28 மார்ச் 2015

மைத்திரிபாலவின் சகோதரரின் இறுதிச்சடங்கு திங்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பரொருவரினால் கடந்த 26ஆம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான இவர், இன்று சனிக்கிழமை காலை மரணமடைந்தார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
1972ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி, பொலன்னறுவையில் பிறந்த இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இளைய சகோதரராவார். பொலன்னறுவை லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், கம்பஹா உடபில மகா வித்தியாலத்தில் சாதாரண தரம் வரையிலும் பயின்றார். அத்துடன் கம்பஹா கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை நொபாவௌ மகா வித்தியாலயம் ஆகியவற்றியில் உயர் தரம் பயின்றுள்ளார்.

27 மார்ச் 2015

முதல்வருக்கு அழைப்பில்லாததால் ரணிலின் அழைப்பை சிறீதரன் நிராகரிப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று பங்குகொண்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோர் பங்கேற்ற போதிலும், எஸ்.ஶ்ரீதரன் எம்.பி. அதனைப் பகிஷ்கரித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன்” என்று கூட்டமைப்பின் சிறிதரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இருப்பினும், அந்நிகழ்வில், சிறிதரன் எம்.பி கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்து கூறிய அவர், “பிரதமர் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்வுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் நானும் அந்நிகழ்வுகளுக்கு செல்லவில்லை” என்றார்.

15 மார்ச் 2015

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோரைக் கொன்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்! - மன்னார் ஆயர்.

இறுதிக்கட்டப் போரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித்தேவன், நடேசன் உள்ளிட்டவர்களைச் மஹிந்த அரசு சுட்டுக் கொன்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட அதிவணக்கத்திற்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையின் ‘நோ பயர் சோன்’ (யுத்த சூனிய வலயம்) என்ற பெயரில் சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பிலும், அதற்கு இலங்கையில் தடைவிதிக்கப்படலாம் என்று பரவலான செய்திகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், நடந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டாலேயே நல்லிணக்கம் உருவாகும். உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

13 மார்ச் 2015

மோடி யாழ்.வரும் போது பேரணி நடத்த ஏற்பாடு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில், யாழ்.நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் அமைதிப் பேரணி ஆகியன இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளளன. மக்களின் மீள்குடியேற்றம், காணாமல் போனோர் மற்றும் மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளின் துரித தீர்வுக்கு உதவுமாறு இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
வடக்கைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த அமைதிப் பேரணிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. காலை 9.30 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடுவோர், அங்கு கவனயீர்பு போராட்டத்தை ஆரம்பிப்பர். பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணியாக இந்தியத் துணைத் தூதரகத்துக்குச் செல்லவுள்ளனர். அங்கு இந்தியப்பிரதமர் மோடிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட உள்ளது.
வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, வலி.வடக்கு பிரஜைகள் குழு, மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், காணாமல் போனோருக்கான அமைப்புக்கள் ஆகியன போராட்டத்திற்கான முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளன.
மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது நலன் விரும்பிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

11 மார்ச் 2015

'நோ பயர் ஷோன்'ஆவணப்படத்தை இலங்கையில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்!

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய 'நோ பயர் ஷோன்' ஆவணப் படத்தை இலங்கையில் ஒளிபரப்பு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால அனுமதிக்க வேண்டும் என அதன் தயாரிப்பாளர் கெலும் மக்ரே கேட்டுக் கொண்டுள்ளார். சிங்கள மொழியில் பிரயாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம் பிரிட்டன் நாடாளுமன்றில் நேற்று திரையிடப்பட்டது.
இதனபோதே கெலும் மக்ரே மேற்படி கோரிக்கையை விடுத்தார். இதன்போது, சிங்கள மக்கள் உண்மைகளை அறிந்து விடக் கூடாது எனக் குற்றங்களை இழைத்தோர் எண்ணுகின்றனர். எனவே இந்த ஆவணப் படத்தை இலங்கையின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதிக்கக் கூடாது. இந்த ஆவணப்படத்தின் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

08 மார்ச் 2015

கூட்டமைப்பு சோரம் போய் விட்டது:மக்கள் பாடம் புகட்டுவர்!

பிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களை ஏமாற்றி மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள் மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஆ.ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று சனிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பல உயிர் தியாகங்களையும், இழப்புக்களையும் சந்தித்த தமிழ் இனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைகுனிய வைத்துள்ளது. இது வரை காலமும் தமிழ் மக்கள் மத்தியில்; தமிழ் தேசியம், வடகிழக்கு இணைப்பு என்ற கோசம் எழுப்பியவர்கள் இன்று மாற்றானிடம் மண்டியிட்டு அமைச்சு பதவிகளை பிச்சை எடுத்துள்ளார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதிக்கு பூரண ஆதரவினை தெரிவித்து அவர் வெற்றியும் பெற்று விட்டார் இன்று வரை எமது தமிழ் சமுகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுன்வரவில்லை, இன்று பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் புலிகள் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரு சிலரையேனும் விடுவிக்கக்கோரி ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை.வடகிழக்கில் யுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான விதவைகள் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்து கொடுக்கவில்லை
இவற்றையெல்லாம் மறந்து தன்மானம் இழந்து எமது தமிழ் சமூகத்தின் சுய கௌரவத்தை கொச்சைப்படுத்தி இன்று அற்ப சலுகைகளுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சோரம் போய் விட்டார்கள். இதற்காகத்தான எமது தமிழ் சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.
இந்த மாகாணசபை முறைமை தமிழ் சமூகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்தையும் இழந்து தவிக்கும் எமது சமூகத்திற்கு மாகாணசபை ஆட்சியில் தலைமையை கைப்பற்றி முழுமையான சேவையை செய்வதை விடுத்து கிழக்கு மாகாணசபையில் அதிக தமிழ் பிரதிநிதிகளை கொண்டிருந்தும் அதிக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றும் இன்று சோரம் போய் பிச்சைப்பாத்திரம் ஏந்தி அமைச்சு பதவிகளை பெற்றிருக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் எமது உரிமைகள் வெல்லப்படும்வரை உள்ளுராட்சி தேர்தலையே புறக்கணிப்போம் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, புலிகள் மறைந்த பின் தங்கள் போலியான முகமுடியை அகற்றி உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாகாணசபை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவில் தான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்கு? இது தானா? தலைமைத்துவம். இன்று ஏனைய கட்சிகளுடன் அமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைபின் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் மேடைகளில் எதை பேசுகிறார்கள் தாங்கள் மட்டும் தான் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் ஏனைய கட்சிகளுக்கு முடியாது என்று தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வெரு தமிழருக்கும் உரிமையுண்டு தற்போது தமிழ் தேசியக் கூட்மைப்புக்குள் கொள்கை இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
இன்று இலட்சியம் கொள்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு மானம் இழந்து மரியாதை இழந்து சுய கௌரவம் இழந்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுவததை இனியும் தமிழ் சமுகம் அனுமதியாது . தமிழ் இனத்தின் உரிமைகளை உரிய முறையில் வென்றெடுக்காமல் பிச்சைக்காரன் தனது ஆராத புண்ணை காண்பித்து பிச்சை எடுப்பது போல மீண்டும் உரிமை, உணர்வு ரீதியாக பேசி எதிர்கால தேர்தல்களில் வாக்குக் கேட்க தமிழ் மக்களிடம் வருவார்கள்; தமிழ் சமுகம் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு ஓர் சரியான பாடத்தை எதிர்காலத்தில் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை நெஞ்சம் பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட அரசியல் வாதிகளை நினைக்கும் போது.

26 பிப்ரவரி 2015

விஜய் டி.விக்கு தடை-ஐரோப்பா தமிழர்கள் அதிரடி!


Bild in Originalgröße anzeigenவிஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் கவணத்தை ஈர்த்தது. காரணம், ஈழத்து சிறுமியான ஜெஸ்ஸிகா என்பவர் இந்த நிகழ்சியில் போட்டியிட்டார். இந்நிலையில், இந்த நிகழ்சியின் கடைசி கட்டம் சென்னையில் நடந்தது. இது உலகம் முழுவதும், நேரடியாக ஒளிபரப்பானது. வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களை, மக்களே SMS மூலம் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்.இதற்காக, உலகத் தமிழர்களும், ஈழத்து சிறுமிக்காக வெளிநாடுகளில் இருந்து வாக்களித்தனர். இந்த SMSகள் மூலம் மட்டுமே விஜய் டிவிக்கு 20 கோடி ரூபாய் வரை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இறுதிச்சுற்றில், வெற்றியாளர்களை தேர்தெடுத்ததில் விஜய் டி.வி., முறைகேடு செய்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

SMS வாக்குகள் அதிகம் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்காமல், தங்கள் இஷ்டத்திற்கு விஜய் டி.வி., வெற்றியாளரை அறிவித்துள்ளதாக ஐரோப்பிய தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விஜய் டி.வி., நிர்வாகம் மீதும், இறுதிச் சுற்றுக்கு வருகை தந்த, சிறப்பு விருந்தினர்களான, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப் போவதாக, அவர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கை கோடிகளைத் தாண்டியதாகக் கூறிய விஜய் டி.வி., வக்கு எண்ணிக்கையின் முழு விபரத்தை வெளியிடாதது ஏன் என்றும் ஐரோப்பிய தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், விஜய் டி.வி., முன்கூட்டியே முடிவு செய்து, இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், பார்வையாளர்களை கவருவதற்காகவும், பணம் சம்பாதிக்கவுமே இத்தகைய SMS சூழ்ச்சமங்களை கையாண்டுள்ளதாகவும் இலங்கையைச் சார்ந்த இணையங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதனடிப்படையில், விஜய் டி.வி., மக்களை அவமதித்ததாகவும், ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி நடைமுறை விதிகளை மீறியதாகவும், நிகழ்ச்சியில் குளறுபடி செய்ததாகவும் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து விஜய் டி.வி., மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக ஐரோப்பா வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குனர் உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் தாம் வலியுறுத்தப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து தீர்ப்பு மனுதாரர் தரப்பில் அமைந்தால், நிகழ்ச்சியின் நடுவர்கள், சிறப்பு விருந்தினர்களான அனுருத், தனுஷ், சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குநர் என அனைவருக்கும், ஐரோப்பிய சட்டப்படி, அந்நாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்படலாம். அது மட்டுமல்லாது, விஜய் டி.வி.,யும் ஐரோபாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

18 பிப்ரவரி 2015

ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுங்கள் என கனிமொழி சொன்னார்-அனந்தி

கருணாநிதி-கனிமொழி
“ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுங்கள் உங்களை நாங்கள் பாதுகாப்போம் என்று கனிமொழி, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் என் கணவரிடம் சொன்னார் ” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அனந்தி சசிதரன் ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு துணைப் பொறுப்பாளராகக் கடமையாற்றிய எழிலனின் மனைவியான அனந்தி இந்தப் பேட்டியில் முக்கிய விடயங்கள் பலவற்றை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.
“போர் மிகவும் மோசமாக நடைபெற்று இராணுவத்தின் குண்டுவீச்சுக்களால் பெருந்தொகையான மக்கள் குடும்பம் குடும்பமாக செத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது மே 16 ஆம் திகதி இரவு எனது கணவர் தொலைபேசியில் பேசினார். அவருடன் பேசியது கனிமொழி. முன்னாள் முதலமைச்சர் கருணாநதியின் மகள்.
நீங்கள் சரணடையுங்கள். உங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். அது தொடர்பாக நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றோம் என கனிமொழி தனது தந்தையின் சார்பில் சொன்னார். இவற்றை நம்பி சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் இன்று வரை எங்கே என்பது தெரியவில்லை” எனவும் அனந்தி தெரிவித்தார்.

09 பிப்ரவரி 2015

சம்பந்தன் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றால் மரியாதை!

சம்பந்தனின் நீண்ட நாள் போற்றக் கூடிய அரசியல் சேவையிலிருந்து ஓய்வுபெற்று, அடுத்த இளம் தலைமுறைக்கு தம்மையை விட்டுக் கொடுப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும், சம்பந்தர் தமிழ்ச் சரித்திரத்தில் வாழ்நாள் தலைவராக இல்லாது, தமிழ் இனத்திற்காக தன்னை அர்ப்பணித்தார் என்று தமிழ்ச் சரித்திரம் கூறும்.
சரித்திரத்தை அமைத்துவிட்ட அமெரிக்காவின் முதல் தலைவர் ஜோர்ச் வாசிங்டன் 5 வருடம் அரசியலில் பணியாற்றிவிட்டு மீண்டும் 65 வயதில் தனது விவாசாயத்தினை செய்வதற்கு வேர்யினியாவுக்கு சென்றுவிட்டார்.
தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா 5வருடம் தலைவராய் பணியாற்றிவிட்டு மீண்டும் தனது வீடு சென்று ஓய்வு பெற்றார்.
சம்பந்தர் அவர்கள் 81 வயதினை அடைகின்றார். இந்த யூன் மாதத்துடன் அவரது எம். பி பதவி முடிவு பெறுகின்றது. இந்நிலையில் வடகிழக்கில் உள்ள ஒரு இளம் தலைவரை தேர்ந்து எடுப்பதற்கு இது ஒரு நல்ல தருணம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த புதிய தலைவர் சட்டதடதரணியாக இருக்கக் கூடாது. ஏனெனில் சட்டத்தரணியானவர் எங்கள் போராட்டத்தினை நீதித்துறையோடு இணைப்பதை தவிர போராடக்கூடியவர்கள் அல்லர். அத்துடன் எங்கள் புதிய தலைவர் துணிந்தவராகவும் நேர்மையுள்ளவராகவும், அறிவுள்ளவராகவும். குறிப்பாக போராட்டக் குணம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

(ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு)

14 ஜனவரி 2015

"என்னை அழித்தது நீங்கதாண்டா"கோத்தாவிடம் சீறினார் மகிந்த!

என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயவிடமும் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
தோ்தலில் தோல்வியடைந்த பின்னா் தனது சொந்த இடத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு வந்து தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்தநாள் காலையில் பிள்ளைகளுடனும் தனது சகோதரா்களுடனும் கோபதாண்டவம் ஆடியதாகத் தெரியவருகின்றது.
தனது 45 வருட அரசியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும், சகோதரா்களாலும் அழிந்துவிட்டது என மகி்ந்த கத்தியுள்ளார்.
என்னை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறாகள் என கோத்தபாய தனது அண்ணணுக்கு தொலைபேசியில் எடுத்து கூறிய போதே மகிந்த இவ்வாறு கத்தியுள்ளார்.
எனக்கு வாய்த்த சகோதரங்களும் அப்படி, பிள்ளைகளும் அப்படி, நான் என்ன செய்வது என மகிந்த துக்கத்தில் பிதற்றியதாக மகி்ந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய வட்டாரங்களால் செய்தி கசிந்துள்ளது.

10 ஜனவரி 2015

புதிய பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்!

கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா! புதிய பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்!பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு செயலாளராக பசநாயக்கவை அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து அவரால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர்.இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முதலொல் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாயவும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு செயலராக சுற்றுச் சூழல் அமைச்சக செயலர் பசநாயக்கவை நியமித்து அதிபர் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அதிபரின் செயலாளராக பொதுநிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் அபயகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவைத்தான் பாதுகாப்பு செயலராக நியமிக்க மைத்ரிபால் சிறிசேன முடிவு செய்திருந்தாராம். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பசநாயக்கவை மைத்ரிபால நியமித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

09 ஜனவரி 2015

ஊருக்கு புறப்பட்டார் மகிந்த!

பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு இன்னும் சற்று நேரத்தில் வந்து சேருவார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக கொழும்பில் இதுவரை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த அவரது உடைகள் மற்றும் பாவனைப் பொருட்கள் அவசர அவசரமாக அங்கிருந்து பொதி செய்யப்பட்டு மெதமுலன இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. Bin Bag ஆகப் பயன்படுத்தப்படும் கறுப்பு பைகளிலே அவை அவசர அவசரமாகச் சேகரித்துக் கட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றி மெதமுலனவுக்கு அனுப்பப்பட்டன. அவை சற்று முன்னர் மெதமுலனவில் உள்ள ராஜபக்‌ஷவின் குடும்ப இல்லத்தில் இறக்கப்பட்டு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன. இதுவரை காலமும் ஜனாதிபதி என்ற முறையில் கொழும்பு அலரி மாளிகை இல்லத்துக்கு அருகில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலமும் மெதமுலனவுக்குச் சென்று வந்த மஹிந்த ராஜபக்‌ஷ தம்பதியினர் இன்று தமது காரில் கொழும்பிலிருந்து ஊருக்குப் புறப்பட்டனர்.ஜனாதிபதிக்குரிய பாதுகாப்புத் தொடரணியை அவர் இன்னும் மீளக் கையளிக்காமையால் அந்த வாகனத் தொடரணியிலேயே தற்போது அவர் ஊருக்குப் புறப்பட்டார். தம்முடைய தரப்பில் பயன்படுத்தப்படும் மேலதிக வாகனங்களையும் அவர் விரைவில் புதிய அரசிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மெதமுலனவில் ராஜபக்‌ஷ தரப்பினரை வரவேற்பதற்கு சிறிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

01 ஜனவரி 2015

குமார் குணரத்தினம் மீண்டும் சிறீலங்கா வந்தார்!

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கை வந்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டிருந்த குமார் குணரட்னத்திற்கான அபராத பணம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செலுத்தப்பட்ட நிலையிலேயே அவர் இலங்கை வர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு 12.15 அளவில் அவர் நாடு திரும்பியதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.முன்னாள் ஜேவிபி உறுப்பினரான இவர் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

14 டிசம்பர் 2014

தமிழீழத் தேசியத் தலைவரின் மைத்துனர் காலமானார்!

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மைத்துனர் இராஜேந்திரம் அவர்கள் கனடாவில் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். தலைவர் வே.பிரபாகரனின் சகோதரி விநோதினி அவர்களின் கணவரே திரு.இராஜேந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

27 நவம்பர் 2014

படைகளின் முற்றுகைக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் மாவீரர் சுடர்!

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்களால் சுடர்  ஏற்றப்படலாம் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள்,உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில். பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

22 நவம்பர் 2014

பதற்றத்தில் மகிந்த கட்சியினர்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சிதாவலை ஊக்குவிக்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ள அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்கான பெரும் நாடகமொன்றின் ஒரு பகுதியாகவே இது இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. சந்திரிகா குமாரதுங்கவின் நாடகத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரத்தை வகிக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை இந்த முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அழகபெரும, இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்காக நிதிவழங்குகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகப் போட்டியிடுவது என்ற மைத்திரிபாலவின் முடிவு குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்,பல்கலை மாணவனைக் காணவில்லை!

யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ் என்பவரே காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது. நீர்வேலியில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு 7 மணியளவில் புலனாய்வாளர்கள் சென்று சுற்றிவளைத்திருக்கின்றனர். நிலைமையை உணர்ந்த குறித்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் வீட்டிலிருந்தவர்களிடம் நிவாஸ் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து புலனாய்வாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிய போதிலும் இதுவரையில் நிவாஸின் தொடர்பு வீட்டாருக்கு கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது. அவருடைய தொலைபேசியும் செயற்பாட்டில் இல்லை என்றும் அவருடைய உறவுகள் கவலை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 நவம்பர் 2014

மஹிந்த - மைத்திரி அவசர சந்திப்பு!

மஹிந்த - மைத்திரி அவரச சந்திப்பு: சமரச முயற்சி என்றும் தகவல்!சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசின் அமைச்சருமான மைத்திரிபால பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை சமரசப்படுத்தி தன்வசப்படுத்த மஹிந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் மைத்திரிபாலவை அழைத்து மஹிந்த அவசரமாகக் கலந்துரையாடி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்பு நிறைவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால இன்று வெள்ளிக்கிழமை தமது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு எதிரணியின் பக்கம் சேருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 நவம்பர் 2014

நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் நீதியான விசாரணை தேவை!

வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணையை பொலிசார் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேற்று சென்று பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களுடனும், நகுலேஸ்வரனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடனும் துக்கம் விசாரித்து கலந்துரையாடிய, சிவசக்தி ஆனந்தன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நகுலேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாகவும், படுகொலைக்கு பயன்படுத்திய ரி-56 வகை துப்பாக்கியை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நீதி நியாயமாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
ஏனெனில் யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் சாதாரண நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழந்திருக்கும் முதலாவது சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் தொடர்பில், விடுவிக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவரும் தத்தமது எதிர்காலம் தொடர்பில் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். வடக்கு முழுவதும் இச்சம்பவத்தால் ஒருவித பதட்டம் மேலோங்கி காணப்படுகின்றது.
எனவே பொதுமக்களின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை குழப்பியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையும் படுகொலையையும் வன்மையாக கண்டிப்பதோடு, நகுலேஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கைப்பேணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசு முனைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

15 நவம்பர் 2014

தீவகத்தின் சமகால நிலமைகள் குறித்து விந்தனுடன் தீவக பிரதிநிதிகள் சந்திப்பு!

யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளின் சமாகால நிலமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 13.11.14 அன்று புலம்பெயர்ந்து வாழும் நெடுந்தீவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வர்த்தகருமான செல்வரட்ணம் சுரேஸ் என்பவரின் ஏற்பாட்டில் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் மகாலிங்கசிவத்தின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தீவகத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தீவகத்தின் அபிவிருத்தி குறித்து முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர் சுரேஸ் செல்வரட்ணம் தெரிவித்தார்.