12 நவம்பர் 2011

மகிந்த அழைத்தாராம் மன்மோகன் மறுத்தாராம்!நம்ப முடிந்தால் நம்புங்கள்!

இலங்கை வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் நேரில் சந்தித்து விடுத்த அழைப்பை இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அடியோடு நிராகரித்து விட்டார் எனத் தெரியவருகிறது.
“தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவது உட்பட இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும்வரை தன்னால் இலங்கைக்கு வர இயலாது” என்று ஜனாதிபதி மஹிந்தவிடம் நேரில் தெரிவித்துவிட்டார் மன்மோகன்சிங்.
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மாலைதீவில் தனியாகச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
மாலைதீவில் பிரதமர் மன்மோகன் சிங், அடு அடோல் என்ற கூட்டு தீவுப் பகுதியில் உள்ள ஷாங்கிரிலா ரிசார்ட் என்ற சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். சார்க் நாடுகளின் ஏனைய தலைவர்களும் இதே இடத்தில் தங்கியுள்ளனர்.
இங்கு நேற்றுமுன்தினம் காலை 9.30 மணிக்கு முதலில் பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் நடந்த பேச்சில் இந்தியாவுக்கு “அதிக சுலுகை அளிக்கப்படும் நாடு” என்ற வர்த்தக அந்தஸ்தை வழங்கும் முடிவில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்காது என மன்மோகன் சிங்கிடம் கிலானி உறுதியளித்தார்.
இதன் மூலம், பாகிஸ்தானில், இந்தியப் பொருள்களுக்கு, மற்ற நாட்டுப் பொருள்களை விட குறைவான இறக்குமதி வரியே விதிக்கப்படும். இந்த அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்கனவே அளித்துள்ளது.
மேலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இரு நாட்டினரும் எளிதாகச் சென்று வரும் வகையில் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன. பேச்சுக்குப் பின்னர் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த நடைபெற்று வரும் பேச்சில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம், இரு தரப்பினருக்கும் திருப்தியாக உள்ளது. எனவே, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது, எதிர்த்து குற்றம் சாட்டுவது போன்றவை மறக்கப்பட வேண்டும் என மன்மோகன் சிங் கூறினார்.
இந்தச் சந்திப்பு முடிந்ததும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியவை வருமாறு;
இந்தச் சந்திப்பின்போது இலங்கைத் தமிழர்களின் மீள்குடியமர்வு மற்றும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் விளக்கம் கேட்டார் எனக் கூறப்படுகிறது.
இதன்போது இலங்கைக்கு வருமாறு மன்மோகன் சிங்கை மஹிந்த ராஜபக்ஷ அழைத்தார். எனினும், இலங்கைத் தமிழர்கள் மீள்குடியமர்வு விவகாரம், அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் தீர்வு, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் நல்ல தீர்வு ஏற்படும்வரை இலங்கைக்கு வர இயலாது என மன்மோகன் கூறிவிட்டார் எனவும் கூறப்படுகிறது.

11 நவம்பர் 2011

தமிழர்களை ஒன்றிணைத்து விடுவேன் என இந்திய அரசு அஞ்சுகிறது!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேலூர் சிறையில் இருக்கும் தண்டனையாளர் மூவரையும் சந்தித்து பேசினார்.பின்னர் வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
சிறையில் உள்ள 3பேரின் தூக்கு தண்டனை வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 3 பேரும் சட்டரீதியாக விடுதலையாவார்கள்.
தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
தூக்கு தண்டனையே கூடாது என்று தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு அமைப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் ஆகியவை நடத்தி எங்கள் உணர்வை வெளிபடுத்தி வருகிறோம்.
கொலைக்கு தண்டனை கொலையாகாது. 21 ஆண்டுகள் நீண்ட ஆயுள் தண்டனை அனுபவித்து உள்ளனர். அவர்களுக்கு 2 தண்டனை கொடுக்க கூடாது.
29-ந்தேதி கோர்ட்டில் நடக்கும் வழக்கில் அவர்கள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் 2008-ல் இருந்து 10 ஆண்டுகள் அமெரிக்கா, கனடா செல்ல விசா எடுத்து உள்ளேன். தற்போது சர்வதேச அளவில் தமிழர்களை நான் ஒருங்கிணைத்திடுவேன் என்ற அச்சம் காரணமாக எனக்கு அமெரிக்கா, கனடாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மாலைதீவில் டக்ளசை சந்தித்தார் மன்மோகன் சிங்!

தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருடன், பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்துறை அமைச்சரும், ஈபிடிபி பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவும் மாலைதீவு சென்றுள்ளார்.
நேற்று சங்கிரி-லா விடுதியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தபோது டக்ளஸ் தேவானந்தா, ஜி.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, சஜின் வாஸ் குணவர்த்தன, ஏ.எச்.எம்.அஸ்வர், லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்திய நீதிமன்றம் ஒன்றில், கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் புதுடெல்லியில் சந்தித்தது குறித்து ஏற்கனவே சர்ச்சைகள் உருவாகியிருந்தன.
இந்தநிலையில் நேற்று டக்ளஸ் தேவானந்தா மீண்டும் இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா சிறிலங்காவின் அமைச்சராக இருப்பதாலும், இரு நாடுகளுக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் உடன்பாடு இல்லை என்பதாலும், டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
ஆனால் கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திரவின் படுகொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை சிறிலங்கா அரசின் வேண்டுகோளின் பேரில், இந்திய அதிகாரிகள் மும்பையில் கைது செய்து சிறிலங்கா அரசிடம் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வே வெளியடவுள்ள அறிக்கை சம்பந்தமான நிகழ்வில் கலந்துகொள்ள மிலிந்த பயணம்.

இலங்கையின் சமாதான முன்னநகர்வுகள் குறித்து நோர்வேயில் இன்று விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ள நிலையில் இந்நிகழ்வில் பங்குகொள்ளவென இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் மிலிந்த மொறகொட நோர்வே சென்றுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வே மிலிந்த மொறகொடவை நோர்வே அனுப்ப பணித்துள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடெஜ் தலைமையில் இவ்வறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இவ்வறிக்கையானது கிறிஸ்டியன் மிச்சேல்சன் கல்வியகத்தால் (Christian Michelsen Institute) தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம், 2009 சமாதான உடன்படிக்கை காலம், தமிழ் புனர்வாழ்வு அமையம், புலிகளின் சமாதான செயலகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவை குறித்து அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

10 நவம்பர் 2011

சவேந்திர சில்வாவிற்கு இராஜதந்திர விலக்களிக்கக் கூடாது.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விலக்களிக்க கூடாது என அமெரிக்க மத்திய நீதிமன்றில் சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.அதேவேளை, சவேந்திர சில்வாவின் இராஜதந்திர பதவியை ரத்து செய்யுமாறு மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் போர்க் குற்றவாளி கடமையாற்றி வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் மிகப் பெரிய நிறுவனம் என்ற ரீதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சவேந்திரவிற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராஜதந்திர வரப்பிரசாதங்களை பயன்படுத்தி குற்றச் செயல்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள அனுமதியளிக்கக் கூடாது எனவும் கோரப்பட்டுள்ளது.

மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினராகிறார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனோ கணேசனுக்கு நாடாளுமன்ற பதவியை வழங்குவதன் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள எம்.சுவாமிநாதன் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என யானைச் சின்னத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலில் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அந்தத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார். ஆயினும் பின்னர் அது வழங்கப்படவில்லை. இதனால் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி ஜனநாயக மக்கள் முன்னணி சுயாதீனமாகச் செயற்படத் தொடங்கியது.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. ஆயினும் சபையில் நிலையான ஆட்சியை வழங்குவதற்கு ஐ.தே.க ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவை நாடியிருந்தது.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க லண்டன் செல்வதற்கு முன்னர் மனோ கணேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியதோடு 8ம் திகதி கொழும்பு மாநகர சபை கூட்டத்தில் தமது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறும் தான் லண்டனில் இருந்து திரும்பியதும் உடன்படிக்கைகள் செய்து கொள்ள முடியும் எனவும் கூறியிருந்தார்.
இதுவரை வெளியிடப்படாத அவ் உடன்படிக்கையின் படியே மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிகின்றது.

09 நவம்பர் 2011

இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் இரண்டை வெளியிட தயாராகிறது சனல்போர்.

புதிய சாட்சியங்களுடன் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் ஒளிபரப்பவுள்ளதாக சனல்-4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் பிரித்தானியாவின் ஊடக ஒழுங்குமுறையை மீறவில்லை என்று அறிவிக்கப்பட்ட அடுத்த வாரமே, அதன் இரண்டாவது பாகத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற கொடூரங்களை விபரிக்கும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ என்ற ஆவணப்படத்தை சனல்-4 தொலைக்காட்சி கடந்த ஜுன் மாதம் ஒளிபரப்பியிருந்தது.
கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட காணொலிப் படம் இதன் பிரதான போர்க்குற்ற சாட்சியமாக இணைக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை விபரிக்கும் இந்த ஆவணப்படம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்திருந்தது.
இந்த ஆவணப்படம் நியுயோர்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகங்களிலும், இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, டென்மார்க், நோர்வே உள்ளிட்ட பல நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டனை வழங்கப்படாத போர்க்குற்றங்கள்‘ (தலைப்பு இன்னமும் முடிவாகவில்லை) என்ற பெயரில் இரண்டாவது ஆவணப்படத்தை அடுத்த ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பதாக சனல்-4 தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கென இயக்குனர் கல்லும் மக்ரே ஒளிப்படங்கள், காணொலிப் பதிவுகள்,நேரில் கண்ட சாட்சிகள், ஆவணங்கள் போன்ற புதிய சாட்சியங்களை சேகரித்துள்ளதாக இதன் தயாரிப்பாளர் ஜொன் சினோ தெரிவித்துள்ளார்.
“போர்க்குற்றங்களுக்கு அதிகாரபூர்வமாக உடந்தையாக இருந்தவர்கள் பற்றிய மேலதிக சாட்சியங்களை இது வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் எதைக் கண்டறிந்தோம் என்பதை தொடர்ந்து உலகிற்கு வெளிப்படுத்துவோம். முதலாவது ஆவணப்படத்தைப் போலவே இந்தப் படக்காட்சிகளும் அதிர்ச்சிகளைக் கொடுப்பதாகவும் விழிப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று நம்புகிறோம்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, இந்த ஆவணப்படத்தைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ள சனல்-4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்புவிவகார தலைவர் டொரத்தி பைன்,
“சிறிலங்காவின் கொலைக்களங்கள் மூலம் கொடூரங்கள் வெளிப்படுத்தப்பட்டது உலகெங்கம் கவலையை தோற்றுவித்ததுடன் மேலதிக விசாரணைகளுக்கும் அழைப்புகள் விடப்பட்டன.
இதன் அடிப்படையிலேயே உண்மையைக் கண்டறிந்து தொடர்ந்து வெளிப்படுத்த முடிவு செய்துள்ளோம்“ என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிக்குழு.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு ஒன்றை அமைக்கும் முயற்சியில் பிரித்தானிய தழிழர் அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. இக்குழுவை அமைக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளிற்காக பிரித்தானிய தமிழர் அமைப்பு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து இவ் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு,
கலந்துரையாடல்
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவை அமைக்கும் முயற்சி
கலந்து கொள்வோர் :
Ø கலாநிதி . செயிட் கமல் – ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்.
Ø திரு. லீ ஸ்கொட் – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் , தலைவர் – தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு.
இடம் : Gearies Junior School, Gants Hill Crescent
Gants Hill, Ilford, IG2 6TU
காலம் : 11 November 2011 7 P.M
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவை அமைக்கும் முயற்சியின் ஆரம்பமாக பிரித்தானிய தமிழ் கன்ஸ்வேட்டிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடலில் போர்க்குற்ற விசாரனைக்கான அழுத்தங்கள் , மற்றும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆற்ற‌க்கூடிய பணிகள் தொடர்பாகவும் ஆராயப்படும்.
திரு லீஸ் கொட் அவர்களின் தலைமையிலான தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு ஆற்றும் பணிகள் தொடர்பாகவும் , இனிவரும் காலங்களின் எம் முன்னே உள்ள பணிகள் தொடர்பாகவும் திரு லீ அவர்கள் விளக்கமளிப்பார்.
நாம் எவ்வாறு இப்பணிகளில் இணையப்போகின்றோம் எனவும் ஆராயப்படும் எமக்காக இப்பணிகளை கொண்டு செல்லும் எமது நண்பர்களை ஊக்கப்படுத்த நாம் அனைவரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்வோம்.

08 நவம்பர் 2011

மாலைதீவில் மகிந்தவை சந்திப்பார் பிளேக்.

மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில், தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.
அட்டு நகரில் எதிர்வரும் 10ம், 11ம் நாட்களில் 17வது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையேற்கவுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக றொபேட் ஓ பிளேக் இன்று மாலைதீவு பயணமாவதாகவும், இவர் எதிர்வரும் 13ம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கும் அமெரிக்க குழுவில் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்ரெனிசும் இடம்பெறவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதனை விரைவில் பகிரங்கப்படுத்துவது, அறிக்கையின் பரிந்துரைகளின் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து அவர், சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தில் மட்டும் இருப்பதால் பிரஜோசனமில்லை"சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

சித்திரவதைகள் தொடர்பாக சிறிலங்கா நம்பகமான விசாரணைகள் எதையும் நடத்தவில்லை என்றும் இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்த மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை கோரியுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை இதுதொடர்பாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளது.
சிறிலங்கா படைகளுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜொலன்டா போஸ்டர் தெரிவித்துள்ளார்.
“சட்டத்தில் மட்டும் வைத்திருந்தால் போதாது. அதை நீங்கள் நடைமுறைப்படுத்தாது போனால், அர்த்தமில்லை. சித்திரவதைகளுக்கு எதிரான சட்டத்தை சிறிலங்கா கொண்டுள்ள போதும், அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சித்திரவதைகள் தொடர்பாக கடந்த 14 ஆண்டுகளில் 3 வழக்குகளையே சிறப்பு காவல்துறை அலகு முன்னெடுத்துள்ளது.
2008ம் ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவல் ஒன்றில், அதற்கு முந்திய நான்கு ஆண்டுகளில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக 90 பேருக்கு எதிராக 42 குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறியிருந்தது.
மேலதிகமாக 31 சித்திரவதை வழக்குகள் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் யாருமே நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
சிறிலங்கா காவல்துறையினராலும் சிறைக்காவலர்களாலும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர் சிறிலங்கா இராணுவத்தினராலும், இராணுவம், கடற்படை ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் துணை ஆயுதக் குழுக்களினாலும் தொடர்ச்சியாக சித்திரவதைகள் செய்யப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர்.
பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ள போதும், அவை குறித்த விசாரணைகளும் மோசமான நிலையிலேயே இருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.
கட்டாயமாக காணாமற்போகும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களில் சித்திரவதைகள் செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன.
விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதைகளின் சாட்சிகளாக உள்ளனர்.
சிறிலங்காவில் குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி, காலவரையறையின்றி, பலரும் வருடக்கணக்கில் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா காவல்துறை, சிறைக்காவலர்கள், மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக எந்த நீதி விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா விவகாரம் குறித்து மீளாய்வு செய்யும் அதேவேளை, சித்திரவதைகளில் தொடர்புபட்ட படையினரை சிறிலங்கா அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.
இதனிடையே இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா தொடர்பாக அனைத்துலக மன்னிப்புசபை, ஆசிய மனிதஉரிமைகள் ஆணையம், சித்திரவதைகளில் இருந்து விடுதலை, சிறுவர்களுக்கான எல்லாத் தண்டனைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலக முயற்சி, அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு, அனைத்துலக குறைபாடுகளுக்கான கூட்டமைப்பு, சட்டவாளர் உரிமைகள் கண்காணிப்பகம்-கனடா, லண்டனை தளமாக கொண்ட றீட்றெஸ், றீட்றெஸ் ஆசிய சட்ட வளங்கள் நிலையம் மற்றும் ஏசிஏரி பிரான்ஸ், சிறிலங்கா அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு, தமிழ் தகவல் நிலையம், சித்திரவதைகளுக்கு எதரான சுவிஸ் அமைப்பான ட்ரயல் ஆகிய 12 அமைப்புகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் ஆராயப்படவுள்ளன.

ஸ்ரீலங்காவில் இடம்பெறும் சித்திரவதைகள்!சனல்போர் புதிய காணொளியை வெளியிட்டது.

போர் முடிவடைந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதற்கான ஆதாரக் காணொளியையும் அது வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இலங்கைச் சிறையில் இருந்து தப்பி பின்னர் பிரித்தானியா வந்து அகதிகள் அந்தஸ்த்து கோரிய இருவரது காணொளிகளை அது தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ் இளைஞர்களைக் கட்டிவைத்து வயராலும் மற்றும் கம்புகளாலும் முதுகில் பலமாக அடித்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர். அதுமட்டும் அல்லாது கழுத்தில் கம்பியைப் போட்டு சுருக்கிட்டு பின்னர் தண்ணீர் தொட்டி ஒன்றில் தன் தலையை மூழ்க்கவிட்டதாகவும் அப்போது தான் மூச்சுத் திணறி கிட்டத்தட்ட தான் இறக்கும் நிலைக்குச் சென்றதாகவும் ஒரு தமிழ் இளைஞர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு தமிழ் இளைஞர் தெரிவிக்கையில் தன்னைக் கட்டி வைத்து அடித்ததாகவும் பல நாட்களாக தான் சிறையில் வாடிய நிலையில் தாகத்துக்கு தண்ணீர் கேட்டவேளை சிறு நீரை இராணுவத்தினர் தந்து குடிக்கச் சொன்னதாகவும் கூறியுள்ளார். இதனை விட தான் போரில் அகப்பட்டு இறந்திருக்கலாமே எனத் தான் எண்ணியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையானது ஐ.நாவின் உறுப்பு நாடாக இருக்கின்ற போதும் அது ஐ.நா சாசனங்களை மீறி பாரிய சித்திரவதைகளை மனித குலத்துக்கு எதிராகச் செய்துவருகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. போர் குற்றம் மற்றும் இன் அழிப்பு என்பன ஒரு புறம் இருக்க தற்போது தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்யும் மேலதிக குற்றச்செயல்களில் இலங்கை ஈடுபட்டும் வருகிறது என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதுவரை பிரித்தானியாவில் உள்ள சுமார் 35 தமிழ் இளைஞர்களை சனல் 4 தொலைக்காட்சி தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இவர்களில் பல ஒரே வகையான சித்திரவதை தமக்கு இழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். சித்திரவதைக்கு எதிரான மனித அமைப்புகள் சில ஐ.நா விடம் இது குறித்து முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. இதன் அடிப்படையில் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா வின் அதிகாரிகள் இது குறித்து ஆராய உள்ளனர். இதனால் இலங்கை மேலும் சிக்கலுக்குள் தள்ளப்படும் அபாயம் தோன்றியுள்ளது. போர்குற்றச்சாட்டு இன அழிப்பு என்று இலங்கை மீது இரு முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரவதை என்னும் ஒரு களமும் புதிதாகத் திறக்கப்பட்டு இலங்கை அரசு மீது மும் முனைத் தாக்குதல் நடைபெற ஆரம்பமாகியுள்ளது.

07 நவம்பர் 2011

தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுக்காதவர் அப்துல் கலாம்,அவர் சொல்லிவிட்டார் என்பதால் நாம் ஏற்க முடியுமா?

தமிழர் நல் வாழ்விற்கு என்றும் குரல் கொடுக்காதவர் - . இந்தியன் என்பதில் பெருமை கொள்பவர் - அப்துல் கலாம்
40கி.மி தொலைவில் நடந்த ஒரு இனப்படுகொலையை பற்றி வாயை திறக்காத இவரை விட சந்தர்ப்பவாத அரசியல்வாதி மேலானவர். தனது ஊரில் இருந்து 100 கி.மி தூரத்தில் நடந்த பரமகுடி கொலைகளை கண்டிக்காதவர்..சொம்பை தூக்கிக்கொண்டு கூடன்குளம் வருகிறார்... இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கபடுமாம்..... நாங்கள் செத்துபோவதை கண்டுகொள்ளாத அப்துல்கலாம் ஒரு விசுவாச அரசாங்க கிளார்க் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும். இவரையெல்லாம் விஞ்ஞானி, தலைவர் என்கிற தமிழர்களை பரிதாபமாக பார்க்கத் தோன்றுகிறது.
அப்துல்கலாம் எளிமையானவர், நேர்மையானவர், ஊழல் கறை படியாத கரங்களை கொண்டவர் என்பதையெல்லாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர் மீது இப்போது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுவது ஏன்? இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஒடுக்கப்பட்ட போதும், படுகொலை செய்யப்பட்ட போதும், தன் சொந்த ஊரிலேயே மீனவர்கள் சுடப்பட்டு வீழ்ந்து கொண்டிருக்கும் போதும் மக்கள் பக்கம் நின்று பாதுகாப்புக்கு குரல் கொடுக்காத இந்த மனிதர் தான் பொறுப்பேற்றிருந்த அணுசக்தி துறைக்கு ஒரு இடர்ப்பாடு என்றதும் மக்கள் பாதுகாப்புக்கு சர்டிபிகேட் வழங்குவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது நாம் வைத்திருக்கும் மரியாதை இன்னும் இருக்கிறது. அதற்காக அப்துல்கலாம் சொல்லிவிட்டார் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்துல் கலாம் என்கிற மனித நேயமற்ற ஒரு அரசாங்க கூலிக்கு கண்டனம் தெரிவிப்போம்.... மக்களோடு நிற்காதவன், மக்களை புரிந்து கொள்ளாதவன் யாராக இருந்தாலும் மக்களால் நிராகரிக்கப் படுவான் என்பதை அதிகார பாசிஸ்டுகளுக்கு உணர்த்துவோம்.. அப்துல் கலாம் நிராகரிக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல... நம் குழந்தைகளை அவரிடம் இருந்து காப்பற்றவேண்டிய கடமையும் நமக்குண்டு... வெளிப்படையாக அப்துல் கலாமிற்கு கண்டனைத்தை பதிவு செய்வோம்.. கூடன்குளம் போராளிகளுக்கு துணை நிற்போம்.

விடுதலைப் போராட்டம் தோற்றது எதனால்? – லண்டனில் காரணம் சொன்னார் சக்தி எப்எம் குணா! (விளாத்தியடி விண்ணாணம்)

வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? நல்லாய் இருக்கிறியளே? புதினங்கள் பல பல விதமாக வருகுது பாருங்கோ… நேற்றுப் பாருங்கோ லண்டனில கூட்டமைப்பின்ர தலைவர் சம்பந்தன் எதிர்காலத் தலைவர் எண்டு சொல்லிக் கொள்ளுற சுமந்திரன் அவையள் பங்கு கொண்ட கூட்டம் ஒண்டு நடந்ததெல்லே?
அதில விசேசம் என்னண்டால் பாருங்கோ, அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை செய்தவர் யார் தெரியுமே? தமிழினத்த பாரிய அழிவுப் பாதைக்குக் கொண்டு போன ரணில் விக்கிரமசிங்கவ தேசியத் தலைவராகக் கொண்டு செயற்படுற மகாராஜா நிறுவனத்தின்ர சக்தி வானொலியில பத்து வருசத்துக்கும் மேலாக பணியாற்றின குணா என்ற நபர் பாருங்கோ. அவர் பாருங்கோ பத்துவருசமா கொழும்பில இருந்திட்டு இப்ப புலத்தில போய் நிண்டு கொண்டு அங்க தேசியத்துக்காக குரல் கொடுக்கிற ஒரு வானொலியில அ(க)றிவிப்பாளராக இருக்கிறேராம்.
இதில என்ன வில்லண்டம் எண்டால் அவர் பாருங்கோ, அங்க வரவேற்புரை செய்யப் போனால் வரவேற்புரை செய்யிறத விட்டிட்டு சுமந்திரன் ஐயா முதல் தரம் லண்டன் போகேக்க அங்க அவர் கதைச்சதில சில இணையத்தளங்கள் கத்தரிச்சு எடுத்து அவருக்கு எதிராக செய்தி போட்டதாகக் கவலப்பட்டவராம். சுமந்திரன் ஐயா என்ன செய்தார், என்ன செய்யிறார் கனடாவில எங்க தங்கினவர் எண்டது இவருக்குத் தெரியுமே? தமிழனத்தின்ர துரோகி டி.பி.எஸ்.ஜெயராஜ் வீட்டில தான் சுமந்திரன் ஐயா தங்கியிருந்தவர் சாப்பிட்டவர் எண்டதெல்லாம் இவருக்குத் தெரியுமே?
இவர் பாருங்கோ கொக்குவில்ல என்ன செய்தநீங்கள், யாழ்ப்பாணக் கம்பஸ் நிகழ்ச்சி ஒண்டுக்கு அறிவிக்க ஆசையாப் போய் அங்க இருந்து கம்பஸ் பொடியள் அடிச்சுக் கலைச்சது, சமாதான காலத்தில வன்னிக்குப் போய் அங்க ஒண்டு இரண்டு ஊடகங்களுக்கும் போய் “நான் முந்தி உங்களோட கொஞ்சநாள் வேலை செய்தனான். ஆனால் அந்த விசயத்தயோ, நான் இப்ப வன்னிக்கு வந்த விசயத்தயோ சக்தியில வேலை செய்யிறாக்களுக்குச் சொல்லிப் போடாதேங்கோ பிறகு வேலை இல்லாமல் பண்ணிப்போடுவங்கள்” எண்டு சொன்னது எல்லாம் எங்களுக்கும் தெரியும் கண்டியளோ? அவர் வந்து பிளைக்கப்போனால் பிளைக்கிற அலுவல பாக்கிறதவிட்டிட்டு தேசியம் பற்றியும், தேசியத்தின்ர பாதையில நிக்கிற இணையத்தளங்கள் பற்றியும் கதைக்கிறதுக்கு அவருக்கு அருகதை இல்லை எண்டத அவர் புரிஞ்சு கொள்ளவேணும் கண்டியளோ?
சக்தியில இருக்கேக்க அடுத்த பணிப்பாளரா வாறதுக்கு எனக்குத் தான் தகுதி இருக்கு, எனக்குத் தான் தகுதி இருக்குது எண்டு புலம்பிப் புலம்பி கடைசில ஒண்டும் நடக்கேல்ல கண்டியளோ? புதிசா தேசியம் பற்றி வகுப்பெடுக்கிறதுக்கு நீங்கள் லண்டனில யாரையும் பாருங்கோ, எது சரி? உண்மையான தேசிய வாதியள் ஆர் ?ஆர்? எண்டுறது எங்களுக்கும் தெரியும்.
ஆனால் பாருங்கோ, நீங்களே எங்கட போராட்டத்த விமர்சிக்கிற அளவுக்கு உங்களுக்குத் தகுதி இருக்குதோ? எண்டத உங்கள நீங்களே கேக்க வேணும் பாருங்கோ. “எந்த விசயத்தையும் வெளிப்படையாக கதைக்க வேணும், அப்பிடி கதைக்காததால தான் எங்கட கடந்த காலப் போராட்டம் தோல்வி அடைஞ்சது” எண்டு லண்டனில எங்கட மக்களுக்கு முன்னால மேடையில சொல்லுற அளவுக்கு நீங்கள் வந்திட்டியள் என்ன? காலம் எப்பிடி எப்பிடி எல்லாம் மாறும் எண்டதுக்கு நீங்கள் ஒரு பெரீய உதாரணம் கண்டியளே?
யார் யாரோ? தேசியத்துக்காக உயிரக் குடுத்து செத்துப்போய், கால் கையள இழந்துபோனது உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. இங்க இருக்குமட்டும் இருந்து கொண்டு மஹிந்தவும், ரணிலும் சொல்லுற கோமாளிக்கதையள், சனம் சாகச் சாக மக்கள் சாகவில்லை புலிகளே செத்துப் போகினம் எண்ட எல்லாக் கதையளையும் தலைப்புச் செய்தியா வாசிச்சுத் தள்ளிப்போட்டு இப்ப லண்டன் போய் நிண்டு கொண்டு போராட்டம் அழிஞ்சதுக்கு நீங்கள் காரணம் சொல்லுறியளே? இந்த நூற்றாண்டில நீங்கள் தான் பாருங்கோ பெரிய சோ(ஜோ)க்கர் என்ன?
ம்… தமிழினத்த கடவுள் தான் காப்பாற்ற வேணும் எண்டு சொல்லி தந்தை செல்வா சொன்னது உண்ம தான் பாருங்கோ..

மாவீரர்களாகிய பொது மக்களுக்கும் ஒரு நடுகைக்கல் வையுங்கள்"ஒரு பெண் போராளியின் கோரிக்கை.

என் பாச உறவுகளே! உங்களுடன் நான் சிறிது நேரம் பேச விரும்புகிறேன், கொஞ்சம் செவிகளைக் கொடுங்கள். நான் உங்களுடன் உரிமையாகப் பேசமுடியும். வன்னியின் மடியில் வாழ்ந்தவள். என் குடும்பத்துக்காகவும் உங்களுக்காகவும் என் மண்ணின் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக போராடியவள். என் குடும்ப உறவுகளை தொலைத்து ஏமாற்றப்பட்டவள்.தமிழனின் போராட்டம் நேர்மையானது, உண்மைக்காக போராடுபவர்கள் என்று எம்மைத் திட்டித் தருவதாகக் கூறி தட்டி வீழ்த்திவிட்டது உலக வல்லரசுகள்.
நாம் 1ஆம் – 2ஆம் உலகப் போர்களை வரலாற்று ஏடுகளிலேயே படித்து வந்தோம். ஆனால் நாம் அதை விடக் கொடுமைகளை அனுபவித்து விட்டோம். வலி சுமந்தவர்களாக வாழ்கிறோம்.
எம் தலைவன் போராட்ட வடிவங்களாக அகிம்சைப் போராட்டத்தை தியாகி தீலிபன் அண்ணா மூலமாகவும், மக்கள் படையில் தியாகி அன்னை பூபதி மூலமாகவும், ஆயுதப் போராட்டத்தை வரிப்புலிப் போராளிகளாகவும், அதைத் தாங்கும் தூண்களாக மக்களையும் வைத்து போராடிக் காட்டியவர்.
உலகத்தின் எல்லாக் காதுகளுக்கும் தமிழன் என்று ஒரு இனம் தொன்று தொட்டு இறைமையுடன் வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்று உரக்க கூறி விட்டார், ஆயுதம் அடங்கிவிட்டது.
உலகத்தின் எல்லா மூலைக்குள்ளும் அகதி அந்தஸ்து பெற்றவர்களாக உயிர் பயமற்று தமிழர் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வன்னி மண்ணில் போருக்குள் வாழ்ந்து மண்ணுக்காக தம் உறவுகளை விதைகுழிகளில் விதைத்து விட்டு, அந்த மான மறவர்களுக்கு முன்னால் நின்று போட்டு, விளக்கேற்றி ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்த முடியாமல் அந்த மாவீரர் கோயில்கள் இருக்கும் திசை நோக்கி கை கூப்பி மௌனமாக அழ மட்டுமே அந்த உறவுகளால் முடியும்.
ஆனால் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் கைகளையோ, கண்களையோ நாம் வாழும் நாடுகள் கட்டிப்போடவில்லையே........எமக்காய் வாழ்ந்து எமக்காய் தங்கள் உயிர்களைத் தந்த அந்த உறவுகளை நினைவு கூரும் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்,
இப்போது நாம் போராடவில்லை,"செத்தவர்கள் போராடுகிறார்கள்".
இறுதிப்போரில் 30000 அல்ல அதற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் , இல்லை போராடினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் ஒட்டு மொத்த மக்களும் தடைகளை உடைத்துக் கொண்டு ஒரே தடவையில் வெளியேறி இருக்க முடியும், இவ்வளவு மக்கள் அழிப்பு வந்திருக்காது. அவர்கள் வரிப்புலி தலைவனுடன் சேர்ந்து போராடினார்கள். தலைவனுக்கு கை கொடுத்து தலைவனுக்கு அருகிலேயே இருந்தார்கள்.
எதிரியால் தலைவனை நெருங்க முடியவில்லை, அதனாலேயே சிங்கள வெறியாட்சியாளனின் படைகள் தாயின் வயிற்றுக் குழந்தையுடன் சாப்பாட்டிற்காக வரிசையாக நின்ற குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என ஈவிரக்கமின்றி எப்படியெல்லாம் கொல்லமுடியுமோ, அப்படிக் கொலை செய்யப்பட்டார்கள்.
வரிப்புலிப் போராளிகள் சத்தியப் பிரமாணம் செய்தார்கள் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்". மக்கள் படை சத்தியம் செய்தார்கள் "தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்", இவர்களும் போராளிகள்.
வரிப்புலிப் போராளிகள் தமிழீழ விருட்சத்திற்கு இரத்த நீரூற்றினார்கள். இறுதிப்போரில் மக்களே தசைகளையும் எலும்புகளையும் உரமாக்கினார்கள். இவர்களும் மாவீரர்களே.
மான மறவர்களுக்கு நினைவுகள் வைத்து பூசிக்கும் போது ஒட்டு மொத்தமாக உரமான எம் மக்களுக்கு ஒரே ஒரு நினைவுக்கல் வையுங்கள்.
எம் தலைவன் எம் கண் முன் தோன்றும் போது நிச்சயம் உங்களை பாராட்டுவார்.
இந்த மாவீரர் நாளில் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்வோம். நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன், " செத்தவர்கள் போராடுகிறார்கள்" என்று.
தமிழினப் படுகொலைகளிற்கு சாட்சியமாக புகைப்பட காணொளிகள் வாயிலாக அவர்கள் போராடுகிறார்கள்.
இவர்களுடைய சாவுகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை நான்- நீ என்று போட்டி போடுவதை விடுத்து எம் நாட்டின் விடிவுக்காக ஒற்றுமையாக நாம் வாழும் நாடுகளின் முன் நின்று ஐ.நாவின் காதுகளுக்கு கேட்கும் வரை உரத்துக் குரல் கொடுப்போம், எம் இனத்திற்கு விடிவு கிடைக்கும் வரை.

06 நவம்பர் 2011

தமிழக மீனவர்கள் மீது கற்களால் அடித்தது ஸ்ரீலங்கா கடற்படை!

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஆறு தமிழ்நாட்டு மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் 10 மீன்பிடிப்படகுகள் சேதமடைந்துள்ளதாக பிரிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
கச்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை மீன்டிபிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீதே, அங்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் படகு ஒன்றின் யன்னல் கண்ணாடி உடைந்து கண்ணாடித் துண்டுகள் வெட்டியதால் மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். கல்வீச்சினால் மேலும் ஐந்து மீனவர்கள் காயமடைந்தனர்.
சிறிலங்கா கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டு மீனவர்கள் ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மீனவர்கள் மீது பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வந்த சிறிலங்கா கடற்படை, தற்போது கற்களை வீசித் தாக்கத் தொடங்கியுள்ளது.

கனடா ஸ்காபரோவில் மாவீரர் பணிமனை திறந்து வைக்கப்பட்டது.

கனடாவின் ஸ்காபரோ நகரில், மார்க்கம் வீதியில் 2691 அறையிலக்கம் 9B என்ற முகவரியில் அமையப் பெற்ற புதிய காரியாலயத்தில் மாவீரர் பணிமனை வெகு விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது.மாவீரரை மனங்களில் நிறுத்திய படி குழுமிய மக்கள் வெள்ளத்துடன் திறப்பு விழா ஆரம்பமானது. முறைப்படியாகக் கனடிய அரசுக்கு அறவித்து தேவையான அனுமதியைப் பெற்றபின் மக்களுக்காக மக்களால் மக்களிடமிருந்த உருவாகியுள்ள செயற்பாட்டாளர்களால் இந்தப் பணிமனை திறந்து வைக்கப்பட்டது,இப்ணிமனைத் திறபுபு நிகழ்வினை, மாவீரராகிவிட்ட மேஜர் நிதிலாவின் அன்னையார் திருமதி செல்வநாயகம் சம்பிரதாயபூர்வமாகக் குத்து விளக்கேற்ற, மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்கள் வாயிற் கதவில் நாடாவை வெட்டி விழாவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்கள், தமிழின செயற்பாட்டாளர்கள், தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பேராளர்கள், உடகவியலாளர்கள் எனப் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகபகும்.
நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய, பணிமனை திறப்பதற்கான குழுவின் ஒரங்கிணைப்பாளர் திரு சத்தி வேலுப்பிள்ளை அவர்கள், இப்பணிமனையானது, வெறமனே மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துகின்ற பணிமனையாக இல்லாமல் மாவீரரர்களின் பதிவுகளைப் பேணும் வைப்பகமாகவும் அமைய வேண்டும் என்பது தான் தமது நோக்கம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த மாவீரா பணிமனை திறக்கப்பட்ட செயற்பாட்டில் எதுவிதமான அரசியல் நோக்கமும் இல்லை என்று கூறியதுடன் பணிமனை ஏன் திறக்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும் குழுமியிருந்தமக்களுக்கு அளித்தார்.
2011 ம் ஆண்டுக்கான மாவீரா தினம் எதிர்வரும் 27ம் திகதி காரல 6மணி முதல் மாலை 10மணி வரை ரொரன்ரோ டவுண்ஸ் வியூ பார்க் மைதானத்தில் 5000 பேர் வரை அமரக்கூடிய மண்டபத்தில் நடைபெறும் என்றும் அத்தினத்தில் மக்கள் பெருந்திரளாக வந்து மாவீரர் தெய்வங்களுக்குத் தமது வணக்கத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பேராளர் ஜோ அந்தோனி ”இது மாவீரருக்கான காலம் அவர்களுக்கு நாம் இங்கு ஆலயம் அமைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஆலயம் பெரிய அளவில் அமைய வேண்டும். அப்பணியை இப்பணிமனையின் ஏற்பாட்டாளர்கள் செய்து முடிப்பார்கள் என நம்புகிறேன், இப்படியான வெளிப்படையான செயற்பாடுகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து கனடியத்தமிழர் பேரவையின் தேசிய ஊடகப் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை, தனதுரையில் “மாவீரர்கள் மக்களுக்காகத் தமது வாழ்க்கையை ஆகுதியாக்கியவர்கள்,இத்தகைய புனிதமான செயலைச் செய்தவர்கள் இன்று எங்கோ உறங்குகிறார்கள், இம்மாதத்தில் அவர்களை நினைக்க வேண்டியது எமது கடமை – இப்படி வெளிப்படையாக இப்பணிமனையின் அமைப்பாளர்கள் செய்யும் இநதச் செயலுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்”. என்றார்.
நா.க.த.அ பேராளரான ஈழவேந்தன் 2009 ஆண்டு வரை முப்படைகளையும், சிவில் நிர்வாக அலகுகளையும் கொண்ட நடைமுறை அரசொன்று தமிழீழத்தில் இருந்தது என்பதை நினைவு படுத்தினார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேராளர் வின் மகாலிங்கம், நாம் எல்லோரும் எப்படியிருந்தாலும் மனோ பலத்துடன் இருந்து எம் மாவீரர்களக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்றார். எம் தமிழ் மக்கள் பிரதிபலன் எதிர்பாராது எங்கள் இனத்துக்கான செயற்பாடுகளில் ஈடபடவேண்டும் என்று தனதுரையில் கேட்டுக் கொண்டார் தேசியத் தலைவரின் மைத்துனரான திரு.ராஜேந்திரம்.
இவர்களைத் தொடர்ந்து பேசிய திருமதி உதயா பிரபாகரன், ”இது கார்த்திகை மாதம் மாவீரருக்குரிய மாதம் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் கட்டுப்பாட்டுக்குள் இம்மாதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தகர்த்தெறியப்பட வேண்டும் என்பதற்காவே இம் மாவீரர் பணிமனை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இம் மாவீரர் பணிமனை திறக்கப்பட்டுள்ளது போல் 2012ல் மாவீரர் பூங்கா திறப்பதற்கான பரப்புரையில் எல்லோரும் ஈடுபட வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.
இறுதியாக உரையாற்றிய மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் மாவீரர்கள் சத்திய வேள்வியில் உருகிப் போனவர்கள், தன்னலமின்றித் தமதுயிரைத் தியாகம் செய்தவர்கள் என்றார். அவர் மேலும் பேசுகையில் “இப்பணிமனைப் பணி போன்ற ஆரோக்கியமான பணிகள் தொடர வேண்டும் அதற்கு என் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்” என்றார்.

இனவாதி குணதாசவின் கூற்றுக்கு சிறிதரன் பதிலடி!

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் அவர்களது வாழ்வுக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மரண தண்டனை விதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றது. இயலும் என்றால் அவர்கள் அதைச் செய்யட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவற்றைக் கண்டு ஒரு போதும் அஞ்சாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கை அரசையும் மீறி தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. உதவிச் செயலரைச் சந்தித்தமைக்காகவும் வெளிநாடுகளில் இலங்கையில் பிரிவினை வாதத்தைத் தோற்றுவிக்கும் வகையில் பேசியமைக்காகவும் வெளிநாடு சென்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவி நீக்குவதுடன் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்த கருத்துத் தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து தான் அவர்கள் தங்களது அராஜகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால் கைது செய்யட்டும். அதற்காக ஒருபோதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பயப்படப்போவதில்லை.
தமிழ் மக்கள் இலங்கையில் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்ற செய்தியை வெளியுலகுக்கு சொன்னவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான். தமிழ் மக்கள் எப்போது தங்களது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராடுகின்றார்களோ அப்போதெல்லாம் சிங்கள இனவாதம் தலைவிரித்தாடிய வரலாறுகள் தான் இருக்கின்றன.
தந்தை செல்வாவின் காலத்தில் அமிர்தலிங்கத்தை கைது செய்தார்கள். பண்டா செல்வா ஒப்பந்தம் நடந்த வேளையில் அதனைக் குழப்பியவர் ஜே.ஆர். அதன் பின்பு இலங்கை இந்தி ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடக்கு, கிழக்கை பிரித்தவர்கள் இனவாதிகளான ஜே.வி.பியினர் தான்.
தமிழ் மக்களுக்கு எப்போதும் தீர்வு கிடைக்கக் கூடாதென்பதுடன், அவர்கள் இலங்கையில் ஒரு தேசிய இனம் இல்லை என்று வெளிக்காட்டுவதில் சிங்கள இனவாதிகளும், சிங்களக் கட்சிகளும், பௌத்த பிக்குகளும் முதன்மை வகித்திருக்கின்றார்கள். இதனை விட விகாரமாதேவி தமிழனின் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று விரும்பிய வரலாறுகளும் உண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மை நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துச்சொல்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக போராடியவர்கள் நாங்கள். ஆயுதமேந்திப் போராடிய காலம் முடிவடைந்து ஜனநாயக ரீதியாக உலகுக்கு உண்மையைச் சொல்லி எமது உரிமையைக் கேட்கின்றோம்.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறுகிறது. இதனை முழு உலகமும் பார்த்துக்கொண்டு தான் இருந்தது. ஆனால் எமக்குத் தெரிந்த வரையில் ஒர இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசு இங்கு ஒரு தேசிய இனத்தை அழித்தது என்பதையும் இங்கு இந்த மண்ணில் இன அழிப்பு நடந்தது என்பதை நிரூபித்து இங்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என்ற நிலைப்பாடு உணர்த்தப்பட வேண்டும்.
இதன் மூலமாக தமிழ்மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்காக அவர்கள் எம்மை கைது செய்து சிறையில் அடைந்தாலும் மரண தண்டனை வழங்கினாலும் பரவாயில்லை. எதற்கும் முகம் கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

05 நவம்பர் 2011

செந்தமிழன் சீமானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது அமெரிக்கா!

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கை:
உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீமான் நியூயார்க் சென்று சேர்ந்தபோது, அவரை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி விமான நிலையத்திலேயே தடுத்து வைத்துள்ளனர்.
இதற்கான காரணம் கேட்டதற்கு, சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்றும், அவரை அனுமதித்தால் அது அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகலாம் என்ற அச்சம் காரணமாக அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
சீமானுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோது இந்த உண்மைகள் அவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இதிலிருந்து தமிழினத்தின் நலனுக்கு எதிரான சக்திகள் அளித்த தகவல்கள் பேரிலேயே சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
இது அமெரிக்காவில் நடை முறையில் உள்ள மனித உரிமை, கருத்துச் சுதந்திர சட்ட உரிமைகளுக்கு முரணான நடவடிக்கையாகும். இந்நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக உண்மையாகப் போராடிவரும் அனைத்து தமிழர் தலைவர்களும் இப்படிப்பட்ட சட்ட அராஜகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக உள்ள அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை இதேபோல்தான் சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியேற்ற துறை விமானத்தில் வைத்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. அதுதான் இன்றைக்கு சீமானுக்கும் நடந்துள்ளது.
தமிழீன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள பவுத்த இனவாத ஆட்சியின் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று, தமிழினப் படுகொலைக்கு உதவிய அரசுகள், இன்று தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அரசியல் தளத்திலும் முடக்க இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுகின்றன.
இன்றைக்கு சீமானுக்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தமிழினத்தின் அரசியல் போராட்டம் ஒருபோதும் முடங்கிவிடாது. தமிழீழ விடுதலைக்காகப் போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் ஆத்ம பலத்தை சிந்தையில் ஏந்தி விடுதலைப் போராட்டம் வென்றே தீரும்.
இன்று இரவு ஒரு மணிக்கு சென்னை திரும்பும் சீமானை வரவேற்க நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கனடா தமிழர்களுக்கு அடிபணிந்து விட்டதாம்!சுற்றவாளி போல் பேசும் குற்றவாளிகளின் கூட்டாளி.

போர்க்குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை கனடா நிறுத்திக் கொண்டால், சிறிலங்காவுக்குப் பாரிய இழப்பு ஏற்படும் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆனால் கனடாவின் உதவிகள் தடைப்பட்டு, இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள கனடா, 1950ம் ஆண்டில் இருந்த நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் போர் முடிவுகள் வந்த பின்னர் 35 மில்லியன் டொலரை கனடா உதவியாக வழங்கியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கனேடியப் பிரதமர், அடுத்த கொமன்வெல்த் மாநாடு சிறிலங்காவில் நடைபெற்றால் அதைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒட்டாவா தூதரகத்தில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,
“சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கனடா எம்மைக் கைவிட்டு விடக் கூடாது.
எமக்கு எல்லா நாடுகளினது ஆதரவும் தேவைப்படுகிறது. குறிப்பாக கனடாவின் உதவி அவசியமானது.
அவர்கள் பொருள் உதவி செய்துள்ளார்கள். வழமைக்குத் திரும்புவதற்கு அவர்கள் எமக்கு உளரீதியான பலத்தைக் கொடுக்க வேண்டும்.
கனடா உதவிகளை வெட்டினாலோ, அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை புறக்கணித்தாலோ அதை நாம் இல்லாமல் செய்ய வேண்டும்.
சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெலத் கூட்டத்தில் கனடாவின் பங்கு இல்லையென்றால் மோசமாக இருக்கும்.
ஐ.நா நிபுணர்குழுவின அறிக்கை பாரபட்சமானது. ஒருபக்க சாட்சியங்களைக் கொண்டது.
அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னர் நிபுணர்குழுவுக்கு முன்பாக எமது ஆலோசனைகளை கூறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிடுமானால், சிறிலங்கா அரசாங்கம் அதற்கான கதவுகளைத் திறந்து விடத் தயாராகவே உள்ளது.
ஆனால் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவது சிறிலங்காவின் இறைமையை மீறுகின்ற செயலாகும்.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரும், கனடாவில் வாழும் சுமார் 300,000 பேரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தே கனேடிய அரசாங்கமும், கனேடியப் பிரதமர் ஹார்பரும் அடிபணிந்து விட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இந்தக் குற்றச்சாட்டை கனேடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நிராகரித்துள்ளார்.
மனிதஉரிமைகளின் சார்பிலேயே கனடா இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“கனேடியப் பிரதமரின் உறுதியான நிலைப்பாடு குறித்து கனடாவிலுள்ள தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருணா,பிள்ளையான் இருவரையும் ஏன் மகிந்த அவுஸ்ரேலியா அழைத்து செல்லவில்லை?

108பேருடன் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற மகிந்த ராசபக்ச அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கருணாவையோ பிள்ளையானையோ கூட்டிப்போகவில்லை. இது பற்றி கருணாவோ அல்லது பிள்ளையானோ வாய்திறக்க முடியுமா என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கு சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டிச்செல்லவில்லை என கருணாவும் பிள்ளையானும் தெரிவித்திருப்பது பற்றி அரியநேத்திரனிடம் கேட்ட போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
தமிழ் மக்களைப்பற்றி பேசுவதற்கோ அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி பேசுவதற்கோ கருணாவுக்கோ பிள்ளையானுக்கோ உரிமை இல்லை. இவர்கள் செல்லாக்காசுகள். இவர்கள் ஒட்டியிருக்கும் அரசாங்கம் கூட இவர்களை கணக்கெடுப்பதில்லை.
இவர்களின் பிரசாரங்கள் எதுவும் எடுபடாது என ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும். இதனால்தான் இவர்களை எங்கும் கூட்டிச்செல்வதில்லை என அரியநேத்திரன் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு சென்றது பிரதேசங்கள் பற்றி பேசுவதற்கல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பேசுவதற்கே அங்கு சென்றுள்ளனர். அந்த குழுவுக்கு தலைமை தாங்கியிருப்பவரே கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்தான். இந்த நிலையில் இதை புரியாதவர்கள் போல் இவர்கள் பிதற்றுகிறார்கள் என்றும் அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்களைப் புறந்தள்ளிச் சென்றுள்ளது என்றால் அதனைப் பற்றி பேச வேண்டியவர்களும் கவலைப்படுபவர்களும் நாமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கருணாவோ அல்லது பிள்ளையானோ அல்ல.
அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றியோ தமிழ் மக்கள் பற்றியோ பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது.
அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்து கொண்டிருக்கும் இவர்கள் இப்போது பிரதேச, மாகாண வாதத்தின் ஊடாகப் பிழைப்பு நடத்த முயற்சிக்கின்றனர்.
நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச வாதத்துடன் செயற்படும் ஒரு கட்சியல்ல என்பதனை நான் இவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என அரியநேத்திரன் தெரிவித்தார்.