17 ஜூன் 2012

காணி சுவீகரிப்பை ஆதாரத்துடன் நிரூபிக்கத்தயார் என கூட்டமைப்பு தெரிவிப்பு!

வடக்கில் அரசு திட்டமிட்டு அரங்கேற்றிவரும் நில ஆக்கிரமிப்புக்களைத் தகுந்த ஆதாரங்களுடன் அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கும் நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இப்போதும் தயாராகவே உள்ளது.
வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் காணிகளின் முழு விவரங்களும் எம்மிடம் உள்ளன. அவற்றை நாம் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா.
இராணுவம் தனியார் காணிகளைச் சுவீகரிக்கவில்லை எனவும் அவ்வாறு சுவீகரித்திருந்தால் அதனைத் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும் எனவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய விடுத்த சவாலுக்கு நேற்றைய உரையில் பதிலடி கொடுத்தார் மாவை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் ஆட்சி நிர்வாகம் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் ஆரம்ப உரையாற்றுகையில் மாவை இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரக அதிகாரி வெ.மகாலிங்கம், தூதரகத்தின் இன்னொரு அதிகாரியான ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்ததாவது:
கைப்பற்றப்பட்ட நாடுபோல தமிழர் பகுதிகளை இராணுவ ஆட்சிக்குள்ளே அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசு இராணுவத்தின் தேவைக்கு ஏற்ப அரச மற்றும் தனியார் காணிகளை வகைதொகையின்றி ஆக்கிரமித்து வருகிறது.
எமது மக்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பது தொடர்பாக 2003 இல் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தோம். 2006 இல் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆதார ரீதியாகத் தனியார் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம்.
வலி. வடக்கு உள்ளிட்ட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்தும் இராணுவமும், பௌத்த குருமாரும், உயர் அதிகாரிகளும் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட காணிகளின் விவரமும் எம்மிடம் உள்ளன.
அதனை அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் ஆதார ரீதியாகத் தெரியப்படுத்தவுள்ளோம். இதனை எல்லாம் அறியாமல் பாதுகாப்புச் செயலர் எமக்குச் சவால் விடுகிறார் என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்ததாவது:
மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும்போது அரச அதிகாரிகள் அதற்குத் தடை போடமுடியாது. மக்கள் பிரதிநிதிகள் துணிவுடன் செயலாற்ற வேண்டும்.
நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் துணிவுடன் குரல் கொடுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும். மாதகல் கிழக்கில் புலிகள் வைத்திருந்த தனியார் காணியையே கடற்படையினர் எடுத்துள்ளதாக அரசு கூறுகிறது. புலிகள் வைத்திருந்தபோது பயங்கரவாதிகள் மக்களின் காணிகளை அபகரித்துள்ளதாக அரசு கூறியது. தற்போது மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்துள்ளது. இப்போது இராணுவத்தையே பயங்கரவாதிகள் எனக் கூறவேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் உரை நிகழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக