13 ஜனவரி 2013

அம்பாறையில் தமிழர் பகுதிகளில் புதிய முகாம்களை நிறுவும் சிறிலங்கா இராணுவம்!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் ஆகிய தமிழ் பிரதேசசெயலர் பிரிவுகளில் சிறிலங்கா இராணுவத்தின் மூன்று புதிய முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இது அங்கு வசிக்கும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூன்று புதிய சிறிலங்கா இராணுவ முகாம்களில் இரண்டு கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
அவற்றில் ஒன்று ஆலையடிவேம்பில் இராமகிருஸ்ண வீதியிலும், இன்னொன்று நாவிதன்வெளி வேலடி வளவு என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியிலும் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் காணியின் உரிமையாளர்கள் பிரித்தானியாவில் தற்சமயம் வசித்து வருகின்றனர்.
அதேவேளை, இதற்கு 20 தினங்களுக்கு முன்னர், திருக்கோயில் பிரதேச செயலகம் முன்னர் இயங்கி வந்த பழைய கட்டடம் ஒன்றில், இன்னொரு புதிய சிறிலங்கா இராணுவ முகாம் திறக்கப்பட்டது.
அதற்கு அருகில் கள்ளித்தீவு என்னுமிடத்தில் நிரந்தர சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்று இருக்கும் நிலையில் இந்தப் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், கிழக்கில் குடியியல் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக இந்தப் புதிய முகாம்கள் அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் அப்பிரதேச மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

சர்வதேச நீதிமன்றை நாடப்போவதாக சட்டவாளர்கள் தெரிவிப்பு!

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையை ஆட்சேபித்து சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாக சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர். சட்டத்தரணிகள் கூட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சட்டத்தரணி நுவன் போபகேயின் தகவல்படி, இதற்காக தாம் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் உதவியை எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சட்டத்தரணிகளின் கூட்டு நேற்று பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சந்தித்தனர். இதேவேளை அடுத்த பிரதம நீதியரசராக யார் நியமிக்கப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சட்டத்தரணிகளின் கூட்டு தெரிவித்துள்ளது.

12 ஜனவரி 2013

அரசின் திட்டமிட்ட சதி!-சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரனின் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்திலிருந்து இன்று (12) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரனிடம்  தொடர்பு கொண்டு கேட்ட போது,
இச்சம்பவத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேலன் என்று அழைக்கப்படும் வேலமா லிகிதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரான கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த வசந்தன் நேற்று (11) கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்டையிலேயே லிகிதன் கைது செய்யப்பட்டதாகவும் அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் வசந்தன் என்பவர் கடந்த ஆறு மாதமாக கட்சியுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை எனவும் கடந்த வாரமே அவர் மீண்டும் கட்சியுடன் இணைந்து கொண்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரனர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தனது அலுவலகத்திற்கான பாதுகாப்பு கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் திகதியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து சபாநாயகர், பொலிஸ்மா அதிபர், வடமாகாண பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இது அரசினது திட்டமிட்ட சதி என தான் சந்தேகிப்பதாக ஸ்ரீதரன் மேலும் குறிப்பிட்டார் என அத தெரண குறிப்பிட்டுள்ளது.

"முடிந்தால் புதிய பிரதம நீதியரசரை நியமியுங்கள்"அரசுக்கு அசாத்சாலி சவால்

newsபிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றிபெறலாம். ஆனால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றோம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இதுவரை பதவி விலகாமல் இருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
மேலும் குற்றப் பிரேரணையில் கையொப்பம் இட்ட அனைத்து ஆளும் கட்சி எம்.பி.க்களையும் நாங்கள் நீதிமன்றத்துக்கு அழைப்போம்.
அரசாங்கம் புதிய நீதியரசர் ஒருவரை நியமிக்க முற்பட்டால் 500 பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டியேற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அமெரிக்கா விசனம்!

நம்பிக்கையில்லா தீர்மானம் அதிகாரம் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றின் உத்தரவினை மீறி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஜனநாயக நிறுவனங்களுக்கு இடையிலான அதிகாரப் பொறிமுறைமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன்
அஹிம்சை வழியில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு பூரண பாதுகாப்பை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. நல்லாட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

11 ஜனவரி 2013

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநாமதேய கடிதங்கள்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.
தங்களது வீட்டு முகவரிகள் இந்த அநாமதேய நபர்களுக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது குறித்தும் இவ்வாறு கிடைத்துள்ள முகவரியால் எதிர்காலத்திலும் தாங்கள் அச்சறுத்தப்படலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாணவர்களின் முகவரியினை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு இந்தக் குழு செயற்ப்பட்டுள்ளது இதனை வைத்துப் பார்க்கும் போது அரசியல் செல்வாக்குடைய குழு ஒன்றினாலே இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்படிருக்கலாம் என மாணவ்ர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது வீட்டு முகவரிகள் எவ்வாறு கிடைந்தன? அவ்வாறு அவர்களுக்கு வழங்கியது யார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளை குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் சார்ந்த விடயங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு மூன்று சட்டத்தரணிகள் போட்டி!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட மூன்று சட்டத்தரணிகள் முன்வந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உபுல் ஜயசூரிய, ஆர்.ஆர்.எஸ்.தங்கராஜா மற்றும் திரந்த வலலியத்த ஆகிய மூவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தற்போது விஜேதாஸ ராஜபக்ஷ செயற்பட்டு வருகிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இவரது பதவிகாலம் முடிகிறது. அதன்பின் இரண்டாம் தடவை போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
இதனால் புதியவர்கள் போட்டியிட முன்வந்துள்ளனர். இவர்களுக்கான தேர்தல் பெப்ரவரி 20ம் திகதி இடம்பெறவுள்ளது.

10 ஜனவரி 2013

குற்றவியல் பிரேரணை விவாதம் ஆரம்பம்!

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் சற்றுமுன் ஆரம்பமாகியது.
குற்றவியல் பிரேரணை சட்டத்துக்கு முரணானது என்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தன.
எனினும் தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்துக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அனுமதியளித்தார்.
இதனையடுத்து கடும் ஆட்சேபத்தை வெளியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள், சட்டத்துக்கு முரணான குற்றப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூறி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வடக்கில் தமிழர்களுக்கு கருத்துச் சுதந்திரம் மறுப்பு-யாழ்.ஆயர்

newsவடக்கில் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலையே இப்போதும் காணப்படுகிறது. மக்களை ஒன்று திரட்டிக் கூட்டங்களைக் கூட நடத்த முடியாது.
வடக்கில் தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரத்துக்குத் தொடர்ந்தும் முட்டுக் கட்டைகள் ஏற்படுத் தப்படுகின்றன. அவர்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அஞ்சுகின்றனர்.
இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவரிடம் சுட்டிக் காட்டினார் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை.
இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
நேற்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்துக் கலந் துரையாடினார்.
கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே யாழ்.ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்திப்புக் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
பிரான்ஸ் தூதுவரின் யாழ். வருகையின் நோக்கம் இங்குள்ள களநிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதே. போரின் பின்னர் 3 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்களின் மனோநிலை என்ன? மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? வாழ்வாதாரச் செயற்பாடுகள் என்பன தொடர்பிலேயே பிரான்ஸ் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
தமிழ் மக்கள் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னமும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. தீர்வை வழங்குவதற்குரிய நட வடிக்கைகள் எதனையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை.
வடமாகாண சபைக்கான தேர்தல் இன்னமும் நடத்தப் படாமல் உள்ளது. அரசு அதை இழுத்தடித்துக் கொண்டு செல்கின்றது.
மேலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்த வரையில், விவசாயிகள் தமது விளை பொருள்களை சந்தைப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மீன்பிடித்துறையைப் பொறுத்தவரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எமது கடல்வளம் தொடர்ந்து அழிவடைந்து கொண்டே செல்கிறது.
இங்கு தொழிற்சாலைகள் இல்லாமையால் தொழில் முயற்சிகள் குறைவாகவே உள்ளன.
இரு இனங்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளைச் செய்யலாம்தானே? என்று பிரான்ஸ் தூதுவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்.
இங்கு சுதந்திரமான அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது. மக்களை ஒன்றுதிரட்டிக் கூட்டங்கள் நடத்துவதற்குக் கூட அனுமதி யில்லை. மக்களின் பேச்சுச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சுதந்திரத்துக்கு இங்கு பலமுட்டுக் கட்டைகள் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்று தூதுவரிடம் தெரிவித்தேன் என்றார்.

சிரானிக்கெதிரான குற்றப் பிரேரணை குறித்து அமெரிக்கா கவலை!

News Serviceஇலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப் பிரேரணை மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா தமது கவலையை வெளியிட்டுள்ளது. அத்துடன், நீதித்துறை மீதான நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அழுத்தம் பற்றி தீவிரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. என்று இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.
அதேவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து கவலையடைவதாக இதற்கு முன்னரும் தாம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரிசானா நபீக் குறித்து தகவல் வெளியிட அமெரிக்கா மறுத்துள்ளது.
ஏனெனில், ரிசானா நபீக் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அதுபற்றி ஆராய்ந்து கருத்து வெளியிடப்படும் எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

09 ஜனவரி 2013

கவலையுடன் காணப்பட்ட தமிழ் இராணுவப் பெண்கள்!

 இராணுவத்தின் மகளிர் படையணியில் அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் பெண்கள், நேற்றைய தினம்(08) கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே இராணுவத் தளபதியின் பாரியாரை அவர்கள் சந்தித்துள்ளார்கள். அங்கே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இராணுவத் தளபதியின் மனைவி கலந்துகொண்டதோடு, அவர்களுக்கு விருந்தும் பரிமாறப்பட்டது. இருப்பினும் பல பெண்களின் முகத்தில் சோகத்தையே காணக்கூடியதாக இருந்ததாக, விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களில் பல தமிழ்ப் பெண்கள் நோய்வாய்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் கட்டாயமாக கொழும்பு செல்லவேண்டும் என கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மேலும் அறியப்படுகிறது. பல பெண்கள் கைகளில் மருந்து மாத்திரையோடு, இருந்ததாகவும் பின்னர் உணவருந்தச் சென்றதாகவும் மேலும் அறியப்படுகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்களை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

51 புகலிடக் கோரிக்கையாளாகளை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படகு மூலம் அவுஸதிரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனீ மாவட்டத்தின் க்யூ பிரிவு காவல்துறையினர் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உளவுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் புகலிடக் கோரிக்கையாளர்களில் 28 ஆண்களும், 10 பெண்களும் 13 சிறுவர் சிறுமியரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

08 ஜனவரி 2013

அவசர இடமாற்றத்தால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றம்!

அவசர அவசரமான ஆசிரியர் இடமாற்றத்தை கைவிட்டு ஆசிரியர் இடமாற்ற சபையை கூட்டுமாறு கல்வி தொழிற்சங்கவியலாளர்களின் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிறுவன சட்ட தொகுப்பை மீறி தன்னிச்சையான ஆசியர் இடமாற்றம் இடம்பெற்று வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஏதாவது தீர்வு வழங்காவிட்டால் எதிர்காலத்தில் அது விருத்தியடைக் கூடும் எனவும் அச்சங்கம் கோரியுள்ளது.
தற்போதைய நிலையில் அவசர ஆசிரியர் இடமாற்றத்தை கைவிட்டு முறையான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்´டும் என அதிகாரிகளிடம் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்

இலங்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு இலங்கை அரசு அழைப்பாணை விடுத்துள்ள பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்விமிபதில் வடிவிலான அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பிரபல வழக்கறிஞரும், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டத்திற்குப் புறம்பாக தீவிரவாதிகளை ஆதரிப்பதாகச்சொல்லி, அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று இலங்கை அரசு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகும்படி தகவல் வந்துள்ளதாம். இதில் இருந்து இலங்கை அரசு எப்படியெல்லாம் தமிழர்களை குறி பார்த்து குறுக்கு வழியில் பழி வாங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த நிலைமைகளையெல்லாம் போக்கிடத்தான் தி.மு.க. சார்பில் டெசோ மாநாடு நடத்தி, உலக நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அதன் தீர்மானங்களை மத்திய அரசுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் நேரடியாகவே வழங்கியிருக்கிறோம்.
இப்போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்று வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

07 ஜனவரி 2013

கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை தொடர்பிலான விவாதம்
நடாத்துவது குறித்து இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சியின் தலைவர்கள் இந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பிரதி சபாநயாகர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 11ம் திகதி மாலை 6.30 அளவில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்hளார்.
இதன் அடிப்படையில் பிரதம நீதியரசர் இந்த வார இறுதியில் பதவியிலிருந்து நீக்கப்படக் கூடிய சாத்தியங்கள் வெகுவாக காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு விவாதத்தின் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அது தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம நீதியரசர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசரை பதவி விலக்கினால் நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பிலான மக்களின் நம்பிக்கையில் பலவீனமடையும் எனவும் ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சில வெளிநாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

அறிக்கையை இரத்துச் செய்யுமாறு உத்தரவு!

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை இரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சட்டவலுவற்றது என உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

06 ஜனவரி 2013

இந்திய நாட்டின் பிரதமராகக்கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிகவும் திறமையானவர். இந்திய நாட்டின் பிரதமர் ஆக கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ. அப்படி ஒரு வாய்ப்பு உருவாகுமானால், என்னுடைய ஓட்டு வைகோவுக்குத்தான் என முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜேத்மலானி தெரிவித்துள்ளார்.
’’ஈழத்தில் இனக்கொலை... இதயத்தில் இரத்தம்...’’ என்ற தலைப்பில் வைகோ தயாரித்த ஒளிப்படக் குறுவட்டு மற்றும் புத்தகம், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டு டெல்லியில் வெளியிடபட்டது. அது தற்போது மராத்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா நேற்று மும்பை செம்பூரில் உள்ள பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி அரங்கில் நடைபெற்றது.
புத்தகம் மற்றும் ஒளிப்பட குறுவட்டை, மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ராம்ஜேத்மலானி வெளியிட்டு உரையாற்றினார்,
ஈழதமிழர்களுக்காக வைகோ தொடர்ந்து போராடி வருகின்றார். அவர் ஒரு தனிமனித ராணுவம். இங்கே உணர்ச்சிகரமாக அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை கேட்டேன். அந்த அளவுக்கு உணர்ச்சிகரமாக என்னால் பேச முடியாது. யாராலும் பேச முடியாது. தாம் எடுத்து கொண்ட கருத்தை ஆணித்தரமாக உறுதியாக எடுத்துரைப்பதில் வைகோவிற்கு நிகர் வைகோதான்.
2011ம் ஆண்டு வைகோ என்னிடம் வந்தார். ஒரு பிரச்சினையில் உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றார். என்ன பிரச்சனை? என்றேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளவர்களை பற்றி அவர் கூறினார். எனக்கு அது ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. ஏன் என்றால் அவர்கள் குற்றவாளிகளே அல்ல. அவர்கள் மீதான குற்ற பத்திரிக்கை நான் படித்த அளவில் இதை நான் அறிந்து கொண்டேன். எனவேதான் தடை ஆணை பெற முடிந்தது.
மராத்தி மொழியில் தயாரித்து வெளியிட்டு இருக்கின்ற இந்த புத்தகம் இலங்கை தமிழர்கள் பட்ட இன்னல்களை அவர்கள் அனுபவித்த வேதனைகளை முழுமையாக எடுத்துரைகின்றது.
இந்தியாவின் அணைத்து மாநில மக்களுக்கும் இந்த கருத்துக்கள் சென்று சேரவேண்டும் என்பதற்காக வைகோ இந்த முயற்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார். மராத்தி மொழியில் இதை வாசிக்கின்றவர்களுக்கு, இலங்கையில் நடந்த கொடூரங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். ஈழதமிழர்களுக்காக வைகோ மேற்கொண்டுள்ள முயற்ச்சிகளை நான் பாராட்டுகின்றேன்.
நான் வைகோவை நேசிக்கிறேன். வைகோ உங்களை நேசிக்கிறார், அதனால் நானும் உங்களை நேசிக்கிறேன். தமிழர்களுடைய பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். வைகோவை நல்ல நண்பராக ஏற்று கொண்டு இருக்கின்றேன். அவர் மிகவும் திறமையானவர் இந்திய நாட்டின் பிரதமர் ஆக கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ. அப்படி ஒரு வாய்ப்பு உருவாகுமானால், என்னுடைய ஓட்டு வைகோவுக்குத்தான் என்று கூறி தன் உரையை நிறவுசெய்தார் ராம்ஜேத்மலானி.

அரச சார்பற்ற நிறுவனங்கள் - அமெரிக்கா – புலம் பெயர் புலிகள் இணைந்து சதி என்கிறது இலங்கை

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை, ஜெனிவா மனித உரிமை பேரவையின் மாநாட்டில் சமர்பிக்க இலங்கையில் உள்ள மூன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் 2012 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் புலம்பெயர் புலிகளுடன் இணைந்து, இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நிறுவனங்கள் என்பது தெரியவந்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் சம்பந்தமான அறிக்கையை இந்த நிறுவனங்கள் ஏற்கனவே, ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளன. ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இரண்டு பேர் இது தொடர்பாக இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெனிவா மனித உரிமை பேரவையின் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மார்ச் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

03 ஜனவரி 2013

கொழும்பு திரும்புமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு கோத்தா உத்தரவு!

சிறிலங்காவின் தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மக்கள் எழுச்சி கொள்ளச் சாத்தியம் இருப்பதால், அதை அடக்குவதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ்வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான பிரதித்தூதுவராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவினால், இம்மாதம் 4ம் நாள் தொடக்கம் 20ம் நாள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தனக்கு மிகவும் நம்பிக்கையான அதிகாரி என்ற வகையில், இந்தப் பணியை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்க பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கொழும்புக்கு பயணமாவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
2010 அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சினமன்கிரான்ட் விடுதியில் சரத் பொன்சேகாவை தடுத்து வைத்திருந்த போது, ராஜபக்ச அரசாங்கத்துக்காக எல்லாவிதமான அழுக்குப் பணிகளையும் ஆற்றியவர் இவர்.
வரும் 8ம் நாள் அதே பணி மீண்டும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ‘லங்கா நியூஸ்வெப்‘ செய்தி வெளியிட்டுள்ளது.

பல்கலை மாணவர் கைது கவலையளிக்கின்றது!

யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் மாணவர்களது கைதானது கவலையளிப்பதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஓ. எல். ஆர் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற 2012ஆம் ஆண்டிற்கான கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வில் ஆசியுரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும் கலந்துகொண்டார். இங்கு யாழ். ஆயர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதனையடுத்து தற்போது கல்வி சார் சகல செயற்பாடுகளையும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமை மாணவர்களின் கல்வியினை மேலும் பாதிப்பதாக அமையும். இந்த நிலைமை மேலும் நீடிக்காமல் சம்பந்தப்பட்ட சகலரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.

பிரதம நீதியரசரை தண்டிக்கும் சட்ட அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை!

பிரதம நீதியரசரை குற்றவாளி என அறிவித்து அவரை தண்டிக்கும் சட்ட ஆணை, அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு சட்ட அதிகாரம் கொண்டதல்ல என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ள வியாக்கியானத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் தாக்கல் செய்த ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான ஸ்ரீஸ்கந்தராஜா, அனில் குணரத்ன, டபிள்யு.சலாம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது உயர் நீதிமன்றின் வியாக்கியானம் வெளியிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு விசாரிக்கப்படுகின்றமை நீதிபதியின் உரிமை மற்றும் நீதிமன்ற கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை சட்ட அதிகாரம் உள்ள நிறுவனமே விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற வியாக்கியானத்தில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழு அரசியல் அமைப்பின் 107 (1) சரத்தின் கீழும் 78 (ஏ) என்ற பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழும் அமைக்கப்பட்ட ஒன்று என்பதால் அதற்கு நீதிமன்ற அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றின் மூலம் பாராளுமன்ற தெரிவுக்குழு இரத்து செய்யப்படும் என்ற அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

02 ஜனவரி 2013

ஈழப்போர் படுகொலை ஆவணம் அனைத்து மொழிகளிலும் வெளியீடு - வைகோ

ஈழப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருகிறோம்.
வருகிற 5ஆம் திகதி மராத்தி மொழியில் வெளியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதில் ராம்ஜெத்மலானி கலந்து கொள்கிறார். அடுத்து பஞ்சாபி, காஷ்மீரி மொழியிலும் வெளியிடுகிறோம்.
தமிழகத்தை இப்போது மிகவும் அச்சுறுத்திக் கொண்டு இருப்பது மது. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, ஸ்ரீவைகுண்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது.
இவை அனைத்திற்கும் மதுதான் காரணம். எனவே பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். இதற்காக ம.தி.மு.க. போராடி வருகிறது.
நான் நடத்திய நடைபயணத்தில் மதுவுக்கு எதிராக மக்கள் குறிப்பாக பெண்கள் குமுறிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது. எனவே பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் தலையீடு இன்றி தீர்வு இல்லை: சுரேஷ் பிரேமசந்திரன்

சர்வதேச சமூகத்தால் மட்டுமே ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர முடியும். அதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்,
சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிரும் ஆற்றல் இன்மையையும் விருப்பமின்மையையும் அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே சர்வதேச மத்தியஸ்தம் இன்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது முடியாத காரியமாகும்.
சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்வதில் அரசாங்கம் உண்மையான அக்கறையுடன் இருக்குமாயின் அரசாங்கம் 18 ஆவது திருத்தத்தையோ அல்லது திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தையோ கொண்டுவந்திருக்காது என்றார்.
அரசியல் தீர்வை உருவாக்குவதற்காக அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குபற்றுமா? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பிரதம நீதியரசருக்கு நடந்ததை பார்த்ததன் பின்னர் பகுத்தறிவுள்ள எவரும் இவ்வாறான செயன்முறைகளை நம்பமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

01 ஜனவரி 2013

விடுதலைப் போராளியை விபச்சாரியாக்கிய அருளினியனைத் தேடுகிறது விகடன்!

“.........அந்தப் பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்துவிட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.....” இவை ஆனந்த விகடன் சஞ்சிகையில் அதன் ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்த வரிகள். குறித்த வரிகள் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவர் மனதில் இருந்தும் மறக்க முடியாதவை. வித்தயா ராணி என்ற ஈழத்து பெண் போராளி ஒருவர் தொடர்பில் வெளியாகிய பதிவினை அடுத்து எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து ஆனந்தவிகடன் ஆசிரியர் எழுதிய பதிவின் சில வரிகள் அவை.
அந்த வரிகள் எழுவதற்கு ஆனந்தவிகடனுக்கு எழுந்த தேவை என்ன? அவர்கள் எழுதியதும் அவர்கள் எழுவதற்கு காரணமாக அமைந்த முன்னாள் பெண் போராளி தொடர்பில் வெளியாகியிருந்த நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களும் உண்மையானவையா? என்பதற்கான ஆதாரங்களை மீண்டும் தேடியது தமிழ்லீடர். தமிழ்லீடரின் தேடலின் விளைவாய்.. ஆனந்தவிகடன் ஒரு பொய்யை நியாயப்படுத்த இன்னும் பொய் சொல்லப் புறப்பட்டிருக்கின்றமை தெரியவந்திருக்கின்றது.
முன்னாள் பெண் போராளி தொடர்பிலான நேர்காணல் பதிவினை மேற்கொண்டிருந்த அருளினியன் தொடர்பிலான பல்வேறு விடயங்களை தமிழ்லீடர் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. எமக்கு கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் அருளினியன் என்கின்ற நபர் விகடனுடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்திருப்பதாக தெரியவருகின்றது.
மாணவ நிருபர் பகுதி ஊடாக ஆனந்தவிகடனில் சின்ன சின்ன விடயங்களை எழுதி வந்த அருளினியன் ஒரு கட்டத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தொடர்பிலான நேர்காணல் ஒன்று தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். இதனை அடுத்து ஈழப்பிரச்சினைகள் குறித்த விகடன் பத்திகளுக்கு பொறுப்பான ஊடகர் அந்த விடயத்தினை பிரசுரிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டதுடன், அதற்கான ஆதாரத்தினை அருளினியனிடம் கேட்டிருக்கின்றார். இதனிடையே இவர்களுக்கான தொடர்புகள் மின்னஞ்சல் ஊடாகவே பரிமாறப்பட்டிருக்கின்றன. மின்னஞ்சல் ஊடாக ஆதார ஒலிப்பதிவினை அனுப்ப முடியாது என்று ஆனந்தவிகடன் நிர்வாகத்தினை நம்பவைத்திருக்கிறார் அருளினியன்.
குறித்த நேர்காணல் வெளியாகியதும் எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து அருளியனைத் தொடர்புகொள்வதற்கு முயன்ற நிர்வாகம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. விடகன் தொடர்புகொள்ளக்கூடிய அனைத்து வழிகளையும் மூடியிருக்கிறார் அவர். இதனை அடுத்து அதிர்ந்து போன ஆனந்தவிகடன்.. உடனடியாகவே தமது உயர் பீடத்தினைக் கூட்டி என்ன செய்வது என ஆராய்ந்திருக்கிறது.
தமது சஞ்சிகையில் வெளியாகிய பதிவு தவறானது என்பது வெளித் தெரியவந்தால், வாசகர்களின் வெறுப்பினைச் சம்பாதிக்க நேரிடலாம் என்றும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கும் ஆனந்தவிகடன் முற்பட்டிருக்கின்றது. அதன் தொடராகவே குறித்த பதிவினை நியாயப்படுத்தும் வகையில் ஆசிரியர் கருத்து என்ற பெயரில் செய்த தவறினை நியாயப்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாது விமர்சனம் முன்வைத்தவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஒரு பதிவினை வெளியிட்டு விட்டார்கள். அது மட்டுமல்லாமல் அடுத்த வெளியீடுகளில் ஈழத்தமிழர் விவகாரத்தினையும் இலங்கை விவகாரத்தினையும் முக்கியத்துவப்படுத்தி பதிவுகளை வெளியிட்டது மட்டுமல்லாமல் “புலித்தடம் தேடி...”புறப்பட்டது.. விகடன் குழு. (மகா. தமிழ் பிரபாகரன் இலங்கைக்கான பயணம் மேற்கொண்டு பயணக் கட்டுரை ஒன்றை ஜூனியர் விகடனில் எழுத ஆரம்பித்திருக்கின்றார் குறித்த கட்டுரைக்கான தலைப்பு “புலித்தடம் தேடி...”)
2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்று மூன்று ஆண்டுகளான பின்னர் திடீரென்று “புலித்தடம் தேடி..” விகடன் குழுமம் புறப்பட்டதன் பின்னணி என்ன? என்பது தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். விகடன் நீண்ட ஊடகப் பாரம்பரியத்தினைக் கொண்டது என்றாலும் முன்னாள் பெண் போராளி விடயத்தில் நடந்துகொண்ட சின்னத்தனமான செயற்பாட்டினால் அது தனது வரலாற்றுப் புத்தகத்தில் அழிக்கமுடியாத வடுவினை பதித்துவிட்டிருக்கின்றது என்பதே உண்மையானது.
தவறு நடைபெற்றிருக்கின்றது, உண்மைக்கு புறம்பான விடயம் வெளியாகியிருக்கின்றது என்பதை அறிந்த பின்னரும் அதற்காக வருத்தம் தெரிவிக்கவோ, அதற்காக பகிரங்க மன்னிப்புக்கோரவோ முற்படாத விகடன், தான் வெளியிட்ட ஆசிரியர் குறிப்பில் செருக்குத்தனமான எழுத்து நடை வெளிப்பட்டிருந்தமையை தமிழ் உணர்வாளர்கள் எவரும் என்றும் மறக்கப்போவதில்லை.
நன்றி:தமிழ் லீடர் 

தமிழ் பெண்களை காக்குமாறு மிசேல் ஒபாமாவிடம் கோரிக்கை!

இலங்கையில் தமிழ் பெண்கள் மீது சிங்கள இராணுவத்தினர் நடத்திவரும் பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாமாவுக்கு அந்த அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இலங்கைப் போரில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவர்களை இழந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடி வருவதாகவும், அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய பெண்களை குறிவைத்து இலங்கை இராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாகவும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

31 டிசம்பர் 2012

அடேல் பாலசிங்கம் யுத்தக் குற்றவாளி என்கிறது சிறீலங்கா!

வன்னி 
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அடல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
10 வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவர் போராளிகளின் கழுத்தில் அடல் பாலசிங்கம் சயனைட் வில்லைகளை மாட்டி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளுமாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேல் நாட்டு பெண் மற்றும் தாதி ஒருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக் கணக்கான இளம் சிறுமிகள் உயிரிழக்கக் காரணமாக யுத்தப் பயிற்சிகளை வழங்கிய அடல் பாலசிங்கம் பிரித்தானியாவின் சர்ரே பிரதேசத்தில் வாழ்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமானத்திற்கு எதிரான யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட பெண் ஒருவர் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அடல் பாலசிங்கத்திற்கு எதிராக பிரித்தானியா எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள பிரித்தானியாவில், புலிகளின் சர்வதேச தலைமைச் செயலகம் அமைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எவ்வாறு பகிரங்க ஆர்ப்பாட்டம் நடத்த முடியும், அரசியல் தலைவர்களுக்கு எதிராக எவ்வாறு போராட்டம் நடத்த முடியும் என பாதுகாப்பு அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளது.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி திரட்டுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போத அடல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏவுக்கு குட்டைப் பாவாடை பரிசு!

பள்ளிக்கு செல்லும் பெண்குழந்தைகள் ஸ்கர்ட் எனப்படும் குட்டைபாவாடை அணியக்கூடாது என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபகாலமாக அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுபடுத்துவது குறித்து பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில், அவற்றில் பல கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. இதில் புதிதாக சேர்ந்திருப்பது ஜெய்பூரிலுள்ள அல்வார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பல்வாரி லால் சிங்ஹாலின் கருத்து.
தலைமை செயலாளருக்கு பல்வாரி எழுதிய கடிதத்தில், பள்ளி செல்லும் மாணவியருக்கு குட்டை பாவாடைகளுக்கு பதிலாக சல்வார் கமீஸ் அல்லது பாண்ட் சட்டை ஆகிய உடைகளை சீருடைகளாக வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்.
குட்டை பாவாடை அணிந்த மாணவிகள் சாலையில் செல்லும்போது பல விதமான கிண்டல் கேலிக்கு ஆளாகிறார்கள் எனவும், இந்த சீருடை மாற்றம் அவர்களை கடும் குளிரில் இருந்தும் பாதுகாக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
இக்கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்பினர், பல்வாரி லால் சிங்காலின் இல்லத்தை முற்றுகையிட்டு அவருக்கெதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் முடிவில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தமைக்காக போராட்டகாரர்கள் பல்வாரிக்கு ஒரு குட்டை பாவாடையை பரிசாக அளித்தது குறிப்பிடதக்கது.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வு மற்றும் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு முறைமை தொடர்பில் உடன்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சுயாதீனமாக பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் எவ்வாறு நம்பிக்கைக் கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு எவ்வாறு அதிகாரங்களை பகிர்வது என்பது தொடர்பான யோசனைத் திட்டத்தை தமது கட்சி ஏற்கனவே அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

30 டிசம்பர் 2012

ஈழத் தமிழரைப் பாதுகாக்க களத்தில் இறங்குவோம்: மலேசிய மாநாட்டில் அழைப்பு

இலங்கையில் தமிழர்களுக்கு இனியும் அவலம் ஏற்படக்கூடாது. எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினரைப் பாதுகாக்க முழு மூச்சுடன் நாம் களத்தில் இறங்க வேண்டும் என மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் இன்பவர் இப்ராஹிம் தெரிவித்திருக்கின்றார். மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மலேசியாவில், பெட்டாலிங் தோட்ட மாளிகையில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு அன்வர் இப்ராஹிம் உரையாற்றினார். இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என இந்த மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.
"இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியானமை வன்முறையான ஆட்சியை வெளிப்படுத்துகின்றது" எனக் குறிப்பிட்ட அன்னவர் இப்ராஹிம், "பொஸ்னியா மற்றும் பலஸ்தீன மக்களின் துயரங்களைக் காட்டிலும், இலங்கைத் தமிழர்களின் துயரம் கொடியது" எனச்சுட்டிக்காட்டினார்.
சொந்த மக்களையே அழித்தொழிப்பது எந்த நாட்டிரலும் இருக்கக்கூடாது. இனியும் இப்படி ஒரு அவலம் தமிழர்களுக்கு ஏற்படக்கூடாது. எமது எதிர்கால தமிழினச் சந்ததியினரைப் பாதுகாக்க இன்றே நாம் முழுமூச்சாகக் களமிறங்க வேண்டும் எனவும் இப்ராஹிம் அழைப்பு விடுத்தார்.

அரசாங்கத்தை எமது வழிக்கு கொண்டுவர வேண்டும் - ஹக்கீம்

இந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடத்தப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற மாட்டாது. ஆனால் எமது எட்டு எம்.பி.க்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் இந்த அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரலாம் என்று அக்கட்சியின் தலைவரான நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இப்போது கிழக்கு முதலமைச்சர் எமது கட்சியைப் புறக்கணித்து நடக்கிறார். ஆனால் இன்னும் இரு வருடங்களில் அந்த முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24வது பேராளர் மாநாடு, தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (29) நடைபெற்ற போது அதன் இரண்டாவது அமர்வின் இறுதியில் பிரதான உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீமின் உரையின் பெரும் பகுதி பேராளர்கள் சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதாக அமைந்திருந்தது.
அங்கு உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது;
"கட்சி எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு மத்தியில் புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே ஓர் அக்கினிப் பரீட்சை நடைபெற போகின்றது, அந்த அக்கினிப் பரீட்சைக்கு எப்படி முகம் கொடுப்பது என்பது குறித்து உயர்பீடம் தீர்மானிக்கும்.
இன்று பல பிரேரணைகளை நாம் நிறைவேற்றி இருக்கிறோம், அந்த பிரேரணைக்கமைய பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகிய நாம் எட்டுப் பேரும் அந்த அக்கினிப் பரீட்சையை எதிர் கொள்ள இருக்கிறோம். என்ன சட்டமூலமாக இருந்தாலும் கட்சியின் கொள்கை,கோட்பாட்டுக்கமைய அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருகிறோம். ஏற்கனவே மாகாண சபையில் அந்த அனுபவம் ஏற்பட்டது.
இதனை கட்சியின் போராளிகள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே புதிய அதியுயர் பீடத்துக்கு இருக்கின்ற முதலாவது பணி அக்கினிப் பரீட்சையை எதிர் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதாகும். அந்த தீர்மானத்தை பொறுத்தவரை பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக எமது உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உறுதியானது.
முஸ்லிம் காங்கிரசை தாம் விரும்பிய திக்கில் இழுத்துக் கொண்டு போகலாம் என சில பத்திரிகைகள் நினைக்கின்றன. அவர்களது தேவைகளுக்கமைவாக எமது கட்சி செல்ல முடியாது. நாம் பிரயோக அரசியலைச் செய்கிறோம். ஆனால் கட்சியின் அடிப்படையை தாரைவார்க்க முடியாத ஒரு முக்கியமான சவாலை நாம் முதலில் எதிர் நோக்கியிருக்கிறோம், எனவேதான் இந்த பேராளர் மாநாடும், இதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
அரசாங்கத்தோடு நாம் சில முக்கிய விடயங்களை கதைத்திருக்கிறோம், அரச மேல் மட்ட அமைச்சர்கள் சில உத்தரவாதங்களை தந்திருக்கிறார்கள். அவ்வாறான உத்தரவாதத்தை தந்த அமைச்சர் ஒருவரே அடுத்த சில நாட்களில் எங்கள் வாக்குகளை பாராளுமன்றத்தில் எதிர்பார்த்து இருக்கிறார், நாங்கள் ஒன்றாக இருந்து ஒற்றுமையாக செயல்படுவது எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்க்கு முக்கியமானது.
நாங்கள் தனித்துவமான அரசியல் செய்கின்ற இயக்கத்தினர் என்ற காரணத்தினால் பழிவாங்கப்படுகிறோம். நாங்கள் இரண்டறக் கலந்து சங்கமமாகாத கட்சியின்ர் என்ற காரணத்தினால் ஓரக்கண்ணால் பார்க்கப்படுகிறோம்.
எங்களது போராளிகள் நாளும் பொழுதும் இதற்க்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள், பட்டதாரிகள் நியமனம் போன்றவற்றில் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நம்பிக்கைக்குரியவர் என்ற கருத்து எங்கள் மத்தியில் இருந்தாலும் கூட, இங்கு சிலர் கூறியவற்றை கேட்கும் பொழுது அவரைப் பற்றி மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது, எங்களுக்கு குறிப்பாக எங்களது கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு அவர் நண்பராக இருக்கிறார் என்பது வேறு விசயம். ஆனால் என்னவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் அமைச்சராக இருக்க முடியும். இதனை நான் மிகவும் உறுதியாகவும் அறுதியாகவும் கூறுகின்றேன்.
நாங்கள் அரசாங்கத்தை விட்டு விட்டு போக மாட்டோம், அதற்கான ஆணையை மக்கள் எங்களுக்குத் தரவில்லை ஆனால் எங்களது சுய கெளரவத்தையும் கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.
அடுத்த மாதம் பிரதம நீதியரசருக்கு நிறைவேற்றப்படுகின்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மற்றும் சட்ட திட்டங்களுக்கு கட்சி ஆதரிப்பதா இல்லையா என்று அடுத்த உயர் பீட கூட்டத்தின் போது 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு செயற்படுவது எனத் தீர்மானம் எடுக்கப்படும்.
கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கு இன்னும் 2 வருடங்கள் பொறுத்திருங்கள். அந்த முதலமைச்சரால் குச்சவெலி பிரதேசத்தின் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களை ஒன்றும் செய்ய முடியாது. முதலமைச்சர் ஆசனத்தில் அவரை அமர்த்தும்போது அவர் முஸ்லீம் காங்கரிஸ் காரர்களை பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமர்த்தவில்லை. அவர் எம்மோடு சேர்ந்து செயலாற்றுவார் என்றுதான் என்ணியிருந்தோம். ஆனால் அவர் எமக்கு மாறு செய்கிறார். ஆகவே இன்னும் இரு வருடங்கள் நாம் பொறுமையுடன் இருப்போம்" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் எம்.பி. செயலாளர்நாயகம் எம்.ரி.ஹசன் அலி எம்.பி. பொருளாளர் எம்.எஸ்.எம்.அஸ்லம் எம்.பி. மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களும், உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்களும், பேராளர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

29 டிசம்பர் 2012

மாணவி மரணம் எதிரொலி டில்லியில் பதற்றம்!

பாலியல் கொடுமைக்குள்ளான மாணவி சிங்கப்பூரில் மரணமடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் இந்தியா கேட் செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி உயிரிழந்தார். இதனால் டெல்லியில் போராட்டம் தீவிரமடையக் கூடும் என்று கருதி சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராஜபாதை, இந்தியா கேட் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியா கேட்டை சுற்றிய 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜந்தர் மந்திர் மற்றும் ராம்லீலா மைதானத்தில் அமைதிவழியிலான போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே மாணவியின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் தமது இரங்கல் செய்தியில், தமது வாழ்வைக் காப்பாற்ற இறுதிவரை துணிச்சலுடன் போராடிய அந்த மாணவியை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாணவி இந்திய இளைஞர்களின் துணிச்சலின் அடையாளமாக திகழ்வார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.இந் நிலையில் மரணமடைந்த மாணவிக்கு டெல்லியில் பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அமைதியாக அமர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பள்ளிச் சிறுமிகளும் கலந்து கொண்டனர்.

தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரனுக்கு நல்லூரில் வைத்து அசிட் வீச்சு!

2008-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று கொழும்பில் கோயிலுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன் எம்.பியின் சகோதரர் துவாரகேஸ்வரன் தனக்குள்ள அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடுகள் ஏற்கனவே செய்திருக்கிறார். முன்னாள் யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரராகிய தியாகராஜா துவாரகேஸ்வரன் மீது சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் வைத்து அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இவர், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தனது மகனின் பிறந்தநாளையொட்டி, நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளைச் செய்துவிட்டு தனது வாகனத்தில் ஓட்டுனர் இருக்கையில் ஏற முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் தன்மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், வீசப்பட்ட அசிட் தனது கழுத்து மற்றும் முதுகுபுறத்தில் பட்டு தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
தாக்குதல் நடத்தியவர்களை தெளிவாக அடையாளம் கண்டிருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார். பாதுகாப்புச் செயலரிடம் ஏற்கனவே முறைப்பாடு தனிப்பட்ட ஒரு பிரச்சினை காரணமாகவே தம்மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார். தமக்கு இராணுவத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருப்பது தொடர்பில் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக செய்துள்ள முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் நடைபெற்றுவரும் வேளையிலேயே தம்மை அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக துவாரகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
தான் இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் எதிரானவர் அல்ல என்றும், எனினும் இராணுவத்தில் இருப்பவர்கள் இராணுவத்திற்குக் கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக இராணுவ தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அசிட் தாக்குதலுக்கு உள்ளாகிய துவாரகேஸ்வரன் தற்போது யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருப்பதுடன் அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அசிட் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் துவாரகேஸ்வரனின் சகோதரனும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராஜா மகேஸ்வரன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப் பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்திருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் அக்காலப் பகுதியில் இடம்பெற்றுவந்த பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்தும் அவர் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

28 டிசம்பர் 2012

அரசும் எதிரணியும் பகிரங்க தொலைக்காட்சி விவாதம்!

விமல் வீரவன்ச 
ஆளும் தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் புதுவருடத்தில் பகிரங்க விவாதம் ஒன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுக்கின்றது.
தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருக்கின்றது.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு இடையிலேயே இந்த விவாதம் நடைபெறவிருக்கின்றது.
பகிரங்க விவாதம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் ஆயரை விசாரணைக்குட்படுத்திய சிங்கள புலனாய்வாளர்கள்!

மன்னார் ஆயர் 
மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் ஆண்டகை சிறீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கன் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து அகதிகள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் அவரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.நாடு கடத்தப்படும் தமிழர்கள் இலங்கையில் பல நெருக்கடிகளுக்கு ஆளாவதாக ஆயர் அவுஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 டிசம்பர் 2012

பிரணாப்பின் மகன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதால் பெரும் சர்ச்சை!

அபிஜித் முகர்ஜி 
டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்காக போராடி வரும் பெண்கள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். கொல்க்ததாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அபிஜித், பெண் போராட்டக்காரர்கள் டிஸ்கோ கிளப்புகளுக்குப் போய் ஆடுகிறார்கள், அழகாகவும் இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லியில் தற்போது நடந்து வருவதை எகிப்தில் நடந்த போராட்டங்களுடனோ அல்லது உலகின் வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களுடனோ நிச்சயம் ஒப்பிட முடியாது. அது புரட்சி, இது வெறும் போராட்டம். மெழுகுவர்த்தி ஏந்தியபடி போராடட்ம் நடத்துவது, டிஸ்கோ கிளப்புகளுக்குப் போவது - இதையெல்லாம் நாம் மாணவர் பருவத்திலேயே செய்துள்ளோம். ஒவ்வொரு மாணவரும் இதில் ஈடுபட்டிருப்பார்கள். அதையெல்லாம் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது டெல்லியில் பல அழகான இளம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். டிவிகளுக்குப் பேட்டி தருகிறார்கள். கூடவே குழந்தைகளையும் கூட்டி வருகிறார்கள். இவர்கள் மாணவியரா அல்லது வயதான பெண்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என்றார் அவர். பிரணாப் முகர்ஜியின் மகன் இவ்வாறு பேசியுள்ளது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ்மக்களுக்கு சரியான தீர்வில்லையேல் மீண்டும் விடுதலைப்புலிகள் - பிரான்ஸிஸ் ஹரிசன் எச்சரிக்கை!

இறுதி யுத்தத்தில் 1 லட்சத்து 06 ஆயிரம் பேரை காணவில்லை - பீபீசி ஊடகவியலாளர் அதிர்ச்சி தகவல்சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் தொடர்பில் சரியான தீர்வை முன்வைக்கத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார் பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிசன்.
“தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
துப்பாக்கிகள் மௌனமாகி விட்ட போதிலும், அச்சம், அவமானம், பெளதீக ரீதியான பாதுகாப்பின்மை, சட்ட ஆட்சியின் குறைபாடு, இராணுவ மயமாக்கல், வடக்கில் சிங்கள மாயமாக்கல், சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் பகிரப்படாத நிலை போன்ற காரியங்களே அங்கு காணப்படுகிறன.
விடுதலைப் புலிகள் குறைந்தபட்சம் சிறிலங்கா இராணுவ பலத்துக்கு ஈடு செய்யும் நிலையிலேனும் இருந்தார்கள் என்று தமிழர்கள் பலர் சொல்கின்றனர். இப்போது எல்லா அதிகாரங்களும் ஒரே பக்கத்தில் உள்ளது.
விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் கூட, சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு அவர்களின் உரிமைகளைக் கொடுக்க தயாராக இல்லை.
இந்த நிலைமையை கவனமாக கையாளத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின் பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக அரசே மாறும் நிலை ஏற்படும்.
மக்களின் நினைவு கூரும் உரிமை அல்லது தமது கலாசாரத்தை பாதுகாக்கும் உரிமை, மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுமானால், அது ஏற்கனவே வலுவாக உள்ள உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.
விரைவிலேயே அது "பழிவாங்கும் நெருப்பாக எரியும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஈரான் - தமிழ் அகதிகள் இடையே மோதல்!

பபுவா நியுகினியின் மனுஸ் தீவில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்பட்ட கைகலப்பில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனுஸ் தீவு அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கும் ஈரான் அகதிகளுக்கும் இடையில் இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் உறுதி செய்துள்ளார்.
இணைய அறையில் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஈரான் அகதிகள் விடுத்த அழைப்பை தமிழ் அகதிகள் மறுக்கவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
அகதி முகாமில் சேவையில் இருந்த G4S என்ற நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் மோதலில் காயமடைந்துள்ளார்.
மோதல் குறித்து மனுஸ் தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனுஸ் தீவில் 30 சிறுவர்கள், பெண்கள் உட்பட இலங்கை, ஈரான், ஆப்கான், ஈராக், பாகிஸ்தான் அகதிகள் 130 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 டிசம்பர் 2012

முஸ்லீம்களும் ஆயுதம் ஏந்த வேண்டுமா?முஸ்லீம் தமிழ் தேசிய முன்னணி கேள்வி

முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது -பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பியுள்ள முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
சிறிய பிரச்சினை எனக் கூறி அரசு இவற்றைத் தட்டிக்கழித்தால் அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாக அமையும் என முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்துவருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்பிலிப்பிட்டியவில் சிங்களக் குழுவினரால் முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய சந்தையில் இரண்டு முஸ்லிம் கடைகள் இருக்கின்றன. இந்த இரு கடைகளிலுள்ள வர்த்தகர்கள் சிங்களக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். ஏன் சிங்களக் குழுவினரால் அவர்கள் தாக்கப்பட்டனர்? எதற்காகத் தாக்கப்பட்டனர்?
'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பும், ஏனைள சிங்கள இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா எனத் தெரியவில்லை.
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்குகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பிமார்களும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் சென்று முறையிடுகின்றனர். அவரிடம் முறையிட்டு என்ன பயன்?
முஸ்லிம் பள்ளிவாசல் உடைப்பு, முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் ஹலால் உணவுகள் தடைசெய்யப்படவேண்டும் என சிங்கள இனவாதிகள் மேற்கொள்ளும் அராஜக செயல்கள் அனைத்தும் சிறிய செயல்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்.
எமது சமயத்துடனும், மக்களது வாழ்வுடனும் விளையாடுவது சிறிய செயலா? இதுபோன்ற சிறிய செயல்களின் எதிர்விளைவுகள் நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும். எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் இனிமேலும் தொடரக்கூடாது.
அதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அடக்குமுறைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படவேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதனூடாக முஸ்லிம்களும் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டுமென்றா அது எதிர்பார்க்கிறது? வேண்டாம். எம்மை ஒருபோதும் அந்த நிலைக்குத் தள்ளிவிடவேண்டாம் என அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வாய்ப்பு மஹிந்த ராஜபக்ஷவின் அழுக்கான உருவத்தை கழுவிக்கொள்ளவே உதவும்!

கிரிக்கெட் வாய்ப்பு மஹிந்த ராஜபக்ஷவின் அழுக்கான உருவத்தை கழுவிக்கொள்ளவே உதவும்!இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் மேல்போனில் பங்கேற்கும் இரண்டாவது கிரிக்கெட் ரெஸ்ட் போட்டியின் போது இலங்கை தமிழர்கள் மைதானத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக விளையாட்டு அரங்கில் இருந்து இலங்கையை அகற்ற வேண்டும்.சிம்பாவே விடயத்தில் நடந்துக்கொண்டதை போன்று இலங்கை விடயத்திலும் அவுஸ்திரேலியா தமது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரினர்.
கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இலங்கைக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதனால்,இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,தமது அழுக்கான உருவத்தை கழுவிக்கொள்ளவே உதவும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டில், சிம்பாவேக்கு கிரிக்கட் சுற்றுலாவை புறக்கணித்த அவுஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமர் ஜோன் ஹவாட், அவுஸ்திரேலிய அணி, சிம்பாவே செல்லுமானால், அது ஜனாதிபதி ரொபட் முகாபேயின் சர்வதிகாரத்துக்கு ஒட்சிசன் வழங்கும் செயலாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டிருந்ததாக ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர் ட்ராவோர் கிரான்ட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் இராணுவ அடக்குமுறை ஆட்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் இதனை உறுதிசெய்து சுயாதீன விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் கிரிக்கெட் அணியை புறக்கணிப்பதில் எவ்வித தவறும் இல்லை. அத்துடன் வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை கிரிக்கெட் அணி, அரசியலுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறது என்று கிரான்ட் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் போர்குற்றங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ சுயாதீன விசாரணைகளுக்கு இணங்கும் வரை இலங்கையுடன் விளையாட்டு தொடர்புகளை அவுஸ்திரேலிய பேணக்கூடாது என்றும் கிரான்ட் தெரிவித்துள்ளார்.
ட்ராவோர் கிரான்ட்,முன்னாள் கிரிக்கெட் வீரரும் த ஏஜ் செய்தித்தாளின் எழுத்தாளரும் ஆவார்.

25 டிசம்பர் 2012

தமிழர்களின் அவலநிலை ஐநாவில் முன்னிலைப்படுத்தப்படும்!

இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் அரசாங்கமானது சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இத்தகைய போக்கு தொடருமானால் சர்வதேச ரீதியில் இலங்கை அந்நியப்படுத்தப்படும் சூழல் ஏற்படுவது நிச்சயமாகும்.
தமிழர்களின் அவலநிலை குறித்து மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விடயத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்ட விதம் குறித்து தற்போது சகலருமே அறிந்துள்ளனர்.
பிரதம நீதியரசருக்கே தெரிவுக்குழுவில் அநீதி இழைக்கப்படுகின்றதென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்றால் என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நியாயத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதுகின்றது. சர்வதேசத்துக்கு காட்டுவதற்காக இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதாக அரசாங்கம் கூறி வருகின்றது.
வடமாகாணத்தில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். ஆனால் அங்கு 15,100 இராணுவத்தினரே நிலைகொண்டுள்ளதாக இராணுவ கட்டளைத் தளபதி கூறுகின்றார். இராணுவப் பிரசன்னம் வடக்கில் அதிகரித்துள்ளதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களும், காணி அபகரிப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனிதஉரிமைகள் பேரவை கூட்டத்தில் ஏற்படவுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இனப்பிரச்சினை விவகாரமாகட்டும் நாட்டின் நீதித்துறையுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு ஆகட்டும் அரசாங்கத்துக்கு சாதகமான வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதையே நாட்டின் தலைமை விரும்புகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் மற்றும் அதற்கெதிராக போராடுபவர்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அத்தகைய செயற்பாடுகளை ஜீரணிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. பிரதம நீதியரசர் விவகாரத்தை எடுத்துக்கொண்டால் திவிநெகும சட்டமூலம் தொடர்பில் அவர் வழங்கிய நீதியான தீர்ப்பே அவருக்கெதிராக குற்றவியல் பிரேரணையினை கொண்டு வருவதற்கு வழி சமைத்திருந்தது. பிரதம நீதியரசர் சட்டத்துக்கு அமையவே செயற்பட்டார்.
பிரதம நீதியரசரை விசாரணைக்குட்படுத்திய தெரிவுக்குழு செயற்பட்ட விதத்தை இன்று அனைவருமே அறிவார்கள். பிரதம நீதியரசருக்கே இத்தகைய அநீதி இழைக்கப்படும் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் எத்தகைய நிலை ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரைகுறையாகவும் அற்பசொற்ப அதிகாரங்களுடனும் காணப்படும் 13வது திருத்தச் சட்டத்தையும் இல்லாதொழிக்க முயலும் அரசாங்கத்தை எவ்வாறு நம்ப முடியும். சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுவதற்காகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் அரசாங்கமானது சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இத்தகைய போக்கு தொடருமானால் சர்வதேச ரீதியில் இலங்கை அந்நியப்படுத்தப்படும் சூழல் ஏற்படுவது நிச்சயமாகும்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனிதஉரிமைகள் பேரவை மாநாட்டிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிலும் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் உண்மை முகம் குறித்து நாம் பல வழிகளிலும் எடுத்துக் கூறுவதற்கு முயல்வோம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் கூட இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. இத்தகைய நிலை தொடர்ந்தால் அரசாங்கம் தனிமைப்படுத்தப்படும் என்பது மட்டும் உண்மையாகும்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 7ம் ஆண்டு நினைவுநாள்!

மட்டக்களப்பில் தேவாலயத்தில் தனது பாரியாருடன் நத்தார் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை  தேசத்துரோகிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 07வது ஆண்டு நிறைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை 03 மணியளவில் நல்லையா வீதியில் இருக்கும் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு தொகுதி தமிழரசுக்கட்சியின் கிளையினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி கிளைத்தலைவர் பரமானந்தம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

24 டிசம்பர் 2012

வேட்டை நாய்களின் தலையை துண்டிக்கும் நிலை மகிந்தவிற்கு ஏற்படும்!

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதைய நிர்வாகமானது, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் இறுதிகால ஆட்சிக்கு இணையானது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம், அரசாங்கத்திற்கு வலியை ஏற்படுத்துவோர், சரியானதை செய்வோர் என அனைத்து தரப்பினர் மீதும்  அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதனால் வட பகுதியில் உள்ள இளைஞர்கள் முதல், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வரையான அனைவரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசாங்கத்தின் வேட்டை நாய்கள் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை காரணமாக மன்னனின் கழுத்தில் இருந்த ஈயை விரட்டுவதற்காக, குரங்கு வாளை பயன்படுத்தியதை போன்று ஜனாதிபதிக்கு வேட்டை நாய்களின் தலையை துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத நிலைமையானது முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் இறுதிகால ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட நிலமைக்கு ஈடானது எனவும் ஹேமகுமார நாணயக்கார கூறியுள்ளார்.

காணாமல்போன உறவினர்கள் தொடர்பில் முறையிடக்கூடாது-படையினர் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல்கொடுக்கின்ற அமைப்பொன்றின் தலைவி தெரிவித்தார்.
தம்பலகாமத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இராணுவ வாகனமொன்றில் சென்ற நபர்கள், விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய எவராவது அங்கு வசிக்கிறார்களா என்று தேடிச்சென்றதாகவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி கூறினார்.
மக்கள் தமது காணாமல்போன உறவினர்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைப்புகளிடம் முறையிடக்கூடாது என்றும் படையினர் எச்சரித்துச் சென்றதாகவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தலைவி தெரிவித்தார். ´கப்பம் வாங்கியவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள்´
தமது கணவன்மாரும் பிள்ளைகளும் கடத்தப்பட்டபோது அவர்களை விடுவிப்பதற்காக தம்மிடம் கப்பம் பறித்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த பலரும் எந்தவிதமான பிரச்சனைகளுமின்றி தமது பிரதேசங்களில் நடமாடிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படுவதாகவும் அந்தக் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூறுகின்றன.
2008 முதல் 2009-ம் ஆண்டுக் காலப்பகுதியில் போர் உச்சத்தில் இருந்தபோது, ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டு காணமல்போனவர்களின் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் தமது அமைப்பில் அங்கம் வகிப்பதாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் தலைவி பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தம்பலகாமம் பகுதியில் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி இலங்கை படைத்தரப்பின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.

தினந்தோறும் மும்மூன்று மாணவர்களாக விசாரணை!

நாளாந்தம் சுமார் மூன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணை:யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்  தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாணவிகள் மீதான விசாரணைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மாணவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படும் விடயம், அவர்களது வீடுகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டே இடம்பெறுவதால் இதுவரை எத்தனை மாணவர்கள் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அறியமுடியவில்லை என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் நாளாந்தம் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு மணித்தியாலக் கணக்கில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.
நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.

23 டிசம்பர் 2012

சிங்கள ஆக்கிரமிப்புப் படை முற்றாக வெளியேற்றப்படுவதே ஒரே வழி! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப்போவதில்லை. சிங்களப் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சிங்களப் படைகள் வெளியேறும் வரை இடைக்கால ஏற்பாடாக அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கான அனைத்துலக மட்ட ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலைக்காக வட தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுவூட்டவும் தாயக மக்களுக்கு புலம்பெயர் மக்களின் தோழமையினை வெளிப்படுத்தவும் லண்டனில் பிரித்தானியப் பிரதமர் பணிமனையின் முன்னால் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
காலை 8மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் கோரிக்கையடங்கிய மனுவொன்றும் பிரத்தானிய பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. இக்கவனயீர்ப்பு அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தினை மையப்படுத்தி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிலங்கா படையினரானல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அவர்களை விடுதலை செய்யக் கோரியும் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினரைத் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து முற்றாக வெளியேறக் கோரியும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் குறித்து அமைந்த அறிக்கையின் முழுவிபரம்:
தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களப்படையினர் நிலை கொண்டிருக்கும்வரை தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு எதுவித உத்தரவாதமுமில்லை என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரம் மீண்டுமொருமுறை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலில் சிங்களம் தமிழ் மக்கள் மீது நடாத்திய இனஅழிப்புக்கு உலக அரங்கில் நாம் நீதி கோரி வரும் இக்காலகட்டத்தில் சிங்களத்தின் தமிழர் தேசம்மீதான இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கைதும் விடுவிக்கப்பட்ட போராளிகளின் மீள்கைது நடவடிக்கைகளும் ஈழத் தமிழர் தேசத்தின் மீதான இராணுவ ஒடுக்குமுறையினை சிங்களம் தீவிரப்படுத்துவதை வெளிப்படுத்தி வருகின்றன. முள்ளிவாய்க்காலில் சிங்களம் நிகழ்த்திய இன அழிப்புக்கும் தற்போதய காலகட்டத்து சிங்களத்தின் இனஅழிப்புத் திட்டத்துக்கும் இடையே அணுகுமுறை வேறுபாடு இருக்கிறது. ஆனால் இலங்கைத்தீவில் ஈழத் தமிழர் தேசத்தை இல்லாதொழித்தல் என்பதுதான் இந்த இனஅழிப்புத் திட்டத்தின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது.
முள்ளிவாய்க்காலில் போரைச் சாக்காக வைத்து பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களைக் கொன்று தள்ளிய சிங்களம் இப் படுகொலைகளின் ஊடாக தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்தும் வேட்கையினை இல்லாதொழிக்க முயன்றது. தமக்கென ஒரு தனியரசினை அமைத்துக் கொள்ளும் பெருவிருப்பினை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட முனைந்தது. தமிழர் அடையாள அரசியலை தமிழர் மத்தியில் இல்லாதொழித்து சிங்கள பெரும் சமூக அரசியலுக்குள் தமிழர் அரசியலைக் கரைக்க முனைந்தது. இருந்த போதும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை சிங்களத்தால் ஆட்டம் காணச் செய்யமுடியவில்லை. தற்போது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்றவாறு சிங்களம் மேற்கொள்ளும் இனஅழிப்புத் திட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று, ஈழத் தமிழர் தேசத்தின் தேசத் தகைமையினை அவர்களிடமிருந்து உரித்தெடுத்து அவர்களை உதிரித் தமிழர்கள் ஆக்குவது.
இரண்டாவது இவ்வாறு உதிரிகளாக்கப்பட்ட தமிழர்களைச் சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வைத்து இனக் கபளீகரம் செய்வது. இவை ஈழத் தமிழர் தேசத்தை இலங்கைத்தீவில் இல்லாது அழிக்கும் நோக்கத்தை தன்னகத்தே கொண்டு வடிவமைக்கப்பட்ட இனஅழிப்புத் திட்டங்களாகும். இந்த இனஅழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர் தாயகத்தின் ஜனநாயகவெளியினை முற்றாக இல்லாதொழித்தல் சிங்களத்துக்கு அவசியமாக இருக்கிறது. இந்த அவசியத்தின் பாற்பட்டுத்தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலும் கைதுகளும் இடம்பெறுகின்றது என்றே நாம் கருதுகிறோம். ஒரு சமூகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயகத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் துணிச்சலாக முன்னின்று போராடி வருகின்றமையினை நாம் உலகளாவிய ரீதியில் காண்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கும் இந்த வரலாறு இருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வௌ;வேறு காலகட்டங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகம் தமிழீழ மக்களின் உரிமைக் குரலைப் பிரதிபலித்து நின்று போராடி வந்திருக்கிறது.
ஈழத் தமிழர் தேசத்தின் போராட்டக் குரலின் தார்மீகக் குறியீடாக வெளிப்பட்ட 'பொங்குதமிழ்' எழுச்சியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்திடமிருந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இருந்துதான் எழுந்தது. தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் மீதான சிங்களத்தின் தாக்குதல் தமிழர் தாயகத்தில் ஜனநாயகவெளியினை முற்றாக இல்லாதொழித்து, தமது இனஅழிப்புத் திட்டத்துக்கு எழக்கூடிய எதிர்ப்பை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற முனைப்பை கொண்டதாகத் தெரிகிறது. இதனால் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் சிங்களத்தின் இத்தகைய ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகைளுக்கு எதிராகத் தீவிரமாகப் போராட வேண்டியது அத்தியாவசியமாகும்.
இப் போராட்டம் அடிப்படையில் ஜனநாயகக் கோரிக்கையின் பாற்பட்டதால் சிங்கள மக்கள் உட்பட இவ் ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய உலக சிவில் சமூகத்தின் ஆதரவினையும் பெற்று நாம் போராட்டங்களை முன்னெடுத்தல் அவசியமானதாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் மீதான சிங்களத்தின் தாக்குதலைக் கண்டித்து புலத்தில் தமிழ் மக்களால் நடாத்தப்படும் போராட்டங்கள் தாங்கள் தனித்து விடப்படவில்லை என்ற எண்ணத்தையும் புலத்தின் தோழமை உணர்வையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கும் தாயக மக்களுக்கும் வழங்கும். புலத்தில் இத்தகைய போராட்டங்களை முன்னின்று முன்னெடுக்கும் தமிழ் இளையோர் அமைப்பினை இத் தருணத்தில் பாராட்டுவதுடன் இப் போராட்டங்களுக்கு தனது முழுமையான ஆதரவினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இப் போராட்டங்களை மேலுமொரு மட்டத்தில் விரிவுபடுத்தும் முகமாக சமூக ஊடகங்களின் ஊடாக இப் போராட்டங்களை முன்னெடுக்கும் பல்வேறு வழிமுறைகளையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க இளையோர் அணி மேற்கொண்டு வருகிறது. இதனை தமிழ் இளையோர் அமைப்புடன் இணைந்தவாறு மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் இளையோர் அணி மேற்கோண்டு வருகிறது. தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும்வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப் போவதில்லை. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை. ஓநாய்கள் சூழ நிற்கும் போது ஆடுகள் எவ்வாறு பாதுகாப்பை உணரமுடியும்? இதனால் சிங்களப்படையினர் தமிழர் தாயகப்பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானது. சிங்களப்படைகள் வெளியேறும் வரை இடைக்கால ஏற்பாடாக அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கான அனைத்துலகமட்ட ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 டிசம்பர் 2012

புலிகளை உருவாக்கியது சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளுமே: ஹத்துருசிங்கவுக்கு யாழ். பேராசிரியர் பதிலடி!

தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும், சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டனர். இவ்வாறு கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு நேரில் எடுத்துரைத்தார். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதைத் தொடர்ந்து முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத் தலைவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க பலாலி படைத் தளத்தில் சந்தித்தார். அங்கு உரையாற்றிய மஹிந்த ஹத்துருசிங்க, முப்பது வருட கால அழிவுக்கு புலிகளும் அவர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழர்களும் பல்கலைக்கழக சமூகமுமே காரணம் என்று அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார். இதன் போது குறுக்கிட்டு தெளிவுபடுத்துகையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவாகவே புலிகள் தோன்றினர். இன்று மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது என்றால் அந்த அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதே அதற்குக் காரணம். நீங்கள் கூறுவது போன்று இத்தகைய அழிவுகளுக்கு தனியே புலிகளின் உருவாக்கம் மட்டுமே காரணம் அல்ல. தமிழர்களின் அடிப்படை மூலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்டதாலேயே புலிகள் உருவானார்கள். 1981 ஆம் ஆண்டு நீங்கள் படையில் இணைந்தபோது அப்போது இராணுவத்தின் எண்ணிக்கை வெறும் 12ஆயிரம் மட்டுமே என்று கூறினீர்கள். அந்தக் காலத்தில் புலிகளின் எண்ணிக்கைகூட 20 பேர் வரையில் மட்டுமே. அவ்வாறு சொற்ப எண்ணிக்கையாக இருந்த புலிகளை பெருக வைத்தமைக்கு காரணம் தமிழர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மட்டுமல்ல, தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்ட மூலப் பிரச்சினையும், சிங்கள அரசியல்வாதிகளுமே காரணம்.
இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்துவிடும் நிலையில் இருந்தபோது ஆயுதங்களை வழங்கி புலிகளின் அழிவைத் தடுத்தவர் அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸ தான். இந்த நிலையில் தமிழ் மக்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே புலிகளை வளர்த்தார்கள் என்று சொல்வது என்ன நியாயம்? படையினரால் கைது செய்யப்பட்ட விஞ்ஞானபீட மாணவனை நான் தனிப்பட்ட முறையிலும் என்னுடைய மாணவன் என்ற ரீதியிலும் நன்கறிவேன். குறித்த மாணவன் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவன் என்று நீங்கள் கூறுவதை ஒரு போதும் நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் அவன் அப்படிப்பட்ட மாணவன் அல்லன் என்பது எனக்கு தெரியும். நீங்கள் (அரசும் இராணுவமும்) மூலப் பிரச்சினையைத் தீர்க்காமல் விளைவுக்கு மாத்திரம் அதனைக் காரணம் சொல்லி தீர்வு தேட நினைக்கிறீர்கள். ஆனால் மூலப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அதனால் உண்டாகின்ற விளைவுகள் தொடரவே செய்யும் என்று பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா இடித்துரைத்துள்ளார்.