28 ஆகஸ்ட் 2017

வித்தியா படுகொலைக்கு கடற்படைதான் காரணம்-சசீந்திரன்

கடற்படையினரே புங்குடுதீவு மாணவி வித்தியாவை வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்துள்ளனர் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான ம.சசீந்திரன். இவர் இந்தக் கொலை வழக்கின் மற்றோரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் தம்பியாவார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றது. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று எதிரித் தரப்பினரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் இன்று சாட்சியமளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
சாரதாம்பாள், தர்சினி கொல்லப்பட்ட சம்பவங்களில் கடற்படையினர் ஏற்கனவே இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் கொலையும் கடற்படையினரே செய்துள்ளனர். அதை மறைக்கவே எம்மைக் கைது செய்துள்ளனர். ஊர் முழுக்க அறிவித்து எமக்கு எதிரான எண்ணப்பாட்டை உருவாக்கிவிட்டனர். சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் எமது படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். அதனால் எங்கள் குடும்பம் நஞ்சருந்தி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாம் இந்தக் குற்றத்தைச் செய்யாததாலேயே உயிரோடு இருக்கின்றோம் என்று அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

27 ஆகஸ்ட் 2017

தமிழர் தெரு விழாவில் கனடிய பிரதமர் உரை!

இலங்கையில் தமிழ் மக்கள்; பெரும்பான்மை மக்களாலும் அந்த அரசாங்கத்தாலும் மிதிக்கப்படுகின்ற நிலை மாறி மதிக்கப்படுகின்ற ஒரு இனமாக மாற வேண்டும். அதற்காக அரசியல் ரீதியாக உரிமைகள் தொடர்பான சட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதற்காக கனடிய அரசு சர்வதேச ரீதியாக குரல்கொடுக்கும்" என்று இன்;று மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற "தமிழர் தெரு விழாவில்" சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய கனடாவின் பிரதமர் திரு ஜஸ்டின் ரூடுடோ தெரிவித்தார்.
அவர் மேடையில் உரையாற்றும் போது கனடாவின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக திரு ஹரி ஆனந்தசங்கரியும் உடனிருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றிய பின்னர் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கா பிரதமர் விடைபெற்றார்.
இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் இந்த தமிழர் தெருவிழா இடம்பெறும். நூற்றுக்கணக்கான தமிழ்ர் வர்த்தக நிலையங்களும் பிரதான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தஙகள் வர்த்தகச் சாவடிகளை இங்கு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:கனடா உதயன் செய்திப் பிரிவு