23 செப்டம்பர் 2010

ஆசிரியை மீது இளைஞன் துப்பாக்கி சூடு – அம்பாறையில் சம்பவம்!

அம்பாறையில் சியம்பலாண்டுவ சிங்கள மகாவித்தியாலய ஆசிரியை ஒருவர்இன்று காலையில் கடமைக்காக பாடசாலை சென்ற போது இளைஞன் ஒருவன் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
அவ் ஆசிரியை மீது குறித்த பாடசாலையின் சிற்றுண்டி சாலையில் வேலை செய்த ஒருவரே துப்பாக்கியால் சுட்டதாகவும் ஆனால் ஆசிரியை காயங்களுடன் தப்பிவிட்டதாக தெரியவருகிறது.
ஆசிரியை மீது துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகதெரியவருகிறது
இந்த சூட்டுச் சம்பவத்தையடுத்து சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று மூடப்பட்டுள்ளது
காதலே இந்த சம்பவத்தின் பின்னனியென ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று அண்மையில் வவுனியா நகரசபை உத்தியோகஸ்தர் ஒருவரும் தன்னைத்தானே குடும்பப் பிரச்சினை காரணமாக சுட்டு க்கொண்டு தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கில் பலருக்கும் இராணுவத்தினர் முன்னர் தற்பாதுகாப்பிற்காக ஆயுதங்களை கொடுத்தனர். பின்னர் அதனை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

22 செப்டம்பர் 2010

மகிந்த சொல்ஹைம் மந்திர ஆலோசனை: முகமூடிகள் கிழிகின்றது!

சமாதானம் என்று கூறிக்கொண்டு 2002ம் ஆண்டு இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்தது நோர்வே. அதனை அவர்கள் ஏற்படுத்தினார்களோ இல்லையோ, குறைந்தபட்சம் இலங்கையில் நடந்த மனிதப் படுகொலைகளையோ, இல்லை இன அழிப்பையோ இவர்களால் நிறுத்த முடியவில்லை என்பதை எல்லோரும் நன்கு அறிவர். அடிக்கடி இலங்கை சென்று ஜனாதிபதி உட்பட, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களையும் அடிக்கடி சந்தித்துவந்த நபர் எரிக் சொல்ஹைம். சமாதானத் தூதுவராக இவர் செயல்பட்ட காலம்போய் தற்போது இலங்கை அரசின் பக்கம் சாய்ந்து பக்கசார்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் என்பது பழைய கதை. ஆனால் புதிய கதைகளும் அரங்கேறியுள்ளது.
நேற்றைய தினம நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மகிந்தவை இவர் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். அப்போது தான் நோர்வேயில் உள்ள பல தமிழர்களோடு பேசியிருப்பதாகவும், அதில் பெரும்பான்மையான தமிழர்கள் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கவே விரும்புவதாக, மகிந்தவுக்கு இவர் எடுத்துரைத்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சுமார் 12,000 த்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் நோர்வே நாட்டில் வசித்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழீழ மக்களவைக்கும், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கும், தற்போது நடைபெற்ற நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமது வாக்குகளை போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை மீண்டும் வலுயுறுத்திக் காட்டியிருந்தனர். இது உலகறிந்த விடயம்.
ஆனால் எரிக் சொல்ஹைமின் காலைப் பிடித்து திரியும் சில அடிவருடிகள் சொல்வதை கேட்டும், மற்றும் குறிப்பிட்ட சிலரோடு மட்டும் பேசிவிட்டு, ஏதோ நோர்வேயில் உள்ள மொத்தத் தமிழர்களும் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்க இருப்பதாக எரிக் சொல்ஹைம் கூறியிருப்பது அடிமுட்டாள் தனமாகும். தமிழ் மக்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை நோர்வே தமிழர்கள் பல முறை நிரூபித்துவிட்டனர். அதிலும் மக்களவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நாடு கடந்த தமிழீழ அரசு, என பல கட்டமைப்புகள் அங்கு இயங்கிவரும் நிலையில், தமிழர்களின் ஏகோபித்த அபிலாஷை இது தான் என்று கூற எரிக் சொல்ஹைம் யார்?
வெறுமனவே மகிந்தவை திருப்திப்படுத்த இவர்கள் போன்ற பச்சோந்திகள் முனைகிறார்களே அன்றி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இவர்கள் இன்னும் செயல்படவில்லை. 18 வது திருத்தச் சட்டத்தை உலகில் உள்ள பல ஜனநாயக அமைப்புகள் எதிர்த்துள்ளன, நீதித் துறை, தேர்தல் ஆணையாளரை நியமிப்பது, போலீஸ் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியைக் கட்டுப்படுத்தும் சில மேலதிக அதிகாரங்களும் தற்போது இச் சீர்திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் கைகளில் விழுந்துள்ளன. இது குறித்தோ இல்லை மனிதப் படுகொலை குறித்தோ ஆராயாத எரிக் சொல்ஹைம், நோர்வே தமிழர்கள் உங்களுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள் என மகிந்தவிடம் அசடு வழிந்துள்ளார். இதனை மக்கள் ஒருபோதும் ஏற்கப்போவதும் இல்லை.
எனவே எரிக் சொல்ஹைமுடன் இணைந்து செயல்படுவோரை நாம் முதலில் இனம்காண வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்களே எமது பாதையை மாற்றுப் பாதையில் கொண்டுசெல்ல திட்டங்களைத் தீட்டிவருகின்றனர்.
அதிர்வின் ஆசிரியபீடம்!
நன்றி:அதிர்வு.கொம்

கனடா செல்லும் ஏதிலிகளை கனடா இனி ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலை பயன் படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழ் ஏதிலிகளுக்கு கனேடிய அரசு இப்போது பச்சைக் கொடி காட்டியுள்ளது.
கனடாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டாம் என முன்வைக்கப்பட்ட திட்டத்தை கனடா அரசாங்கம் நிராகரித்துள்ளது
குடியுரிமையை வழங்குதல் அல்லது அவர்கள் திருப்பியனுப்புவதல் அல்லது அவர்களை தடுத்து வைத்தல் தொடர்பாக கவனம் செலுத்துவதை விட்டுவட வேண்டும் என கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் இருந்தோ அல்லது வேறு எந்த நாட்டில் இருந்தோ கனடாவிற்கு அகதிகள் வருவதை தடுக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹாபரே தெரிவித்தார்.

21 செப்டம்பர் 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகள்! ஜெர்மனியின் மத்திய தொகுதியின் உத்தியோகப்பூர்வமான முடிவுகள் அறிவிப்பு!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெர்மன் மத்திய தேர்தல் தொகுதியின் பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை ஜெர்மன் தேர்தல் ஆணையகம் இன்று (செற்டெம்பர் 21) அறிவித்துள்ளது.
1. திரு. கிரேத்தியன் ஜேம்ஸ் அல்ஸ்ரன்
4. திரு. சுப்பிரமணியம் பரமானந்தன்
5. செல்வி. தனிகா சுப்பிரமணியம்
ஆகியோர் தாமாக முன்வந்து இத் தேர்தலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்ததின் பேரில் பின்வரும் நால்வரும்
2. கணேசரட்னம் சந்திரபாலன்
3. திரு. இந்திரலிங்கம் முகுந்தன்
6. திரு. இராசையா தனபாலசிங்கம்
7. திரு. நடராஜா திருச்செல்வம்
ஜெர்மன் மத்திய தேர்தல் தொகுதி 3இல்; மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் இத்தால் அறியத்தருகின்றோம்.
செயலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

கூரை மீதேறி போராட்டம் முடிவுக்கு வந்தது!

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து, நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள சுமார் 8 தமிழர்கள் உட்பட, ஒரு ஈரான் நாட்டவரும் சேர்ந்து, சிறைச்சாலையின் கூரையில் ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை ஃபிஜி நாட்டுப் பிரஜை ஒருவர் ஏற்கனவே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து சிறைச்சாலையை சுற்றி அவரது ஆதரவாளர்களும், மனித உரிமை அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கை அகதிகளும் தம்மை திருப்பி அனுப்பவேண்டாம் எனக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் கூரையில் இருந்து தாம் குதிக்கப்போவதாகக் கூறியதை அடுத்து நிலத்தில் மெத்தைகளையும், விழுந்தால் அடிபடாமல் இருக்கும் வகையிலான் பிளாஸ்டிக் வலைப்பின்னல்களும் போடப்பட்டிருந்தது. இருப்பினும் இன்றுடன், இப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அவுஸ்திரேலிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கூரையில் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்திய அனைவரும் கீழே இறங்கியுள்ள நிலையில் ஒருவர் மட்டும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. அவரை சக கைதிகள் மடக்கிப்பிடித்து பலவந்தமாக கீழே இறக்கியுள்ளனர்.
ஏற்கனவே குதித்து தற்கொலை செய்துகொண்ட ஃபிஜி நாட்டவர், கூரையில் ஏறி நின்றவேளை குதித்துப் பார், அல்லது உன்னால் குதிக்க முடியுமா என்று, அவுஸ்திரேலியப் பொலிசார் அவரை கிண்டல் செய்து, அவரை வெறுப்பேற்றியே குதிக்க வைத்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலியப் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வைக்கோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்.

''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'' - இந்த வார்த்தைகளை வைகோ உச்சரித்தபோது தொண்டர்களின் கைதட் டலால் காஞ்சிபுரமே கிடுகிடுத்தது!
காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. மாநாடு என்று அறிவிக்கப்பட்டதுமே, ஊரின் அனைத்துச் சுவர்களையும் வளைத்து விளம்பரங்களாக எழுதித் தள்ளினார் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன். ஆனால் அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதானார். ''திரும்பிய பக்கமெல்லாம் ம.தி.மு.க. கொடியையும், அண்ணாவையும், வைகோவையும் வரைந்து வைத்தார் வெங்கடேசன். ஸ்டாலின் இங்கு வந்து சென்ற இரண்டாவது நாளே அவர் மீது சாராய கேஸ்!
''நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்துக்காக மட்டுமே வைகோ குரல் கொடுத்தார். 11 பிரதமர்களின் முன்னால் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதைப்போல பிடரியைப் பிடித்து உலுக்கியவர் வைகோ. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டைப் பார்த்து டெல்லி அஞ்சியது. ஆனால், சோனியாவுக்கு பயம் போய்விட்டது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ராஜாவையே மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிட்டார்! இந்த அடிமை மனோபாவமும், குடும்பப் பாசமும் இருக்கும் வரை கருணாநிதியால் இந்த இனத்துக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை!'' என்று செந்திலதிபன் சொன்னதற்குப் பின்னால், மைக் பிடித்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சு மொத்தக் கூட்டத்தையும் சிரிப்பு மழையால் நனையவைத்தது.
''இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று தாசில்தார் ஒருவர் தடுத்திருக்கிறார். உன்னைத் தூண்டிவிடுவது யார், குன்றத்தூர் குள்ளனா?'' என்று அவர் சொன்னபோது ஏதோ புரிந்தாற்போல் பலத்த விசில்.
இரவு 8.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி... முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவங்களை அவர் விவரித்து முடிப்பது வரை மொத்தக் கூட்டத்தையும் தனது வார்த்தைகளால் கட்டிப் போட்டிருந்தார்.
''நான் தமிழ்நாட்டு மக்களின் ஊழியன். இந்த நாட்டுக்காக... மொழிக்காக உழைப்பவன். கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கும் சேர்த்து நான் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கமா... தமிழ்நாட்டின் ஜனநாயகமா? எது தேவை?' என்ற ஒரு கேள்வியின் அடிப்படையிலே இந்தத் தேர்தலே நடக்கப்போகிறது...'' என்பதை பகிரங்கமாக அறிவித்த வைகோ, இந்த மாநாட்டில் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.
''2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் சிறையில் இருந்து வெளியே வந்த நாள். அன்று இரவில் கலைஞரை சந்தித்தேன். 'உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு ஸீட் அதிகம் வேண்டும். கணேச மூர்த்திக்குத் தாருங்கள்' என்றேன். உடனே கலைஞர், 'அதெல்லாம் முடியாது. அதுக்கு மேல் கொடுக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வரப் போனார்.
பிறகு திடீரென்று நின்றவர், 'எனக்குப் பிறகு நீதான்யா... உன் கட்சிதான்யா தி.மு.க-வா இருக்கும்!' என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பதறிப்போனேன். 'ஏன் அண்ணே, இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்க 100 வருஷம் இருப்பீங்கண்ணே!' என்று சொன்னேன். அன்றைக்கு என்னை சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்ன பசப்பு வார்த்தைகள் அவை. எனவே, முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இதைச் சொன்னேன். கட்சித் தொண்டர்களுக்கு இதை முதல் தடவையாகச் சொல்கிறேன்!'' என்ற வைகோ....
''இன்றைக்குச் சொல்கிறேன்... கலைஞர் அவர்கள் 100 ஆண்டுகள் வரை நல்ல நலத்துடன்... திடத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுக்கு முன்னால் உங்களது குடும்ப அரசியல் நொறுங்கிப்போகும். உண்மையான தி.மு.க-வாக ம.தி.மு.க-தான் இருக்கும். உமர் முக்தாரை தூக்கிலேற்றும்போது, அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன் ஓடுவான். அதைப்போல, அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்ற நான் இருப்பேன். ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் எனக்கு வீர வாள் ஒன்றைக் கொடுத்தார்கள். அது தங்க வாளோ, வெள்ளி வாளோ அல்ல. உண்மையான வாள். கூர்மையாக இருந்தது. இதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன்'' என்று முடித்தபோது... தொண்டர்கள் அனைவரும் முறுக்கேறி இருந்தார்கள்!

ஆஸி.சிறையில் கூரை மேல் போராட்டம் ! ஈழத் தமிழர்கள் ஒன்பது பேர் தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 07 பேர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Villawood தடுப்பு முகாமின் கூரையில் ஏறி நின்று இன்று தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்களுடன் ஆப்கானியர் ஒருவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸி அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்று இவர்கள் மிரட்டுகின்றார்கள்.
பீஜி நாட்டவர் ஒருவர் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இக்கூரையில் இருந்து காலையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸியின் Villawood தடுப்பு முகாம் கைதிகளான சட்டவிரோத குடியேற்றவாசிகளில் சிலர் இன்று முகாமின் கூரையில் ஏறி நின்று தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் செய்கின்றமையால் அங்கு பாரிய பதற்றம் நிலவுகின்றது.
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு கடத்தப்படுகின்றமையை ஆட்சேபித்தே இவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸ்திரேலிய அரசு வாபஸ் பெறா விட்டால் கீழே குதித்துத் தற்கொலை செய்வார்கள் என்றும் மிரட்டுகின்றார்கள்.
பிஜி நாட்டவர் ஒருவர் அதிகாலையில் கூரையில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இவ்வார்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருப்போரில் ஒன்பது பேர் வரையானோர் இலங்கைத் தமிழர்கள் என்றும் ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இரவிலும் போராட்டம் தொடரும் என்று இவர்கள் அறிவித்துள்ளார்கள். இவர்களை கீழே இறக்குகின்றமைக்கு பொலிஸாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுடன் பேச்சு நடத்த இலங்கையர் ஒருவர் ஆஸி அதிகாரிகளால் கூரைக்கு தூது அனுப்பப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூரையை விட்டு இறங்கி வந்த பின் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாம் என்பது அதிகாரிகளின் நிலைப்பாடாக உள்ளது.

20 செப்டம்பர் 2010

ஜேர்மன் வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!

ஜேர்மன் வைத்தியசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டும் ஒருவர் பலத்த காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் பிரெஞ்ச், சுவிஸ் எல்லைக்கு அண்மையாகவுள்ள லொவெரச் தென் மேற்கு நகரில் நடந்துள்ளது. அங்குள்ள செயிண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குள் நடந்து சென்ற பெண்ணொருவர் தாம் கொண்டுசென்ற தானியங்கித் துப்பாக்கி மூலம் சுட்டுள்ளார். இறந்தவர்களில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. 15 நிமிடங்களுக்குள் அப்பகுதியை அடைந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். ஆனால் குறித்த பெண்மணி எவ்வளவு நேரமாக அம்மருத்துவமனை வளாகத்தில் இருந்தார் என்பது இன்னும் தெரியவில்லை.
இதேவேளை குறித்த மருத்துவமனைக்கு எதிராக நடந்த குண்டுவெடிப்பொன்றைப் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்கு இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா எனப் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

16 பஸ்களில் போராளிகளை முள்ளிவாய்க்காலில் வைத்து ஏற்றி சென்றனர்.

வன்னியில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளையும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென் றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது. இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார் நல்லிணக்க ஆணைக்குழுமுன் நேற்று சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு கண்டாவளை பிரதேச செயலகத்தில் நேற்று நடத்திய அமர்வில் சாட்சியம் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போராளிகளை விடுவிக்க பணம் கேட்ட இராணுவம்
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து முதலில் சரணடைந்த போராளி ஒருவரே எமது பிள்ளைகளைக் காட்டிக்கொடுத்தார். எமது பிள்ளைகள் வலுக்கட்டாயமாகவே விடுதலைப்புலிகளினால் அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து தப்பிவந்து இறுதி யுத்தத்தின்போது இராணுவப் பகுதிகளை நோக்கிச்சென்றபோது இராணுவத் தரப்புடன் நின்றிருந்த குறித்த போராளி எமது பிள்ளைகளை இராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தார். இராணுவம் எமது பிள்ளைகளைப் பிடிக்கும் போது பணம் தந்தால் விட்டுவிடுவதாகக் கூறினார்கள். நாங்கள் இரண்டு லட்சம் ரூபாவைக் கட்டினோம். தாங்கள் எமது பிள்ளைகளை விசாரணையின் பின் மூன்று நாள்களில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றார்கள்.
இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்களும் சரணடைந்தவர்களும் ஒரு கூடாரம் போன்ற அறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதனுள் சென்று பார்க்க எமக்கு அனுமதி தரப்படவில்லை. சரணடைபவர்களை மூன்று நாள்களில் விடுவிப்பதாக படையினர் அறிவித்ததை அடுத்து ஜோசப் பிரான்லின், ரெஜினோல்ட் ஆகிய பங்குத்தந்தையர் அவர்களிடம் பெற்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் போராளிகள் பலரும் கையளிக்கப்பட்டார்கள்.
அவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் 16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதுவரை அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்றுகூடத் தெரியாத நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.
எமது சொத்துக்கள் யுத்தத்தில் அழிவடைந்தாலும் பரவாயில்லை. பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் அவர்களுடன் மரநிழலின் கீழாவது சந்தோசமாக வாழ்வோம் அவர்களை எவ்வளவு கஸ்டத்தின் மத்தியில் வளர்த்தோம் என்பது எமக்குத்தான் தெரியும். இந்த வயதிலும் (வயது 53) நாம் உழைத்துக் கஷ்டப்படுகிறோம். எமது பிள்ளைகள் இருந்திருந்தால் இந்த நிலைமை எமக்குத் தோன்றியிராது என்றார்.

19 செப்டம்பர் 2010

சிறையிலுள்ள தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகளை நசித்துச் சித்திரவதை!


பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் சிறையிலுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களைத் தொடர்ந்தும் சித்திரவதை செய்து வருவதாக தனது பெயரை வெளிவிட விரும்பாத ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதான இளைஞர்களைச் சந்தித்தபோதே தமக்கு இவை தெரியவந்ததாக அவர் கூறினார். வேலைவாய்ப்பின் நிமித்தம் கொழும்பிலும் அதன் புறநகரிலும் தங்கியிருந்த தமிழ் இளைஞர்கள் தவிர வடக்குக் கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதான இளைஞர்களும்கூட கொழும்பு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திலும் பூசா முகாமிலும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, வெலிகந்தை ஆகிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிகளை மேலதிக விசாரணைகள் என்ற பெயரில் கொழும்புக்குக் கொண்டுவந்து அங்கு பல சித்திரவதைகளைச் செய்துவருகிறார்கள் போலீசார். மேலும், தாம் தயாரித்துள்ள அறிக்கைகளில் மேற்படி இளைஞர்கள் கையெழுத்துப் போட மறுத்தால் அவர்களது வாழ்நாள் முழுவதையும் அச்சிறைகளிலேயே கழிக்க வேண்டிவரும் என்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
இரும்புக்கம்பிகள், கிரிக்கெட் மட்டைகள், குண்டாந்தடிகள் ஆகியவற்றால் இவ்விளைஞர்களைத் தாக்கிவரும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அவ்விளைஞர்களின் அந்தரங்க உறுப்புகளையும் நசித்துச் சித்திரவதை செய்கின்றனர். அதோடு தாம் சித்திரவதை செய்து கொலைசெய்த இளைஞர்களை வீடியோ எடுத்து அவற்றை அங்குள்ள இளைஞர்களுக்குக் காண்பித்தும் அச்சுறுத்தி வருவதாக மேற்படி ஊடகவியலாளர் கூறியுள்ளமை எங்கள் உடலையே அச்சத்தில் உறைய வைக்கிறது.
இவ்விளைஞர்களைப் பார்வையிட வருகின்ற உறவினர்களும் வெளியில் சொல்ல முடியாத பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தமது பிள்ளைகள், சகோதரர்களுடன் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வெளியிலிருந்து வரும் உணவுகளைத் தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு கொடுக்க அனுமதிக்காத சிறை அதிகாரிகள், தம்மால் நடத்தப்படும் உணவகத்தில் மட்டுமே உணவை வாங்கும்படியும் கட்டாயப்படுத்துகின்றனர்.
மேலும், தமது உறவுகளைப் பார்க்கவரும் உறவுகளிடமிருந்து பணம் கறந்துவருவதாக முஸ்லிம் அதிகாரியான அப்தீன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள வேளை, மொகமட் எனப்படும் முஸ்லிம் அதிகாரி இனத்துவேசமாக அங்குள்ள தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்வதாகவும் கூறப்படுகிறது.
தடுப்புக் காவலில் உள்ள இளைஞர்களுக்கு போதிய மருத்துவ வசதி, சுகாதார வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மூன்று கழிப்பறைகள் மட்டுமே அங்குள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக தண்ணீர் செலவழிப்பவர்களுக்கும் சித்திரவதை நடப்பதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.

தமிழன் மானத்தை விற்றுப்பிழைக்கும் பலருக்கு மத்தியில் இப்படியும் ஒரு வீரத்தாய்!


விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனைத் தேடி ஒப்படைக்குமாறு அவரது மனைவி ஆனந்தி சசிதரன் நேற்றையதினம் கிளிநொச்சியில் கூடிய நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரசன்னமாகி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் பி.பி.சி தமிழோசைக்கு கொடுத்த ஒலிவடிவிலான பேட்டியின் தொகுப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அரசியல் துறை துணைபொறுப்பாளர் தங்கன், நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பூவண்ணன், மற்றும் பிரியன், உட்பட பலர் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாரோடு சென்று சரணடைந்த்தாகவும், அதனைத் தான் நேரடியாகப் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் 9 பேர்கொண்ட தூதுக்குழு இலங்கை சென்று கே.பியைச் சந்தித்தவேளை, இலங்கை புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கபில ஹெதவிதாரணவிடம், நிர்வாகசேவைப் பொறுப்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அப்படி தங்களிடம் யாரும் இல்லை என அவர் பதிலளித்ததோடு, இராணுவத்திடம் சரணடைவதை யாராவது பார்த்தார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். பொதுவாக புலிகளின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் பலர் சரணடையும்போது, பலரின் மனைவிமார்களும் கூடவே இருந்திருக்கின்றனர். அவர்களே அதற்கு சாட்சியாகும்!
பணத்துக்காகவும், பதவி, அந்தஸ்துக்காகவும், அரசுடன் கூடித் திரியும் பலர் இருக்கும்போது, இன்னும் மாறாமல் ஈழத்தில் இருக்கும் ஒரு மறத் தமிழச்சியின் குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. அதுவும் ஈழத்து தமிழர்களின் உள் உணர்வு என்ன என்பதை உலகுக்கு உணர்த்தி நிற்கிறது.

மகிந்தவிற்கு சவாலான செயல்திட்டத்தை கட்சி செயற்குழுவில் சமர்ப்பிக்குமாறு ரணில் கோரிக்கை.

கட்சியின் பதவிகளுக்காக முரண்பட்டு கட்சியை பிளவுபடுத்தாது மகிந்த ராஜபக்சே வின் சர்வாதிகார நிர்வாகத்தை கவிழ்ப்பதற்காக நடைமுறைச் சாத்தியமான அரசியல் வேலைத் திட்டமொன்றை செயற்குழுவில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் அதிருப்தி குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்மறுசீரமைப்பைக் கோரி நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் யோசனைகளுடன் நேற்று (17) தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்டி சில்வாவிடம் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்
பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துச் செயற்படும் சிலர் கடந்த காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே விற்கோ அல்லது அவரது குடும்ப நிர்வாகத்திற்கு எதிராகவோ பகிரங்கமாக எவ்வித வார்த்தைகளைக்கூட வெளியிடவில்லை என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

18 செப்டம்பர் 2010

சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது - ச. வி. கிருபாகரன்.

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுப்பதில் எந்த அக்கறையும் செலுத்தாது, தமிழ் மக்களின் தாயக பூமியான தமிழீழத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது என பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் திரு ச. வி. கிருபாகரன் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 15வது கூட்டத் தொடர் இந்தவாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் ஐ. நா. விற்கான தாய்லந்து தூதுவர் தலைமையில் நடைபெறுகிறது.
கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில், பல அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் அங்கத்தவரும், பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளருமான திரு ச. வி. கிருபாகரன் அவர்கள் தமிழ் மக்களின் நிலைபற்றி எடுத்துரைத்தார். தமிழீழ மக்களுக்கு எந்தவித புனர்வாழ்வு, புனரமைப்பு திட்டங்களை வழங்காத இலங்கை அரசு, சர்வதேச ரீதியாக முழுப் பொய்களைக் கூறிவருகிறது. இப் பொய்களை நம்புவதற்கும் பல தனிநபர்களும், நாடுகளும் உண்டு. காரணம் அவ் நாடுகளும், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு செய்யும் அநியாயங்கள் போன்றே, தமது நாடுகளில் வேறு இனங்களுக்கு செய்கின்றனர்; என்று வி. கிருபாகரன் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் பி.பி.சி யினருக்குத் தடை!

கடந்த ஆண்டு நிறைவடைந்த போரின்போதான போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை இன்று கிளிநொச்சியில் நடைபெறுகின்றது. மூன்று நாட்கள் நடக்கவுள்ள இவ்விசாரணையில், பொதுமக்கள் தமது சாட்சியங்களை அளிக்கவுள்ளனர். இனியும் ஒரு போராட்டம் வெடிப்பதைத் தடுக்கும் விதமாக இவ்வாணைக்குழு பாடுபட்டு வருவதாக அரசு கூறிவருகிறது.
ஆனால் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் இவ்விசாரணையில் பொதுமக்கள் எவ்வாறான சாட்சியங்களை அளிக்கிறார்கள் என்பது குறித்துச் செய்திகளை சேகரிப்பதற்கு பி.பி.சி செய்திசேவையை அனுமதிக்க முடியாது என்று சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்றுமுதல் நடக்கும் இவ்விசாரணைகளில், போரினால் நேரடியாகப் பாதிப்புகளுக்கு உள்ளான பொதுமக்கள் சாட்சியங்களை அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க பாதுகாப்பு அமைச்சு தடையை விதித்துள்ளது.
இவ்வாணைக்குழு முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளதோடு, இறுதிக்கட்ட போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விசாரணைகளில் பெரும்பாலானவை வெளிப்படையாகவே நடக்கவுள்ளதாகவும் கூறப்ப்படுகிறது. ஆனால் எதற்காக பி.பி.சி க்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதை இராணுவ தொடர்பாடல் அதிகாரி தெரிவிக்கவில்லை.
வெளிப்படையான விசாரணைகளை நடத்தவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தே இவ்வாணைக்குழுவை மஹிந்த நியமித்திருந்தார். ஆனால் இதில் ஊடகவியலாளர்கள் பங்குபற்றக்கூடாது என்றால் இவ்விசாரணையின் உண்மைத்தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் ஊகித்து விளங்கிக்கொள்ள முடியும்.

கரடியனாறு வெடிப்பில் காயமுற்ற மேலுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!


நேற்று நடைபெற்ற கரடியனாறு வெடிச்சம்பவத்தில் காயமுற்று இருந்து 22 பொலிஸாரில் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அதிதீவிர சிகிச்சைப்பிரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மு.ப.11.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் காயமுற்ற 44 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 4 பேர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 28 வயது உடைய பொலிஸ் கான்ஸ்டபிள் குமார, அதிதீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 க்கு உயிரிழந்தார்.

17 செப்டம்பர் 2010

மட்டக்களப்பில் சீன கண்டேனர் வெடித்தது: இந்திய ரோ அதிகாரிகள் காரணமா?


இலங்கையில் சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றது யாவரும் அறிந்ததே. சீனாவின் அபிவிருத்தி திட்டத்திற்காக கல் உடைப்பதற்கு பல டைனமைட் வெடிபெருட்கள் ஒரு பாரிய கொள்கலனில் கொண்டுவரப்பட்டு, அது கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து வேறு ஒரு பாரஊர்திக்கு மாற்றப்பட்டுக்கொண்டு இருந்தவேளையே இக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக அதிர்வின் மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கிறார். இதில் வெடிபொருட்களை மாற்ற முனைந்த 2 சீனர்கள் உட்பட சுமார் 60 பொலிசார் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் கரடியனாறு போலீஸ் நிலையம் முற்றாக இடிந்து தரைமட்டமாகியுள்ளது.
மேலும் 60 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்த டைனமைட் குண்டுகள் சி 4 வகை அல்ல அது இலகுவில் வெடிக்க. அவை பற்றவைத்தாலே வெடிக்கும். இந்நிலையில் இக் குண்டுவெடிப்புக்கும் இந்தியாவின் உளவுத்துறைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என அறியப்படுகிறது. இலங்கையில் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் மிக ஆபத்தானவை எனக் காட்டவே இவ்வாறு ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அத்தோடு சில தினங்களுக்கு முன்னர் 2 இந்திய ரோ அதிகாரிகளை இலங்கை நாடு கடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவரும் நிலையில், சீனாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தவிடுபொடியாக்கவும், அதன் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கவும், மற்றும் போர் ஓய்ந்துள்ள நிலையில் சுமார் 60 பொலிசார் மரணமடைந்திருப்பதும் பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். சிங்கள மக்கள் சீனாமேல் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்துள்ளனர் இந்திய ரோ பிரிவினர். சீனாவில் இருந்து கண்டெய்னரில் கொண்டுவரப்பட்ட இந்த பாறைகளை உடைக்கும் டைனமைட்டுக்கள் ஏன் பொலீஸ் நிலையம் முன்பாக நிறுத்தப்படவேண்டும்?
அதற்கு முரணாக இலங்கை இராணுவம் மட்டக்களப்பு பொலீஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்திலேயே குண்டுவெடித்தது என முதலில் சிங்கள செய்திச் சேவைகளுக்கு தெரிவித்துள்ளது. இதில் பல முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே இது தான் ஆரம்பம் என்பது போல பிரித்தானியாவில், பல குறும் தகவல்கள்(SMS) உலாவுகின்ற. இத் தாக்குதலை விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் ராம் செய்ததாகவும் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனை!

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட முறைகேடுகள் தொரடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்நீதிமன்றம் இன்று மேற்படி தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

கரடியனாறு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் படையினர் விசாரணை!

மட்டக்களப்பு கரடியனாற்றில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசேட படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.அரசியல் காரணமாகவோ அல்லது நாசகார வேலை காரணமாகவோ இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதை தாம் முற்றாக நிராகரிகரிக்கிறோம். படையினர் விசாரணைகளில் ஈடுப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க பகுப்பாய்வாளர்களை உள்ளடக்கிய விசேட குழுவினர், கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ன செல்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருப்பதால் பதில் பாதுகாப்பு அமைச்சராக டி.எம்.ஜயரட்ன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீன நிறுவனமொன்றிற்குச் சொந்தமான வெடிபொருள்கள் நிரப்பிய 3 கொள்கலன்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.
முதலில் ஒரு கொள்கலனிலிருந்து வெடிபொருள்களை இறக்கியபோது ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏனைய கொள்கலன்களும் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

16 செப்டம்பர் 2010

வரலாறு காணாத கத்தோலிக்கர் கூட்டத்தில் சிவந்தன் துண்டுப்பிரசுரம்: காணொளி!


போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் இன்று மதியம் ஸ்காட்லாந்தில் முதல் முறையாக காலடி எடுத்துவைத்துள்ளார். பிரித்தானியா முழுவதும் சுமார் 6 மில்லியன் ரோமன் கத்தோலிக்க இனத்தவர் வாழ்கின்றபோதும், ஸ்காட்லாந்தில் அவர்களில் பெரும் தொகையானோர் வசித்து வருகின்றனர். மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெறும் இந்நிகழ்வில் போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் மக்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெறும் இவ்வேளையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இதில் கலந்து கொண்டுள்ள நிலையில் அங்கே சிவந்தன் துண்டுப்பிரசுரங்களை வினியோகிக்கிறார்.
ஈழத்திலும், இலங்கையின் தென்பகுதியிலும் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்களுக்காவும், அங்கு இராணுவத்தினரால் நிர்மூலமாக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் தொடர்பாக நீதிகேட்டும் இத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன். பல கத்தோலிக்கர்கள் தமது இனத்தவர் இலங்கையில் கொல்லப்பட்டது தொடர்பாகவும், தமது தேவாலயங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் விழிப்படைந்துள்ளனர். கவலையுற்ற பல கத்தோலிக்கர்கள் இலங்கை நிலைகுறித்து கேட்டறிந்ததாக உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் தெரிவித்தார்.
பி.பி.சி நிருபர்கள் உட்பட பலர் துண்டுப் பிரசுரங்களை தாமாகவே கேட்டு வாங்கிச் சென்றதாக பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை சிவந்தன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் இணைந்து மக்களுக்கு வழங்கி நீதிகேட்டு இருந்தது இலங்கையில் தமிழர்களுக்கு நீதிவேண்டும் என்ற கோட்பாட்டிற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்ததை இங்கு காணக்கூடியதாக இருந்தது.

ஜகத் டயஸ் மீதான வழக்கு ஆராய்வு!

சிறீலங்கா இராணுவத்தின் 57 ஆவது படையணியின் முன்னாள் கட்டனை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இன் ஜேர்மன் பிரதித் தூதுவர் பதவிக்கு எதிராக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்ட வழக்கு விசாரணைகளை ஐரோப்பிய நீதிமன்றம் ஆராய்ந்துவருவதாக அதன் பதிவாளர் முல்லர் எல்ஸ்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் அதிகளவு மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட டயஸ் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் சுவிஸ் ஈழத்தமிழர் சபை, நோர்வே ஈழத்தமிழர் சபை, அமெரிக்காவை தளமாக கொண்ட இனஅழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன கடந்த ஜுலை மாதம் வழக்குகளை பதிவு செய்திருந்தன.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படை அதிகாரியை அனுமதித்ததன் மூலம் ஜேர்மன் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை மீறிவிட்டது என அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் நாம் ஆராய்துவருவதாகவும், விசாரணைகள் ஆரம்பமாகும்போது அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமது முறைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கான கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சுவிஸ் ஈழத்தமிழர் சபையை சேர்ந்த அருள்நிதிலா தெய்வேந்திரன் தெரிவித்துள்ளர்.