21 ஜூன் 2012

புகலிடம் கோரும் அகதிகளை திருப்பி அனுப்பாதீர்கள் என்கிறார் பான் கீ மூன்!


புகலிடம் கோரும் அகதிகளை எந்தவொரு நாடும் திருப்பி அனுப்பக் கூடாதென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக ஆபிரிக்க மேற்கு ஆசிய நாடுகளில் அகதிகளை திரும்ப அனுப்பும் பிரச்சினை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக அகதிகள் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் தான் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகள் தஞ்சமடைகின்றனர். எனவே அவர்களை வரவேற்க வேண்டும். உள் நாட்டில் பல்வேறு நிதிப் பிரச்சினைகள் இருந்தாலும் அகதிகளாக வருபவர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வேறு வழியில்லாத நிலையில் தான் அவர்கள் நம்மை நாடி வருகின்றனர். எனவே அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 43 இலட்சம் பேர் தங்கள் நாடுகளில் இருந்து வெளியேறி பிறநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
அகதிகளில் 5 இல் 4 பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.நா. வின் அகதிகள் மறுவாழ்வு பிரிவு தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான போதியசட்டங்கள் இல்லாத நிலையில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை, திபெத் அகதிகள் இந்தியாவில் உள்ளனர். இது தவிர வேறு பலநாடுகளில் இருந்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால் 1940 ஆம் ஆண்டுகளில் உள்ள அகதிகள் சட்டத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது.அகதிகள் இந்தியாவில் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.ஆனால் அவர்கள் பாதுகாப்பாக வசிக்க போதிய வசதிகள் செய்து தரப்படுவது இல்லை.எனவே அகதிகளை நிர்வகிக்க சரியான சட்ட நடைமுறைகளை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று தெற்காசிய மனிதஉரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக