08 நவம்பர் 2020
அமெரிக்காவுக்குப் புதிய நாளை உறுதி செய்துள்ளீர்கள்;கமலா வெற்றிப் பேச்சு!
அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனைத் தேர்வு செய்து, தேசத்துக்குப் புதிய நாளை நீங்கள் உறுதி செய்துள்ளீர்கள். எங்கள் முன் இருக்கும் பாதை எளிதானது அல்ல. இப்போதிருந்து உண்மையான பணி தொடங்கியுள்ளது என்று துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராக முதன்முதலில் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் அது கமலா ஹாரிஸ்தான். இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர், அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் முதன்முதலில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின் அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடனும், துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸும் மக்களுக்கு வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகரில் சனிக்கிழமை இரவு உரையாற்றினர்.
இதில் துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸ் பேசியதாவது:
''அடுத்த 4 ஆண்டுகளுக்கான நல்லதொரு தீர்ப்பை தேசத்தின் மக்கள் இன்று வழங்கியுள்ளார்கள். உண்மையான பணி இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.
இந்த நாளுக்காக நீ தயாராக இருக்கவேண்டும் என்று தாய் ஷியாமளா கோபாலன் அடிக்கடி கூறுவார். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அது பிரச்சினையில்லை. நான் துணை அதிபராகவும், ஜோ பைடன் அதிபராகவும் செயல்படுவோம்.
முன்னாள் அதிபர் ஒபாமா விசுவாசிகளாக, நேர்மையாக, ஒவ்வொரு நாள் தூக்கத்திலிருந்து எழும்போதும் உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்போம். ஏனென்றால்தான் இப்போதுதான் உண்மையான பணி தொடங்கியுள்ளது. அமெரிக்காவுக்குப் புதிய நாளை உறுதியளித்துள்ளீர்கள்.
அதிபர் அலுவலகத்துக்குள் நுழையும் முதன் பெண் நான்தான். ஆனால், நானே கடைசியாக இருந்துவிடக்கூடாது. என்னுடைய வாழ்வில், நான் இங்கு நிற்க முக்கியக் காரணமாக இருந்தவர் என்னுடைய தாய் ஷியாமளா கோபாலன். என் மனதில் எப்போதும் நிறைந்தவர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அவர் வந்தபோது 19 வயது இருக்கும். இந்தத் தருணத்தை நிச்சயம் அவர் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கமாட்டார். ஆனால், அமெரிக்காவில் இதுபோன்ற தருணங்கள் சாத்தியம் என்று என் தாய் நம்பினார்.
ஆதலால், நான் என் தாயைப் பற்றியும், அவரின் தலைமுறைகளான கருப்பினப் பெண்களைப் பற்றியும் சிந்திக்கிறேன். எனக்கு ஆதரவளித்த ஆசிய மக்கள், வெள்ளையின மக்கள், அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
சமத்துவம், சுதந்திரம், அனைவருக்குமான நீதி ஆகியவற்றுக்காக பெண்கள் போராடியுள்ளார்கள், தியாகங்களைச் செய்துள்ளார்கள். அதிலும் கருப்பினப் பெண்கள் அதிகமான தியாகங்களைச் செய்துள்ளார்கள். அதிகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள்தான் இந்த ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள்.
அனைத்துப் பெண்களும் நூற்றாண்டுகளாக தங்களின் உரிமையைப் பாதுகாக்கப் போாரடியும், பணியாற்றியும் வருகிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் 19-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றோம். இப்போது 2020ஆம் ஆண்டு புதிய தலைமுறைக்கான பெண்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமையால், தொடர்ச்சியான போராட்டத்தால், இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு பெண் குழந்தையும், இந்த தேசம் சாத்தியத்துக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்று பார்க்கிறது. நம் தேசத்தின் குழந்தைகள், பாலின வேறுபாடின்றி, தெளிவான செய்தியை வழங்கியிருக்கிறது.
லட்சியத்துடன் கனவு காணுங்கள். உறுதியுடன் வழிநடத்துங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்காத கோணத்தில் உங்களைப் பாருங்கள். ஏனென்றால் அவர்கள் இதற்கு முன்பு அவ்வாறு உங்களைப் பார்த்ததில்லை. மேலும் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நாங்கள் உங்களைப் பாராட்டுவோம்.
கடினமான பணி, அத்தியாவசியமான பணி, சிறந்த பணி. அத்தியாவசியமான பணிதான் மக்களைக் காத்து, கரோனாவைத் தோற்கடிக்கும். நம் தேசத்தின் பொருளாதாரத்தைக் கட்டமைக்க தொழிலாளர்களுக்காக உழைக்க வேண்டும்.
நம்முடைய நீதிமுறையிலிருந்தும், சமூகத்திலிருந்தும் இனவெறியைப் பிடுங்கி எறிய வேண்டும். நம் தேசத்தை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தின் ஆன்மாவைக் குணப்படுத்த வேண்டும். இதற்கான பாதை நமக்கு எளிதானது அல்ல என்பதை அறிவேன். ஆனால் அமெரிக்காவும் தயாராக இருக்கிறது. நானும் ஜோ பைடனும் தயாராக இருக்கிறோம்''.
இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
21 அக்டோபர் 2020
பிரித்தானிய அரசின் புலிகள் மீதான தடை தவறானது!
விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.
இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.
இரகசிய விசாரணையின்போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.
எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.
இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று வெளியான 38 பக்கத் தீர்ப்பின்படி விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தீர்ப்பையும், அது குறித்த சிபார்சையும் ஆணையம் பிரித்தானிய அரசுக்கு அனுப்பிவைக்கும்.
அதன் அடிப்படையில் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது முடிவை அடுத்த சில வாரங்களில் அறிவிக்கும் எனத் தெரியவருகின்றது.
14 அக்டோபர் 2020
பிரபாகரன் போல இருக்கும் நீங்கள் முரளீதரன் படத்திலா?கவிஞர் தாமரை காட்டம்!
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கவிஞர் தாமரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் போற்ற தோற்றப் பொருத்த உள்ளவர் என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நீங்கள் நடியுங்கள் என்றும் கவிஞர் தாமரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன். முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன். முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப் பட்டுவந்தது. ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ''அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்" என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ! சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, 'இந்தநாள் இனியநாள்' என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்....காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, 'நாடகம்' என்று வர்ணித்தார். இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே???. அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !? ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும் ?!வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே !. அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்.... எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா?. உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா? நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள்!என்னது...நட்டமென்றா சொன்னேன் ??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம் ?? ஒரு தமிழ்ப்பெண் தன் 'பங்களிப்பாக' இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் !. நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா? போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா? அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா ?? இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா ? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா ? ஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே ? என்ன 'நட்டம்'? நமக்குத் தெரிந்தவகையில் 'பங்களி'க்கிறோம், அவ்வளவுதானே ?? நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம்,புறம்,அடுப்படி, மூன்றுவேளை சோறு ???? தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது !. காலக்கோளாறு இது ! தமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது. வீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது !.மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள். பி.கு : சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம்! தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை ! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
22 ஆகஸ்ட் 2020
கூட்டமைப்பின் பேச்சாளராக செல்வம்?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக ரெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டமைப்பின் கொறடாவாக புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்றிரவு நடத்திய கூட்டத்தில் இரா. சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் வரை இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில்லை என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதுவருடனான சந்திப்பின் பின் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் வைத்தே கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனை நியமிக்கவும் கட்சியின் கொறடாவாக சித்தார்த்தனை நியமிக்கவும் சம்பந்தன் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்றுள்ள கலையரசனின் இடத்திற்கு ஒரு வருடம் கழித்து அல்லது இரண்டரை வருடம் கழித்து மாவை சேனாதிராஜாவை நியமிக்கவும் கூட்டத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்ட போதும் அதனை மாவை சேனாதிராசா நிராகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)