கள் டி.என்.எஸ். வைரஸ் தாக்கத்தால் இணைய இணைப்பை இழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்ததாக இத்தாலி, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், சீனா, ஸ்பெயின், கனடா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த இணையப்பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் டி.என்.எஸ். வைரஸ் தாக்கம் தொடர்பாக இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை எனவும் ஆனால், இணையத்தளங்களை பயன்படுத்தும் எந்த கணினியும் இதனால் பாதிக்கப்படலாம் எனவும் இலங்கை கணினி அவசரகால தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் திங்கட்கிழமை செயற்படத் தொடங்கும் எனவே அதன் தாக்கம் இருந்தால் இன்று கண்டறியமுடியும் என இந்த அணியின் முதன்மை தகவல் பொறியியலாளர் ரொஷான் பள்ளியகுரு கூறினார்.
இந்த வைரஸினால் தாக்கப்படும் கணினிகளில் இணையத்தை பயன்படுத்த முடியாதிருப்பதை உறுதிப்படுத்தும் சாத்தியத்தை இந்த வைரஸ் கொண்டுள்ளது என பள்ளிய குரு கூறினார்.
Top 10 DNS Changer infections
US – 69,517
Italy – 26,494
India – 21,302
UK – 19,589
Germany – 18,427
France, 10,454
China – 10,304
Spain – 10,213
Canada – 8,924
Australia – 8,518
that let people check if they are infected.
http://www.bbc.com/news/technology-18735228

கோமா நிலையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மகன்! காப்பாற்ற தாய் கோரிக்கை!!

வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்டு மகர சிறைக்கு  கொண்டு செல்லப்பட்டு தற்போது ராகம வைத்தியசாலையில் இரண்டு கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கோமா நிலையிலுள்ள தமது மகனான முத்துராஜா டில்ரூக்‌ஷனைக் காப்பாற்றுமாறு அவரது தாயார் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். தமது மகன் நான்கு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவர் எனவும் மன்னார் இலுப்பைக்கடவையைச் சேர்ந்த இந்தப் பெண் தெரிவித்தார்.
இவர் தன்னுடைய கணவர் அந்தோனி முத்துராசா மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் சகிதம் நேற்று மன்னார் நகருக்கு வருகை தந்து மன்னார் மாவட்ட ஆயர் வண இராயப்பு ஜோசப், மன்னார் மாவட்ட எம்.பி. நிநோதாரலிங்கம் ஆகியோரைச் சந்தித்து தமது மகனைப் பாதுகாப்பதற்கு உதவமாறு உருக்கமாகக் கோரியுள்ளார்.
முத்துராஜா டில்ரூக்‌ஷன் 2006 ஆம் ஆண்டு தொழல்வாய்ப்பப் பெற்று கட்டார் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் தமது குடும்பத்துடன் அடிக்கடி தொடர்புகொண்டுள்ளார். பின்னர் 2007 ஆம் ஆண்டு நவம்பரில் நாடு திரும்பிய இவர் மன்னார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது குடும்பத்தினருடன் தொடர்புகொண்ட அவர், மன்னார் பகுதியில் போர் இடம்பெற்று குடும்பத்தினர் இடம்பெயர்ந்த பின்னர் தொடர்பற்றிருந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்தவாரம் இவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் அங்கு சென்று அவரைப் பார்த்துள்ளனர். தமது மகன் இரு கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் கோமா நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த தாயார், தமது மகனைக் காப்பாற்ற உதவமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

09 ஜூலை 2012

இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை!

“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.
இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் கடந்த 07.07.2012 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் இரண்டாம் மாடியில் நடைபெற்றது.
தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமை யேற்றார். த.க.இ.பே. செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர், திரு இராமச்சந்திரன்(அனு ஃபைன் ஆர்ட்ஸ்), ஆகியோர் நூற்படி பெற்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அப்போது, தனது தலைமையுரையில் தோழர் நா.வைகறை பேசியதாவது:
"முள்ளிவாய்க்கால் சோகம் தமிழினத்தின் தீராத காயம். தமிழீழ மக்களை அழித்தொழிக்க உதவிய இந்திய அரசு நம் இனத்தின் பகை அரசு. எனவே, இந்தியத்தை நாம் புரிந்து கொள்ளாத வரை தமிழீழ விடுதலையைப் பெற முடியாது. இத்தனை நடந்த பின்னரும் இந்தியாவை நாம் ஏன் நம்பவேண்டும்? இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை.தமிழீழ விடுதலைக்கு முன்பே, தமிழ்நாட்டு விடுதலையை நாம் அடைந்து விடுவோம் என்று எண்ணுகிற அளவிற்கு இந்திய அரசு தன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி என தொடர்ந்து தமிழகத்திற்கு ஆற்று நீர் உரிமை மறுக்கப்படுவது, நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்காமை என தொடர்ந்து இந்திய அரசின் கோர முகம் தமிழகத்தில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, உலகத் தமிழர்கள் தமிழர்களுக்கு ஒரு நாடு என்றல்ல, தமிழீழம் - தனித்தமிழ்நாடு ஆகிய இரண்டு நாடுகளும் வேண்டும் என அணிதிரள வேண்டும்" என்று தோழர் நா.வைகறை பேசினார்.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பேசிய போது, இந்திய அரசு தமிழீழத்தை அழிக்க என்னென்ன வகையில் உதவியிருக்கிறது என்பதை பட்டியலிடும் இந்நூலின் பக்கங்களைச் சுட்டிக் காட்டினார். இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் நூலின் சிறப்புகளை விளக்கிப் பேசினர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்நூல் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் படைக்கருவியாக விளங்குவதாகவும், நூலாசிரியர் பேரா. த.செயராமன் இது போன்ற பல படைக்கருவிகளை தமிழீழ விடுதலைக்கு உருவாக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நூலாசிரியர் முனைவர் த.செயராமன் ஏற்புரை வழங்ய போது, “இந்தியாவை காங்கிரசு ஆண்டாலும், பா.ஜ.க. ஆண்டாலும், சி.பி.எம். கட்சி ஆண்டாலும், இக்கட்சிகள் இந்தியம் என்ற கருத்தியல் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எனவே, இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு ஆதரவாக வர மாட்டார்கள். எனவே, இந்தியம் நம்மை இந்தியராக ஏற்காத போது, நாம் ஏன் “இந்தியன்” என்று இந்தியத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்? நாம் ஏன் இந்தியத்தை ஏற்க வேண்டும்? நாம் இந்தியத்தை ஏற்க வேண்டியதில்லை” என பேசினார். கவிஞர் முழுநிலவன நன்றி நவின்றார். இக்கூட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டு இந்நூலை வாங்கிச் சென்றனர்.

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசு கைதிகளையும் சாகடிக்கிறது!

newsஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்ற அரசு இன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அடித்து முறித்துப்படு கொலை செய்கிறது என்று பொது எதிரணிக்கட்சிகளின் சார்பில் விக்கிரமபாகு கருணாரட்ண குமுறியுள்ளார்.
வடக்கில் தேர்தல் நடத்தினால் நூற்றுக்கு ஐந்து சத வீதமான வாக்குகள் கூட அரசுக்குக் கிடைக்கா. இருப்பினும், அது நூற்றுக்கு இருபத்தைந்து சதவீத வாக்குகளைப் பெற்று வரும் எனத் தெரிவித்த பொது எதிரணிக்கட்சிகள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில்கள்ள வாக்குப் போடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனத் தேர்தல் ஆணையாளர் கூறியது அரசுக்குப் பொருந்தும் எனவும் தெரிவித்தன.
தமிழ் பேசும் மக்கள் இந்த அரசை ஏற்கவில்லை யென்பதை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டும் எனவும் அவை மேலும் தெரிவித்தன.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவை மேற்கண்டவாறு தெரிவித்தன.
இதன் போது, கருத்துத் தெரிவித்த நவ சமசமாஜச் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தன கூறியவை வருமாறு:
அரசியல் கைதிகளை அரசு கடுமையாகத் தாக்கி கொலை செய்கின்றது. இந்தச் சம்பவத்தை நாம் கடுமையாக எதிர்ப்பதோடு, இதற்கு எதிராக நாடு முழுவதும் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்க உள்ளோம்.
இதனடிப்படையில் ஒரு மாதத்திற்கு நான்கு அரச எதிர்ப்பு ஆர்பாட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம். இந்தப் போராட்டங்கள் சாதாரண போராட்டங்கள் அல்ல. தற்போது ஆட்சியிலுள்ள அரசைக் கவிழ்த்து, விரட்டியடிப்பதற்கான போராட்டங்களேயாகும். அதற்காக நாடு முழுவதிலுமுள்ள மக்களை ஒன்றுதிரட்டி செயற்படுவோம்.
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்ற அரசு இது. அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் பள்ளிவாசலை உடைத்த அரசுதான் இது. இந்த அரசை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். அதற்காக மிகவும் சிறப்பான முறையில் செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அரசின் அராஜக செயல்களுக்கு எதிராக நாம் குரல்கொடுக்கும்போது, எம்மீது சேறுபூசும் வகையில் அது கருத்து வெளியிடுகிறது. அரச அடக்குமுறையின் உச்சக்கட்டமாக நாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கான சம்பளம் வெட்டப்படுவதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, சுகாதார சேவைகள் ஆகியனவும் தடைசெய்யப்படுகின்றன. அரசின் இந்தச் செயல்களுக்குப் பொது எதிரணியினர் என்றவகையில் நாம் எமது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம் என்றார்.

08 ஜூலை 2012

தமிழர்களை கொன்றொழித்த நன்றிக்கடனுக்கே பிரணாப்பை கருணாநிதி ஆதரிக்கிறார்.

nangsil-sampath-mathimuka-01-08-11குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதன் மூலம் தமிழர்களுக்கு கருணாநிதி மீண்டும் துரோகம் செய்துவிட்டதாக மதிமுக கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
மதிமுக பொதுக் கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது,
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு உதவி செய்தது. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் தமிழர்களை கொலை செய்ய உதவி செய்ததற்கு நன்றிக் கடனாக குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை கருணாநிதி ஆதரிக்கின்றார். இதன் மூலம் தமிழர்களுக்கு கருணாநிதி மீண்டும் துரோகம் செய்துவிட்டார். ஈழம் மலர வேண்டும் என்று டெசோ மாநாடு கூட்டி நாடகம் போடுகிறார். ஆனால் இந்த நாடகத்தை தமிழர்கள் உள்பட யாரும் நம்பத் தயாராக இல்லை.
மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் வைகோ. ஆனால் தான்தான் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததாக கருணாநிதி விளம்பரம் தேடிக் கொண்டார். தமிழக மக்கள் கருணாநிதியை ஆட்சியை விட்டு தூக்கி எறிந்துவிட்டனர். அதே போல அரசியலில் இருந்தும் அவரைத் தூக்கி எறியும் காலம் விரைவில் வரும் என்றார்.

கைதிகளை தாக்க கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட 25காடையர்கள்!

வவனியா சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது தாக்குதலை நடத்துவதற்காக 3 அதிகாரிகள் உட்பட 25 சிறைக் காவலர்கள் கொழும்பிலிருந்து விஷேடமாக வவுனியாவுக்கு அவசரமாக அனுப்பப்பட்டார்கள் என்ற அதிச்சிச் செய்தி இப்போது வெளியாகியிருக்கின்றது. அதிரடிப்படையினரும், இராணுவமும் தமது தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு பணயமாக வைக்கப்பட்டிருந்த சிறை அதிகாரிகளை மீட்ட பின்னர் தமிழ்க் கைதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது.
கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில், மண்வெட்டிப் பிடிகளாலும், சைக்கிள் செயின்களாலும் இவர்கள் தாக்கப்பட்டனர். இதற்காக வவுனியா சிறைச்சாலைக்கு அருகேயிருக்கும் கடைகளிலிருந்து 50 க்கும் அதிகமான மண்வெட்டிப்பிடிகள் அவசரமாக வாங்கப்பட்டன. இதன்மூலம் வவுனியா சிறையிலும், பின்னர் அநுராதபுரம் சிறையிலும் இரத்தக்களரி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் கைதிகளில் ஒருவர் கொல்லப்பட, இருவர் கோமா நிலையில் உள்ளனர். சுமார் இருபது இளைஞர்களின் கால்கள் கைகள் உடைக்கப்பட்டுள்ளன.
வவுனியா சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தையடுத்து விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பான விவகாரம் மீண்டும் அனைவருடைய கவனத்தையும் பெற்றிருக்கின்றது. இவ்வளவும் நடந்திருக்கும் நிலையில் தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படுமா என்ற கேள்விதான் அரசியலில் பலமாக எழுப்பப்படுகின்றது. கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த மூன்று விஷேட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்பதைத்தான் இப்போதும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றதே தவிர அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சிறைச்சாலைகள்தான் இன்று பாதுகாப்பற்ற இடங்களாகியுள்ளன. சரியாக 29 வருடங்களுக்கு முன்னர் 1983 ஜூலையில் அதிக பாதுகாப்படன் கூடிய கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் மறந்துவிடக்கூடியவையல்ல. 53 தமிழ்க் கைதிகள் அப்போது அங்கு வைத்துக் கொல்லப்பட்டார்கள். இதுபோல பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம படுகொலைகள் போன்ற சம்பவங்கள் சிறைச்சாலைகளில் கூட தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வகையில் இப்போது மற்றொரு ஜூலையில் நிமலரூபன் கொல்லப்பட்டிருக்கின்றார். பலர் முடமாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் அரச தரப்பிலிருந்து இதற்கு சரியான பதில் சொல்லப்படவில்லை. பிரச்சினை இப்போது சர்வதேசத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.
போர் முடிவுக்கு வந்து மூன்றுவருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ்க் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் முன்வைக்கவில்லை. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் வெறுமனே சந்தேகத்தின்பேரில் கைதானவர்கள்தான். வேறு சிலர் சிறிய அளவிலான உதவிகளை விடுதலைப் புலிகளுக்குச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்கள். இவர்களில் அனேகமானவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களே இல்லை. வழக்குத் தாக்கல் செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லாமையால் பலர் தடுப்பு முகாம்களில் சும்மா வைக்கப்பட்டுள்ளார்கள்.
இருந்த போதிலும், இவர்களை விடுதலை செய்வதற்கு எந்தவிதமான செயன்முறையையும் அரசு கொண்டிருக்கவில்லை. கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் அதனை நிறுத்துவதற்காக ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுப்பது என்பதற்கு அப்பால் அரசாங்கம் எந்த ஒரு நகர்வையும் முன்னெடுக்கவில்லை. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு தன்னுடைய பரிந்துரைகளில் கூட இந்த தமிழ்க் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றது.
மே மாதம் தமது விடுதலையை வலியுறுத்தி கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தீவிர நிலையை அடைந்திருந்த கட்டத்தில் மீண்டும் ஒரு வாக்குறுதியை அரசாங்கம் வழங்கியது. அரசாங்கத்தின் வாக்குறுதியைக் காவிக்கொண்டு மகசின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வவுனியா சிறைச்சாலைச் சம்பவம் இடம்பெற்ற போது காணாமல் போய்விட்டார். ஒரு மாத காலத்தில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுதந்திரன் தெரிவித்த நிலையிலேயே கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள்.
ஆனால், ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் கைதிகளின் விடுதலைக்காக எவ்வாறான நடவடிக்கைகளை சுமந்திரன் முன்னெடுத்தார் என்பது தெரியவில்லை. இருந்தபோதிலும், ஒரு மாத காலக்கெடு முடிவடைந்த நிலையில் வவுனியாவிலுள்ள சிறைக் கைதிகளை அநுராதபுரத்துக்கும் பூசாவுக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில்தான் வவுனியா சிறைச்சாலைச் சம்பவம் இடம்பெற்றது.
தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்கள். அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களை வவுனியாவுக்கு மீண்டும் கொண்டு வாருங்கள் என்பதுதான் அவர்களுடைய பிரதான கோரிக்கையாக இருந்தது. உண்ணாவரதத்தைக் கைவிடச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக பலாத்காரமாக அதனைச் செய்வதற்கு சிறை அதிகாரிகள் முற்பட்டபோதே மூன்று சிறை அதிகாரிகளை கைதிகள் சிறைப்பிடித்ததாகக் கூறப்படுகின்றது.
கைதிகளின் இந்த வன்முறை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என்பது உண்மைதான். இருந்த போதிலும் இந்தப் பிரச்சியையை ப+தாகரமாகக் காட்டிய அரசாங்கம் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்பாக படைகளைக் குவித்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் பின்னர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட கைதிகள் தாக்கப்பட்டதாக கைதிகளை நேரில் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கூறுகின்றார்கள். இந்தத் தாக்குதாலின் காரணமாகவே நிமலரூபன் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் கோமா நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த அனர்த்தங்களின் பின்னராவது கைதிகளின் விடுதலையைத் தூரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பதுதான் இன்று எழுகின்ற கேள்வி. மே 24 ஆம் திகதி ஒரு மாத கால அவகாசம் கேட்ட அரசாங்கம் விஷேட நீதிமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் இன்று வரையில் முன்னெடுக்கவிலலை. பதிலாக கைதிகளை இடமாற்றம் செய்து தேவையற்ற குழப்ப நிலை ஒன்றையே அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.
கைதிகளின் பிரச்சினை இந்தளவுக்கு மோசமான நிலையையடைந்த பின்னர் கூட வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.கள் இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதிலும், கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியைத் தனிப்பெரும் கட்சியாக வளர்ப்பதிலும் காட்டும் அக்கறையை கைதிகள் விவகாரத்தில் தலைவர்கள் காட்டுவதாகத் தெரியவில்லை.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் ஏற்பாட்டில் மக்கள் நடவடிக்கைக் குழுவே இந்தப் பிரச்சினையைக் கைகளில் எடுத்துள்ளது. அவர்களுடைய ஏற்பாட்டிலேயே இந்தப் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.
கைதிகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைந்திருக்கவில்லை. பாராளுமன்றத்தில் அவர்கள் நிகழ்த்தும் வீராவேசப் பேச்சுக்கள் மட்டும் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கப்போவதில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் முன்னைய நிலையிலேயே அது இன்றும் உள்ளது. கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த 3 விஷேட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அரசாங்கம் மீண்டும் கூறியிருக்கின்றது. மே 24 ஆம் திகதி சொன்னதைத்தான் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர மீண்டும் கூறியிருக்கின்றார்.
3வருடங்களுக்கு முன்னர் நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடதான் இந்த யோசனையை முதலில் முன்வைத்தவர். இன்று முதல் இந்த யோசளை அவ்வப்போது முன்வைக்கப்படுகின்ற போதிலும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் எதுவம் அரசிடம் இல்லை.
இந்த நிலையில் வவுனியா சிறைச்சாலைச் சம்பவம் போல மேலும் பல சம்பவங்கள் இடம்பெறலாம்!!

தமிழர்களை அடக்கி ஆள ஒருபோதும் இடமளியோம்"செல்வம் அடைக்கலநாதன் சூழுரை.

எங்கள் இனத்தை அடிமை இனமாக அரசு பார்ப்பதால் தான், காணி அபகரிப்பு, மீனவர் மீதான பாஸ் கெடுபிடி, தமிழ் அரசியல் கைதிகள் மீதான கொலைக் கொடூரம் என்பவற்றைத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்தும் எங்கள் இனத்தை அடக்கி ஆள ஒரு போதும் இடமளியோம். எங்களது இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் இன்றுடன் முடிவடையப் போவதில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் எங்கள் இனத்தை மீட்டெடுப்போம்.
இவ்வாறு, மன்னாரில் நேற்று இடம்பெற்ற சத்தியாக்கிரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சூழுரைத்தார்.
அங்கு உரையாற்றிய அடைக்கலநாதன் மேலும் தெரிவித்ததாவது:
எமது தமிழ் இனம் தமது பூர்வீக நிலங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு திட்டமிட்ட முறையில் எமது காணிகளை ஆக்கிரமித்து வருகின்றது. இன்றைய காலகத்தில் வடக்கு கிழக்கில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாமல் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வசதிகள் எதுவுமற்ற நிலையில் தமிழ் மக்கள் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் இந்த அரசு எமது இனத்தை அடிமை இனமாகப் பார்ப்பதே காரணமாகும். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும்.
இன்று மன்னார் மாவட்டத்தின் சன்னார் கிராமத்தில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு உரிய வகையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த மக்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்ற நிலையில் அரச அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக இருக்கின்றனர்.
மன்னார் மறை மாவட்ட ஆயர், இந்தப் பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றார். மன்னார் மாவட்ட மக்களின் விடிவுக்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவறாக திரிபுபடுத்தி நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள். தற்போது இந்த விவகாரம் சர்வதேசம் வரை சென்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மீனவருக்கான பாஸ் நடைமுறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகின்ற போதிலும், எமது மன்னார் மாவட்ட மீனவர்கள் யுத்த காலம் போன்றே தற்போதும் பாஸ் பெற்றே கடற்தொழில் நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பாஸ் பெற்றுக் கொள்வதற்காகப் பத்திற்கு மேற்பட்ட அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அத்துடன் பாஸ் பெற்றுக் கொள்வதற்கு 500 ரூபா வரையில் பணம் செலுத்த வேண்டியிருக்கின்றது. ஆனால் மன்னார் மாவட்ட மீனவர்களால் நாளொன்றுக்கு 500 ரூபா ஈட்டுவது என்பது சவாலான விடயமாக இருக்கின்றது.
இந்த விடயங்களுக்கு மேலதிகமாக, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையும் உருவாகியுள்ளது. அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை தோற்றுவிக்கபட்டிருக்கின்றது.
வவுனியா சிறைச்சாலையில் சிறைக் கைதிகளால், சிறைக்காவலர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானதுதான். ஆனாலும் கண்ணீர் புகைக் குண்டு வீசி கைதிகளை மயங்கச் செய்து விட்டு அவர்கள் மீது காட்டு மிராண்டித் தனமாகத் தாக்கியது ஏற்றுக் கொள்ள முடியாததொன்று. வவுனியா சிறையில் தாக்கி விட்டு பின்னர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கும் எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
அத்துடன் காயமடைந்த கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்காது மஹர சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். இது மனிதாபிமானமற்ற செயலாகும்.
இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனாலும் அவரது உடலை இதுவரையில் பெற்றோரிடம் வழங்கவில்லை. அந்தத் தாயாருக்கு ஆதராவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் குரல் கொடுக்கும்.
எனவே தமிழ் பேசும் மக்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அதன் மூலமே எமது இனத்தின் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும். நாங்கள் ஒரு போதும் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.

07 ஜூலை 2012

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு உத்தரவிட்டது ராஜபக்ஷாதான்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது என படை தளபதி ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின் போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் சிறீலங்கா அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் சிறீலங்காவின் குருநாகல் பகுதியில் நடந்த படை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு படைத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ராஜபக்ச சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை படை நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கடந்த 2009 ஆம் ஆண்டு சிறீலங்காவின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம்.
கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000 க்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர்.
அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.
இதையடுத்து ஜனாதிபதி ராஜபக்சவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.
அவர் கொடுத்த தைரியத்தில் தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார்.
அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிகட்டப்போரில் வென்றிருக்க முடியாது.
இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா.
ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் ராஜபக்ச சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கான வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

06 ஜூலை 2012

பிரித்தானியாவில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாலை 8.00 மணியளவில் வடகிழக்கு இலண்டனில், கரும்புலிகள் நாள் நிகழ்வு இடம்பெற்றது.தாயகத்தின் இருளகற்றி ஒளிகொடுக்கவும் தமிழீழம் சுதந்திரம் பெறவும் தரணி எங்கும் தமிழீழத் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவும் உடலில் வெடிசுமந்து தமது உடலையே வெடிக்கச் செய்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வீர வரலாற்றினைப் பதிவு செய்த உயிர்ப்பூக்கள் நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு கரும்புலி மாவீர்களுக்கு மலர் வணக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், சிறப்புரைகளோடு கரும்புலிகள் நிகழ்வு சுமந்த காணொளிக் காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.
இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு உணர்வு பூர்வமாக நிறைவு பெற்றது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நிமலரூபன் படுகொலை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கம்.

தமிழ் அரசியல் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் மோசமாகத் தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜ தந்திரிகளுக்கு கூட்டமைப்பு நேற்று விளக்கியுள்ளது. இலங்கையரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்து மாறும் கூட்டமைப்பு இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கையிலுள்ள தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:
மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ்க் கைதிகளின் மீதான சித்திரவதைகள், அடிப்படை மனித உரிமை மீறல்கள், அவர்களது விடுதலை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வது எனவும் இங்குள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு உண்மை நிலையைத் தெரியப்படுத்தி மனுக்களைச் சமர்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக நேற்று மாலை கொழும்பிலுள்ள தனியார் "ஹோட்டலில்" இடம்பெற்ற சந்திப்பிலேயே தமிழ்க் கைதிகளின் நிலை தொடர்பில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
பொலிஸாரும், சிறைக்காவலர்களும் மூரக்கத்தனமாக தாக்கியதிலேயே கைதி மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இவரது உடலை அவரது சொந்த ஊரில் தகனம் செய்வதற்கு பொலிஸார் நீதிமன்றின் ஊடாக தடையுத்தரவினைப் பெற்றுள்ளனர். இது ஒரு அடிப்படை உரிமை மீறல் என்பதை சர்வதேச பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறினோம்.
அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விரைவான விடுதலைக்கு உதவ வேண்டும் என்றும் அவர்களிடம் கோரிக்கை விடுத்தோம். இவ்வாறு தமிழ் கைதிகளின் மீதான சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படாது இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.
எங்களது கருத்துக்களை அவர்கள் செவிமடுத்தனர். அவர்கள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை பிரயோகித்து அதனூடாக நடவடிக்கையை விரைவில் எடுப்பார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.

05 ஜூலை 2012

அனுராதபுரம் SPயின் சப்பாத்தை நக்கி காலில் விழுந்து கும்பிடும்வரை அரசியல் கைதிகள் தாக்கப்பட்டார்கள்!

சிறீலங்காவின் கொடூர அரசு
வவுனியா சிறைக்குள் புகுந்த 15 முதல் 23 வரையிலான அரசாங்க பாதுகாப்புத் தரப்பின் குண்டர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளால் மயங்கிய நிலையில் இருந்த சிறைக் கiதிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து வாகனங்களில் தூக்கி போடப்பட்ட கைதிகள் பிற்பகல் 1 மணியளவில் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு இரவு 11 மணிவரை இடைவிடாது தாக்கப்பட்டனர்.
அங்கு குடிபோதையில் இருந்த சிறைக்காவலர்களும் காவற்துறையினரும் சிறைச்சாலை சுப்ரின்டனின் கால் சப்பாத்தை நக்குமாறு தொடர்ச்சியாக தாக்கியுள்ளனர். ஒவ்வொருவராக காலில் விழுந்து கும்பிட்டு சப்பாத்தை நக்கிய பின்னும் தாக்கப்பட்டுள்ளார்கள்.
இதன் தொடர்ச்சியாக கடுமையான கிரிமினல் குற்றவாளிகளை கொண்டு வந்து அரசியல் கைதிகளின் முகங்களில் காறித் துப்புமாறு பணிக்கப்பட்டு மாறி மாறி கிரிமினல் கைதிகள் தமிழ் கைதிகளின் முகங்களில் துப்பியதோடு களைக்கும் வரை அடிக்கும்படி பணிக்கப்பட்டு உள்ளார்கள்.
அனைத்து கைதிகளையும் காலை நீட்டச் சொல்லி முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடையில் கடுமையாக தாக்கியதில் முழங்காலுக்கு கீழ் அனைவருக்கும் கட்டு போடப்பட்டுள்ளது. அனைவருக்கும் உடலின் உட்காயங்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதி ஒருவரின் முதுகில் வட்டமாக பெரிய காயம் ஒன்று உள்ளது இதற்கு காரணம் பிஸ்ரலால் அவர் சுடப்பட்டதாக தெரியவருகிறது.
அனைத்து கைதிகளினதும் விலா எழும்பு முறிக்கப்பட்டுள்ளது. அனைவரதும் உடுப்புகள் அனுராதபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாற்று உடுப்புகள் இல்லை. ரத்தக்காயங்களுடன் 3 நாட்கள் மாற்றுடையின்றி விடப்பட்டனர்.
சந்தேகத்தின் பேரில் கைதான நிலையில் இப்போ அடித்துக் கொல்லப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த நிமல ரூபனின் கால்கள் நடுவால் கிளிக்கப்பட்டுள்ளது. இறப்பதற்கு முதல்நாள் இரவு உடலின் கண்டல் காயங்களில் இருந்து நீர் வழிந்தோடியிருக்கிறது. தான் இறக்கப் போவதாக இரவு முழுவதும் வேதனையால் துடித்துள்ளார். கால்களுக்கு இடையில் மரக் கட்டைகள் வைக்கப்பட்டு கால் கிளிக்கப்பட்டதால் இடுப்பு பகுதி பலமான சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் உள்ள மற்றும் ஒரு கைதியின் மண்டைப் பகுதி கடுமையாக தாக்கப்பட்டதனால் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இவரது உயிரை காப்பது மிகவும் கடினம் என அனுராதபுரத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
றாகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வரில் ஒருவர் கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் முன்னின்றவர்கள் என அரச பாதுகாப்பு குண்டர்களால் அடையாளம் காணப்பட்ட மூவரே போகம்பர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர்கள் மிகக் கொடூர சித்திரவதைகளை எதிர் கொள்வதாகவும் சிறைச்சாலை அதிகார மட்டத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதிகள் அனைவரது உடல்களிலும் செயின் மற்றும் சவுக்கு போன்ற பார்களால் அடிக்கப்பட்ட தழும்புகள் ரத்தக் காயங்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இனி தம்மை அனுராதபுரத்திற்கு மாற்ற வேண்டாம் என்றும் மகரவிலேயே தாம் செத்து விடுகிறோம் எனவும் கைதிகள் அலறுகின்றனர். வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு ஏற்றிய போது அனைவரையும் அடித்தே கொல்லப் போகிறோம் எனக் கூறி இலங்கை அரசாங்க பாதுகாப்பு தரப்பின் குண்டர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனால் தமது உயிர்களைக் காப்பாற்றுமாறும் அல்லது மகர சிறையிலேயே சமாதி ஆக்குமாறும் கைதிகள் கோரி உள்ளனர்.
கடுமையான உயிர் பிரியக் கூடிய ஆபத்தான காயங்களுடன் இருக்கும் அவர்களுக்கு உரிய உடன் வைத்திய சிகிச்சைகள் அளிக்காவிடின் ஏனையவர்களும் கொல்லப்படும் நிலை காணப்படுவதாக சிறைச்சாலைகளோடு தொடர்புடைய மனிதாபிமானம் மிக்க அதிகாரி ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். உடனடியாகவே மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சமூகம் தலையிட்டு இவர்களை உரிய சிகிச்சைக்கு வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பாதுகாப்பு செயலாளரும் இலங்கையின் நிஜ எஜமானுமான கோத்தாபய ராஜபக்ஸவுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி:குளோபல் தமிழ் செய்தி

அன்றே இவர்களை கொன்றிருக்க வேண்டும்"வவுனியா கைதிகள் தொடர்பில் கோத்தபாயவின் வெறிப்பேச்சு!

கோத்தபாய 
இராணுவத்திடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை அன்றே கொலை செய்திருந்தால் இன்று இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது என கோத்தபாய கடித்துக் கொண்டதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறைக்காவலர்களை பணயமாக கைதிகளினால் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோத்தபாய, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் கண்டித்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இச்செயற்பாடு புலம்பெயர் விடுதலைப் புலிகளின் பிரிவுக்கு, அந்த அமைப்பு இன்னும் செயற்பாட்டு நிலையில் உள்ளது என்ற உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா வன்னிப் போர் நடவடிக்கையின் போது 55 மற்றும் 59 ஆவது டிவிசன்களுக்குத் தலைமை தாங்கியவர்.
இந்த இரு படைப்பிரிவுகளும் வெற்றிலைக்கேணியில் இருந்தும், முல்லைத்தீவில் இருந்தும் நகர்வுகளை மேற்கொண்டிருந்தன. 59 ஆவது டிவிசனால் கைது செய்யப்பட்ட கடற்புலித் தலைவரான சசிக்குமார் என்பவரே, கடந்தவாரம் வவுனியா சிறைக் கலவரத்துக்குத் தலைமை தாங்கியிருந்தார்.
வன்னிப் போர் நடவடிக்கையின் போது, கைது செய்யப்படும் அல்லது சரணடையும் விடுதலைப் புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் கொன்று விடும்படி கோத்தாபய ராஜபக்ச தனிப்பட்ட ரீதியாக எல்லாப் படைப்பிரிவுகளினது தளபதிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையிலான நந்திக்கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 53 ஆவது டிவிசன், கைது செய்த சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த 303 புலிகள் கொலை செய்யப்பட்டனர்.
வன்னிப் படை நடவடிக்கையின் போது, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களும் கூட கொலை செய்யப்பட்டனர். சாதாரண போராளிகள் மட்டும் சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். போரின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றோரை 58 ஆவது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா படுகொலை செய்திருந்தார்.
எனினும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அந்த உத்தரவைப் பின்பற்றவில்லை. அவர் கைது செய்த ஒவ்வொரு புலிகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்து, எழுத்துமூல, ஒளிப்படப் பதிவுகளுடன் சிறிலங்கா இராணுவக் காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தார். என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்களை புரிந்தாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது பிரித்தானியாவில் போர்க்குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், லண்டனில் இருந்து சிறிலங்கா திரும்பினார்.

04 ஜூலை 2012

வன்னி முகாமில் சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்.

இலங்கையில் வன்னி முகாமில் இன்னமும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சிலரை பணயக் கைதிகளாக பிடிக்க வந்த சிங்கள இராணுவத்தினரை எதிர்த்த தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வன்னி முகாமில் இருந்து இரண்டு பேரை விசாரணை என்ற பெயரில் சிங்கள இராணுவம் பிடித்துச் சென்று அனுராத புரம் சிறையில் அடைத்துள்ளது. இதனை எதிர்த்து வன்னி முகாமில் இருந்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஈடுபட்ட மூன்று பேரை பிடிக்க வந்த இராணுவத்தினரை மற்றவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சிங்கள இராணுவத்தினர் 185 பேரை பிடித்துச் சென்று அனுராதபுரம் கொண்டு சென்றுள்ளனர். அனுராத புரம் சிறைக்கு கொண்டு சென்ற தமிழர்களை அங்கிருக்கும் சிறை கண்காணிப்பாளர் தனது காலில் விழுந்து வணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதனை எதிர்த்தவர்களை மண்வெட்டியை பயன்படுத்தும் கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த 185 பேர் மட்டுமின்றி, அனுராதபுரம் சிறையில் ஏற்கனவே இருந்த 35 அரசியல் கைதிகள் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 22 அரசியல் கைதிகள் பலத்த காயமுற்றுள்ளனர். அவர்களை அங்கிருந்து கொழும்புவிலுள்ள மகர சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காத கரணியத்தால் தலையில் கடுமையாகத் தாக்கப்பட்ட ஒரு அரசியல் கைதி இன்று மாலை உயிரிழந்துள்ளார். மற்றொரு அரசியல் கைதி உணர்வற்ற நிலையில் உள்ளார். காயமுற்ற அரசியல் கைதிகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சென்று பார்த்துள்ளார்.
வன்னி முகாமில் உள்ளவர்களையெல்லாம் இன்னமும் சிங்கள அரசும், அதன் இனவெறி இராணுவமும் எப்படி கொடுமைக்குள்ளாக்கி வருகிறது என்பதற்கு இந்த சம்பவம் சான்றாகும். இங்கிருந்து செல்லும் இந்திய அரசின் பிரதிநிதிகள் இதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியையும் எழுப்பாமல், இலங்கை எங்களது நட்பு நாடு என்று தொடர்ந்து பிரகடனம் செய்வதில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்று கூறும் இந்திய மத்திய அரசு, சிங்கள அரசு தமிழர்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதே இன்றளவும் தொடரும் இந்த கொடுமைகளுக்கெல்லாம் கரணியமாகும்.
தமிழர்கள் மீது தொடுத்த போரில் மட்டுமல்ல, போர் முடிந்த பிறகும் தமிழின அழிப்பை சிங்கள பெளத்த இனவாத அரசு தொடர்ந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த கொடூர சம்பவம் சாட்சியாகும். இதையெல்லாம் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு அரசு இல்லாமல் தமிழினம் உலக அளவில் ஒரு அடிமைப்பட்ட இனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. ஐ.நா.வும், உலக நாடுகளும், இந்திய மத்திய அரசால் முழுமையாக திசை திருப்பப்படுவதால், ஈழத் தமிழனின் துயரம் தொடர்கதையாகிவருகிறது.
இந்திய அரசு தங்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை சிங்கள இனவாத அரசிடம் இருந்து பெற்றுத்தரும் என்று இன்னமும் நம்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இதற்கு மேலாவது யதார்த்த நிலையை உணர்ந்து தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை சர்வதேச அளவில் முன்னெடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

காணாமல் போனோர் தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கம் கேள்வி!


சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், காணாமற்போன 15,780 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலை நீடிப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழு கவலை வெளியிட்டுள்ளது.
அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஜெனிவாவில் வெளியிட்டுள்ள 2011ம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இதுகுறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக சிறிலங்கா இலங்கை அரசு அறிவித்தது.
ஆனாலும், சிறிலங்காவில் போருக்குப் பின்னர் இன்னும் 15,780 பேரில் நிலை என்னவானது என்று தெளிவில்லாமல் உள்ளது.
காணாமற்போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 751 பேர் பெண்கள், 1494 பேர் சிறுவர்களாவர்.
போர் முடிந்த பின்னர், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்த பெரும்பாலானவர்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், இன்னும் ஆயிரக்கணக்கானோரின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது.
போர் நடைபெற்ற பகுதிகளில் மனிதாபிமானப் பணியாளர்களுக்கு சிறிலங்கா அரசினால் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
அங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயணத்தடை விலக்கிக் கொள்ளப்பட்டாலும், மனிதாபிமானப் பணியாளர்கள் சுதந்திரமாகச் சென்று வர முடியாதுள்ளது.
கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அவர்கள் அங்கு செல்ல வேண்டியுள்ளது.
சிறிலங்கா அரசு 2010 ஆம் ஆண்டு பிறப்பித்த ஒரு உத்தரவை அடுத்து வடக்கில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் பணியகங்கள் மூடப்பட்டன.
இதனால், பொதுமக்களுக்கான உதவி நடவடிக்கைகள் நின்று போயின.
மீள்குடியேற்றப் பகுதிகளில் திட்டமிட்டப்பட்டிருந்த குடிநீர் விநியோகத் திட்டங்களை செயற்படுத்துவதையும் கூட சிறிலங்கா அரசு தடை செய்தது.
பொதுமக்களின் நலன்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கும் சிறிலங்கா அரசு அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுக்குத் தடை விதித்துள்ளது“ என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசியத் தலைவரின் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்று தெரியாதென்கிறார் சரத்பொன்சேகா!

புலிகளுடனான போரில் முக்கிய பாத்திரம் வகித்த முன்னாள் இராணுத் தளபதி சரத் பொன்சேகா மீண்டு இந்தியாவின் பிரபல தமிழ் ஊடகமான ஆனந்த விகடனுக்கு வழங்கியுள்ள பேட்டிலில் பிரபாகரனின் மனைவி, இளைய மகன் மற்றும் மகளுக்கு என்ன நடந்தது தமக்கே தெரியாது எனவும் பிரபாகரன் உடலத்தை அவருக்கு நெருக்கமானவர்களை கொண்டு அடையாளம் கண்டதுடன் மரபணுப் பரிசோனை மூலம் சந்தேகத்துக்கு அப்பால் ஊர்ஜிதம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

”ராஜபேக்ஷ ‘நினைத்ததை முடிப்பவர்’ ஆக அவரின் தளபதியாக இருந்த நீங்களே, அவருக்கு எதிரியாகிப்போனதன் பின்னணி என்ன?”

”இலங்கை மக்களிடையே எனக்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்ததுதான் காரணம். எங்கள் மக்கள் இந்தப் போர் வெற்றியை இன்னொரு விடுதலையாகக் கருதினார்கள். இந்த வெற்றிக்குப் பின் இராணுவம் எவ்வளவு பெரிய விலை கொடுத்திருந்தது என்பது மக்களுக்குத் தெரியும். அதனால், என்னைக் கொண்டாடினார்கள். என்னைப் பொறுத்த அளவில், இந்தப் போர் பயங்கரவாதத்தில் இருந்து மக்களை விடுவிக்க நாங்கள் நடத்திய போர். ஒரு இராணுவத் தளபதியாக அதை மீறிய எதிர்பார்ப்பு எதுவும் எனக்கு இல்லை. ஆனால், ராஜபேக்ஷவுக்கு நிறைய உள்நோக்கங்கள் இருந்தன. போர் வெற்றியைத் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்வது அதில் முக்கியமானது. போர் வெற்றிக்குப் பின் மக்கள் என்னைக் கொண்டாடியது, அவருக்குப் பெரிய பொறாமையை உருவாக்கியது. அவருடைய அரசியல் கணக்குகள் காலியாகிவிடுமோ என்று பயப்பட்டார். அதனால், அவரே என்னை அவருக்கு எதிரிஆக்கினார்.’

”உங்கள் அரசியல் அபிலாஷையும் அதற்கு ஒரு காரணம் அல்லவா?”

”இல்லை. போருக்குப் பின் பல்வேறு தரப்பினரும் என்னைச் சந்தித்தபோது, ஊழலும் அடக்குமுறையும் கொண்ட ராஜபேக்ஷ குடும்பத்தின் கூட்டாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனாலும், நான் அமைதியாகத்தான் இருந்தேன் . ஒரு கட்டத்தில் ராஜபேக்ஷவே என்னை அரசியலை நோக்கித் தள்ளினார்.”

” சரி, போர் காலகட்டத்துக்குப் போவோம் . விடுதைலப் புலிகளின் வீழ்ச்சிக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? புலிகளின் பலம் என்ன… பலவீனம் என்ன?”

”இலங்கை இராணுவத்தின் பலவீனம்தான் புலிகளின் பலமாக இருந்தது. நான் பொறுப் பேற்பதற்கு முன்பு இலங்கை இராணுவம் எல்லா வகைகளிளும் பின்தங்கி இருந்தது. குறிப்பாக, தொழில்நுட்பத்தில். அதே போல, எங்கள் கடற்படை பலவீனமாக இருந்தது. அரசியல் சூழலும் புலிகளுக்குச் சாதகமாக இருந்தது. இவைதான் புலிகளின் முக்கியப் பலமாக இருந்தது. நான் பொறுப்பேற்றதும் இவை எல்லாவற்றையுமே மாற்றினேன். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், புலிகள் நவீனப் போர் உத்திகள், தொழில்நுட்பங்களில் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகான சர்வதேசச் சூழலை அவர்கள் உணராததும் முக்கியக் காரணம்.

”உண்மையச் சொல்லுங்கள்… பிரபாகரனின் முடிவு என்னவானது?”

”ஒரே உண்மைதான். பிரபாகரன் இப்போது உயிரேடு இல்லை. போரில் அவர் இறந்துவிட்டார்!”

”போரில் சண்டையின்போதுதான் பிரபாகரன் இறந்தாரா? அவர் சரணடையவில்லை என்றும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படவில்லை என்றும் உங்களால் உறுதி அளிக்க முடியுமா?”

”கண்டிப்பாக.

அந்த இரவு எனக்கு எப்போதுமே மறக்க முடியாதது. ஒரு சின்ன பகுதிக்குள் பிரபாகரைனச் சுற்றி வளைத்தோம். மூன்று அணிகளைக் கொண்டு மூன்று வளையங்களை புலிகள் அமைத்திருந்தார்கள். அதிகபட்சம் அவர்கள் 400 பேர் இருந்திருக்கலாம். முதல் அணியில் 100 பேர். நடேசன், புலித்தேவன் தலைமையிலானது. அழித்தோம். அடுத்த அணியில் 200 பேர். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையிலானது. அழித்தோம். கடைசிக்கட்டத் தாக்குதல் நள்ளிரவில் நடந்தது. 100 பேர்கொண்ட அணி அது. பிரபாகரன் தலைமையிலானது. அழித்தோம். சண்டையில் குண்டடிபட்டுத்தான் பிரபாகரன் இறந்தார்.”

” உங்கள் கூற்றுப்படி , நீங்கள் கொன்றது உண்மையான பிரபாகரைனத்தான் என்றால், ஊடகங்களைக் கூட்டிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?”

”உங்கள் கேள்வியில் ஒரு திருத்தம். நாங்கள் பிரபாகரனைக் கொல்லவில்லை. அவர் போரில் இறந்தார் என்பதே சரி. யுத்த களத்துக்குச் செல்லும்போது அங்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது. பத்திரிகையாளர்கைளை உடன் அழைத்துக்கொண்டு போருக்குப் போக முடியாது. அங்குள்ள சூழலே வேறு. பிரபாகரன் சடலம் கிடைத்தவுடன் அவருடைய மரணத்தை அறிவிப்பதற்கு முன் நாங்கள் அதைத் துளியும் சந்தேகம் இன்றி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருந்தது. பிரபாகரைனத் தெரிந்தவர்களை அழைத்துவந்தோம். பிறகு, மரபணுப் பரிசோதைன மேற்கொண்டோம் . முற்றுமுழுதாக இறந்தது பிரபாகரன் என்று தெரிந்து கொண்ட பின்னரே அறிவித்தோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்… நம்புங்கள். ஊடகங்களில் நாங்கள் பார்த்த சடலம் பிரபாகரனுடையதுதான்.”

”எந்தத் தருணத்திலாவது பிரபாகரனுடன் பேசி இருக்கிறீர்களா?”

”ஒருபோதும் இல்லை!”

”சரண் அடையும் முடிவை விடுதைலப் புலிகள் எடுத்த பின்னணி என்ன?”

” அவர்கள் அந்த முடிவை எடுக்கவில்லை. அந்த முடிவை நோக்கித் தள்ளப்பட்டார்கள் . நாலாபுறமும் நாங்கள் சுற்றி வளைத்து இருந்தோம். அவர்கள் வசம் இருந்த பகுதி கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே வந்தது. தப்பிக்க வழியே இல்லாத நிலையில்தான் அவர்கள் ஆயுதங்கைள மௌனிக்கச் செய்தார்கள்.”

”ஆனால், சரண் அடைவது தொடர்பாக இராணுவத்துடன் புலிகள் பேசினார்கள் இல்லையா?”

”இல்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிலும் இராணுவம் புலிகளுடன் ஈடுபடவில்லை.”

” அப்படி என்றால் , சரண் அடைவது தொடர்பாக யார் யாருக்கிடேய பேச்சுவார்த்தை நடந்தது? தமிழகத் தலைவர்கள் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? அப்போது இராணுவத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?”

”அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தமிழகத் தலைவர்கள் யாரெல்லாம் பேசினார்கள் என்று தெரியவில்லை. அரசு சாரா அமைப்புகள் பேசியது தெரியும். எங்களிடம் கேட்டபோது, ‘ யார் சரண் அடைந்தாலும் நாங்கள் வரேவற்கிறோம். சர்வதேசப் போர் விதிமுறைகளின்படி சரண் அடைபவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள்’ என்று சொன்னோம். எங்களை நம்பி வந்த பொதுமக்களையும் சரி, புலிகளையும் சரி, அப்படித்தான் நடத்தினோம்.’

”வெள்ளைக் கொடி ஏந்தி சரண் அடைய வருபவர்கள் கொல்லப்பட்டதுகூட போர் விதிமுறைகள் படிதானா?”

”சரண் அடைய வருபவர்கள் தொடர்பாக என் வீரர்களுக்கு நான் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தேன். அதனால்தான் இன்றைக்கு உயிரோடு விடுதைலயாகும் புலிகைள நீங்கள்; பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல வெள்ளைக் கொடியை ஏந்திக்கொண்டெல்லாம் எவருமே சரண் அடைய வரவில்லை . நாங்கள் போர் அறநெறிகளை எந்த வகையிலும் மீறவில்லை என்பதுதான் உண்மை.”

”எண்ணற்ற குழந்தைகள் போரில் கொல்லப்பட்டார்கள் . உதாரணமாக, பிரபாகரனின் இளைய மகன். அவர் மீது இருந்த காயங்கள் மிகக் குறைந்த தூரத்தில் இருந்து அவர் கொல்லப்பட்டதை உறுதி செய்கின்றன. அதாவது, பிடித்துவைத்துக் கொன்டு இருக்கிறீர்கள் . உங்கள் போர் அறம் இதுதானா?”

”நீங்கள் தொடர்ந்து யூகத்தின் அடிப்படையிலான விஷயங்கைள முன்வைத்தே கேள்விகளைக் கேட்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடுவதுபோல பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டுவிட்டதாக நான் நம்பவில்லை. கடைசி நாள் தாக்குதல் நடந்த இடங்களில் சில பெண்கள், நான்கைந்து சிறுவர்களின் சடலங்கைளக் கைப்பற்றினோம். அதில் பெரும்பாலானவர்கள் சயனைடு உட்கொண்டு இறந்தவர்கள். பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள் – கருணா அம்மான் போன்றவர்கைள அழைத்துவந்து காட்டினோம். பிரபாகரன் மனைவியோ, இளைய மகேனா, மகேளா அதில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எங்கைளப் பொறுத்த அளவில் பிரபாகரன் குடும்பத்தில் கொல்லப்பட்டது பிரபாகரனும் அவருடைய மூத்த மகனும் மட்டும்தான். மற்ற மூவரின் நிலைபற்றி எங்களுக்கே இதுவரை எந்தத் தகவலும் தெரியாது.”

”ஒரு போர் அறநெறியும் பின்பற்றப்படாத இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தப் போரை முன்னெடுத்த மனிதனாக உங்கள் மனநிலை எப்படி இருந்தது?”

” இந்தப் போரைத் தொடங்கியபோதே என் வீர்களுக்கு நான் பிறப்பித்த முக்கியமான உத்தரவு, பொதுமக்கள் உயிர் முக்கியம். கடைசி வரை அந்த உத்தரவை என் வீரர்கள் காப்பாற்றினார்கள். நீங்கள் சொல்வதுபோன்றெல்லாம் நடக்கவே இல்லை. ஒரு போரை முன்னெடுத்தவனாக நான் முழுத்திருப்தியான மனநிலையிலேயே இருக்கிறேன்.”

”இந்தப் போரில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் பங்களிப்பு என்ன? விடுதைலப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுக்கக் காரணம் என்ன?”

”அது அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகேளா… பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எல்லா நாடுகளுமே நினைக்கின்றன. புலிகள் விஷயத்தைப் பொறுத்த அளவில் மாற்றுப் பாதை அல்லது வேறு விதமான தீர்வுகளுக்கு அவர்கள் தயாராக இல்லை என்பதை இந்த நாடுகள் தெளிவாகப் புரிந்துகொண்டன. அதற்குப் பிறகுதான் எங்கள் நிலைப்பாட்டை ஆதரித்தன. சீனாவைப் பொறுத்த அளவில் அது எப்போதுமே எங்கள் நண்பன். எங்களுக்கு முக்கியமான ஆயுத இறக்குமதியாளர் சீனா என்பதும் முக்கியமானது.”

”முன்பு ஒரு முறை ‘சிங்களவர்களிடம் தமிழர்கள் அடங்கித்தான் போக வேண்டும்’ என்று பேசி இருந்தீர்கள். இப்போதும் ‘தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும்’ என்று பேசி இருக்கிறீர்கள். தமிழர்கள் மீதான உங்கள் வெறுப்புக்குக் காரணம் என்ன?

சிங்களவர்களுக்குக் கீழேதான் தமிழர்கள் இருக்க வேண்டுமா?”

”என்னுடைய பேச்சுகள் திரிக்கப்படுகின்றன என்று நினைக்கிறேன். நான் அப்படிப் பேசுபவன் இல்லை. தமிழர்கள் மீது எனக்கு வெறுப்பு எதுவும் இல்லை. இலங்கை இன்றைக்கு ஒரே நாடு. அதில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. எல்லோரும் கூடி வாழ வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அமெரிக்காவில் எப்படி ஒபாமா அதிபர் ஆனாரோ… அதேபோல, இலங்கையில் ஒரு தமிழர் அதிபராகும் நாள் வர வேண்டும் என்றே விரும்புகிறேன்.”

”போருக்குப் பின் தமிழர் பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டு இருக்கின்றன. இன்னமும் அங்கு இவ்வளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்க என்ன தேவை இருக்கிறது?”

”நான் இப்போது இராணுவத் தளபதி இல்லை என்பதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், 2010-க்குள் அங்கு எல்லா புனரமைப்புப் பணிகளையும் முடித்து, படையினரை வெளியேற்றிவிட வேண்டும் என்று அப்போது அரசிடம் சொல்லி இருந்தேன். அரசு இன்னமும் புனரமைப்புப் பணிகளை முடிக்கவில்லை. பணிகள் முடியாத நிலையில், படையினரை முழுமையாக வெளியேற்றுவது தொடர்பாகவும் முடிவெடுக்க முடியாது.”

இந்தியா – சீனா… இலங்கையின் இணக்கமான கூட்டாளி யார்?

”இந்தியா எங்களுக்கு மிக அருகில் இருக்கும் நாடு. வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாக நம் இரு நாடுகளுக்கும் இiடேய உள்ள உறவு முக்கியமானது. எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட மாட்டோம். அதே சமயம், சீனா எங்களுக்கு மிக முக்கியமான நண்பன். இரு நாடுகளுமே இலங்கையால் தவிர்க்க முடியாதவர்கள்.”

”உங்களுடைய அடுத்த கட்ட அரசியல் திட்டங்கள் என்ன?”

”இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்வது… எல்லோருக்கும் பேச்சு உரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமை கிடைக்கவும் ஊழலற்ற நிர்வாகத்தைக் கொண்டுவரவும் உழைப்பது!”

” ஒருவேளை அதிபர் தேர்தலில் வென்றால், தமிழர்கள் பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள்?”

”ஓட்டுக்காகப் பொய் பேசும் அரசியல்வாதி இல்லை நான். இந்தப் பிரச்னைக்கான தீர்வு காகிதங்களிலோ, வார்த்தைகளிலோ இல்லை. மனித மனங்களில் இருக்கிறது. அதை நான் சொல்ல விரும்பவில்லை. செய்துகாட்டுவேன்.”

”சர்வேதச நீதிமன்றம் போர்க் குற்றங்களுக்காக சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டைன விதித்திருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?”

”வரவேற்கிறேன். போர்க் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புருகிறேன்.”

”எதிர்கால வரலாறு உங்கள் பெயரை ஹிட்லர், முசோலினி, போல்பாட் வரிசையில் வைக்கும். இதை உணர்கிறீர்களா?”

”இராணுவத்தைக் கையாண்டவர்கள் என்பதாலேயே அவர்களோடு என் பெயரை வரலாறு சேர்த்துவிடாது. நீங்கள் குறிப்பிடுபவர்கள் எல்லோருமே சர்வாதிகாரிகள். நானோ ஜனநாயகத்துக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறேன்!”

03 ஜூலை 2012

17 உதவிப் பணியாளர் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு சிறிலங்காவுக்கு பிரான்ஸ் அழுத்தம்!

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 உதவிப் பணியாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சுத் தூதரகம் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பிரெஞ்சு தொண்டர் நிறுவனமான அக்சன் பெய்ம் நிறுவனத்தில் பணியாற்றிய இந்த 17 பணியாளர்களும், கடந்த 2006ம் ஆண்டில் மூதூரில் சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையின் போது படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலைகள் குறித்து மீள்விசாரணை நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
இந்தநிலையில் சிறிலங்காவுக்கான பிரெஞ்சுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசோன் சிறிலங்கா சட்டமா அதிபரைச் சந்தித்து இந்தப் படுகொலைகள் குறித்த மீள்விசாரணையின் முன்னேற்றங்கள் தொடர்பாக விசாரித்துள்ளார்.
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, 17 பேரினதும் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்குவதன் மூலம் இந்தப் படுகொலை தொடர்பான அனைத்துலக அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவினால் தப்பிக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தப் படுகொலைகள் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் பலவும் சிறிலங்கா அரசுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

02 ஜூலை 2012

வவுனியா கைதிகளின் உறவுகள் கதறி அழுகை!மனோ கணேசன் அவசர கூட்டத்தை கூட்டுகிறார்

வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமது உறவுகளை கைவிட்டு விட்டீர்களா என தமிழ் அரசியல் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்புகின்றார்கள். 29ம் திகதி வெள்ளிக்கிழமை சம்பவத்தின் பின்னர் கைதிகள் வவுனியா சிறைக்கூடத்திலிருந்து அனுராதபுரம், மஹர ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் எனவும், இந்த கைதிகளில் பலர் காயமடைந்து உள்ளதாகவும், உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாமல் அவர்கள் பழி வாங்கப்படுவதாகவும், சிலர் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகளையடுத்து இந்த பதட்ட நிலைமை கைதிகளின் குடும்ப உறவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையை பற்றி ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், இந்த விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ள செயல்பாட்டாளர்களினதும் அவசர சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தமிழ் எம்பீகளையும், மக்கள் பிரதிநிதிகளையும், கட்சிகளின் பிரதிநிதிகளையும், சிவில் சமூக செயல்பாட்டாளர்களையும் இந்த சந்திப்பில் தவறாமல் கொள்ளும்படி மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளர் மனோ கணேசனும், இணைத்தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும், ஐதேகவின் துணை செயலாளர் மற்றும், கட்சியின் மனித உரிமை பொறுப்பாளர் ஜெயலத் ஜெயவர்த்தன எம்பியும் விடுத்துள்ள கூட்டு அழைப்பில் கோரியுள்ளனர்.
இந்த கூட்டம் கொழும்பு, கொள்ளுப்பிட்டி, எலோ அவனியூ, இலக்கம் 6 இல் அமைந்துள்ள CHRD என்ற மனித உரிமை இல்ல அலுவலகத்தில் ஜூலை 4ம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் என அனைத்து அழைப்பாளர்கள் சார்பாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் புலிகளின் நினைவு தூபி!

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில், பாதுகாப்பு தரப்பினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சிறைக் கூண்டுக்குள், பதுங்கு குழி போல் அமைத்து, அதில் உயிரிழந்த புலிகளின் தலைவர்களது நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. வவுனியா சிறைச்சாலையில் பல காலமாக எவ்விதமான சோதனைகளையும் நடத்துவதற்கு,புலிகள் இயக்க சந்தேக நபர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கடந்த வெள்ளிக் கிழமை, சிறைச்சாலை முற்றாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 'தமிழீழ இறைமைக்கான மாநாடு'

திட்டமிட்ட இன அழிப்பினை உடனடியாக நிறுத்துவதற்கும், ஈழத் தமிழர்களின் இறைமையை அங்கிகரிக்க கோரியும் ஜேர்மனில் தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழீழ இறைமைக்கான இரண்டாவது மாநாடு நடத்தப்படவுள்ளது.
விடுதலை உணர்வுடன் செயற்பட்டுவரும் தமிழ் இளையோர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெறும் தமிழீழ இறைமைக்கான மாநாடு. ஈழத் தமிழர்களின் வரலாற்று வழிவந்த இறைமை மற்றும் அவர்கள் போராடிப்பெற்ற இறைமை ஆகியவற்றுடன், அவர்களை அழிவில் இருந்து காக்க வழங்கப்பட வேண்டிய இறைமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு,
சர்வதேச நாடுகள் 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசின் திட்டமிட்ட இனவழிப்பினை உடனடியாக நிறுத்துவதற்கு ஈழத் தமிழர்களின் இறைமையை அங்கிகரிக்க வேண்டும் என்று இலங்கைத்தீவிலும், தமிழ்நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் ஒத்த சிந்தனையுடைய பலருடன், குறிப்பாக இளைய தலைமுறையினருடன் பரவலாக உரையாடி விவாதித்த பின்னர்,ஜேர்மனியில் நடைபெற்ற முதலாவது மநாட்டு அமர்வினை தொடர்ந்து எதிர்வரும் 15.07.2012 அன்று தமிழீழ இறைமைக்கான இரண்டாவது மாநாடு நடைபெறவுள்ளதாக ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினர் அறிவித்துள்ளார்கள்.

01 ஜூலை 2012

தமிழ் மக்களுக்கெதிரான முழுமையான போர் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும், தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு முழுமையான போர் தற்பொழுது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது நடைபெறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்று அதி வணக்கத்திற்குரிய மன்னார் மறைமாவட்ட பேராயர் இராயப்பு யோசேப் அவர்கள் தெரிவித்தார்.கொழும்பிலிருந்து வெளிவரும் பிரதான தமிழ் வார பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதாக தெரிவித்த கருத்துடன் நூற்றுக்கு நூறு வீதம் தாமும் உடன்படுவதாக தெரிவித்த பேராயர் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான தற்போதைய போரானது தமிழ் மக்களின் இன அடையாளத்தை அழித்து ஒழிப்பதும் அவர்களின் சுய கௌரவத்தை, பாதுகாப்பை, அரசியல் இருப்பை சிதைத்து விடும் நோக்குடனேயே இந்தப் போர் தமிழ் மக்களுக்கு எதிராக உத்தியோகப் பற்றற்ற முறையில் பிரகடனப்படுத்தப்பட்டு முன் நகர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று தமிழ் மொழியையே அறியாது சிங்களமயமாகியுள்ளதை சுட்டிக்காட்டும் பேராயர் அவர்கள் இதுபோன்றதொரு நிலையை வடக்கு - கிழக்கில் உருவாக்குவதற்கான திட்டங்களே முன் நகர்த்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
இது சர்வதேச நியமங்கள், நீதி இவற்றிற்கு மாறான இனச் சுத்திகரிப்பே என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த யூன் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுடனான சந்திப்பின் போது வெளிப்படுத்திய உணர்வுகள், கேள்விகள் குறித்து தற்பொழுது மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் பேராயர் அவர்களிடம் கேள்விகளாக முன்வைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாரம்பரியமாக வாழ்ந்துவரும் மக்களை அவர்களுடைய பிரதேசத்தில் சிறுபான்மையினராக மாற்றும் திட்டத்தை அனுமதிக்கமுடியாது.
சமாதான காலத்தில் படைத்தரப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை அதிகளவில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சமாதானம் வந்துவிட்டதாக கூறுகின்றனர், ஆனால் சமாதானத்தை தமிழ் மக்களால் பார்க்க முடியாதிருக்கின்றது.
முள்ளிக்குளத்திலும், பேசாலை 50 வீட்டுத் திட்டத்திலுமிருந்து மக்களைப் படைத்தரப்பு ஏன் விரட்டியடித்தது?
மக்கள் மீளக்குடியமர முடியாதுள்ளது. காடுகளிலும், கூடாரங்களிலும் எவ்வளவு காலத்துக்கு வாழ்வது?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள தமிழர்களை அரசு அரவணைத்து செல்லவேண்டும்"-அமெரிக்கா

சிறிலங்காவை விடமாட்டோம்… தொடர்ந்து துரத்துவோம் என்கிறார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்வடக்கில் உள்ள தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் செய்தியாளர்களுடன் காணொலி மூலம் நேரலையாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவில் மிகப்பெரிய செயற்திட்டம் ஒன்று முடிக்கப்படாமல் உள்ளது குறித்து அமெரிக்கா முடிந்தளவு கரிசனை காட்டி வருகிறது.
சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் அந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்.“ என்று சிறிலங்கா ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு போஸ்னர் பதிலளித்தார்.
இந்த நேரலை காணொலிக் கலந்துரையாடல், அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட பூகோள மனிதஉரிமைகள் நிலை அறிக்கையை மையப்படுத்தியே இடம்பெற்றது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனும், தானும் அண்மையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் நடத்திய பேச்சுத் தொடர்பாக கருத்து வெளியிட்ட மைக்கல் போஸ்னர்,
“கரிசனைக்குரிய பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. அந்த விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.
நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆனால், வடக்கில் இன்னமும் தொடரும் பாகுபாட்டை தீர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரவணைத்துக் கொள்வதற்கும் நல்லிணக்க விவகாரங்களை கையாள்வதற்கான செயற்திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.