22 ஜூன் 2012

எல்லைப்படையினரின் விபரங்களை திரட்டுகிறது அரச புலனாய்வுத்துறை!

இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையணியான எல்லைப் படையில் இருந்தவர்களை குறி வைத்து அவர்களின் விவரங்களை படைப் புலனாய்வாளர்கள் திரட்டத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக வவுனியா வடக்கிலுள்ள பல கிராமங்களில் படைப் புலனாய்வாளர்கள் இத்தகைய முன்னாள் எல்லைப் படையினரின் தகவல்களைத் திரட்டி வருவதால் மக்களிடையே அச்ச நிலை உருவாகியுள்ளது.இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் எல்லைப் படை என்ற மக்கள் படையணியை உருவாக்கி இருந்தனர். ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்களில் இருந்து மக்களை காத்தல் , காயப்பட்ட மக்களை மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லல், குண்டு வீச்சுகளில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு பொது இடங்களில் பதுங்கு குழிகளை அமைத்தல் என்பன போன்ற பணிகளில் இந்த எல்லைப் படையினர் ஈடுபட்டிருந்தனர். எல்லைப் படையினர் நேரடியாக போர்களில் ஈடுபட்டது கிடையாது. தற்போது உள்ள விழிப்புக்குழுக்களின் செயற்பாடுகளை ஒத்ததாகவே எல்லைப் படையினரின் நடவடிக்கைகளும் இருந்தன. அப்பாவி மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளில் இருந்து அவர்களாகவே மீள்வதற்காகவே இந்த எல்லைப் படை உருவாக்கப்பட்டிருந்தது. இவர்களில் அநேகருக்கு ஆயுதப் பயிற்சிகள் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் முன்னாள் எல்லைப் படையினரின் விவரங்களை படைத்தரப்பினர் துருவித் துருவி அறிந்து வருகின்றனர். வவுனியா வடக்கில் உள்ள பட்டிக் குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், கீரிசுட்டான், பட்டறைப் பிரிந்த குளம், மருதோடை ஆகிய கிராமங்களில் படைப் புலனாய்வாளர்கள் இவ்வாறு எல்லைப் படையினரின் விவரங்களைத் திரட்டி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
போர் முடிவடைந்து, முன்னாள் போராளிகள் கூட புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்,மக்கள் நலன் சார் அமைப்பொன்றில் இருந்தமைக்காக எல்லைப் படையினரின் விவரங்களை ஏன் இப்போது புலனாய்வாளர்கள் திரட்டுகின்றார்கள்? என்பது புரியாமல் மக்கள் குழப்பத்திலும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக