12 ஜூன் 2012

ஜெனீவா கூட்டத்தொடருக்கு சிறீலங்காவின் உயர்மட்டக் குழு இல்லையாம்!

வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடருக்கான தயார்படுத்தல்களை ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மனிசா குணசேகரவே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நகர்வுகள் ஏதும் இந்தக் கூட்டத்தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை என்பதால், இவரே இம்முறை சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடுமையான விவாதங்கள் இடம்பெற்று வந்ததால், சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகார ஆலோசகரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே பங்கேற்று வந்தது.
ஆனால், இம்முறை மகிநத சமரசிங்கவோ, சட்டமாஅதிபர் திணைக்கள அதிகாரிகளோ ஜெனிவா செல்லமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அதேவேளை ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி தாமரா குணநாயகம் தன்னை இந்தக் கூட்டத்தொடருக்கான தயாரிப்புகளில் இருந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம,
“ஜெனிவாவுக்கான தூதுவர் பதவி முடிவடைவதுடன் தான் இராஜதந்திர சேவையில் இருந்து விலகுவதாக தாமரா குணநாயகம் அறிவித்துள்ளார்.
அவர் தனக்கு ஜுன் 10 தொடக்கம் ஜுன் 30 வரை விடுமுறை கோரியிருந்தார். அந்த விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 18ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகின்றது என்பதைத் தெரிந்து கொண்டே, அவர் விடுமுறை கோரியிருந்தார்.
எனவே அவரது விடுமுறைக்கு அனுமதி அளித்து விட்டோம்.“ என்று கூறியுள்ளார்.
அதேவேளை, இந்தக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக அரசசார்பற்ற நிறுவனங்களின் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஜெனிவா கூட்டத்தொடரை உன்னிப்பாக கவனிக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக