09 ஜூன் 2012

விடுதலை கிடைத்தோர் பூசாவிற்கு மாற்றம்!கைதிகள் அவசரக் கடிதம்.


உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பூசாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதனையிட்டு தற்பொழுது சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மிகுந்த அச்சத்துடன் சிறைச்சாலையிலிருந்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:மதிப்பிற்குரிய உறவுகளே!
உங்களுக்கோர் அன்பானதும் அவசரமானதுமான அழைப்பு. நீங்களே நாங்கள். நாங்களே நீங்கள் பல்லாண்டு காலமாக இலங்கையின் சிறைகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்தவர்கள், முற்றிலும் வலுவிழந்தவர்கள், முதியோர், குழந்தைகள், தாய்மார்கள், அநாதைகள் என பல்வேறு பட்டவர்களாக இருக்கும் அரசியல் கைதிகளாகிய எங்களுக்கு, வழக்குகளிலும் முன்னேற்றமில்லாத நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டம் என்னும் பெயரில் நீண்ட காலத்தின்பின் உயர்நீதிமன்றத் தீர்ப்பினூடாக விடுதலை செய்யப்பட்டிருந்த சிலரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பூசாச் சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதேபோல் இன்னும் எவரையெல்லாம் இவர்கள் கொண்டுசெல்லப்போகிறார்களோ தெரியவில்லை. கொண்டு செல்லப்படுபவர்கள் காணாமல் போகலாம், சுட்டுக்கொல்லபப்டலாம் அல்லது இரகசிய சித்திரவதைக் கூடங்களில் யாருடைய தொடரபுளுமில்லாமல் வைக்கப்படலாம். ஏற்கனவே இப்படிப்பலர் உள்ளனர் என்பதும், இப்படியெல்லாம் நடந்ததும், நடந்துகொண்டிருப்பதும் உலகம் அறிந்த உண்மை.
இப்படியான நீதிக்குப்புறம்பான அரசின் செயல்களை அனைத்து தமிழ் உறவுகளும் நான்பெரிது, நீ பெரிது என்று பாராமல், பல்கலைக்கழக சமூகத்தினூடாகவும், வர்த்தக சமூகத்தினூடாகவும், தமிழ் கலை கலாசாரச் சங்கங்களூடாகவும், புலம்பெயர் சமூகத்தினூடாகவும், மனித உரிமை, மனிதஉரிமைக் கண்காணிப்பகத்தினூடாகவும், சாத்வீகப் போராட்டத்தினூடாகவும் கண்டித்து நிறுத்திவைக்க வேண்டுமென்றும், தமிழ் அரசியல் கட்சிகளின் உன்னத பலத்தோடு இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து உங்கள் உறவுகளாகிய எங்கள் விடுதலை கிடைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்வியலின் வேதனைகளைப் பிரிவுகளைப் புரிந்துகொள்ளாமல் சிலர் அரசியல் சுயஇலாபங்களுக்காகவும், தமது இருப்புக்காகவும், கபடநாடக சூத்திரதாரிகளாக மாறி எங்கள் விடுதலைக்கான போராட்டத்தைக் கேவலப்படுத்த வேண்டாமெனவும் அப்படிச் செய்பவர்கள் தமிழ் மக்களால் தமிழ் மக்களின் மனச்சாட்சிகளில் இருந்து அகற்றப்படுவர் என்பதையும் ஆணித்தரமாகக் கூறுகின்றோம்.
இதே நேரத்தில் எமது வழக்குகளில் ஆயராகும் சட்டவாளர்கள் அனைவரும் எம்மைப் புரிந்துகொள்ளுங்கள். காலங்காலமாகப் பிரிந்துகிடக்கும் எமது குடும்பப் பொருளாதாரம் மிகவும் வறுமைக்கோட்டின் கீழுள்ள நிலையில் நீங்களும் அளவுக்கதிகமான பணத்தைக் கேட்பதால் எங்கள் குடும்பங்கள்தான் என்ன செய்யமுடியும்? எனவே அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைக்கான வழியைப் பிறநலத்தோடு செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.
அரசியல் கைதிகள்.
வெற்றி நிச்சயம்
விடுதலை நிச்சயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக