13 செப்டம்பர் 2011

வடக்கு இராணுவ மயப்படுத்தப்படவில்லை என பிளேக்கிற்கு மகிந்த தெரிவிப்பு!

வடக்கில் இராணுவ மயப்படுத்தல் இல்லை. ஏனைய இடங்களைப் போன்றே வடக்கிலும் இராணுவ முகாம்களே உள்ளன என மகிந்த தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விற்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் ரொபேர்ட் ஓ பிளேக் ஜனாதிபதியிடம் கேட்டறிந்ததாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். நவம்பர் மாத நடுப்பகுதியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியாகும் என உறுதியளித்த ஜனாதிபதி, குறித்த அறிக்கைக்கிணங்க அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார். வடக்கில் இராணுவ மயப்படுத்துவதாக பிளேக் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி நிராகரித்தார். ஏனைய பகுதிகளை போன்று வட பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கின்றன.
இது ஏனைய நாடுகளை போன்றே அது தேவையானது என நாம் கூறினோம் என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வரவுள்ள ரொபேர்ட் ஓ பிளேக் அரச மற்றும சிவில், சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது. யாழிலிருந்து கொழும்பு திரும்பும் ரொபேர்ட் ஓ பிளேக், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை புதன்கிழமை சந்திக்கவுள்ளார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக