30 செப்டம்பர் 2011

மகிந்தவின் புகழ் பாடிய யோகேஸ்வரி!

மகிந்த அரசு தமிழ் மக்களுக்கு ஏதிராக தற்போது செயற்படவில்லை. இது எங்கள் அரசு. அரசின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என 'யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி' நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழக்கித் தள்ளியுள்ளார் யாழ். மாநகரசபை முதல்வர்(ஈ.பி.டி.பி) யோகேஸ்வரி பற்குணராசா.
இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகிய யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவருக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார். நிகழ்வு தொடர்பாக யாழ்ப்பாண வாழ்வியலைப் பற்றி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழங்கித் தள்ளினார். அதில் வழமை போன்று தன் புகழையும், மகிந்தாவின் புகழையும் பாடியதுடன் கடந்த கால அரசியல் தலைமைகளின் வழிநடத்தல் பிழை என்ற தனது தாரக மந்திரத்தையும் அவர் உச்சரிக்கத் தவறவில்லை.
அவர் ஆற்றிய உரையிலிருந்து,
நாம் கடந்த முப்பது வருட காலமாக போரைக் காரணம் காட்டி எமது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கத் தவறி விட்டோம். கடந்த காலங்களில் எமது மாநகரசபை கட்டிடத்தின் புகைப்படத்தைக் கூட பாதுகாக்கத் தவறி விட்டோம். இந்த நிலைக்கு கடந்த கால மோசமான அரசியல் தலைமையின் வழிநடத்தலே காரணம் ஆகும்.
தற்போது அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படவில்லை என்றே நான் கூறுவேன். எனக்கும் அரசுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. ஜனாதிபதி கூறியிருக்கின்றார் "இது உங்களுடைய அரசு. உங்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது. நீங்களே பயமின்றி ஆளலாம். நாம் எந்தவிதத்திலும் தலையிட மாட்டோம்." என்று. எனவே இது எங்களுடைய அரசாங்கம். இந்த அரசின் மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். என்று முழங்கித் தள்ளிய அவர்,
நேற்று எங்களின் ஜனாதிபதி ஐ.நா. கூட்டத் தொடரில் உரையாற்றுகையில், எங்கள் பிரச்சனைகளுக்கு சர்வதேசத்தை இணைத்து தீர்வு காணத் தேவையில்லை. எமது நாட்டு மக்களை இணைத்துத் தான் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நான் வரவேற்கின்றேன். என்றார்.

29 செப்டம்பர் 2011

அட...! என்னதான் நடக்குது அங்க?

யாழ்,மாநகரசபையின் பெண் ஊழியர் ஒருவரின் மார்புகளை பிடிக்க முயன்று மாட்டுப்பட்டு இருப்பவர் அம்மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசன்.
ஆயினும் இவரைப் பற்றி ஊடகங்களில் வெளிவராத செய்தி ஒன்று உள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் போட்டி இட்டு இருந்த இவர் கணிசமான வாக்குகளை பெற்று இருந்தார்.
கல்வித் தகைமை, அரசியல் அறிவு மற்றும் அனுபவம் வாக்குகள் ஆகியவற்றை பார்க்கின்றபோது அவருக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என்று மனப் பால் குடித்து இருந்தார்.
ஆயினும் யோகேஸ்வரி பற்குணத்தை முதல்வர் ஆக்குகின்றமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முடிவு மங்களநேசனை மட்டுமன்றி மங்களநேசனின் ஆதரவாளர்களையும் கோபப்பட வைத்தது.
வீட்டில் ஆதரவாளர்கள் சகிதம் குழுமி மந்திராலோசனை நடத்தினார் மங்களநேசன். மந்திராலோசனை மதுவில் கலந்தது. போதை தலைக்கேறியமையுடன் அமைச்சரின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தார் மங்களநேசன்.
நீ என்ன யோகேஸ்வரியை வைத்திருக்கின்றாயா? ..... எனக்குதான் முதல்வர் பதவியை தர வேண்டும்.... இல்லையேல் பெரிய பிரச்சினை வரும்.... என்று தொலைபேசியில் சத்தம் இட்டு இருக்கின்றார்.
சிறிது நேரம் கழிந்தது. குண்டர்களுடன் வந்து இறங்கினார் வேட்டிக் கட்டோடு டக்ளஸ். மங்களநேசனை அலாக்காக தூக்கினார். நன்றாக போட்டுத் தாக்கினார். வானில் ஏற்றிச் சென்றார்.
முதல்வர் பதவியேற்பு வைபவம் நிறைவடைகின்றவரை மங்களநேசனை இரகசிய அறை ஒன்றில் பூட்டியும் வைத்தாராம் டக்ளஸ்.

சவேந்திர சில்வாவை பாதுகாப்பது பான் கீ மூனின் பொறுப்பு என்கிறார் நிமால்!

ஐ.நா.வுக்கான பிரதிநிதி என்ற வகையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு உள்ளதென நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது தனியான வழக்கு தொடரப்பட்டுள்ள போதும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அவர் முகம் கொடுப்பதற்கான சகல உதவி ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை!

பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் வடக்கு மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையில் முன்பு யுத்த பிரதேசங்களாக இருந்த இடங்களில் சாமானிய மக்கள் படுகின்ற கஷ்டங்கள் பற்றியும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குரல் கொடுத்துள்ளது. யுத்தத்துக்கு பின் மீள்குடியேறி வருவோர் பெரும்பான்மையாக இருந்துவரும் இப்பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படையான வசதிகள் கூட இல்லை. சர்வதேச கொடையாளி நாடுகளும் இவர்களுக்கு போதிய அளவு உதவுவதில்லை.
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், வடக்கில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிரந்தர வீடும், வாழ்வாதாரமும், குடி நீர், கழிப்பறை வசதிகளும் உடனடியாகத் தேவைப்படும் நிலையே இருந்து வருவதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபெய்சிங்க கூறினார். இலங்கையிலிருந்து மனித உரிமை பிரச்சினை தொடர்ந்த காதில் விழுந்து வருவதால், கொடையாளி நாடுகள் உதவிகளை வழங்கத் தயங்குகின்றனவோ என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது அடிக்கடி மனித உரிமை தொடர்பான விமர்சனங்கள் எழுந்ததால், சர்வதேச சமூகத்தின் உதவி முயற்சிகள் நீர்த்துப் போயுள்ளன என்றும் அவர் விமர்சித்திருந்தார். ஆனால் செஞ்சிலுவைச் சங்கத் தலைவரின் விமர்சனத்தை தாம் ஏற்க முடியாது என இலங்கையின் முக்கிய கொடையாளிகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதி பெர்னாட்ட சேவெஜ் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகளை வழங்க நாங்கள் தயங்குவதில்லை. இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எப் போதும் ஆதரித்தே வருகின்றது. உறைவிடம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான உதவித் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவியினை வழங்கி வருகின்றது.
இலங்கையின் அரசியல் நிலைவரம், மனிதவுரிமைகள் நிலைவரம் ஆகியன எமது மனிதாபிமான உதவித் திட்டங்களில் செலவாக்குச் செலுத்துவதில்லை. ஆனாலும் கொடையாளி நாடுகள் வழங்கும் உதவிகள் குறைந்து வருகின்றன. ஐ.நா. மன்றம் மிகச் சமீபத்தில் வெளியிட்ட மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றிய அறிக்கையில், இலங்கையில் இந்த வருடம் ஐ.நா. சபை முன்னெடுக்கவுள்ள உதவித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியில் சர்வதேச நிதி வழங்குநர்களிடமிருந்து நான்கில் ஒரு பகுதி நிதிதான் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 செப்டம்பர் 2011

தளபதி சூசையின் வீட்டை தேடி அலைந்த சிங்களவர்கள்!

கடற்புலிகளின் தளபதி சூசை வீடு என நினைத்து சூலை என்பவரின் வீட்டைத் தென்பகுதியிலிருந்து வந்தவர்கள் குதூகலத்துடன் புகைப்படம் எடுத்து ஏமாந்த சம்பவம் அண்மையில் புதுக்குடியிருப்பில் அரங்கேறியுள்ளது.
தென்பகுதியிலிருந்து மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக வந்த தென்பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வள்ளிபுனத்திலுள்ள கடையொன்றில் தமது வாகனத்தை நிறுத்திச் சூசையின் வீட்டுக்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளனர்.
கடையில் இருந்தவர்களுக்குச் சூசை என்பது சூலை எனக் கேட்டுள்ளது. இதனால் கோம்பாவில் பகுதியிலுள்ள சூலை என்பவரின் வீட்டுக்கு வழிகாட்டியுள்ளனர். தென்பகுதிச் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் சூலையின் வீட்டைச் சென்றடைந்தனர்.
அங்கே இரும்புக் குவியல்கள் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தன. அவர்கள் கடற்புலிகளின் தளபதி சூசையும் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாக எண்ணினார்களோ என்னவோ இரும்புக் குவியல்களை மளமள வெனப் புகைப்படம் பிடித்தார்கள்.
சூலையின் வீட்டிலுள்ள இரும்புக் குவியல்களைப் படம் பிடிப்பதில் அங்கு சென்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டனர். தென்பகுதிக்குச் சென்று புலிகளின் தளபதி சேகரித்து வைத்ததாக அந்த இரும்புக் குவியலைக் காட்டுவதில் அவர்கள் அக்கறையுடன் இருந்ததாகவே தெரிந்தது.
அப்போது அந்த வழியே வந்த உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் அங்கே குழுமி நின்று வேடிக்கை பார்த்தனர். சூலையின் வீட்டுக்கு இன்று என்ன நடந்தது? என்று கேள்வியும் எழுப்பினர். பாவம் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் சூசையின் வீடு என நினைத்துச் சூலையின் வீட்டைச் சல்லடை போட்டுக் கொண்டிருந்தனர்.இப்படியும் விநோதங்கள் வன்னிப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கு ஏளனமாக பதிலளித்தார் கோத்தபாய!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌விடம் அப்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் கூறியபோது மோசமான காலநிலை காரணமாக இருநாட்களாக ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லை என அவர் ஏளனமாக பதிலளித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இது குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள் ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இத்தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பீரங்கித் தாக்குதல்களில் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 254 பொது மக்கள் காயமடைந்ததாகவும். ஐக்கிய நாடுகளின் சபையின் பிரதிநிதி தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக இத் தகவல் குறிப்பில் றொபோர்ட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்­ஷ‌வைச் சந்தித்து பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியதாக றொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த தகவல் குறிப்பில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலைகள் இருந்தாலும் கூட அப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என கோத்தபாய ராஜபக்­ஷ‌ விடம் தான் வலியுறுத்தியதாகவும் றொபேர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.
இந் நிலையில் மோசமான காலநிலை காரணமாக இரு நாட்களாக ஜெட்போர் விமானங்கள் பறக்கவில்லை என ஏளனமாக பதில் அளித்த கோத்தபாய ராஜபக்­ஷ‌ இதன்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து வியப்புடன் கேள்வி எழுப்பியதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இப்பாதுகாப்பு வலயங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என களத்தில் இருக்கின்ற படை தளபதிகளுக்கு பணிக்கு மாறு படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌விடம் றொபேர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

27 செப்டம்பர் 2011

உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்காவின் உதவி கேட்குமாம் ஸ்ரீலங்கா!

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ருத்ரகுமாரன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவிகளை வழங்கியமைக்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆதாரங்களை சமர்ப்பித்து அமெரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகளில் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான கப்பல்களை ருத்ரகுமாரன் பராமரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக நவீன ரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக ருத்ரகுமாரன் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலிகளுக்கு வழங்கியமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், படையினருக்கு எதிராகவும் வழக்குகளைத் தொடுக்கும் நடவடிக்கைகளை ருத்ரகுமாரன் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மகிந்த ஸ்ரீலங்கா திரும்பினார்!வழக்கிற்கு பயந்து ஓடித்தப்பினாரா?

ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என அரச தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் தங்கியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேவி எதிர் ராஜபக்ஷ வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
கேணல் ரமேஸின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந் நிலையில் ஜனாதிபதி அவசரமாக நாடுதிரும்பியிருப்பதன் பின்னணி இதுவாக இருக்கலாமோ? என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

உண்மையை நிலை நாட்டுவதே எமது நோக்கம்"வழக்கு தொடர்பாக உருத்திரகுமாரன் கருத்து.

2009ம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தின் போது பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வெள்ளைக்கொடி விவகாரம், கேணல் ரமேஸ் படுகொலை தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூ யோர்க்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் முக்கிய இடத்தை வகிக்குமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.சிறிலங்கா அரச படைகளிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றவர்களில, கேணஸ் ரமேசும் ஒருவர் என்ற நிலையில், சர்வதேசத்தின் தொடர்புடைய இந்த 'வெள்ளைக்கொடி' விவாகாரம் முக்கிய இடத்தை வகிக்கவுள்ளது.
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச மீது தொடுக்கபபட்ட, முதலாவது போர்குற்ற வழக்காக அமைந்துள்ள கேணல் ரமேஸ் படுகொலை வழக்கில் பிரதமர் வி.உருத்திரகுமாரனே சட்டவாளராக பங்காற்றுகின்றார்.
இந்நிலையில் திங்கட்கிழமை லண்டன் பிபிசி தமிழோசைக்கு வழக்கு தொடர்பில் செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.
நட்டஈடு கோருவதாக இந்த வழக்கு அமைந்திருந்தாலும், வழக்கின் நோக்கம் மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியதான உண்மையும், மக்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டியுமே, கேணஸ் ரமேசின் மனைவயினால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்தார்.
நீதி விசாரணையை நடாத்துவதற்குரிய சட்ட வெளியோ அல்லது அரசியல் வெளியோ இலங்கதை; தீவில் இல்லாத காரணத்தினால்தான், புலத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்தச் செவ்வியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கு அமைய, நீதிமன்ற அழைப்பாணையை மகிந்த ராஜபக்சவிடம் சேர்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

26 செப்டம்பர் 2011

சனல்4 வெளியிட்ட காணொளியை பார்வையிடாத பான் கீ மூன் ஸ்ரீலங்கா வெளியிட்ட காணொளியை பார்வையிட்டாரா?

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக் களங்கள் ஆவணப் படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா. பொதுச் செய லர் பான் கீ மூன் அதற்கு போட்டியாக இலங்கை அரசு தயாரித்த Lies Agreed To ஆவணப் படத்தை பார்வையிட்டிருப்பதாக இன்னர் சிற்றிபிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு ஜனாதிபதி மகிந்த தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றிச் சாதாரணமாகப் பேசியவாறே இவர்கள் சந்திப்பு அறையிலிருந்து வெளியே வந்தனர். அப்போது நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொளியை அவர் ஏற்கெனவே பார்வையிட்டுள்ளார் என்று ஜனாதிபதியைப் பார்த்து பாலித கோஹன கூறியுள்ளார்.
இதனை இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ காணொளியில் பதிவு செய்துள்ளார். பாலித கோஹன கூறியது இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப் படத்திற்குப் போட்டியாக இலங்கை அரசாங் கம் தயாரித்த Lies Agreed To ஆவணப் படமே என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் ஒரு இறுவட்டு ஐ.நா. பொதுச் செயலருக்கு அனுப்பப்பட்டு நீண்ட நாட்களாகியும் அவர் அதனைப் பார்வையிடவில்லை.
ஐ.நா. பொதுச்செயலர் இந்த ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடவில்லை என்றும் ஆனால் அதன் உள்ளடக்கம் பற்றி அவர் அறிந்து கொண்டுள்ளதாகவும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கி கடந்த 22 ஆம் திகதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகி லெ,கேர்ணல் திலீபனின் நினைவு நாள் இன்றாகும்!

சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகவும்,இந்திய அமைதிப் படைக்கு எதிராகவும் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழ விடுதலை புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் லெப்.கேணல் திலீபன் 15.09.1987 அன்று நல்லூர் கந்தசாமி கோயில் எதிரே உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.
மன உறுதியோடும்,கட்டுப்பாடோடும் 12 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் 26.09.1987 அன்று தனது உடலை உருக்கி தியாக மரணம் அடைந்தார்.திலீபனின் தாகம் வீண் போகாது.
திலீபனுக்கு வீர வணக்கங்கள்…….!

மகிந்தவிற்கும் அமெரிக்க நீதிமன்று அழைப்பாணை!அமெரிக்காவை விட்டு வெளியேறுவாரா மகிந்த?

அமெரிக்காவில் தங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது எனத் தெரியவருகிறது. கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேவி எதிர் ராஜபக்ஷ வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
கேணல் ரமேஸின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 செப்டம்பர் 2011

ஜே.வி.பியின் ஊடகப் பிரிவுக்கும் மூடு விழா!வலுக்கிறது பூசல்.

ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜே.வி.பியின் பத்திரிகையான லங்கா பத்திரிகையும், அக்கட்சியின் ஊடகப்பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜே.வி.பியின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு விரிசல் அடைந்து வருகின்றது. இதனால் சிலர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என ஜே.வி.பி யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அவ்வாறு கட்சியிலிருந்து பிரிந்து செல்பவர்கள் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.தமிழ் மக்களின் விவகாரங்களுக்கு அதிகளவான முன்னுரிமை அளித்தல் மற்றும் கட்சியின் தலைமைத்துவம் என்பன தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஜே.வி.பியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கீழ்மட்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு கட்சியிலிருந்து புறம்பாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
அதேவேளை, ஜே.வி.பியின் தற்போதைய தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதால் கட்சிக்குள் காணப்பட்ட பிரச்சினை பிளவாக உருவெடுத்துள்ளது.
இதேவேளை, ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு அரச தரப்பிலுள்ள சில உறுப்பினர்களும் காரணமாக இருக்கலாம் என அக்கட்சியின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கூறினார்.
அரசு, ஐக்கிய தேசியக்கட்சி, அமைச்சர் விமல்வீரவன்ஸ உள்ளிட்ட கட்சிகளின் முயற்சியாக ஜே.வி.பியைப் பிளவுபடுத்த நினைக்கும் என்றால் அது ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கட்சியிலிருந்து எவரையும் விலக்கவோ எவரும் விலகவோ இல்லை என்று கூறிய அவர், இன்னும் சில தினங்களில் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். தற்போது கட்சி உறுப்பினர்கள் சுமுகமாகத் தமது கடமைகளைச் செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்கிறார் சவேந்திர சில்வா!

உலகின் எந்தவொரு நீதிமன்ற விசாரணையையும் சந்திக்கத் தயார் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், தமக்கும் தமது படையணியைச் சேர்ந்த படையினருக்கும் எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு ஷவேந்திர சில்வாவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஷவேந்திரா சில்வா பதிலளிக்க வேண்டுமென அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எந்தவொரு நபரினாலும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஷின் மனைவியும், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சீதாராம் சிவம் என்வரின் மகளும் அமெரிக்க நீதிமன்றில், ஷவேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

24 செப்டம்பர் 2011

சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க நீதிமன்று பிடிவிறாந்து!எந்நேரமும் அமெரிக்காவை விட்டு தப்பியோடலாம்!

அதிரவைக்கும் செய்திகள் தற்போது அமெரிக்காவில் இருந்து வெளியாகியவண்ணம் இருக்கிறது. ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சர்வேந்திர சில்வாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சற்று முன்னர் அமெரிக்காவில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமெரிக்க சிவில் நீதிமன்றம் இந்தப் பிடியாணையைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகத் தமிழர் பேரவை(GTF) உதவியுடனே அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. தற்போது அவர் ஐ.நா வின் கட்டிடத்தில் பாதுகாப்பிற்காக தங்கவேண்டி நிலை தோன்றியுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. ஐ.நா வின் பிரதிநிதி என்ற வகையில் அவர் ஐ.நா கட்டிடத்தினுள் தங்கும்வரை அவரை அமெரிக்க பொலிசார் கைதுசெய்ய முடியாது. இருப்பினும் அவர் அக்கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை தோண்றியுள்ளது.
இதன் காரணமாக அவர் அமெரிக்காவை விட்டு நாளை அல்லது இன்றைய தினம் இரவு வெளியேற வேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது. அவர் பெரும்பாலும் ஐ.நாவின் வாகனத்தில் ஏறி அதன் பாதுகாப்புடன் அமெரிக்காவில் இருக்கும் எதாவது ஒரு விமனாநிலையமூடாக வெளியேறலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் மேல் அடுத்த பேரிடியாக இது வீழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக சட்ட பீடமே இந்த வழக்கைத் தொடுத்ததாகவும், நீதிமன்றில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் இலங்கை இறுதிப்போரில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சுட்டிக்காட்டியும் அப்போது 58 படைப்பிரிவுக்கு தலைமையேற்ற சர்வேந்திர சில்வா இனப்படுகொலை செய்துள்ளதாகவும் வாதாடியுள்ளார்.
இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சர்வேந்திர சில்வாவைக் கைதுசெய்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது. புலம்பெயர் ஈழத் தமிழர் போராட்டங்களில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதோடு ஒரு வரலாறு படைக்கும் விடையமாகவும் பார்க்கப்படுகிறது.
நன்றி:அதிர்வு

23 செப்டம்பர் 2011

ஜெகத் டயஸ் சுவிஸ் வந்தால் விசாரிக்கப்படுவார்!

சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளில் ஒரவரான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், மருத்துவமனைகள், மற்றும் வழிபாட்டு மையங்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர் என்ற அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சமத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு எதிரான தீங்குகளுக்கு சுவிஸ் அமைப்பும், அச்சுறுத்தல்களுக்குள்ளான மக்களின் சமூகம் என்ற அமைப்பும் இணைந்து ஜெகத் டயஸ் மீதான போர்க்குற்ற வழக்கை சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தன. இதைடுத்தே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்தால் அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று சுவிற்சர்லாந்தின் சட்டமாஅதிபர் அறிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்து, வத்திக்கான், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் கடந்த 18ம் நாளுடன் கொழும்புக்கு திரும்பியழைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிருடன் உள்ளவரை இறந்ததாக கூறி ஒப்படைத்த மருத்துவர்கள்!

இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் தமிழகத்தில் அதிகளவான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழ்ந்த இலங்கை அகதியின் தலைவிதியைத் தமிழக வைத்தியர்களும் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, திருச்சி தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறி பிணமாக மூடை கட்டி கொடுக்கப்பட்டவர் உயிர் பிழைத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தன்னேரி (வயது 64) .இவரது மனைவி கோமதி (வயது 56). இலங்கையில் நடந்த கலவரத்தை தொடர்ந்து 1985-ம் ஆண்டு மண்டபம் முகாமுக்கு வந்த இவர்கள் 1996-ல் இருந்து திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஜெயராணி என்ற மகளும், செவ்வந்தி செல்வன், சந்திரன், மோகன்தாஸ் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். பெயின்ரராக பணிபுரியும் இவர்களது மகன் மோகன்தாஸ் 15 ஆம் திகதி இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். திருச்சி கே.எம்.சி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை 3 நாட்கள் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அவர் இறந்து விட்டதாக கூறி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மோகன்தாஸ் இறந்ததை அறிந்து வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு ஐஸ் பெட்டியும் வரவழைத்தனர். ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து மோகன்தாஸ் அம்புலன்சில் ஏற்றப்பட்டார். திடீரென அவரது கை கால்கள் அசையவே அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மீண்டும் தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாக தரப்பு கூறியதாவது, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்ட்ட மோகன்தாஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டி லேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார்.
3 நாட்கள் அப்படியே சிகிச்சை பெற்றதால் இறந்த பிணத்தை வைத்து சிகிச்சை கொடுக்கின்றீர்கள். நாங்கள் வெளியிடத்தில் சிகிச்சை செய்கிறோம் என அவரது உறவினர்கள் தகராறு செய்தனர்.
அதனால் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக அகைன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ் என மோகன்தாஸ் தந்தை தன்னேரி, அண்ணன் செவ்வந்தி செல்வனிடம் கையயழுத்து வாங்கி உயிருடன் தான் கொடுத்தோம். தற்போது திருச்சி அரசு மருத்துமனையில் அதே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் மோகன்தாஸ் உயிரோடு இருக்கிறார். எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு நிர்வாக தரப்பில் கூறப் பட்டது.

நில அபகரிப்பு,இன ஒழிப்பு செய்வதற்கான நடவடிக்கையில்தான் அரசு செயற்படுகிறது!

மகிந்த அரசினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வரும் இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி நான் கூறிய கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானதென்றால் உண்மையினை அரசாங்கத்தால் நிரூபித்துக் காட்ட முடியுமா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார்.
தாம் தெரிவித்த இக் கூற்றுக்கள் ஆதாரமற்றவை என அரசாங்கம் மறுத்துள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் கண்டனம் என்று கூறுவதனை நான் ஏற்க மாட்டேன். தனிப்பட்ட, பெயர் குறிப்பிடாது அரசாங்கம் என்று குறிப்பிடப்ட்டுள்ளது. பெயர் இல்லாத கண்டனம் உண்மையானதல்ல.
நான் உறுதியாகக் கூறுகின்றேன் தமிழர் பகுதிகளில் அரசாங்கம் தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து வருகின்றது. நில அபகரிப்பு, இன ஒழிப்பு செய்வதற்கான நடவடிக்கையில்தான் அரசாங்கம் செயற்படுகின்றது. அரசு இவ்வாறான குடியேற்ற நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும்.
நான் கூறுவது உண்மைக்குப் புறம்பானதென்றால் அரசாங்கம் உண்மையினை நிரூபித்துக் காட்ட வேண்டும். அரசு மோசமான செயல்களில் ஈடுபடுவதற்காகவே பெயர் குறிப்பிடாது செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் அரங்கேற்றப்பட்டு வரும் இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம். தேவை ஏற்படின் நீதிமன்றமும் செல்வோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஆதாரமற்றவை என அரசாங்கம் மறுத்துள்ளதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெ யரை ஏற்படுத்தி அநாவசியமான அழுத்தங்களை கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை என்ற பொய்யான தகவல்களை வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டுவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்து வரும் முயற்சிகள் தேசத்திற்கு ஏற்படுத்தும் பாதகமான செயல்கள் என்றும் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

தளபதி ரமேசின் பாரியாரால் மகிந்தவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கேணல் ரமேஸின் மனைவி, இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.தமது கணவரை கொன்றமைக்கு எதிராக அவர் நேற்று மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயோர்க் தென்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது ஐக்கிய நாடுகள் அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க்கில் தங்கியிருக்கும் நிலையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேணல் ரமேஸின் மனைவியின் சார்பில் வெளிநாட்டவருக்கு தகுதி என்ற அடிப்படையில் இந்த வழக்கை, சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தாக்கல் செய்தார்.
11 சிஐவி 6634 என்ற இலக்கத்தை கொண்ட இந்த வழக்கில், சனல் 4 காணொளியில் கேணல் ரமேஸ், இலங்கைப்படையினரால் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி, அவர் கொல்லப்பட்டதன் பின்னர் மற்றும் ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டியமை என்பன சாட்சியங்களாக தெரிவிக்கப்படடுள்ளன.
இலங்கையின் முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே கேணல் ரமேஸின் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரே போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரங்களாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வெளியிட்ட அறிக்கை. அதில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், தாக்கப்பட்ட மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கு காட்டப்பட்டாத இன்னும் 140 ஆயிரம் பொதுமக்களின் உயிரிழப்பு என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


22 செப்டம்பர் 2011

இலங்கைக்கு எதிராக பிரேரணை!கனடா சமர்ப்பிக்கிறது.

சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையிலான சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரும் தீர்மானமே இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் சபை நேற்று மாலை தெரிவித்தது.
18ஆவது கூட்டத்தொடருக்கான பிரேரணைகள் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற காலக்கெடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு எதிரான பிரேரணையை இன்று காலை கனடா சபையில் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரேரணைக்கு தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்தன.
தனக்கு எதிரான பிரேரணை இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட இலங்கை அரச பிரதிநிதிகள் அதனைத் தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றன என்று ஜெனிவாவில் இருக்கும் தமிழ்ச் செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
கனடாவால் இன்று பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் அது அடுத்த வாரம் விவாதத்திற்கு வரலாம் எனத் தெரியவருகிறது. 18ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்த பிரேரணை விவாதத்திற்கு வரும் பட்சத்தில் இந்தியா விவாதத்திலோ அல்லது வாக்கெடுப்பிலோ கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்கலாம் என ஜெனிவாவில் உள்ள, மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
சீனா இலங்கையைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் எண்ணிக்கையே சபையில் அதிகம் இருப்பதால் அவற்றின் ஆதரவு எந்தப் பக்கம் இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே பிரேரணை வெற்றிபெறுவது தங்கியுள்ளது என்றும் அவை தெரிவித்துள்ளன.