12 ஏப்ரல் 2014

பிரித்தானிய பா.உ.களின் இலங்கை விஜயம் ரத்து!

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது வாழ்க்கைத்துணைகளும் இந்த விஜயத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தனர். பயணத்தை ஆரம்பிக்க சில மணித்தியாலங்கள் இருக்கும் நிலையில் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளீதரனின், தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குறித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயத்திற்கான செலவுகளை குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவிருந்தது. எனினும், இறுதி நேரத்தில் எழுந்த சர்ச்சைகள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் கிடையாது என முரளீதரனின் தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு அறிவிக்காமல், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய தொழிற் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர், இந்த விஜயத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதனைத் தொடர்ந்து, விஜயம ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக