30 ஜூன் 2012

தேசிய இணையங்கள் முடக்கம் பின்னணியில் கூட்டமைப்பினரா?

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நெருக்கடிகள் மத்தியிலும் குரல் கொடுத்துவருகின்ற தமிழ்த் தேசிய இணையத்தளங்கள் இலங்கையில் தமி்ழ் மக்களால் பார்வையிடுவதற்கு முடியாத வகையில் தடை செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்காமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தினைத் தோற்றுவித்திருக்கிறது.
உண்மைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கின்றமையால், தமிழ் மக்களின் உரிமைகளைப் போன்றே தமிழ்த் தேசிய இணையத்தளங்களின் செயற்பாடுகளும் இலங்கையில் முடக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தளங்கள் முடக்கப்பட்டு நான்கு நாட்களைக் கடந்திருக்கின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் எந்தக் கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக சொல்லிக்கொள்கின்ற கூட்டமைப்பினர் புலத்திற்கும் நிலத்திற்குமான இணைப்புப் பாலங்களாக செயற்பட்டுவருகின்ற இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட அரசின் முக்கிய தரப்பினருடன் தனிப்பட்ட சந்திப்புக்களை அடிக்கடி மேற்கொண்டுவருகின்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உட்பட்டவர்களின் பின்னணியில் இந்த விடயம் இடம்பெற்றிருக்கலாம் என்று பரவலாக சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் பிரத்தியேக இல்லத்தில் இருந்து இரவு 11மணியளவில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியே வந்ததாக சம்பவத்தினை நேரில் கண்ட ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் ஊடாக தகவல் வெளியாகியிருந்தது.
கூட்டமைப்பினரின் தமிழ்த் தேசிய விரோதப் போக்குகள் குறித்து தமிழ்த் தேசிய இணையத்தளங்கள் சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில் அவை குறித்த விபரங்களை குறித்த நபர்கள் அரசாங்கத்தின் அதி உயர் பீடத்தினரின் கவனத்தில் கொண்டுவந்திருக்கலாம் என்று கொழும்பில் மூத்த ஊடகர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக