03 ஏப்ரல் 2014

ஆதாரமிருந்தால் நிரூபியுங்கள்’ – சிறீலங்காவிற்கு பிரித்தானியா சவால்!

பயங்கரவாதச் செயல்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நிரூபிப்பது சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு என்று பிரித்தானியா சவால் விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மறு முக அமைப்புக்கள் என முத்திரை குத்திப் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் பதினைந்து அமைப்புக்களை தடைசெய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வரும் பின்புலத்தில் இன்று இது தொடர்பாக இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியன் இணைய இதழிற்கு கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலவற்றுடன் தமது அரசாங்கம் தொடர்பைப் பேணி வருவதாகவும், கருத்துச் சுதந்திரத்தையும், நியாயபூர்வமான விமர்சன உரிமையையும் கட்டுப்படுத்துவதற்கு தடைத் அறிவித்தல்களைப் பயன்படுத்த முற்பட வேண்டாம் என சிறீலங்கா அரசாங்கத்திற்குத் தாம் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘‘இலங்கை விடயத்தில் அக்கறை கொண்டு, சனநாயக வழிகளில் தாம் செயற்படுவதாகப் பகிரங்கமாகக் கூறி வரும் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளடங்கலான அரசு சாரா அமைப்புக்கள், வெகுசன அமைப்புக்கள் போன்றவற்றுடன் பிரித்தானிய அரசாங்கம் நல்லுறவைப் பேணி வருகின்றது.
வன்முறை நீர்த்த வழிமுறைகளில் இலங்கையில் நிரந்தரமானதும், நீதியானதுமான சமாதானம் ஏற்படுவதற்கு உழைக்கும் அமைப்புக்களுடன் நாம் தொடர்ந்தும் உறவைப் பேணுவோம்.
பிரித்தானியாவில் இயங்கி வரும் தமிழ் சமூக அமைப்புக்கள் எவையும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாக நாம் அறியவில்லை.
பயங்கரவாதத்துடன் பல தரப்பட்ட தமிழ் அமைப்புக்கள் தொடர்புபட்டிருப்பதாக சிறீலங்கா அரசாங்கத்தால் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரங்களை நிரூபிக்கும் பொறுப்பு அவ் அரசாங்கத்தையே சாரும்.
ஏனைய நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பது தொடர்பான உண்மையான ஆதாரங்களை சிறீலங்கா அரசாங்கம் தரும் பட்சத்தில் இவற்றை பிரித்தானிய காவல்துறையினரும், பட்டய குற்றவியல் வழக்குப் பதிவுப் பிரிவினரும் ஆழமான பரிசீலனைகளுக்கு உட்படுத்துவார்கள்.’’

நன்றி: தமிழ்கார்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக