13 ஜூன் 2012

இலங்கை எவருக்கும் அடிபணியாதென்கிறார் சம்பிக்க!

இந்தியாவின் முட்டாள் தனத்திற்கும் அமெரிக்காவின் ஆணவத்திற்கும் இலங்கை ஒரு போதும் அடிபணியாது. வட மாகாண சபை தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கட்டளையிட வேண்டியதில்லை என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேற்குலக நாடுகளில் புலிகள் சுதந்திரமாக செயற்படுகின்றனர். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்ற போது அங்கு புலிகள் செயற்பட்ட விதமும் அதற்கு ஏற்றாற் போல் அந்த நாடுகளின் பாதுகாப்பு ஒழுங்குகளின் குறைகளும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அமெரிக்க அழுத்தம் கொடுப்பது மற்றும் இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீடு குறித்து கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை அரசியல் தலைவர்கள் உத்தியோகப் பூர்வ விஜயங்களை மேற் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்கு புலிகளின் ஆதரவாளர்கள் கடுமையாக போராட்டங்களை நடத்துகின்றனர்.
இந்தியாவிற்கு விஜயம் செய்த அமைச்சர் ரெஜினோல்ட் குரேவுக்கு எதிராக தமிழ் நாட்டில் செயற்படும் பிரிவினைவாதிகள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மையாகவும் முட்டாள் தனத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதே போன்று லண்டனுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அழைப்பை ஏற்று வந்த இலங்கை ஜனாதிபதியின் கௌரவத்தை லண்டனிலுள்ள மேற்குலக நாடுகளினாலோ பாதுகாக்கப்பட முடியவில்லை. இந்த நாடுகள் ஏனைய நாடுகளின் மனிதாபிமான விடயங்கள் குறித்து பேசுகின்றமை வேடிக்கையாகவே உள்ளது.
இலங்கைக்கு வருகை தர உள்ள அமெரிக்க தூதுவர் மிசேல் கிஸன் மிகவும் மோசமான முறையில் உள்நாட்டு விடயங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இதனை உடனடியாக கண்டிக்கின்றோம். ஏனெனில் இலங்கை ஒரு சுயாதீனமான சுதந்திர நாடாகும். இதனை தனது காலனித்துவ நாடாகவோ, அடிமை நாடாகவோ அமெரிக்கா பார்த்தால் அது அமெரிக்காவின் முட்டாள் தனமாகும்.
தனது ஆணவத்தை இலங்கை விவகாரங்களில் காட்ட முற்பட்டால் அதனை நாம் வேடிக்கை பார்க்கப்போவதில்லை. எனவே சர்¬¬வ¬¬தேச நாடுகள் இலங்கை விவகாரங்களில் அத்து மீறி தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு அமெரிக்கா கட்டளையிடுகின்றது என்றால் இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச நாடுகளில் தஞ்சமடைந்துள்ள புலிகளின் பின்னணியிலேயே இவ்வாறான தொரு வெளிப்பாடுகள் ஏற்படுகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக