17 ஜூன் 2012

புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் அநியாயம் நடக்குமா?

கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்த நிலையில் சேர்வடைந்த தந்தை ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார்.
அவர் வேதனையுடன் தெரிவித்த சில விடயங்கள் கீழ்வருமாறு,
எனது சொந்த இடம் வன்னி ஜெயபுரம். எனக்கு 4 பிள்ளைகள். மனைவியும் ஒரு மகளும் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் எனது வறுமை நிலை காரணமாக நிறுவனம் ஒன்றின் மூலம் எனது இரண்டாவது மகளான யோகேஸ்வரன் சர்மினியை தெல்லிப்பளை துர்கை அம்மன் கோவில் நடாத்திவரும் சிறுவர் இல்லத்தில் சேர்த்து படிப்பித்து வந்தேன்.
இறுதி யுத்தம் காரணமாக ஒரு வருடம் படிக்காததால் மருதனார்மடம் இராமநாதன் மகளீர் கல்லூரியில் க.பொ.த (சா.த)தில் கல்வி கற்று வந்தாள்.
கடந்த வருட இறுதியில் க.பொ.த. (சா.த) பரீட்சை எடுத்த பின் எனது வீட்டிற்கு வந்தாள். கடந்த 3ம் மாதம் க.பொ.த. பெறுபேறுகள் வந்த செய்தி அறிந்து எனது மகள் 18.03.2012 அன்று காலை ஜெயபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டாள்.
பரீட்சைப் பெறுபேறுகளை பார்ப்பதற்காகச் சென்ற மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. எனது மகளிடம் அவள் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவளது மாமனார் கொடுத்த கைத் தொலைபேசி இருந்தது. இருந்தும் அத் தொலைபேசியில் பணம் இல்லாத காரணத்தால் அவள் அதனை உள்வரும் அழைப்புகளுக்கு பாவிப்பாள்.
எனது மகள் யாழ்ப்பாணம் போய் சேர்ந்து விட்டாளா என அறிவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசி செயல் இழந்து காணப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்பில் எனது மகள் அழுதவண்ணம் பதில் தந்தாள்.
‘நான் யாழ்ப்பாணம் வந்தபோது எனக்குத் தெரிந்த ஐயா என்னை தனது வாகனத்தில் ஏற்றி கொண்டு போய் விடுதியில் விடுவதாகக் கூறியபோது தான் அவருடன் ஏறியதாகவும் ஆனால் தற்போது என்னை அவரும் அவருடன் சேர்ந்தவர்களும் ஒரு இருட்டறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் தனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை எனவும் அவர்கள் என்னை சித்திரவதை செய்து விட்டு சென்றுவிட்டார்கள், மீண்டும் வருவார்கள்’ எனவும் கதறி அழுதாள்.
நான் உடனடியாக அன்று மாலையே யாழ்ப்பாணம் வந்து இரவு 8 மணிக்கு யாழ் பஸ்நிலையத்தை அடைந்தேன். அங்கிருந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டு இரவு 12 மணிக்கு வெளியே வந்தேன்.
அன்றிலிருந்து இன்று வரை பொலிசார் எத்தனையோ தடவைகள் என்னைக் கூப்பிட்டு மாறி மாறி விசாரித்தார்களே தவிர எந்தவித பிரயோசனமும் கிடைக்கவில்லை. மகளுக்குக் கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுத்த அவளது சாவகச்சேரி மாமனை மாத்திரம் அடித்து உதைத்துவிட்டு விட்டுள்ளார்கள். மூன்று மாதங்கள் கடந்த பின்னர்தான் நான் இதனை ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.
நான் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தவன். அத்துடன் எனது ஒரு மகளையும் எனது மனைவியையும் இறுதி யுத்தத்தில் பறி கொடுத்தவன். இருந்தும் நான் தற்போது கவலைப்படுவது என்னவெனில் விடுதலைப் புலிகள் இல்லாது போய் விட்டார்களே என்றுதான்.
இவ்வாறு வன்னியில் விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த காலத்தில் பெண்கள் யாராவது கடத்தப்பட்டோ அல்லது காணாமல் போனாலே 24 மணித்தியாலத்திற்குள் அவர்கள் விசாரணை செய்து அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள்.
ஆனால் தற்போது மூன்று மாதங்களாகியும் எனது மகளைக் கண்டு பிடிக்க முடியாது பொலிசார் திணறுகின்றார்கள் . அத்துடன் உனது மகள் கலியாணம் கட்டி எங்காவது இருப்பாள் என்று சாதாரணமாக கூறுகின்றார்கள்.
இவ்வாறு மிகவும் விரக்தியுடனும் வேதனையுடனும் தெரிவித்தார் அந்தத் தந்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக