03 ஜூன் 2012

போர்க்குற்றவாளி மகிந்தவை கைதுசெய்யக் கோரி பிரித்தானியாவில் வழக்கு!

பிரித்தானிய மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரும் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இனக்கொலைக்கு எதிரான தமிழர்கள் (TAG) அமைப்பு பிரித்தானியாவின் இலண்டன் மாநகரக் காவல்துறைச் சேவையிடம் ஒரு முறையான புகார் மனுவை சமர்ப்பித்துள்ளது. அத்துடன், மகிந்தவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலண்டன் மாநகரக் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த முறைப்பாட்டு மனுவில் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை மகிந்த ராஜபக்ச இழைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, உலகளாவிய அதிகார விதிகளுக்கு உட்பட்ட பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு ராஜபக்சவை கைதுசெய்து, இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அந்த அமைப்பு மாநகரக் காவல்பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் விதிவிலக்குச் சிக்கல்கள் இருந்தாலும், மாநகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவொன்று செய்து விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்வதை தடுக்கவியலாது என இனக்கொலைக்கு எதிரிரான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த முறைப்பாட்டு மனுவுடன் ராஜபக்சவுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கல் நகலொன்றையும் இணைத்து, அதில் 2005 ஆம் ஆண்டு திருகோணமலையில் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளால் கொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தையான கலாநிதி காசிப்பிள்ளை மனோகரனின் வழக்கு விடயமும் முதன்மைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதுடன், அவர் ஒரு பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் என்பதும் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், இந்த முறைப்பாட்டில் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையின் பிரிவுகளும் மேற்ககோள் காட்டப்பட்டுள்ளது,
பொதுமக்களுள் கணிசமான பகுதி அழிவை ஏற்படுத்தக்கூடியவாறு கணக்கிட்டு உணவு மற்றும் மருந்து அவர்களை அணுகவிடாது வேண்டுமென்றே தடுத்ததோடு, பொதுமக்கள் மீது திட்டமிட்ட எறிகணை வீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது,என்பதை அந்த அறிக்கை வவரிக்கிறது. அது இனப்படுகொலையைத் தடுத்தலும் தண்டனை விதித்தலும் என்னும் ஐ.நா. உடன்படிக்கையின் சரத்து 2(சி)இல் கூறப்பட்டுள்ள இனப்படுகொலை வரையறையை ஒத்ததாக உள்ளது எனவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வலிமையான நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கூண்டில் நிறுத்தப்படுவதற்கான ஒரு ஆரம்பநிலையை சந்திக்கிறது தெளிவாகவுள்ளது என்பதோடு, பிரித்தானியாவின் உலகளாவிய அதிகாரம் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களின் பொருட்டு ராஜபக்சவை கைதுசெய்து, நீதியின் முன் நிறுத்துவதற்கு இலண்டன் மாநகரக் காவல்துறை அவசிய படிமுறைகளை எடுக்கவேண்டுமென இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக