25 செப்டம்பர் 2015

மன்னார் ஆயரின் உடல் நிலையில் முன்னேற்றம்!

மன்னார் ஆயர்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கும் ஆலோசனை மருத்துவர் டாக்டர் பெண்டன் ஜியாப் கூறுகிறார்.சிங்கப்பூரிலிருந்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், டாக்டர் ஜியாப், "ஆயரின் உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறது. அவரது வலது கையிலும் வலது காலிலும் இன்னும் கொஞ்சம் தசைப் பிடிப்பு இருக்கிறது. அவருக்கு தரப்படும் பிசியோதெரப்பிக்கு ( அதாவது இயன்முறை சிகிச்சை)அவர் நல்லமுறையில் ஒத்துழைத்து பயிற்சி பெற்று வருகிறார். நடை பழகும் கருவியை வைத்துக்கொண்டு நடக்கிறார். உடையணிவது போன்ற அன்றாட வேலைகளைச் செய்ய அவருக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது. அவருக்கு வந்த ஸ்ட்ரோக்கை வைத்துப் பார்க்கும்போது, இது ஒன்றும் அசாதாரணமானதல்ல" , என்றார்.சிகிச்சை இன்னும் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதங்கள் வரை தொடரக்கூடும் என்று கூறிய டாக்டர் ஜியாப், ஆனால் அவர் இலங்கைக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் திரும்ப முடியும் என்று கருதுவதாகக் கூறினார்.

19 செப்டம்பர் 2015

தானும் இனவாத சிங்களவன்தான் என்பதை நிரூபிக்கிறார் விக்கிரமபாகு!

ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது ஜனநாயகத்திற்காக போராடிய எம்மைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழர்கள் வாக்களிக்காததால் தான் அவர் தோல்வி அடைந்தார். “ரணில் விக்கிரமசிங்க இனவாதியல்ல. அவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர். கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் கோரும் உரிமை எவருக்கும் இல்லை.
கலப்பு நீதிமன்றம் என்ற பரிந்துரை, ஜனநாயகத்துக்காக போராடிய எம்மை, இலக்கு வைத்து அவமானப்படுத்தும் செயல்.இந்தக் கலப்பு நீதிமன்றம், சிலரால், ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், முன்னைய காவல்துறை, நீதித்துறை தான் இலங்கையில் இன்னமும் இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. ஜனவரி 8 ம் திகதி ஏற்பட்ட புரட்சி எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தியுள்ளது.
புதிய இடதுசாரி முன்னணி, தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளையும், வடக்கில் போரின் போது குற்றங்கள் இழைக்கப்பட்டது என்பதையும், ஏற்றுக் கொள்கிறது.லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, தாஜுதீன் படுகொலைகளும் போர்க்குற்றங்களுக்குள் அடக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆயுதப்படைகளினால், போர்க்காலத்தில் தான் இவை மேற்கொள்ளப்பட்டன.இவை குறித்து விசாரிக்க சிறிலங்கா தமது சொந்த நீதிமன்றத்தை உருவாக்க முடியும்.இந்தியாவைப் போன்று இந்தப் பிரச்சினையை ஒற்றையாட்சி அரசுக்குள் தீர்க்கப்பட முடியும். சமஸ்டி முறை இங்கு தேவையற்றது.தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும் வெள்ளையின மக்களையும், குடும்பங்களையும் கொலை செய்திருக்கிறார் எனக் குறிப்பிட்டதுடன், எல்லா கெரில்லா தலைவர்களும், போராளிகளும், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை கொன்றிருக்கிறார்கள்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடயத்தில் இது ஒன்றும் புதியதல்ல என்றார். புதிய இடதுசாரி முன்னணி வன்முறைகளைக் கண்டிக்கிறது.” எனவும் அவர் தெரிவித்தார்.

16 செப்டம்பர் 2015

கலப்பு நீதிமன்றம் விசாரணை என்கிறது ஐ.நா!

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

01 செப்டம்பர் 2015

கருணாவின் பேச்சால் படைகளுக்குள் குழப்பமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனின் மரணம் தொடர்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்த கருத்து இலங்கை இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரபாகரனின் சாவு குறித்து சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் யுத்த முடிவில் அறிவித்த நிலையில் பிரபாகரன் தனது கைத்துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுக்கொன்றதாகவும் மனைவியும் மகளும் இராணுவத்தின் செல்வீச்சில் கொல்லப்பட்டதாகவும் கருணா கூறியுள்ளார்.
இறுதிப் போர் தொடர்பில் கருணா தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது இராணுவப் பேச்சாளர் தடுமாறியுள்ளார். கருணாவின் பேச்சுக்கள் இராணுவ மட்டத்தில் பெரும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவா தொடர் நடைபெறவுள்ள வேளையில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருத்துக்களை அவர் வெளியிடலாம் என்ற சந்தேகம் இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபாரகன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதே கருணாதான் என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் அவர் தற்போது கூறும் கருத்து தொடர்பில் அதன் உண்மை நிலையை அறிய சட்ட ஆலோசனை நடத்துவதே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

16 ஆகஸ்ட் 2015

தீவக வாக்குப்பெட்டிகள் கடற்படையிடம்!

நாளை (17.08.2015)நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னொட்டி இன்று காலை தேர்தல் தொகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பும் பணி ஆரம்பமாகியுள்ளது.குறிப்பாக தீவகப் பகுதிக்கான வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணி,வாக்களிப்பு நிறைவடைந்ததும் மீண்டும் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வது போன்ற பணிகள் அனைத்தும் சிறீலங்காவின் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

14 ஆகஸ்ட் 2015

பொட்டுவின் சேனை என்ற பெயரில் மறுப்பறிக்கை!

13-08-2015 நேற்றையதினம் "தமிழ்வின்"இணையத்தில் வெளியாகிய -புலனாய்வு முக்கியஸ்தர் அனுப்பிய கடிதம்...!என்ற தலைப்பில் வந்த செய்தி தொடர்பாக எமது மறுப்பறிக்கை!

விழிப்புடன் செயற்படுங்கள் எம் மக்களே!

எமது அமைப்பிற்குள் சமாதான காலத்தை பயன்படுத்தி ஊடுருவலையும்,சேதங்களையும் ஏற்படுத்துவதற்காக 2003ம் ஆண்டு நடுப்பகுதியில் எதிரியால் திட்டமிட்டு வன்னிப்பகுதிக்கு அனுப்பப்பட்டவர்தான் இந்த புலனாய்வு முக்கியஸ்தர் என்று தனக்குத்தானே புகழ்மாலை சூட்டி தனது படத்தையும் போட்டு பொய்ச் செய்தியை அவிட்டிருப்பவரான {சி.சசிதரன் இ.பெயர்:செவ்வாணன்}-

சொந்த முகவரி:மலையகம்-(இந்திய வம்சாவழி)
வன்னியில்-த.முகவரி: றெட்பானா விஸ்வமடு
வீட்டுப் பெயர்: சி.சசிதரன்
இயக்கப் பெயர்: செவ்வாணன்
இயக்கத்தில் இணைவு:2004

பணிகள்: 2003ல் இருந்து 2004லு வரை புலனாய்வு முகவர், 2004ல் இருந்து உள்ளகப் புலனாய்வுப் பொறுப்பாளர் காந்தி அவர்களின் வாகனச் சாரதியாகவும், அம்முகாமின் எரிபொருள் அளக்கும் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
சமாதான காலம் இவருடைய வரவுக்கும் இணைவுக்கும் சாதகமாகியதால் இவர் இரட்டை முகவராக பணிபுரிந்தார்' ஆரம்பத்திலிருந்தே இவரை எமது விசேட கண்காணிப்புக்குள் உட்படுத்தியே பொறுப்பாளர் காந்திக்கான சாரதியாகவும் நாம் நியமித்திருந்தோம்.
அத்துடன் இவர் சாரதியாக பணிபுரிந்தவேளை முகாமிற்கான எரிபொருள் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் எரிபொருள் பொறுப்பினை வகித்த காலப்பகுதியில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த சில தனியார் எரிபொருள் களஞ்சியங்களுக்கு களவாக எரிபொருட்களை முகாமிலிருந்து திருடி விற்றதை கையும் களவுமாக பிடித்து எமது கண்காணிப்புப் போராளிகள் காந்தியிடம் ஒப்படைத்திருந்தார்கள். இது நடந்தது 2006ம் ஆண்டு இறுதிப்பகுதியில்.இந்த களவிற்கான தண்டனையாக காந்தி அவர்களால் முகமாலை முன்னரங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆனால் இவர் இரட்டை முகவராக பணிபுரிந்துவருவதை எம்மால் உடனடியாக உறுதிப்படுத்தமுடியாமல் இருந்தபொளுது இவர்தொடர்பான தகவல் ஒன்று முகமாலை களமுனையில் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்றது. அதுதான் இவரின் இரட்டைவேடத்தை எமக்கு உடைத்தது' அது என்னவெனில் முன்னரங்கிலிருந்து தொலைத்தொடர்பு வளியாக எமது தகவல்களை இராணுவத்திற்கு வளங்குகிறார் என்பதே அத்தகவல்.
இதன்பின் இவர் உடனடியாக எம்மால் கைதுசெய்யப்பட்டு வள்ளிபுனம் அல்பா5-Alpha5 எனும் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கு வைத்து இவர் காந்தி அவர்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தார். பின்னர் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியான 2008 நடுப்பகுதியில் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் தொடர்ந்து எம்மால் கண்காணிக்கப்பட்டும் வந்தார்.
மேலும் போர் உக்கிரம் பெற்றது. இவர் வசித்துவந்த றெட்பானா விஸ்வமடுவை இராணுவம் கைப்பற்றியபொழுது இவர் அங்கு இராணுவத்துடன் இணைந்துகொண்டார்' அதன்பின் 17-05-2009 காலை நாம் இவரை முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குள் கண்டோம். இவர் அங்கு சிவில் உடையில் நின்று எம்மை காட்டிக்கொடுத்ததுடன் இன்றும் இவர் இராணுவத்துடன்தான் சேர்ந்து இயங்கிவருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகவே எம் அன்பார்ந்த தமிழீழ மக்களே...

தமிழ்வின் இணையதளத்தினர் பிரசுரித்த பொய்யான செய்தியை எவரும் நம்பவேண்டாம்.அத்தோடு ஜனநாயகப் போராளிகளின் வரவினை யார் விரும்புவார்கள் யார் விரும்பமாட்டார்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்' இன்று த. தே.கூட்டமைப்பின் கையாலாகாத் தனத்தினாலும் அவர்களின் சோரம்போகும் குணத்தினாலுமே இன்று கூட்டமைப்பில் நம்பிக்கையிழந்து எமது முன்னைநாள் போராளிகள் நேரடியாக களமிறங்கியுள்ளார்கள்.
இவர்களின் வரவினை எதிர்பவர்கள் இன்று நீங்கள் அறிந்தவரை எதிரிகளும் எமது முன்னைநாள் துரோகிகளுமே அன்றி வேறு யாருமல்ல. மேலும் ஜனநாயகப்போராளிகளாகிய இவர்கள் உண்மையான போராளிகள் என்பதை எதிரிகளும் துரோகிகளும் தமது பொய்யான அறிக்கைகள் ஊடாக உங்களுக்கு நிரூபித்தும் வருகின்றார்கள். ஆகவே இதன் உண்மைத்தன்மையை விளங்கி அவர்களின் வெற்றியை உறுதிசெய்து உங்கள் பிள்ளைகளின் உண்மையான பாதுகாப்பினை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி

உங்கள் காவலர்களான....
பொட்டுவின் சேனை
தமிழீழம்.

06 ஆகஸ்ட் 2015

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து இடையூறு!

தேர்தல்விதி முறைகளைமீறினாரென சாவகச்சேரி காவல்துறையினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சாவகச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நீதிமன்றினில் ஆஜராகியிருந்தார்.
கடந்த மாதம் 31ம் திகதி சாவகச்சேரி பகுதியினில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் பிரச்சாரத்தினில் ஈடுபட்டடிடிருந்த வேளை அவர்களில் சிலரை பொலிசார்  கைது செய்து தடுத்து வைத்திருந்ததுடன் கடுமையாக அச்சுறுத்தியுமிருந்தனர்.
அவர்கள் தேர்தல் விதி முறைகளை மீறினரென சாவகச்சேரி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்றம்  அழைப்பாணை விடுத்திருந்தது.அதேவேளை பிரச்சாரக் குழுவுடன் சென்ற யாழ்,மாவட்ட வேட்பாளர் திருநாவுக்கரசு சிவகுமாரனுக்கும் அழைப்பாணை அனுப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக இன்று காலை இருவரும் நீதிமன்றிற்கு சமூகமளித்தனர். அவ்வழக்கு பதில் நீதவான் கணபதிப்பிள்ளையால் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையினில் அரசு திட்டமிட்டு தமது பிரச்சாரங்களை குழப்பிவருவதாக முன்னணி குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

18 ஜூலை 2015

கீரிமலை கடற்கரையில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையார்!

யாழ்,கீரிமலை கடற்கரையில் பிள்ளையார் சிலையொன்று திடீரென தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளையார் சிலையை காண மக்கள் படையெடுத்து வருவதாகவும் மேலும் அறிய வருகிறது.இது கடந்த சில தினங்களின் முன்னர் தென்பட்டதாகவும்,கடலில் மிதந்து வந்ததெனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.ஆனாலும் இவ்வுருவச்சிலை அமர்ந்திருக்கும் விதமும் அதன் எடையும் ஆச்சரியமூட்டுவதாகவும்  சொல்லப்படுகிறது.இது கடவுளின் அதிசயம் என மக்களால் போற்றப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

16 ஜூலை 2015

சமயத் தலைவர்களிடம் த.தே.ம.முன்னணியினர் ஆசீர்வாதம் பெற்றனர்!

பாராளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பிப்பதற்கு முன்பதாக மத பெரியார்களிடம் ஆசீர்வாதத்தினை பெற்றனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன்(சட்டத்தரணி) திருமதி பத்மினி சிதம்பரநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவரும் விரிவுரையாளருமான அமிர்தலிங்கம் இராசகுமாரன், குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழக செயலாளர் தேவதாசன் சுதர்சன், இராமநாதன் மகளீர் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி ஆனந்தி, யாழ் பல்கலைக்கழக ஊழியர் வீரசிங்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் செல்வி சின்னமணி கோகிலவாணி, இந்துக் கல்லூரியின் ஆசிரியர் சங்க முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு சிவகுமாரன் ஆகியோர் இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும், நல்லை ஆதீன குருமகா சன்நிதானம் அவர்களிடமும், சமூக சேவையாளரும் இந்து மத பெரியாருமான ஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டனர்.

13 ஜூலை 2015

தமிழ் வாக்குகள் எந்தக் கட்சிக்கு?

இம்முறை நடைபெற இருக்கும் இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு,கிழக்கு பகுதிகளிலும் பெரும் அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.பொதுவாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என நோக்கர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.இந்த தேர்தல் களத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி இரண்டுக்கும் இடையில்தான் பெரும் போட்டி நிலவும் என மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
சமூக வலைத்தளங்களிலும் இவர்களுக்கு ஆதரவான பதிவுகளையே பெரிதும் காண முடிகிறது.வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் எப்பவுமே கொள்கைகளுடன் ஒன்றிப்போனவர்கள்,கொள்கைகளில் இருந்து பின்வாங்கி பம்மாத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகளை தூக்கி வீச அவர்களுக்கு இப்பொழுது சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அந்த வகையிலே சிங்கக்கொடியுடன் சம்பந்தமானவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பது எதிர்பார்ப்பான ஒன்றாகவே இருக்கிறது.

09 ஜூலை 2015

திருமலையில் தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள்!

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.
இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணிகளின் போது இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி மக்கெய்ஸர் விளையாட்டு மைதானம் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த பகுதியில் சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டப்பகுதியில் ஏற்கனவே நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு காவல்துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
திருகோணமலை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜா முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை அகழ்வுப்பணிகள் ஆரம்பமானபோது சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று புதன்கிழமை மூன்றாவதுநாளாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றபோது நான்கு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இந்த மனித எச்சங்கள் அனைத்தையும் சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்குமாறு காவல்துறையினரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமையும் இந்த அகழ்வுப் பணிகள் தொடரும் என்று அதிகாரிகள் கூறினர் என தெரிவிக்கப்படுகிறது.

03 ஜூலை 2015

உருவாகியது ஜனநாயகப் போராளிகள் கட்சி!

முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய , ஆற்றவேண்டிய , ஜனநாயகப் பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட போராளிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்தனர்.
ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் அறப்போர் நிகழ்த்தி, தன்னையே ஆகுதியாக்கிய தியாகி திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த நல்லூர் கோயில் வீதியில், இன்று நண்பகல் ஒன்றுகூடி தியானம் அனுஷ்டித்த அவர்கள், அதற்கு முன்னதாகத் தாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கியப்பட்டுச் செயற்படுவது என்று அங்கு பிரதிக்ஞையும் செய்துகொண்டனர்.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
முன்னாள் போராளிகள், அவர்களின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரை ஒன்றிணைத்து ஜனநாயகப் போராளிகள் (Crusaders for Democracy) கட்சி என்ற அமைப்பில் அரசியல் செயற்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபடுவது. ஈடுபாடுடைய பேராளிகளையும் ஆதரவாளர்களையும் ஐக்கியப்படுத்தி ஒரு புதிய கட்டுறுதியான அமைப்பை ஏற்படுத்துவது. அதுவரை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக என்.வித்தியாதரன் செயற்படுவார்.
தமிழ்பேசும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களை வென்றெடுப்பதற்காக அதிர்வுள்ள வகையில் செயற்படும் ஒரு புதிய ஜனநாயக அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை நோக்கமாகக் கொண்டு முன்னாள் போராளிகளும் அவர்களுக்கு உரித்தான பங்களிப்பை இவ்விடயத்தில் வழங்குவதற்கு வகை செய்யும் விதத்தில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்டங்கள் தோறும் தமது வேட்பாளர் பட்டியல்களில் விடுதலைப் புலிகளில் இயங்கிய தலா இரு முன்னாள் போராளிகளையாவது இணைத்துக்கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொள்வது.
தமிழர்களின் உரிமைகளை ஈட்டுவதற்கான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் ஈடுபட்டு, ஒரு முறையான அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்கள் மத்தியில் நிலைநிறுத்துவது. கடந்த கால இழப்புகளினால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வாதார வளங்களைக் கட்டி எழுப்பி, புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை உத்வேகத்துடன் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் வலியை நன்கு பட்டறிந்து உணர்ந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் விரைந்த விடுதலைக்கு அழுத்தம் தந்து அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பது.நீதி, நியாயமான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்த சுத்தியுடன் ஈடுபடுவதன் மூலம், தமிழ்ப்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கையின் நியாயமான அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பலமான இணைப்புப் பாலமாக விளங்கத்தக்க வகையில் வினைத்திறனுடனும் செயற்படுவது.இத்தீர்மானங்களுடன், பொதுத் தேர்தலை ஒட்டி மேற்கொண்டு எடுக்கவேண்டிய தந்திரோபாய உத்திகள் குறித்தும் ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு,
ஜனநாயகப் போராளிகள் கட்சி.

28 ஜூன் 2015

ஐ.நா.போர்க்குற்ற அறிக்கையில் மகிந்த சகோதரர்கள்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம் என்று ஐ.நா வட்டாரங்களை மேற்கோள்காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை தொடர்பான விசாரணைகளில், குறித்த நபர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் மேலும் ஐந்து இராணுவ ஜெனரல்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவர்கள் மீது கட்டளையிடல், கடத்தல், மனித படுகொலை, வழிநடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்மாக ஒப்படைக்கப்பட உள்ளது. அத்துடன் இந்த அறிக்கை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளின் போது வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 ஜூன் 2015

வித்தியா கொலை தடையங்களை அழிக்க சிரமதானம்!துவாரகேஸ்வரன் குற்றச்சாட்டு!

வித்தியா படுகொலை சூத்திரதாரிகளை காப்பாற்ற திட்டமிட்ட சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஐ.தே.கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சட்டத்தரணி தவராசா ஆகியோர் இவ்விடயத்தினில் பின்னின்று செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வித்தியா படுகொலை தொடர்பிலான சான்றாதரங்களை அழிப்பதற்கு சிரமதானமென்ற பேரினில் புங்குடுதீவினில் கனரக வாகனங்கள் மூலம் தடயங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.வித்தியாவினது உறவுகளது எதிர்ப்பினை தாண்டி அவ்வாறு தடயங்கள் அகற்றப்பட்டுள்ளன.
வித்தியா படுகொலை வழக்கினை குழப்பியடிக்கவும் குற்றவாளிகளை தப்ப வைக்கவும் சுவிஸிலிருந்து பெருமளவு பணம் கைமாற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆவணங்கள் எனக்கு கிட்டியுள்ளது.அவை விரைவினில் அம்பலப்படுத்தப்படும்.
சட்டத்தரணி தவராசா பொறுப்பாக கடமையாற்றாமையினாலேயே அரச சட்டத்தரணிகளாக மூவரை கொழும்பிலிருந்து தருவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அவர்களுள் ஒருவர் எனது சகோதரன் மகேஸ்வரன் படுகொலை சூத்திரதாரிக்கு மரணதண்டனை வாங்கிக்கொடுத்த திறமையாளன்.
வித்தியா கொலை சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.மக்களது நிலைப்பாடும் அவ்வாறாகத்தான் உள்ளது.
குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இத்தகைய கும்பல்கள் செய்யும் முயற்சி வெற்றி அளிக்காதெனவும் அதற்கு மக்கள் அனுமதிக்கப்போவதில்லையெனவும் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசியல் நோக்கமேதுமின்றி வித்தியாவின் படுகொலையாளிகள்; தண்டிக்கப்படவேண்டுமெனவும் அதற்காக குரல் கொடுத்து சிறை சென்றிருந்த 150 பேரிற்கும் பொறுப்பாக வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

01 ஜூன் 2015

ஓமந்தையில் சிறுமி மர்மமான முறையில் மரணம்!

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர்
பெண்கள் சிறுமியருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலியல் சித்திரவதைகள் என்பவற்றுக்கு முடிவுகட்டி, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாடளாவிய ரீதியில் குரல் கொடுக்கப்பட்டு வரும் வேளையில், ஓமந்தை பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தனது கொட்டில் வீட்டிற்குள் கழுத்தில் சுருக்கிட்டு மர்மமான முறையில் இறந்த நிலையில் திங்களன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த சிறுமியின் தாய் தந்தையர் வவுனியா நகருக்கு முக்கிய அலுவல் காரணமாகச் சென்றிருந்தபோது தனிமையில் அந்த சிறுமி வீட்டில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லாதிருந்த இந்தச் சிறுமியே, தனது தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிந்தபோது சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்றிருந்தார். உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி:பிபிசி தமிழோசை

23 மே 2015

கஜேந்திரன் விபத்தில் படுகாயம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை வீதியின் கைதடி வீதி-கோப்பாய் சந்தியில் இந்தியா பணியாளர் ஒருவர் செலுத்தி வந்த பாரம் தூக்கி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று மாலை 4,15அளவில் இவ்விபத்து நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளபோதும் அவரது மோட்டார் சைக்கிள் முற்றாக நசியுண்டுள்ளது.
இது திட்டமிட்ட கொலை முயற்சியாவென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேட முயன்ற மஹிந்த! அமைச்சர்கள் கண்டனம்.


புங்குடுதீவில் மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் என அரச அமைச்சர்கள்  கண்டனம் வெளியிட்டுள்ளனர்.  
மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முற்பட்டுள்ளமையானது மிகவும் கேவலமானதொரு செயலாகும் என அரச அமைச்சர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்த்தன மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா ஆகிய மூவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாட்டை இனவாதத்தை தூண்டி மீண்டுமாக பதவியைப் பிடிப்பதற்கான வெட்கக்கேடான செயற்பாடெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்த ஈனத்தனமான செயற்பாட்டின் மூலமாக மஹிந்த ராஜபக்ஸ தனது மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். தமது குடும்பத்தைச் சேர்ந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவருக்கு ஏற்பட்ட பேரவலத்தையடுத்து கோபங்கொண்ட மக்கள் இயல்பாக வெளிப்படுத்திய உணர்ச்சிவெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.

20 மே 2015

இன்று யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால்!போக்குவரத்து முடக்கம்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை தடுக்கும் விதத்தில் நாற்சந்தியில் ரயர்கள் கொளுத்தப்பட்டன. இதனால் குறைந்தளவு மக்களே பயணித்த போதும் அவர்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது. காலையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை இன்று யாழ்ப்பாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்காது எனத் தெரியவருகிறது. தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

12 மே 2015

மண்டைதீவில் மக்கள் காணிகளை கையகப்படுத்தியது கடற்படை!

மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 18 ஏக்கர் தோட்டக் காணியும் 7 ஏக்கர் கடற்கரை காணியுமே அவ்வாறு கையகப்படுத்தியுள்ளனர்.
காணி கையகப்படுத்தப்பட்டதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களால் வேலணை பிரதேச செயலாளருக்கு மறுப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடற்படையினர் தொடர்ந்து தமது தோட்ட காணியினை கையகப்படுத்தி வைத்திருப்பதனால் தோட்டம் செய்ய முடியாது தாம் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி வறுமையில் வாடுவதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடற்படையினரிடம் இருந்து தமது தோட்டகாணியினசம்பந்தப்பட்ட தரப்பினர் மீட்டு தந்து தமது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

21 ஏப்ரல் 2015

மதுவருந்தி கூத்தடித்த மகிந்த ஆதரவாளர்கள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று இரவு உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மது அருந்தி கூத்தடித்ததாக அமைச்சர் கூறிய புகாரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஊழல் மோசடி தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபாய ஆகியோருக்கு அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கை நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்திய ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் 'சரக்கடித்ததாக' சர்ச்சை!! இதேபோல் இலங்கை நாடாளுமன்றத்திலும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் சம்மன் அனுப்பியதற்கு எதிராக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று இலங்கை நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தையும் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மது அருந்திவிட்டு கூத்தடித்தனர் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டி இருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்றும் அவர்கள் அமளியில் ஈடுபட நாடாளுமன்ற நடவடிக்கைகள் வரும் 27-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.