09 ஜூன் 2012

மகிந்தவை பாதுகாக்க கில்டனில் தங்கியிருந்த சிங்களக் குடும்பங்கள்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவில் தங்கியிருந்த ஹில்டன் விடுதியின் 50 அறைகள் அவரது பாதுகாப்புக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறைகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் லண்டனில் உள்ள குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மகிந்த ராஜபக்ச லண்டனில் தங்கியிருந்த காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் குடும்பத்தினர் இந்த அறைகளில் குடும்பத்தோடு குடியேறியிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் கடந்த 6ம் நாள் காலையில் குடும்பத்தோடு ஹில்டன் விடுதிக்கு வெளியே, சிறிலங்கா தேசியக்கொடிகளை ஏந்தியவாறு நிற்குமாறு, சிறிலங்கா அதிபரின் பிரித்தானியப் பயணத்துக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த அவரது வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன கேட்டிருந்தார்.
விடுதிக்கு வெளியே சிறிலங்கா கொடிகளுடன் நின்ற அவர்களிடம் நடந்து சென்று உரையாடி, ஊடகங்களுக்கு ஒரு சாகசம் காண்பிக்க முயன்றார் மகிந்த ராஜபக்ச.
அவர் லண்டனில் ஒரு நாள் தங்குவதற்கு செலவிட்ட பணம், 2012ம் ஆண்டுக்கு லண்டனில் உள்ள தூதரகம் மற்றும் அதன் பணியாளர்களுக்காக ஒதுக்கிய பணத்தை விட அதிகம் என்று லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஹில்டன் விடுதியில் மட்டுமன்றி, அதனைச் சுற்றியுள்ள பல்வேறு விடுதிகளிலும் சிறிலங்கா அதிபரின் பரிவாரங்கள் தங்குவதற்காக 35 அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக