22 செப்டம்பர் 2011

மக்கள் விடுதலை முன்னணிக்குள் எந்த குழப்பமும் இல்லையாம்!

மக்கள் விடுதலை முன்னணி முன்னை போன்றே செயற்படுகிறது. இக்கட்சிக்குள் பேசுவதுபோன்று எந்தவிதமான குழப்பமும் இல்லை. வதந்திகளுக்கு பதில்சொல்லவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நாங்கள் இப்பொழுது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்திவருவதால் இப்படியான வதந்திகளை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை என அக்கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.
ஜே.வி.பி.க்குள் குழப்பம் உருவாகியிருப்பதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் சோமவன்ஸ அமரசிங்கவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்செய்தி தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கேட்டபோது…
கட்சிக்குள் உருவாகியிருக்கின்ற சதி முயற்சிகளுக்கு நாங்கள் ஒருபோதும் கையசைத்துப் போகப்போவதில்லை. இவ்விடயம் தொடர்பில் முன்னையை விட கூடிய கவனத்தினைச் செலுத்தி பிரச்சினைகளை களையவிருக்கிறோம். கட்சியினை புதிய சக்தியுடன் வலுவடையச் செய்து நாட்டில் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது பற்றி கூடிய கவனம் செலுத்தவிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
கட்சி அங்கத்தவர்களுக்குள் ஏதாவது குழப்பம் நிலவினால் அதனை உரியமுறையில் தீர்த்து வைத்து மக்கள் முன்னணியை சக்திமிக்க கட்சியாக உருவாக்கி நாட்டினை கட்டியெழுப்புவதே எங்களது குறிக்கோள் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
1987 காலப்பகுதியில் கொலைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ரஞ்சிதத்தின் சகோதரரான பிரேமகுமார் குணரத்தினம் தலைமையில் புதிய ஜே.வி.பி. உருவாகி வருகிறது என்ற செய்தி அண்மையில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஈழத்தை காக்கின்ற உணர்ச்சி தீயை நெஞ்சில் ஏந்தி எழுவோம்!

சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இராஜா அண்ணாமலை மன்றம் அரங்கில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த, 'இன்னுயிர் ஈந்து மூன்று தமிழர் உயிர் காத்த வீரமங்கை தோழர். செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் மற்றும் மூன்று தமிழரின் மரண தண்டனையை முற்றிலும் நீக்கக்கோரி கூட்டம்' 21.09.2011 அன்று மாலை நடைபெற்ற்றது.
இந்த கூட்டதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
இனியும் செங்கொடிகள் தங்களை தீக்கரையாக்கிக் கொள்கிற நிலை உருவாகிவிடக்கூடாது என்று கொளத்தூர் மணி சொன்னார். இந்த வீரமங்கை செங்கொடி தீட்சண்யமான கண்கள். வசீகரம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்தப் புகைப்படத்தை பார்க்கின்றபோதே, நமது நெஞ்சை ஏதோ ஈர்க்கிறது. நான் சுமந்து செல்கின்ற கைப்பெட்டியில் அந்த அழகான படத்தை வைத்திருக்கிறேன்.
எம்ஜிஆர் நகரில், கட்சி வேறுபாடு இல்லாமல் ஒருசேர எழுவோம். தமிழ் ஈழத்தை காக்கின்ற உணர்ச்சி தீயை நெஞ்சில் ஏந்தி எழுவோம். முவர் உயிரை காக்கவும், மரண தண்டனை முற்றாக அழித்து ஒழிக்கவும் சங்கநாதம் புரிவோம். தோள் கொடுத்து நிற்போம் என்று அந்த கூட்டத்திற்கு செல்லும் வழியில் மல்லை சத்யா, இதோ இந்த தங்கை தான் செங்கொடி.
நாளை வேலூருக்கு புறப்படுகின்ற, பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரை காப்பதற்கு புறப்படுகின்ற அந்தப் பயணத்தைப் பற்றிய துண்டு பிரசுரத்தை இதோ உங்களிடம் தருகிறார் என்றார்.
26ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு பேரறிவாளனிடம், சாந்தனிடம், முருகனிடம் 9ஆம் தேதி அன்று உங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்து அவர்கள் கையெழுத்துக்களை அவர்களிடமே பெற்றுக்கொண்ட ஒன்றரை மணி நேரத்தில், பிற்பகல் 3 மணிக்கு தனித்தனி கொட்டடிகளில் பூட்டப்பட்ட அவர்களை சந்திக்க சென்றபோது, அந்த கொட்டடிகள் இருக்கிற இடத்துக்கு செல்ல என்னால் இயலவில்லை. என் கால்களில் இனம்புரியாத ஒரு நடுக்கம். திரும்பவும் இவர்களை நாம் காண்போமா.
அவர்கள் கலகலப்பாக இருந்தார்கள். மனதில், முகத்தில் எந்த சஞ்சலத்தின் ரேகையும் காணவில்லை. வீரர்கள் அல்லவா. மானம் உணர்வு உள்ள வீரர்கள் அல்லவா. ஏன்னே பயப்படரீங்க. ஒண்ணுமில்லண்ணே. தமிழகம் எங்களை காப்பாற்றும். தமிழர்கள் எங்களை காப்பாற்றுவார்கள்.
சிறை வாசலில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்தபோது, 9ஆம் தேதி தூக்கு என்று சொல்லுவதற்கு என் நாக்குக்கு துணிச்சல் இல்லை. நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் செய்தி மின்னல் வேகத்தில் பரவத்தானே செய்யும். தொலைக்காட்சிகளிலே 9ஆம் தேதி தூக்கு தண்டனை என்ற செய்தி கோடிக்கணக்கா மக்களின் நெஞ்சில் ஈட்டியாக பாய்ந்தது. அங்கிருந்து அவசர அவசரமாக நாம் ஏற்கனவே எடுத்திருக்கின்ற முடிவின்படி, மூன்று தமிழர்களின் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பிலே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, மனித சங்கிலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாவை தந்த காஞ்சி நகரத்துக்கு ஓடோடி வந்தேன்.
தொடர்வண்டி செல்லுகின்ற பாதையை வழிமறிக்கின்ற கதவுகள் பூட்டப்பட்டிருந்த காரணத்தினால் குறித்த நேரத்தில் நான் செல்ல முடியவில்லை. தாமதமாகிவிட்டதே என்று விரைந்து சென்றேன். முழுக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் மேடையில் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.
அப்போது கரம் கோர்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் நிற்கின்ற காஞ்சி நகர வீதிகளில் நின்றபோது, எனக்கு தெரியாது. வீரமங்கை செங்கொடிக்கு பக்கத்தில் நிற்கின்ற பாக்கியம் எனக்கும் கிடைத்தது என்று எனக்கு தெரியாது.
சேலத்துக்கு பக்கத்தில் ஆத்தூர் என்ற நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற மேடையேற போகிறேன். காஞ்சிபுரத்தில் இளம்தளிர் செங்கொடி நெருப்பிலே பாய்ந்தாள். முடிந்துவிட்டது அவள் வாழ்வு. கருகி சாம்பல் ஆகிப்போனாள் என்ற செய்தி, அதற்கு பிறகு அந்த மேடையில் உரையாற்ற என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.
மகேஷ் (காஞ்சி மக்கள் மன்றம்) சொன்னார். சின்ன வயதில் என்னிடம் வந்தாள். நான் வளர்த்தேன். இசையில், பாடல் பாடுவதில், அந்த குயிலின் ஓசை அந்த கானக் குரலோடு கலந்திருந்ததாமே, தப்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதிலே அற்புதமான கலை அவளிடம் வளர்ந்திருந்ததாமே, போராட்ட களங்களுக்கு முதல் ஆளாக வந்து நிற்பாளாமே. காஞ்சி மக்கள் மன்றம் நடத்திய போராட்டத்தில் துணிச்சலாக முதல் ஆளாக நின்று நாயகியாக நின்றாளாமே.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அங்கையற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதாவும் நாங்களும் எங்களை மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டோம். உயிர் முடிந்தாலும் பரவாயில்லை. உண்ணா நோன்பு இருப்போம் என்று அறப்போர் நடத்துகின்ற களத்துக்கு செல்வோம் வா என்று அழைத்த மகேஷிடம், நான் வரவில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர இன்று எனக்கு விருப்பமில்லை என்று சொன்னாளாம்.
சொன்னதற்கு பிறகு மகேஷ் சொல்லுகிறார், நான் புறப்பட்டுச் சென்றேன். திருப்பி பார்த்தேன். என்னாளும் இல்லாத விசித்திரமான புன்னகை ஒன்று அவள் உதடுகளில் தவழ்ந்தது. எதற்கு இந்த புன்னகையை நெளிய விடுகிறார் என்று அப்பொழுது புரியவில்லை. கடைசியாக பார்க்றோம் என்று தான் சிரித்தாள் போலும்.
முத்துக்குமார் தன்னைத்தானே அழித்துக்கொண்ட விளைவாகத்தானே தமிழக்ததில் பிரளயம் ஏற்பட்டது அதுபோல யாராவது ஒருவர் மாய்த்துக்கொண்டால், எரிமலை சீறுமா என்று கேட்டபோது, இதெல்லாம் எதற்காக கேட்கிறாய். அதெல்லாம் இப்பொழுது அவசியமில்லை. அதுபற்றி ஏன் சிந்திக்கிறாய் என்று சொல்லிவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன் என்றார்.
செங்கொடி அதன் பிறகு துரிதமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனத்திலே புறப்பட்டுச் செல்கிறாள். அவளுக்கு அத்தனை பயிற்சிகளும் உண்டு. ஏன் போர்ப் பயிச்சிக் கூட பெற்றிருப்பாள். வாகனத்திலே சென்று, அந்த இடத்தில் வானத்தை நிறுத்திவிட்டு, அங்கிருக்கும் கடைக்காரரிடம் சாவியை கொடுத்து வருவார்கள் சாவியை கொடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறாள்.
பெட்ரோல் வாங்கிக்கொண்டு, வாகனத்துக்கு என்று வாங்கிக்கொண்டு, அந்த பெட்ரோல் தன் மீது ஊற்றுக்கின்றபோதே, தன்னை கொண்டுபோய் மருத்துவமனையிலே காப்பாற்றிவிடக்கூடாது என்று நனைய நனைய அந்த பெட்ரோலை மேனி மீது இருக்கிற உடை மீது கொட்டிவிட்டு, அதன்பிறகு நெருப்புக் குச்சியை எடுத்து மேலே போட்டவுடனேயே பனை மர உயரத்துக்கு தழல் எழுந்ததள்ளவா. தழல் எழுகிற வேளையிலேயே முழக்கமிடுகிறாள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். முழக்கம் எழுப்புகிறாள். நெருப்பு எரிவதை பார்த்து பலர் ஓடி வருகிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டுபோகிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டே வருகிறபோது, அந்த உயிர் விளக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணைகிறபோது, சுவாசம் நிற்கப்போகிறது. அந்தக் கட்டத்தில், குரல் எழுப்புற அந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் கரைந்துகொண்டே இருக்கிற காரணத்தினாலே, பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். என்று சொல்லி வந்தவள், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முடிந்துவிட்டது செங்கொடியின் உயிர்.
தற்கொலையை நியாயப்படுத்தவில்லை. தீக்குளிப்பதை எவரும் ஊக்கப்படுத்துவல்லை. தீக்குளிப்பை ஊக்கப்படுத்துவதாக தயவு செய்து எண்ணி விடாதீர்கள். கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சுடர் இங்கே எரிகிறது.
நெஞ்சில் எவ்வளவு தியாக உணர்வு இருந்திருந்தால், பற்றுமே தழல், படீர் படீர் என்று வெடிக்குமே, தசை கருகுமே, நரம்புகள் கருகுமே, அந்த வலி தாங்க முடியாதே என்று எண்ணினாளா. இல்லை. அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியது. என்னுடைய உடல் மூன்று பேரின் உயிரை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு செல்லுகிறேன் என்று அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். தமிழினத்தின் ஒரு பொக்கிஷம் அல்லவா செங்கொடி. இவ்வாறு வைகோ பேசினார்.

21 செப்டம்பர் 2011

ஸ்ரீலங்காவின் கோரிக்கை நிராகரிப்பு!

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான உலக அமைப்பு( OECD ) நிராகரித்துள்ளது.
பொருளாதார தரப்படுத்தலில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை குறித்த அமைப்பு நிராகரித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் தொடர்பான தரப்படுத்தல்களை மேற்கொள்ளும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக ஓ.ஈ.சீ.டி கருதப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார நிலைமை அபிவிருத்தி அடைந்துள்ளதாகவும் இந்த விடயங்களை கருத்திற் கொண்டு தரப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓ.ஈ.சீ.டியின் இந்த நடவடிக்கை அதிருப்தி ஏற்படுத்துவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் ஏனைய முதனிலை தரப்படுத்தல் முகவர் நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் சாதகமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் சார்பான சகல விடயங்களையும் கருத்திற் கொண்டு தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக ஓ.ஈ.சீ.டி தெரிவித்துள்ளது.

மனித உரிமைப்போருக்கு கனடிய தமிழர்கள் அளித்த பெரும் நன்கொடை!

கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பெற்ற 3வது வருடாந்த நிதிசேர் நடை பவனியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களால் கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோவிலுள்ள தொம்ஸன் பூங்கா மஞ்சள் சாயத்தில் ஒளிர்ந்து காட்சியளித்தது.
முழு மஞ்சள் நிற ரீசேர்ட் அணிந்து, ஸ்காபரோ நகரைச் சுற்றி 5 கிலோ மீட்டர்கள் நடந்து வந்த நடைபவனியினர், மனித உரிமைகளுக்காக பாடுபடும் சர்வதேச மன்னிப்புச் சபைக்காக 50,000 டாலர்களை சேர்த்துக் கையளித்தனர்.
இதைத்தொடர்ந்து தொம்ஸன் பூங்காவில் பல நிகழ்ச்சிகளும் உரையாற்றல்களும் நடந்தேறின. பலவயதைச் சான்றோரும் (செல்ல நாய்க்குட்டிகள் உட்பட) பங்குபெற்ற இவ் நடைபவனி ரொறன்ரோ சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல தமிழ் சமூக நிறுவனங்களால் ஆதரிக்கப்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
நடைபவனியை முன்னிட்டு நடந்த ஆரம்ப விழாவில் பல அரசியல் பிரதிநிதிகளும், சமூகத் தலைவர்களும் பங்கேற்றி உரையாற்றினர். ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர் திரு. மைக்கல் தொம்ஸன், மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு. லோகன் கணபதி, ஸ்காபரோ சென்றர் ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினரும் அமைச்சருமான திரு. பிராட் டுகுய்ட், ஸ்காபரோ கில்வுட் ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினரும் அமைச்சருமான திருமதி மாகிரட் வெஸ்ட், ஸ்காபரோ ரூஜ் ரிவர் பாராளுமன்ற உறுப்பினரான செல்வி ராதிகா சிர்சபைஈசன், ஸ்காபரோ கில்வுட் பாராளுமன்ற உறுப்பினரான திரு. ஜோன் மக்கே, பீச்சஸ் பாராளுமன்ற உறுப்பினரான திரு. மத்தியூ கெல்வே ஆகியோர் தமிழர் சமூகத்தின் முன்னோக்குக் கொள்கைகளை பாராட்டி இவ்வைபவத்தில் உரையாற்றினர்.
மற்றும், தற்போது நடக்கவிருக்கும் ஒன்றாரியோ மாகாண தேர்தல்களில் போட்டியிடும் திரு. நீதன் ஷான், திரு. ஷான் தயாபரன், திருமதி கத்லீன் மதுரீன் ஆகியோரும் இந்த நடைபவனியில் பிரசன்னமாகியிருந்தனர்.
ஒன்றாரியோ மாகாண பிரதமர் மதிப்பிற்குரிய திரு. டால்டன் மகின்டி, கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திருமதி நிக்கோல் டேர்மெல், கனடா லிபரல் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. பாப் ரே ஆகியோரின் சிறப்புச் செய்திகள் அவர்களது பிரதிநிதிகளால் வாசிக்கப்பெற்றன.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடாக் கிளை செயலாளர் நாயகம் திரு. அலெக்ஸ் நீவ் மனித உரிமைகளுக்காக பாடுபட வேண்டிய தேவைகளை வலியுறுத்தி உரையாற்றி அதனை ஆதரிக்கும் தமிழ் சமூகத்தை மனம்திறந்து பாராட்டினார்.
சர்வதேச மன்னிப்புச் சபை ஆரம்பித்து இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இதைக் கொண்டாடும் முகமாக ஒரு பிறந்தநாள் ‘கேக்’கும் வெட்டப்பட்டது இவ் நடைபவனி வைபவத்திற்கு பொலிவைக்கூட்டியது.
கனடிய தமிழர் பேரவை கடந்த மூன்று வருடங்களாக நடைபவனிகளை ஒழுங்குசெய்து வெற்றிகரமாக நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. கடந்த இரண்டு வருடங்களில் சிக் கிட்ஸ் பவுன்டேஷனுக்கு 42,000 டாலர்களும், கனடா கான்சர் அமையத்துக்கு 36,000 டாலர்களும் இவ் நடைபவனிகளால் நிதி சேகரித்து வழங்கப்பட்டுள்ளன.
இவ்வருடம் சேகரிக்கப்பெற்ற 50,000 டாலர்கள் மனித உரிமைகளின் மகத்துவத்தை கனடியத் தமிழர்கள் எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 50 வருடங்களாக ஈழத்தில் அல்லல்பட்டுவரும் அநேக தமிழர்களுக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் இடைவிடாத மனித உரிமை போராட்டங்களும், உண்மை நிலைமையை வெளிப்படுத்தும் அறிக்கைகளும் உதவி புரிந்து வருகின்றன.
அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சிச் ‘சனல் 4′-ஆல் தயாரிக்கப்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படமும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவைப் பெற்றிருந்தது.
ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறு குழுவினரால் ஆரம்பிக்கபெற்ற சர்வதேச மன்னிப்புச் சபை இன்று உலகளாவ வளர்ந்து அநேக நாடுகளில் நடைபெறும் அந்நியச் செயல்களை எடுத்துக்காட்டி மனித உரிமைகளுக்காக போராடுவது தமிழர் சமூகம் செய்த மிகப்பெறும் பாக்கியமாகும்.
அதன்பாலான ஒரு சிறு நன்றிக்கடனே கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பெற்ற 3வது வருடாந்த நிதிசேர் நடை பவனியாகும்.

அமெரிக்க தூதுவர் வன்னிக்கு செல்கிறார்!

வன்னியின் இன்றைய நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் இன்று அங்கு பயணமொன்றை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது அரச அதிகாரிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிய வருகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னிக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனையும் அவர் கிளிநொச்சியில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கின் கொழும்பு மற்றும் யாழ். விஜயத்தையடுத்தே இன்று அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் வன்னி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 செப்டம்பர் 2011

ஜெனீவா முன்றலில் பொங்கி எழுந்தனர் தமிழ் மக்கள்!

சுவிற்சர்லாந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்பாக உள்ள ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்கு தமிழ் !
சுவிற்சர்லாந்து, ஜெனிவாவில் இடம்பெற்ற மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் பலவற்றிலும் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.
வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பேருந்துகளில் வந்து நிகழ்வில் கலந்துகொண்டனர்.
10ஆயிரம் வரையான மக்கள் இந்நிகழ்வில் மிக எழுச்சி பூர்வமாகக் கலந்துகொண்டதை நேரில் காணமுடிந்தது.
சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபை முன்றலில், ஐரோப்பிய தமிழர்கள் ஒன்று கூடிய மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வு பிற்பகல் 2.00 மணியளவில் கொட்டிய மழைக்கு மத்தியில் ஜெனிவா தொடரூந்து நிலையத்திலிருந்து ஐ.நா சபை நோக்கி அணிவகுப்பு நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
பேரணியை வரவேற்று ஐ.நா. முன்றிலில் இருந்து பிரான்ஸ் தமிழ்ச்சோலை சோதியா கலைக்கல்லூரி மாணவர்களின் இன்னியம் நிகழ்வு மற்றும் தேசிய அணிநடை நிகழ்வுகள் இ;டம்பெற்றன. இது அனைவரையும் கவர்ந்தது.
பிற்பகல் 3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது.
தமிழீழ தேசிய கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகள் என்பன அடுத்ததாக இடம்பெற்றன.
தொடர்ந்து சிறீலங்கா இறுதி யுத்தத்தை நிறுத்தக்கோரி, ஐ.நா முன்றலில் தன்னை தீயுடன் ஆகுதியாக்கிக்கொண்ட ஈகை பேரொளி முருகதாசன் உட்பட, தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோரின் ஈகைச்சுடரொளி ஏற்றல் வைபவம் அடுத்து இடம்பெற்றது.
இதில் முருகதாசனின் தந்தை உட்பட ஈகிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு அவர்களின் திரு உருவப்படங்களுக்கு ஈகச் சுடர் ஒளி ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து பல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், சகோதர இனப் பிரமுகர்கள் பொங்குதமிழ் நிகழ்வின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்களுக்கு தமது ஆதரவு குறித்தும் தமிழிலும் ஏனைய மொழிகளிலும் உரைநிகழ்த்தினர். இதற்கு தமிழில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஜேர்மன் மாணவர்களின் எழுச்சி நடனம் இடம்பெற்றது. இது அனைவரையும் உணர்வுடன் எழுந்து நடனம் ஆடவைத்தது.
தொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக ‘வெல்வது உறுதி” என்னும் குறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
கலந்து கொண்ட மக்கள் அந்த குறுவட்டை வாங்குவதற்கு முண்டியடித்தமையையும் காணமுடிந்தது.
தொடர்ந்து சிறப்புரை இடம்பெற்றது. சிறப்புரையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்.
சிறப்புரையைத் தொடர்ந்து பொங்கு தமிழ் 2011 இற்கான பொங்குதமிழ் பிரகடனம் வெளியிட்டுவைக்கப்பட்டது.
தொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்விற்கான நல்வாய்ப்புச் சீட்டிழுப்புக்கான குலுக்கல் இடம்பெற்றது.
அடுத்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இறுதியாக சுவிஸ் தமிழர் இசைக்குழுவினால் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டது. இதன்போது அனைவரும் எழுந்து நின்று தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நடனம் ஆடியமை அனைவரையும் உணர்ச்சிபொங்கச் செய்தது.


சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த மானமிகு தமிழ் மாணவன்!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இம்சம்பவம் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், மநிதுர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது ஏனைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.
அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்தியபோதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன் என கூறினான்.
இவ்வைபவத்தில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ வட மாகாண ஆளுநர். ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகிந்தவுடனான சந்திப்பின் இரகசியங்களை சம்பந்தர் கசியவிட்டுள்ளார்!

அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு அமைக்குமாக இருந்தால், அதில் பங்கெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சாதகமாகப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது என்று கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு மீண்டும் சென்றமை, தெரிவுக்குழுவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதற்கான முனைப்புக்காட்டி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளை அடுத்து கொழும்பில் உள்ள ஊடகத்தினைத் தொடர்பு கொண்ட கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவுடன் தான் மேற்கொண்ட சந்திப்புத் தொடர்பிலான சில தகவல்களை வெளியிடுமாறு கோரி சில விடயங்களையும் கூறியிருக்கின்றார். அதனை அடுத்து அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றதாவது,
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான நோக்கம் பற்றிய கருத்துரையை (Terms of reference) மாற்றியமைப்பதற்கு அரசுத் தலைமை இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தாங்கள் சாதகமாகப் பரிசீலிக்கத் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றார் என நம்பகரமாகத் தெரியவந்தது.
கடந்த 2ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய சந்திப்பில் சம்பந்தர் இதனைத் தெரிவித்திருக்கிறார். சில இராஜதந்திர மட்டங்களின் முன் முயற்சி மற்றும் அழுத்தத்தினால் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியவருகின்றது.
இந்தச் சந்திப்பின்போதே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதற்கான நிலைமைகள் தொடர்பான தங்களது தரப்புக் கருத்து நிலைப்பாட்டை இரா.சம்பந்தன் வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளார்.
அரசுத் தரப்பில் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் தலைவர்களுக்கும், இடையில் தற்போது இடம்பெற்றுவரும் தீர்வு முயற்சிக்கான பேச்சுகள் ஒருபுறம் தொடரவேண்டும்.
அந்தப் பேச்சுகளில் எட்டப்படும் முடிவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது யோசனையாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்வைக்கும். அதேசமயம், மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலூக்கம் உள்ள ஒரு கட்சியாக முழு அளவில் பங்குபற்றவேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தச் சந்திப்பின்போது சம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றும் அறிய வந்தது.
அப்போது, தெரிவுக்குழு அமைப்பதற்கான நோக்கம் குறித்து நாடாளுமன்றப் பத்திரத்தில் அரசுத் தரப்பு குறிப்பிட்டிருக்கும் கருத்துரையை (Terms of reference) கடுமையாகச் சாடி சம்பந்தர் கருத்துகளை முன்வைத்துள்ளார்.
போர் முடிந்துவிட்டது; சமாதானம் பிறந்துவிட்டது. நாட்டை அபிவிருத்தி செய்வது எப்படி என ஆலோசித்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்தத் தெரிவுக்குழுவை அமைப்பதாகவே நாடாளுமன்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில், நல்லிணக்கத்துடன் சமாதானத் தீர்வை எட்டுவது, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, அதற்கேற்ப அரசமைப்பை மாற்றுவது போன்ற விடயங்களை ஆராய்ந்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாக அதன் கருத்துரை (Terms of reference) மாற்றப்படவேண்டும்.
அவ்வாறு அந்த இலக்கை மாற்றுவீர்களாயின், ஒருபுறம் அரசுத் தலைமையுடன் தீர்வுக்கான பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டு மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பங்குபற்றுவது குறித்தும் தமிழ்க் கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும்.” என்று சம்பந்தர் பதிலளித்தார் எனவும் அறிய வந்தது.
அதனை செவிமடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அச்சந்திப்பில் தம்முடன் இருந்த தமது செயலாளர் லலித் வீரதுங்கவிடமும், அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவிடமும் சம்பந்தரின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி பணிப்புரை விடுத்தார் எனவும் அறியவந்தது. சம்பந்தரின் கருத்துக்கு ஏற்ப நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கத்துக்கான கருத்துரையை மாற்றியமைக்க முடியுமா? என்பது குறித்து கவனம் எடுக்கும்படி தம்மை ஜனாதிபதி நேரில் தொடர்பு கொண்டு பணித்தார் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் பின்பு சம்பந்தருக்குத் தெரியப்படுத்தினார் எனவும் அறியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று அல்லது நாளை கொழும்பில் நடைபெறும்போது இந்த விடயங்கள் குறித்து மற்யை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பந்தன் விளக்கமளிப்பார் எனவும் அறியவந்தது. என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

19 செப்டம்பர் 2011

தாயகம்,தேசியம்,தன்னாட்சி என்ற கோட்பாட்டிற்காக வாக்களித்த மக்களை யாரும் ஏமாற்ற முடியாது!

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரிடையே சுயநிர்ணயம் பற்றிய தளம்பல் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் பேச வேண்டிய இடங்களில் பேசாமல் இருந்து விடுகின்றார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியுள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழ் இயங்கும் நூலகங்களுக்கு நூல்களை வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாம் எதை எடுத்துக் கொண்டாலும் எமக்கு பின்னால் எமக்காக ஆயிரக்கணக்கான தியாகிகள் உயிர் கொடுத்துள்ளார்கள். இலட்சக் கணக்கான மக்கள் இரத்தம் சிந்தி உயிர் துறந்து போயுள்ளார்கள் என்பதை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது.
இன்று தமிழ் மக்களின் தலைவர்கள் என்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு சுயநிர்ணய உரிமை பற்றி தளம்பல்கள் இருக்கின்றது. சுயநிர்ணய உரிமை பற்றி பேசவேண்டிய இடங்களில் சிலர் மௌனம் காக்கின்றார்கள்.
சுயநிர்ணய உரிமை, தாயகம், தேசியம் என்ற கோட்பாடுகளுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்கள். ஆனால் பேச்சுவார்த்தை மேடைகளில் தேசிய அபிலாசைகளை மனம் திறந்து பேச சில தலைவர்கள் வெட்கப்படுகின்றார்கள்.
மதில்மேல் பூனையாக இருக்கின்றார்கள். வடகிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணய உரிமை, தேசியம் என்ற விஞ்ஞாபனங்களுக்காக வாக்களித்த தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நழுவுகின்றவர்களை மக்கள் நிச்சயமாக தண்டிப்பார்கள்.
நாம் சுயநிர்ணய கோட்பாடுகளில் இருந்து என்றும் மாறப் போவதில்லை. எமது தேசிய அபிலாசைகளுக்கான பயணம் தொடரும். வட்டுக்கோட்டை தீர்மானம் ஜனநாயக வழி உரிமைகளுக்கான அடி நாதமாக விளங்குகின்றது.
எனவே பல்வேறு தலைமுறைகள் தலைமைகள் ஊடாக வந்தவர்களை ஒரே மேடையில் வைத்து தமிழ் மக்கள் பார்ப்பது சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையிலேயே என்பதை யாரும் மறக்கக்கூடாது. மக்கள் தந்திருக்கின்ற ஆணையின்படி வெளிப்படையான அரசியல் பயணம் நடக்க வேண்டும் எனறார்.

கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்கக்கூடாது என கூறும் புத்திஜீவிகள் யார் என்கிறார் சுமந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது தமிழ் மக்களின் சார்பில் முழுமையான ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர் என வீரகேசரி வாரஇதழ் தனது முதலாம் பக்கத்தில் தலையங்கமாக செய்தி வெளியிட்டிருந்தது.
இனி வருங்காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அங்கிகாரத்தை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் என அரச தரப்பு கூறியதை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்ட கூட்டமைப்பு புத்திஜீவிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா அரசின் இராஜதந்திரிகளால் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை எந்தவித தயக்கமும் இன்றி குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்(தங்களை புத்திஜிவிகள் என நினைக்கின்ற) ஏற்றுக் கொண்டனர்.
இது தொடர்பாக நேற்றைய வீரகேசரி இப்படியான பொறிக்குள் கூட்டமைப்பு சிக்கிக் கொள்ளாது ஒரு இறுதித் தீர்வை முன்வைத்தே பேச வேண்டும் என புத்திஜீவிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் வேண்டிக் கொள்வதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச் செய்தி சம்பந்தமாக அரசாங்கப் பத்திரிகையான தினகரன் இன்று வெளியிட்ட செய்தியில் ‘பேச்சுவார்த்தைப் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கிக்கொள்ளக் கூடாது என புத்திஜீவிகளை மேற்கோள் காட்டி பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்திகள் குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த சுமந்திரன் புத்திஜீவிகள் என்றால் யார் என்று அந்தப் பத்திரிகைச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. யார் அந்தப் புத்திஜீவிகள் எனத் தெரியாதவிடத்து அதுகுறித்துப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்’.
பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளை அங்கிகாரத்திற்காக தெரிவிக்குழுவிற்கு முன்வைப்பதை விட கூட்டமைப்பு புத்திஜீவிகள் தெரிவுக் குழுவுடனே பேச்சுவார்த்தை நடாத்துவது சிறந்தது என்கிறார் கொழும்பின் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.

18 செப்டம்பர் 2011

ஒட்டுக்குழுக்களை பாதுகாப்பு வலயத்தினுள் இரகசியமாக அனுப்பி வைத்தோம்!

முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலையத்தினுள் ஒட்டுக்குழுக்களை இரகசியமாக அனுப்பி வைத்தோம். அந்த ஒட்டுக்குழுக்களும் எமது படையினரும் புலிகளின் முன்னரங்க நிலைகளை உடைக்க மக்களிற்கு உதவினார்கள் என மஹிந்த கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு அமெரிக்க துணைத்தூதருக்கு மஹிந்த இராஜபக்‌ஷ இத்தகவலை தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. மே மாதம் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் படையினரிடம் தப்பி ஓடும் வேளை அங்கு புலிகள் தான் அவர்களை சுட்டுக்கொலை செய்தார்கள் என படையினர் கூறினர்,ஆனால் அந்த நேரமே விடுதலைப்புலிகள் போல வந்த கருணாவின் ஒட்டுக்குழுக்களும் படையினரும்தான் மக்களைச்சுட்டதாகவும் விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையே குழப்பத்தினை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் பொதுமக்கள் பலர் கூறினர். ஆனால் சர்வதேசம் அதனை நம்ப மறுத்தது.
ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி மற்றும் மே மாதம் 13 ஆம் , 14 ஆம் திகதிகளில் பொதுமக்கள் கண்ணிவெடிகள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் முன்னரங்க நிலைகள் நோக்கி ஒடினர். இவர்களை ஓடுமாறு தூண்டி வற்புறுத்தியது விடுதலைப்புலிகள் வடிவில் இருந்த ஒட்டுக்குழுக்கள்தான்.அதுமட்டுமன்றி ஓடிய பொதுமக்களை சுட்டுக்கொன்றதும் இவர்கள்தான்.
இப்போது உண்மைகள் மெல்ல மெல்ல வரத்தொடங்குகின்றன. மஹிந்த தமது ஆள ஊடுருவும் படையும் ஒட்டுக்குழுக்களும் உள்ளே ( பாதுகாப்பு வலையத்தினுள் நுழைந்து முன்னணி காவலரண்களை உடைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியமையினை கூறியுள்ள நிலையில் அங்கு நடந்த பொதுமக்கள் மீதான நடவடிக்கைகள், காட்டுமிராண்டித்தனங்கள் போராளிகள் வடிவில் இருந்த மஹிந்தவின் ஆட்களே.
இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா போர் முடிந்த கையோடு தாம் ஒட்டுக்குழுக்களை ஒரு போதும் படை நடவடிக்கையில் பயன்படுத்தவில்லை என பொய்கூறினார். ஆனால் மஹிந்த இராஜபக்‌ஷவோ தாம் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

மக்களின் ஆணைக்கு கூட்டமைப்பு துரோகம் இளைக்கின்றது!

மக்களின் ஆணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரோகம் இளைக்கின்றது. இலங்கை அரசை சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்கள். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சுயநிர்ணயம் என்ற சொல்லை சொற்களிலும் மக்களிடமும் கூறிக்கொண்டு நடைமுறையில் முழுமையாகக் கைவிட்ட நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. தற்போதய பேச்சுவார்த்தை எந்த சூழலில் நடைபெறுகிறது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
13வது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாகாணசபை முறைமையை கூட்டமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதிகாரப்பகிர்வு குறித்தோ சுயநிர்ணய உரிமை குறித்தோ கூட்டமைப்பினால் பேச முடியாது. எனவே அவற்றைக் கைவிட்டு விட்டார்களா என்பதே இன்றுள்ள கேள்வி. அப்படியாயின் வடகிழக்கில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தனர். இந்த சுயநிர்ணய உரிமை, என்ற ஒன்றிற்காகவே.
நாம் கூட்டமைப்பிற்க்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம், இந்த மாகாணசபை முறைமையை கூட்டமைப்பு நிராகரிக்கவேண்டும், பதிலாக ஆர்வமுள்ள சமுக ஆர்வலர்களை இணைத்து சுயேட்சைக் குழுவொன்றை உருவாக்கி கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கவேண்டும்.
இலங்கை அரசு சுதந்திரம் பெற்ற காலத்திலும் பார்க்க தற்போது உலக நாடுகளின் கடும் அழுத்தத்தில் இருக்கிறது. உரிமைப் போராட்டத்தில் புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடு அதிகரித்துள்ள நிலையில் தமிழர் பகுதிகளில் இருந்து செய்ய முடியாத செயல்களை புலம்பெயர்ந்தவர்கள் செய்கின்ற நிலையில் இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.



17 செப்டம்பர் 2011

ஜெனீவா மாநாட்டில் இலங்கை அரசு மண்டியிட்டது!

ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசு மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டதால்தான் சர்வதேச நாடுகள் தனது இறுக்கமான கெடுபிடிகளைத் தளர்த்திக்கொண்டன என்று ஐக்கிய சோஷலிஸ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
"ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது கூட்டத் தொடரில் தப்பிப்பிழைத்துக்கொள்ளும் நோக்குடனேயே அரசு தனது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை வெளியிடும் காலத்தை இழுத்தடித்தது.
இதனால்தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என சர்வதேச சமூகம் தீர்மானித்துள்ளது.
ஜெனிவாவில் உறுதிமொழிகளை அள்ளி வீசிய இலங்கை அரசு அதனை இங்குவாழ் மக்களுக்கு கட்டாயம் செய்யவேண்டும். இல்லையேல் இலங்கைக்கு கெட்டகாலம் என்றே சொல்லலாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு.
அதனால்தான் சர்வதேசம் பொறுமை காக்கிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு அரசு வெற்றிபெற்றுவிட்டோம் என மார்தட்டும் வேலையை விடுத்து மக்களுக்கு நீதியை வழங்க முன்வரவேண்டும்" - என்றார் ஐக்கிய சோஷலிஸ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய.

நெதர்லாந்து நீதிமன்றில் "இலங்கையின் கொலைக்களம்"காணொளி காண்பிக்கப்படவுள்ளது!

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களம் காணொளி, நெதர்லாந்தின், ஹேக் நீதிமன்றத்தில் காண்பிக்கப்படவுள்ளது.விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான 5 இலங்கையர்கள் தொடர்பிலான வழக்குக்கு, ஆதரமாக இந்த காணொளி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கின் சந்தேக நபர்கள், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை எனவும், அவர்கள் விடுதலைப் போராளிகள் எனவும், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி விக்டர் கொப்பே வாதிட்டுள்ளார்.
எனவே விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியது சட்ட விரோதமானது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் அன்றி, விடுதலை போராளிகள் என்ற தமது வாதத்துக்கு ஆதாரமாக காண்பிப்பதறாகாக, சனல் 4 தொலைக்காட்சியின் காணொளியை நீதிமன்றத்தில் திரையிட கோரியுள்ளார்.
இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இதேவேளை, எதிர்வரும் மூன்று வாரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா? அல்லது விடுதலைப் போராளிகளா என ஹேக் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

16 செப்டம்பர் 2011

ஜெனீவாவிற்கோ அமெரிக்க படை பலங்களுக்கோ ஸ்ரீலங்கா அஞ்சாதாம்!

ஜெனீவாவின் தீர்மானங்களுக்கோ ஐ.நா. உட்பட அமெரிக்காவின் படைப் பலங்களுக்கோ இலங்கை ஒருபோதும் அஞ்சாது. மீள் தலையீடுகளுக்கு எவராவது முயற்சித்தால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். ரொபேட் ஓ பிளேக் போர் குற்றச்சாட்டுக்களுக்கு அடி பணிய வைக்கவும் உள்நாட்டில் அதிகாரப் பகிர்வின் ஊடாக நாட்டை துண்டாடவுமே இலங்கை வந்தார். எனவே ,அரசாங்கம் உடனடியாக பிரிவினைவாதத்திற்கு ஏதுவான காரணிகளை தேசிய அரசியலில் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கலாநிதி குணதாஸ அமரசேகர மேலும் தெரிவிக்கையில், ஜெனீவா அமர்விற்கு பான் கீ முன் நிபுணர் குழு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். எனவே, ஏதாவது வழியை பின்பற்றி நாட்டிற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை வெளிப்படையாகவே தெரிகின்றது. இதற்கு அரசாங்கம் அஞ்சாமல் முகம்கொடுக்க வேண்டும். பிரிவினைவாத சர்வதேச சூழ்ச்சிக்காரர்களின் நோக்கம் இலங்கையை துண்டாடுவதே ஆகும். நிபுணர்குழு அறிக்கை 6 மாத காலத்திற்கு பின்னர் பேசப்படும் என்றால் அது பாரிய ஆபத்தானதாகவே அமையும்.
எவ்வாறயினும் எந்தவொரு சர்வதேசத்தின் நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் இலங்கை அடிபணியாது. அமெரிக்கா, இலங்கை மீதான தலையீட்டை அத்துமீறி மேற் கொள்கின்றது. ரொபேட் ஓ பிளேக்கின் இலங்கை வருகை நாட்டிற்கு எதிரான காரியமாகவே உள்ளது. தமிழ் கூட்டமைப்பினரை அவர் சந்தித்தமையும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மையும் பிரிவினைவாத போராட்டத்திற்கு மீண்டும் வித்திடும் நடவடிக்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் கோரிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா செவிமடுக்காமல் செயற்படுகிறது!

யுத்தம் நிறைவடைந்து இரு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் சில விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி தெரிவித்துள்ளார். சமதானத்தையும்,அபிவிருத்தியையும் ஏற்படுத்த மெய்யாகவே அரசாங்கம் அக்கறை காட்டினால் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பான விவகாரத்தை உதாசீனம் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் வெளியி;;ட்ட கருத்து தொடர்பில் இலங்கை ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தெடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலைமை உருவாகும்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறுவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டு கால அவகாசம் இருப்பதாகவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தி வருவதாகவும் புருஸ் லெவி குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவின் மிரட்டலுக்கு அஞ்சி பேச்சுக்கு சம்மதித்தாரா சம்பந்தன்?

பத்துச் சுற்றுப் பேச்சுக்களுடன் இடைநடுவில் முறிந்துபோன அரசு கூட்டமைப்பு இடையிலான பேச்சு இன்று மீண்டும் ஆரம்பமாக உள்ளது. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான அரச குழுவினரும் நாடாளுமன்றத் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான குழுவினரும் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த மாத ஆரம்பத்தில் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தனை தனிப்பட அழைத்து ஜனாதிபதி பேசியதன் அடிப்படையில் இன்றைய பேச்சுக்கு இரு தரப்பினரும் இணங்கினர் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்துத் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் பேச்சுக்களின் போது என்ன விடயங்கள் குறித்து ஆராய்வது என்பது தொடர்பிலும் இணக்கம் காணப்படும் விடயங்களை உடன் நடைமுறைப்படுத்துவது என்றும் இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் ஊடகமான உதயன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பமான அரசுகூட்டமைப்பு பேச்சுக்கள் 10 சுற்றுக்கள் இடம்பெற்றன. எனினும் முடிவுகள் எவையும் காணப்படவில்லை. இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வந்தது.
இறுதியில் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுக்களில் கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை முன் வைத்தது. ஆட்சி அதிகாரக் கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் அதிகாரப் பகிர்வு அலகுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட உள்ள பகிர்வுகள் மற்றும் பங்கீடுகள், நிதிக் கையாளுகை மற்றும் வரி அறவீடு என்பன தொடர்பான அரசின் நிலைப்பாட்டை விளக்க இருவார கால அவகாசம் கொடுத்த கூட்டமைப்பு, அதுவரை அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதியைக் குறிப்பிட மறுப்புத் தெரிவித்தது.
எனினும், கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது என்று தெரிவித்த அரசு, விடுதலைப் புலிகள் போன்ற நடத்தையை கூட்டமைப்பு வெளிப்படுத்துவதாகவும் சாடி இருந்தது. கூட்டமைப்பின் கோரிக்கைகள் குறித்து அரசு எதனையும் வெளிப்படையாகப் பதிலளிக்காத நிலையில் இன்றைய பேச்சு ஆரம்பிக்கப்படுகிறது என்று அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சனல் 4 காணொளி வெளியாகிய காலப் பகுதியிலும் இரா.சம்பந்தனை அழைத்து அமெரிகாவிற்கோ, இந்தியாவிற்கோ அஞ்சப் போவதில்லை என்று மஹிந்தராஜபக்ச மிரட்டல் விடுத்திருந்ததாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந் நிலையில் சம்பந்தனை அழைத்த மஹிந்த மிரட்டியே பேச்சுக்கு சம்மதிக்க வைத்திருக்கலாம் என்கின்றனர் நோக்கர்கள்.

15 செப்டம்பர் 2011

நெதர்லாந்து நீதிமன்றில் ஐந்து தமிழர்களுக்கு எதிரான வழக்குஇன்று!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய ஐந்து பேர் தொடர்பிலான வழக்கு ஒன்று, இன்றைய தினம் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது. த ரேடியோ நெதர்லாந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில், நெதர்லாந்தில் நடைபெற்று வந்த தமிழர்களின் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை காவற்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். ஒப்பரேசன் கொனிக் என இந்த முன்னெடுப்புக்கு பெயரிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னரும், இந்த நிதி வழங்கல் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.
இந்த குற்றச்சாட்டின் கீழ் பல நெதர்லாந்து தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் தொடர்பிலான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த குழுவில், நெதர்லாந்தில் இயங்கிய விடுதலைப் புலிகளின் கிளைத்தலைவர் என நம்பப்படும் ஆர்.சிறிரங்கமும் உள்ளடங்குகிறார்.
நெதர்லாந்தின் ஹேக் நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என, சிறிரங்கத்தின் சட்டத் தரணி, விக்டர் கொபே ஐரோப்பிய சங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்ட படையினன் நையப்புடைக்கப்பட்டான்!

சந்தேகத்திற்கு இடமான முறையில் மலசல கூடத்தில் மறைந்திருந்த இராணுவச் சிப்பாய் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். நேற்று இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் கொட்டடி கோணாந்தோட்டம் பகுதி வீடொன்றில் வீட்டின் உரிமையாளர் அவதானித்துக் கொண்டிருந்த போது இராணுவச் சிப்பாய் ஒருவர் அங்குள்ள மலசல கூடத்தினுள் மறைந்துகொண்டதை அவதானித்தார். இதனையடுத்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்ததை அடுத்து ஒன்றிணைந்த மக்கள் குறித்த சிப்பாயை பிடித்து யாழ் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இராணுவச் சிப்பாய் யாழ் நகரப்பகுதியிலுள்ள 512வது படைப்பிரிவைச் சேர்ந்தவர் எனவும் மகியங்கனையைச் சொந்த இடமாகக் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.

14 செப்டம்பர் 2011

மேர்வின் சில்வாவின் நடவடிக்கைக்கு மனோகணேசன் கண்டனம்!

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோயில் வளாகத்திற்குள் அடியாட்களுடன் அத்துமீறி நுழைந்து, சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மிருகவதையை தடுப்பதாக கூறிக்கொள்ளும் இந்த அரசியல்வாதி, தமிழ் இந்துக்களின் மனங்களை வதை செய்துள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
முன்னேஸ்வரம் கோயிலில் ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இது இந்து தர்மத்திற்கு முரணானது. மிருகவதையை ஒருபோதுமே இந்து பாரம்பரியம் ஏற்றுக்கொள்வதில்லை.
உலகெங்கும் பல்வேறு மதஸ்தலங்களிலே பகுத்தறிவிற்கு ஒவ்வாத எத்தனையோ காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்விதம் பாரம்பரியமாக நடைபெற்றுவரும் ஒரு செயற்பாட்டை தடாலடியாக தடுத்து நிறுத்திவிட முடியாது. முன்னேஸ்வரம் தொடர்பிலே ஏற்கனவே நீதிமன்றத்தின் தலையீடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அகில இலங்கை இந்து மாமன்றம் உட்பட பல்வேறு இந்து மத அமைப்புகளும் இதுதொடர்பிலே அக்கறை கொண்டுள்ளன. அது தவிரவும், அரசாங்கத்திற்குள்ளே பல்வேறு தமிழ் இந்து அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் இந்து அமைப்புகளின் துணையை பெற்றுக்கொள்ளாமலும், குறைந்தப்பட்சமாக அரசாங்கத்தில் இருக்கக்கூடிய இந்து அரசியல்வாதிகளை துணைக்கு அழைத்துகொள்ளாமலும் மேர்வின் சில்வா தனது அடியாட்களுடன் ஆலயத்திற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளார். அங்கு குழுமியிருந்த பக்தர்களையும், அந்த ஆலய குருமார்களையும் அவமானப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்து உணர்வாளர்களின் மனங்களை கடுமையாக புண்படுத்தியுள்ளார்.
இத்தகைய மிருகவதையை தடாலடியாக தடுக்க வேண்டும் என்று கூறுகின்றவர்கள் வாழ்கின்ற இந்நாட்டிலேதான், இலட்சக்கணக்கான மக்கள் சில நாட்களுக்குள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் நினைத்து பார்க்கவேண்டும். இன்று மிருகவதையை எதிர்கின்றவர்கள், மனித படுகொலைகளை எதிர்காதது மாத்திரம் அல்ல, அவற்றை நியாயப்படுத்தியவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்வதைப்போல், இந்து ஆலய வளாகத்திற்குள் நுழைந்து மேர்வின் சில்வாவும், அவரது அடியாட்களும் முறைதவறி நடந்துகொண்டுள்ளார்கள். ரூபவாஹினி கூட்டுத்தாபனம் என்பது வேறு, மத வழிபாட்டு ஸ்தலம் என்பது வேறு என்பதை மேர்வின் சில்வாவிற்கு அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகளாவது எடுத்துக்கூறவேண்டும்.
பௌத்த விகாரைகளுக்குள்ளே எத்தனையோ முறைதவறான செயல்கள் நடைபெறுவதாக தினந்தோறும் செய்திகள் வருகின்றன. இவற்றை எதிர்த்து பௌத்த சிங்களவர்கள் அல்லாத நாங்கள், எங்களது ஆதரவாளர்களுடன் விகாரைகளுக்குள் நுழைந்து சட்டத்தை நிலைநாட்ட முடியுமா? அவ்வாறு நடந்துகொண்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். சட்ட ஒழுங்கையும், தர்மத்தையும் நிலைநாட்டும் பொறுப்புகளை பொலிஸாருக்கும், மதத்தலைவர்களும் மாத்திரமே வழங்கவேண்டும்.