16 நவம்பர் 2010

வடக்கில் படையினரின் அட்டகாசம் ஓயவில்லை!

நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் சரிசமமாக நடத்தப்படுகின்றனரா? அவர்கள் சரியான உரிமையோடு வாழ்கின்றார்களா? அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்படுகின்றதா? என்பதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந் நாட்டில் வாழும் தமிழர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வடக்கில் தற்போது யுத்தம் முடிவடைந்தும் இராணுவத்தினரின் அட்டகாசம் ஓயவில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல இயந்திரங்களுடைய உதிரிப்பாகங்கள் பிரிக்கப்பட்டு பின்னர் இரும்பு வாணிபத்துக்காக தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அண்மையில் வட பகுதியில் 6 ஆம் திகதியன்று கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேசத்தின் கிராஞ்சி பகுதியில் உள்ள மொட்டையன்குளம் என்ற கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரை இரண்டு இராணுவத்தினர் இணைந்து அதிகாலை 4 மணயளவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். இதனை அருகில் உள்ள இராணுவ முகாமுக்குச் சென்று முறைப்பாடு செய்தும் கூட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முறைப்பாடும் செய்யும் போதும் எமது மக்கள் தமிழ் மொழியில் முறைப்பாடு செய்ய அனுமதி வழங்குவது இல்லை. இதனால் இவர்களின் முறைப்பாடுகள் சிங்கள மொழியிலேயே பதிவு செய்யப்படுகின்றது. எதனை பதிவு செய்கின்றார்கள்? எதற்காக தங்களிடம் கையெழுத்து வாங்குகின்றார்கள் என்பது கூடத் தெரியாத சூழலில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் கொலை, கொள்ளை என்பன அதிகரித்துள்ளது. இவ்வாறான விடயங்களில் அரசு ஒரு மந்தப்போக்கைக் கடைப்பிடிக்கின்றது. என மேலும் தெரிவித்தார்.

15 நவம்பர் 2010

தேன் நிலவுக்கு தென்னாபிரிக்கா சென்ற ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்!

தனது பிரித்தானிய கணவருடன் தேன்நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றிருந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அனி தீவானி (28) , மற்றும் இவரது கணவரான ஸ்ரயன் (30) ஆகியோர் இருவாரங்களுக்கு முன்னர் மும்பையில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இருவரும் தங்களது தேன் நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றனர்.
சனிக்கிழமை இரவு இருவரும் தங்கள் இராப்போசனத்தை முடித்துவிட்டுத் தங்கள் காரில் தங்கியிருந்த விடுதிக்கு புறப்பட்டனர்.
இதன்போது அவர்களது காரை வழிமறித்த துப்பாக்கிதாரிகள் இருவர், கார் சாரதியை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
சுமார் 1 மணி நேர பயணத்திற்கு பிறகு ஸ்ரயனிடம் உள்ளவற்றை கொள்ளையடித்த அந் நபர்கள், அவரையும் காரிலிருந்து கீழே தள்ளி காரை மறுபடியும் ஓட்டிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க பொலிஸார் தேடல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அதன்போது அனி தீவானியின் சடலம் சுடப்பட்ட நிலையில் அவர்கள் பயணம் செய்த காரின் பின் இருக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேரிப்பகுதியொன்றில் கார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இவரது உடைமைகள் அனைத்தும் இதன்போது கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும் இவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சுடப்பட்டிருக்கலாம் அல்லது கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்க பொலிஸார் இக்கொலை தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து இவர்கள் இருவரினதும் குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது.

நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்களவர்கள் உடன் வெளியேற வேண்டும்!

நாவற்குழியில் அரசாங்கக் காணிகளில் குடியேறிய சிங்களக் குடும்பங்கள் ஒரு வாரத்திற்குள் வெளியேற்றப்படவேண்டும். தவறினால் நீதிமன்றங்களை நாடுவதே ஒரேவழியாகும்.இவ்வாறு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
அவரின் இல்லத்தில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,நாவற்குழியில் அரசாங்க காணிகளில் திடீரென குடியேறிய சிங்கள குடும்பங்களின் நடவடிக்கை அரசியல் பின்னணி கொண்டது மாத்திரம் அல்லாது முற்றிலும் சட்டவிரோதமானதுமாகும்.
தென்னிலங்கையில் இருந்து யாழ்.புகையிரத நிலைய கட்டிடங்களில் அத்துமீறி குடியேறி, தற்போது நாவற்குழிக்கு நகர்ந்து அரசாங்க காணியில் குடியேறியுள்ளனர். இந்த நடவடிக்கையின் பின்னணியில் பலமானதோர் அரசியல் சக்தி செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இது ஓர் ஆழம் பார்க்கும் நடவடிக்கை. இதனை ஒரு பொழுதும் கைகட்டி பார்த்திருக்க முடியாது. இந்த சிங்கள குடும்பங்களுக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தமாகக் காணிகள்இல்லை. இவர்கள் இங்கு 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வசித்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. ஒருசிலர் இங்கே வாழ்ந்திருக்கக் கூடும்.
நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் காணிகளை சொந்தமாக வாங்கி குடியேறுவதையோ அல்லது வாடகைக்கு வீடுகளை எடுத்து வசிப்பதையோ எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் முன்பு இங்கு வாழ்ந்தோம் எனக் கூறிக்கொண்டு அரசாங்க காணிகளில் அத்துமீறி குடியேறு வதில் அரசியல் நோக்கம் இருப்பது அப்பட்டமானது. இந்த சட்டவிரோத நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டே ஆகவேண்டும்.
அரசாங்கக் காணிகள் தொடர்பில் இலங்கையின் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கமும் வட மாகாண சபையும் அதிகார ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன. எனவே இந்த இரண்டு தரப்பும் நாவற்குழி விவகாரம் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளன. இச் சட்டவிரோத குடியேற்றவாசிகளை சம்பந்தப்பட்ட அரசாங்க காணிகளில் இருந்து அப்புறப்படுத்தவோ அல்லது அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கவோ இலங்கை அரசாங்கமும் வடமாகாண சபையும் தவறினால் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இதற்கென ஏற்கெனவே கொழும்பில் உயர் நீதிமன்றங்களில் தொழில் புரியும் தமிழ் சட்டத்தரணிகள் சிலரைக்கொண்ட குழு சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

14 நவம்பர் 2010

ஊசி ஏற்றப்பட்ட மற்றொரு பெண்!

குவைத் சென்று அங்கிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட வீரையா லட்சுமி என்ற மற்றொறு பெண்ணுக்கும் ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரது உடம்பில் இருந்து ஒன்பது ஊசிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இன்னும் 5 ஊசிகள் அகற்றப் படவுள்ளாதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சத்திர சிகிச்சைக்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுத்ததாக குருநாகல் வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எஸ்.ராஜமந்திரி தெரிவித்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத்தில் வைத்து தனது மாதாந்தச் சம்பளத்தைக் கேட்டபோது தன்னை துன்புறுத்தி சித்திரவதை செய்து ஊசி ஏற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊசிபோன்ற மெல்லிய கம்பிகளே அவ்வாறு ஏற்றப்பட்டுள்ளன.

சரணடைந்த புலி உறுப்பினர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில்!

வன்னி இறுதி யுத்தத்தின் பின் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்து சரணடைந்தவர்களை இராணுவம் இரகசிய தடுப்பு முகாம்களிலும் வைத்துள்ளது என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் பொதுமக்கள் சாட்சியமளித்தனர்.
இக் கருத்தை ஏற்றுக்கொண்ட ஆணைக் குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா, பதிவு செய்யபடாத தடுப்பு முகாங்களிலும் தாம் விசாரணைகளை மேற்கொள்வோம் எனப் பதிலளித்தார். ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நேற்று கரவெட்டி, பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவு மக்களின் சாட்சிகளை நெல்லியடி கலாசார மண்டபத்தில் பதிவு செய்தது. இதன்போது சாட்சியமளித்த உதயபாஸ்கரன் பத்சலா என்ற தாயார் தெரிவிக்கையில்,
எனது மகள் உதயபாஸ்கரன் நிரோயினி (வயது 17) விடுதலைப்புலிகள் பிடித்துச் சென்று தமது அமைப்பில் உறுப்பினராக வைத்திருந்தனர். நான் இறுதியாக எனது மகளை 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி சந்தித்தேன். அதற்குப் பின் நான் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டேன். பின்னர் எனது மகள் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அவருடன் கல்வி கற்ற நண்பி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றில் முறைப்பாடு செய்தும் மகள் தொடர்பில் எதுவித தக வல்களுமில்லை. அத்துடன் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து முகாம்களுக்கும் சென்று பார்த்தபோது அங்கேயும் எனது மகள் இல்லை.ஆனால் எனது மகள் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.எனவே இராணுவம் இரகசியத் தடுப்பு முகாமில் எனது மகளை தடுத்துவைத்துள்ளது என கண்ணீருடன் தெரிவித்தார்.
காயமடைந்திருந்த மகன் இராணுவத்தினரிடம் உள்ளார்
இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த பருத்தித்துறையைச் சேர்ந்த வல்புரன் மார்க்கண்டு தெரிவிக்கையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடம் கணிதத்துறையில் படிப்பை மேற்கொண்டு வந்த எனது மகன் மயூரன் பல்கலைக்கழகப் பகிஷ்கரிப்பினால் வீட்டில் தங்கியிருந்தார்.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி நானும் மனைவியும் ஏனைய 05 பிள்ளைகளும் கோயிலுக்குச் சென்றபோது மயூரன் மட்டும் வீட்டில் இருந்தார். எனினும் பிற்பகல் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மயூரன் வீட்டிலில்லை. ஆனால் வீட்டு வாசலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்துசென்ற அடையாளத்தைக் கண்டு சந்தேகமடைந்த நான் உடனடியாகவே பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார் உடனடியாகவே முகமாலைப் பொலிஸாரிடம் கேட்டபோது அதே தினம் 3.20 மணிக்கு மார்க்கண்டு மயூரன் என்பவர் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிக்கு செல்லக் குறிப்பிட்டு முகமாலை சோதனைச் சாவடியைத் தாண்டி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது தெரியவந்தது.
பின்னர் 6 மாதங்களின் பின் வன்னியிலிருந்து இணையத்தளத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மகன் விடுதலைப்புலிகள் அமைப்பில் மீளமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார். பின்னர் அவரைப் பார்ப்பதற்கு பல முயற்சிகள் எடுத்தும் முடியாமற் போனது.
இந்நிலையில் 2009 ஆம் ஆணடு மே மாதம் 10 ஆம் திகதி இணையத்தள தொலைபேசி மூலம் வேறொருவர் அழைத்து மயூரன் காயமடைந்து விட்டதாகத் தகவல்தந்தார். இதனைத் தொடர்ந்து போர் நிறைவடைந்த நிலையில் நான் வெலிக்கந்த, பொலநறுவை, ஓமந்தை என விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மற்றும் செட்டிக்குளம் நலன்புரி முகாம் என அனைத்திலும் தேடியும் மயூரன் இல்லை.
ஆனால் கடந்த யூன் மாதம் குருநாகல் வைத்தியசாலையில் வைத்து மகனை சந்தித்ததாக ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து நான் அங்கு சென்றேன்.ஆனால் மயூரன் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்த ஒருவர் குருநாகல் வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டமை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலைக்குச் சென்றும் அங்கு எனது மகன் இல்லை. எனவே எனது மகனின் தகவலைப் பெற்றுத் தரு மாறு கேட்டுக் கொள்கின்றேன் என தந்தையார் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
இராணுவம் தூக்கிச்சென்ற எனது கணவரை மீட்டுத்தாருங்கள் இவ் விசாரணையில் திருமதி ரஞ்சிதன் சாட்சியமளிக்கையில், வன்னி இறுதி யுத்தத்தின்போது செல் வீச்சில் காயமடைந்த எனது கணவரான இரட்ணம் ரஞ்சிதனே இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வரும் போது என்னால் அழைத்து வரமுடியவில்லை.
எனது பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அவரை அங்கேயே விட்டு நான் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டேன். நான் வவுனியா வலயம் 4 முகாமில் தங்கியிருந்தேன் எனினும் முள்ளிவாய்க்காலில் காயமடைந்திருந்த எனது கணவரை 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இராணுவத்தினர் தூக்கிச் சென்றதாக கண்டவர்கள் கூறினார்கள்.
ஆனால் அவர் தொடர்பில் எந்தத் தகவலும் அதற்குப்பின் எனக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் எனது சகோதரனும் அவரது மனைவியும் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் அவர்களது 3 பிள்ளைகளையும் என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். தற்போது சசோதரனும் அவரது மனைவியினதும் தகவல் ஏதுமில்லாத நிலையில் பிள்ளைகள் என்னிடம் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
கொழும்பில் வைத்துஎனது கணவரை இராணுவம் கடத்தியது
இவ் விசாரணையில் சாட்சியமளித்த கரணவாயைச் சேர்ந்த திருமதி பிரேமசிறி சுதர்சினி, 2006 ஆம் ஆண்டு யூலை 3 ஆம் திகதி கொழும்புக்கு சென்ற எனது கணவர் செல்லையா பிரேமசிறியை காணவில்லை.கொழும்பில் புதிய செட்டித்தெருவில் விடுதி ஒன்றில் வெளிநாடு செல்வதற்காக தங்கியிருந்த எனது கணவரை 2006 ஆம் ஆண்டு 3 ஆம் திகதி சீருடையில் வந்த இராணுவத்தினர் கடத்திச் சென்றனர் என அவர் தெரிவித்தார்.
கருணா குழுவினர் எனது கணவரை கடத்தினர்
இவ்விசாரணையில் சாட்சியமளித்த திருமதி பாலகுமார், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கொழும்பு சென்ற எனது கணவர் செல்வராசா பாலகுமார் கொழும்பில் தங்கியிருந்த வேளை கருணா குழுவினரால் கடத்தப்பட்டார். இக்கடத்தலில் கருணா குழுவைச் சேர்ந்த குணபாலசிங்கம் ஜினதாஸ் தலைமையில் 10 பேர் கொண்ட ஆயுதக் குழுவினரே கடத்திச் சென்றனர் என திருமதி பாலகுமார் சாட்சியமளித்த வேளை இரகசியமாக உங்கள் சாட்சியத்தைப் பதிவுசெய்து கொள்கிறோம் என ஆணைக்குழுவினர் தெரிவித்தனர். இவற்றை செவிமடுத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா, பதிவுசெய்யப்பட்ட மற்றும் இரகசிய இராணுவ முகாம்கள் குறித்து விசாரணை செய்வதாக உறுதியளித்தார்.

13 நவம்பர் 2010

ஜெர்மன் நாட்டு முதியவர் இலங்கையில் கொலை!

மொறட்டுவையில் 90 வயதான ஜேர்மன் நாட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சிங்கள மனைவிக்குப் பிறந்த மகன் ஒருவரே இவரைக் கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டர் ஸ்ரப்பிள் எனும் ஜேர்மனியரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவர் இலங்கைக்கு வந்து சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.
இவரது மனைவி அண்மையில் மரணமடைந்தார். இதனையடுத்து ஜேர்மனியர் வேறொரு திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் சிங்கள மனைவிக்குப் பிறந்த மகனுக்கும் இவருக்கும் இடையில் சொத்து குறித்துத் தகராறு எழுந்தது.
ஆத்திரமடைந்த மகன், மொரட்டுவை இல்லத்தில் வைத்துத் தந்தையை பொல் ஒன்றால் அடித்துக் கொன்றுவிட்டு, கண்டியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார்.
பின்னர் திரும்பிவந்து, மொறட்டுவைப் பொலிஸில் சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவின்படி இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம்!புத்திஜீவிகள் சாட்சியம்.

கடந்த காலங்களில் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் விடுதலைப்புலிகள் வரையில் தென்பகுதி அரசியல் தலைவர்கள், அரசாங்கங்களுடன் நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக தோல்வியிலேயே முடிபடைந்தன.ஆயினும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எந்த முடிபும் காணப்படவில்லை என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் நேற்று சாட்சியமளித்த புத்திஜீவிகள் சுட்டிக்காட்டினர்.
நேற்று பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், பேராசிரியர் ஜீவன் கூல், பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்டோர் நேற்று சாட்சியமளித்தனர். சாட்சியத்தின் போது ஒரே கருத்துக்களை முன்வைத்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திவருகின்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் இரண்டாவது நாளாக நேற்று அளிக்கப்பட்ட சாட்சியங்களில் பெரும்பாலானவை இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்தினரால் கூட்டிச் செல்லப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்களின் கதி என்ன என்பது தெரியாதிருப்பதாக நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று அளிக்கப்பட்ட சாட்சியத்தின் போது தமிழர்களது இன அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஆட்சியதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் மற்றும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் விடுதலைப்புலிகள் வரையில் தென்பகுதி அரசியல் தலைவர்கள், அரசாங்கங்களுடன் நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக தோல்வியிலேயே முடிபடைந்ததாகவும் ஆயினும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முடிபு காணப்படவில்லை என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் நேற்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.
அரசியல் தீர்வு அவசியம்:
தமிழர் தாயகமாகிய வடகிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மொழிவழித் தமிழ் அரசின் அமைப்பில்தான் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் நேற்று நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறினார்.
இத்தகைய அரசு பிராந்திய அடிப்படையிலே வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற நேரத்தில் மத்தியில் போதியளவு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்.இவ்வாறான நிலைப்பாட்டிலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். இதற்கான அடிப்படைக்காரணங்களைப் பார்க்கும்போது அரசியல் திருத்தங்களிலே அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அமைகின்ற அரசியல் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லை.இவ்வாறான அரசியல் திருத்தச் சட்டங்களை மாற்றி அமைக்கின்ற போதே பல்லின மக்கள் பரந்து வாழ்கின்ற நாடாக இலங்கை புதுப்பொலிவு பெறும் என்றார். ஆயுதப் போராட்டம் ஏற்படலாம்
யுத்தம் முடிபடைந்துள்ள போதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிபு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வருவதை எவராலும் தடுக்கமுடியாது என நல்லிணக்க ஆணைக்குழு முன் சீ.வீ.கே சிவஞானம் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.அடிப்படையான கட்டுமானப் பணிகளை செய்வதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு முடிபை எட்டமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அரச கரும மொழியாக தமிழை உள்ளடக்க வேண்டும்:
அரசியல் அமைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தமிழ் மொழியை அரச கருமமொழியாக அறிவிக்க வேண்டும் என பேராசிரியரும் சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவின் தலைவரு மான பொ.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தமிழ்க் கைதிகளின் விடுதலை, மீள் குடி யேற்றம் போன்றவை குறித்து பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

12 நவம்பர் 2010

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் மதிவாணன் கொடிய நோயினால் சாவடைந்தார்!

நாம் தமிழர் கட்சியின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.மதிவாணன் அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடந்த நான்கு நாட்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தினமும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் நாம் தமிழர் கட்சியினரும் அவரது உடல்நிலையில் கவலைகொண்டு மருத்துவமனையில் இரவுபகலாக இருந்தனர்.
இப்போது திரு.மதிவாணன் அவர்களது உடல் மதுராந்தகத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போன்தூர் கிராமத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. அவரது உடல் மாலை 4 மணிக்கு இறுதி மரியாதை மற்றும் தகனம் செய்யப்படும்.
திரு.மதிவாணன் அவர்கள் சிறந்த மனிதஉரிமை போராளி. அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பு.
தமிழர்கள் அனைவரும் திரு.மதிவாணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வாரீர்.
மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட மருத்துவ செலவிற்கும் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவி செய்ய கீழ் உள்ள நாம் தமிழர் கட்சி வங்கி கணக்கில் செலுத்துக.
வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)
கணக்கு பெயர் : NAAM TAMIZHAR KATCHE
(A/C NAME)
கணக்கு எண் : 067302000002501.
(A/C NO)
IFSC எண் : IOBA0000673
(IFS Code)
SHIFT MESSAGE
CENTRAL OFFICE : IOBAINBB001, dealer : IOBAINBB876
கிளை : ராயபுரம். சென்னை. தமிழ்நாடு.
Branch : Royapuram, Chennai, Tamilnadu.
மற்ற மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்க:
மின்னஞ்சல் : donate@naamtamilar.org
தொலைபேசி : ராஜா +91 9380 888 111 begin_of_the_skype_highlighting +91 9380 888 111 end_of_the_skype_highlighting, ராசீவ்காந்தி + 91 9842 521 338 begin_of_the_skype_highlighting + 91 9842 521 338 end_of_the_skype_highlighting.

எனது கணவர் எங்கே?யோகியின் மனைவி உருக்கம்.

இராணுவத்திடம் சரணடையும் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழக்கப்படும் என்ற அறிவித்தலை ஏற்றே எனது கணவர் சரணடைந்தார்.ஆனால் இன்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை என விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் யோகியின் மனைவி ஜெயவதி தெரிவித்தார்.
நேற்று அரியாலை சரஸ்வதி சன சமூக நிலைய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது, வன்னியில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தினால் இடம் பெயர்ந்து கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி நாங்கள் வட்டுவாகல் பிரதேசத்தைச் சென்றடைந்தோம். மறுநாள் 18ஆம் திகதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை சென்றடைந்தோம்.
அங்கு இராணுவத்தினரிடம் சரணடையும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.இதனை நம்பி எனது கணவர் யோகரட்ணம் யோகி, கவிஞர் புதுவை இரத்தினதுரை, கல்விப்பிரிவைச் சேர்ந்த பேபி சுப்பிரமணியம், அரசியல் பிரிவைச்சேர்ந்த லோரன்ஸ் திலகர் உட்பட 50இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். சரணடைந்த அனைவரும் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டனர். அவர்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு, அவ் வாகனம் புறப்படும் வரை நான் சம்பவ இடத்திலேயே நின்றிருந்தேன்.
இன்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் எனது கணவர் தொடர்பான எந்தவிதமான தகவல்களும் எவராலும் எனக்கு தெரி விக்கப்படவில்லை.சரணடைந்தவர்கள் தொடர்பில் அண்மையில் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் எனது கணவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.
சரணடைந்தால் பொதுமன்னிப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் சரணடைந்த எனது கணவர் எங்கே? தயவு செய்து அவர் தொடர்பான தகவல்களை பெற்றுத்தாருங்கள் என அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தார்.

கைதுகள்,காணாமல் போதல்களுக்கு படையினரே பொறுப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கைது சம்பவங்களுக்கும் காணாமல் போன சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் முழுத் தொடர்பு இருப்பதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. நேற்று அரியாலை சரஸ்வதி கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசார ணைக்குழு முன் சாட்சியமளித்த பெருமளவானோர் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரைக் கண்டால் அவர்களை அடையாளம் காட்ட தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கைதுச் சம் பவங்களுக்கும்,காணாமல் போன சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் முழுத்தொடர்பு இருப்பதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தவர்கள் தெரிவித்தனர்.அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விசாரணையின் போதே இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இதில் கோண்டாவிலைச் சேர்ந்த சத்தியாதேவி என்பவர் சாட்சியமளிக்கையில், எனது மகன், அவரது மனைவி 3 பிள்ளைகளுடன் நான் வசித்துவந்தேன்.
2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி இரவு 8.45 மணியளவில் எமது வீட் டுக்கு வந்த இராணுவத்தினர் விசாரணைக்கென எனது மகனை அழைத்துச் சென்றனர்.ஆனால் அவர் இன்று வரை விடுதலை செய் யப்படவில்லை. எனது மகனை இராணுவத்தினர் அழைத்துச் சென்ற மறுநாளே மனித உரிமை கள் ஆணைக்குழு, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, இராணுவத்தரப்பு ஆகியவற்றிடம் முறையிட்டேன் ஆனால் எந்த விதத்திலும் எனக்கு தெரிவிக்கவில்லை.
ஆனால் எனது மகன் ஊரெழு இராணுவமுகாமில் இருப்பதாக அங்கு கண்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். எனது மகன் இன்னமும் உயிருடனே இருக்கிறார்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனவே எனது மகனை கண்டு பிடித்துத் தாருங்கள் என அவர் கோரிக்கை விடுத்தார். இதேவேளை. திருநெல்வேலியைச் சேர்ந்த நா.சத்தியவாகேஸ்வரன் என்பவர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
எனது மகன் ரஜீவன். இவர் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் பணியாற்றிவந்தார். இவருக்கு 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி திருமணம் நடந்தது. இவர் திருமணம் செய்து 15 ஆவது நாளே இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.சம்பவநாளன்று இரவு வீடுபுகுந்த இராணுவத்தினர் எனது மகனை இழுத்துச் சென்றனர். நாங்கள் கெஞ்சினாம், மன்றாடினோம்.எனது பிள்ளையை விடுதலை செய்யுமாறு கோரினோம் ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை. மகனை இழுத்துச் சென்றனர். அதனைத் தடுத்த எனது மனைவியின் தலையில் தாக்கினர். மறுநாள் எமது மகனை இராணுவம் அழைத்துச் சென்றமை தொடர்பில் சகல தரப் பினரிடமும் முறையிட்டோம்.
ஆனால்பலன் எதுவுமில்லை எனது மகனை கைது செய்த இராணுவ அதிகாரியை எனக்குத் தெரியும். அவரை நான் அடையாளம் காட்டுவேன். அவர் என்னுடன் நன்கு பழக்கப்பட்டவர் என்றார்.இதேவேளை தனது மகன் வெள்ளவத்தையில் நின்றதை தனது உறவினர்கள் கண்ட தாகவும் அவர் தனது சாட்சியில் மேலும் கூறினார்.
இதேவேளை நேற்றுச் சாட்சியமளித்த நல்லூரைச் சேர்ந்த த.புவனேஸ்வரி என்பவர், தனது மகன் பாதுகாப்பு அனுமதி பெறுவதற்கு யாழ்.சிவில் நிர்வாக காரியாலயத்துக்குச் சென்றபோது காணாமல் போனதாக தெரிவித்தார்.2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி 12.30 மணிக்கு இச்சம்பவம் இடம் பெற்றது. எனது மகன் சிவில் அலுவலகத்துக்குள் சென்று அங்கு இருந்ததை ஏனையவர்கள் கண்டுள்ளனர்.
அவரது சைக்கிள் வெளியில் விடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பாதுகாப்பு அனுமதியை பெற்றுக் கொண்டு திரும்பி விட்டதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்றுவரை வீடுதிரும்பவில்லை தயவுசெய்து எனது மகனை திருப்பித்தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

11 நவம்பர் 2010

இலங்கை வழக்காளிகளுக்கு சார்பாக ஆஷி மேல்நீதிமன்றம் தீர்ப்பு!

ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு திடீர் யோகம் ஒன்று அடித்துள்ளது.
இவர்கள் எந்நேரமும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இவர்களின் தலைவிதியை மாற்றக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்று இன்று ஆஸி நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்டு உள்ளது.
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டமை மற்றும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை ஆகியவற்றை ஆட்சேபித்து இலங்கையர் இருவர் அங்கு மேல்நீதிமன்றம் ஒன்றில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்குகளை ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழு விசாரித்தது. அரசியல் தஞ்சம் கோருவோருக்கு விசா வழங்கும் நடைமுறையில் அடிப்படையில் ஏதோ சட்டப் பிழை இருக்கின்றது என்று இக்குழு ஒரு மனதாக தீர்ப்பளித்து உள்ளது. அரசியல் தஞ்சம் கோரி வருவோருக்கு விசா வழங்கும் நடவடிக்கையில் நீதி இல்லாமல் உள்ளது என்றும் இத்தீப்பில் கூறப்பட்டுள்ளது. அரசியல் தஞ்சம் கோருவோர் நாட்டுக்குள் எவ்விதத்தில் காலெடுத்து வைப்பினும் கூட அவர்கள் சட்டத்தின் முன் சமம் ஆனவர்களாக நடத்தப்பட வேண்டும் என்றும் இத்தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வழக்காளிகளுக்கான வழக்குச் செலவை ஆஸி அரசும், குடிவரவு அமைச்சரும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்காளிகளின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
ஆனால் கடந்த வருடம் ஒக்டோபர் 02 ஆம் திகதி படகு மூலம் கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்த இலங்கையர்களில் இருவரும் அடங்குகின்றனர். இன்று வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மூலம் ஆஸியில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது.

தமிழ் மக்களின் பாரம்பரியங்களை அழிக்கும் முயற்சியில் சிங்களம்!

தமிழர்களின் பாரம்பரியங்களை அழிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.எந்தவித அனுமதியுமின்றி நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது. தமிழ் மக்களின் நிலங்களை பறிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமே நாவற்குழி மீள்குடி யமர்வு. எந்தவித ஆவணங்களும் இன்றி யாழ்ப்பாணத்துக்கு வந்த சிங்கள மக்கள். தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த நிலத்தில் குடியமர்த் தப்பட்டுள்ளனர். தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற நிலையிலேயே, இந்த குடியமர்த்தல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்மக்களை விரக்திய டையவைத்து அவர்கள் சமாதானத்தை விரும் பவில்லை என்பதை உலகுக்கு காட்டி தமிழ் மக்களை நசுக்குவதற்கே அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வருகிறது.
யுத்தத்தால் இடம் பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யாமல் அரசு தமிழ் மக்களின் நிலங்களைப் பறித்து அதில் சிங்களமக்களை குடியமர்த்தி வருகிறது. இது தொடர்பில் தமிழ்மக்கள் விழிப்படைய வேண்டும். தூரநோக்குடன் செயற்பட வேண்டும். இல்லை எனில் தமிழ்மக்கள் நிர்க்கதியான நிலையிலேயே இருக்க வேண்டும் என அவர் கூறினார். இது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் கூட்டமைப்பு பேசும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

10 நவம்பர் 2010

கொலை மிரட்டலால் பயந்து போயிருக்கும் இமெல்டா!

யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கு பல கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், தனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து நிகழலாம் எனவும் அவர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோட்டபாயவிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. அனாமதேய தொலைபேசி அழைப்புகள் பல அவரது இல்லத்திற்கும், கையடக்க தொலைபேசிக்கும் வருவதாகவும், அதனூடாக பல கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு உடனடிப் பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்புச் செயலகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு அமைவாக அவரது இல்லம் அமைந்திருக்கும் பழைய பூங்கா வீதிக்கும், மற்றும் அவரது அலுவலகத்திற்கும் இன்று முதல் இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் எந்த இடத்திலும், உயர் பாதுகாப்பு வலையம் என்று ஒரு இடமும் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார். அப்படியாயின் பலாலிக்குச் செல்ல முடியுமா என எவராவது அவரிடம் கேட்டால் பலாலி யாழ்ப்பாணத்திலேயே இல்லை என்று அவர் பதில் கூறினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இது இவ்வாறிருக்க, கற்றுக்கொண்ட பாடத்திற்காக அரசாங்க ஆணைக்குழு முன்னர் புலிகளே சரணடையச் சென்ற மக்களைக் கொன்றனர் என்றும் அவர் சாட்சியம் வழங்கியிருந்தார். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், அனைத்தையும் கூறி தான் அதைக் கேள்விப்பட்டதாகவே சொல்லியுள்ளார். கண்ணால் கண்ட சாட்சியங்களை விசாரித்து வரும் ஆணைக்குழு முன்பாக தான் கேள்விப்பட்டதாகக் கூறி சாட்சியமளித்த முதல் பெண் அரசாங்க அதிபர் இவராகத்தான் இருக்கமுடியும். இவர் கூறிய பொய் சாட்சிகளின் பலா பலனையே இவர் தற்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்.
உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ள எவருக்கு கொலை அச்சுறுத்தல் வருகிறது. இவர் போன்ற பொய்யுரைக்கும் களவாணிகளுக்கே அச்சுறுத்தல் வருகிறது.

பிள்ளையானின் கூற்றுக்கு அரியநேந்திரன் பதிலடி!

60 வருடங்களாக தொடரும் தமிழ் மக்களின் போராட்டத்தின் இறுதி இலக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாத மாகாணசபை அல்ல. வட கிழக்கு இணைந்த மாகாணத்திற்குள் நிரந்தரத் தீர்வென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
வட கிழக்கு இணைந்தால் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரே முதலமைச்சராக வருவார் என்று கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அரியநேந்திரன் எம்.பியினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவதுஇணைந்த மாகாணதிற்குள் யார் வேண்டுமானாலும் அதி காரத்திற்கு வரலாம்.
அது முஸ்லிமாக இருந்தாலும் சரி தமிழ் பேசும் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும்சரி எந்தத் தீர்வாக இருந்தாலும் இணைந்த வடகிழக்கிற்குள் இருக்க வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.முதலமைச்சரின் கருத்தின்படி மாகாணசபை தான் இறுதித்தீர்வாக கொள்ளப்படுகின்றது. மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது வட கிழக்கு மக்களுக்காகத் தான்.
ஆனால் இன்று ஏனைய மாகாணசபைகளும் உருவாக்கப்பட்டு எவ்வித அதிகாரங்களும் இன்றி வெறும் பொம்மைகளாக காணப்படுகின்றன. எனவே மாகாணசபை தமிழ் பேசும் மக்களின் இறுதித்தீர்வல்ல.இணைந்த வடகிழக்கிற்குள் காணப்படும் அதிகாரத்துடனான தீர்வே இறுதித்தீர்வாகும். இந்நிலையில் எந்தவித பிரதேச பாகுபாடுகளும் எமக்கு கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

09 நவம்பர் 2010

யாழில் பேஸ்புக் ஏற்படுத்திய இளவயதுக் கர்ப்பம்: ஒரு ரிப்போர்ட்.

தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலையில் உயர்தரம் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி தனது மேலதிக கற்றல் நடவடிக்கைக்காக சனி, ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் யாழ்ப்பாண நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்துள்ளார். போக்குவரத்து பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட மாணவியின் தந்தை, தனது நண்பனின் நகரப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதே ஆண்டில் நகர்புற கல்லூரியில் கல்வி கற்கும் ஒரு மாணவியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இருவரும் சேர்ந்து அந்த வீட்டில் உள்ள இணைய வசதி உள்ள கணனியில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து நண்பர்களுடன் அரட்டை அடித்துள்ளனர். குறிப்பிட்ட மாணவியின் 'பேஸ்புக்' ல் தொடர்பை ஏற்படுத்திய இளைஞன் ஒருவர் தான் தற்போது மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவித்து நெருங்கிய நட்பினை பேஸ் புக் ஊடாக பெற்றுள்ளார். இந்த இளைஞனது தொடர்பை அடுத்து வீட்டு கணனியில் அரட்டை அடிப்பதை நிறுத்தி விட்டு, இணைய சேவை வழங்கும் நிலையங்களில் சென்று குறிப்பிட்ட மாணவி அந்த இளைஞனுடன் அரட்டை அடிக்கை ஆரம்பித்துள்ளார். நாளடைவில் தனது தொலைபேசி இலக்கத்தினை வழங்கி இளைஞனுடன் தொடர்புகளை பேணி இருந்துள்ளார்.
சில நட்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்து பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளனர். சிறிது காலத்தின் பின் பாடசாலையில் குறிப்பிட்ட மாணவி அடிக்கடி வாந்தி எடுத்ததால் சந்தேகமடைந்த அதிபர் மற்றும் பாட ஆசிரியை மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு இட்டபோது மாணவி மறுக்கவே பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோர் வீட்டில் மாணவியை கூட்டிச் சென்று விசாரிக்கும் போது உண்மை வெளியே வந்துள்ளது. ஆம் அவர் இப்போது கர்ப்பமாக உள்ளார். உடனடியாக குறிப்பிட்ட இளைஞனைப் பற்றி விசாரணைகளை தந்தை ஆரம்பித்தபோது இளைஞனின் பேஸ்புக் மாற்றப்பட்டும் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்தும் காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இரகசியமாக பேணப்பட்டு வந்த இந்தச் சம்பவம் அந்தத் தந்தையின் அடாவடித் தனத்தால் பலருக்கும் தெரியவந்துள்ளது.
தனது மகளைக் கண்டிக்காத அந்தத் தந்தை, மாணவி தங்கியிருந்த தனது நண்பன் வீட்டிற்குச் சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை பேஸ்புக்கில் தொடர்பு கொண்ட இளைஞன் 1989ம் ஆண்டு 13ம் திகதி பிறந்தவர் என்றும் மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளதாகவும் அவரது பேஸ்புக் தரவுப்படி அவர் மானிப்பாயை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்தில் பிரபல தனியார் கல்லூரியில் கல்வி பயின்றதாகவும் "யாழ் மேனகன்" என்னும் புனைப் பெயரில் பேஸ்புக்கில் மாணவிகளுடன் இவர் அரட்டை அடிப்பதாகவும், மாணவியின் தோழி தெரிவித்துள்ளார். அத்தோடு குறிப்பிட்ட அம்மாணவியின் பேஸ்புக் நட்பு வட்டாரத்திலிருந்தும் அவ் இளைஞர் இபோது விலகி உள்ளார் எனத் தெரியவருகின்றது.
அப்படியாயின் அவர் திட்டமிட்டே இவ்வாறு செய்கிறாரா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது.
யாழில் பெருகிவரும் கலாச்சாரச் சீரழிவுகள் குறித்து மக்களும் பெற்றோரும், ஏன் ஊடகங்களும் கொஞ்சமாவது கவனம் செலுத்துவது நல்லது. இல்லையேல் அடுத்தவாரம் இன்னொரு குழந்தை அநாதரவான நிலையில் வீதியில் வீசப்படலாம். இல்லையேல் கிணற்றில் இருந்து பிணமாக எடுக்கப்படலாம், இது தேவைதானா?
நன்றி:அதிர்வு இணையம்.

இந்தியா மனித உரிமை விடயங்களில் விலகியே இருந்துள்ளது!-ஒபாமா.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவினை நேற்று திங்கட்கிழமை விமர்சனம் செய்துள்ளார். இந்தியா தனது அண்டை நாடுகளில் நடந்துவரும் மனித உரிமை மோசடிகளைக் கண்டிப்பதில் பின்னிற்கிறது, இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமைதியாக இருக்கக் கூடாது மற்றும் இவற்றை அலட்சியம் செய்யக் கூடாது என்று ஒபாமா குறை கூறியுள்ளார். மியன்மாரில் நிகழ்ந்தது போன்ற ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் நடக்கும்போது உலக நாடுகள் அமைதியாக இருக்கக் கூடாது என்று நேற்று ஒபாமா இந்திய பாராளுமன்றில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் உரிமை மீறல்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பது அந்நாடுகளின் கடமையாகும். நான் சர்வதேச விடயத்தில் உறுதியாக இருக்கலாம் என்றால், இந்தியா இந்த விவகாரங்களிலிருந்து எட்டி விலகியே பெரும்பாலும் இருந்துள்ளது என்று ஒபாமா குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர ஆசனம் அமைய வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று ஒபாமா கூறியுள்ளார் என்றாலும், இம்மாதிரியான உலகின் சிறந்த அமைப்பில் இடம்பிடிப்பதற்காக ஜனநாயகத்தை முன்னேற்றுவதற்காக இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டியதும் தேவையாகும் என்று தெரிவித்துள்ளார்.

சிங்க ரெஜிமென்ட் முகாமில் நடந்த ஆயுதக்களைவு!

புலிகளை அழித்துவிட்டோம் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என மார்தட்டும் சிங்கள அரசியல்வாதிகள் முகத்திரை கிழிகிறது. இராணுவ முகாமுக்குச் செல்லவே பயந்து நடுங்கும் தளபதிகள்.
சரத்பொன்சேகவால் பராமரிக்கப்பட்ட, குறிப்பாகச் சொல்லப்போனால் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பிரிவே, சிங்க ரெஜிமன்ட் ஆகும். அவரைக் கைதுசெய்த மூட்டம் அப்படைப்பிரிவைக் கலைத்துவிடும்படி கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் கணிசமான அளவு இராணுவத்தினர் அப்படைப் பிரிவில் இருப்பதாலும், பல அனுபவமிக்கவர்களும் இருப்பதாலும் அப்படைப் பிரிவு இன்றுவரை கலைக்கப்படவில்லை. இருப்பினும் இதில் உள்ள சிலரை வன்னிக்கு இடமாற்றி, அவர்களை காட்டுப் பகுதிகளுக்கு அனுப்பி பின்னர் அப்பகுதியில் விடுதலைப் புலிகள் இருப்பதாகக் கூறி விமானத்தாக்குதலை நடத்தி தமது இராணுவத்தை தாமே கொலைசெய்துள்ளது இலங்கை அரசு.
இது ஒரு புறம் இருக்க கடந்த 6ம் திகதி எஞ்சியுள்ள சிங்க ரெஜிமன்ட் படைப்பிரிவு முகாம் ஒன்றில் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வுகளில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூர்ய கலந்துகொள்ள இருப்பதைத் தொடர்ந்து அம் முகாமை இராணுவப் பொலிசார் 2 நாட்களுக்கு முன்னதாகவே தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். அம் முகாமில் இருந்த கட்டளைத் தளபதி உட்பட அனைவரது ஆயுதங்களும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் களையப்பட்டதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அனைவரது ஆயுதங்களும் களையப்பட்ட பின்னரே, இராணுவத் தளபதியும் அவரது சகாக்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இதனால் சிங்க ரெஜிமன்ட் படைப்பிரிவில் உள்ள இராணுவத்தினர் மேலும் கொதிப்படைந்துள்ளனர். சரத்பொன்சேகாவை சிறையில் இட்டதால், அதிருப்தியடைந்துள்ள அவருக்கு ஆதரவான இராணுவத்தினர் தம்மை எப்போதும் தாக்கலாம் என்ற பயம் காரணமாகவே, இவர்களது ஆயுதங்கள் களையப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேறு முகாம்களில் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும், இவ்வாறு நடந்தது இல்லை என அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

08 நவம்பர் 2010

சம்பந்தன்-மகிந்த இரகசிய சந்திப்பு!

மகிந்த ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இவர்கள் இருவரும் எவ்வித உதவியாளர்களும் இன்றி அரை மணித்தியாலத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாகவும், இப் பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இச் சந்திப்புத் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்தோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தரப்பிலிருந்தோ இதுவரை செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில் இச் சந்திப்புக் குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாவது,
மகிந்த ராஜபக்சவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனும் சுமார் அரைமணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த இரகசிய ஆலோசனைகளில் கலந்து கொள்வதற்காக ஜி.எல்.பீரிஸும் அழைக்கப்பட்டுள்ளார். இப்பேச்சுவார்த்தையின்போது முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதுடன் இதன் அடிப்படையில் அதிகாரபூர்வமான முறையில் விரைவில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
அதேவேளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆயினும் மகிந்த ராஜபக்­ச எதிர்வரும் 19ஆம் திகதி தனது இரண்டாவது பதவிக்காலத்தை பதவி ஏற்கவுள்ளதால் அந் நிகழ்வுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கத் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் இப் பேச்சுக்களை ஆரம்பித்துவிடவேண்டும் என்பதில் புதுடில்லி அதிககரிசினை கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா கடந்த திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவர்களைச் சந்தித்து அரசாங்கத்துடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அத்துடன் கடந்த மாத இறுதியில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக புதுடில்லி அழைத்து வரப்பட்ட மகிந்த ராஜபக்சவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என மன்மோகன்சிங் உறுதியாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

07 நவம்பர் 2010

நாளை போர்குற்றம் குறித்த ஊடகவியலாளர் கூட்டம்.

பிரித்தானிய தமிழர் பேரவையால் நாளை போர்குற்ற ஊடகவியலாளர் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இக் கூட்டத்தில் ஜ.நாவால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணை ஆனைக்குழுவுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஆராயப்படவுள்ளதோடு, ஆதாரங்களை வைத்திருக்கும் அல்லது சாட்சியாக இருப்பவர்களை ஒன்றிணைத்து, இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்றத்தை எவ்வாறு கொண்டு செல்வது போன்ற நடவடிக்கைகளும் ஆராயப்படவுள்ளது. எனவே இதில் பங்குபற்ற விரும்புவோர் கீள் கானும் முகவரிக்கும் நாளை( திங்கள்) மாலை 7.30 மணிக்கு சமூகமளிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
432, Alexandra Avenue
Rayners Lane
Harow Middlesex
HA2 9TW
London.

வெலிக்கடைக் கைதிகள் போலீசார் மீது தாக்குதல்: 50 போலீசார் காயம்!

இன்று அதிகாலையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தேடுதல் மேற்கொள்ளச் சென்ற போலீசார் மீது அங்கிருந்த கைதிகள் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் குறைந்தது 50 போலீசாருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 46 போலீஸ் அதிகாரிகளும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வேறுபட்ட காயங்களுக்குச் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
தலை, மார்பு மற்றும் வயிறு என பல இடங்களிலும் பல போலீசாருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இக்காயங்களின் ஆபத்துத்தன்மையைக் கண்டறிவதற்கான பல்வேறு சோதனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால் இத்தாக்குதல் சம்பவத்தின்போது எதுவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஹெக்ரர் வீரசிங்க தெரிவித்தார்.
இன்றைய தேடுதலுக்காக கிட்டத்தட்ட 4000 சிறைக்கைதிகளை அவர்களின் அறைகளில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர் போலீசார். போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்தே கிட்டத்தட்ட 500 போலீசாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் இத்தேடுதலை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இதைப் பொறுக்காத கைதிகள் போலீசைத் தாக்கியதில் கலவரம் ஏற்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிகிறது.