07 ஜூன் 2012

மகிந்தாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழர்களுடன் இணைந்த பிரித்தானிய காவல்துறை!

பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவில் மகிந்தா கலந்துகொள்வதை தடுத்து நிறுத்தி சர்வதேசத்தின் முன் அவர் ஒரு இனப்படுகொலையாளி என்பதை அடையாளப்படுத்த பிரித்தானியா தமிழர்கள் பல்வேறுபட்ட கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியதுடன் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கி பிரித்தானியா உள்ளிட்ட மாற்றின மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். இந்த நிகழ்வுகளில் அதனைத் தொடர்ந்து தமிழர் அமைப்புக்கள் பல முறைப்பாட்டுக் கடிதங்களையும் மாகாராணிக்கு அனுப்பி வைத்திருந்ததைத் தொடர்ந்து பிரித்தானியா அரசினால் மகிந்தரின் உரை தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே.
இலங்கைத் தீவில் தமிழீழ மக்கள் மீது, மகிந்தா தலைமையிலான சிறீலங்கா அரசாங்கம் நடத்திய இனப்படுகொலை,மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றம், மற்றும் அடக்கு முறைகளை கண்டிக்கும் வகையில் சுலோக அட்டைகளை தாங்கியும், கோசங்களை எழுப்பியும், மகிந்தாவின் உருவப் பொம்மைகளை வீதிகளில் கட்டியிழுத்தும், தூக்கில் தொங்கவிட்டும் சிங்கள தேசியக் கொடிகளை வீதிகளில் இழுத்தும் அதனை ஏறிமிதித்தும், இறுதியில் உருவப்பொம்மையும் ஸ்ரீலங்கா தேசியக்கொடியும், அதன் யாப்பும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 5.மணியையும் தாண்டி தொடர்ந்தது.
மாலை 5.30 மணியளவில் பிரித்தானியா காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட மகிந்தாவின் வாகன அணி விடுதியில் இருந்து புறப்பட்டு சில வினாடிகளில் தமிழர்களின் தாக்குதலுக்கு உள்ளானது.
வாகனங்களில் சிறு சிறு நெளிவுகள் ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்து சிரித்ததையும் அவதானிக்க முடிந்தது.
போராட்டம் நடைபெற்ற வேளை மகிந்தாவுக்கு ஆதரவான சில சிங்களவர்களும் தமிழர்களுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு வருவதை அறிந்த சிங்களவர்கள் சில நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்து காணாமல் போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மகிந்தாவின் வாகன அணி புறப்படவிருந்த சமயம் மகிந்தா புறப்படத் தயாரான செய்தியை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் தயாராகும் வரை காத்திருந்து மகிந்தாவை அழைத்துவந்து கல்லெறி வாங்கிக் கொடுத்து, தன்மானத் தமிழர்களுடன் பிரித்தானிய காவல்துறையினரும் இணைந்து மகிந்தாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக