21 ஜூன் 2012

பிரணாப்பின் வெற்றிக்கு ராமதாஸ் உத்தரவாதம்!

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியையும், சங்மாவையும், வெவ்வேறு கட்சிகள் ஆதரிக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும், வேட்பாளரை ஆதரிக்க ஒவ்வொரு காரணம் உண்டு. இரண்டு வேட்பாளரையும் ஆதரிக்க முடியாது என கூறியுள்ள விஜயகாந்த், அதற்கும் ஒரு காரணம் சொல்லியிருக்கிறார்.
ஆனால், புதுமைக் கட்சியான பா.ம.க.-வுக்கு, வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத புதுமைக் காரணம் இருப்பதுதான், அவர்களது சிறப்பு.
“ஜனாதிபதித் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம்” என்று அறிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “போட்டியில் உள்ளவர்களிடையே பிரணாப் முகர்ஜிதான் வெற்றி பெறுவார் போலிருக்கிறது. எனவே அவரை ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ள கருத்து, பிரணாப்புக்கே தலை சுற்றலை ஏற்படுத்தியிருக்கும்!
235 எம்.எல்.ஏ.க்களையுடைய தமிழக சட்ட மன்றத்தில், கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயம் போல பா.ம.க., 3 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கிறது. இதனால் ஏழைக்கேற்ற எள்ளுறுண்டையாக அக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
மாநிலத்தில் உள்ள 3 எம்.எல்.ஏ. பலத்தை வைத்து, அகில இந்திய அரசியலை தலைகீழாக புரட்டிப் போடவா முடியும்? எனவே, ஓடுகிற குதிரையில் பணம் கட்டும் முடிவை எடுத்திருக்கிறார் டாக்டர். இதிலென்ன வெட்கம் என்ற ரீதியில், அதற்காக ஆதரிக்கிறோம் எனவும் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சொல்லி விட்டார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
காடுவெட்டி குரு போன்ற அரசியல் அறிஞர்களை கொண்டுள்ள பா.ம.க., இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதில் ஆச்சரியப்பட பெரிதாக எதுவுமில்லை என்பது உண்மைதான். ஆனால், டாக்டரின் இந்த வார்த்தைகள், அடுத்துவரும் தேர்தல்களில் அவருக்கே எதிராக திரும்பாதா என்பதுதான் எமது கேள்வி!
அதாவது, ஜெயிக்கிற வேட்பாளருக்கு வாக்களிக்கிற டாக்டரின் அதே பாலிசியை, தமிழக வாக்காளரும் பின்பற்றினால், என்னாகும்?
ஜெயிக்க முடியாத பா.ம.க.-வுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்களே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக