14 அக்டோபர் 2010

தாய்லாந்தில் கைதானவர்கள் நாடு கடத்தப்பட உள்ளார்கள்!

சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் தாய்லாந்தில் இவ்வார ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 155 பேரில் 128 பேர் நாடு கடத்தப்பட இருக்கின்றார்கள் .
பாங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளார்கள் என்று தாய்லாந்தின் குடிவரவு சேவைப் பேச்சாளர் Colonel Worawat Amornwiwat என்று தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- ”155 பேரை பொலிஸார் ஆரம்பத்தில் கைது செய்திருந்தனர்.
ஆனால் உரிய பிரயாண ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடிந்த சிலர் அதன் பின் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். யுத்தம் காரணமாக இலங்கையை விட்டு ஓடி வந்த சிறுபான்மைத் தமிழர்களே இவர்கள். ஐ.நா ஊடாக அரசியல் தஞ்சம் பெற முயன்று வருகின்றார்கள்.
ஆனால் அநேகர் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவிலேயே தாய்லாந்து வந்திருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்கான விசா உடையவர்கள் 60 நாட்கள்தான் இங்கு தங்கி இருக்க முடியும். இவர்கள் அதிக நாட்கள் தங்கி விட்டார்கள். எனவேதான் நாடு கடத்தப்பட இருக்கின்றார்கள் என்றார் அவர்.

தமிழீழம் வேண்டாம் என நான் கூறினேனா ? மனம் திறக்கிறார் ருத்திரா!

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் அவர்கள் பேசியதாக ஒலி நாடா ஒன்று வெளியானது தொடர்பாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒலி நாடாவில் தமிழீழம் வேண்டாம் எனவும், தேசிய தலைவரைப் பற்றிப் பேசவேண்டாம் என்ற தொணியிலும் அவர் உரை அமைந்துள்ளதாக அதனைக் கேள்வியுற்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிர்வு இணையம் திரு.ருத்திரகுமார் அவர்களைத் தொடர்புகொண்டு என்ன நடந்தது என்று கேட்டபோது, அவர் கூறிய பதில்களும் இங்கு ஒலி நாடாவாக இணைக்கப்பட்டுள்ளது.
மக்களே இரு வாதப் பிரதிவாதங்களையும் நாம் உங்கள் முன் வைத்திருக்கிறோம் நீங்களே முடிவுசெய்யுங்கள் எது நிகழ்ந்திருக்கும் என்று....

13 அக்டோபர் 2010

மகிந்தவின் உருவப் படங்களை மின்கம்பங்களில் தொங்கவிட வேண்டுகோள்!

ஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது தமிழர் விரோத இந்திய மத்திய அரசு. கற்பழித்துக் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரிகள்- விண்ணிலிருந்து வீசப்பட்ட கொத்துக்குண்டுகளால் செத்துமடிந்த குழந்தைச் செல்வங்கள்- ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள்- என்று ராஜபக்சே கும்பலுக்கு போர்க்குற்றத்தின் கீழ் கடும் தண்டனை கிடைக்க ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன.
காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது? அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ளமுடியாத மர்மமாக இருக்கிறது.
பகிரங்கமாக இனப்படுகொலை செய்த அந்த போர்க்குற்றவாளிக்கு வரவேற்பு மடல் வாசிப்பதன் மூலம், தமிழரின் அவலத்தை எந்தக்காலத்திலும் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை ஆணவத்துடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்த தமிழின விரோதப் போக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உரிமைகளுக்காகப் போராடிய அப்பாவித் தமிழர்களைப் பேராயுதங்கள் மூலம் அழித்த ராஜபக்சேவின் வருகையை ஒவ்வொரு தமிழரும் கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில், நாளை (அக்டோபர் 14ம் தேதி) தமிழகத்தில் வீதிதோறும் விளக்குக் கம்பங்களில் கழுத்தில் சிகப்புத் துண்டு அணிந்த அந்த சிங்கள வெறியனின் உருவத்தைக் கயிற்றில் கட்டித் தொங்கவிடும்படி தமிழக மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிப்படுத்தும் விதத்தில் அனைத்து தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அந்த உருவத்தை தமிழகமெங்கும் விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தமிழுணர்வுடன்,
புலவர் புலமைப்பித்தன், தமிழருவி மணியன், கவிஞர்கள் தாமரை, இன்குலாப், அறிவுமதி, இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன், புகழேந்தி தங்கராஜ், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், பேராசிரியை சரசுவதி,
வழக்கறிஞர் அஜிதா.

தொடர்புக்கு...
புகழேந்தி தங்கராஜ் (Tamilaga Arasiyal Weekly).... 9841906290

நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு கண்துடைப்பாக அமைந்துவிடக் கூடாது!

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெறுமனே கண்துடைப்பாக அமைந்துவிடக் கூடாது. எதிர்பார்ப்புகளுடன் சாட்சியமளிக்கின்ற மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்வது அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவினால் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பெரும்பாலான தமிழ் மக்கள் சாட்சியமளித்த அதேவேளை மனுக்களையும் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு இதற்கு முன்னரும் பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அந்த ஆணைக்குழுக்களும் அதன் செயற்பாடுகளும் இறுதியில் புஸ்வாணமானதை நாம் கண்டிருக்கின்றோம். அவ்வாறான ஆணைக்குழுக்களினூடாக மக்களுக்கு தீர்வு கிட்டவில்லை.
இந்நிலையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கானது என்ற தொனியில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தமும் நிறைவடைந்து மக்களும் இழப்புக்களைச் சந்தித்து நொந்து போயுள்ள நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவில் எமது மக்கள் பெரும் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
நிவாரணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மிகவும் ஆர்வமாக சாட்சியமளித்து வருகின்றனர். எனவே மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியமானது.
நமது உறவுகளைத் தொலைத்து நிற்கின்றவர்களின் நிலைமைகளை இவ்வாணைக்குழுவும் அரசாங்கமும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.
எனவே முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களைப் போல் அல்லாது தற்போதைய கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும். மாறாக இதுவும் ஒரு கண் துடைப்பாக இருந்து விடக்கூடாது என்பதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும்” என்றார்.

கோழியைக் கேட்டு குழம்பு வைக்கும் யாழ்ப்பாணத் தமிழர் நிர்வாகம்!

கோழியைக் கேட்டு குழம்பு வைக்கும் கலாசாரமே தற்போது யாழ்ப்பாணத் தமிழ் நிர்வாகத்திடம் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆளும் தரப்பிடம் கருத்துக் கேட்டு அவர்கள் மனம் கோணாத வகையில் செயலாற்றுவதே சிறந்த நிர்வாகம் என் றாகிவிட்டது.
இம் மனநிலையால் சாதாரண தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.இதற்கு மேலாக சட்டமென்பது சகலருக்கும் சமம் என்ற தத்துவத்தையும் நாங்கள் மறந்து விடுகின்றோம்.சிங்கள மக்கள் என்றால் அவர்களுக்கே முன்னுரிமை என்ற நினைப்பு.இந்த நினைப்புக்கும் அரசுக்கோ அன்றி சிங்கள மக்களுக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது.மாறாக உயர் பதவிகளில் இருக்கக்கூடிய தமிழ்ப் பெருந்தகைகளின் மனப் பயமும் மனப் பிரமையுமே இத்தகைய பாகுபாட்டிற்குக் காரணமாகும்.
“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ...” என்று கேட்கும் கம்பனின் வீரம் நமக் கும் இருந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.அந்த வீரம் இனப்பற்றிருக்கும் போதே ஏற்பட முடியும். இதுபற்றி எல்லாம் இவ்விடத்தில் குறிப் பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படமாட்டா தென் பதால் அதனை அப்படியே விட்டு விடலாம்.
ஆனால் ஒரு விடயத்தைச் சொல்லித்தானாக வேண்டும். யாழ்.குடாநாட்டிற்கு வருகை தருகின்ற தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களையும் சென்று பார்வையிடு கின்றனர்.மந்திரிமனை,நல்லூர் முருகன் ஆலயம், கோட்டை , நயினை நாகபூ­ணி அம்மன் ஆலயம், வல்லிபுரம், கந்தரோடை இப்படி அவர்கள் பார்வையிடும் இடங்களின் பட்டோலையில் யாழ். பொது நூலகமும் இடம்பெற்றுள்ளது.
சிங்கள ஆட்சியாளர்களால் எரிக்கப்பட்ட யாழ்.பொது நூலகத்தை பார்வையிடுவதால் ஒரு மன ஆறுதல் அவர்களுக்கு இருக்குமாயின் பர வாயில்லை. பொது நூலகத்தைச் சுற்றிப் பார்த்து விட்டுச் செல்லலாம்.ஆனால் அவர்களோ பொது நூலகத்தின் வாசிப்புப் பகுதி ,இரவல் கொடுக்கும் பகுதி என சகலதையும் சுற்றிப் பார்வையிடுகின்றனர்.
எப்படி இருக்கின்றது நிலைமை. அங்கத்துவப் பணம் செலுத்தி உறுப்புரிமை பெற்றால் அன்றி பொது நூலகத்திற்குள் நுழைவது ஆகாது என்ற நிலை இருக்கும்போது இவர்களோ நூற்றுக் கணக்கில் நூலகத்திற்குள் நுழைவதும் பார்வையிடுவதும் மட்டுமன்றி சில புத்தகங்களை தம்மோடு எடுத்துச் செல்வதுமான துயரம் நடக்கின்றனவாம்.
இதைவிட நூலகத்தைப் பார்த்து இது கண் காட்சியா ,இந்தப் புத்தகங்கள் விற்பனைக்கா வைக்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளால் தலை விறைத்துப் போகின்றதாம்.எல்லாம் எங்கள் பல வீனமேயன்றி வேறெதுவுமில்லை.நூற்றுக்கணக்கான யாழ்ப்பாண மக்கள் கொழும்புக்குச் சென்று கொழும்பு நூலகத்தை இப்படி பார்வையிட முடியுமா என்று ஒரு கணம் சிந்தித்தால் ஒரு போதும் நடக்காதென்பதே பதிலாகும்.
அப்படியானால் அந்தச்சட்டத்தை நாமும் நடைமுறைப்படுத்த யாரிடம் கேட்கவேண்டும். கோழியைக் கேட்டு குழம்பு வைக்க நினைத் தால் அதோ கதிதான்.

12 அக்டோபர் 2010

கொலைகாரனுக்குக் கிரீடம்: இந்திய அரசின் ஈனத்தனம்!

தமிழ் இனத்துக்கு எதிராக இந்திய அரசு இழைத்து வரும் துரோகத்துக்கும், அக்கிரமத்துக்கும் எல்லையே இல்லாமல் போய்விட்டது. இலங்கைத் தீவில், இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த மாபாதகன் மகிந்த ராஜபக்சேயை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக, இந்திய அரசு அழைத்து இருக்கிறது.
பிரித்தானியப் பேரரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த பல நாடுகள் காமன்வெல்த் நாடுகள் ஆயின. 71 நாடுகள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள், இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில், 70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன.
விழாவைக் கோலாகலமாகத் தொடங்கி வைக்க, இங்கிலாந்து அரச குடும்பத்தின் பிரதிநிதியாக, இளவரசர் சார்லஸ் இந்திய அரசால் அழைக்கப்பட்டு, அவரும் பங்கு ஏற்றுத் தொடங்கி வைத்தார். நாளை மறுநாள் (14.10.2010) அன்று, இந்தப் போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கு ஏற்று முடித்து வைக்க, தமிழ் இனத்தை இரத்த வேட்டையாடிய ராஜபக்சேக்கு இந்திய அரசு கிரீடம் சூட்டப் போகிறது.
இந்தச் செய்தியையும், ஏடுகளுக்கும், ஊடகங்களுக்குத் தெரியாமல் படு ரகசியமாக,மூடு மந்திரமாக வைத்து இருந்தது. கொழும்பில் இருந்து வெளியாகின்ற இலங்கை அரசின் ஆதரவுப் பத்திரிகையான ‘சண்டே அப்சர்வர்’, இந்திய அரசின் அழைப்பை வெளியிட்டு இருக்கிறது.
இது இந்திய அரசாங்கத்தினுடைய திட்டமிட்ட சதிவேலை ஆகும். முக்கியமான ஒரு நோக்கத்துக்காகத்தான் இந்த அநீதியை இந்திய அரசு செய்கிறது. ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கிய ராஜபக்சே அரசின் குற்றங்களை ஆய்வு செய்ய, ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளர் மூவர் குழுவை அமைத்து உள்ளதாலும், அயர்லாந்தில் டப்ளினில், இந்த ஆண்டு ஜனவரியில் கூடிய, பன்னாட்டு நீதிமான்களின் தீர்ப்பு ஆயம், சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்து உள்ளதாலும், ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்காக, வரிச்சலுகைகளை இரத்து செய்ததாலும், அனைத்து உலக நாடுகளில் சிங்கள அரசு செய்த இனக்கொலை பற்றிய, விழிப்பு உணர்வு வேகமாக ஏற்பட்டு வருவதாலும், மகிந்த ராஜபக்சேயைப் பாதுகாப்பதற்காகவே, இந்த ஈனத்தமான துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
ஏனெனில், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இயக்கியது இந்திய அரசுதான். அளவற்ற ஆயுதங்களை, இலங்கையின் முப்படைகளுக்கும் வாரிக்கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்து, போர்த்திட்டங்களை வகுத்துக் கொடுத்து, உலகின் பல நாடுகள் போர் நிறுத்தம் கேட்டபோதும், ஒப்புக்குக் கூட இந்திய அரசு போர்நிறுத்தம் வேண்டும் என்று இலங்கை அரசுக்குச் சொல்லாமல், போரைத் தீவிரப்படுத்துவதற்கே, அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டது.
எனவே, ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு, இலங்கை அரசோடு, இந்திய அரசும் கூட்டுக் குற்றவாளி ஆகும். தாங்கள் விரும்பியவாறு போரை நடத்திய, இலங்கை அரசுக்கு, உதவ வேண்டியே, இந்திய அரசு இராஜபக்சேயை, இந்தியாவுக்கு அழைத்து வந்து, நான்கு நாள்கள் அரசு விருந்தாளியாக ஏற்கனவே உபசரித்தது. இந்தியாவில் உள்ள மாநிலமாகிய தமிழ்நாட்டில் ஏழுகோடித் தமிழர்கள் வாழும் நிலையில், அந்த இந்திய அரசே இராஜபக்சேயை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை முடித்து வைக்கின்ற கௌரவத்தைக் கொடுத்ததால், ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு, கொடுமை செய்யவில்லை என்ற எண்ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த அநியாயத்தை இந்திய அரசு செய்கிறது.
இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்குத் துரோகத்துக்கு மேல் துரோகமாக இழைத்து வருவது, தொடர்கதையாகிக் கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பத்து இந்தியர்கள் தாக்கப்பட்டதற்கு இந்திய அரசு கொதித்து எழுந்து, ஆஸ்திரேலிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததையும், அதற்கு ஆஸ்திரேலிய அரசும், துக்தரகமும் மன்னிப்புத் தெரிவித்ததாகவும் கர்வத்தோடு தெரிவித்துக் கொள்கிறது.
நியூசிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தில்லி மாநில முதல்வரை அவமதித்து விட்டதாகக் கூறி, இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததற்கு, நியூசிலாந்து அரசு வருத்தம் தெரிவிக்க நேரிட்டது. மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தானோடு போர் தொடுப்போம் என்று, அன்றைய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டல் விடுத்தார். ஆனால், தாய்த்தமிழத்து மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் அன்றாடச் சம்பவங்கள் ஆகிவிட்டன.
அப்படியானால், தமிழர்கள் இந்தியக் குடிமக்களே இல்லையா? இந்திய நாடு என்ற அமைப்பின் எல்லைக்கு வெளியில் தமிழர்களை அந்நியப்படுத்த, இந்திய அரசே திட்டமிட்டு விட்டதா?
வேல் பாய்ந்த இருதயத்துக்கு உள்ளே சூட்டுக்கோலைத் திணிப்பது போல, தற்போது, ராஜபக்சேக்கு, காமன்வெல்த் போட்டிகளை முடித்து வைக்கின்ற மரியாதையை வழங்கி உள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் அரசும், அதனை இயக்குகின்ற தலைமையும், அந்த அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், இந்த இழிவான துரோகத்துக்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தியாவின் முக்கிய இதிகாசமான மகாபாரதத்தில், சபா மண்டபத்தில், சகுனியை யோசனை கேட்டு, துரியோதனன் பஞ்ச பாண்டவர்களுக்கு, இழைத்த கொடுமைகளுக்கு எல்லாம், 13 ஆண்டுகள் கழித்து, குருசேத்திரக் களத்தில் விடை காணப்பட்டது. தமிழ் இனத்துக்கு, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு இழைக்கும் கொடுமைக்கு எல்லாம், உரிய பதிலைக் காலத்தின் தீர்ப்பு வழங்கும்.
‘தாயகம்’ வைகோ

சென்னை - 8 பொதுச் செயலாளர்,
12.10.2010 மறுமலர்ச்சி தி.மு.க.,

எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் கட்டை காற்சட்டையுடன் காணப்படும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தை யார் ஊடகங்களுக்கு வழங்கினர் என்பதை கண்டறிய சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் பொன்சேகாவை பார்க்க சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த புகைப்படத்தை தனது கையடக்க தொலைபேசியில் பதிவுசெய்துள்ளதாக சந்தேகிப்பதாக சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அதிர்வின் கேள்விகளால் அதிர்ந்து போன சுரேஷ்(காணொளி)


வன்னியில் கடந்த வெள்ளியன்று பாடசாலை சென்றுவிட்டு பஸ்ஸில் வீட்டிற்கு பயணம் செய்துகொண்டிருந்த மாணவியை பேரூந்தில் வைத்து இராணுவத்தினர் அங்க சேஷ்டை செய்துள்ளனர். முறிப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேரூந்தில் மொத்தம் 4 பேரே அந்தவேளை பயணித்துள்ளனர். இதில் ஒரு இராணுவ சிப்பாயும் அடங்கும். மீதமுள்ள 2 இளைஞர்களும் அச்சத்தால் ஒதுங்கிக்கொண்டதால், பேரூந்தில் மாணவியின் நெஞ்சுப்பகுதியோடு அங்க சேஷ்டை செய்தது போதாது என்று அம் மாணவி அணிந்திருந்த அதற்கான உள்ளாடையையும் உருவி வெளியே எறிந்துள்ளான் சிங்கள இராணுவ சிப்பாய்.
மாணவியின் கதறலையும், நிலையையும் புரிந்துகொண்ட ஓட்டுனர், பேரூந்தை அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு ஓட்டிச்சென்று அங்குள்ள உயரதிகாரியிடம் முறையிட்டுள்ளார். சாட்சிகள் ஏதும் உண்டா என உயரதிகாரி கேட்க, அதில் பயணித்த 2 இளைஞர்களும், தாம் கண்டதைக் கூறியும், உங்களை துப்பாக்கியால் சுடுவேன் என அந்த அதிகாரி மிரட்டி, தாக்கியும் உள்ளார். இதனால் அவர்கள் அவ்விடத்தில் இருந்து அகன்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களை நாம் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டுள்ளோம். அரசியல் தீர்வு, ஒரு தீர்வுத்திட்டம், 13 ம் திருத்தச் சட்டம் என நாம் எமது நேரத்தைச் செலுத்துகிறோம், ஆனால் மறுபுறமோ மக்கள் அன்றாட, வாழ்வில் இலங்கை இராணுவத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது என்பது பற்றி அதிர்வு இணையம் தனது கேள்விகளைத் தொடுத்துள்ளது. அவர் நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

11 அக்டோபர் 2010

தாய்லாந்தில் தேடுதல் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் கைது!

தாய்லாந்தில், தாய்லாந்து இராணுவத்தினரும்,கனேடியன் இன்ரர்போல் பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 130 ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள், 50 பெண்கள், 7 கர்ப்பிணித் தாய்மார்கள்,13 குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும், கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை 06.30அளவில் தாய்லாந்தின் ஒன்சபோன், சபான்மை, பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்றுவட்டாரப் பிரதேசங்களை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள், தாய்லாந்து இராணுவத்தினர் மற்றும் கனேடிய இன்ரர்போல் பொலிஸார் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்ரர்போலும், தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவர்களை அனுப்பிவைக்கும் பிரதான முகவர்கள், உதவி முகவர்கள், சந்தேகநபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகின்றது.
அத்துடன் இன்றுகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும், கனேடியன் இன்ரர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது என்பவற்றின் பின்னணியின் இலங்கை தூதரகமும், கனேடியன் இன்டர்போலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்துகொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.
அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் அத்துடன் பிரதான முகவர்கள், உதவி முகவர்கள், சந்தேகநபர்கள் ஆகியோரின் பெயர் விபரம் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியிடப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சண்டே லீடர் ஆசிரியரைக் கொல்லச் சதி!

இறுதிக் கட்டப் போரின்போது வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு களத்திலிருந்த இராணுவத்தினருக்கு கட்டளை இட்டது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷதான் என்று சரத் பொன்சேகா தெரிவித்ததாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி குறித்த வழக்கு விசாரணைகள் தற்போது படுசூடாகச் சென்று வருகின்றன. சரத் பொன்சேகா தாம் இவ்வாறு தெரிவிக்கவில்லை என்று மறுத்தாலும்கூட, சரத்தைப் பேட்டிகண்ட சண்டே லீடர் ஆசிரியர் பெட்ரிகா ஜான்ஸ் சரத் இவ்வாறு கூறியது உண்மையே என்று தனது சாட்சியத்தைத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை தொடரவுள்ளது.
இச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சண்டே லீடர் ஆசிரியரைக் கொலை செய்வது தான் தீர்வு எனக் கருதும் பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் இத்திட்டம் குறித்து இரகசிய கூட்டம் ஒன்றைக் கூடியுள்ளனர். இக்கொலைக்கான பழியை சரத் பொன்சேகா சார்பானவர்கள் மீது போடவும் அவர்கள் திட்டமிடுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்கிடையில், உண்மையில் சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்குப் பின்னால் சரத் பொன்சேகாதான் உள்ளார் என்று அரசு பிரதி அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இலங்கையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சிகொடுத்ததா?

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சிகளைக் கொடுத்து இந்தியாவிற்குள் அனுப்பிவைத்ததாக அதன் முன்னாள் ஜனாதிபதி பெர்விஷ் முஷ்ரப் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் மிகவும் பரபரப்பாக இந்தப் பேட்டி ஜேர்மன் ஊடகம் ஒன்றிற்கு முஷ்ரப்பால், வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை தமது நாட்டிலும், அயல் நாடுகளிலும் பயிற்சிகளைக் கொடுத்துள்ளது என்ற சாயலில் அவர் பேட்டி அமைந்துள்ளபோதும், தமது நாடு தீவிரவாதிகளுக்கு பயிற்சிகளைக் கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்பி வைத்த்ததாக அவர் பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார்.
2005 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல பயற்சிகளை எடுத்து இலங்கையில் இருந்து இலகுவாக இந்தியாவுக்குள் சென்றுள்ளதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளது. இந்தியா தமது நட்பு நாடு எனக் கூறிவரும் இலங்கை, போர் வெற்றிக்கும் இந்தியாவே உறுதுணையாக இருந்ததாக பல இடங்களில் கூறிவருகிறது. இந்நிலையில் இலங்கை பன் முகங்களைக் கொண்ட ஒரு பயங்கரவாத நாடாகச் செய்ல்பட்டு வருகின்றமை தற்போது செய்திகளாக கசிகின்றன.
பெர்விஷ் முஷ்ரப் தாம் இலங்கையை நேரடியாகப் பயன்படுத்தியதாகக் கூறவில்லை என்றாலும் அவர் ஜேர்மன் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், இது குறித்து மறைமுகமாக பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து அறிந்திருக்கவில்லையா, இல்லை இலங்கை அரசானது றோவின் கண்களில் மண்ணைத் தூவியுள்ளதா என்ற சந்தேகங்களும் தற்போது வலுக்கிறது.
பெர்விஷ் முஷ்ரப்பின் பேட்டி காரணமாக பாகிஸ்தான் இந்தியாவுக்குள் முறுகல் நிலைதோன்றுகிறதோ இல்லையோ, இந்தியா இலங்கைக்கு இடையே ராஜதந்திர ரீதியாக விரிசல்கள் ஏற்படலாம் என அரசியல் அவதானிகளால் எதிர்வு கூறப்படுகிறது.

10 அக்டோபர் 2010

சரத்துக்காக இலங்கை அரசைக் கண்டித்துள்ளது கனடா தமிழர் அமைப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக குரல்கொடுத்திருக்கும் கனடாவிலுள்ள தமிழ்ச் சமூகம் அவரை நடத்தும் விதம் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இராணுவ ஜெனரல் என்ற முறையில் பொன்சேகாவுடன் எமக்கு பிரச்சினைகள் இருந்தன. ஆனால், அரசியல்வாதி என்ற ரீதியில் அவருடன் எமக்கு வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அவர் அநீதியான முறையில் நடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார் என்று கனடிய தமிழ்க் காங்கிரஸின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி நடத்தப்படும் விதமானது தமிழர்கள் உட்பட தமது எதிராளிகளை இந்த அரசாங்கம் எவ்வளவு கொடூரமாக நடத்துகின்றது என்பதைக் காட்டுகின்றது. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமாகிய நாங்கள் ஆயிரக்கணக்கான தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமன்றி பொன்சேகாவின் விடுதலைக்காகவும் போராடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினரின் கீழ் மத்திய கால முடியாட்சியின் கீழ் இலங்கை சென்றுள்ளது. இந்த ஆட்சிக்கு அதிகாரமளித்த தென்பகுதி மக்கள் விழித்தெழும் வரை இலங்கை இந்த நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கும். ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவுக்காக வாக்களித்த 40 இலட்சம் மக்களை இலங்கை அரசு அவமதித்துள்ளது. மனித உரிமைகளையோ, ஜனநாயகத்தையோ இந்த ஆட்சி பொருட்படுத்தவில்லை என்பதை இது காட்டுகிறது. இலங்கை சர்வாதிகார ஆட்சியின் முனையில் உள்ளது என்று டேவிட் பூபால பிள்ளை தெரிவித்திருக்கிறார்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் திரண்டும் 19 பேர் மட்டுமே சாட்சியம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 1500 க்கும் அதிகமானோர் குழுமியிருந்த போதும் 19 பேரே சாட்சியமளித்தனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழு சாட்சியங்களை நேற்றுப் பதிவு செய்தது. கணவன்மார், மகன்மார், உறவினர்களை இழந்த 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் கண்ணீர் மல்கியவாறு மகஜர்களுடனும் புகைப்படங்களுடனும் வருகை தந்திருந்தனர். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச ஆசன இருக்கைகள் போதாத நிலையில் குழந்தைகளைச் சுமந்த வண்ணம் இவர்கள் நின்றிருந்தனர்.
அனைவரதும் சாட்சியங்களை ஆணைக் குழுவினால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்களின் கடத்தப்பட்ட, காணாமல் போனவர்களது தகவல் தெரித்தவர்கள் மகஜரையும் அதனுடன் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டு செல்லுமாறும் தாங்கள் விசாரித்து நல்ல பதிலைத் தருவோம் எனவும் ஆணைக்குழு தெரிவித்தது. இதனால் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மகஜர்களை வழங்கிவிட்ட தங்களின் கவலைகளை நேரடியாக தெரிவிக்க முடியாமல் அவர்கள் சென்றனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் க.குருநாதன், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய சபை உறுப்பினர் அ.செல்வேந்திரன், மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு பிரதிநிதி கேதீஸ்வரி யோகதாஸ், விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத்தரப்புப் பேச்சாளர் இராசையா இளந்திரையனின் மனைவி வனிதா, விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட இராணுவப் புலனாய்வுத் தளபதி பிரபாவின் மனைவி பிரபாகரன் றொபிற்றா உட்பட 19 பேரே சாட்சியம் அளித்தனர். இதேவேளை, அருட்தந்தை மில்லர் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர். டி.சில்வா மற்றும் உறுப்பினர் எம்.ரீ.எம்.வாவிக் சமுகமளிக்காத நிலையில் நேற்றைய விசாரணையில் ஏ.றொஹான் பெரேரா, மனோகரி இராமநாதன், எஸ்.எம்.ஜீ.எஸ்.பளிக்கக்கார, கரு ஹங்கவத்த, எம்.பீ.பரணகம, சி.சண்முகம் ஆகியோர் பிரசன்னமாகி சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

இந்தியாவின் 4 யுத்தக் கப்பல்கள் இலங்கையில்!

கூட்டுப் பயிற்சிக்காக இந்தியாவின் நான்கு யுத்தக் கப்பல்கள் இலங்கை வந்துள்ளன. இவற்றில் மூன்று நேற்று சனிக்கிழமை காலை பத்தரை மணியளவில் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.என்.எஸ்.வீர், ஐ.என்.எஸ். ஷர்துல் மற்றும் ஐ.என்.எஸ்.வருணா ஆகிய இந்திய யுத்தக் கப்பல்களே திருகோணமலையை வந்தடைந்தன.
ஐ.என்.எஸ்.தரங்கிணி என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினருடன் பயிற்சிகளை மேற்கொள்ளும் நோக்குடன் இந்திய யுத்தக் கப்பல்கள் வந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின. நான்கு கப்பல்களிலும் 160 இந்தியக் கடற்படையினர் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இந்திய, இலங்கை கடற்படையினரின் கூட்டுப் பயிற்சி இலங்கைக் கடற்பரப்பில் இடம்பெறுமென்றும் அவ்வட்டாரங்கள் கூறின.

09 அக்டோபர் 2010

துடிக்கிறது பாவப்பட்ட தமிழினம் நடப்பதோ நாடகமும் நடிப்பும்!

1983ஆம் ஆண்டிற்கு முன்பு, யாழ்ப்பாணத் தில் குடியிருந்தோம் என்று கூறிக்கொண்டு ஒரு தொகுதி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத் திற்கு வருகைதந்து யாழ்.புகையிரத நிலை யத்தில் தங்கியுள்ளனர். இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப் பாண மண்ணை விட்டு வெளியேறிய தென் பகுதி மக்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர் வதில் எந்த ஆட்சேபமும் கிடையாது.ஆனால் எதற்கும் சட்டரீதியாக அணுகு முறை தேவை. யாழ்.மாவட்டத்திலிருந்து 1983ஆம் ஆண்டு வெளியேறிய பின்னர் தென்பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் முத லில் தமது மீளக்குடியமர்வு தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபருடன் கலந்தாலோசித் திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என யாழ். அரச அதிபர் தெரிவிப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.தமது மீள் குடியமர்வு தொடர்பில் எவருக் கும் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் திடீ ரென பஸ்சில் ஏறி யாழ்.புகையிரத நிலையத் துக்கு போய் தங்கியிருப்போம் என முடிபெடுப் பது என்பது எவ்வகையில் சாத்தியமும் பொருத் தமானதுமாகும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
ஆக இதற்குள் ஏதோ வில்லங்கம் இருப் பது மட்டும் எம் சிற்றறிவுக்குத் தெரிகிறது.தமது சொந்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒருசில தமிழ் குடும்பங்கள் முன்பு யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தனர். அந்தக் குடும்பங்களை உடனடியாக வெளி யேறுமாறு பணிக்கப்பட்டது.இதற்கு மேலாக யாழ்ப்பாண மாவட்ட எல் லைக்குள் புகையிரதப் பாதைப் பகுதியில் குடி யிருந்த தமிழ் மக்கள் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். நிலைமை இதுவாக இருக் கும் போது தென்பகுதி மக்களை யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்தது யார்?
அனுமதியின்றி அடாத்தாக அவர்கள் யாழ். புகையிரத நிலை யத்தில் தங்கியிருப்பார்களாயின் அவர்களை வெளியேறுமாறு பணிப்பு விடுவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது எதற் காக?எல்லாமே நாடகமும் நடிப்பும்தான் நடக்கிறது. பாவப்பட்ட தமிழினம் பதவி ஆசைக்காக தன்னினம் விற்கும் கூட்டத்தின் கொடுமைக் குள் ஆளாகியுள்ளது.
எதுவாயினும் 1983 யூலைக்கலவரத்தில் தென்பகுதியில் எல்லாம் இழந்து தங்கள் இருப்பிடத்தையும் இழந்த தமிழ் மக்கள் அந்த இடங்களுக்குப் போகமுடியுமா? அதற்கு வசதிகள் உண்டா? அப்படிப் போக முடிந்தால் எடுத்த எடுப்பில் அங்கு போய்த் தங்கமுடி யுமா? இவற்றையயல்லாம் ஆராய்ந்தால் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள தென்ப குதி மக்கள் ஏற்கனவே போடப்பட்ட திட்டமிட லின் அடிப்படையில்தான் இங்கு வந்துள்ளனர் என்பது தெளிவாகும். அட! நாசமறுப்பு. யாழ்.புகையிரத நிலையத்தில் தேவைக்கதிகமான மலகூடம் அமைக்கும் போதே தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! ஏதோ நாடகம் நடக்கப்போகின்றதென்று.

நன்றி:வலம்புரி

சிங்கள இனவாதிகள் சூழ்ச்சி அம்பலம்: அதிர்ச்சி தகவல்!

இத்தாலி மிலான் நகரில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பல சிங்கள இனத்தவர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள சிங்களவர் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிக்கவும், தமிழர்கள் பக்கம் அவர்கள் கவனத்தை திசை திருப்பவும், நேற்றைய தினம் பல இடங்களில் வினோதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் தெரிவித்துள்ளது.தமிழ் மக்கள் அமைப்பு என்ற பெயரில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதோடு, மகிந்தவுக்கு தமிழர்கள் வாழ்த்து தெரிவிப்பது போலவும் இது அமைந்துள்ளது. இத்தாலியில் சரத்பொன்சேகா ஆதரவாளர்களும் தமிழர்களுக்கும் இடையே மோதல் ஒன்று வெடிக்கவேண்டும் என்ற காரணத்திற்க்காவும், ஆதரவாளர்களைத் திசை திருப்பவுமே இவ்வாறான சுவரொட்டிகளை சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதியில் விஷமிகள் ஒட்டியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இத்தாலியில் தமிழ் மக்கள் அமைப்பு என்று ஒன்றும் கிடையாது என்பதே உண்மையாகும்.

08 அக்டோபர் 2010

பெண்கள் மீது சேட்டை!சிங்கள சிப்பாய்க்கு செம சாத்து.

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்குள் இன்று அதிகாலை 1.00 மணி அளவில் புகுந்து அங்கிருந்த பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற சிங்கள சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் மரத்தில் கட்டிப்போட்டு நன்றாக நையப் புடைக்கப்பட்டார்.
அங்கு அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மீனவக் குடும்பங்கள் இது போன்ற குடியிருப்புக்களில் வசிக்கின்றார்கள். ஆண்கள் மீன்பிடித் தொழிலுக்காக மாலையில் கடலுக்கு சென்று காலையில்தான் கரைக்கு திரும்புகின்றமை வழக்கம்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிங்கள சிப்பாய்கள் இக்குடியிருப்புக்களுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து பெண்கள் மீது சேட்டைகள் புரிந்து வந்திருக்கின்றார்கள். கடந்த மூன்று நாட்களாக சிப்பாய்களின் சேட்டைகள் கடுமையாக அதிகரித்து இருந்தன. இந்நிலையில் குறித்த சிப்பாய் குடியிருப்புக்குள் புகுந்தபோது அங்கிருந்த பெண்கள் பெரிதாக சத்தமிட்டிருக்கின்றனர்.
பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து மரம் ஒன்றில் கட்டி வைத்து நன்றாக அடித்தார்கள். காலையில் மருதங்கேணி உதவி அரச அதிபர் அலுவலகத்தைச் சேர்ந்த சிவில் அதிகாரிகள், வடமராட்சி கிழக்குக்கான கட்டளை இடும் சிங்களப்படை அதிகாரி ஆகியோரை நேரில் அழைத்து வந்து சிப்பாயை கையும் மெய்யுமாக பிடித்திருக்கின்றமையை காட்டினர்.
அப்பகுதி மக்கள் , சிவில் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் வைத்து படை அதிகாரி அச்சிப்பாய்க்கு அடி போட்டார், அத்துடன் இனி மேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்று வாக்குறுதி வழங்கி விட்டு சிப்பாயை மீட்டுக் கொண்டு போனார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வெட்டிக்கொலை!

கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். வெங்கடாசலம் படுகொலையைத் தொடர்ந்து தொடர்ந்து புதுக்கோட்டை முழுவதும் பதட்டமாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வட காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளராக இருந்தார். ஆலங்குடி தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மாநில அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், 2001-ம் ஆண்டு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ராஜதுரை, ராஜபாண்டி, ராஜராஜன் என்ற 3 மகன்களும், பவளக்கொடி, சுமதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். ராஜதுரை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளராக உள்ளார்.
58 வயதான வெங்கடாசலம் தனது கிராமத்தில் பிள்ளையார்கோவில் கட்டி வருகிறார். நேற்று மாலை கோவில் கட்டும் பணிகளைப் பார்வையிட்டு விட்டு வீடு திரும்பினார். வீட்டிற்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். வீட்டுக்குள் மனைவி, மகன் இருந்தனர்.
சிறிது நேரத்தில் வெங்கடாசலத்தின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், மகனும் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் வெங்கடாசலம் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
அவரது ஒரு கையின் மணிக்கட்டு வரை வெட்டி துண்டாகிக் கிடந்தது. மார்பு, முதுகு, வயிறு என சரமாரியாக அவரை வெட்டியிருந்தனர்.
அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து வெங்கடாசலத்தை மீட்டு புதுக்கோட்டைக்குக் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் இரவில் மரணமடைந்தார்.
ஆனால் அவரது உடலைப் பெற்றுக் கொள்ள உறவினர்கள் மறுத்து விட்டனர். இதனால் இன்னும் வெங்கடாசலத்தின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.
புதுக்கோட்டை முழுவதும் கடையடைப்பு:
வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் புதுக்கோட்டை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
வட காடு பகுதியில் பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ் ஜீப்பை பொதுமக்கள் திரண்டு சென்று முற்றுகையிட்டு தீயிட்டுக் கொளுத்தினர். பஸ்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
வடகாடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இதனால் அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தஞ்சை, திருச்சியிலிருந்தும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. முத்துச்சாமி முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.
புதுக்கோட்டை முழவதும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் நடப்பது போல பதட்டம் காணப்படுகிறது. பஸ்கள் எதுவும் புதுக்கோட்டையி்ல் இயக்கப்படவில்லை.
பல இடங்களில் சாலை மறியல் நடந்துள்ளது. அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
அரசியல் தகராறால் கொலையா?
வெங்கடாசலம் தாக்கப்பட்டவுடன் ஒரு கார் படு வேகமாக அவரது வீட்டுப் பகுதியிலிருந்து கிளம்பிச் சென்றதை பலரும் பார்த்துள்ளனர். எனவே அதில் வந்த நபர்கள்தான் கொலைசெய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அரசியல் தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
வெங்கடாச்சலம் 1996 சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஆலங்குடியில் வெற்றி பெற்றார். பின்னர் அவர் அதிமுகவில் சேர்ந்தார். அதன் பின்னர் அதிமுக சார்பில் ஆலங்குடியில் போட்டியிட்டு வென்றார்.
2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியைப் பிடித்த பின்னர் அமைச்சரானார். ஆனால் வெறும் 40 நாட்கள் மட்டுமே அப்பொறுப்பில் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா கண்டனம்-இரங்கல்:
முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்டது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனமும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் அ.வெங்கடாசலம், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே முகமூடி அணிந்த மர்ம மனிதர்களால் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அவர், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் இருந்து 3 முறை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்.
அவரை கொடூரமான முறையில் கொன்ற மர்ம மனிதர்களை உடனடியாக கண்டுபிடித்து, கைது செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான கொலைவெறி தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெங்கடாசலத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் புலனாய்வு! ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலர் வலியுறுத்து!

இலங்கையில் கடந்த வருடம் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் சுதந்திரமான புலனாய்வு விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார் ஐ.நா சபையின் உதவிச் செயலாளர் நாயகமாக இருந்த Denis Halliday.
இவர் அயர்லாந்தின் தலைநகர் டுப்ளினில் இடம்பெற்ற கூட்டங்கள் இரண்டில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
இலங்கை மறக்கப்பட்டு விட்டது. இலங்கையால் இழைக்கப்பட்ட மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மறக்கப்பட்டு விட்டன. அவை கருத்தில் கொள்ளப்படாமல் உள்ளன.”
இவர் இக்கூட்டத்தில் இலங்கையால் மேற்கொள்ளப்பட்டன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்கான ஆதாரங்களையும் முன்வைத்து இருந்தார்.

சோபித தேரரைக் கொலை செய்ய முயற்சியா?

சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல பிக்குகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சரத் பொன்சேகாவுக்குப் பதில் தம்மை சிறையில் அடைக்குமாறு கூறிய சோபித தேரர் சென்ற வாகனம் நேற்று விபத்துக்குள்ளானதில் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. சோபித தேரர் நேற்றுக் காலையில் கண்டி தலதா மாளிகை நோக்கி சென்று கொண்டிருந்தார். கொழும்பில் இருந்து புறப்பட்ட இவரின் வாகனத்தை பின் தொடர்ந்து முன்னாலும் பின்னாலும் லொறிகள் வந்து கொண்டிருந்ததாகவும் திடீரென அந்த லொறி தனது வாகனத்தில் மோதியதாகவும் அதனால் தனது வாகனம் சேதமுற்றதுடன் தான் உயிர் தப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே இந்த விபத்து என்பது திட்டமிட்ட ஒரு கொலை முயற்சி என்று தேரர் பொலிசில் புகார் செய்துள்ளார். அரசுக்காக அடிதடிகளில் இறங்கும் பிரதி அமைச்சர் மேவின் சில்வாவின் விளையாட்டாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.